Saturday 8 June 2019

ஜீவாவின் "துர்கா மாதா" - நாவல் வெளியீடு


சிறு வயதில் எனக்குள் சிந்திக்கும் விதையை தூவியது இன்று சொத்துடமை சமூகத்தின் ஒரு பிரதிநிதியாய் இருக்கும் என் அப்பா தான். சொத்தில் எனக்கும் சமபங்கு உண்டென பேசித்திரிந்த காலங்களில் தட்டிக்கொடுப்பார். அது ஒருகாலம்.

காலமாற்றத்தில் சிக்கி சூழ்நிலைக்கைதியாக அடைந்துக் கிடந்த நேரம் இந்த சமூகம் பெண்களை பகடைக்காயாய் வைத்து ஏன் காய் நகர்த்துகிறதென்று என் மனதுக்குள் நிறைய கேள்விகள் எழும்.

ஒரு குடும்பத்தின் மொத்த மானமும் அந்த வீட்டின் பெண்களின் தொடைகளுக்கிடையில் இருப்பதாய் பூச்சி காட்டும் இந்த சமூகத்திலிருந்து விலகி என் பார்வை விசாலமான போது நான் சில பாடங்களை கற்க ஆரம்பித்தேன்.

பெண் என்பவள் அவளுடைய சிரிப்பு, கோபம், அழுகை, காதல், காமம் அத்தனையையும் இயல்பாய் கடக்க வேண்டுமென்ற புரிதல் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாய் என்னை நான் மீட்டெடுத்தேன்.

நாம் மீள்வது பெரிதல்ல, ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு கைகொடுத்தாக வேண்டும். அதுதானே சரியாக இருக்க முடியும்?

ஆனால் எங்கிருந்து துவங்குவது, எப்படி செய்வதென்ற சரியான பாதை தெரியாமல் திணறிக் கிடந்தேன்.

பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் வேட்டையின் போதும் அதற்கு காரணகர்த்தாவாக இந்த சமூகம் பெண்களையே கைகாட்டும். அவர்களுக்கே தடைகளிடும். அக்கறை என்கிற பெயராய் அடக்குமுறையை ஏவி விடும். இவை என்னை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும். எனக்கு இந்த அச்சத்துக்குள் மூழ்கிக்கிடக்க விருப்பம் இல்லை. தண்ணீருக்குள் இருந்து திமிறி எழுந்து பெரும் ஆசுவாசம் கொள்ளவே விரும்பினேன் நான்.

முற்போக்கு சிந்தனைவாதிகள் என சில ஆண்களின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களில் உடன்பாடில்லாமல் பின் என்னதான் விடுதலை என மூச்சுத் திணறியிருக்கிறேன். ஏனெனில் அவை அத்தனையும் பெண்ணை இன்னும் அவர்களுக்கு அடிமையாய், மேலும் சொல்லப்போனால் பாலியல் சுரண்டலுக்கு தான் வழிவகுக்கும்.

ஜெனவரி மாதத்துவக்கத்தில் இது குறித்து தோழர் திருப்பூர் குணா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் புரட்சிகர கட்சிகளில் பெண்களை மதிக்கும் விதம் பற்றி கூறினார். அதோடு தோழர் இரா. பாரதிநாதன் எழுதிய “தறி” நாவலையும் படிக்க கொடுத்தார். இதன் மூலம் புரட்சிகர கட்சிகளின் முக்கியத்துவமும் அவற்றின் அவசியமும் எனக்கு மெல்ல மெல்ல புரிபட ஆரம்பித்தது.

பின் ஒரு நாள் அவரும் நானும் ஒரு உணவகத்தில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த போது ஒரு வடநாட்டு பெண் உழைப்பாளியை பாத்தேன். எங்களுக்கு முன்னே எச்சில் தட்டுகளை அடுக்கி மேசைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் தோழர் திருப்பூர் குணாவின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

“இந்த பெண்ணும் கூட ஒரு போராளியாக இருக்கலாம். யார் கண்டது?”

இந்த வார்த்தைகள் தான் எனக்குள் முதலில் ஒரு சிறுகதையை தோற்றுவித்தது.

ஆம். இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் மண்டையை குடைந்துகொண்டிருந்த போது, என்மனதில் சட்டென வந்து ஒட்டிக்கொண்டது “குலாபி கேங்க்”. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் அமைந்துள்ள பூந்தேல்கண்ட் பகுதியில் பெண்களால் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. தற்போது 55 வயதாகும் சம்பத் பால் என்கிற பெண்மணியால் 25 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கிட்டதட்ட ஒன்றரை இலட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

துர்கா என்னும் பெயருடைய அன்று நாங்கள் பார்த்த அந்த வடநாட்டுப் பெண்ணையே கதாநாயகியாக கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரத்தை நான் அந்த சித்தரித்திருந்தேன். அதனை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அதைக்கேட்டதும் அவர் அது ஒரு நாவலின் தன்மையை கொண்டிருப்பதாக கூறினார்.

