Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, 12 September 2015

யாதுமாகியவன்


அந்தப் பாடல்
என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...
பகலில் கூட வானத்தை
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

விம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை
அணையுடைத்து வெளிக்கொண்டு வந்தவன்
ஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்
என் கைப்பற்றிக் கிடந்தான்...

அது ஒரு மொட்டை மாடியென்று
உங்களுக்கு சொல்லத் தேவையில்லை...
நிலாவெளிச்சத்தில் எங்களை
ரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்
ஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...

யாரவன் உனக்கு?
இப்படி திடீரென ஒரு கேள்வியை
உங்களிடமிருந்து எதிர்க்கொண்டால்
நிச்சயம் திணறித் தான் போவேன் நான்...

யாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்
முடித்துக் கொண்டால்
புரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...

ஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்
உங்கள் கற்பனையில்
உருவகித்துவிடக் கூடாது பாருங்கள்...

இவன் என் சண்டைக்காரன்.
முணுக்கென்று கோபம் கொண்டு
நான் விட்டெரியும் தலையணைகளை
அலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...

எதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,
என்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.
காது பிடித்து திருகினாலோ
பவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.

காட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது
படக்கென்று ஒற்றை முத்தத்தால்
என்னை ஊமையாக்கிவிடும் பாதகன்...

என் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...
இன்னும் இன்னும் நிறைய...

மற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்
என் பிள்ளை என்பேன்.
அவனோ என்னை குழந்தையாக்கி
தாலாட்டு பாடிக் கொண்டிருப்பான்...

இதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...
"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...



.

Friday, 15 May 2015

காதல் பொழுது...




சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு கெத்து. என்னோட அம்மா அப்பா மாதிரி யாரும் லவ் பண்ண முடியாதுன்னு. அதுமட்டுமில்லாம சுத்துறது பூராவும் பசங்க கூட. இப்படி சுத்தி சுத்தியே பசங்கனா சைட் அடிக்கணும்ங்குற தியரியே மறந்து போச்சு.

என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஒரு குட்டிச் சுவர் மேல உக்காந்துட்டு வர்ற போற புள்ளைங்கள எல்லாம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க. நானும் அவங்க கூட உக்காந்துட்டு ஹே அந்தப் பொண்ண பாரு, இந்த பொண்ணப் பாருன்னு லீட் எடுத்து குடுத்துட்டு இருப்பேன். நாம பசங்க சைட் அடிக்குறத ரசிக்கலாம், ஆனா ஒரு பையன் கூட நம்மள திரும்பிப் பாத்துரக் கூடாதுன்னு நினைப்பேன்.

வாழ்க்கைல நிறைய மாற்றங்கள் எப்பவுமே வந்துகிட்டே தான் இருக்கும். ஒரு கட்டத்துல காதல்ங்குற வார்த்தையே தப்புன்னு வெறுத்து ஓடியிருக்கேன். நானும் காதலிக்குறேன்னு பின்னால சுத்தியிருக்கேன். ஆனா அதெல்லாம் காதலே இல்லன்னு உணர்ந்தப்ப காதல்ங்குற வார்த்தை மேலயே ஒரு வெறுப்பு வந்துருக்கு. காதலே தப்புங்குறப்ப கல்யாண வாழ்க்கை மட்டும் எப்படி நிலைக்கப் போகுது? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உடலும் மனமும் சோர்ந்த நேரத்துல கூட அவர் என்னோட நல்ல நண்பனா தொடர்ந்துருக்கார்.

அவர்னா அவர் தான்... யாருன்னு எல்லாம் கேக்கக் கூடாது.

பொதுவா நாங்க ரெண்டு பேரும் விடிய விடிய பேசிகிட்டே இருப்போம். ரெண்டு பேருக்கும் பல பல காயங்கள்னால தூக்கம் வர்றதில்ல. அப்படி தான் அன்னிக்கி நான் பத்து மணிக்கு கால் பண்ணினேன், எனக்கு உன்கிட்ட பேசணும் போல இருக்கு, ஆனா இப்ப பிரெண்ட்ஸ் பார்ட்டி வச்சிருக்காங்க, நான் அங்கப் போறேன், தூங்கிறாத, வந்து கூப்பிடுவேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.

சரி, என்னமோ சொல்ல வர்றார்ன்னு நானும் வெய்ட் பண்ணினேன். அஞ்சே நிமிசத்துல அவர் கிட்ட இருந்து கால். நீ வெய்ட் பண்ணுவன்னு கஷ்டமா இருந்துச்சு, அதான் நான் பார்ட்டிக்கு போகலன்னு சொன்னார்.

வழக்கமா என் கிட்ட பேசணும்னா மொட்டை மாடிக்கு வந்துருவார். இன்னிக்கி நிலா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னார். நிலா மறைக்கும் தென்னங்கீற்றுகள் அழகோ அழகுன்னு சொன்னார். கொஞ்ச நேரம் வழக்கமான மொக்கைகள், பாட்டு எல்லாம் பாடிட்டு இருந்தோம். அப்போ பேச்சு என்னோட பிரெண்ட்ஸ் பத்தி போச்சு.

எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க, ஆனா க்ளோஸ் பிரெண்ட்ன்னு யாரும் கிடையாது. எனக்கு அவங்க கஷ்டம் எல்லாம் தெரியும், அப்ப எல்லாம் அவங்க கூட இருந்துருக்கேன், ஆனா யார் கிட்டயும் என் கஷ்டத்த பகிர்ந்துக்குறது இல்லன்னு சொன்னேன். அப்ப நான் யாருன்னு கேட்டார். பிரெண்ட்ன்னு சொன்னேன். நான் உன் க்ளோஸ் பிரெண்ட் இல்லையா, நீ எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணுவன்னு எதிர்பார்த்தேன்னு சொன்னார். சொல்லிட்டு உடனே கட் பண்ணிட்டு போய்ட்டார்.

