ஒரு வருஷம் ஆகிப் போச்சு நாப்கின் பத்தி நான் எழுதி. கிட்டத்தட்ட நிறைய பேர் கிட்ட இருந்து நிறைய பாசிட்டிவ் கருத்துகள், விமர்சனங்கள். இப்போ ரெண்டுமூணு நாளா மறுபடியும் அத ஷேர் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எல்லாம் மார்க்கோட “ஆன் திஸ் டே” மார்க்கத்தால தான். தேங்க்ஸ் டு மார்க்.
இது பத்தி எழுதணும் எழுதணும்னு நானும் ஒரு வாரமா நினச்சுட்டு தான் இருக்கேன், ஆனா இருக்குற சோம்பேறித்தனம் எழுத விடுறதே இல்ல. ஆனா பாருங்க, நேத்து விகடன்ல வந்த நியூஸ் இன்னிக்கி என் கண்ணுல பட்டுச்சு “மாணவர்களே கட்டிய கழிப்பறை – மலைக்க வைத்த மனித நேயம்”ங்குற தலைப்புல.
இதுக்கு முன்னாடியே ப்ரெண்ட்ஸ் சில பேரு பேசிட்டு இருக்குறப்ப இந்த பப்ளிக் டாய்லட் பத்தி கொஞ்சம் எழுதேன்னு கேட்டாங்க. இந்த கழிப்பறை பத்தி எல்லாம் எனக்கு பேச தகுதி இருக்கா இல்லையான்னு சரியா தெரியல, ஏன்னா அதிகமா நான் வீட்டை விட்டு வெளில போறதே இல்ல. அதோட, பொது இடங்கள்ல இருக்குற கழிப்பறைகள் எல்லாம் பயன்படுத்தினதே இல்ல, ஒரு ரெண்டு மூணு சம்பவங்கள் தவிர்த்து.
எனக்கு தெரிஞ்சி முதலாவது சம்பவம் ஒரு பஸ்ஸ்டாண்ட்ல வச்சு நடந்துச்சு. கூட வந்த ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவசரம்னு போனாங்களேன்னு நானும் போனேன். பக்கத்துலயே போக முடியல, அவ்வளவு நாத்தம். மூக்க புடிச்சுட்டு உவ்வேன்னு எட்டிப் பாக்காமலே ஓடி வந்துட்டேன். கண்டிப்பா எட்டிப்பாத்துருந்தா அலங்கோலம் தான். இதுல பப்ளிக் டாய்லெட்ல சில வாசகங்களும் போன் நம்பர்களும் வேற மூஞ்ச சுளிக்குற மாதிரி இருக்குமாம்.
அடுத்ததா மென்சஸ் பிரச்சனை வந்தப்ப அதுக்காக ஸ்கேன் பண்ண போயிருந்தோம். இந்த ஸ்கேன் உடம்புல வேற எந்த பகுதினாலும் ஈசியா எடுத்துரலாம், ஆனா இந்த வயித்துல, அதுவும் கர்ப்பப்பைல எடுக்குறது எல்லாம் கர்ண கொடூரம். வயிறு முட்ட தண்ணி குடிச்சிருக்கணும். அதுவும் கர்ப்பப்பை முழுக்க தண்ணி நிரம்பி நிக்கலனா ரிபோர்ட் ஒழுங்கா வராது. கஷ்டப்பட்டு எப்படியோ ஸ்கேன் எடுக்க ஒத்துழைச்சு வெளில வந்தா, ஒரு அடி கூட நகர முடியாது. அப்படியே அங்கயே பாத்ரூம் போய்ட்டா என்னன்னு தோணும். அட, அங்கேயாவது பாத்ரூம் எல்லாம் சுகாதாரமா இருக்குமான்னு பாத்தா அதுவும் கிடையாது.
