Thursday 1 August 2019

துர்கா மாதா - நோக்கும் போக்கும்

புது சிந்தனை புகட்டி புத்துணர்ச்சி புத்துணர்வு ஆகியவற்றை புகுத்தி மனிதன் மனிதனாக மலர்வதற்கு வழி வகுக்கும் மகோன்னத இலக்கிய வடிவம் புதினம். மேகம், கடல் நீரில் இருந்து உருவாகிறது. உயரே கிளம்பி வானத்தில் வட்டமிட்டு கடலிலும் மற்ற நில பரப்பிலும் மழை பொழிந்து பயன்படுகிறது. அவ்வாறே புதினம் கூட சமூகத்தில் இருந்து உருவாகி சமூகத்திற்கே பயன் அளிக்கிறது. மனித இயல்பும் மனித வாழ்வும் தன்னகத்தே கொண்டுள்ளதால் மனித மனங்களையும் சில சமயங்களில் இதயங்களையும் தொடுகிறது. எனவே புதினத்திற்கு வாசகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு.

கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்றை படம் பிடித்து காட்டினர். வரலாற்று போக்கை புரிந்து கொண்டு அதில் இருந்து நன்மை பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் போலும். அகிலன், நா. பார்த்த சாரதி, ராஜவேலு போன்றோர் சுதந்திர போராட்டத்தை சித்தரித்து வாசகர்கள் மனங்களில் தேச பக்தி விதைத்தனர். அவ்வாறே சமூக சிந்தனை உள்ள பலரும் சமூகத்தில் அவ்வப்போது தலைத்தூக்கும் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் சீர்கேடுகளையும் சித்தரித்து சீர்திருத்ததிற்கு வழிவகுத்தனர்.

இத்தகைய சமூக பார்வை கொண்ட எழுத்தாளர்களில் சகோதரி ஜீவா சிறந்த இடத்தை பிடித்து துர்கா மாதா என்னும் புதினத்தை சிறப்புற படைத்திருக்கிறார். மனங்களை கவர்ந்து சிந்திக்கச் செய்யும் ஆற்றல் படைத்த சில புதினங்களில் துர்கா மாதாவுக்கும் சிறப்பிடம் இருக்கிறது என்பதில் மிகை இருக்க முடியாது. வாட்டி வதைக்கும் இக்கால பிரச்சனைகளை தன்னகத்தை கொண்டு தீர்வை நோக்கி புதினம் நடை போடுகிறது. பிரச்சனைகளை நன்கு புரிய வைத்து தீர்வுகளை திணிக்காமல் திறம்பட சிந்திக்க செய்ய இந்த புதினம் முயல்கிறது. எழுத்தாளர் சிந்தித்தவாறே வாசகரும் சிந்திப்பாரேயானால் எழுத்தாளர் எடுக்கும் செய்தியினை ஏற்பது மட்டுமன்றி கடைபிடிக்க இயல்பாயாயின் அதுதான் ஒரு படைப்பின் வெற்றி என்று அழுத்தம் திருத்தமாக அருதியிட்டு கூறலாம். இந்த வகையில் பார்க்கும்போது வெற்றி புதினம் என்றே துர்கா மாதாவை சொல்ல வேண்டி இருக்கிறது.

துர்கா மாதா புதினத்தை எழுதிய சகோதரி ஜீவா இலக்கிய துறையை சார்ந்தவர் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞான துறையை சார்ந்தவர். மாணவர்களுக்கு மைக்ரோபயாலஜி பயிற்றுவிப்பவர். அத்தகைய ஆசிரியரும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு சிறப்புற செயல்பட்டிருப்பது சிந்தனைக்குரியது; பாராட்டிற்குரியது.

அண்மையில் பெண் எழுத்தாளர்கள் தங்களது நற்பார்வையை வீட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வெளி உலகத்திற்கும் பரப்புகிறார்கள். சமூகத்தில் ஊறிக் கிடக்கும் அவலங்களையும்; அநீதிகளையும் கண்டு கொதித்தெழுகிறார்கள். மிகவும் பலம் பொருந்திய தங்கள் பேனா முனைகளை கொண்டு அவற்றை தகர்த்தெரிய ஓயாமல் போராடுகிறார்கள். அத்தகைய வீர பெண் எழுத்தாளர்களில் ஜீவாவும் ஜீவித்திருக்கிறார். இவருக்கு நமது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.

எழுத்தாளர் ஜீவாவும் அவரது நண்பரும் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை செய்யும் பெண் மனியை பார்த்தனர். அவரை ஒரு புரட்சிகாரியாக உருவகப்படுத்திக் கொண்டனர். அவர்தான் துர்கா. அப்படி தொடங்கிய துர்காவின் பயணம் புதினம் முழுவதும் இடைவிடாமல் தொடர்கிறது. துர்காவின் செல்வாக்கு மற்ற பாத்திரங்கள் மீதும் பலமாக படர்ந்திருக்கிறது. பார்த்து, கவனித்து அனுசரிக்க வேண்டிய பாத்திரமாகவே துர்கா இந்த புதினத்தில் படைக்க பட்டிருக்கிறாள்.

துர்கா பாத்திரத்தை முதன்மையாக கொண்டு படைக்கப்பட்ட இப்புதினத்திற்கு துர்கா மாதா என்ற பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. புதினத்தின் இறுதி பகுதியில் துர்காவை துர்காமாதா என்றழைப்பதில் உள்ள ஞாயத்தை ஒரு பாத்திரத்தால் எடுத்தியம்பினார் ஆசிரியை.

துர்கா மாதா புதினத்தில் இடம் பெற்றிருக்கும் பிரச்சனைகள் முற்றிலும் இக்காலத்திற்கும் பொருந்துபவை. அன்றாடம் செய்தித் தாள்களிலும் டீவி நியூஸ் சேனல்களிலும் பெண்கள் மேல் நடத்தப்படும் பாலியல் கொடுமைகள் பளிச்சிடுகின்றன. அவற்றை அனைவரும் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள் ஆனால் உரிய முறையில் சிந்திப்பது கிடையாது. எனவே வாசகர்கள் சிந்தனை அவற்றின் பால் ஈர்ப்பதற்கு இந்த புதினம் முயல்கிறது.

வளர்ச்சி குன்றீய வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க பலர் புலம்பெயர்கிறார்கள். அங்கிருந்து இங்கு வரும் அவர்கள் மொழி பிரச்சனை உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். எங்கு எத்தகைய கொடுமை நடந்தாலும் அது அவர்களுடைய செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் குருட்டுத்தனமாகவே முடிவு செய்கிறார்கள். விளைவாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு நேரும் தொல்லைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அவல நிலை எழுத்தாளரின் இதயத்தை பிழிந்திருக்க வேண்டும். அத்தகைய வருத்தத்தில் இருந்து உதித்ததுதான் இந்த புதினம்.

வசந்தாவின் இரவு நேர வேலை, அவளது குழந்தையின் பாலியல் வன்கொடுமையும் அதை தொடர்ந்த கொலையுமாய் புதினத்தில் திரையை விலக்குகிறது. இந்த நிகழ்ச்சி அதிகபடி என்றுதான் தோன்றுகிறது. இதை தவிர்த்திருந்தாலும் பாதகம் இல்லை. மகாலெச்சுமியின் ஆறு வயது குழந்தையை வன்புணர்ந்து கொலைசெய்வதில் இருந்துதான் உண்மை புதினம் ஆரம்பம் ஆகிறது.

போலிஸ் கெடுபுடி மக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் போடுவது, தேவைக்கு அதிகமாக தண்டனை கொடுப்பது, குற்றத்தை நிருபிக்க அங்கும் இங்கும் பறந்து படாத பாடுபடுவது மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

லெட்சியத்தோடு வெளியே வந்த துர்கா அந்த லெட்சியத்திற்காகவே தன்னை ஒரு ஏழை தொழிலாளியாக மாற்றிக்கொள்வதும் அதனால் விளையும் கொடுமைகளை பொறுமையுடனே ஏற்றுக் கொள்வதும் போற்றற்குரியது.

நம் சமூகத்தின் அவலங்கள் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் போக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை பற்றி நீண்ட விவாதங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவையும் பல முறை இடம் பெற்றிருக்கின்றன. அவ்வாரில்லாமல் சுருக்கமாகவும் உருக்கமாகவும் இதயத்திற்கு நெருக்கமாகவும் சொல்லி இருக்க முடியும்.

சில நிகழ்ச்சிகள் ஒரு எழுத்து கூட பிசகாமல் இரண்டு மூன்று இடங்களில் இடம் பெற்றிருப்பது சாமான்ய வாசகர்களுக்கு குழப்பமாகவும் மற்றும் பல வாசகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையிலும் இருக்கலாம். எனவே அவற்றை பற்றி எழுத்தாளர் ஒருமுறைக்கிருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவரது மொழி அருமை. குறைக் கூற எப்படி முயன்றாலும் முடியாதென்றே சொல்லலாம்.

இந்த புதினத்தை படித்த ஆண் வாசகர்கள் பெண்களை பாலியல் கொடுமைப்படுத்த கூடாதென்று உறுதி மேற்கொள்ள நினைக்க தோன்றுகிறது. இதுவே இந்த புதினத்தின் வெற்றி என்று சற்றும் சளைக்காமல் கூறலாம்.