திருப்பி கூப்பிட்டா என்னை பிளாக் பண்ணி வச்சுட்டார். கால் போகவே இல்ல. சரி, நாம எதுவும் தப்பா சொல்லிட்டோமோன்னு ஒரே பதற்றம். அவர் மனச நாம காயப்படுத்திட்டோமோன்னு அழுகை வேற வந்துடுச்சு. கொஞ்ச நேரத்துல திருப்பி கூப்பிட்டார். இன்னியோட உன் கூட பேசுறத விட்டுடணும்னு தான் நினச்சேன், ஆனா முடியல, இனி இப்படி ஒரு வார்த்த பேசாதன்னு சொன்னார். யாருமே இல்லாம தனியா வீட்டை விட்டு வெளில வந்தப்ப உன் கிட்ட மட்டும் தான் என்னோட இருப்பிடத்த சொன்னேன், நீ மட்டும் தான் கூட இருந்தன்னு சொல்லிட்டே வந்தவர், உனக்கு இப்ப என்ன பிரச்சனை, செத்துப் போவ, அவ்வளவு தானேன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் தயங்கி, சரி, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நிறுத்தினார்.

எனக்கு கொஞ்சம் வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. என்னடா இது, ஒரு வேளை ஐ லவ் யூ சொல்லிடுவாரோன்னு. அவர் உடனே பக்கத்துல தண்ணி இருக்கானு கேட்டார். இருக்குன்னு சொன்னேன். எடுத்து குடின்னார். குடிச்சேன். இப்ப பதற்றம் போய்ட்டா, போய் தூங்கு, குட் நைட் ன்னு சொல்லிட்டார்.

நான் ஷாக்காகி, அப்புறம் நார்மலுக்கு வந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். உடனே, இப்ப ரிலாக்ஸ் ஆகிட்டியா, எல்லாத்தையும் விடு, எனக்கு இந்த லவ் மேல எல்லாம் சுத்த நம்பிக்கை இல்ல, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்குறியான்னு பட்டுன்னு கேட்டுட்டார். மறுபடியும், ஷாக், நடுக்கத்துல கண் எல்லாம் கலங்கி, அழ ஆரம்பிச்சுட்டேன். எனக்கு லவ் எல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேன். நானும் லவ் பண்றியான்னு கேக்கலையே, கல்யாணம் பண்ணிக்றியான்னு தானே கேட்டேன்னார். இதுக்கு ஓகேனா சொல்லு, நான் தொடர்ந்து பேசுறேன், இல்லனா என்னால நடிக்க முடியாது, இதோட நம்ம பழக்கத்த முடிச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்.

பத்து நிமிஷம் நான் எதுவுமே சொல்லல. அப்புறம் அவரே சாரி, உன்னை கட்டாயப் படுத்துறேன்ல, நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும், நீ என் பிரெண்டாவே இரு, போய் தூங்குன்னு சொல்லிட்டார். பேசவே மாட்டாரோன்னு நினச்சேன், ஆனா அடுத்த நாள்ல இருந்து சாப்ட்டியா, தூங்குனியான்னு ஒரே அக்கறை. என்ன இது? ஏன் இப்படி தொடர்ந்து கால் பண்றீங்கன்னு கேட்டா, உனக்கு தான் நான் பிரெண்ட், ஆனா எனக்கு நீ அப்படி இல்ல, நான் இப்படி தான் கேப்பேன்ன்னு ஒரே கலாட்டா...

ரெண்டு நாளுக்கு அப்புறம் நானும் சரி சொன்னேன். காரணம், அவர்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த காதல் தான் பிடிக்காம இருந்துச்சு...

நிறைய சண்டை வரும். ரொம்ப கோபத்துல திட்டுவார், நான் பொறுமையா பின்னால போவேன், இப்ப நான் கோபத்துல கத்துறேன், அவர் பொறுமையா பின்னால வர்றார். இப்படியே நாட்கள் ஓடிட்டு இருக்கு. இன்னும் எத்தனை நாளோ, இல்ல வருசமோ ஆகும்னு தெரியாது, ரெண்டு பேருக்குமே தனித் தனி லட்சியங்கள்ன்னு இருந்தாலும், எங்களோட குடும்பம்னு ஒண்ணு இருக்கு. எக்காரணம் கொண்டும் எங்களால குடும்பத்துல யாருக்கும் சின்ன மன வருத்தம் கூட வந்துடக் கூடாதுன்னு நினைக்குறோம். காதலா, குடும்பமான்னு பாத்தா, ரெண்டுமே தேவையா இருக்கு. அதனால படிப்படியா ஸ்டெப் எடுத்து வச்சுட்டு இருக்கோம்.

அப்புறம் இதெல்லாம் உங்க சொந்த அனுபவமான்னு கேட்டா பதிலும் கிடைக்காது. எல்லாம் உங்கள் அனுமானத்துக்கே விட்டுடுறேன்.

ஏன்னா, சில விஷயங்கள் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்.... அத இப்படியாவது வாழ்ந்து பாத்துடணும்னு ஆசை இருக்கும். எனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கு. அதோட என்னோட ப்ளாக் வாசிக்குரவங்களுக்கும் நான் ஒரு சுவாரசியத்த குடுத்தே ஆகணுமே... அதனால இது நடந்த சம்பவமான்னு கேட்டா அத மட்டும் சொல்ல மாட்டேன். டொட்டடொயிங்....



.

Friday, 4 April 2014

லவ் யூ அப்பா...


புதுசா ஒரு அறிமுகம் கிடச்சா ரொம்ப நாளா நம்ம கூடவே இருக்குறவங்கள கொஞ்சம் தள்ளி வச்சி வேடிக்கை பாக்குறது மனுஷ குணம்... ஆனா அது ரொம்ப நாள் நீடிக்க போறதில்லன்னு தெரிஞ்சும் அந்த புது அறிமுகத்து மேலயே அத்தனை ஆர்வமும் போயிடுது...

அட, பிரெண்ட்ஷிப் தான் இப்படின்னா, கல்யாணம் பண்ணிட்டு வாழுறவங்க நிலைமை அவ்வளவு தான்... புரிதலே இல்லாம எத்தனையோ பேர் வாழ்க்கைய வாழத்தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க...

