Sunday 26 June 2016

நான்கு பெண்கள் கொலையும் ஒன்-இந்தியாவின் செய்தியும்



சமீப காலமா பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகரிச்சுகிட்டே இருக்கு. எங்க பாத்தாலும் அத பத்தின நியூஸ். காரசாரமான விவாதங்கள். அத எல்லாம் படிச்சா தலையே வெடிச்சுடும்.

பொதுவா இந்த மாதிரியான சம்பவங்கள பத்தி கேள்விப்பட்டதுமே ஒரு கையாலாகாததனம் என் மனசுல வந்து ஒட்டிக்கும். நாட்டுல நடக்குற எந்த அநீதிகளையும் எதிர்த்து நம்மால போராட முடியாது. ரெண்டுநாள் பாதிக்கப்பட்ட/கொல்லப்பட்டவங்கள நினச்சு மனசுக்குள்ள அவங்களுக்காக பிரார்த்தனை மட்டுமே பண்ணிக்க முடியும் என்னால. அத தவிர இப்போதைக்கு நான் எதுவும் செய்யப் போறது இல்ல. அப்புறம் எதுக்கு இந்த பொங்கல்கள் எல்லாம்னு எனக்கு நானே மவுனமா இருந்துடுவேன்.

ஆனா இன்னிக்கி நாலு பொண்ணுங்கள கொன்னுட்டு நாலு நாள் அந்த உயிரில்லாத உடம்புகள பாலியல் வன்புணர்வு செய்தவன் பத்தி ஒன்-இந்தியா (one India) பத்திரிக்கை வெளியிட்டு இருந்த செய்திய பாத்தேன்.

அத படிச்சதும் ஒரு மிகப்பெரிய கொடூர சம்பவத்த எப்படி கிளுகிளுப்பு சம்பவமா இவங்களால மாத்த முடிஞ்சுதுங்குற எரிச்சல்தான் என்னை இத எழுத வைக்குது.

முதல்ல பேஸ்புக்ல தான் அத பத்தின நியூஸ் என் கண்ணுல பட்டுச்சு. ஒன்-இந்தியா வெளியிட்டு இருந்த செய்திய ஷேர் செய்திருந்த பெண், ‘மாத்தி மாத்தி காறி துப்பிப்போம்”ன்னு தலைப்பு குடுத்து அத ஷேர் செய்திருந்தார். “கள்ளக்காதலி”, “காமக் கொடூரன்”ங்குற அடைமொழிகள் எல்லாம் பலமாவே இருந்துச்சு.

இது முதல் கணவனோட சாபம், இந்த மாதிரி வீட்டை விட்டு ஓடிப் போறவங்களுக்கு இது தான் நிலைமைங்குற மாதிரியான கமண்ட்ஸ்... சரி, இத எல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல, மொத்தத்துல ஒரு துர்சம்பவம் “த்தூ”ன்னு துப்பிட்டு அடுத்த வேலைய பாக்கப்போற அளவு தான் மக்கள் மனசுல பாதிப்ப ஏற்படுத்தி இருக்கு.

பெண்கள போகப்பொருளா மட்டும் நினைக்குற இந்த சமூகத்துல பத்திரிக்கைகளும் அதையே தான் மக்களுக்கு போதிக்குதா?

நான் ஒன்-இந்தியாவின் அந்த செய்திய மட்டும் சொல்லல, அதே சம்பவத்த முன்னிறுத்தி அது வெளியிட்டு இருக்குற இந்த செய்தியையும் கொஞ்சம் பாருங்க. 



கிட்டதட்ட ஒரு கிளுகிளுப்பு ரேஞ்சுக்கு அந்த சம்பவத்த கதையா தனி தனி தலைப்பு போட்டு விவரிச்சி இருக்காங்க. இத மேம்போக்கா படிக்குற எல்லாருக்குமே தப்பு செஞ்சா இதான் தண்டனைங்குற ஒரு குரூர எண்ணத்த ஒன்-இந்தியாவோட இந்த கட்டுரை ஏற்படுத்த தவறவே தவறாது.

கிட்டத்தட்ட கொலையுண்ட பெண்ணை எவ்வளவு கீழ்த்தரமா சித்தரிக்கணுமோ அவ்வளவு கீழ்த்தரமா சித்தரிச்சி இருக்காங்க. கணவன விட்டுட்டு ஒரு பொண்ணு இன்னொரு ஆண் கூட போயிட்டாலே அவளோட பேரு “கள்ளக்காதலி”யாம்.

அந்த பெண்ணோட நிலைமை என்னனோ, எதுக்காக அவனோட போனாள்னோ கண்டிப்பா அவள தவிர வேற யாருக்கும் சொல்ற அருகதை கிடையாது. அவரவர் நியாயம் அவரவருக்கு மட்டும் தான். அந்த பெண் கொலை செய்யப்பட்டாள்ங்குற ஒரே காரணத்துக்காக எவ்வளவு ஈசியா இந்த பத்திரிக்கை அவள கள்ளக்காதலியா மாத்திடுது?

வெறும் உடல் சுகத்துக்காக ஒருத்தனோட போற எந்த பெண்ணும் தன்னோட குழந்தைகளையும் அவளோட கூட்டிட்டு போக மாட்டா. அதுவும் மூணு பேரும் வளர்ந்த, வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க. அவன் மேல எத்தன நம்பிக்கை இருந்துருந்தா தன்னோட பிள்ளைகளோட எதிர்காலத்த அவன நம்பி அவ அவன்கிட்ட ஒப்படைச்சி இருப்பா?

இது காதலையும் தாண்டி, காமத்தையும் தாண்டி அவளுக்கு அவன் மேல இருந்த நம்பிக்கைய தான காட்டுது? அப்படி இருக்குறப்ப அந்த நம்பிக்கை உடையுறப்ப அவ எவ்வளவு உடைஞ்சு போயிருப்பா?

தான் பெத்த பிள்ளைய வன்புணர்வு செய்ய துடிக்குற ஒரு ஜந்துகிட்ட இருந்து தன்னோட மகள காப்பாத்துற தாய்க்கோழி ஸ்தானத்துல அவ எவ்வளவு பதபதச்சு போயிருப்பா? நம்பி வந்தவன் சுயரூபம் தெரிஞ்சி அவன தன் கிட்ட அண்ட விடாம துரத்தி அடிச்சது அவ தப்பா? இதுல அவ தவிக்க விட்டான்னு ஒன்-இந்தியா பதறுது. அடப்பாவிகளா, தன்னை நம்ப வச்சு கூட்டிட்டு வந்ததோட இல்லாம, தன்னோட பெண்ணையும் அனுபவிக்க நினைக்குற எந்த மனுஷன் கூட தான் ஒருத்தி படுப்பா? வேற போக்கிடமும் இல்லாம, தன் பெண்களையும் காப்பாத்த அவன தான் இல்லாத நேரத்துல அவன வீட்டுக்குள்ள விடாம தன் பிள்ளைகள பாதுகாத்த அவ தப்பானவளா?

தவிக்க விட்டதால மதம் கொண்ட யானை போல இருந்தானாம் அவன் – am sorry one-india. இதுக்கு நீங்க ஒரு மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். ஆனா அதுல கூட தயவுசெய்து வக்கிரங்கள விதைச்சுடாதீங்க.

அவ அப்படி அவன் கூட போயிருக்கவே கூடாதுங்குற வியாக்யானங்கள் பேச நிறைய பேர் இருப்பாங்க. நான் எப்பவும் சொல்றது தான், தலைவலியும் திருகுவலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும். முதல்ல அடுத்தவங்க வீட்ல என்ன கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் நடக்குதுங்குறத எட்டிப்பாக்குறத விட்டுட்டு அவரவர் வேலைய பாத்தாலே போதும்.

ஏன்னா அந்த so called கிளுகிளுப்பு சமாச்சாரத்துக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய வலி இருக்கலாம், ஒரு துரோகம் இருக்கலாம், ஒரு வயிற்று பசியாக இருக்கலாம், ஒரு எதிர்கால ஏக்கம் இருக்கலாம், வாழத் துடிக்குற ஒரு இதயம் இருக்கலாம்.

நாப்பது பேர் முன்னால நடந்த ஒரு கொலை ஏற்படுத்திய பாதிப்புல ஒரு கால்வாசி பாதிப்பு கூட இந்த நாலு பெண்கள் கொலை ஏற்படுத்தலையா? ஏன், இந்த நாலு பேருமே கிளுகிளுப்பு கதை எழுதவும் பத்திரிக்கை சர்குலேசன் ஏத்துற காரணகர்த்தாவா இருக்குறதுக்கு மட்டும் தான் லாயக்கா?

