Tuesday, 1 September 2015

காயு காலேஜ் போய்ட்டா






நேத்து ராத்திரி எட்டு மணிக்கு தான் இன்னிக்கி காலேஜ் போய் பாத்தா என்னன்னு தோணிச்சு. கிட்டத்தட்ட கால் முறியுறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே ரொம்ப வெயில்ன்னு காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். சரி, வெயில் அடிச்சா பரவால, காலேஜ் போலாம்னு முடிவெடுத்தப்ப கால் முறிஞ்சு போச்சு.

அப்படியும் இப்படியுமா நாலு மாசம் வேற ஓடிப் போச்சா, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கால்ல அடுத்த சர்ஜரி பண்ணப் போறதா முடிவாகிடுச்சு, அதுக்குள்ள இப்ப நடக்க முடிஞ்ச வேகத்தோட காலேஜுக்கு ஒரு நாள் போயிட்டு வந்துடுவோம்னு ஒரு ஆசை.

அப்பாவுக்கு வேற என்ன தோணிச்சோ தெரியல, கார் நீ ஓட்றியான்னு கேட்டார். ஹார்ட் அட்டாக்கும், ஸ்ட்ரோக்கும் வந்த அப்புறம் அப்பா அதிகம் கார் ஓட்டுறது இல்ல. என்னை கூட மாமா தான் காலேஜ்ல விட்டுட்டு இருந்தார். அதனால தான் அப்பா இன்னிக்கி என் கிட்ட அப்படி கேட்டதும் ரொம்ப ஆச்சர்யம். நீ கொஞ்ச தூரம் கார ஓட்டு, கால் வலிச்சா நான் ஓட்டுறேன்னு சொன்னார். காரணம் கிட்ட தட்ட முப்பத்தஞ்சி கிலோமீட்டர் இருக்கு எங்க வீட்டுக்கும் காலேஜுக்கும் தூரம்.

கரண்டை கால் ஒரு பத்து ஸ்டெப் எடுத்து வச்சா வலி எடுக்க ஆரம்பிச்சுடுது. ஆனா இந்த வலி எல்லாம் சீக்கிரம் பழகிப்போகும்னு காலேஜ் கிளம்புறப்ப நினைச்சுகிட்டேன். பாட்டி எதோ நல்ல மூட்ல இருந்துருப்பாங்க போல, உன் சுடிதார குடு, நான் அயர்ன் பண்ணித் தரேன்னு சொல்லி அயர்ன் வேற பண்ணித் தந்தாங்க. பார்டா...ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். நாம நாலு எட்டு எடுத்து வச்சு நடந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான் போல.

வாக்கர் எடுத்து கார்ல போடவான்னு அப்பா கேட்டாங்க. இல்லப்பா, வேணாம், அது இருந்தா, அத பிடிச்சுட்டு நடக்கத் தோணும், இல்லனா, கஷ்டப்பட்டாவது நடப்பேன்லன்னு சொன்னதும் அப்பா, சரின்னு சொல்லிட்டு என்னை கார எடுக்க சொன்னாங்க.

ஏற்கனவே அப்பா கூட ஒரு வாரம் முன்னாடி ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்தேன்னாலும் இப்ப போகப் போறது ஒரு லாங் ட்ரைவ். கால் வலிச்சாலும் இன்னிக்கி முழுக்க முழுக்க நாம தான் ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். மாமா பின் சீட்ல ஏற, அப்பா முன் சீட்ல உக்காந்துகிட்டாங்க. நான் காரை ஸ்டார்ட் பண்ணி தெருவுல இறங்க ஆரம்பிச்சேன்.

அது ஏனோ தெரியல, இப்ப எல்லாம் ஆக்சிலேட்டர கொஞ்சம் வேகமா மிதிக்கவே பயமா இருக்கு. கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருன்னு தேர்ட் கியர்லே வண்டி ஓட்டுறேன். முதல்ல இந்த பயத்த போக்கணும்னு சொல்லிட்டே மெதுவா வேகம் எடுக்க ஆரம்பிச்சேன்.