வீட்டுக்கு வர்றவங்க, நாம ரோட்ல நடந்து போறப்ப எதிர்ல வர்றவங்க, பிரெண்ட்ஸ் இப்படி எல்லாருமே நம்மால கொஞ்சம் கூட முகம் சுளிச்சுட கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டு அவங்கள தூக்கி கொண்டாடுற ஆண்கள், இவ நம்ம பொண்டாட்டி தானேங்குற நினைப்புல தன் கூடவே இருக்குற, தனக்காகவே வாழுற ஜீவன கொஞ்சமும் சட்டை செய்றதேயில்ல....

எப்போ வருவீங்கன்னு கேட்டா, இந்தா வந்துட்டே இருக்கேன்னு நாலு மணி நேரமா ஒரே டயலாக் பேசுறது, எங்கயாவது கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு பிரெண்ட் இல்ல வேற யாரோ கூப்டதும் அவங்க கூட போறது, மனைவிய கிண்டல் பண்ற சொந்தக்காரங்களோ இல்ல பிரெண்ட்ஸ் கிட்டயோ இவ எப்பவுமே இப்படி தான்னு விட்டு குடுத்துடுறது....

தனக்கோ, தன்னை சார்ந்தவங்களுக்கோ சின்ன சின்னதா உடம்பு சரியில்லாம போறப்போ, மனைவி தன்னை நல்லா கவனிச்சுக்கணும்ன்னு நினைக்குற அவங்க, மனைவிக்கு அந்த நிலைமை வர்றபோ நாம கவனிச்சுக்கணும்ங்குறத ஏனோ மறந்துடுறாங்க...  (பெரிய வியாதிகள காசு பணம்ன்னு செலவழிச்சு கவனிக்குறாங்க... இல்லனா வீட்ட கவனிக்க ஆள் இருக்காதே).

ஒரு சின்ன பாராட்டு, அன்போட ஒரு அணைப்பு, இதுக்கு தானே பொண்ணுங்க மனசு ஏங்கி கிடக்கும்... அதை சரியா குடுக்காதப்போ தான் ஏங்குற மனச நிலைபடுத்த, அடுத்த பொருட்கள் மேல ஆசைப்பட ஆரம்பிக்குது மனசு... அது இன்னொரு ஆண் மேல வந்தா தப்பா போயிடும்ங்குற உள்ளுணர்வு, நகை, புடவை மேல ஆசைப்பட்டு, அதனால தன்னோட அழகையாவது அடுத்தவங்க ஆராதிக்கணும்ன்னு எதிர்ப்பார்க்க ஆரம்பிக்குது... எங்கயோ எதையோ எதிர்பார்த்து கிடைக்காத ஏக்கத்தோட வாழுற பொண்ணுங்க இங்க கோடி கோடி பேர்....

இப்போ இதுல நான் சொன்னதுல முதல் பாரா மட்டும் என்னோடது.... அடுத்தடுத்து வந்த டயலாக்ஸ் என் அப்பா வீட்டுக்கு வந்த ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ எதேச்சையா கேட்டது...

இத்தன அறிவுரை சொல்ற என் அப்பா எப்படி இருந்தார்?

ஆரம்பத்துல பாட்டி பேச்சை கேட்டுட்டு அவரும் சராசரியா தான் இருந்தார்.... கோபத்துல சாப்பாடு தட்ட கூட விசிறியடிச்சிருக்கார். ஆனா எல்லாமே எங்களுக்கு விவரம் தெரியுற வரை தான்... எப்போ நானும் தம்பியும் அப்பாவ பாத்து சாப்பாடு தட்ட அம்மா மூஞ்சியிலயே விசிறியடிக்க ஆரம்பிச்சோமோ அப்போயிருந்து அம்மாவோட காதல் வாழ்க்கை ஆரம்பிச்சுது...  அப்படி தான் சொல்லணும்னு நான் நினைக்குறேன். காரணம், அப்பாவும் அம்மாவும் விரும்பி கல்யாணம் பண்ணியிருந்தாலும் அப்பா மேலே சொன்ன அலட்சியங்கள் அத்தனையும் செய்துட்டு தான் இருந்தார்...

அப்புறம் ஒரு தலைகீழ் மாற்றம். அப்பா அம்மாவ குறை சொல்லி பாத்த நாங்களும் அம்மாவ எதுக்கெடுத்தாலும் குறை சொல்ல ஆரம்பிக்க, அம்மாவுக்கு ஆதரவா அம்மாவ அணைச்சுப்பார் அப்பா.... இவ என் பொண்டாட்டி... அப்புறம் தான் உங்க அம்மா... என் பொண்டாட்டி பத்தி யார் குறை சொன்னாலும் எனக்கு பிடிக்காதுன்னு இறுக்க முகம் காட்டுவார்...

அம்மா பக்கத்துல வந்து நின்னாலே பாட்டிக்கு பயந்து ஒதுங்கி போற அப்பா, அம்மா தோள் மேல கை போட்டு சரிக்கு சமமா சோபால உக்காந்து டீ.வி பாக்க ஆரம்பிச்சார். ரெண்டு பேர் மடியிலயும் ஆளுக்கொரு பிள்ளை.... நான் எப்பவுமே அப்பா மடியில தான்... அப்பா நான் பிறந்ததுல இருந்தே எனக்கான ஹீரோ....

அப்பா தோளை கட்டி கொஞ்சி அம்மாவ வெறுப்பெத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும்.... என் புருசண்டி அவர், கீழ இறங்கி ஓடுன்னு பக்கத்துல கிடக்குற ஏதாவது துணி எடுத்து அடிச்சி விரட்டுவா அம்மா...

அப்பாவ பாத்தே அம்மாவ வா போன்னு சொல்லி பழகியிருந்தோம்... காலப்போக்குல தம்பி வாங்க போங்கன்னு பேசி பழகிட்டான்... எனக்கு தான் அவ எப்பவுமே அம்மாவா இல்லாம ஒரு டாம் அண்ட் ஜெர்ரி பிரெண்டா மாறிப் போயிட்டா...

அதெல்லாம் தனிக்கதை... இப்போ விசயத்துக்கு வருவோம்...