அதுக்காக நான் ஸ்கேன் செண்டர்கள குறை சொல்றேன்னு அர்த்தம் கிடையாது. எனக்கு நேர்ந்த அனுபவம் வேற. ஸ்கேன் செண்டர் மாடியில. பாத்ரூம் கீழ இருந்துச்சு. அதுவும் கொஞ்ச தூரம் ஒரு சந்துக்குள்ள வேற போகணும். பாத்ரூம் எல்லாம் போகாம அப்படியே வீட்ல போய் பாத்துக்கலாமான்னு யோசிக்க கூட முடியல, காரணம் அவ்வளவு அவஸ்த்தை. சரின்னு தத்தி தாவி பாத்ரூம் போய், கதவ தொறந்தா, உவேக்... அப்படியே மூத்திர வாடை.
வேற வழியே இல்லன்னு உள்ள மெல்ல எட்டிப்பாத்தா, யாரோ ஆய் போயிட்டு அரைகுறையா தண்ணி விட்டுட்டு அப்படியே போயிருக்காங்க. உள்ள கால் கூட எடுத்து வைக்க முடியாத நிலைமை. ஆனா அங்கயே தண்ணி, விளக்குமாறு எல்லாம் இருந்துச்சு. பாத்து பதமா கால் எடுத்து வச்சு, முதல்ல தண்ணிய பாத்து பாத்து விட்டு, அப்புறம் விளக்குமாறு எடுத்து லேசா கழுவி விட்டு, எல்லாம் கிளீன்ன்னு ஆனதுக்கு அப்புறம் தான் என்னால நிம்மதியா பாத்ரூமே போக முடிஞ்சுது.
இதுல இருந்து நான் சொல்ல வர்ற விஷயம் என்னன்னா, சில பொது கழிப்பறைகள், பள்ளிகள்ல தண்ணி வசதியே இருக்காது. இங்க தாராளமா தண்ணி வசதி இருந்தும் உள்ள காலடி எடுத்து வைக்க முடியல. அட, நாம போன ஆய நாமளே கழுவக் கூடாதாக்கும். நமக்கு காரியம் முடிஞ்சுதா, ரைட்டு, அடுத்தவன் எப்படி போனா நமக்கென்னங்குற மனோபாவம். எனக்கு அன்னிக்கி விளக்குமாறு எடுத்து கழுவி விட ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது. சுத்தம் ஆகிடுச்சு. இப்படியே கிடக்கட்டும் ஒண்ணுக்கு தானே போகணும்னு நினச்சு நானும் அப்படியே மூக்க புடிச்சு போயிட்டு வந்துருந்தா இன்னும் நாறி இருக்கும். அதுக்காக எல்லாரும் பப்ளிக் டாய்லெட்ட கழுவுங்கன்னு நான் சொல்லல. நீங்க போனா, தண்ணி வசதி எல்லாம் இருந்தா, சுத்தமா கழுவி விட்டுட்டு வாங்கன்னு தான் சொல்றேன்.
அப்புறம், நான் எல்லாரையும் மொத்தமா எல்லாம் குறை சொல்லல. நிறைய பேருக்கு இந்த சமூக அக்கறை இருக்கத் தான் செய்யுது. ஏன், நான் போன பாத்ரூம்ல எனக்கு முன்னால பாத்ரூம் போயிட்டு வந்த ஆணுக்கு கூட அந்த சமூக அக்கறை இருந்துருக்கு. அதனால தான் அவர் ஆய் போயிட்டு தண்ணி விட்டுட்டு போயிருக்கார். ஆனா அவருக்கு எப்படி தண்ணி விடணும்னு தெரியல. ஒரு பக்கெட் தண்ணியையும் அப்படியே அது மேல வேகமா விட்டு எல்லாத்தையும் சிதறடிச்சுட்டு போயிருக்கார். பாத்ரூம் நாறிடுச்சு.