முதல்ல பத்திரிகைகள் ஒரு குறைந்தபட்ச பத்திரிக்கை தர்மத்தையாவது பின்பற்றணும். இந்த சம்பவத்த வெறுமனே நியூஸ்சா போட்ருந்தா கூட போதும், ஆனா அத விட்டுட்டு தங்களோட பத்திரிக்கை சர்குலேசனுக்காக பிணங்களை வைத்து கிளுகிளுப்பு தேடுற மனோபாவத்த ஒன்-இந்தியா மாதிரியான பத்திரிக்கைகள் நிறுத்தினா நல்லது. நாலு பேரை கொன்ன கொலையாளி நாலு பேரை தான் கொன்னான், பாலியல் வன்புணர்வு செய்தான். ஆனா அத பாலியல் கதைகளாக்கி மக்கள் மத்தியில உலவ விடுற இந்த மாதிரி பத்திரிக்கைகள் இன்னும் பல பேர் மனசுல நடந்த சம்பவம் நியாயமானதேங்குற மனோபாவத்த விதைச்சி பல கொலையாளிகள உருவாக்கி விடுது. அப்படியே இல்லாட்டாலும் சம்பத்தோட வீரியத்த நீர்த்து போக செய்யுது. இந்த மாதிரியான பத்திரிக்கை செய்திகள படிச்சுட்டு ஜஸ்ட் லைக் தட், த்தூன்னு துப்பிட்டு, இதெல்லாம் சகஜம்னு எடுத்துகிட்டு அவரவர் அவரவர் வேலைய பாக்க போய்டுறாங்க.

இந்தா, இத எழுதிட்டு நானும், படிச்சுட்டு நீங்களும் அவரவர் வேலைய பாக்கப் போற மாதிரி...





Sunday 19 June 2016

கானகன் - நாவல் ஒரு சிலாகிப்பு



சின்ன வயசுல நான் அப்பாகிட்ட அடிக்கடி கேக்குறது “எனக்கு யானை குட்டி, புலி குட்டி, சிங்கக் குட்டி எல்லாம் வாங்கி தாங்கப்பா. நான் அத எல்லாம் வளப்பேன்”ன்னு தான்.

எப்பவும் சேட்டை செய்துகிட்டு எதையாவது வம்பு பண்ணிக்கிட்டு நான் சீறிகிட்டு பாக்குறப்ப எல்லாம் “அவ கண்ண பாரு, அப்படியே புலியோட கண்ணு. சும்மாவா பொட்ட புலிலா அவ”ன்னு அம்மா சொல்லுவா.

வீட்டுக்கே அடங்காம தனி ராஜாங்கம் நடத்திட்டு இருந்த அப்பா யானையாம். அவர் புள்ள நான் புலி.

இருபது வயசோட தொடக்கத்துல எனக்கு நிறைய தேடல் இருந்துது. அது கிட்டத்தட்ட ஒரு அடங்காத தாகம் மாதிரி எனக்குள்ள தகிச்சுகிட்டே இருந்துச்சு. வாழ்க்கைல எனக்கு எல்லாம் கிடச்சதா எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்த நேரம் என் மனசு அதையும் தாண்டி என்னவோ வேணும்னு சொல்லிகிட்டே இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் எனக்கு அது புரியாத புதிராவே தான் இருந்துட்டு இருந்துச்சு.

ஜெயமோகனின் “காடு” படிச்சப்ப கொஞ்சமாய் எனக்கு என்ன வேணும்னு புரிய ஆரம்பிக்க, லெக்ஷ்மி சரவணக்குமாரோட “கானகன்” அத எனக்கு முழுசா உணர்த்துன மாதிரி இருக்கு.

என்னோட சின்ன வயசுல என்னை தொடர்ந்து சில கனவுகள் தொரத்திகிட்டே இருந்துச்சு. ஒண்ணு, ஒரு பெரிய மாட்டுக் கூட்டம். அதோட கொம்புகள்ல நான் மாட்டிகிட்டு அலைக்கழிஞ்சுகிட்டே இருப்பேன். போக போக அந்த கனவு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போக, மாட்டு கொம்புல பயணம் பண்றது ஒரு சாகசம்ன்னு பெருமையா நினைக்க ஆரம்பிச்சேன். இன்னொன்னு, வீட்டை சுத்தி உலவுற காட்டு மிருகங்கள். நிஜத்துல அப்பாகிட்ட நான் வாங்கி கேட்ட விலங்குகளை எல்லாம் அப்பா கனவுல எனக்கு வாங்கி குடுத்தது. பயம் கலந்த பிரமிப்போட நான் அந்த விலங்குகள் மத்தியில வேடிக்கை பாத்துகிட்டே நிப்பேன்.

புத்தகங்கள கைல வச்சுகிட்டு அதோட வாசத்த முகர்ந்து பாக்குறது ஒரு தனி சுகம்னு இப்பல்லாம் எனக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு. கானகன் நாவல் படிச்ச உடனே என்னையறியாம அந்த புத்தகம் எங்கேன்னு கண் தேட ஆரம்பிச்சுது. எனக்கு அத வாசம் பிடிச்சு அந்த யானையையும் புலியையும் தழுவி கிடக்க ஆசை. ஆனா பாருங்க, என் துரதிஷ்டம், நான் படிச்சது pdfல. கானகனை வாசிக்க சொல்லி பரிந்துரைத்த நண்பனுக்கும் கேட்ட உடனே ஆன்லைன்ல பி.டி.எப். வாங்கி அனுப்பி வைத்த நண்பருக்கும் முதல்ல என் நன்றி. ஆனாலும் இன்னொரு தடவ அத புத்தகமா கைல வாங்கி தடவி பாக்கணும்.

என் வீட்டு விலங்குகள் பத்தின சுவாரசியங்களையும், அவைகளுக்கு இருக்குற உணர்வுகளையும் விவரிச்சு நான் விலங்குகளுக்கு நெருக்கமானவள்ன்னு சொன்னா சட்டுன்னு யாரும் அவ்வளவு எளிதா நம்பினது இல்ல. இவளான்னு புருவம் தூக்கி பாக்குறத உணர்ந்துருக்கேன். விலங்குகளை யாராவது வசியப்படுத்த முடியுமா? அதுகளுக்கு அவ்வளவு யோசிக்குற சக்தி இருக்கா? விலங்கு எப்பவும் விலங்கு தானே, நினச்ச நேரத்துல நாம வெட்டி சாப்பிடதானே அதெல்லாம் வளர்க்குறோம்னு கேப்பாங்க. எந்த விலங்கா இருந்தாலும் அதுக்கிட்ட பேச நமக்கு ஒரு பாஷை உண்டு. அது கண்களால பேசுற பாஷை. அத நாம எதுவுமே செய்ய மாட்டோம்னு அதுக்கு நாம குடுக்குற தன்னம்பிக்கை பாஷை. நான் உன்னை நேசிக்குறேன்னு சொல்ற பாஷை. அந்த உலகம் தனித்துவமானது, அத புரிஞ்சுகிட்டா கண்டிப்பா அதுல இருந்து மீண்டு வர மனசே வராது.

அப்படி தான் எனக்கு “கானகன்”னோட காட்டுக்குள்ள போயிட்டு மீண்டு வரவே முடியல.

இந்த நாவலுக்கு கிடைத்த விருது பத்தி எல்லாம் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எனக்கு அதுல சுவாரசியம் இல்ல. காரணம் நான் அது பத்தி எதுவுமே அறியாதவ. அதனால அதோட பெருமைகள் கூட எனக்கு தெரியாமலே போயிருக்கும். எனக்கு அதப் பத்தி எந்த கவலையும் இல்ல. ஆனா இந்த நாவல் எனக்குள்ள நிறைய கேள்விகள எழுப்பிச்சு. இந்த நாவல்ல வர்ற சில கதாபாத்திரங்கள் இப்படி எல்லோரும் இருந்துட்டா எத்தன நல்லாயிருக்கும்னு தோண வச்சுட்டே இருக்காங்க.

ஒரு இன மக்களோட வாழ்வாதாரத்த பத்தின நாவல் இதுன்னு பேஸ்புக்ல எங்கயோ ஒரு இடத்துல படிச்சேன். ஆனா அத பத்தி மட்டுமேயான நாவலா கண்டிப்பா எனக்கு தெரியல. இந்த நாவல் ஒரு இனத்த விவரிக்க கூடியதா இருக்கலாம், ஆனா அதையும் மீறி நிறைய விசயங்கள சொல்லிட்டு போகுது.

எனக்கு விலங்குகளோட வாழ்வியல பத்தியும் அதோட குணாதிசயங்கள பத்தியும் தெரிஞ்சுக்க பேராவல் உண்டு. இந்த நாவல் அந்த வகைல எனக்கு நிறைய தீனி போட்ருக்கு. விலங்குகளுக்கு உணர்வுண்டு. மனிதனை விட ஒரு தேர்ந்த வாழ்க்கை நெறியை வகுத்து அதுக்கு ஏத்தாற்போல வாழும் விலங்குகள உணர்வுகளே இல்லாத மனுசனால கண்டிப்பா புரிஞ்சுக்க முடியாது. இந்த நாவல்ல கதைமாந்தர்கள் வழியா விலங்குகள அழகா புரிய வைக்குறார் லக்ஷ்மி சரவணக்குமார்.

