Wednesday, 15 June 2016

எழுத்தாளர் பொன்னீலன் - சந்திச்ச கதைகொஞ்ச நாளாவே மனசுக்குள்ள நடந்துட்டு இருக்குற போராட்டம் தான். “நாம ஏன் இப்படி இருக்கோம், இந்த சமூகத்துல நமக்குன்னு ஒரு அங்கீகாரம் வேணாமா? நமக்கு என்ன தேவைங்குரத நாம தான பாத்துக்கணும், ஏன் மத்தவங்கள எல்லாம் சார்ந்து வாழணும்”னு என்னை நானே நிறைய கேள்விகள் கேக்க ஆரம்பிச்சுட்டேன்.

நிறைய பேர் என்கிட்ட சொல்லுவாங்க, “நீ ஏன் புக் போடக் கூடாது”ன்னு. புக் போடுறது பெருசு இல்ல, ஆனா அது தகுந்த இடத்துல தகுந்த நேரத்துல போய் சேரணும். நமக்கான அங்கீகாரம் எதுவுமே கிடைக்காம புக் போட்டு வேஸ்ட்.

அட, அத கூட விட்டுடலாம். “அப்படி என்ன எழுதி தள்ளிட்டன்னு உனக்கு இப்படி ஒரு ஆசை”ன்னு என் மனசாட்சி கேட்ட கேள்விக்கு தான் என்னால பதிலே சொல்ல முடியல.

இப்படியே சில பல மாசங்களா குழம்பி, “இப்படியே யோசிச்சுட்டு இருந்தா ஒண்ணும் வேலைக்கு ஆகாது, முதல்ல நீ எழுதி வச்சிருக்குறத எல்லாம் தொகுக்க ஆரம்பி. அப்புறம் அடுத்து என்னப் பண்ணலாம்னு யோசிக்கலாம்”ன்னு மனசுக்குள்ள ஒரு கட்டளை குரல். அதனால ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்தே ப்ளாக்ல நான் எழுதி இருந்தத எல்லாம் தூசி தட்டி, ஒரு முப்பத்தியிரண்டு போஸ்ட்ட தேத்தி, அதுல இருந்து இருபத இறுதி பண்ணினேன்.

அப்புறமும் மனசுக்குள்ள சின்னத் தயக்கம் இருந்துகிட்டே தான் இருந்துச்சு. எப்படியோ ஒரு வழியா எம்பது பக்கத்து தொகுப்ப ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வாசிச்சு பாத்தப்ப, “பரவால, நீ கூட நல்லாத்தான் எழுதுற போல”ன்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன். இந்த புத்தகத்துக்கு ‘சிறகடிக்கும் காலம்”ன்னு பெயர் வச்சா என்னன்னு ஒரு யோசனை. இருந்தும் புத்தகத் தலைப்பு இன்னும் முடிவாகல.

சரி, பிரிண்ட் அவுட் எடுத்தாச்சு, அடுத்து அத வச்சு என்னப் பண்றது?

புக் எப்படி போடணும்னு தெரியாது

அத எங்க பிரிண்ட் பண்ணனும்னு தெரியாது

புத்தகத்த வீட்டுக்கு எடுத்துட்டு போனா அடி விழும்

அதுக்கு ஏதாவது காசு செலவாகுமா? அதுவும் தெரியாது. அப்படி காசு செலவானா யார் கிட்ட போய் காசு கேக்கன்னும் தெரியாது.

இப்படி ஏகப்பட்ட தெரியாதுகள்.

அதுமட்டுமில்லாம ஏற்கனவே ஆரம்பிச்ச கவிதை தொகுப்பு “தென்னங்கீற்றுகளின் சாட்சியாக” அப்படியே கிடப்புல இருக்குற வருத்தம்.

இத எல்லாம் மீறி, “ஏதாவது வழி காட்டுமா”ன்னு எங்க குல தெய்வத்துகிட்ட வேண்டிக்கதான் முடிஞ்சுது. அப்பவே எழுத்தாளர் பொன்னீலன் நமக்கு சொந்தம் தானே, அவர போய் பாத்தா என்னன்னு தோணிகிட்டே இருந்துச்சு.

இன்னிக்கி காலைல திடீர்னு ஒரு வேகம். ஏதாவது பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ணி, முதல்ல யூனிவர்சிட்டி டிபார்ட்மென்ட் போய் அங்க ஒரு ஸ்டாப் பாத்துட்டு காரை நேரா எங்க குலதெய்வம் இருக்குற வீட்டுக்கு விட்டேன்.