கூட்டமா நாங்க சேர்ந்து விளையாடிட்டு இருப்போம். பாய்ஸ் கேர்ள்ஸ்ன்னு டீம் பிரிப்போம். அப்பா பாய்ஸ் டீம், அம்மா கேர்ள்ஸ் டீம்னு பிரிச்சா அப்பா ஒத்துக்கவே மாட்டார். நான் அவளுக்கானவன். அவ எனக்கானவ. எங்கள பிரிக்க நினைக்குறது தப்புன்னு எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்... அட போங்கப்பான்னு தலைல அடிச்சுட்டே விளையாட ஓடிடுவோம்...

பல நாட்களும் பாத்து பாத்து மனசுல ஊறிப் போன இன்னொரு விஷயம் உண்டு. ஆமா, அம்மா அழுது துடிச்சுட்டு இருப்பாங்க... இல்லல, கதறிட்டு இருப்பாங்க. அப்பா அம்மாவ அணைச்சுட்டு இருப்பார். அம்மாவ விட்டு எங்கயுமே போகாம ஊட்டி விட்டுட்டு இருப்பார். இது ஏன் எதுக்குன்னு பல நாள் எனக்கு புரியவே புரியாது. அப்புறம் தான் தெரிஞ்சுது, அம்மாவோட மாதாந்திர வலிகள் அவள படுத்தி எடுக்குறப்ப எல்லாம் அவ கூடவே சேர்ந்து கண்ணீர் விட்ருக்கார் அவர்...

அந்த அணைப்பும் ஆதரவும் புரிய புரிய எனக்கு அவங்க மேல வந்த காதல்... அத வார்த்தைல சொல்ல முடியாது...

அம்மா போனப்போ அப்பா எப்படி அத தாங்கிகிட்டாங்க?
எப்படி ஒரு இறுக்க முகத்த மறைச்சுகிட்டு வலம் வர்றாங்க?
அந்த சூழ்நிலையிலயும் அம்மாவோட ஆசைய (கண் தானம்) நிறைவேற்ற எங்க இருந்து அவருக்கு துணிச்சல் வந்துச்சு?

அப்பாவால கூட பதில சொல்ல முடியாதுன்னு நினைக்குறேன்....

லவ் யூ அப்பா....


Wednesday, 2 April 2014

கரைந்து சென்றவனுக்காய்...


என்றோ ஓர்நாள்
ஓர் ரம்மிய வேளையில்
சுழன்றடித்து பின் காணாமல் போன
உன் நினைவுகள் இன்று அகழ்ந்தெழுகிறது...

ஆற்றுப்படுகையின் ஓரமாய்
படிந்திருக்கும் சுவடுகளாய்
உச்சி வெயில் நேரத்தில்
பளிச்சென வெட்டிச் செல்லும்
மின்னலைப் போலத்தான் நீ...

பார்த்த உடன்
கலைத்து விடச்சொல்லும் உன் கேசம்...
பரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...
உறைந்து விட்ட புன்னகை...
நீ விரிக்கும் கைகளில்
அடைக்கலமாகத் துடிக்கும் நான்...

உன் ஸ்பரிசங்களின் உஸ்ணங்கள்
எப்பொழுதும் என்னை
கிளர்ந்தெழ செய்ததில்லை...
மாறாய்... மடியிலிட்டு தாலாட்டும்...

நம் காதல் எழுதிவைக்க
இந்த பிரபஞ்சம் போதாதென்று
உன் தோள் கட்டிக் கிடந்தேன்...
உன் முதுகு எப்பொழுதும்
என்னை ஏகாந்தமாய் சுமந்துக் கிடந்தது...

ஏனோ ஓர்நாள் விரல் நுனி பிடித்து...
உச்சிமோர்ந்து... காதோரமாய்
கிசுகிசுத்து... என் நலமென சொல்லி
நீயாய் முடிவெடுத்தாய்...
பொருள் தேடி வருகிறேனென்று
பின் காற்றிலசைத்து சென்றாய்...

நாட்கள் காத்திருப்பதில்லை...
நீ விதைத்தது துளிர்த்து விட்டிருக்கிறது...
நீ மட்டும் ஏனோ காணாமலே போனாய்...

ஹ்ம்ம்... சிரித்துக் கொள்கிறேன்...
அதில் உயிர்சுரத்து இருக்கிறதாவென
நீயே கணித்துக் கொள்...
நான்... இந்த உலகத்தின்
பரபரப்பில்... என்னை
கரைத்துக் கொள்ளப் போகிறேன்..

Friday, 28 February 2014

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...



எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் 
அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...

தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...

Monday, 24 February 2014

வா.... வந்தென் வலி விரட்டி செல்...



கவ்வி பிடிக்கும் பயமொன்று ஏனோ
அவசரகதியில் தொற்றிக்கொண்டது.
ஜன்னலோர கம்பிகள் துணையுடன்
தைரியம் பூசிக்கொள்ள துடிக்கிறேன்...

கற்பாறை ஒன்று நெஞ்சக்கூட்டுக்குள்
விழுந்து நொறுங்க...
ரெத்த நாளங்களின் வாசனை
இன்னும் பயம் தூவி செல்கிறது...

இன்னதென்று வரையறுக்க முடியாமல்
தலை பாரம் சுமந்து கொள்கிறது.
கண்களோ உறக்கம் தொலைந்து
கண் திரை மறைக்கின்றன...

உள்மன கூச்சல்
நெஞ்சம் பிளந்து வெளிப்பட தயாராக...
உன் மடி தேடி சுருண்டுக் கொள்ள
ஏங்கி தவிக்குது இதயத் துடிப்பு...

வந்து விடேன்... உன் கைகளால்
என் முதுகு பற்றிக் கொள்...
நெஞ்சக்குளிக்குள் முட்டுக் கொடுத்து
என் உயிர் கொஞ்சம் தாங்கு...

உன் மார் கற்றை முடிக்குள்
கொஞ்சம் முகம் புதைத்துக் கொள்கிறேன்...
கழுத்தோடு கைகள் பூட்டி
உன் உயிரோடு பிணைத்துக் கொள்கிறேன்...