செனை மானை சுட்ட ஜெமீந்தார் முதல் கொண்டு இதுல வர்ற கதைமாந்தர்கள் ஒவ்வொருத்தரும் அவங்கவங்க பங்களிப்ப நிறைவாவே செய்துட்டு போய்டுறாங்க. காட்டையே தன்வசப்படுத்திய சடையனும், அவன் மகன் வாசியும் கூட எல்லாரையும் போல ஒரு கதாபாத்திரங்களா தான் வாழ்ந்துட்டு போறாங்க. காரணம், ஒவ்வொரு கதைமாந்தர்களையும் கதைக்கான அவங்களோட பங்களிப்பையும் அழகா செதுக்கி இருக்கார் நாவலாசிரியர். எனக்கு இதுல முரண்பட்டு தெரிஞ்ச விஷயம் தங்கப்பனோட குணாதிசயம். ஆரம்பத்துல ஒரு புலிய சுடுறப்ப அவனுக்கு வேட்டை மேல பெரிய ஆர்வம் இல்லன்னு சொல்லப்படுது. வேட்டை மேல இருந்த தாகத்தால தான் செல்லாயி அவன் கூட போனான்னு சொல்லப்படுது. கடைசில அவன் ஒரு கொடூரமான வேட்டைக்காரனா மாறிப் போயிடுறான். எது எப்படி இருந்தாலும் இந்த குழப்பம் எல்லாம் தூக்கி வீசப்பட வேண்டியவை. வீசியாச்சு.

அவ்வளவு மட்டும் தானா இந்த நாவல்ல இருக்கு. இல்லவே இல்ல. நாம பேசத் தயங்குற, ச்சீன்னு ஒதுக்குற விஷயங்கள் நிறைய இருக்கு இந்த நாவல்ல. அதுவும் ஒரு அழகியலோட! இது தான் வாழ்க்கை, இப்படி தான் வாழணும்னு நமக்கு பாடம் எடுக்குற மாதிரி.

ஒருத்தனுக்கு மூணு பொண்டாட்டினு சொல்றத வேணா இந்த சமூகம் ஏத்துக்கும். ஒருத்திக்கு ரெண்டு புருஷன்னு சொன்னா இந்த சமூகம் ஏத்துக்குமா என்ன?

பொண்டாட்டி மேல அளவு கடந்த ப்ரியம் வச்சிருக்குற சடையன், அவன் மேல அதே அளவு ப்ரியம் வச்சிருக்குற செல்லாயி அதை விட அதிகமா தங்கப்பன் மேல ப்ரியம் வைக்குறா. தங்கப்பனோட வாழ்ந்துட்டு இருந்தாலும் சடையனையும் அவ காதலிக்க தவறல. “உனக்கு ரெண்டு அப்பா”ன்னு பெருமையா தன்னோட மகள் கிட்ட அவ அறிமுகப்படுத்தி வைக்குறா. தங்கப்பன விட்டு விலகவும் முடியாது, அதே நேரம் சடயனையும் அவ கூட வச்சிருக்கணும்ங்குற அவளோட ஆசைக்கு ஒரு சபாஷ்.

மூணு பொண்ணுங்க ஒரு இடத்துல இருந்தா அங்க சண்டை வராம இருக்காது. ஆனா இங்க தங்கப்பனோட மூணு பொண்டாட்டிகளும் அவ்வளவு ஒத்துமையா இருக்காங்க. அதுவும் சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசி மேல தங்கப்பனோட மத்த ரெண்டு பொண்டாட்டிகளான மாரிக்கும் சகாயராணிக்கும் கொள்ளை அன்பு. இப்படி பட்ட குணாதிசயம் கொண்டவர்கள நாவல்ல மட்டும் தான் பாக்க முடியுமோ?

தங்கப்பன் கூடவே சுத்துற அன்சாரிக்கு தன்னை விட பலமடங்கு அதிக வயசுள்ள சகாயராணி மேல ஆசை. ஒரு கட்டத்துல சகாயராணி அன்சாரி கூட போக முடிவெடுத்து மாரி கிட்ட சொல்றப்ப, “நீயும் தான் இத்தன காலம் தங்கப்பனுக்கு மாடா உழச்சிட்ட, இனியாவது சந்தோசமா இரு”ன்னு அவ வழியனுப்பி வைக்குறா. “இப்பவும் நான் தங்கப்பன நேசிக்குறேன், ஆனாலும் நானும் மனுசி தானே”ன்னு சகாயராணி சர்வசாதாரணமா ஒரு கேள்விய வீசி விட்டு போறா. அன்சாரி கூட வாழ்ந்துட்டு தங்கப்பனுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள்லயும் அவ கொறை வைக்கல.

அதே மாதிரி தான் இதுல வர்ற ஆண் கதாபாத்திரங்களும். சடையனுக்கும் செல்லாயிக்கும் பிறந்த வாசியை தன்னோட வாரிசா பாக்குற தங்கப்பன் ஆகட்டும், தான் நேசிச்ச பெண் தன்னோட அண்ணனை விரும்புறான்னு தெரிஞ்சதும் மனச தேத்திக்குற கட்டையனாகட்டும் எல்லாருமே இம்மியளவு கூட பிசகாம நம்ம மனசுல ஒட்டிக்கறாங்க.

சகாயராணிக்கும் அன்சாரிக்கும் இடைல ஏற்பட்ட உறவு தங்கப்பனுக்கு தெரியுமா தெரியாதான்னு நாவலாசிரியர் தெளிவுப்படுத்தல. ஆனாலும் அவனுக்கு தெரிஞ்சாலும் தன்னை ஒண்ணும் சொல்ல மாட்டான்னு சகாயராணி மூலமா உணர்த்துறார். அதே மாதிரி தான் தங்கப்பனுக்கு அன்சாரி மேல கரிசனம் அதிகமாகிப் போகுது. அன்சாரி இடத்துல சகாயராணிய பாத்துட்டு ஒரு புன்னகையோட கடந்து போறான்.

இங்க எத்தனை பேர் அடுத்தவங்க அந்தரங்கம் மேல ஆர்வம் காட்டாம இருக்கோம்? நமக்கு வேண்டியதெல்லாம் அடுத்த வீட்டு வம்பு தான். நீ இப்படி தான் இருக்கணும் அப்படி தான் இருக்கணும்னு ஆளாளுக்கு ஆலோசனைகள சொல்ல வந்துடுவாங்க. அவங்களுக்கு எல்லாம் செருப்படி குடுக்காமலே தன்னோட கதாபாத்திரங்கள் மூலமா யோசிக்க வச்சிருக்காரோ நாவலாசிரியர்ன்னு எனக்கு ஒரு கேள்வி வருது.

இங்க யாரும் யார் குடியையும் கெடுக்கல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தல. அவரவருக்கு தேவையான வாழ்க்கைய அவரவர் வாழ்ந்துகிட்டே இருக்காங்க எந்த விதமான மன கசப்புகளுக்கும் இடம் குடுக்காம.

ஒரு விஷயம் சொல்லாம இருக்க முடியல, காடு நாவலோட கதாநாயகியான நீலி வெறும் கதாபாத்திரமா தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா. அவ ஒரு உயிருள்ள அழகு சிலை அவ்வளவே. அதனால தான் அவளோட முடிவு சட்டுன்னு இருந்தாலும் பெருசா மனச பாதிக்கல. ஆனா இங்க செல்லாயி, மாரி, சகாயராணி, குயிலம்மாள் மட்டுமில்லாம, வாசிய முதல் முதலா அனுபவிக்கும் ஜெமீந்தார் மனைவி, தங்கப்பன் தேடிப் போய் அவனை ஆளும் பெண்னு எல்லா கதாபாத்திரங்களும் நம்ம கூடவே வாழ்ந்துட்டு போய்டுறாங்க.

காதலும் காமமும் இல்லா வாழ்க்கை அர்த்தமற்றது. அந்த காட்டைப் போல அழகானவை. ரெண்டுமே கொண்டாடப்பட வேண்டியவை. துவேசிக்கப்பட வேண்டிய அவசியமே இல்ல.
......................................




பின்குறிப்பு: நாவல் வாசிக்க ஆரம்பிச்ச நேரம் எனக்கு நெருடியது எழுத்துப்பிழைகளும் அவசியம் இல்லாத இடங்கள்ல வர்ற முப்புள்ளிகளும். இதுல கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தா இன்னும் அதிகமா சந்தோசப்பட்டுருப்பேன்.

Wednesday 15 June 2016

எழுத்தாளர் பொன்னீலன் - சந்திச்ச கதை



கொஞ்ச நாளாவே மனசுக்குள்ள நடந்துட்டு இருக்குற போராட்டம் தான். “நாம ஏன் இப்படி இருக்கோம், இந்த சமூகத்துல நமக்குன்னு ஒரு அங்கீகாரம் வேணாமா? நமக்கு என்ன தேவைங்குரத நாம தான பாத்துக்கணும், ஏன் மத்தவங்கள எல்லாம் சார்ந்து வாழணும்”னு என்னை நானே நிறைய கேள்விகள் கேக்க ஆரம்பிச்சுட்டேன்.

நிறைய பேர் என்கிட்ட சொல்லுவாங்க, “நீ ஏன் புக் போடக் கூடாது”ன்னு. புக் போடுறது பெருசு இல்ல, ஆனா அது தகுந்த இடத்துல தகுந்த நேரத்துல போய் சேரணும். நமக்கான அங்கீகாரம் எதுவுமே கிடைக்காம புக் போட்டு வேஸ்ட்.

அட, அத கூட விட்டுடலாம். “அப்படி என்ன எழுதி தள்ளிட்டன்னு உனக்கு இப்படி ஒரு ஆசை”ன்னு என் மனசாட்சி கேட்ட கேள்விக்கு தான் என்னால பதிலே சொல்ல முடியல.