அது எங்க குடும்ப கோவில். கோவில்ன்னு சொல்றத விட சாமி குடியிருக்குற வீடுன்னு சொல்லலாம். அதாவது “சாமி வீடு”ன்னு தான் சொல்லுவோம். அத நிர்வகிக்குறவங்க எனக்கு மாமா, மாமி முறை வேணும். வெள்ளிக் கிழமை வெள்ளிக் கிழமை விசேச பூஜை வச்சு எல்லாருக்கும் சாப்பாடுப் போடுவாங்க. இருந்தாலும் நான் போக மாட்டேன். காரணம் கால்ல செருப்ப கழட்டிட்டு என்னால எந்த கோவிலுக்குள்ளயும் போக முடியாது. பெரிய பெரிய கோவில்கள்ல செருப்போட உள்ள விடவும் மாட்டாங்க. அதனாலயே என்னை ஒதுக்கி வைக்குற கோவிலை நான் ஒதுக்கி வைக்குறேன்னு வீராப்பா பேசிட்டு போகாமலே இருந்துடுவேன். அப்படி தான் இங்கயும் நான் போறது இல்ல. ஆனா இங்க யாரும் என்னை வரக் கூடாதுன்னு சொன்னதும் இல்ல.

திடீர்னு போயிட்டேனா, மாமி “வாமா, உக்காரு”ன்னு சொன்னாங்க. “நாளைக்கு பையனுக்கு நிச்சயதார்த்தம். நான் அப்பா கிட்ட சொல்லி இருந்தேனே”ன்னு சொல்லிட்டே மாமா வந்தார். “அட, அப்படியா, சந்தோசம்”ன்னு சொல்லிகிட்டேன்.

மாமி, “செருப்ப கழட்டிட்டு போய் சாமி கும்பிடு”ன்னு சொன்னாங்க. “இல்ல மாமி, நான் இங்க இருந்தே கும்பிட்டுக்குறேன், நம்ம அம்மா தானே”ன்னு நான் மறுக்க, மாமா, “நீ வேணும்னு செருப்போட தான் வருவேன்னு அடம் பிடிக்கலையே, உன்னால செருப்பு இல்லாம நடக்க முடியாது, அதனால நீ செருப்பு போட்டுட்டு வந்தா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா, நீ அப்படியே வா”ன்னு உள்ள கூட்டிட்டு போய்ட்டார்.

உள்ள போய் பொட்டல் அம்மாவ பாத்ததும் மனசு நிறைய சந்தோசம். அவ கிட்ட நிறைய பேசணும், நிறைய கேக்கனும்னு நினச்சுட்டு இருந்தேன். ஆனாலும் அங்கயே இருந்து என்னால சரியா “ப்ரே’ பண்ண முடியல. அமைதியா அசையாம உக்காந்து தியானம் பண்ணி தான் பழக்கம், அதனால “வீட்டுல போய் எனக்கு தேவையானத வேண்டிக்குறேன்மா”ன்னு சொல்லிட்டு, மாமா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்.

அப்போ தான் எழுத்தாளர் பொன்னீலன் பத்தி கேட்டேன். அவர் இந்த ஏரியா தானே, அவர பாக்க முடியுமா, அவர் எனக்கு என்ன முறை வேணும்னு கேக்க ஆரம்பிச்சேன். ஒருதடவ அப்பா கிட்ட பேசுறப்ப அவர் எனக்கு சித்தப்பான்னு சொன்னதா ஒரு நியாபகம்.

“இதோ பக்கத்துல தான் வீடு, ஆனா காலைல பதினோரு மணிக்கு முன்னாடி அவர யாரும் பாக்க போக கூடாது, போன் பண்ணக் கூடாதுன்னு எழுதி வச்சிருக்குறாராம்”ன்னு மாமி சொன்னாங்க. அப்புறம் அவங்களே “ராத்திரி முழுக்க கண்முழிச்சு எழுதுவாராம், அதனால காலைல தூங்கனும்னு அப்படி சொல்லி இருக்கார்”ன்னு சொன்னாங்க.

“இப்ப தான் மணி மதியம் ஒண்ணாகிடுச்சே, அப்படியே நீ திரும்பி போறப்ப வலது பக்கம் நீல கேட் போட்ட வீடு, நீ பாத்துட்டு போய்டு”ன்னு மாமா சொன்னாங்க.

எனக்கா ஒரே தயக்கம். இதுவரைக்கும் அவர நான் பாத்ததே இல்ல. சின்ன வயசுல சாமி வீட்டுக்கு வந்தப்ப கூட நான் அவர பாத்தது இல்ல. அவர்கிட்ட போய் என்னனு நான் என்னை அறிமுகப்படுத்த?