சகோதரி ஜீவா அவர்கள் மேன்மேலும் இத்தகைய புதினங்களை படைக்கவேண்டும். அவற்றை அவரே ஒருமுறைக்கு இருமுறை ஒரு திறனாய்வாளராக படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் புதினத்தின் தரம் வரவர உயர்ந்துவிடும்.

மறுபடியும் சகோதரி ஜீவாவுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்.


- முனிரெத்தினம் 
...........................
.

நாவலை பெற:


விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235

Wednesday 31 July 2019

துர்கா மாதா - நாவல் விமர்சனம் (அப்ஸரன் ஃபெர்ணாண்டொ)அன்புள்ள ஜீவா அக்காவுக்கு,

சென்னையிலிருந்து அப்ஸரன் ஃபெர்ணாண்டொ எழுதுகிறேன்.

எனது நண்பர் திருப்பதி மகேஷ் மூலமாகத்தான் உங்கள் ப்ளாக் [blog] அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது உங்களின் பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் புரட்சிகரமான சிந்தனையும் வித்தியாசமான அணுகுமுறைகளும் உங்கள் எழுத்துக்கு என்னை இரசிகனாக்கியது.

உங்களின் முதல்படைப்பான தற்கொலை கடிதம் என்ற சிறுகதைத் தொகுப்பை படித்திருக்கிறேன், அப்போதே உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலாமல் போனது. இப்போது நீங்கள் புதினம் [Novel] எழுதியிருக்கிறீர்கள் என்று நண்பர் மகேஷ் மூலம் கேள்விப் பட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, நண்பரிடம் கேட்டுப் பெற்று, படித்தும் முடித்துவிட்டேன். இதைக் குறித்து திரு மகேஷிடம் கூறியபோது, நூல் குறித்த என்னுடய பார்வையை / கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தார். அவரது யோசனையும், இந்த நாவலை படித்த பிறகு அது ஏற்படுத்திய விளைவுகளுமே என்னை இக்கடிதம் எழுதத் தூண்டியது.

நூல் குறித்து பேசுவதற்கு முன் சில விஷயங்கள்:

முதலில் என்னைப் போன்ற பார்வையற்றவர்களும் படிக்கக் கூடியவகையில் இந்தப் படைப்பையும் [துர்கா மாதா] இதற்கு முந்தய படைப்பையும் [தற்கொலை கடிதம்] மின் புத்தகமாக [E-Book] அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

இதனை தன் தொடர் வாசிப்பின் மூலமாகவும், உங்களைப் போன்ற சான்றோர்கள் நட்பின் மூலமாகவும் சாத்தியமாக்கிய மகேஷ் அவர்களுக்கும் நன்றிகள்.

விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

*************

துர்கா மாதா!

முதலில் இத்தகைய புதினத்தைப் படைத்ததற்கு என் நன்றிகள். ஏனெனில் உங்களைப் போன்ற புரட்சிகரமான எழுத்தாளர்களின் சீர்மிகு எழுத்துக்கள்தான் சமுதாயத்தைச் சீரமைக்கும் கருவியாக அமையும் என்பது என் கருத்து.

நூல் ஆரம்பத்திலிருந்தே [ஒரு சில வார்த்தைகள்] சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கூடவே இழையோடும் வலிகளும் துயரங்களும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா! என்ற ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் வரும் சிறுமி மலர் குறித்த காட்சிகளிலேயே, மலரையொத்த பெண்களும் சிறுமிகளும் கறுக்கி / கசக்கி போடப்படும் அவலத்தை நம் கண்முன்னே நிறுத்தி, இக்கதை கையாளப் போகும் கருவை மெதுவாய் நமக்குள் விளக்கும் / விதைக்கும் வித்தை சிறப்பு.

முதலில் ஒரு கோணத்தில் தொடங்கி பயணித்து, பின்னர் அதை முக்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு கோணத்திலிருந்து கதையை விளக்கி முடிச்சிக்களை அவிழ்த்திருக்கும் விதம் சுவையாக இருந்தது. இக்கதையின் நாயகியான துர்கா பெண்களின் திடமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தொட்டதற்கெல்லாம் கோபப்படும், அழுதுவிடும், இன்னும் இத்யாதி இத்யாதி இயல்புகளையெல்லாம் கொண்டிருக்கும் பெண்களிலிருந்து இவள் நிரம்பவே மாறுபட்டவள்.

தணக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் பாபுவைப் பற்றிச் சொல்லுவது, கழிவறைக்கு சென்றுவந்த பிறகு தன் வலியை உதட்டை அழுத்தி அடக்கிக் கொள்வது போன்ற இடங்களில் துர்காவின் தன்நம்பிக்கையும் மனதைரியமும் பயங்கரமாய் வெளிப்படுகிறது.

சீருடையை களைவதே தான் நிர்வாணமாக இருப்பதாக நினைக்குமளவிற்கு உணர்வுபூர்வமாய் தான் நேசித்த இயக்கத்தையே போதிய விளைவுகளை ஏற்படுத்தாத காரணத்தாலும் அதிலுள்ள குறைகளையும் பகிரங்கமாய்ச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியேறுவதும், தன் மேலாளரை நயமாய் கேன்டீனுக்கு அழைத்து தண்டிக்கும் இடத்திலும் துர்கா எந்த அளவிற்கு தான் தீர்க்கமானவள் என்றும் உடனடி விளைவுகளை விரும்புபவள் என்றும் புலப்படுத்துகிறாள். துர்கா மட்டுமின்றி, சுடரும் நிஷாவும் துணிச்சலான பெண்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குகிறார்கள்.

_________

நண்பர் மகேஷ் இந்தக் கதையைப் பற்றி கூறும்போது இது கம்யூனிசமும் ஃபெமினிசமும் கலந்ததொரு கதையென்றார். அது எப்படி சாத்தியம்!!! என வியந்தேன் நான். ஆனால் அதை மிகச் சிறப்பாய் சாத்தியமாக்கியிருக்கிறது உங்கள் எழுத்தும் நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கருவும்.

கதையின் முதல் சில வரிகளிலேயே அந்த கால ஆணாதிக்கம் பெண்களை வீட்டிலேயே அடைத்துவைத்தது ஆனால் இந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வேலைக்கு அனுப்பி சோம்பேறிகளாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து கொன்டிருக்கிறது என்ற வித்தியாசத்தை சிறப்பாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.

கதாபாத்திர அமைப்பும் அவர்களின் குணாதிசயங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் சந்தித்த / சந்திப்பவர்கள் போன்றேயிருப்பதால் கதை மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது. இடைஇடையே வரும் ஹிந்தி சொற்களும் வட இந்திய தமிழ் உச்சரிப்புகளும் அந்த மாந்தர்களூடே நம்மையும் உணர்வுபூர்வமாக உலவ விடுகிறது.

வட இந்தியர்கள் பெட்ஷீட் & பாத்திரங்கள் விற்க வந்தால்கூட ஒருவித பயத்தோடே அவர்களை பார்க்க வைத்த சில திரைபட காட்சிகளிலிருந்தும் பல செய்தித்தாள் செய்திகளிலிருந்தும் மாறுபட்டு, அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.

முதலாளித்துவ நெருக்கடி & ஆளும் வர்க்கங்களின் அதிகார வெறியாட்டம் போன்ற விஷயங்களைப் பட்டவர்த்தனமாய் பேசி, எத்தகைய கிடுக்குபிடிகளில் சிக்கிக் கொன்டு நம் சமூகம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நாவல். ஒரு முக்கியமான இடத்தில் [“இவ்ளோ சீரியசானப் பிரச்சினையை உங்க தமிழ்ச்சமூகம் எப்படி பார்க்குது தோழர்?” “தமிழன் உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் கொண்ட மூத்தக்குடி என்னும் பெருமிதத்தோடுதான்...” டாக்டர் கூச்சத்தோடு சிரித்தார்.] இரண்டே வரிகளில் கலாச்சாரம் பண்பாடு என்ற பொய் பிரச்சாரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது இந்த கதை.

அருப்புக் கோட்டை விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவற்றை இக்கதை தொட்டுச் செல்வதாலும் அவற்றிற்கான தீர்வுகளை பேசுவதாலும் நாவலை வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி, எதார்த்த உலகில் நாம் சில முக்கிய நண்பர்களோடு இவற்றை விவாதித்துக் கொன்டிருக்கிறோம் என்று உணரவைப்பதில் இந்நாவல் வெற்றிப் பெற்றிருக்கிறது.

குட் டச் [Good touch] பேட் டச் [bad touch] போன்ற விஷயங்களை விரிவாகவும் விவேகத்துடனும் பேசுவதால் அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல் என்ற தரத்திற்கு உயர்ந்து, இவற்றைக் குறித்த வழக்கமான கற்பிதங்களையும் கருத்து பிம்பங்களையும் உடைத்து, வேறொரு புதிய கோணத்திலும், வித்தியாசமான, சரியான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கற்பித்து பெரியவர்கள் பெரியவர்களாக இருந்தால் குழந்தைகளும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்ற கருத்தை அழகாய் புரியவைப்பதில் இந்நாவல் தனித்து நிற்கிறது.