இப்படியே சில பல மாசங்களா குழம்பி, “இப்படியே யோசிச்சுட்டு இருந்தா ஒண்ணும் வேலைக்கு ஆகாது, முதல்ல நீ எழுதி வச்சிருக்குறத எல்லாம் தொகுக்க ஆரம்பி. அப்புறம் அடுத்து என்னப் பண்ணலாம்னு யோசிக்கலாம்”ன்னு மனசுக்குள்ள ஒரு கட்டளை குரல். அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே ப்ளாக்ல நான் எழுதி இருந்தத எல்லாம் தூசி தட்டி, ஒரு முப்பத்தியிரண்டு போஸ்ட்ட தேத்தி, அதுல இருந்து இருபத இறுதி பண்ணினேன்.

அப்புறமும் மனசுக்குள்ள சின்னத் தயக்கம் இருந்துகிட்டே தான் இருந்துச்சு. எப்படியோ ஒரு வழியா எம்பது பக்கத்து தொகுப்ப ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வாசிச்சு பாத்தப்ப, “பரவால, நீ கூட நல்லாத்தான் எழுதுற போல”ன்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன். இந்த புத்தகத்துக்கு ‘சிறகடிக்கும் காலம்”ன்னு பெயர் வச்சா என்னன்னு ஒரு யோசனை. இருந்தும் புத்தகத் தலைப்பு இன்னும் முடிவாகல.

சரி, பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு, அடுத்து அத வச்சு என்னப் பண்றது?

புக் எப்படி போடணும்னு தெரியாது

அத எங்க பிரிண்ட் பண்ணனும்னு தெரியாது

புத்தகத்த வீட்டுக்கு எடுத்துட்டு போனா அடி விழும்

அதுக்கு ஏதாவது காசு செலவாகுமா? அதுவும் தெரியாது. அப்படி காசு செலவானா யார் கிட்ட போய் காசு கேக்கன்னும் தெரியாது.

இப்படி ஏகப்பட்ட தெரியாதுகள்.

அதுமட்டுமில்லாம ஏற்கனவே ஆரம்பிச்ச கவிதை தொகுப்பு “தென்னங்கீற்றுகளின் சாட்சியாக” அப்படியே கிடப்புல இருக்குற வருத்தம்.

இத எல்லாம் மீறி, “ஏதாவது வழி காட்டுமா”ன்னு எங்க குல தெய்வத்துகிட்ட வேண்டிக்கதான் முடிஞ்சுது. அப்பவே எழுத்தாளர் பொன்னீலன் நமக்கு சொந்தம் தானே, அவர போய் பாத்தா என்னன்னு தோணிகிட்டே இருந்துச்சு.

இன்னிக்கி காலைல திடீர்னு ஒரு வேகம். ஏதாவது பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ணி, முதல்ல யூனிவர்சிட்டி டிபார்ட்மென்ட் போய் அங்க ஒரு ஸ்டாப் பாத்துட்டு காரை நேரா எங்க குலதெய்வம் இருக்குற வீட்டுக்கு விட்டேன்.

அது எங்க குடும்ப கோவில். கோவில்ன்னு சொல்றத விட சாமி குடியிருக்குற வீடுன்னு சொல்லலாம். அதாவது “சாமி வீடு”ன்னு தான் சொல்லுவோம். அத நிர்வகிக்குறவங்க எனக்கு மாமா, மாமி முறை வேணும். வெள்ளிக் கிழமை வெள்ளிக் கிழமை விசேச பூஜை வச்சு எல்லாருக்கும் சாப்பாடுப் போடுவாங்க. இருந்தாலும் நான் போக மாட்டேன். காரணம் கால்ல செருப்ப கழட்டிட்டு என்னால எந்த கோவிலுக்குள்ளயும் போக முடியாது. பெரிய பெரிய கோவில்கள்ல செருப்போட உள்ள விடவும் மாட்டாங்க. அதனாலயே என்னை ஒதுக்கி வைக்குற கோவிலை நான் ஒதுக்கி வைக்குறேன்னு வீராப்பா பேசிட்டு போகாமலே இருந்துடுவேன். அப்படி தான் இங்கயும் நான் போறது இல்ல. ஆனா இங்க யாரும் என்னை வரக் கூடாதுன்னு சொன்னதும் இல்ல.

திடீர்னு போயிட்டேனா, மாமி “வாமா, உக்காரு”ன்னு சொன்னாங்க. “நாளைக்கு பையனுக்கு நிச்சயதார்த்தம். நான் அப்பா கிட்ட சொல்லி இருந்தேனே”ன்னு சொல்லிட்டே மாமா வந்தார். “அட, அப்படியா, சந்தோசம்”ன்னு சொல்லிகிட்டேன்.

மாமி, “செருப்ப கழட்டிட்டு போய் சாமி கும்பிடு”ன்னு சொன்னாங்க. “இல்ல மாமி, நான் இங்க இருந்தே கும்பிட்டுக்குறேன், நம்ம அம்மா தானே”ன்னு நான் மறுக்க, மாமா, “நீ வேணும்னு செருப்போட தான் வருவேன்னு அடம் பிடிக்கலையே, உன்னால செருப்பு இல்லாம நடக்க முடியாது, அதனால நீ செருப்பு போட்டுட்டு வந்தா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா, நீ அப்படியே வா”ன்னு உள்ள கூட்டிட்டு போய்ட்டார்.

உள்ள போய் பொட்டல் அம்மாவ பாத்ததும் மனசு நிறைய சந்தோசம். அவ கிட்ட நிறைய பேசணும், நிறைய கேக்கனும்னு நினச்சுட்டு இருந்தேன். ஆனாலும் அங்கயே இருந்து என்னால சரியா “ப்ரே’ பண்ண முடியல. அமைதியா அசையாம உக்காந்து தியானம் பண்ணி தான் பழக்கம், அதனால “வீட்டுல போய் எனக்கு தேவையானத வேண்டிக்குறேன்மா”ன்னு சொல்லிட்டு, மாமா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்.

அப்போ தான் எழுத்தாளர் பொன்னீலன் பத்தி கேட்டேன். அவர் இந்த ஏரியா தானே, அவர பாக்க முடியுமா, அவர் எனக்கு என்ன முறை வேணும்னு கேக்க ஆரம்பிச்சேன். ஒருதடவ அப்பா கிட்ட பேசுறப்ப அவர் எனக்கு சித்தப்பான்னு சொன்னதா ஒரு நியாபகம்.

“இதோ பக்கத்துல தான் வீடு, ஆனா காலைல பதினோரு மணிக்கு முன்னாடி அவர யாரும் பாக்க போக கூடாது, போன் பண்ணக் கூடாதுன்னு எழுதி வச்சிருக்குறாராம்”ன்னு மாமி சொன்னாங்க. அப்புறம் அவங்களே “ராத்திரி முழுக்க கண்முழிச்சு எழுதுவாராம், அதனால காலைல தூங்கனும்னு அப்படி சொல்லி இருக்கார்”ன்னு சொன்னாங்க.

“இப்ப தான் மணி மதியம் ஒண்ணாகிடுச்சே, அப்படியே நீ திரும்பி போறப்ப வலது பக்கம் நீல கேட் போட்ட வீடு, நீ பாத்துட்டு போய்டு”ன்னு மாமா சொன்னாங்க.

எனக்கா ஒரே தயக்கம். இதுவரைக்கும் அவர நான் பாத்ததே இல்ல. சின்ன வயசுல சாமி வீட்டுக்கு வந்தப்ப கூட நான் அவர பாத்தது இல்ல. அவர்கிட்ட போய் என்னனு நான் என்னை அறிமுகப்படுத்த?

‘நீ உன் அப்பா பெயர சொல்லு, அவருக்கு கண்டிப்பா தெரியும்”ன்னு மாமா சொன்னாங்க. அப்புறம் என்ன நினச்சாங்களோ, “சரி, வா, நான் வெளில கிளம்புறேன், அப்படியே உன்னை அவர் வீட்ல விட்டுட்டு போறேன்’ன்னு சொல்லி அவரும் அவர் பைக் எடுத்துட்டு கிளம்பிட்டார். நான் அவர கார்ல பின்தொடர்ந்து போக, ரொம்ப பக்கத்துலயே அவர் வீடு.

காரை ஒதுக்கி ஓரமா விட்டுட்டு இறங்கலாம்னு நினச்சேன். அதுக்குள்ள மாமா ஓடி வந்து, “நீ இங்கயே இரு, நான் முதல்ல போய் அவர் இருக்காரான்னு பாத்துட்டு வரேன்”னு சொல்லிட்டு கேட்டை திறந்து உள்ள போனார்.

கொஞ்ச நேரம் ஆகல, மாமா திரும்ப வந்தார். கூடவே எழுத்தாளர் பொன்னீலன். “அய்யய்யோ என்னது இது, நான் வேணா உள்ள வரேன்”னு நான் பதறிட்டேன்.

“அட, நீ அப்படியே உக்காரு, இதுல எல்லாம் என்ன பார்மாலிட்டி இருக்குன்னு சொல்லிட்டே, “உன்னை பத்தி நான் நிறைய கேள்விப்பட்ருக்கேன்”ன்னு சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். மனசுக்குள்ள “நமக்கு தான் யாரையும் தெரிய மாட்டேங்குது, ஆனா எல்லாரும் நம்மள தெரிஞ்சி வச்சிருக்காங்களே’ன்னு ஆச்சர்யம்.