இந்த ரோடு இருக்கே ரோடு, அது இல்லாம இருந்தாலே நல்லா இருக்கும். அந்தளவுக்கு ரோட்டை எல்லாம் தோண்டி போட்ருக்காங்க. பாதி தூரம் வந்ததுமே அப்பா நான் ஓட்டட்டுமான்னு கேக்க, வேணாம்பான்னு சமாளிச்சு ஓட்டுறேன். ஒரு பெரிய குண்டுல ஏறி இறங்கினேனா, கரண்டைக்காலு மழுக்குன்னு ஒரு சத்தத்துல என்னமோ ஆக, ஆவ்வ்வ்வ் அப்பான்னு வலில முனங்கிட்டேன். வண்டிய ஓரமா நிறுத்துன்னு சொல்லிட்டு அப்பா காரை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.

டிரைவிங் போனா என்ன, நாம தான் வேடிக்கை பாக்கலாம்ல. ரொம்ப நாள் கழிச்சு, கரண்ட் கம்பில இருந்த காக்காவையும், கூட்டமா பறந்த புறாக்களையும் வேடிக்கை பாத்துட்டே வந்தேன். ஒரு இடத்துல அஞ்சாறு கருப்பு ஆடுங்க படுத்து அசை போட்டுட்டு இருந்துச்சு. சரி, சரி, விட்டா நான் நாய்ங்க குறுக்க ஓடினதையும் சொல்லிட்டே இருக்கப் போறேன், வாங்க காலேஜ்க்குள்ள போய்டலாம்.

கேம்பஸ் வந்த உடனே அப்பா, நீ எங்க போறன்னு கேட்டதும், லேப்க்கு போறேன்ப்பான்னு சொல்லிட்டேன். நான் கடைசியா விட்டுட்டு வந்தப்ப லேப் வெளில இருக்குற இடம் முழுக்க வறண்டு போய் புல் எல்லாம் கருகி இருந்துச்சு. இப்ப முட்டி அளவு புல் வளர்ந்து நிக்குது. மழை வந்து இந்த இடத்த எவ்வளவு பசுமையாக்கி இருக்குன்னு அதிசயமா இருந்துச்சு. அப்படியே அங்க புதுசா முளைச்சிருந்த சங்கு புஸ்பம் செடில அஞ்சு பூ வயலெட் கலர்ல அழகா சிரிச்சுட்டு இருந்துச்சு. ரைட்டு, நமக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடச்சாச்சுன்னு அதப் பாத்து சிரிச்சேன்.

அப்பா, லேப் கிட்ட காரை நிறுத்தினவர், அடுத்து எப்ப கூப்ட வரன்னு கேக்க, நான் போன் பண்றேன்ப்பான்னு சொல்லிட்டு இறங்கி நடந்தேன். கல்லும் மண்ணுமா இருந்த தரையை புல் மறைச்சு வச்சிருக்குறதால கால் கொஞ்சம் இடறிச்சு. அப்பா பாத்து பாத்துன்னு சொல்லிட்டே கைப் பிடிச்சு லேப் வராண்டா வரைக்கும் கொண்டு விட்டாங்க. இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வச்சா அங்க போய் உக்காந்துக்கலாம்.

சரிப்பா, நீங்க கிளம்புங்கன்னு சொன்னேன். மாமா நான் வண்டி ஓட்டுறேன் அத்தான்னு அவர் டிரைவர் சீட்ல ஏறி உக்காந்துட்டார். அப்பா டாட்டா காட்டிட்டு போயிட்டு வரேன்னு சொன்னாங்க. அது புதுசா இருந்துச்சு. எல்.கே.ஜி ல முதல் நாள் விடுறப்ப கூட அப்பா இப்படி டாட்டா காட்டினது இல்ல. ஹஹா மை செல்ல அப்பா...

நான் லேப்ல போய் உக்காந்தப்ப யாருமே இல்ல. என்னடா இது, நாம வந்தது சர்ப்ரைசா இருக்கட்டும்னு பாத்தா, இங்க யாருமே இல்லாம நமக்கு சர்ப்ரைசா இருக்கேன்னு நினச்சுட்டே கொஞ்ச நேரம் டேபிள்ல படுத்து தூங்கிட்டேன்.