உரிமைகள், கடமைகள், வாழ்வியல் போன்ற இத்தியாதிகளில் ஆண்களிடமிருந்து தனித்து நிற்பதோ அல்லது ஆண்களை மிஞ்சி நிற்பதோ அல்ல பெண்ணியம், மாறாக அவர்களுக்குச் சமமாய் / நிகராய் நிற்பதே நிஜமான பெண்ணியம் என்றக் கருத்தைத் தரமாய்ப் புரியவைப்பதில் இந்நாவல் உயர்ந்து நிற்கிறது.

நாவலின் இறுதியில் துர்கா புல்லட்டில் கம்பீரமாக வரும் காட்சி வேட்டைக்கு புறப்பட்ட சாமி குதிரையேறி செல்வதை கண்முன்னே கொண்டுவருகிறது. கதை அதிகாலை நேரத்தில் ஒரு துயரக் காட்சியோடு தொடங்கி, ஒரு இரவு வேளையில் மகிழ்ச்சியோடும் துர்காவின் புன்னகையோடும் முடிவடைந்ததாக சித்தரித்திருந்த விதம் இந்நாவல் இருட்டில் மறைந்திருக்கிற / மறைக்கப்பட்டிருக்கிற துயரங்களையும் வேதனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவைகளுக்கான தீர்வையும், இவற்றிற்கு காரணமானவர்களுக்கே இருளை திருப்பித் தரவேண்டும் என்ற கருத்தை அழகாய் விளக்குகிறது.

இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றா்ல்,

துஷ்டர்களை துடைத்தெரிய துரிதமாய் புறப்பட்டால், இனி துன்பங்களைத் துடைக்காமல் துளியும் ஓயமாட்டாள் இந்த துர்கா மாதா.

- அப்ஸரன் ஃபெர்ணாண்டொ


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235

Tuesday 18 June 2019

துர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்

இது நாகர்கோவிலைச் சேர்ந்த உதவிப்பேராசிரியையாய் பணியாற்றும் ஜீவாவின் முதல் புதினமா? நம்ப முடியவில்லை (என்ன ஆழமான கருத்துச்செறிவுமிக்க விவாதங்கள்)!

இவரது “தற்கொலைக்கடிதம்” கதைத்தொகுப்பிலும், வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் சிரிப்பு நடையில் தனது சொந்த அனுபவங்களையும் சீரியசான நடையில் பெண்களின் துன்பங்களையும் இன்னபிற சமூகச்சிக்கல்களையும் தீர்வுகளோடு அலசுவதை நாம் படித்திருக்கிறோம்.

தோழர்களுடனான விவாதங்களுக்குப்பின் மேலும் எவ்வளவு ஆழமாக சமூகச்சிக்கல்களை புரிந்திருக்கிறார் என்பதற்கு இப்புதினமே சான்று.

வட இந்தியர்களை நம் பொழப்பிற்கு வேட்டு வைப்பவர்கள், நம் வேலைகளையெல்லாம் பறிப்பவர்கள், பாலியல் குற்றமிழைப்பவர்கள் என்ற பிரச்சாரங்கள் வைக்கப்படும் இந்த காலக்கட்டத்திற்கு மிகப்பொருத்தமான புத்தகம் இது.

வட இந்திய ஏழைகள் யார்? எந்தெந்த சூழ்நிலைகளில் வேலைக்கு இங்கே வருகிறார்கள்? அரசியலும் அதிகாரவர்க்கமும் கொண்ட முதலாளித்துவ சமூகம் அவர்களை எந்தெந்த இழிநிலைகளுக்கு தள்ளுகிறது? கணத்திற்கு கணம் பெருகிவரும் பாலியல் குற்றங்களை எப்படி தடுப்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இப்புத்தகம்.

"உத்திரப்பிரதேசம் குலாபி கேங்க்" இயக்கம் போன்ற ஜார்க்கன்டில் ஒரு போராளி இயக்கத்தில் உன்னத லட்சியத்தோடு போராடுபவள் குறும்பும் குதூகலமும் தைரியமும் நிறைந்த கதாநாயகி துர்கா. அதிகாரவர்க்கச்சுரண்டலை எதிர்த்து யாரைக்காக்க முனைகிறார்களோ அம்மக்களே இவர்களை நம்பாமல் ஏன் எங்கே போகிறார்கள் என்ற கேள்வியோடு ரியாசோடு தனக்கிருந்த காதலையும் தியாகம் செய்து தமிழகம் நோக்கி காண்ட்டிராக்டர்களோடு புறப்படுகிறாள் நாயகி.

இங்கு வந்தப்பிறகு அவள் சந்திக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பார்ப்புகளோடு வந்தவர்களை மனசாட்சிக்கு புறம்பானவேலைகளை நோக்கி தள்ளப்படும் நிலைமைகள், பணமும் அதிகாரமும் அவர்களை பந்தாடும் விதங்கள், தோழர்களோடு விரிவாக விவாதித்து அவள் கண்டடையும் தீர்வுகள், இதற்கிடையில் அவளே ஒரு மாபெரும் அரசியல் சூதாட்டவழக்கில் சிக்கி என்ன ஆகிறாள் என்பதே கதைச்சுருக்கம்.

சமூகநீதியை வலியுறுத்தும் உயரிய போராளி இயக்கங்களையும் மீறி நுகர்வுவெறியை தூண்டிலாகக் கொண்டு முதலாளித்துவம் எப்படி மக்களை பணத்தை நோக்கி பைத்தியமாக ஓடவைத்து எந்த எல்லைக்கும் சென்று எப்பாவத்தையும் செய்யவைக்கிறது என்று தோழர்களால் மிகத்தீவிரமாக விவாதிக்கப்படும் பக்கங்கள் இன்றைய சமூகம் முழுமையும் படிக்கவேண்டிய பொக்கிஷங்கள்.

இரண்டு வயதுக் குழந்தைகளுக்கே தொடுகைகளின் வகைகளை (good touch, bad touch) கற்றுக்கொடுப்பதன் அறிவீனத்தை எடுத்துக்காட்டி இவ்வகை விஷயங்கள் எப்படி நம் பண்பாட்டிலேயே விளையாட்டுச் சீண்டல்களாக மனதில் பதிய வைக்கப்பட்டுகின்றது என்று நிஷா எடுத்துரைக்கும் காட்சி படைப்பின் உச்சம்.

துர்காவைக் காக்க ரியாஸ் உட்பட நண்பர்கள் செய்யும் தந்திரங்கள் பக்கங்களின் வேகத்தைப் பெருக்கி வாசகர்களை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைக்கிறது.

புதினம் மிக விரைவாக முடிந்துவிட்ட உணர்வால் அடுத்த புத்தகங்களில் எங்கள் எதிர்ப்பார்ப்புகளை இங்கே பதிவுசெய்கிறோம்.

1. பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட புள்ளிவிவரங்களை வைக்கும் ஆசிரியரின் பிரதிபலிப்பாக தெரியும் சுடரொளியின் கூற்றுகள் "சமூக ஊடகங்களின் பெருக்கத்தாலேயே இயல்பாக இருப்பவை பெரிதுபடுத்தப்படுகின்றன" என்ற சிலரின் கூற்றுகளுக்கு பதிலளிப்பதாக அடுத்த படைப்பு இருக்கவேன்டும்.

2. பாலியல் குற்றங்களை செய்யும் ஆண்களை கன்டுகொள்ளாமல் பெண்களே மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள் என்று கூறும் நாம் இதே நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமையாகி சுரன்டலின் பிரதிதிகளாய் செயல்படும் சில மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் எப்படி தூய சிந்தனையுள்ளவர்களாக மாற்றுவது என்பதையும் எடுத்துக்காட்டுவதாக உங்களின் அடுத்தடுத்த படைப்புகள் இருக்கவேண்டும்.

3. கல்வியை விளையாட்டோடும் உடற்பயிற்சியோடும் சுவாரசியமாக தரவேண்டும் என்று பள்ளிகளுக்கு சொல்லும் நாம், செயலிகளும் ரோபோக்களும் பயிற்றுவிக்கப்போகும் வரும் யுகத்தில் எப்படி இச்சிந்தனைகளை செயலாக்கப்போகிறோம் என்பதை பேசும் படைப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

4. தனிநபர் தரவுகளைக்கொண்டு தனிநபர் விருப்பங்களை வடிவமைக்கும் வல்லமையுள்ள இன்றைய முதலாளித்துவ கருவிகளை நம் உயர்ந்த பாலியல் குற்றமற்ற சீரியசிந்னைகள் கொன்ட மாந்தர்களை உருவாக்க எப்படி உபயோகிக்கப்போகிறோம் என்று எடுத்துக்காட்டும் உயரிய படைப்புகளை எதிர்ப்பார்கிறோம்.

இத்தகைய ஆழ்ந்த சின்தனைகளையும் எக்கச்செக்க எதிர்ப்பார்ப்புகளையும் தூண்டிய உங்கள் துர்காமாதாவிற்கு எங்கள் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.