என் உள்ளங்கைக்குள்
உன்னால் ஓர் அழுத்தம்...
உன்னோடு நானிருக்கிறேன் என்று
இதம் கொடுத்து செல்லும்...

வா... வந்தென் வலி விரட்டிச் செல்...
அப்படியே உனக்குள் புதைந்து
என்னை மறந்துக் கொள்கிறேன்...

Friday, 14 February 2014

காதல்



- காதல்

இந்த ஒரு வார்த்தைக்குள்ள ஏகப்பட்ட அர்த்தங்கள் ஒளிஞ்சி கிடக்கு.

அன்பு, பாசம், நேசம் எல்லாமே இதுக்குள்ள தான் அடக்கம்.

காதல்ன உடனே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் வரணும்ன்னு இல்ல, முதல்ல நாம நம்மள காதலிக்கணும். நம்ம சுற்றி இருக்குறவங்கள காதலிக்கணும். நம்மள நேசிக்குரவங்கள காதலிக்கணும். இயற்கைய காதலிக்கணும். நேர்மைய காதலிக்கணும்.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இன்னிக்கி வேலன்டைன்ஸ் டே...அதாங்க, காதலர் தினம். இது மனசளவுல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு ஒருத்தர ஒருத்தர் நேசிக்குற, ஆணுக்கும் பெண்ணுக்குமான தினம்.

இந்த நாள்ல அவசர அவசரமா காதலிக்காதீங்க, அப்படினா இந்த நாளுக்கு ஒரு பயனே இல்லாம போயிடும். முதல்ல காதல்ன்னா என்னான்னு புரிஞ்சுக்கோங்க...

ஒரு ரோஜா குடுத்து ப்ரொபோஸ் பண்ணி, நாலு நாள் பைக்ல சர் சர்ர்னு சுத்திட்டு, அஞ்சாவது நாள் பிரேக் அப் சொல்லிக்குறது காதலில்ல....

ஏகப்பட்ட கட்டுகதைகள் சொல்லி எதோ ஒரு வகைல அவங்கள வலைல விழ வச்சி, சாதிச்சிட்டோம்ன்னு இறுமாறுறதும் காதல் இல்ல...

பிரச்சனைன்னு வந்த உடனே ஒருத்தர் மேல ஒருத்தர் பழி போட்டுக்குறதும், எதிரிய விட வெறுக்குறதும் காதல் இல்ல...

எந்த கஷ்டம் வந்தாலும், ஒருத்தர ஒருத்தர் விட்டுக் குடுக்காம, அவங்கள மட்டும் நேசிக்காம, அவங்களோட ஆசைகள், விருப்பங்கள், லெட்சியங்கள் எல்லாத்தையும் நேசிச்சுகிட்டு, தடுமாறுற நேரத்துல நானிருக்கேன்னு ஆதரவு குடுத்து அரவணைச்சுகிட்டு, நெற்றியில முத்தம் குடுக்குற அத்தனை காதலர்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துகள்...

Monday, 16 December 2013

திருடா...!



என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!



- இது ஒரு மறுப்பதிவு 

Thursday, 12 December 2013

உன்னிடம் ஒரு யாசகம்...!




உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்கைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்கும்மென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டிய எனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!



- இது ஒரு மறுப்பதிவு 

Friday, 6 December 2013

இதோ இன்னுமோர் அக்னி பிரவேசம்...!


இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

.



- இது ஒரு மறுபதிவு 

Tuesday, 26 November 2013

கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்வோம்.....


எப்பொழுதும் நான் சந்திக்கும் வலிகளிவைதாயினும்
வீரியம் குறையாது, கொஞ்சமும் தளராது
தாக்குதல் ஆரம்பித்து விட்டிருந்தது.

பழகிவிட்டதென ஒதுக்கிவிடவும் வாய்ப்பளிக்காமல்
இம்முறை உன்னை விடவே போவதில்லை,
பாரென ஆக்ரோசமாய் படரத் துவங்கியது.

பற்றுதல் வேண்டி கைகள் உன்னைத் தேட,
எதிர்பார்த்த கண்கள் கண்ணீர் குளம் தேக்கியது.
ஆ...வென கதறிதுடிக்கும் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும்
வந்து விடு வந்து விடென உயிருன்னை வேண்டியது.

தொலைதூரத்தில் உறங்கியதாலோ என்னவோ
உனக்கென் தேடல் மொழி கேட்கவேயில்லை.

இப்பொழுது யோசிக்கவும் இடங்கொடாமல் அது என்
நரம்பு மண்டலத்தை என்னை ஆளத் துவங்கியது.
மலைப்பாம்பின் சுருட்டல்களுக்குள்
மாட்டிக்கொண்ட மான்குட்டியாய்
அது என்னை கையகப்படுத்தியிருந்தது.

அப்படியே என்னை விழுங்கி விட்டிருந்தால் வேதனை தெரியாது.
இதுவோ, சற்று நேரத்தில் கொஞ்சம் விட்டுபிடிக்க துவங்கியது.
வலி தீர்க்க அமுதம் தேடும் மனநிலையில்லை...

ஒரு துளி விஷம் கிடைத்தால்,
அது என்னை பரமானந்தத்தில் ஆழ்த்தி விட்டிருக்கும்.

ஆத்மா தேடி தவித்த அந்த பொழுதில் தான்
திடீரென நீ வந்தாய்...
கண்திறந்து பாரென் செல்லமே என
கன்னம் தட்டி தவித்திருந்தாய்...
நெற்றியிலே மென்முத்தமிட்டு
அஞ்சாதே, நானிருக்கிறேனென்றாய்...

மார்போடு அணைத்தென்னை உன்னோடு கட்டிக்கொண்டதில்
என்னில் குருதி வேட்டையாடியவன் பின்தங்கியவனானான்...
ஐவிரல் பற்றி நீ என்னை சூடேற்றி கொண்டதில்
இந்த கோழிகுஞ்சு கொஞ்சம் கதகதப்பில் மீண்டது.