நான் பிறந்து வளர்ந்தது, இருக்குறது எல்லாமே கிராமம் தான். அப்போ எல்லாம் டாய்லெட்ங்குற வார்த்தையே யாருக்கும் தெரியாது, அப்புறம் எங்க டாய்லெட்ல போக? எல்லாம் திறந்தவெளி புல்கலைக்கழகம் தான். வீட்ல சொல்லிட்டு போகணும்னா “அம்மா நான் பூமிக்கு உரம் போடப் போறேன்”ன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான்.
அப்படி தான் ஒருநாளு வீட்ல சொல்லிட்டு வாழைத் தோப்புக்குள்ள ஒதுங்கி இருந்தேன். ஏழு எட்டு வயசுல கை துறுதுறுப்பு சும்மா இருக்காதே. ஒரு குச்சிய எடுத்து பக்கத்துல இருந்த கரையான் புற்றை நோண்டிகிட்டு இருந்தேன். திடீர்னு உள்ள இருந்து ஒண்ணு சீறிக்கிட்டு வந்துச்சு பாருங்க.... அரண்டு, மெரண்டு அங்க இருந்து ஓட்டம் புடிச்சவ தான், அப்புறம் கொஞ்ச நாள் அம்மா முந்தானைய புடிச்சுகிட்டே தான் எங்கயும் வெளில போறது.
அதுக்கப்புறம் அந்த ஜந்துவ தோட்டத்துல அரசல்புரசலா பாத்து அப்பப்ப ஹாய் சொல்லி இருந்தாலும், ஆய் போகணும்னா எங்க ஆயா துணை வேணும். இதுனால எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னால ஏகப்பட்ட டார்ச்சர். ஆக, ஒரு பாம்பினால் எங்க வீட்ல பாத்ரூம் கட்டியே ஆகணும்னு நிலைமை உருவாகிச்சு.
அப்பா கொஞ்சம் யோசிச்சு, ரெண்டு பாத்ரூம் கட்டலாம்னும், ஒண்ணு வீட்டுக்கு உள்ளேயும், இன்னொன்னு வெளியேயும்னு முடிவு பண்ணினார். ரெண்டு பாத்ரூம் இருந்தாலும் எல்லாரும் பொதுவா ஒரே பாத்ரூம தான் யூஸ் பண்றது. இதுல கொஞ்ச நாள் எனக்கு வித்யாசம் தெரியல. ஏன்னா நான் எழுந்து வர எப்படியும் காலைல எட்டு மணி ஆகிடும். அம்மா அதுக்குள்ள பாத்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி போட்ருவா.
அப்போ நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தேன்னு நினைக்குறேன். திடீர்னு ஒருநாள் சீக்கிரமே எழுந்து பாத்ரூம் போன நான் அலற ஆரம்பிச்சுட்டேன். அவ்வளவு அசிங்கம். எல்லா இடமும் சிதறி கிடக்கு. “யார் போனா, வந்து கிளீன் பண்ண சொல்லுங்க”ன்னு அலறல். சத்தம் கேட்டு எட்டிப் பாத்த அப்பா, “நான் தான் போனேன், நல்லா தண்ணி விட்டுட்டு தான் வந்தேன், அலறாத”ன்னு சொல்ல, அப்ப தான் இவங்க எல்லாம் எப்படி தண்ணி விடுறாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.
அப்புறமா அப்பாவ தனியா வெளி பாத்ரூம் துரத்தி விட்டது எல்லாம் தனி கதை. தம்பிய தனியா கூப்ட்டு, பாத்ரூம் எப்படி யூஸ் பண்ணனும், எப்படி சிதறாம தண்ணி விடணும்னு டியூசன் எடுத்தது எல்லாம் தனியோ தனிக்கதை. ஆக, இத நான் ஏன் சொல்ல வர்றேன்னா, பாத்ரூம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாமலே இன்னமும் சிலபேர் இருக்கத் தான் செய்றாங்க. நாம என்ன பண்றோம்னு எல்லாரும் ஒரு தடவ யோசிச்சுப் பாத்துக்குறது நல்லது.