அப்புறம் அவர என்னன்னு சொல்லி கூப்டுறதுன்னு ஒரே குழப்பம். திடீர்னு சித்தப்பான்னே சொல்லிட்டேன். “உங்கள பாக்கணும்ன்னு தோணிச்சு அதான் வந்தேன்”ன்னு சொன்னேன்.

“ரொம்ப வெயிலா இருக்கே, நீங்க வேற வெயில்ல நின்னுட்டே பேசுறீங்க, நாம வேணா வேற எங்கயாவது உக்காந்து பேசலாம்”ன்னு சொல்லியும், “இல்லல, உனக்காக தானே, நான் நின்னுகிட்டே பேசுறேன், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல”ன்னு சொல்லிட்டார்.

அப்புறம், நாம எல்லாம் ஒரே குடும்பம்மா, நாப்பது வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் உங்க குடும்பத்தோட தான் வளந்தேன், உங்க அப்பா, மூத்தப்பா கூட தான் சுத்துவேன். அப்புறம் தான் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி போக ஆரம்பிச்சேன்”ன்னு சொன்னார்.

“ஒண்ணுமில்ல சித்தப்பா, திடீர்னு ஒரு ஆசை, ஒரு புக் போடலாம்னு. அதான் உங்க கிட்ட காட்டி உங்க கருத்த கேக்கலாம்ன்னு வந்தேன்”ன்னு மெல்ல ஆரம்பிச்சேன்.

“புத்தகம் தானே, தாராளம் போடலாம். எத பத்தி எழுதி இருக்க”ன்னு திடீர்னு கேட்டுட்டார்.

அவ்வ்வ்வ்.... இப்படி கேட்டா என்ன பதில் சொல்றது? என்ன எழுதி இருக்கேன்னு தெரியாம தானே நானே குழம்பிகிட்டு இருக்கேன்.

திக்கித் திணறி “குடும்ப கதைகள் தான்”ன்னு உளறினேன். அப்புறம் நானே “அப்படி இல்ல, சும்மா சின்ன வயசு நியாபகங்கள் மாதிரி”ன்னு மறுபடியும் உளறினேன். அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாம “எனக்கு தமிழ் எல்லாம் சரியா தெரியாது”ன்னு மறுபடியும் உளறினேன்.

என்னோட முகத்த பாக்க அவருக்கே பாவமா இருந்துருக்கும் போல. “எதுவா இருந்தா என்ன, நாம எழுதுறது தான் எழுத்து. அது மத்தவங்க ரசிக்குற மாதிரி இருந்தா போதும்”ன்னு சொன்னார்.

ஹப்பாடான்னு கொஞ்சம் பெருமூச்சு விட்டுகிட்டேன்.

“முதல்ல புக் போடணும்னா கைகாசு கொஞ்சம் செலவு பண்ணனும். நீ புதுசு இல்லையா, அதனால எந்த பதிப்பகத்தாரும் அவ்வளவு சீக்கிரம் நம்பி போட மாட்டாங்க. அப்புறம் கொஞ்சம் பிரபலம் ஆகிட்டா அவங்களே போட்டுக்குவாங்க”ன்னு சொன்னார். முதல்ல இத எல்லாம் புக்கா போட தகுதி ஆனது தானான்னு பாத்து சொல்லுங்க, அப்புறம் மத்தத பத்தி யோசிக்கலாம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

அப்புறம் எனக்கு ஒரே ஆவல். “என்னை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும், யார் உங்ககிட்ட சொன்னது”ன்னு கேட்டேன்.

“கண்ணப்பன் உனக்கு அண்ணன் தான, அவன் தான் சொல்லுவான், என் தங்கச்சி ஒருத்தி இருக்கா, அவ அப்படி அவ இப்படின்னு சொல்லிட்டே இருப்பான்”ன்னு சொன்னதும், “பார்ரா, நம்ம புராணம் பாடுற அண்ணன் வேற இருக்கானாக்கும்”ன்னு மனசுக்குள்ளயே தான் நினைச்சுகிட்டேன். இத எல்லாம் வெளிலயா சொல்ல முடியும்.

“நீ ரொம்ப திறமைசாலி, நீ ரொம்ப கஷ்டப்பட்ட”ன்னு எல்லாம் சொல்லுவான்னு சொன்னார். நானே அந்த அண்ணன பாத்து வருஷ கணக்குல ஆகிடுச்சு. இருந்தாலும் அடுத்த தடவ அண்ணன பாத்தா கொஞ்சம் சிரிச்சா மாதிரி பேசிக்கணும்ன்னு தோணிச்சு.

அடுத்து பேச்சு பால்ய காலம், கிராமம்னு திரும்பிச்சு. “நான் என்னோட பால்ய காலங்கள பத்தி நிறைய எழுதி இருக்கேன். இப்படி கிராமங்கள பத்தி எழுதணும்னா இப்ப எல்லாம் கீ. ராஜநாராயணன், கழனியூரான் இருக்காங்க. அவங்க எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க”ன்னு சொன்னார்.

ஏற்கனவே அவங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு ரொம்ப ஆசை உண்டு. பாப்போம், காலம் வழி விடுதான்னு.

“எனக்கு ஒரு பத்து நாள் டைம் குடு. ஏற்கனவே நாலு புக் இந்த மாதிரி படிச்சு கருத்து சொல்ல வந்திருக்கு, நான் எப்படியும் படிச்சுட்டு உன்னை கூப்பிடுறேன். உன் அட்ரெஸ், போன் நம்பர் எழுதி குடுத்துட்டு போ”ன்னு சொன்னார்.

எழுதி குடுத்துட்டு வந்துருக்கேன். பாப்போம், படிச்சுட்டு இதெல்லாம் குப்பைன்னு சொல்லப் போறாரா, இல்ல சுமார்ன்னு சொல்லப் போறாரான்னு...

“பொட்டல் அம்மா, நீ தான் உம்புள்ளைய காப்பாத்தணும்”

..............................................


பின் குறிப்பு: இப்ப தான் யோசிச்சு பாக்குறேன். அவர் அப்பாவ விட எப்படியும் பத்து பதினஞ்சு வயசு பெரியவரா தான் இருக்க முடியும். அப்புறம் எப்படி அவர் எனக்கு சித்தப்பாவாக முடியும். பெரியப்பான்னு தான கூப்ட்ருக்கணும். ஆஹா.... நல்லா உளறி வச்சுட்டு வந்துருக்கேன்னு மட்டும் தெரியுது. ஆனாலும் அவர் போன் காலுக்காக வெயிட்டிங்....



எழுத்தாளர் பொன்னீலன் பத்தி தெரிஞ்சிக்க விக்கிபீடியா பாருங்க.

Monday 13 June 2016

நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....




நேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது.

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்.

எப்படி நமக்கு புத்தகங்களோ எழுத்தாளர்களோ அறிமுகம் கிடையாதோ அப்படி தான் பாடல்களும், கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் அறிமுகம் கிடையாது. எனக்கு தெரிஞ்ச மியூசிக் டைரக்டர்ஸ்னா அது இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் தான். போட்டோவ பாத்த உடனே கண்டுபிடிச்சிடுவேன். மத்தப்படி இதெது இவங்க பாட்டுன்னு எல்லாம் ஒண்ணும் தெரியாது. எப்பவாவது காதுக்கு கேக்குற மாதிரி இருந்தா மட்டும் பாட்டு கேப்பேன். மத்தப்படி இசை உலகத்துக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல.

இதெல்லாம் நீங்க நம்பித் தான் ஆகணும். வேணும்னா என்னோட போஸ்ட்ல ஏதாவது இசைய பத்தி எழுதி இருக்கேனான்னு பாத்துக்கோங்க. பாகுபலில வர்ற ஹோனனா ஹோனனா பாட்டு பத்தி எழுதினப்ப கூட தமனா தமனான்னு புலம்பி இருப்பேன்.

சரி, இப்ப விசயத்துக்கு வருவோம். கபாலி பாட்டு லிங்க் கிடைச்சுதா, திடீர்னு ஒரு ஆசை. எல்லாரும் கபாலி கபாலின்னு சொல்றாங்களே, நாமளும் அத பத்தி தெரிஞ்சுக்காம இருந்தா தெய்வ குத்தம் ஆகிடுமோ, எதுக்கும் டவுன்லோட் பண்ணி கேட்ருவோம்னு முடிவு பண்ணினேன்.

முதல் பாட்டு “நெருப்புடா”. ஏற்கனவே பேஸ்புக்ல எல்லாரும் நெருப்புடா நெருப்புடான்னு சொல்லி சொல்லியே உசுப்பேத்தி வச்சிருந்தாங்களா, சரிதான்னு டவுன்லோட் ஆனதும் ப்ளே பண்ணினேன்.

ஆத்தீ, ஆரம்பிச்சதே சைரன் சத்தத்துல சொய்ங் சொய்ங்ன்னு தான். ரெண்டு கையும் அப்படியே ரெண்டு காதையும் பொத்த போய்டுச்சு. நான் தான் சரி மேற்கொண்டு கேட்ருவமேன்னு என் கைய கண்ட்ரோல் பண்ணிகிட்டேன்.

அப்புறம் “நெருப்புடா”ன்னு குரலை கேட்டதும் நிமிர்ந்து உக்காந்து, “நெருங்குடா, முடியுமா”ன்னு கேட்டப்ப ஆங், அதான, யார்கிட்டன்னு ஒரு மிதப்பு வர ஆரம்பிச்சிடுச்சு.