புன்னகையொன்று பூக்கிறது உன் பரிதவிப்புக் கண்டு...
இது ஆறுதல் கட்டம்...
எனக்காய் தவிக்கும் உன்னுள் முழுதாய் கரைகிறேன்...
போர்த்திய போர்வைக்குள் இப்பொழுது நம் இருவரின்
மூச்சுக் காற்றுகளும் நலமென சங்கமித்துக் கொள்கின்றன.

கண்கள் சொருகுகிறது... தூங்குகிறேன்...
நீயும் தூங்கு...
நாளை இந்நேரம் மீண்டும்
உன் தேவை எனக்காக மட்டுமேயிருக்கலாம்....



.

Monday, 25 November 2013

எனக்கென ஒரு நண்பனிருந்தான்...










எனக்கென ஒரு நண்பனிருந்தான்...

எப்படி அவனெனக்கு அறிமுகமானான்
என்பது நினைவிலில்லை.
ஆனால் அது ஒரு மழைக்கால காட்சியாய் இருக்கிறது.
வெயிலென்பது கொஞ்சம் கொஞ்சமாய்
களவு போய் கொண்டிருந்த காலமது.

களத்துமேட்டின் மேல் காளைகள் ஓய்வெடுக்க,
வயல்வரப்புகள் நீர் நிறைத்து கொண்டிருந்தன...
சலசலக்கும் ஓடைகளுக்கிடையில்
கப்பல் ஓட்டி களைத்திருந்த நேரத்தில்
எங்கிருந்தோ வந்தவன் சிநேகமாய் புன்னகைத்தான்.

வசீகரிக்கும் கண்கள் காந்தமாய் கவர்ந்திழுக்க,
அவன் வகிடெடுக்கா உச்சந்தலை
கொஞ்சமாய் கலைத்து விட சீண்டியது.
சிற்சில சம்பாசனைகளுக்குள் அவனென்னை கவர்ந்தே விட்டான்...

கரம் பற்றிக்கொள்ளென விரல் பற்றி
ஒரு பறவையாய் சிறகு விரிக்க வைத்தான்...
மரக்கிளையொன்றில் இறக்கி விட்டு
தனந்தனியாய் பறந்திட செய்தான்...

சிறு கல் கண்டு மிரண்டோடிய என்னை
மலைகள் அழகென உள்ளங்கால் பதித்திட செய்தான்...
பஞ்சு மிட்டாய் இதுவென
மேகம் நடுவில் முகம் புதைத்து சிலிர்க்க வைத்தான்...
தாய் விட்டு பிரிந்த
அணில் பிள்ளைகள் கண்டெடுத்து
தாயாய் என்னை கொஞ்சம் மாற்றிப் பார்த்தான்...
தவழத் தடுமாறும் நாய் குட்டிகள் கொஞ்ச வைத்து
சேயாய் நானும் மாறிடச் செய்தான்..

வயல் வெளிக்குள் நாற்று நட்டோம்...
புல் வெளிக்குள் பூ பறித்தோம்...
மழை வந்து விட்டுச் சென்ற
தூறல்களை வழியெங்கும் சிதறடித்தோம்...

பேசும் கதைகளுக்கு குறைவில்லை
களைப்புகள் என்றும் நெருங்குவதில்லை...
தோளில் நிம்மதியொன்றை புதைத்து வைத்து
நான் இவன் நிழலென நகலெடுத்தேன்...

நண்பன் இவனென இறுமார்ந்த வேளையில் தான்
ஓர்நாள், மொட்டை மாடியில், நிலாவொளியில்
தென்னங்கீற்றுகளின் சாட்சியாக
அவன் காணாமல் போயிருந்தான்....

இன்றிவன் என் துணைவனாகி, என் மகளுக்கு
அம்பாரி சுமக்கும் யானையாகி விட்டிருந்தான்...


Thursday, 21 November 2013

கோர்க்கத்துடிக்கும் ஆசைகள்...!

சுகமும் துக்கமும்
கலந்து விரைகின்ற மேகக் கூட்டத்திற்கிடையில்
துருவ நட்சத்திரமாய் நீ...!

அர்த்தமற்றதாய் கழிந்து செல்லும் நாட்காட்டியில்
உன் நினைவுகள் மட்டும்
ஏதோ ஒரு அர்த்தத்தை
கற்பித்துக் கொண்டிருக்கிறது...!

காற்றின் மெல்லிய உணர்வுகளோடு
உன் வாசம் தாங்கிய நினைவுகள்
என்னில் கண்ணாமூச்சி ஆடி
தோற்றுபோய் வெளிப்படுகிறது...!

சட்டென பெருமழையொன்று அடித்துவிட்டு
ஓய்ந்தது போல்
கனவுக்குள் நீ தோன்றி புன்சிரிப்பை தந்து விட்டு
கண்மணிக்குள் மறைந்து கொள்கிறாய்...!

பல நேரங்களில்
என் நெற்றிப்பொட்டில்
பதியப்படும் ஈரங்களில் தான்
உன் மொத்த அன்பும்
கொட்டிக் கிடக்கிறது...!

நீ பேசிய வார்த்தைகளை கோர்க்க நினைக்கிறேன்...
சடசடவென உதிர்ந்தே விடுகிறது
சற்றும் ஈரமில்லாமல்.....
மனம் மட்டும் குதூகலமாய்...!

காத்திருக்கிறேன்....
காத்தே கிடக்கிறேன்...
காதோரம் உன்னிடம் ரகசியம் சொல்ல...!




-இது ஒரு மறுபதிவு


Thursday, 14 November 2013

பாலையாய் ஒரு வெற்றுக் கேவல்...


“கொலைப்பாதகர் கூட்டமது 
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”

தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...

கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...

விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித்து விளக்காக்கிக் கொண்டாள்...

“ஏன் சென்றாய்? விட்டகன்றாய்?
திரும்பிடவே கூடாதென வீம்பாய் ஒரு
பிடிவாதம் பிடித்தாற்போல் ஆயிரம் கேள்விகளை
விடைதெரியாமல் விட்டுச் சென்றாய்...
உன் கண்களில் நானதை படித்தறிய கண் விரிய காத்திரு”
இப்படி தான் அவள் மனம் அவனிடத்தில் யாசித்தது...

