Wednesday, 2 September 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக - காயு பேசுறேன்


கவிதை புக் போடணும்னு முடிவெடுத்த உடனே கார்த்திக் கிட்ட போய் பாவமா மூஞ்சை வச்சுகிட்டு, "டே மக்கா, எனக்கு அந்த முன்னுரையோ, அணித்துரையோ என்னமோ ஒண்ணு உண்டுல, அத எழுதி தருவியா"ன்னு கேட்டேன்...

மனுஷன் என்ன மூட்ல இருந்தாரோ, "உனக்கில்லாததா... என்னடி இப்படி கேட்டுட்ட"ன்னு பீல் பண்ணின கையோட, கடகடன்னு அரை மணி நேரத்துல அவரோட பார்ட்ட எழுதி தந்துட்டார். வார்த்தைகளோட விளையாட அவருக்கா தெரியாது...

செல்வா அண்ணா கிட்ட கேட்டேன், அண்ணா சந்தோசமா பொறுமையா என்னோட கவிதைகள படிச்சு எழுதி குடுத்துட்டாங்க. தமிழரசி அக்கா கேக்கவே வேணாம், நம்மள ஒரே செல்லம் கொஞ்சல்ஸ் தான்...

எல்லாரும் எழுதியாச்சு. நான் என்ன எழுதுறது?

பேஸ்புக்லனா எதையாவது கடகடன்னு எழுதி போட்டுடலாம். ஆனா இது புக்கு. கவிதை புக்குக்கு கொஞ்சமாவது கவிதைத்துவமா எழுத வேண்டாமா?

என்ன எழுத, என்ன எழுதன்னு யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் புரியல. சரி, இதுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு கார்த்திக் கிட்ட போய் "மக்கா, நான் எழுத வேண்டிய போர்சன் சொல்லித் தாயேன், ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்"ன்னு கெஞ்ச ஆரம்பித்தேன்.

ஆளு கெஞ்சினாலும் மசியல, கொஞ்சினாலும் மசியல, "ஓடிப் போய்டு"ன்னு தொரத்தியே விட்டுட்டார்.

ஆனாலும் விடுற ஆளா நாம.... ஒரு நாள் ராத்திரி முழுக்க உக்காந்து, மனுசன சொரண்டி சொரண்டி, கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச விசயங்கள தான் நீங்க கீழ படிக்கப் போறீங்க...

முழுசா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அந்த வார்த்தைகள படிச்சா, எனக்கே அவ்வளவு பிடிச்சுப் போச்சு...

என்னை, முழுசா இதான் நான்னு உணரவச்ச வரிகள் அதெல்லாம்....

இதுக்காக கார்த்திக்குக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது. ராட்சசன், எவ்வளவு கெஞ்ச வேண்டியதா போச்சு... கிர்ர்ர்ர்ர்....

சரி, சரி, அப்படி என்ன தான் என் புக்ல எழுதியிருக்கேன்....

இந்தா இதான்......

*******************************************

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்
----------------------------------------------

எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..
மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தம்பி, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்...

செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள்.

கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

-காயத்ரி தேவி

7 comments:

  1. அருமையான சிலிர்ப்பும் சிந்திக்கும் வரிகள் நூல்வெளியீடு எப்ப அக்காச்சி???

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இன்னும் முடிவு பண்ணல. அநேகமா அடுத்த மாசம் புக் ரெடி ஆகிடும்.

      Delete
  2. அருமை... கவித்துவமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா, ஆமா, ஆனா சுட்டுப் போட்டாலும் எனக்கு இப்படி எழுத வராதுங்குறது தான் உண்மை

      Delete
  3. ezutha varaathanu solli solli.
    ahaa arumaiaa eluthi irukkuringa akkaa.
    book ready aachaa? release eppo?

    ReplyDelete
    Replies
    1. அநேகமா அடுத்த மாசம் ரெண்டாவது வாரத்துல ரெடி ஆகும்மா ....

      அப்புறம் நான் தான் சொன்னேனே, ராத்திரி முழுக்க ஐஸ் வச்சு ஐஸ் வச்சு எழுதி முடிச்சதுன்னு

      Delete