அப்புறம் பாத்தா ஒரே இரைச்சல் சத்தம். சரி சரி, கண்ட்ரோல் பண்ணிப்போம், அடுத்து பெருசா வரப்போகுதுன்னு ரொம்ப எதிர்பார்ப்போட காது வலியையும் மீறி ஆவலோட கேட்டுட்டு இருந்தேன்.

டக்குன்னு “பயமா, ஹஹஹஹா”ன்னு ரஜினி குரலை கேட்டதும் தான் தாமதம், ச்சே என்னா கம்பீரம் அந்த குரல்ல. ரஜினி எப்பவும் ரஜினி தான். அந்த “ஹஹஹஹா” சத்தத்த கேட்ட உடனே கண்முன்னால ரஜினி அப்படியே கோர்ட் சூட் போட்டுட்டு, பாக்கட்ல கை விட்டுட்டு கம்பீரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டார். பாக்க கண் கோடி வேணுமையா...

ரஜினி சொல்லி முடிச்சதும் “நெருப்புடா, நெருங்குடா, பாப்போம். நெருங்குனா பொசுங்குற கூட்டம். அடிக்குற அழிக்குற எண்ணம், முடியுமா நடக்குமா இன்னும்” ன்னு சொல்றப்ப கேக்க நல்லா தான் இருக்கு. ஆனா என்னமோ பாடுறவர் ரொம்ப முக்குறது மாதிரி எனக்கு ஒரு ஃபீல். ஆனாலும் பரவால, ரஜினிக்காக மன்னிச்சு விட்டுடலாம்.

அடுத்து, “அடங்குனா அடங்குர ஆளா நீ.... இழுத்ததும் பிரியுற நூலா நீ... தடையெல்லாம் மதிக்குற ஆளா நீ... விடியல விரும்பிடும் காவாலீஈஈஈஈஈ” ன்னு இழுக்குரப்ப லைன்ஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஒரு ரெண்டு தடவ ரிப்பீட்ல போட்டதும் பிடிச்சு போச்சு. அப்புறம், அதென்ன காவாலி சண்டைக்கு எல்லாம் வந்துடாதீங்க, என் காதுல இப்படி தான் விழுந்துச்சு, அவ்வ்வ்வ்.....

உஸ்ஸ்ஸ்ஸ்ஷப்பா..... நான் டயர்ட் ஆகிட்டேன். அதனால அடுத்து என்னன்னு எல்லாம் சொல்ல முடியாதுன்னு அப்படியே தலைய தலையணைல புதைச்ச நேரம் “நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு....கபாலிடா” ஹப்பா, குரலா அது, சிங்கத்தோட கர்ஜனை. டக்குன்னு தலைய நிமிர்த்த வச்சது நம்ம ரஜினி தான்ப்பா. போதும், இதுக்கு மேல அந்த பாட்டைக் கேக்க கூடாதுன்னு நிறுத்திட்டேன்.

ஆனா ஒன்னு, என்ன தான் முக்கி முக்கி பாடி இருந்தாலும், எனக்கு பயந்து பயந்து வந்தாலும் ஒரு நாலஞ்சு தடவ பாட்ட கேட்டுட்டேன்னா தெளிஞ்சிடுவேன். அப்புறம் நானும் காவாலீஈஈஈஈஈ சே சே இல்லல “காபாலீஈஈஈஈஈ”ன்னு பாடிட்டே தான் இருக்கப் போறேன்.

அதுக்கு முன்னால அடுத்த பாட்ட கேக்கணுமேன்னு “மாய நதி” டவுன்லோட் பண்ணினேன். அது ஒரு மெலோடி சாங்க்னு புரிஞ்சுது. சரி, சரி எப்படியும் நாலஞ்சு தடவ ரிப்பீட்ல பிடிச்சு போகும்னு தோணிடுச்சு. அதனால நெக்ஸ்ட்டுன்னு “உலகம் ஒருவனுக்கா”வ தேடிப் போனேன். அடுத்து “வானம் பார்த்தேன்”. அப்புறம் அதென்ன பாட்டு, “வீரத் துறந்தரா”வா? (அப்படி தான் மை லார்ட் காதுக்குள்ள கேக்குது) அய்யயோ வேணாம். இதுக்கு மேல கேட்டோம் ராத்திரி வர்ற கொஞ்ச நஞ்ச தூக்கமும் போய்டும்னு கபால்ன்னு விண்டாஸ் மீடியா ப்ளேயர ஆப் பண்ணிட்டேன். ரஜினி படத்துக்கு இந்த பாட்டு செட் ஆகுமா ஆகாதான்னு இப்பவே என் மண்டை குடைய ஆரம்பிச்சிடுச்சு.

ஆங்.... அப்புறம் என்னன்னு தானே கேக்குறீங்க?

எனக்கு பிடிச்சதெல்லாம் “ரஜினி ரஜினி ரஜினி”. அதனால அவர் போட்டோவ கூகிள்ல இருந்து சுட்டு இங்க வைக்கறதுல பெருமைப்படுறேன். அட, அட, அட, என்னா தோரணை, என்னா கம்பீரம், என்னா சிரிப்பு.....

மத்தப்படி,

“நான் ஓடிட்டேன்னு சொல்லு, திரும்பி வர மாட்டேன்னு சொல்லு. எந்த நேரம் வீரத் துறந்தரா கேட்டாளோ காயு அப்டியே திரும்பி ஓடிட்டான்னு சொல்லு....காஆஆஆயூடா”


.

Monday 6 June 2016

ஜெயமோகனின் காடு நாவலும் கோதையாறு பயணமும்




“காடு”. காடும் காடு சார்ந்த இடமும், அதில் வாழ்ந்த மனிதர்களயும் பற்றிய நாவல். எழுதினது ஜெயமோகன். எழுத்தாளர் பற்றிய எந்த பரிட்சயமும் இதுக்கு முன்ன இல்ல. காரணம் நான் புத்தகங்கள் வாசிக்குற பழக்கமே இல்லாதவ. எதேச்சையா தான் எழுத்தாளர் ஊர் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. அட, நம்ம ஊரு. நாகர்கோவில்.

இந்த நாவல் ரொம்ப தாமதமா தான் என் கைல கிடச்சுது. அதாவது மே பதிமூணு, 2016- க்கு அப்புறம். அதனால என்ன, படிக்க வேண்டியது தானேன்னு கேக்குறீங்க. படிச்சேன். படிச்சு முடிக்க ரெண்டு நாள் ஆச்சு. ஆனா அதுக்கப்புறம் அதுல இருந்து வெளில வர பல நாள் ஆச்சு. இந்த நாவல பத்தி இன்னொரு நாள் விலாவரியா எழுதணும். அதுக்கு முன்னால இந்த நாவல் மே பதிமூணு, 2016- க்கு முன்னால கிடச்சிருக்க கூடாதான்னு ஒரு ஏக்கம்.

அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு இப்படியான ஒரு காட்டை பாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடச்சுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பதிமூணாம் தேதி எங்கயாவது ஒரு நாள் போயிட்டு வரலாம்னு யோசிச்சப்ப காட்டுக்கு போகலாம்னு முடிவாகிச்சு. காடுனா நம்மூரு பக்கத்துல என்ன இருக்குன்னு அலசி ஆராய்ஞ்சப்ப கோதையாறு போகலாம், அங்க தான் ஈசியா பெர்மிசன் வாங்க முடியும்னு ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்ல, சரின்னு மளமளன்னு ஏற்பாடு நடக்க ஆரம்பிச்சது.

அப்படிதான் எங்க பயணம் ஆரம்பிச்சுச்சு. பேச்சிப்பாறை போய், அங்க இருந்து உள் காட்டுக்குள்ள கோதையாறு லோயர் பவர் ஹௌஸ் போய், மறுபடியும் பேச்சிப்பாறை வந்து அங்க போட்டிங் போயிட்டு, திற்பரப்பு, தொட்டிப்பாலம்ன்னு சுத்திட்டு வந்தப்பவே கொஞ்சம் மனசு குளிர்ந்து தான் இருந்துச்சு.

ஆனா அதெல்லாம் விஷயம் இல்ல. பேச்சிப்பாறைல போட்டிங் போயிட்டு செம பசியோட சாப்பிட உக்காந்தப்ப, சுத்தமான தேன், பரோட்டாவுக்கு வச்சு சாப்பிடுங்கன்னு எங்கள கூட்டிட்டு ஊர் சுத்தி காட்டின இஞ்சினியர் கனி சொன்னப்ப, ஞே, பரோட்டாவுக்கு தேனா, வேணாம் வேணாம்னு மறுத்துட்டேன். அப்புறம் பரோட்டாவுக்கு சாம்பார் தான் இருக்குன்னு கேள்விப்பட்டு, தலைல அடிச்சுட்டே, கொஞ்சமா தேன் தொட்டு சாப்ட்டு பாக்கலாமோன்னு ஒரு நப்பாசை வந்து, “சரி, கொஞ்சம் விடுங்க”ன்னு தட்டை நீட்டினதும் தான் தாமதம், அப்படியே பரோட்டா முழுக்க தேனை ஊத்தி விட்டுட்டார். “அய்யய்யோ இத எப்படி சாப்டுறது”ன்னு பதறின நொடி, ஒரு டம்ளர்ல முக்கால் பகுதி ஊத்தி, “அது பத்தலனா இத விட்டுக்கோங்க”ன்னு பக்கத்துல வச்சுட்டு போய்ட்டார்.