நீங்கள் மென்மேலும் பற்பல படைப்புகளை உருவாக்கி சமூகத்தைச் செப்பனிட்டு வெற்றிபெற எங்கள் உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
நன்றியுடன் அரவிந்த் 
 
 
நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235
 

Wednesday 12 June 2019

ஜீவாவின் துர்கா மாதா - எனது பார்வையில்... கவிப்பூரணி

என்னோட நாவலோட word format மகேஷ்கிட்ட குடுத்து படிச்சிட்டு கருத்து சொல்லுமானு கேட்டுருந்தேன்.
அவன் அத அவன் நண்பர்களோட பகிர, இப்போ அவன் நட்பு கவி பூரணி அத படிச்சிட்டு ரிவியூ எழுதி அனுப்பி இருக்காங்க.
என் நாவலுக்கு வந்த முதல் ரிவியூ இது. படிச்சதும் அவ்ளோ சந்தோசம் எனக்கு. 

நல்ல உற்சாகமான வார்த்தைகளோடு துவங்குகிறது இந்நாள்....
...................


Novel என்ற ஆங்கிலச் சொல் ‘புதுமை’யைக் குறிப்பதாகும். அந்த சொல்லிற்கு ஏற்றார்போலவே தோழி ஜீவா அவர்களால் எழுதப்பட்ட ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவல் நான் இதுவரை படித்திருப்பதில் மிகவும் புதுமையான கதைக்களத்தையும் தற்கால நடைமுறையைக் குறித்த மிக வித்தியாசமான மற்றும் ஆழமான பார்வையையும் கொண்டு ஒரு புரட்சிகரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது.


எனக்கு தோழி ஜீவா அவர்களை அறிமுகம் செய்து அவர்களது வலைத்தளத்தில் வெளிவந்த‘பாலியல் கல்வி’ தொடரையும் படிக்கத் தூண்டியது தம்பி திருப்பதி மஹேஷ்தான். அந்த தொடர் குறித்தே எனது கருத்துக்களை எழுதி ஜீவா அவர்களுக்கு மின்னஞ்சலாவது அனுப்பிவிட வேண்டுமென மிகவும் ஆர்வத்தோடு இருந்தேன். சில காரணங்களால் அது நடைபெறாமலே போய்விட்டது. அவர்களது ‘தற்கொலைக் கடிதம்’ புத்தகம் கூட என்னிடம் இருக்கிறது. அதற்கும் கூட என்னுடைய கருத்துக்களைச் சொல்லிவிட எண்ணி இருந்தேன். இன்னும் படித்த பாடுதான் இல்லை. ஆனால், அதைவிடவும் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் அவர்களது எழுத்து குறித்ததான எனது பார்வையை முன்வைக்க நல்லதொரு வாய்ப்பு மீண்டும் தம்பி மஹேஷ் மூலமே கிடைத்திருக்கிறது. ‘துர்கா மாதா’ எனும் இந்த நாவலையும் அவரே என்னிடம் கொடுத்து நேரம் கிடைக்கையில் படிக்கும்படி சொல்லி இருந்தார்.

தன்னுடைய முதல் நாவலை இவ்வளவு குறுகிய காலத்தில் சிறப்பானதொரு படைப்பாக அமைப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது. ஆனால் தோழி ஜீவாவிற்கு அது மிக நன்றாகவே தன்னுடைய ஆர்வத்தோடும் பலரது துணையோடும் சாத்தியமாகி இருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 முன்னுரையைப் படிக்கும் போதே படைப்பு பற்றிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மாற்றங்களை எதிர்நோக்கும் ஒரு பெண்ணாக எனக்குள் எழுந்திருந்தது.
பொதுவாகவே நாவல்கள் என்றதும் ஒரு சாதாரணமான அல்லது ஒரு பாமர வாசகியாக நான் எப்போதூமே கதைக்கருவைவிட கதையைத்தான் அதிகம் எதிர்பார்ப்பது வழக்கம். படிக்கும் மகிழ்விற்காக மட்டும் படிப்பதுதான் எனது மனப்போக்கு. ஆனால் முதல் முறையாக இந்த நாவலின் முன்னுரையைப் படித்த போது கதைக்கருதான் இந்த நாவல் படிப்பதற்கே ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்தது என்பேன்.

முழு படைப்பையும் வாசித்தாகிவிட்டது. ஒரு த்ரில்லர் படம் போல சீட் நுனியில் உட்கார வைத்து மிக மிக அழுத்தமான பெண்ணியம் பேசி இருக்கிறார் எழுத்தாளர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் மிக அதிகமான அளவில் தலை தூக்கி இருப்பதற்கான ஆணி வேர் காரணங்களாக பணபலம், முதலாளித்துவம், நுகர்வு கலாச்சாரம், அரசியல், சமூகப்போக்கு என்று பலதரப்பட்ட விசயங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் நடைமுறையைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். பெரும்பாலும் இறந்தகால படைப்புகளையே படித்து வந்த எனக்கு, இந்த நிகழ்காலப் படைப்பு படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.

2 இடங்களை மிகவும் குறிப்பிட்டுப் பாராட்டியே ஆக வேண்டும் என்று எனக்குத் தோன்றிய விசயங்களை இங்கே பகிர விழைகிறேன்.
பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து அதை விவரித்திருக்கும் இடம் மிகச் சிறப்பு. அதன்பின்னர், good touch bad touch பற்றி துர்கா முன்வைப்பதாக ஆசிரியர் முன்வைத்த இடம் சபாஷ். safe zone என்ற பெயரில் நமது சமு்தாய அமைப்புதான் காமம் குறித்தான தூண்டுதலைப் பிள்ளைகளிடம் உருவாக்குகிறது என்பதும் சுமை ஆகிவிட்ட கல்வி முறை பற்றியும் மறந்து போய்விட்ட விளையாட்டுலகம் பற்றியும் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படும் குழந்தைகள் உலகம் குறித்தும் மிகச் சிறப்பாக மனோதத்துவ முறையில் நடைமுறைக்கேற்ற பரந்துபட்ட பார்வையை வைத்திருக்கிறார் ஆசிரியர். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத ஒரு சமுதாய அமைப்பில் நிச்சயம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அந்த சமூகமேதான் திணித்து அதன் விளைவாக அவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக வழிவகுக்கிறது என்பதை சிறப்பாக அணுகி இருப்பதோடு பள்ளிக்கூடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதிக்கும் ஒரு இடமாக இருக்க வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தனமாகக் கூறி இருக்கிறார்.

இப்போது கதைக்கு வரலாம். புலம்பெயர்ந்து தமிழகம் வந்து பிழைப்புத் தேடும் தன் மாநிலத்தவர் படும் துன்பங்களை நேரடியாக தானே அனுபவித்துப் பார்த்து அவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களைப் பாதுகாக்க ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தவிப்போடு வரும் ஒரு ஜார்கண்டியப் பழங்குடிப்பெண்ணான துர்கா சந்திக்கும் போராட்டமே இப்புதினத்தின் சுருக்கமான கதைக்களம். கதாநாயகி துர்காவை மிகவும் எளிமையான துணிச்சலான, குரும்புக்காரத்தனமான மற்றும் அன்பு வாய்ந்த இயல்பான பெண்ணாகப் படைத்திருப்பது சிறப்பு. அநேகம் பெண்கள் காணும் சுதந்திரக் கனவை துர்காவைப் பார்த்ததில் நிஜத்தில் கண்ட திருப்தி எனக்கு.

சு்டரொளி, நிஷா மற்றும் மருத்துவர் கதாப்பாத்திரங்களும் கதைக்கு பலமூட்டின. என்னவோ தெரியவில்லை, இதை வெறும் கதையாக மட்டும் என்னால் ஏதோ கடந்துவிட்டு போக முடியாது என்று தோன்றுகிறது. படித்துவிட்டு சுடச்சுட எழுதித் தீர்க்க வேண்டும் என்பதுபோல் ஏதோ தோன்றுகிறது. ஆனால் அவை கூட வார்த்தைகள் கொண்டு சொல்லுவது மிகக் கடினம்தான். உணர்வுப்பூர்வமாக எங்கேயோ மிகவும் ஆழமாகத் தொட்டுவிட்டீர்கள் ஜீவா.
பழமைவாதத்தை பெண்களால் வெறுக்க மட்டுமே முடிகிறதே தவிர, அதிலிருந்து எப்படி அவர்களுக்கான வாழ்வை அவர்களே தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் அந்த பழமைவாதத்திலேயே ஊறிப்போய்விடுகிறார்கள் என்று எதார்த்தத்தை சுதந்திர உணர்வை நேசிக்கும் பெண்களின் ப்ரதிநிதியாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். அருமை...

அதே போல் குடும்ப சூழ்நிலைகளால் எப்படி பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை சஞ்சனா மற்றும் மகா பாத்திரங்களின் வாயிலாகப் பேசி இருக்கிறார். வட மாநிலத்தவர் நம் ஊரில் சந்திக்கும் ப்ரச்சனைகள் அல்லது நமது ஆட்கள் அவர்கள் குறித்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை எல்லாக் கோணங்களிலும் இயல்பாக அலட்டலில்லாமல் சொல்லி இருக்கிறார். ஒரு பக்கம் பிழைப்பு தேடி வந்து அடிமைப்பட்டிருப்பவர்கள், மறுபக்கம் வடக்கிலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்துபவர்கள் என்று வட மாநிலத்தவரின் இரு துருவங்களையும் கதை படம் பிடித்துக் காட்டுவது நேர்மை.