‘நீ உன் அப்பா பெயர சொல்லு, அவருக்கு கண்டிப்பா தெரியும்”ன்னு மாமா சொன்னாங்க. அப்புறம் என்ன நினச்சாங்களோ, “சரி, வா, நான் வெளில கிளம்புறேன், அப்படியே உன்னை அவர் வீட்ல விட்டுட்டு போறேன்’ன்னு சொல்லி அவரும் அவர் பைக் எடுத்துட்டு கிளம்பிட்டார். நான் அவர கார்ல பின்தொடர்ந்து போக, ரொம்ப பக்கத்துலயே அவர் வீடு.

காரை ஒதுக்கி ஓரமா விட்டுட்டு இறங்கலாம்னு நினச்சேன். அதுக்குள்ள மாமா ஓடி வந்து, “நீ இங்கயே இரு, நான் முதல்ல போய் அவர் இருக்காரான்னு பாத்துட்டு வரேன்”னு சொல்லிட்டு கேட்டை திறந்து உள்ள போனார்.

கொஞ்ச நேரம் ஆகல, மாமா திரும்ப வந்தார். கூடவே எழுத்தாளர் பொன்னீலன். “அய்யய்யோ என்னது இது, நான் வேணா உள்ள வரேன்”னு நான் பதறிட்டேன்.

“அட, நீ அப்படியே உக்காரு, இதுல எல்லாம் என்ன பார்மாலிட்டி இருக்குன்னு சொல்லிட்டே, “உன்னை பத்தி நான் நிறைய கேள்விப்பட்ருக்கேன்”ன்னு சொன்னார். எனக்கு ஒரே ஆச்சர்யம். மனசுக்குள்ள “நமக்கு தான் யாரையும் தெரிய மாட்டேங்குது, ஆனா எல்லாரும் நம்மள தெரிஞ்சி வச்சிருக்காங்களே’ன்னு ஆச்சர்யம்.

அப்புறம் அவர என்னன்னு சொல்லி கூப்டுறதுன்னு ஒரே குழப்பம். திடீர்னு சித்தப்பான்னே சொல்லிட்டேன். “உங்கள பாக்கணும்ன்னு தோணிச்சு அதான் வந்தேன்”ன்னு சொன்னேன்.

“ரொம்ப வெயிலா இருக்கே, நீங்க வேற வெயில்ல நின்னுட்டே பேசுறீங்க, நாம வேணா வேற எங்கயாவது உக்காந்து பேசலாம்”ன்னு சொல்லியும், “இல்லல, உனக்காக தானே, நான் நின்னுகிட்டே பேசுறேன், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல”ன்னு சொல்லிட்டார்.

அப்புறம், நாம எல்லாம் ஒரே குடும்பம்மா, நாப்பது வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் உங்க குடும்பத்தோட தான் வளந்தேன், உங்க அப்பா, மூத்தப்பா கூட தான் சுத்துவேன். அப்புறம் தான் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கி போக ஆரம்பிச்சேன்”ன்னு சொன்னார்.

“ஒண்ணுமில்ல சித்தப்பா, திடீர்னு ஒரு ஆசை, ஒரு புக் போடலாம்னு. அதான் உங்க கிட்ட காட்டி உங்க கருத்த கேக்கலாம்ன்னு வந்தேன்”ன்னு மெல்ல ஆரம்பிச்சேன்.

“புத்தகம் தானே, தாராளம் போடலாம். எத பத்தி எழுதி இருக்க”ன்னு திடீர்னு கேட்டுட்டார்.

அவ்வ்வ்வ்.... இப்படி கேட்டா என்ன பதில் சொல்றது? என்ன எழுதி இருக்கேன்னு தெரியாம தானே நானே குழம்பிகிட்டு இருக்கேன்.

திக்கித் திணறி “குடும்ப கதைகள் தான்”ன்னு உளறினேன். அப்புறம் நானே “அப்படி இல்ல, சும்மா சின்ன வயசு நியாபகங்கள் மாதிரி”ன்னு மறுபடியும் உளறினேன். அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாம “எனக்கு தமிழ் எல்லாம் சரியா தெரியாது”ன்னு மறுபடியும் உளறினேன்.

என்னோட முகத்த பாக்க அவருக்கே பாவமா இருந்துருக்கும் போல. “எதுவா இருந்தா என்ன, நாம எழுதுறது தான் எழுத்து. அது மத்தவங்க ரசிக்குற மாதிரி இருந்தா போதும்”ன்னு சொன்னார்.

ஹப்பாடான்னு கொஞ்சம் பெருமூச்சு விட்டுகிட்டேன்.