திடீர்னு, மேடம், எப்ப வந்தீங்க, ஹையோ எப்படி இருக்கீங்கன்னு ஒரு உற்சாகக் குரல் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டுடுச்சு. அட, லேப் அட்டெண்டர். கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா, ஆனா நான் அவங்கள முன்னாடி லெப்ட் ரைட் வாங்கிட்டு இருப்பேன், பொறுப்பே இல்லன்னு. அவங்க தான் அவ்வளவு சந்தோசமா என்னைப் பாத்து சிரிக்குறாங்க. அப்புறம், மேடம் இருங்க, நான் இந்தா வந்துட்டேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு வெளில ஓடிட்டாங்க.

சரி, எங்க போனாங்களோ, பொறுப்பே இல்ல, லேபை இப்படியா தொறந்து போட்டுட்டு போவாங்க, நம்ம கைட் போனதும் ஒரு பயம் இல்லாம போச்சுன்னு நினச்சுட்டே இருக்கேன், அவங்க ஒரு கைல காபியும், ஒரு கைல வாழக்கா பஜ்ஜியுமா நின்னுட்டு இருக்காங்க.

பொதுவா நான் இத எல்லாம் சாப்பிட மாட்டேன்னாலும் ரொம்ப ஆசையா இருந்தா கேண்டீன்ல வாங்கி திம்பேன். அத நியாபகம் வச்சு வாங்கிட்டு வந்துருக்காங்க. தேங்க்ஸ் மேடம்னு சிரிச்சேன். நீங்க இல்லாம ஒரு கலகலப்பே இல்ல மேடம், லேப் ரொம்ப அமைதியா இருக்கும். உங்கள நாங்க நிறைய மிஸ் பண்ணினோம்னு சொன்னாங்க. கண்ணு லேசா வியர்த்திடுச்சு. நம்ம மேல எவ்வளவு பாசம்னு.

அதுக்குள்ள, நான் வந்த விஷயம் கேள்விப் பட்டு எங்க ஹச்.ஓ.டி போன் பண்ணினாங்க. என்ன, சொல்லாம கொள்ளாம வந்துருக்கன்னு. வரணும்னு தோணிச்சு மேடம், வந்தேன்னு சொன்னேன். கால் இப்ப எப்படி இருக்கு, நடக்க முடியுமான்னு கேள்விகள் கேட்டுட்டு, ரெண்டு பேப்பர் எடுக்க ஆள் இல்ல, யார போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், நீ எடுக்குறியான்னு கேட்டாங்க.

என்னால ரெகுலரா வர முடியுமான்னு தெரியல மேடம், ஆனா அப்பப்ப வேணா வந்து எடுத்துட்டு போறேன், பரவால நம்பிக்கை இருந்தா குடுங்கன்னு சொன்னேன். ஆக, சும்மா வந்த இடத்துல க்ளாஸ் எடுக்க தானே கேட்டதோட இல்லாம, நீ லேப்லயே வச்சு நடத்து, பிள்ளைங்கள அங்க வர சொல்லிடலாம்னு ஏற்பாடும் பண்ணி குடுக்குறாங்க. இந்தா பார்ரா, எந்த ஹச்.ஓ.டி பிடிக்கலன்னு மனசுக்குள்ள சஞ்சலமா இருந்தேனோ, அவங்களே நம்மள தானா கூப்ட்டு க்ளாஸ் குடுக்குறாங்கன்னு சிரிச்சுகிட்டேன்.

என்ன, இந்த தடவ அவங்க எனக்கு குடுத்துருக்குற சப்ஜெக்ட் பெர்சனாலிட்டி டெவலெப்மென்ட். என் சப்ஜெக்ட்டுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத டாபிக்னாலும் உளவியல் சார்ந்து பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்க ஒரு நல்ல சான்ஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் காயுன்னு எனக்கு நானே மனசுக்குள்ள சபாஷ் சொல்லிகிட்டேன் (இதுவே ஒரு வருசத்துக்கு முன்னாடினா, என்னோட சப்ஜெக்ட் தான் நான் எடுப்பேன்னு தாட் பூட்ன்னு குத்திச்சிருப்பேன்ங்குறது வேற விஷயம்).