நானெல்லாம் சமீப காலமா தேனை நக்கிப் பாத்து தான் பழக்கம். இல்லனா ப்ரெட் சாப்பிடுறப்ப பிச்சு பிச்சு தேன்ல தொட்டுக்கிட்டு சாப்பிடுறது உண்டு. அதையும் தாண்டி சின்ன வயசுல தேனடை சாப்ட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் கடந்து போன காலமாவே மாறி மறந்தே போயிருந்தது. கடைசியா கார்த்திக் எழுதின “ஆரஞ்சு முட்டாய்” கதை தொகுப்புல வர்ற “தேனடை” கதை படிச்சப்ப பழைய நியாபகங்கள் மீண்டு வந்துச்சு. அதுக்கப்புறம் இப்ப தான் அதோட நியாபகங்கள் வர ஆரம்பிக்குது.

தோப்புக்குள்ள எங்கயாவது தேனடை இருந்துச்சுனா கைல ஒரு தீபந்தத்தோட கும்பலா கிளம்பிடுவோம். தேன்னா, சாதாரண தேனீ உருவாக்குற தேன், அப்புறம் கடந்தை தேன், இன்னொரு வகை கொசு மாதிரி இருக்கும். பேர் தெரியல, அதோட தேன்னு எனக்கு தெரிஞ்சு மூணு வகைல கிடைக்கும். தேன் எடுக்குறப்ப நானெல்லாம் எப்பவும் பாதுகாப்பு வளையத்துக்குள்ள தான். அதனால தேனீகிட்ட கொட்டு வாங்கின அனுபவங்கள் குறைவு தான். அப்படியே கொட்டு வாங்கினாலும் பாட்டி சுண்ணாம்பு எடுத்து கொட்டுப்பட்ட இடத்துல தடவி விடுவாங்க. அவ்வளவு தான். கடந்தை தேன் எல்லாம் நாங்க எடுக்க முடியாது. அது பெரியவங்க தொகுதி. காரணம், கடந்தை விஷம் ரொம்ப கடுமையானதாம். கொட்டினா ஆளே மேலே போக வாய்ப்பு அதிகமாம். ஆனா மருத்துவ குணம் நிறைஞ்சதுன்னு சொல்லுவாங்க. அந்த கொசு (மாதிரி) தேனை எல்லாம் சுலபமா எடுத்துடலாம். பெரும்பாலும் கிணற்று கல் இடுக்குகள்ல தான் கூடு கட்டியிருக்கும்.

இப்படியா கஷ்டப்பட்டு எடுத்துட்டு வர்ற தேனை அப்படியே அந்த மெழுகு கூட்டோட ஒரு பாத்துரத்துல போட்டு கொண்டு வருவோம். வீட்டுக்கு வந்ததும் அந்த மெழுகு கூட்டோட பக்குவமா அரிஞ்சி அப்படியே வாய்ல போட்டுட வேண்டியது தான். இப்ப நினச்சாலும் நாக்குல சப்பு கொட்டுது. சில நேரம் பருவம் தவறி எடுக்குற தேன் கூட்டுக்குள்ள தேனீ குஞ்சுகள் பொரிச்சு வெள்ளை புழுவா உள்ள இருக்கும். அதையும் அப்படியே அரிஞ்சு நல்லா சவைச்சு சாப்பிடுன்னு தின்னத் தருவாங்க. வாய் எல்லாம் வெள்ளையா ஒழுக, தேனையும், அதோட கூட்டு புழுக்களையும் மெழுகோட சேர்த்து சாப்ட்டு முடிச்சா முகத்துல அப்படியே ஒரு மந்தகாசமான புன்னகை வரும். அந்த தேன் மெழுகு, சப்புன்னு இருந்தாலும் அதுக்கும் ஒரு சுவை உண்டு.

அப்படியே ஒவ்வொரு பாளம் பாளமா அள்ளி தேனை குடிச்சு முடிச்சா, அம்மாவும் பாட்டியும் மீதி இருக்குற தேனை அடுப்புல விட்டு காய்ச்சு இறக்குவாங்க. அப்புறம் அந்த தேனுக்கு அதிகமா ருசி இருக்காது. நாங்க தொடக் கூட மாட்டோம். அப்பப்ப புட்டுக்கு விட்டு சாப்ட்டா தான் உண்டு. இதெல்லாம் தான் சின்ன வயசு நியாபகங்கள்ன்னு சொல்லிட்டேனே. இப்பலாம் இப்படி சுத்தமான தேன் எங்க கிடைக்குது. ரொம்ப கட்டியா, கொஞ்சம் வாய்ல விட்ட உடனே திகட்டிப் போய்டுது.

அடடா, பரோட்டாவுல தேனை விட்டுட்டு அப்படியே கதை விட வந்துட்டேன் பாருங்க. கனி சார் பரோட்டா முழுக்க தேனை விட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரா, என்னடா இது, இத எப்படி திங்குறதுன்னு கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, வேண்டா வெறுப்பா ஒரு துண்டு பரோட்டாவ பிச்சு வாய்ல வச்சேன். கொஞ்ச நொடி ஒண்ணுமே தோணல. அப்புறமா அந்த ருசி நாக்குல ஒட்டிக்கிட்டு என்னை விடவே இல்ல. குழைய குழைய பரோட்டாவ தேன்ல முக்கி முக்கி சாப்ட்டுட்டே இருந்தேன். டம்பளர்ல இருந்த தேன் காலி ஆனதுக்கு அப்புறம் தான் நிமிர்ந்தே பாத்தேன்னா பாத்துக்கோங்களேன். ஆனா நீங்க இப்படி ஒரு விபரீத பரிச்சைல இறங்கிடாதீங்க, காரணம், இப்ப கடைல கிடைக்குறது எல்லாம் சீனி பாகு தான். அத தான் தேன்னு சொல்லி நம்மள ஏமாத்திடுறாங்க. கொஞ்சம் குடிச்சாலும் திகட்டிடும்.

கோதையாறு போயிட்டு வந்ததுல நான் பண்ணின ஒரு நல்ல காரியம், நூத்தி அறுபது ரூபா குடுத்து கிட்டத்தட்ட அரை லிட்டர் காட்டுத் தேன் வாங்கிட்டு வந்தது தான். ஆனா வாங்கிட்டு வந்த நாள் அத கொண்டு போய் பத்திரமா செல்ப்ல வச்சதுல அதப் பத்தி மறந்தே போனேன்.

கிட்டத்தட்ட இருபத்தி ரெண்டாம் தேதி நான் காடு நாவலை படிக்க ஆரம்பிக்குறேன். நாவல் அதோட முதலாம் அத்தியாயத்திலேயே ஒரு மிளாவை அறிமுகப்படுத்துது. ஒரு கல்வெர்ட் மேல கம்பீரமா நின்னு தன்னோட கால் தடத்தை பதிச்ச மிளா எனக்கு காஸ்மீராவ நியாபகத்துக்கு கொண்டு வந்துச்சு. காஸ்மீரா எங்க வீட்டு ஆட்டுக்குட்டி.

வளர்ப்பு பிராணிகள் வச்சுட்டு இருந்த வீடுகள்ல நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் படுக்கை அறைக்குள்ள தூங்கிட்டு இருந்த காலத்துல என் வீட்டு படுக்கை அறைக்குள்ள என் கூட தூங்கிட்டு இருந்தவ தான் காஸ்மீரா. அவள பத்தி சொல்ல நிறைய இருக்குறதால அத தனிப் பதிவா பகிரலாம். இப்போதைக்கு, அப்பாவோட ஹீரோ ஹோண்டா மேல கம்பீரமா ஏறி நின்னு ரெண்டு ஹேண்டில் பார் மேலயும் கால்கள அழுத்தமா ஊனி, கண்ணாடியில தன்னோட பிம்பத்த பாக்குற காஸ்மீராவ எனக்கு அந்த மிளா நியாபகப்படுத்திச்சு. அத்யாயத்தோட ஏதோ ஒரு பகுதியில அந்த மிளா காணாம போனப்ப, அதுக்கு எதுவும் ஆகி இருக்காது, சும்மா காணாம போயிருக்கும்னு மனசு சமாதானம் பண்ணிக்க தவறல. அந்த மிளா இன்னும் எங்கயாவது அந்த காட்டுக்குள்ள தான் சுத்திட்டு இருக்கணும்.

நாவலுக்குள்ள போறப்பவே கொஞ்சம் கொஞ்சமா குட்டப்பன், ரெசாலம், சினேகம்மை, ரெஜினாள் மேரி, குருசு இவங்க எல்லாம் நம்ம கூடவே வந்து ஒட்டிக்குறாங்க. அப்படியே சடசடன்னு நம்மள கதைக்குள்ள இல்லல, காட்டுக்குள்ள இழுத்துட்டு போய்டுறாங்க. ஒண்ணே ஒண்ணு மட்டும் நிச்சயம். இந்த ஒரே ஒரு போஸ்ட் எழுதி என்னால காடு நாவல முழுசா சிலாகிக்கவே முடியாது. அதனால இங்க நான் ரசிச்ச மேம்போக்கான விசயங்கள என்னோட வாழ்க்கையோட கொஞ்சம் பேராசையோட பொருத்திப் பாத்துக்குறேன் அவ்வளவு தான். மத்தப்படி காட்டை பத்தி சொல்ற தகுதி எனக்கெல்லாம் நிச்சயமா கிடையாது.