ரொம்ப சமீபத்துல என்னோட ப்ரென்ட் ஒருத்தி தன்னோட பையன பக்கத்துல இருக்குற அரசாங்க பள்ளியில சேர்த்துருக்குறதா சொன்னா. அஞ்சு வயசு ஆகிடுச்சு, இன்னமும் வாயத்தொறந்து பேசல. இங்க சேர்த்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க, சேர்த்தேன், இப்ப பரவால, ரெண்டு மூணு வார்த்தை பேசுறான். முன்னாடி ரொம்ப சேட்டை பண்ணுவான், இப்ப பொறுப்பா அவனே பல்லு விளக்குறான்ன்னு அவ பெருமையா சொன்னா. ஆனாலும் உற்றாரும் உறவினரும் இப்படி ஒரு ஸ்கூல்லயா சேர்ப்பன்னு தினமும் கேட்டு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களாம். நமக்கு தான் அடுத்தவங்க என்ன பண்றாங்க, ஏது பண்றாங்கன்னு பாத்து, அதுல ஆயிரம் நொரநாட்டியம் சொல்றது தான் அல்வா சாப்டுற மாதிரி ஆச்சே.
சரி, இப்ப இந்த டாபிக் கீழ, இந்த விஷயம் ஏன் வந்துச்சுன்னு சொல்றேன். அவ அந்த ஸ்கூல அவ்வளவு சிலாகிச்சு சொன்னாலும், வருத்தப்படுற ஒரு விஷயம் ஒண்ணு இருக்கு. அது தான் அங்க இருக்குற டாய்லெட். பக்கத்துல போனாலே நாறுது. பையனால அங்க நிம்மதியா போக முடியல. பலநாள் உக்காந்த இடத்துலயே பயந்து போயிடுறான். இல்லனா அடக்கி வச்சுட்டு வீட்ல வந்து அவஸ்த்தப்படுறான்னு சொன்னா.
“இதுக்கெல்லாம் என்ன தான் வழி”ன்னு கேட்டேன். இப்ப நாங்களே பாத்ரூம் கிளீன் பண்ண தேவையான சாதனம் எல்லாம் வாங்கி குடுத்து, அத கழுவி விடவும் ஒரு ஆள் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். பையன் இப்ப பேச ஆரம்பிச்சுட்டான். அவன் நடவடிக்கைகளும் மரியாதையா மாறி இருக்கு. இந்த பாத்ரூம்க்காக அத எல்லாம் இழக்க நாங்க தயாரா இல்லன்னு சொன்னா. அதோட, மத்த பிள்ளைங்களும் நிம்மதியா பாத்ரூம் போவாங்களேன்னு அவ சொன்னப்ப நிஜமாவே பெருமையா இருந்துச்சு. அவ நினைச்சிருந்தா மத்தவங்க பேச்சை கேட்டுட்டு ஒரு ஹை-டெக் ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்துருக்க முடியும். ஆனா அவ பையனுக்காக ஒரு ஸ்கூல் சூழ்நிலையையே மாத்தி இருக்கா.
இப்ப நான் காலைல படிச்ச நியூஸ்சுக்கு வர்றேன். தன்னோட நண்பனுக்காக நாகப்பட்டினத்துல மாணவர்களால ஒரு கழிப்பறைய கட்ட முடிஞ்சுச்சுனா, தன்னோட மகனுக்காக ஒருத்தி ஸ்கூல் பாத்ரூம்ம கிளீன் பண்ற பொறுப்ப எடுத்துருக்கானா, நம்மால முடிஞ்ச அளவு நாம ஏன் பண்ண முடியாது? அட, அட்லீஸ்ட் நாம போற பொது கழிப்பறையையாவது கொஞ்சம் சுத்தமா வச்சுக்க முடியாதா?