பெரும்பாலும் கதைகளில் வரும் காதல் கூட மிகவும் பழமைவாத சாயப்பூச்சான possessive - ஆகவே இருக்கும். ஆனால், துர்கா ரியாஸ் காதல் மிகவும் வெளிப்படையாகவும் சு்தந்திரமானதாகவும் இருந்தது குறித்து மகிழ்ச்சி. கதையில் ஒரு சமுதாயத்தின் இயக்கத்திலிருக்கும் ஏறக்குறைய எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருந்ததோடல்லாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு சிறு விசயங்கள் கூட அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல படைப்பைப் படித்த மகிழ்ச்சி மட்டுமல்லாது ஒரு நல்ல ஆழமான பார்வையும் பொறுப்பும் கொண்ட துணிச்சலான, நேர்மையான பெண் எழுத்தாளரின் உணர்வை உணர்ந்த திருப்தி இந்த நாவலைப் படிக்கும் ஒத்த சிந்தனாவாதிகளுக்கு ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும். என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் பாரதியார், ஜெயகாந்தன் வரிசையில் ஜீவாவின் துணிச்சல் பாராட்டிற்குரியது. இந்த நாவல் நிறைய பெண்கள் படிக்கும்படியாக சேர வேண்டும் என்பதும் தோழி ஜீவா மென்மேலும் பல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தர வேண்டும் என்பதும் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு துணிச்சல் மிக்க பெண் எழுத்தாளர்கள் மென்மேலும் சுதந்திரமா்க எழுத்துலகிற்கு வர வேண்டும் என்பதும் எனது ஆசை. hats of to you jeeva... வாழ்த்துக்கள்.

Saturday 8 June 2019

ஜீவாவின் "துர்கா மாதா" - நாவல் வெளியீடு


சிறு வயதில் எனக்குள் சிந்திக்கும் விதையை தூவியது இன்று சொத்துடமை சமூகத்தின் ஒரு பிரதிநிதியாய் இருக்கும் என் அப்பா தான். சொத்தில் எனக்கும் சமபங்கு உண்டென பேசித்திரிந்த காலங்களில் தட்டிக்கொடுப்பார். அது ஒருகாலம்.

காலமாற்றத்தில் சிக்கி சூழ்நிலைக்கைதியாக அடைந்துக் கிடந்த நேரம் இந்த சமூகம் பெண்களை பகடைக்காயாய் வைத்து ஏன் காய் நகர்த்துகிறதென்று என் மனதுக்குள் நிறைய கேள்விகள் எழும்.

ஒரு குடும்பத்தின் மொத்த மானமும் அந்த வீட்டின் பெண்களின் தொடைகளுக்கிடையில் இருப்பதாய் பூச்சி காட்டும் இந்த சமூகத்திலிருந்து விலகி என் பார்வை விசாலமான போது நான் சில பாடங்களை கற்க ஆரம்பித்தேன்.

பெண் என்பவள் அவளுடைய சிரிப்பு, கோபம், அழுகை, காதல், காமம் அத்தனையையும் இயல்பாய் கடக்க வேண்டுமென்ற புரிதல் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் என்னை நான் மீட்டெடுத்தேன்.

நாம் மீள்வது பெரிதல்ல, ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு கைகொடுத்தாக வேண்டும். அதுதானே சரியாக இருக்க முடியும்?

ஆனால் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வதென்ற சரியான பாதை தெரியாமல் திணறிக் கிடந்தேன்.

பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் வேட்டையின் போதும் அதற்கு காரணகர்த்தாவாக இந்த சமூகம் பெண்களையே கைகாட்டும். அவர்களுக்கே தடைகளிடும். அக்கறை என்கிற பெயராய் அடக்குமுறையை ஏவி விடும். இவை என்னை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும். எனக்கு இந்த அச்சத்துக்குள் மூழ்கிக்கிடக்க விருப்பம் இல்லை. தண்ணீருக்குள் இருந்து திமிறி எழுந்து பெரும் ஆசுவாசம் கொள்ளவே விரும்பினேன் நான்.

முற்போக்கு சிந்தனைவாதிகள் என சில ஆண்களின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களில் உடன்பாடில்லாமல் பின் என்னதான் விடுதலை என மூச்சுத் திணறியிருக்கிறேன். ஏனெனில் அவை அத்தனையும் பெண்ணை இன்னும் அவர்களுக்கு அடிமையாய், மேலும் சொல்லப்போனால் பாலியல் சுரண்டலுக்கு தான் வழிவகுக்கும்.

ஜெனவரி மாதத்துவக்கத்தில் இது குறித்து தோழர் திருப்பூர் குணா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் புரட்சிகர கட்சிகளில் பெண்களை மதிக்கும் விதம் பற்றி கூறினார். அதோடு தோழர் இரா. பாரதிநாதன் எழுதிய “தறி” நாவலையும் படிக்க கொடுத்தார். இதன் மூலம் புரட்சிகர கட்சிகளின் முக்கியத்துவமும் அவற்றின் அவசியமும் எனக்கு மெல்ல மெல்ல புரிபட ஆரம்பித்தது.

பின் ஒரு நாள் அவரும் நானும் ஒரு உணவகத்தில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த போது ஒரு வடநாட்டு பெண் உழைப்பாளியை பாத்தேன். எங்களுக்கு முன்னே எச்சில் தட்டுகளை அடுக்கி மேசைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் தோழர் திருப்பூர் குணாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

“இந்த பெண்ணும் கூட ஒரு போராளியாக இருக்கலாம். யார் கண்டது?”

இந்த வார்த்தைகள் தான் எனக்குள் முதலில் ஒரு சிறுகதையை தோற்றுவித்தது.

ஆம். இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் மண்டையை குடைந்துகொண்டிருந்த போது, என்மனதில் சட்டென வந்து ஒட்டிக்கொண்டது “குலாபி கேங்க்”. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள பூந்தேல்கண்ட் பகுதியில் பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. தற்போது 55 வயதாகும் சம்பத் பால் என்கிற பெண்மணியால் 25 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கிட்டதட்ட ஒன்றரை இலட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

துர்கா என்னும் பெயருடைய அன்று நாங்கள் பார்த்த அந்த வடநாட்டுப் பெண்ணையே கதாநாயகியாக கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரத்தை நான் அந்த சித்தரித்திருந்தேன். அதனை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அதைக்கேட்டதும் அவர் அது ஒரு நாவலின் தன்மையை கொண்டிருப்பதாக கூறினார்.

அப்பொழுது தான் சில குரல்கள் அனைவரின் மனங்களையும் ஆட்டிப்பார்த்தன. பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களால் எப்படி சூழப்பட்டுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கிய குரல்கள் அவை. உடலும் மனமும் நடுங்கிப் போனது. ஒருபுறம் அதை பற்றிய கொந்தளிப்புகள் இருந்தாலும் அதற்கு காரணக்கர்த்தாவாக பெண்களின் ஒழுக்க விழுமியங்கள் மீதே விரல்கள் சுட்டப்பட்டன. மிகப்பெரிய கொடூரத்தை, அதன் மீதான கொந்தளிப்பை இந்த குற்றசாட்டு எப்படி நீர்த்துப் போக வைத்து விடுகிறது? அதிர்ச்சி தான் இல்லையா?

மூன்று இரவுகள் உறக்கமில்லாமல் கழிய அந்த இரவின் ஒரு நாள் நானும் தோழர் திருப்பூர் குணாவும் நீண்ட விவாதத்தில் இருந்தோம். அமைப்பு, அரசியல், இலக்கு, நடைமுறை என விவாதமும் விமர்சனமும் சண்டையும் நடந்ததுகொண்டேயிருந்தது.

அந்த சண்டையில் கொஞ்சம் அரசியல் பிடிபட தொடங்கியது. பெண்களின் அதிகாரத்தை உத்தரவாதபடுத்துகிற அமைப்பினால் மட்டும்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற உண்மை புரியவந்தது. இப்போது சண்டை ஓய்ந்து இந்திய புரட்சிகர இயக்கங்கள் மீது அக்கறை உருவானது. இந்த பிரச்சனைக்கு நம்மால் என்ன செய்ய முடியுமென யோசித்தோம். அதனை “பொள்ளாச்சி பயங்கரம் – என்ன செய்ய வேண்டும்” என்ற புத்தகமாக்கினோம்.

இந்த புத்தகம் என் சிந்தனைகளை மேலும் வலுவாக்கியது.

முடிந்தவரை சட்ட ரீதியாகவும் தேவைப்பட்டால் தடி கொண்டும் காரியம் சாதிக்கும் இந்த “குலாபி கேங்க்” போன்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டிற்கும் வேண்டுமென்ற எனது விருப்பத்தை தோழர் திருப்பூர் குணாவிடம் தெரிவித்தேன்.

அப்புறமென்ன?

அதன்பிறகு பொள்ளாச்சி பயங்கரம் மட்டுமில்லாது பெண்களின் பிரச்சினைகள் அனைத்தையும் எப்படி பார்ப்பது என்ற எனது பார்வை மாறியது. பின் அதை குறித்து தொடர் விவாதங்கள் செய்தோம். தோழர் திருப்பூர் குணா அவருடைய கட்டுரைகள் சிலவற்றை அனுப்பித் தந்து படிக்கத் தந்தார். சிறுகதை மெல்ல மெல்ல ஒரு நாவலாக கருக்கொள்ள துவங்கியது.