“முதல்ல புக் போடணும்னா கைகாசு கொஞ்சம் செலவு பண்ணனும். நீ புதுசு இல்லையா, அதனால எந்த பதிப்பகத்தாரும் அவ்வளவு சீக்கிரம் நம்பி போட மாட்டாங்க. அப்புறம் கொஞ்சம் பிரபலம் ஆகிட்டா அவங்களே போட்டுக்குவாங்க”ன்னு சொன்னார். முதல்ல இத எல்லாம் புக்கா போட தகுதி ஆனது தானான்னு பாத்து சொல்லுங்க, அப்புறம் மத்தத பத்தி யோசிக்கலாம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.

அப்புறம் எனக்கு ஒரே ஆவல். “என்னை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும், யார் உங்ககிட்ட சொன்னது”ன்னு கேட்டேன்.

“கண்ணப்பன் உனக்கு அண்ணன் தான, அவன் தான் சொல்லுவான், என் தங்கச்சி ஒருத்தி இருக்கா, அவ அப்படி அவ இப்படின்னு சொல்லிட்டே இருப்பான்”ன்னு சொன்னதும், “பார்ரா, நம்ம புராணம் பாடுற அண்ணன் வேற இருக்கானாக்கும்”ன்னு மனசுக்குள்ளயே தான் நினைச்சுகிட்டேன். இத எல்லாம் வெளிலயா சொல்ல முடியும்.

“நீ ரொம்ப திறமைசாலி, நீ ரொம்ப கஷ்டப்பட்ட”ன்னு எல்லாம் சொல்லுவான்னு சொன்னார். நானே அந்த அண்ணன பாத்து வருஷ கணக்குல ஆகிடுச்சு. இருந்தாலும் அடுத்த தடவ அண்ணன பாத்தா கொஞ்சம் சிரிச்சா மாதிரி பேசிக்கணும்ன்னு தோணிச்சு.

அடுத்து பேச்சு பால்ய காலம், கிராமம்னு திரும்பிச்சு. “நான் என்னோட பால்ய காலங்கள பத்தி நிறைய எழுதி இருக்கேன். இப்படி கிராமங்கள பத்தி எழுதணும்னா இப்ப எல்லாம் கீ. ராஜநாராயணன், கழனியூரான் இருக்காங்க. அவங்க எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க”ன்னு சொன்னார்.

ஏற்கனவே அவங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு ரொம்ப ஆசை உண்டு. பாப்போம், காலம் வழி விடுதான்னு.

“எனக்கு ஒரு பத்து நாள் டைம் குடு. ஏற்கனவே நாலு புக் இந்த மாதிரி படிச்சு கருத்து சொல்ல வந்திருக்கு, நான் எப்படியும் படிச்சுட்டு உன்னை கூப்பிடுறேன். உன் அட்ரெஸ், போன் நம்பர் எழுதி குடுத்துட்டு போ”ன்னு சொன்னார்.

எழுதி குடுத்துட்டு வந்துருக்கேன். பாப்போம், படிச்சுட்டு இதெல்லாம் குப்பைன்னு சொல்லப் போறாரா, இல்ல சுமார்ன்னு சொல்லப் போறாரான்னு...

“பொட்டல் அம்மா, நீ தான் உம்புள்ளைய காப்பாத்தணும்”

..............................................


பின் குறிப்பு: இப்ப தான் யோசிச்சு பாக்குறேன். அவர் அப்பாவ விட எப்படியும் பத்து பதினஞ்சு வயசு பெரியவரா தான் இருக்க முடியும். அப்புறம் எப்படி அவர் எனக்கு சித்தப்பாவாக முடியும். பெரியப்பான்னு தான கூப்ட்ருக்கணும். ஆஹா.... நல்லா உளறி வச்சுட்டு வந்துருக்கேன்னு மட்டும் தெரியுது. ஆனாலும் அவர் போன் காலுக்காக வெயிட்டிங்....எழுத்தாளர் பொன்னீலன் பத்தி தெரிஞ்சிக்க விக்கிபீடியா பாருங்க.

6 comments:

 1. சிறகடிக்கும் காலம் பெயர் நல்லாதாண் இருக்கு.

  சீக்கிரம் போன் கால் வந்து விரைவில், புத்தகமாக தங்களது எழுத்து வர
  வாழ்த்துக்கள் அக்கா!

  ReplyDelete
 2. விரைவில் புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. payangal thodaratum. . serupoda ponathu thaan nerudala iruku thavirthu irukalam.

  ReplyDelete
 4. விரைவில் புத்தகம் வெளியிட வாழ்த்துகள்.....

  ReplyDelete
 5. va.iraianbu i.a.s avrgalin puthaga munuarai, karuthum, thagluku vendiya thagavali pera iniyairaiyanbu@gmail.com

  ReplyDelete
 6. அருமையான பதிவு

  இதோ மின்நூல் களஞ்சியம்
  http://ypvn.myartsonline.com/

  ReplyDelete