யாசித்தும் பயனில்லை,
நாளும் பொழுதும் பூஜித்தும் புண்ணியமில்லை...
விட்டு விட்டுப் போனவனின்
ஆழ்நிலை தூக்கமொன்றே அவளை ஆங்காரமாய் வரவேற்றது...

எரிமலையொன்றங்கே தீப்பிழம்பு கக்கியது...
வான் கிழித்து நட்சத்திரம் பாதாளம் பாய்ந்தது...
இதை காணத் தான் கண்களுக்கு மையிட்டுத் திரிந்தாளா?
வளையல்கள் சண்டையிட அவன் ரசிக்க நகைத்தாளா?
மணவாளன் மாய்ந்திடத் தான்
வெண்சங்கு கழுத்திலே மணமாலை ஏற்றாளா?

பற்றியிழுத்து சண்டையிட்ட மார்தனில்
இனி மயிர்கால்கள் சிலிர்க்கப் போவதுமில்லை...
பூப்போல் வாரி அணைத்திடும் கரங்களும்
இனி அவளுக்கு சொந்தமாய் இருக்கப்போவதுமில்லை...

இனி அவன் கழுத்து அவளுக்காய் சாய்வதுமில்லை
அவனின்றி இனியாரும் அவளுக்கு தேவையாய் இருப்பதற்கில்லை..

அவன் வளைத்த மெல்லிடை தீயாய் தகிக்க,
அவன் சுமந்த நெஞ்சமோ இரண்டாய் கிழிகிறது...
பீறிட்டு வரும் குருதி கண்டு
ஆக்ரோஷ மனம் அடங்கல் கொள்ளுமோ?
ஏதோ ஓர் பரமானந்தம் அந்தரத்தில் ஆர்ப்பரிக்கிறது..
மெல்லிய ஆடைகளின் பாரங்கள் கூடிப்போக
வாய்ப்பிளந்து உயிரிழக்க துணிகிறாளவள்..

அமைதியாய் உறைந்திருக்கிறான்...
அவள் கைகள் துவள தாங்காதிருக்கிறான்...
தட்டாமாலை சுற்றிடும் அவள்
தலைக்கு மேலே இன்னொரு உலகம் ஸ்ரிஸ்டித்து
அங்கிருந்து அவளை ஏந்தாதிருக்கிறான்...

அவள் உயிர் துடித்தடங்குவதை
அவன் கண்கள் காணப்போவதேயில்லையென
இமை சொருகி மண்ணோக்கி அவள்
வீழப் போகையில் வயிற்றைப் பிரட்டி
உள்ளிருந்து எட்டி உதைத்தாற்போல்,
அடிக்கள்ளி நான் இங்கிருக்கிறேனென்கிறான்...

பேதையினியென் செய்வாள்?
உயிரிழக்கவும் உரிமையில்லை...
துவண்டிட்ட கால்களினி உரம்பெற்றுமா? தெரியாது...
மாறாய், செலுத்தப்பட்டே தீர வேண்டும்...
உளிப்பட்டு பிளந்திட்ட பாறையின் உள்ளின்று
குதித்தோடிய தேரையாய்
புவிதனில் அவளுக்கும் ஓரிடம் நிச்சயமாச்சு...

கண்ணீரும் வறண்டுப் போக
அவன் வெற்றுடலை ஒரு உறைந்தப்பார்வை பார்க்கிறாள்...
மணிவயிரை தடவுகையில்
விரக்தியொன்று உதட்டில் உறைந்தது...
ஊமையாய் போன இவள் இனி,
ஊர் போய் சேர வேண்டும்...

கூவைகளின் கூப்பாடுகளுக்கிடையில் அவள்
திரும்பி நடக்கையில் அவளுமாய் இருக்கவுமில்லை..
அவளை தொலைத்துவிட்டு அவனை அணிந்துக் கொண்டே
கால்கள் பின்ன ஊர்ந்துக் கொண்டிருக்கிறாள்...

இனி அவன்... அவளின் வாழ்நாள் விசையாகிறான்...

Tuesday, 12 November 2013

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!



# இது ஒரு மறுப்பதிவு

Friday, 8 November 2013

காத்திருக்கும் விடியல்...!

எட்டிப்பார்க்கும் சூரியனை கண்டு
கீழ் வானம் சிவந்திருக்க
கொண்டை சேவல் ஒன்று
துயில் கலைந்து கொக்கரித்த
இளம் குளிர் போர்வைக்குள்ளே
கனா ஒன்று கண்டேனடா...!

தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் நீண்டு வர,
தென்னை மரங்கள் தாளத்தோடு வரவேற்க
பெண்பார்க்க நீயும் வந்தநாள் அந்நாளடா...!

சீர்வரிசை தட்டுகள் இடைநிற்க
பெண்டுகள் உன்னை வழிகாட்ட
கதவிடுக்கின் ஓரம் நின்று இரகசியமாய்
உன்னை நானும் முழுதாய் ரசிக்கிறேனே...!

ஆவல் மின்னும் கண்களோ
உன்னை அள்ளி அள்ளி பருகிய பின்னும்
மேலும் மேலும் தாகம் திணித்து மருகியே நின்றதடா...!

மன்மதனின் பார்வையொன்றை இரகசியமாய்
என்னிடத்தில் நீ வீசி, உயிர் வதைத்த நொடி
உன்னை என்னில் கொண்டேனடா...!

வார்த்தைகளின்றி நானும் தடுமாற
நீயோ கண்கள் வழி கவி பேசி
குறுநகை ஒன்றில் என்னை வீழ்த்திவிட்டு
வேடிக்கையாய் நகைக்கிறாய்...!

அடுத்த மாதம் ஆடியாமே?
ஆவணியில் தேதி வைக்க
அவசரமாய் தாக்கல் ஒன்றை
இப்பொழுதே சொல்லி விடு...!

முந்தி வரும் கார்த்திகையோ
பிந்தி வரும் தை மாதமோ
மணநாளை நீட்டிவைத்து
உன்னோடு என் வாழ்நாளை 
தேய்ந்து போக வைக்காதே...!