இதோ அந்த சிறுகதை இப்பொழுது ஒரு நாவலாக மாறிவிட்டது. கதாப்பாத்திரங்களுக்கு பெயர்கள் தேவைப்பட்ட பொழுது திருப்பூர் குணாவே அவர் நண்பர்களின் பெயர்களை பரிந்துரைத்தார். அதை தடைசொல்லாமல் அங்கீகரித்த நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.

ஆரம்பத்தில் மிகவும் தயங்கி தயங்கித்தான் எழுதினேன். ஆனால் அதை இடைவிடாது நச்சரித்து முழுமையாக்கியதில் திருப்பூர் குணாவின் பங்கு முக்கியமானது.அவருக்கு என் அன்பும் நன்றியும்...

இதோ வரும் 16/06/2019 அன்று லயோலா தொழிற்கல்வி வளாகம், ஏ ஏ ரோடு, மதுரை (தேம்பாவனி இல்லம் அருகில்) வைத்து மாலை நான்கு மணிக்கு நாவல் வெளியிடப்படுகிறது.

தலைமை:                                           தோழர் சுரேஷ்  

நிகழ்ச்சித் தொகுப்பு:                           தோழர் முத்துகிருஷ்ணன்
                                                             - மாநில ஒருங்கிணைப்பாளர்,                                               -                    
                                                                                         ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவை                              
               
வரவேற்புரை:                                      தோழர் நிஷா - WSB Rebels - பெண்கள் குழு

வாழ்த்துரை:                                         தோழர் ஸ்ரீரசா - மாநில துணைச்செயலாளர்
                                                            - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
                        
                                                               தோழர் முரளி - அகில இந்தியச் செயலாளர் 
                                                                                    - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

                             
நூல் அறிமுகம்:                                    தோழர் மதி கண்ணன் - அமைப்புச் செயலர்  
                                                                                   - மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

                                                           
வெளியிட்டு உரையாற்றுபவர்:            தோழர் செல்வி - மனிதி - பெண்கள் அமைப்பு

பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்:   தோழர் இரா. காமராசு -  பொதுச்செயலாளர் -                                                                  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                                                         
ஏற்புரை:                                                         தோழர் ஜீவா - நூலாசிரியர்

நன்றியுரை:                                                    தோழர் திருப்பூர் குணா
                                                                 - பொன்னுலகம் புத்தக நிலையம்      

வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.... 


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235
Thursday 10 January 2019

கடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வைகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை
.....................................................
ஆசிரியர் சப்திகா
............................முதல்ல கடலோடி கதைகள் எழுதின சப்திகாவுக்கு என்னோட வாழ்த்துகள். எழுதுறதுக்கு ஆர்வம் இருக்குற பலபேர் அத எழுதி புத்தகமாக்குற முயற்சியில ஈடுபடுறது இல்ல. சப்திகா அந்த ஆர்வத்த புத்தகமாக்கி இருக்கிறார். அந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள். ஒரு கதையை பத்து பதினஞ்சு பக்கம் எழுதி சிறுகதைன்னு சொல்றவங்க மத்தியில அறுபத்தி ஆறு பக்கங்கள்ல பத்து கதைகள குடுத்து சிறுகதைகள தன்னால திறம்பட எழுத முடியும்னு நிரூபிச்சு இருக்குறாங்க சப்திகா.

அதுமட்டுமில்லாம காலம்காலமா மக்கள்கிட்ட வாய்வழி புழங்கிகிட்டு இருக்குற கதைகள மீனவ மக்களோட வட்டார பேச்சு வழக்குலயே ஆவணப்படுத்துற அற்புதமான முயற்சியில ஈடுப்பட்டுருக்கார். முக்கியமா “போக்காளி குடும்பம்”த்தை சொல்லலாம். பேய், பிசாசு பூதம் பத்தியான கதைகள் காலாகாலமா நம்மோடவே உலவிட்டு வர்ற கதைகள். இப்படி மக்கள்கிட்ட இருக்குற நாட்டுப்புற கதைகளை ஆவணப்படுத்துறதுங்குறது பாராட்டுக்குரியது.

இனி கதைகள எடுத்துகிட்டா அது கிருஸ்தவ மத நம்பிக்கை கொண்டதாவும் அத உயர்த்தி பிடிக்குறதாகவும் அது மேல எழுத்தாளர் கொண்ட அதீத பற்றாவும் வெளிப்படுது. இது எழுத்தாளர் கிருஸ்தவரா இருக்குறது ஒரு காரணம்னா, இன்னொரு காரணம் குமரி மாவட்டத்துல மத அரசியல் மக்கள்கிட்ட அதிகமா செல்வாக்கு செலுத்துறது இன்னொரு காரணம். ஏன்னா ஒரு மதத்தை சார்ந்த ஒருத்தர் அவர் மதத்தை மட்டுமே சார்ந்து எழுதணும்னா மதம் தாண்டிய கருத்துகள் எதுவுமே வர முடியாது. ஆனா மதம் தாண்டிய கருத்துக்கள் தான் சமூகத்துல நல்ல விசயங்கள கொண்டு வருது.

எழுத்தாளர் சப்திகாவ பொருத்தவரைக்கும் அவர்கிட்ட மதம் சார்ந்த கருத்துகள் இருக்குறது எத குறிக்குதுனா குமரி மாவட்டத்துல மதம் சார்ந்த விசயங்கள் பெரிய அளவுல தாக்கம் செலுத்துறத குறிக்குது. அதை தாண்டிய பார்வை இன்னும் சப்திகாவுக்கு வரல.

ஒரு எழுத்தாளரோட கடமை என்னனா தான் காதால கேட்டது, தான் உணர்ந்தது, இத எல்லாத்தையும் மட்டும் மக்களுக்கு சொல்றது இல்ல. இதனால மக்களுக்கு என்ன பயன் வருது அப்படிங்குறதயும் சேர்த்து தான் எழுதணும். அப்படி எழுதலனா இவங்க ஒரு விசயத்த அப்படியே இன்னொருத்தருக்கு கடத்துறவங்களா மட்டும் தான் இருக்க முடியும். இதுவே எழுத்தாளர்ன்னு வரும் போது வெறும் அழகியலை மட்டும் சொல்லாம மக்களுக்கு அத பயனுள்ளதா மாத்துறதாகவும் இருக்கணும்.

இன்றைய சூழல்ல இந்தியாவும் தமிழ்நாடும் என்ன பிரச்சனைய எதிர்க்கொண்டுட்டு இருக்குதுனா மத பயங்கர வாதத்த எதிர்கொள்ளுது, கார்பரேட் கம்பனிகளோட நெருக்கடிகள எதிர்கொள்ளுது, இத அடிப்படையா கொண்ட சக்திகள் மக்கள்கிட்ட பண்ணிட்டு இருக்குற மோதல்கள எதிர்கொள்ளுது, முக்கியமா ஜாதி பயங்கரமா செல்வாக்கு செலுத்திகிட்டு இருக்கு, ஜாதிய அடிப்படையா கொண்டு அன்றாடம் கொலைகள் நடந்துட்டு இருக்க கூடியதா இருக்கு, இப்போ இருக்குற சமூக சூழல்கள், வேலை நெருக்கடிகள்னால குடும்பங்கள் சிதையுற போக்கு அதிகரிச்சுட்டு இருக்கு.

இந்த விசயங்கள மக்கள்கிட்ட கொண்டுப்போய் சேர்க்கணும், இந்த மாதிரியான சூழல்கள மக்கள் புரிஞ்சுக்கணும், புரிஞ்சுகிட்டு தங்களுக்கான வாழ்க்கைய ஒழுங்குப் படுத்திக்கணும்ங்குற அக்கறை பெரும்பாலான எழுத்தாளர்கள்கிட்ட இருக்கு. ஆனா அதே நேரத்துல குமரி மாவட்டத்துல அந்த சூழல் கம்மியா தான் இருக்கு. ஏன்னா குமரி மாவட்டம், அதோட விசேஷ தன்மை மதத்தை அடிப்படையா கொண்டிருக்குது. இங்க இருக்க கூடிய எல்லாமே வந்து மத தன்மையோட தான் இருக்குது. அது ஏழைகள் பணக்காரர்கள்னு இருந்தாலும் அப்படி தான் இருக்குது.

இதுக்கு காரணம் என்னன்னா பெரும்பாலும் இந்த மதங்கள் பாவ புண்ணியத்தையே தான் அடிப்படையா கொண்டு இயங்குது. புண்ணியம் செய்தவன் எல்லாம் பணக்காரனா இருப்பான், பாவம் செய்தவன் எல்லாம் ஏழையா இருப்பான்ங்குற எண்ணம் இருக்குறதால பணம் இருக்குறவன் அவனுக்கு துணையா இருக்குற கடவுளை தூக்கி பிடிக்குறதும் அந்த மதத்தை பரப்புறதும் இயல்பான ஒண்ணு. குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் சர்சுகள், சர்சுகளோட சொத்துகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மதத்தை வளர்த்து எடுக்குது. இந்த குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவங்களோட படிப்பு, வேலைன்னு வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்படுறதால மக்களும் மதத்தை கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் குமரி மாவட்டத்த பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரத்த தீர்மானிக்குற இடத்துல கிருஸ்தவ மதத்துக்கு இருக்குது.