இந்த நாவல்ல குட்டி குட்டியா நான் ரசிக்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. குறிப்பா அந்த தேவாங்கு. தேவாங்குக்கும் ரெசாலத்துக்கும் இருக்குற உறவு முறைய என்னால காயுவும் சக்தியுமா உணர முடிஞ்சுது. சக்தி என்னோட அணில் குட்டி. பிறந்த கொஞ்ச நாள்ல அதோட அம்மா செத்துப் போக, என்கிட்ட அடைக்கலமா வந்தவன். ரெசாலத்துக்கு எப்படி அந்த தேவாங்கு தான் உலகமோ அப்படி தான் இந்த காயுவுக்கு சக்தி தான் உலகு. எப்படி தேவாங்குக்கு ரெசாலம் தாண்டி யாரையும் தெரியாதோ அப்படியே சக்திக்கு காயுவை தாண்டி யாரையும் தெரியாது.

இந்த காட்டுக்குள்ள முன்னேறி போக போக காட்டோட வாசமும், அதோட ஈர சொதசொதப்பும், சலசலக்குற தண்ணியும் நம்மள சூழ்ந்துக்குது. நீலி கிரிதரனுக்கு சந்தன மரக்காட்டுக்குள்ள இருந்து எடுத்துட்டு வந்த தேனடைய வாகா அரிஞ்சி குடுத்து குடிக்க சொன்ன நேரம் எனக்கு நான் வாங்கி மறந்து போயிருந்த தேன் நியாபகம் வந்துச்சு. கிரிதரன் அந்த தேனை குடிச்சுட்டு போதைல கிறங்கிக் கிடந்த நேரம் நானும் அரைலிட்டர் தேனையும் குடுச்சு முடிச்சு ஒரு மிதப்புல இருந்தேன். அந்த தருணத்த எப்படி விவரிக்கனு எனக்கு புரியவே இல்ல. முழு போதை. ஒரு தேன் இத்தன போதைய தரும்னு அதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. ரெண்டாயிரத்து பதினாறாம் வருஷம் கிடச்ச தேனே இத்தன போதைனா, கிட்டத்தட்ட நூற்றாண்டு பிந்திய காலத்துல கிடச்ச சுத்தமான சந்தனத் தேன் எத்தனை போதைய குடுத்துருக்கும். நமக்கு கண்டிப்பா தெரியாது, ஆனா கிரிதரன அவனோட இருப்பிடத்துக்கு கொண்டு வந்த மலையத்தி நீலிக்கு தெரிஞ்சிருக்கும்.

எப்படி காட்டுக்கு ஒரு வாசம் இருக்குதோ, அப்படி தான் இந்த நாவலுக்கும் ஒரு வாசம் இருக்கு. அது மலையாளமும் தமிழும் கலந்து ஒரு மாதிரியான புதுவிதமான கலவைய குடுக்குது. ஒவ்வொரு வசனமும் புரிய ஆரம்பிச்சுட்டா அப்புறம் நாமளும் கூட அந்த பாஷை பேசிடலாம். வாசிக்க வாசிக்க அந்த சொற்கள் மனசுக்குள்ள கர்வெட்டா நிலைக்க ஆரம்பிச்சிடுது.

எனக்கு கீரக்காதனை (யானை) பாத்ததும் என்னையே பாத்த நினைப்பு தான். கிட்டத்தட்ட அது காட்டுக்குள்ள வாழ்ந்த கம்பீர வாழ்க்கை, பிடித்த மதம், வழி தப்பி போய் யாராவது காப்பாத்த வந்துட மாட்டாங்களாங்குற ஏக்கம்... கடைசில கீரக்காதனோட அந்த “பாங்” சத்தம் இன்னும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு. அனாதையா விடப்பட்டவங்கள வேடிக்கை மட்டுமே பாக்க முடியும். மிஞ்சி மிஞ்சிப் போனா தலைய வெட்டிப் போட்டு உலக விடுதலை குடுக்கலாம். ஒரே ஒரு காட்சியில வந்தாலும் அந்த புலி மேல ஒரு வெறுப்பு பட்டுன்னு வராம இல்ல.

எப்படி பனிரெண்டு வருசத்துக்கு ஒரு தடவ பூக்குற குறிஞ்சிய பாத்து கிரிதரனுக்கு நீலி மேலயும் குறிஞ்சி மேலயும் இருந்த பிரமிப்பு அகல ஆரம்பிக்குதோ, அப்படி தான் இந்த “காட்டை” படிச்சு முடிச்ச நேரம் எனக்கு நிறைய விஷயங்கள் மேல இருந்த அசூயை, வெறுப்பு, மலைப்பு எல்லாமே தரைமட்டத்துக்கு வந்துருந்துச்சு.

ஜாதிகளும் இனங்களும் நமக்கு அவசியமானவை தான். ஆனா நாம இப்ப ஜாதிகள தூக்கி கொண்டாடிட்டு இனங்கள அழிச்சுட்டோம். அத பத்தின வருத்தம் கொஞ்சம் கூட பெரும்பாலான நம்மகிட்ட இல்ல. அவன் இவனை வச்சிருந்தான், அவள் அவனை வச்சிருந்தாள்ன்னு எல்லாம் கொஞ்சமும் பதறாம இந்த நாவல் சொல்லிகிட்டே போகுது. இந்த உறவுமுறைகள எல்லாம் மனசுக்குள்ள வஞ்சமா வச்சுக்காம “இவன் பிள்ள அவனுக்கு பிறந்ததாக்கும்”ன்னு கூடி கிசுகிசுத்து கொஞ்ச நேரம் மனக்களி அடஞ்சுட்டு அது பாட்டுக்கு நடக்கட்டும்னு அவங்கவங்க வேலைய பாத்துட்டு போற மக்கள்; வயித்துப்பாட்டுக்கு பணம் இல்லனா வர்ற லாரிக்காரங்ககிட்ட ஒதுங்கலாம்னு நினைக்குற பெண்கள், அவங்கள தப்பா பேசாத ஊரும் அதோட நடத்தையும், இயல்பும்; காமம் வந்தா அத தீத்துக்க சொல்லி இருக்குற விதம்னு இந்த நாவல் யதார்த்த மனுசங்கள அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கு.

கற்பும், காமமும்னு பேசி பேசி நாம என்னத்த சாதிச்சுட்டோம்னு தெரியல. காரணம், ஒரு நடுத்தரவர்க்கத்துக்கும் கொஞ்சம் மேலே ஒரு சமூகத்துல பிறந்து, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஒழுக்கங்கள் இது தான்னு மன கட்டுப்பாடுகளோட வளர்ந்த எனக்கு ஒரு கட்டத்துல கிட்டத்தட்ட சினேகம்மைக்களும், ரெஜினாள் மேரிக்களும் கிரிதரனோட மாமியும் அறிமுகம் ஆனப்ப ரொம்ப அதிர்ந்து போனேன். ஓட்டை பிரிச்சு இறங்குறதும் தென்னந்தோப்புக்குள்ள ஒதுங்குறதும் வெகு சஜமா கொண்டாடின அந்த ஜனங்க என் கண்ணு முன்னால வந்துட்டு போனாங்க. எல்லாத்தையும் மீறி அந்த ஊர் மக்களோட அன்னியோன்யம் எனக்கு ஏனோ இப்ப அருவெறுப்ப தரவே இல்ல.

இந்த நாவல்ல வர்ற பலபேரு முறைத்தவறிய காமத்துள் தெரிஞ்சோ தெரியாமலோ மூழ்கிப் போறாங்க. ஆனா அதப் பத்தின குற்ற உணர்ச்சி யாருக்காவது இருக்கான்னு திரும்ப திரும்ப யோசிச்சுப் பாத்தேன். கதை நாயகன் கிரிதரனாகட்டும், சதாசிவம் மாமாவாகட்டும், மாமியாகட்டும், ரெஜினாளாகட்டும், மேரியாகட்டும் எல்லாரும் அத ஒரு சம்பவமாகவோ இல்ல அனுபவமாகவோ எடுத்துட்டு கடந்து போயிட்டே இருக்காங்க. தன் சகமனுசியோட கணவன் இறந்ததும், அவளையும் அவளோட குழந்தைகளையும் ஏத்துக்குற குருசுவாகட்டும், சதாசிவத்துக்கும் தன்னோட மனைவிக்கும் பிறந்த சவலை குழந்தை நியாபகமா தேவாங்கை பிள்ளையா தத்தெடுத்துக்குற ரெசாலமாகட்டும் எல்லோருமே ஒரு வகைல கதை நாயகர்கள் தான்.

நாகரீகம் மக்கள ரொம்ப கெடுத்துடுச்சுன்னு மட்டும் தான் எனக்கு சொல்லத் தோணுது. இயல்பு மனிதர்கள் காட்டைப் போலவே தொலஞ்சுட்டு இருக்காங்க. இல்லனா இப்படியும் சொல்லலாம், ஜெயமோகன் மூலமா, அவரோட காட்டுல மட்டும் இயல்பு மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க...




இன்னும் பேசுவோம்......