இன்னும் நிறைய எழுதலாம் தான். ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம். இன்னமும் ஒதுங்க ஒரு கழிப்பறை இல்லாம ஆத்தங்கரை, குளத்தங்கரை, ரோட்டு பக்கம்னு ஒதுங்குற ஜனங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. கிராமம் தாண்டி நகரம்னு வந்தா அவசரத்துக்கு ஒதுங்க மண்ணு கூட கிடையாது. முதல்ல கிளீன் இந்தியான்னு சொல்ற நம்ம அரசாங்கம் ஸ்டெப்ஸ் எடுக்குதோ இல்லையோ, நாம ஏதாவது ஸ்டெப்ஸ் எடுக்கலாம். இதுக்கு என்னென்ன பண்ணலாம்னு ஆக்கபூர்வமா நாம யோசிக்க ஆரம்பிச்சாலே அடுத்தகட்ட செயல்முறை சுலபமா இருக்கும்.
ரெண்டு மாசத்துக்கு முண்ணாடி ஒரு எக்சாம் எழுத chennaiக்கு போய் இருந்தேன். சரியா அப்போதான் எனக்கு loose motion ப்ராப்லம் இருந்திச்சு.
ReplyDeleterailway station, bus stopல அவசரத்துக்கு கட்டன கழிப்பறைகள் பயன்படுத்தி இருந்தேன்.
கட்டனம் வசூலித்தாலும் சரியாக சுத்தம் செய்வது கிடையாது.
இந்த பதிவு நா அனுபவிச்ச கொடுமைய
நினைவு படுத்திச்சு அக்கா:)))
கட்டண கழிப்பறைன்னு இருந்தாலும் நாம அத சரியா பயன்படுத்தினா இவ்வளவு அசிங்கம் வந்துருக்காதுன்னு சொல்ல வரேன்மா. இங்க நாமன்னு நான் சொன்னது அத பயன்படுத்துற எல்லோரையும் தான். பெரும்பாலும் யூஸ் பண்ணிட்டு அத அப்படியே விட்டுட்டு போய்டுறாங்க மக்கள்
Deletevery very relevant topic you have discussed here mam.
ReplyDeletethese are very basic things every human should learn first.
கண்டிப்பா. அத புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாலே போதும்
Deleteபொதுக்கழிப்பறைகளை நம்மவர்கள் பயன்படுத்தும் விதம் மகா மோசம்! பராமரிப்பும் சரியாக இருக்காது. வீட்டு கழிவறைகளை கூட சிலர் நீங்கள் சொல்வது போல பயன்படுத்த தெரியாது நாசப்படுத்தி விடுகின்றனர். இதுகுறித்து சில வருஷங்கள் முன்னர் நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன். விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய விஷயம்! நல்லதொரு பதிவு!
ReplyDeleteஆமா. ஆனா இத எல்லாம் எப்படி சொல்றதுன்னு வீட்ல பெண்களே சுத்தம் பண்ணிடுறாங்க. அவங்கவங்க பண்ண வேண்டிய வேலை இதுன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். தேங்க்ஸ்
Deleteபொதுக் கழிப்பறைகள் - மோசமான நிலையில் தான் இருக்கின்றன. கட்டணம் வாங்கிக் கொண்டாலும் சரியான பராமரிப்பில்லாமல் தான் இருக்கின்றன... நிலை மாறும் என்று நம்பிக்கை கொள்வோம்....
ReplyDeleteஅவங்க பராமரிக்குறது இல்லங்குறது இருக்கட்டும், முதல்ல அத பயன்படுத்துறவங்க சரியா நடந்துக்குறது இல்ல. இல்லனா எப்படி அவ்வளவு நாற்றம் வரும்?
Deleteஅக்கரையான மற்றும் அக்கரையை ேற்படுத்தும் நல்ல பதிவு,
ReplyDeleteசுத்தத்தை வலியுருத்தும் சூப்பரான பதிவு!
ரொம்ப ரொம்ப நன்றி
Delete