அப்படிப்பட்ட மதம் மக்கள்கிட்ட ஆழமா பிடிப்புகள ஏற்படுத்துறது தவிர்க்க முடியாதது. அந்த பிடிப்பு எழுத்தாளரையும் ஆட்டி வச்சிருக்குது. அவங்க கதைகள நாம வாசிக்குறப்ப கிருஸ்தவ நடவடிக்கைகள் எல்லாம் சரியானதாகவும், கிருஸ்தவ மதம் சொல்ற மூட நம்பிக்கைகள பெருமையாகவும் அதையே மற்ற மதங்கள் பண்ணுறப்ப அது மேல ஒரு அருவெறுப்போ இல்ல எள்ளலோ இருக்கக் கூடிய வகையில அது வெளிப்படுது. இது ஆரோக்கியமான போக்கு இல்லைங்குறது என்னோட கருத்து. சமூகத்துல பொறுப்பா எழுத வந்துட்டா மதங்கள் சொல்ற தவறான கருத்த உடைக்குறதா இருக்கணும்.

எழுத்தாளர் ஒரு பெண்ணா இருக்குறதால மதங்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள கெட்டியா பிடிச்சுக்குறாங்க. அதனால தான் வீட்ல மாமனார் மாமியார் என்ன பண்ணினாலும் அத சகிச்சுக்கணும், அவங்கள அனுசரிச்சு போகணும், அவங்கள சம்மதிக்க வைக்கணும், அவங்க சம்மதமில்லாம எதுவும் செய்ய கூடாது, சம்மதிக்க வைக்க என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு அவங்களால நினைக்க முடியுது. ஆனா இன்னிக்கி இருக்குற வாழ்க்கை முறையில ஒவ்வொருத்தரும் வெவ்வேற இடங்கள்ல ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேவை அதிகரிச்சுட்டு இருக்குறப்ப கூட்டுக் குடும்ப முறையினுடைய தேவை குறைஞ்கட்டு வருது.

இவங்களோட கதையில கூட்டுக்குடும்பத்துல ஏதோ ஒரு வகை புனிதம் இருக்குற மாதிரியும் அப்படி இல்லனா தங்களோட கவுரவம் குறைஞ்சி போயிடும்னு சொல்ற மாதிரியான தொனி வெளிப்படுது. எல்லா குடும்ப அமைப்பும் வாழ்க்கையோடு தான் இணைஞ்சி இருக்கும். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட குடும்ப முறைன்னு எதுவும் கிடையாது. விவசாய குடும்பமா வாழ்ந்த காலங்கள்ல கூட்டு உழைப்பும் ஒத்துழைப்பும் அவசியமா இருந்துச்சு. இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒரு விதமான படிப்பு, ஒரு விதமான வேலைன்னு இருக்குறப்ப எல்லாரும் ஒரே இடத்துல சேர்ந்து இருக்க முடியாது. அவங்களோட வருமானமும் வேற மாதிரி தான் இருக்கும். மாறுபட்ட வருமானத்த எல்லாரும் சேர்ந்து பகிர்ந்துக்குறது இப்போதைய சூழ்நிலைல சாத்தியப்படாது. ஏன்னா அந்தந்த வருமானத்த பொறுத்து தான் தங்களோட வாரிசுகள அவங்க தங்களோட தகுதிக்கேற்ப வளர்ப்பாங்க. இதெல்லாம் கூட்டுக்குடும்பத்த காலாவதியாக்கிகிட்டு இருக்குற முறை. ஆனாலும் இந்த கூட்டு குடும்ப முறை குமரி மாவட்டத்துல இன்னமும் நீடிக்குது. எல்லாரும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள சுருண்டுக்குறதும் அதிகமான வரதட்சணை வாங்குறதும் இங்க இருக்குறது. அதோட தாக்கம் தான் “மாமியார் தோரணை” கதைல வெளிப்படுது.

ஆவண படு கொலைகள், ஸ்டெர்லைட் பிரச்னை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்னை, இயற்கை சீரழிவு பற்றிய எழுத்துகள் குமரி மாவட்டத்துல பிரதிபலிக்குறது குறைவா இருக்கு. இங்க பெரும்பாலானோர் ஒரு வட்டத்துக்குள்ளயே இருக்குறோம். இன்னும் நாஞ்சில் நாடுங்குற ஒரு தனி ராஜ்யத்துக்குள்ள தான் இருக்குறோம். எழுத்தாளருக்கு தான் சார்ந்த சமூகத்தைப் பத்தி சொல்றதுல இருக்குற ஆர்வம் அதுல இருக்குற பிற்போக்கு எண்ணங்களையும் சேர்த்து பிரதிபலிக்குறது தான் யோசிக்க வைக்குது.

கடல் மீனவனுக்கு சொந்தமானது. மீனவர்கள் கடலுக்கு அதிபதியா இருந்தாங்க. ஆனா இன்னிக்கி பெரிய பெரிய முதலாளிகள் மீன்பிடியில செல்வாக்கு செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க. கடற்கரைகள் எல்லாமே சுற்றுலா தலங்களா, வணிக மண்டலமா மாற ஆரம்பிச்சிடுச்சு. மீனவ மக்களை அங்க இருந்து வெளியேற்றிக்கிட்டு இருக்காங்க. கடற்கரை பாதுகாப்பு சட்டம்ங்குற பெயர்ல கடற்கரை சார்ந்த வாழ்வாதாரம் அந்நியப்படுது. மீனவர்கள் துறைமுகத் திட்டம், அணுஉலை பூங்கா திட்டம் எல்லாம் மீனவர்கள் வாழ்க்கை முறைய அழிக்க கூடியது.

மீனவ மக்களிடமும் கிருஸ்தவ மக்களிடம் அன்பா இருக்குற எழுத்தாளர் பத்து கதைகளிலும் அவங்க பிரச்சனையை சரியா பேசலன்னு நினைக்குறேன். முதல் கதையான “கடலோடி” தவிர்த்து வேற கதைகள் எதுவும் சமூக பிரச்சனைகள பெருசா சொல்லல.

குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் கிருஸ்த்தவ மதம் மீனவர்களோடு இணைஞ்சு இருக்கு. மீனவர்கள் சர்ச்சுகள நம்பித்தான் வாழ்க்கைய நடத்துறாங்க. அவங்களோட அதிகார மையமா சர்ச் இருக்குது. அதே நேரம் மீனவ மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. அணுஉலை தொடங்கி துறைமுகம் பிரச்சனைகள்ல இருந்து கடற்கரை பாதுகாப்பு மன்றம்ங்குற வகையில எல்லா இடத்துலயும் பிரச்சனை இருக்கு.

இந்த பிரச்சனைகள் எல்லாம் தீராததுக்கு காரணமும் இருக்கு. மீனவ மக்கள் குடும்ப பிரச்சனையையும் மீனவ சமூக பிரச்சனையும் தீத்து வைக்க சர்ச்சுகள தான் நம்புறாங்க. குமரி மாவட்டத்தில் கிருஸ்த்தவர்கள் அரச தீர்மானிக்குறதுல முக்கியமானவங்களா இருக்காங்க. அப்புறம் ஏன் இந்த பிரச்சனைகள் தீரல? ஏன்னா, சர்சுகள் சொத்துடைய நிறுவனங்கள். சொத்துடைய நிறுவனங்கள் அரசுடைய அங்கம். அரசு என்பதே சொத்துடைய நிறுவனங்களோட கூட்டதிகாரம் தான். அவங்க பிரதிநிதிகள் தான் செல்வாக்கு செலுத்துறாங்க. அதனால சர்ச்சுகள் அரசோட இணைஞ்சு தான் செயல்படும். மீனவர்கள பாதிக்குற எந்த விஷயத்தையுமே முழுசா தீர்த்து வைக்க முடியாத சூழல தான் சர்சுகள் உருவாக்கும். பணக்காரர்கள் பணக்காரர்களோட தான் சேருவாங்க. அதனால தான் பெரிய பெரிய மீன்பிடி நிறுவனங்கள் சாதாரண விசைப்பிடி படகுகள், கட்டுமரங்கள்ல தொழில் செய்றவங்களோட வாழ்வாதாரத்த அழிக்குறத கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்குது. நம்ம பிரச்சனைய நாமளே தீர்க்கணும்ங்குறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அதை மத்தவங்களோட சேர்ந்து தான் தீர்க்க முடியும்.

மக்களோட பிரச்சனையான நீட், ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு தொடங்கி, ஜாதி பிரச்சனைகள், கவுரவ கொலைகள்னு பல்வேறு பிரச்சனைகள் இருக்குது. ஆனா குமரி மாவட்டத்தை பொருத்தவரைக்கும் மதம் செல்வாக்கு செலுத்திட்டு இருக்குறது கவலையான விஷயம் தான். எல்லாத்தயும் கடவுளே தீர்ப்பார்ங்குற நம்பிக்கை இருக்குறதால இந்த பிரச்சனைகள சமூக பிரச்சனையாக எழுத்தாளர் சரியா புரிஞ்சுக்கல. தன்னோட “இரு மனம்” கதையில ரெண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் போது “எங்களுக்கு எங்க மதம் முக்கியம்”னு மதத்தையே தூக்கிப் பிடிக்குறார். கடவுள்ங்குற இலக்கை அடைய எந்த பாதைல போனா என்னன்னு கேக்குற அதே சப்திகா காதலை விட மதம் பெரிசுன்னு சொல்ற கிருஸ்தவத்த பெருமையா பாக்குறார். மத பயங்கரவாதம் எப்படி மக்களிடையே செல்வாக்கு செலுத்திக்கிட்டு இருக்குங்குறதும் அவருக்கு புரியல.