அப்புறம் ஒவ்வொரு பிள்ளைங்களா ஓடி வந்தாங்க. ஹையோ மேடம், ஹையோ மேடம்ன்னு ஆளாளுக்கு கன்னத்துல கை வச்சு ஆச்சர்யமா குதிக்குறாங்க. இந்த புள்ளைங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. நிஜமாவே ஐ மிஸ் யூ ஆல் மை செல்லம்ஸ்.

மேடம், ப்ளீஸ் எங்களுக்கு க்ளாஸ் எடுக்க வருவீங்கலன்னு அவங்க கேட்டதும், எப்பவாவது வர்றேண்டா, ஆனா அடிக்கடி உங்கள எல்லாம் பாப்பேன்லன்னு சொன்னேன்.

ஒருத்தி, முந்தின வாரம் ஓணம் கொண்டாடியிருக்காங்க, அதுல அலங்காரத்துக்கு வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பூவை எடுத்து நீட்டி, வெல்கம் மேம்னு சொன்னா.

அப்புறம் கால்ல மாட்டியிருந்த அந்த சப்போர்டிவ் மெட்டீரியல பாத்து, இன்னும் சரியாகலயா மேடம், கெட் வெல் சூன் மேடம்னு வாழ்த்தெல்லாம் சொல்லிட்டு, மேடம் நீங்க இல்லனதும் இங்க ஒருத்தி சோம்பேறி ஆகிட்டா, ஒழுங்கா அசைன்மென்ட் எழுத மாட்டேங்குறான்னு ஆளாளுக்கு கம்ப்ளைன்ட் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் சிரிச்சுட்டே, சரி சரி, இனி பாருங்க, ஆடித் தீத்துடுறேன்னதும், நீங்க திட்டினா நல்லாயிருக்கு மேடம். திட்டினா தான் நாங்க படிக்குறோம்னு சொல்லி எல்லாரும் ஆமா, ஆமான்னு கோரஸ் பாடுறாங்க.
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இவங்கள எல்லாம் விட்டுட்டு இத்தன நாள் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது என்னோட தனித் தன்மையையே பதம் பாத்துடுச்சு. இந்தா அந்த நிமிஷம் புதுசா பொறந்த மாதிரி ஒரு உற்சாகம். ஜல்லுன்னு உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு.

மதியமே வீட்டுக்கு போய்டனும்னு தான் ப்ளான். ஆனா அந்த இடத்தையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வர மனசே இல்ல. நிறைய பேசினோம், நிறைய சிரிச்சோம். அப்படியே எனக்கு குடுத்த பாடம் பத்தி கொஞ்சம் ரெபர் பண்ணினேன். எல்லாமே சுத்த தமிழ்ல இருந்துச்சு. சரி, இன்னொரு நாள் படிச்சுக்கலாம்ன்னு நினைச்சு அத ஓரமா வச்சுட்டு, அப்பாவுக்கு கால் பண்ணி அப்பா, சாயங்காலம் வந்தா போதும்னு சொன்னேன்.

அப்புறம், கூப்பிட மாமா தான் வந்தாங்க. பகல் முழுக்க உக்காந்து இருந்ததால, கால் நல்லா வீங்கி நீர் கோர்த்துடுச்சு. ஆனாலும் என்ன, மனசு நிறைஞ்சிடுச்சே...

நாளைக்கும் காலேஜ் போகணும்னு ஆசையோட தூங்கப் போறேன். பாக்கலாம், என்ன நடக்குதுன்னு.....



.

3 comments:

  1. காலைப் பார்த்துக்கங்க...
    சந்தோஷம் கிடைத்தால் சீக்கிரம் நலமடையலாம்... அதற்காகவேணும் அங்கு போங்கள்...

    ReplyDelete
  2. magilchee. apaa thampi paati unga blog padipagala.

    ReplyDelete
  3. matram kandippaa thevai. ninga collegeku ponathu nallathaa pochu akka.



    ReplyDelete