உனக்கென்ன? வருகிறேன் என
முற்றத்து மையத்தில் நின்று
சைகை மொழி செய்தியொன்றை
நவிச்சியமாய் நவின்று விட்டு
ஊர்வலத்தில் தேராக
அசைந்தே சென்று மறைந்து விட்டாய்...!

நானல்லவோ வாசல் வழி
உன் பிம்பம் காண்பேனென
நிதம் நிதம் விழி நோக
பார்த்துக்கொண்டே தேய்கிறேன்...!

முறை சோறு ஆக்கிப்போட 
முறைமாமன் வந்து நின்றான்...
சுற்றத்தார் விருந்தோம்பலில்
உண்டு களித்த மயக்கத்திலும்
துரும்பாய் நான் போனேனடா...!

கரம் பற்றி என்னை நீ கரைசேர்க்கும் நாளுக்காய்
நாணம் ஒன்றே நகையாய் பூட்டி
நாயகி நானும் கனகாலம் காத்திருக்கிறேன்...!

ஆடி முடிந்து ஆவணியும் தவறாமல்
வந்து கொண்டே தானிருக்கிறது...! 
என்றோ நீ வருவாய்...! கனவில்லை நிஜம் தருவாய்...!


- இது ஒரு மறுப்பதிவு 

Saturday, 2 November 2013

எங்கடா போய்ட்ட, நீ எங்க தான் போய்ட்ட?

எங்கடா போய்ட்ட, நீ எங்க தான் போய்ட்ட?
பக்கத்து வீட்ல பாரு
அக்கம் பக்கம் எட்டிப் பாரு
அரை கிலோமீட்டர் தூரம் பாரு
அண்ணாந்து வானம் பாரு

நண்டு சிண்டு வானரம்னு
கூட்டம் கூட்டமா போறாங்க
ஜோடி ஜோடியா போறாங்க
கையில காசு இல்லாட்டியும்
மனசுல மத்தாப்பு சிதறுது

தூரத்துல நீ இருந்தாலும்
நொடி பொழுதும் விலக மாட்டேன்
அங்கன இருந்துகிட்டே
நீ என்னை சுத்தி வர மறக்க மாட்ட

வானவேடிக்க காட்டுறாங்க
அத நான் உன்கிட்ட கேக்கலையே
பக்கம் வந்து நின்னா என்ன?
பக்குவமா ஒரு பார்வ பாத்தா என்ன?

பச்ச புள்ள என்னைய நீ
கண்கலங்க விட்டுடாத
ஓடி ஓடி உழைக்குற...
இங்க நான்
ஓடா தேயுறேன்...

நரகாசுரன் செத்துட்டானாம்
எப்போ தான் நமக்கு விடுதல?
ஒரே ஒரு குரல் குடுத்தா
உள்ளமெல்லாம் குளிர்ந்து போகும்

நாளைக்கு வந்துடுவ
அதுவரைக்கும் நான் இப்படியே புலம்புறேன்
சீக்கிரமா ஓடி வா...
ரா பகலா காத்திருக்கேன்...

Thursday, 31 October 2013

உன்னை பற்றியழ வந்துவிடு...

காற்றை கிழித்து
பெருங்கூச்சலாய் புறப்படுகிறது
உள்ளிருந்து ஓர் ஆங்காரம்...

பாறைகள் தாவி,
உச்சி வெயில் காய்கிறது மனம்...

இதுவரை யாதென்றே அறிந்திராத
இருவருக்குமான இடைவெளிகள்,
இன்று திசை திருப்பி கொள்கின்றன...

மோதிய வேகத்தில்
உடைந்து சிதறுகிறது
திருஷ்டியென எறியப்பட்ட பூசணிக்காய்...
கூடவே துடித்தழுகிறது பிய்த்தெறியப்பட்ட இதயம்...

இதுவரையில் உன்னோடான பயணத்தில்-
தாய்க் கண்டு பாய்ந்தோடும்
சிசுவின் பரவசம் எப்பொழுதும்
உன்னிடத்தில் நான் அடைந்ததுண்டு...

உன் தோள் தாவி,
கழுத்தில் நான் பதிக்கும் முத்தம்
காமத்தில் சாயலை கண்டதேயில்லை...

நீ போகும் திசையெல்லாம்
வளையோசை குலுங்க
குதித்தோடி பழகியவள் நான்...

என் பாதக்கொலுசுகளின்
சிணுங்கள் ஒலி மீறி எதிரொலிக்கும்
உன்னை கெஞ்சும் என் கொஞ்சல் மொழி...

முறைக்கும் உன் கண்கள் கண்டு
நகைக்கவும் நான் தயங்கியதில்லை...
அடுத்த கணம் வலிய பற்றியிழுத்து
அணைக்கப்போவது உன் கரங்கள் தானே...

ஆனாலும்- இன்றென்னை
வெறுத்திட்டதாய் வார்த்தை கனலை
விசிறி எறிந்தாய்...
அவை என் குருதிக்குள் புகுந்தென்னை
வேக வைக்கும் என்றறிந்தும்...

என் நரம்புக்குள் ஏதோ
ஊர்ந்துச் செல்கிறது...
இயலாமை- கட்டுப்பாடு மீறி
வெளிக் குதித்தோடுகிறது...

என் இருகரங்களும்
உன் தலைமயிர் தேடித் தவிக்கின்றன...
நீயின்றி எனக்கு
பைத்தியம் பிடித்ததாய் பற்றியழ வேண்டும்...
அதற்காகவாவது உன் தலை கொடுத்து விட்டுப் போ...

Thursday, 24 October 2013

உன்னோடு ஒரு வாழ்க்கை...!

வான்வெளி நட்சத்திரங்களாய்
நம் இருவருக்கிடையிலும் ஒரு துல்லிய இடைவெளி...

Wednesday, 16 October 2013

இது காதல் இல்லையா?

உன் கண் அசைந்தால்
நான் காற்றில் மிதப்பேன்...
உன் கைப்பிடித்தால் நான் 
நடை துறப்பேன்...
இது காதல் இல்லையா?