அதே மாதிரி பாத்த உடனே ஒரு தெய்வீக காதல்ல விழ முடியும்ங்குற நம்பிக்கையும் அவருக்கு இருக்கு. தோற்றத்தை பாத்து ஒரு நொடியில வரக் கூடிய கவர்ச்சி எப்படி காதலாக முடியும்? இந்தக் கதை இன்னமும் குமரி மாவட்டத்துல தோற்றம் சார்ந்த கவர்ச்சி மிச்சம் இருக்குறத எடுத்துக் காட்டுது. இரண்டு மனங்களோட புரிதல் தான் உறுதியான காதலா பரிணமிக்க முடியும்.

இதையெல்லாம் உற்று நோக்க வேண்டியது எழுத்தாளர்களோட கடமை. சப்திகா இப்போ தான் எழுத தொடங்கி இருக்காங்க. அவங்களோட வளர்ச்சிங்குறது இந்த பிரச்சனைகள எல்லாம் உற்று நோக்குறது மூலமா தான் இருக்க முடியும். கிருஸ்தவ மத பின்புலம், மீனவ மத பின்புலத்த தாண்டி இந்த சமூகத்தோட அனைத்து மக்களோட பிரதிநிதியா இந்த எழுத்தாளர் வளரணும். அதுல இருந்து விசயத்த பாக்கணும்.

மக்கள்கிட்ட இருக்கக் கூடிய கதைகளையும் மக்கள்கிட்ட இருக்குற சாதாரண பிரச்சனைகளையும் வெளிப்படுத்த தெரிஞ்ச சப்திகாவுக்கு மக்கள்கிட்ட செல்வாக்கு செலுத்தக் கூடிய பிரச்சனைகள புரிஞ்சிகிட்டா அதையும் சிறப்பா வெளிப்படுத்த முடியும். அந்த ஆற்றல் சப்திகாவுக்கு இருக்குது. அவங்களோட கண்ணோட்டம் விரிவடையணும், ஒரு நல்ல படைப்புகள் அவங்ககிட்ட இருந்து வரணும், அது மீனவ மக்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்கும் பயன்படணும். ஒரு சமூகத்துக்கான இலக்கியம்ங்குறது மற்ற சமூகத்தையும் ஆட்கொள்றதா இருக்கணும். அந்த வகையில அவங்களுக்கு அந்த திறமை இருக்குது. அது வளரணும்னு வாழ்த்துறேன்.

Saturday 5 January 2019

பெண்ணியத்துக்கு அளவு கோல் இருக்கா?மதத்தை கடந்து வராத வரைக்கும் என்ன தான் பெண்கள் முற்போக்கு பேசி திரிஞ்சாலும் வீண் தான். எந்த மதமும் பெண்களுக்கு துணையா நிக்குறது இல்ல. மாறா அவள தெய்வமாக்கி, தியாகியாக்கி, புனிதமாக்கி காலடியில கிடக்க வைக்குது.

ஜாதி இன்னும் வெறி கொண்டு அவள் உணர்வுகள, உரிமைகள தட்டிப்பறிக்குது. கவுரவ கொலையும் பண்ணுது. 

ஆனா இந்த பெண் அடிமைத்தனமும் பெண்ணியமும் ஒரே அளவுகோலோட எல்லா பெண்களுக்கும் இருக்குதா?

மதங்கள் ஜாதிகள் அடுத்து பெண்களோட அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணியா இருக்குறது சொத்துக்கள். சொத்துள்ள எந்த பெண்ணும் அந்த சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் அடிமையாகி போறா. சுய முடிவுகள் எடுக்க முடியாதபடி அவள முதலாளித்துவ வர்க்கம் சொத்துக்காக அடிமைப்படுத்துது.

ஆக, மதங்களை கடக்குறது மட்டுமில்லாம பொருளாதார விடுதலையும் ஒரு பெண் அடையணும். இங்கயும் பொருளாதார விடுதலைங்குற வார்த்தையோட அளவுகோல் பெண்ணுக்கு பெண் மாறுபடுது.

சொத்துள்ள பெண் தன்னோட பொருளாதார விடுதலையா பெரிய பெரிய கார்பரேட் கம்பனிகள்லயும், அரசாங்க அலுவலகங்கள்லயும், தனியார் நிறுவனக்கள்லயும் உடல்வலி இல்லாத வேலையையே கவுரவமிக்க வேலையா எண்ணுறா. அதனால அவளால மனசளவுல திருப்தி அடைய முடியல. இதுவே உழைக்கும் வர்க்கத்த சார்ந்த பெண் ரொம்ப சுலபமா தனக்கான பொருளாதார தேவையை உடல் உழைப்பு மூலமா தீர்த்துக்குறா. அவளுக்கு கவுரவம் ஒரு பொருட்டல்ல, தன்னோட சுய மரியாதை மட்டுமே அவளோட இலக்கு.

என் உடல் என் உரிமைங்குற முழக்கம் சொத்துடமை பெண்களோட கண்ணோட்டத்துலயும் உழைக்கும் பெண்களோட கண்ணோட்டத்துலயும் மாறுபடுது. தன்னோட பொருளாதார தேவைக்காக ஒரு ஆணை சார்ந்திருக்கும் சொத்துடைய பெண் தன்னோட வசதி வாய்ப்புக்காக ஒருத்தனோட வாழ்ந்துகிட்டு என் உடல் என் உரிமைங்குற முழக்கத்த பிற ஆண்களோட உறவு வச்சுக்குறது மூலம் நிறைவேத்திக்க நினைக்குறா.

தனக்கான சொத்தை தைரியமா கேட்டு வாங்குற தைரியம் அவளுக்கு இருக்காது. மாறா, தன் மேலான சுய அனுதாபத்தையும் கழிவிரக்கத்தையும் ஆயுதமா பயன்படுத்த நினைப்பா. அப்படியே ஒரு உறவு முறிவை சுலபமா கையாண்டு மீண்டு வரது சொற்பமான பேர் தான்.

இதுவே உழைக்கும் பெண் உறவு முறிவை சுலபமா கடப்பா. என் உடல் என் உரிமைங்குற முழக்கம் அவளை பொருத்தவரைக்கும் சேர்ந்து வாழ இயலாதவனை தூக்கி எறிஞ்சுகிட்டு மனசுக்கு பிடிச்சவனோட அடுத்த வாழ்க்கையை நோக்கி நகர்தல். அவளுக்கு யாரையும் அண்டிப்பிழைக்க அவசியம் இருக்காது.

இங்க பெரும்பான்மையான சமூகம் உழைக்கும் வர்க்கம் தான். ஆக, அடுத்து பெண்கள் நகர வேண்டியது அரசியல்.

இதுவும் சொகுசு அடிமைத்தன வாழ்க்கை பழகிப்போன சொத்துடைய பெண் வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராட தயங்கவே செய்வா. அதுவே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண் சுலபமா வீதிக்கு வந்து தன்னோட உரிமைக்காக போராடுவா.

என்னதான் சொத்துடைய சமூகப்பெண் உரிமைக்காக போராட தயங்கிவான்னு சொன்னாலும் படிச்சி, சமூக அறிவு பெற்று பல்வேறு மக்கள பாக்குற வாய்ப்பு அவங்களுக்கு இருக்கு. உழைக்கும் வர்க்கத்தோட பெண்கள் பிரச்சனை பெருசா, சொத்துடைய பெண்கள் பிரச்சனை பெருசான்னு அலச வேண்டியது வரும். அதனால போராட்டத்துக்கு வர்ற சொத்துடைய பெண்ணுக்கு முன்னால ஏகப்பட்ட சவால்கள் காத்துக்கிட்டு இருக்கும்.

அவங்க முன்னாடி பொதுவா எல்லா பெண்களோட பிரச்சனையையும் எடுத்து போராடுறதா, இல்ல தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட பிரச்சனை மட்டுமே பெண்கள் பிரச்சனைனு நம்பிட்டு இருக்குறதாங்குற கேள்வி முன்னால நிக்கும்.

தான் சார்ந்த சொத்துடைய பெண்களோட நலன் மட்டுமே பெருசுன்னு நினைக்குற பெண்கள் இந்த போராட்டத்துல தடுமாறுறாங்க. பெரும்பான்மையான பெண்களுக்கு என்ன பிரச்சனைனு யோசிக்குறவங்க சரியான இடத்த நோக்கி நகருறாங்க.

இப்படி, இந்த சவால்கள எதிர்கொள்ளாம பெண்ணுரிமைனு ஒண்ண தீர்க்கமா கண்டறிய முடியாது.

ஆக இங்க போராட்டம்ங்குறது மக்களோட மக்களா இணைந்து தான் செய்ய முடியும். பெண்ணுரிமை புரிஞ்சுக்க நாம எல்லா வர்க்கத்து பெண்களையும் புரிஞ்சுக்கணும்.

ஜாதி கடந்து, மதம் கடந்து, வர்க்கம் கடந்து, சுய சார்புள்ள அரசியல் படுத்தப்பட்ட பெண்ணே நமக்கு தேவை.