அப்பொழுது தான் சில குரல்கள் அனைவரின் மனங்களையும் ஆட்டிப்பார்த்தன. பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களால் எப்படி சூழப்பட்டுள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக்கிய குரல்கள் அவை. உடலும் மனமும் நடுங்கிப் போனது. ஒருபுறம் அதை பற்றிய கொந்தளிப்புகள் இருந்தாலும் அதற்கு காரணக்கர்த்தாவாக பெண்களின் ஒழுக்க விழுமியங்கள் மீதே விரல்கள் சுட்டப்பட்டன. மிகப்பெரிய கொடூரத்தை, அதன் மீதான கொந்தளிப்பை இந்த குற்றசாட்டு எப்படி நீர்த்துப் போக வைத்து விடுகிறது? அதிர்ச்சி தான் இல்லையா?

மூன்று இரவுகள் உறக்கமில்லாமல் கழிய அந்த இரவின் ஒரு நாள் நானும் தோழர் திருப்பூர் குணாவும் நீண்ட விவாதத்தில் இருந்தோம். அமைப்பு, அரசியல், இலக்கு, நடைமுறை என விவாதமும் விமர்சனமும் சண்டையும் நடந்ததுகொண்டேயிருந்தது.

அந்த சண்டையில் கொஞ்சம் அரசியல் பிடிபட தொடங்கியது. பெண்களின் அதிகாரத்தை உத்தரவாதபடுத்துகிற அமைப்பினால் மட்டும்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிற உண்மை புரியவந்தது. இப்போது சண்டை ஓய்ந்து இந்திய புரட்சிகர இயக்கங்கள் மீது அக்கறை உருவானது. இந்த பிரச்சனைக்கு நம்மால் என்ன செய்ய முடியுமென யோசித்தோம். அதனை “பொள்ளாச்சி பயங்கரம் – என்ன செய்ய வேண்டும்” என்ற புத்தகமாக்கினோம்.

இந்த புத்தகம் என் சிந்தனைகளை மேலும் வலுவாக்கியது.

முடிந்தவரை சட்ட ரீதியாகவும் தேவைப்பட்டால் தடி கொண்டும் காரியம் சாதிக்கும் இந்த “குலாபி கேங்க்” போன்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டிற்கும் வேண்டுமென்ற எனது விருப்பத்தை தோழர் திருப்பூர் குணாவிடம் தெரிவித்தேன்.

அப்புறமென்ன?

அதன்பிறகு பொள்ளாச்சி பயங்கரம் மட்டுமில்லாது பெண்களின் பிரச்சினைகள் அனைத்தையும் எப்படி பார்ப்பது என்ற எனது பார்வை மாறியது. பின் அதை குறித்து தொடர் விவாதங்கள் செய்தோம். தோழர் திருப்பூர் குணா அவருடைய கட்டுரைகள் சிலவற்றை அனுப்பித் தந்து படிக்கத் தந்தார். சிறுகதை மெல்ல மெல்ல ஒரு நாவலாக கருக்கொள்ள துவங்கியது.

இதோ அந்த சிறுகதை இப்பொழுது ஒரு நாவலாக மாறிவிட்டது. கதாப்பாத்திரங்களுக்கு பெயர்கள் தேவைப்பட்ட பொழுது திருப்பூர் குணாவே அவர் நண்பர்களின் பெயர்களை பரிந்துரைத்தார். அதை தடைசொல்லாமல் அங்கீகரித்த நண்பர்களுக்கு அன்பும் நன்றிகளும்.

ஆரம்பத்தில் மிகவும் தயங்கி தயங்கித்தான் எழுதினேன். ஆனால் அதை இடைவிடாது நச்சரித்து முழுமையாக்கியதில் திருப்பூர் குணாவின் பங்கு முக்கியமானது.அவருக்கு என் அன்பும் நன்றியும்...

இதோ வரும் 16/06/2019 அன்று லயோலா தொழிற்கல்வி வளாகம், ஏ ஏ ரோடு, மதுரை (தேம்பாவனி இல்லம் அருகில்) வைத்து மாலை நான்கு மணிக்கு நாவல் வெளியிடப்படுகிறது.

தலைமை:                                           தோழர் சுரேஷ்  

நிகழ்ச்சித் தொகுப்பு:                           தோழர் முத்துகிருஷ்ணன்
                                                             - மாநில ஒருங்கிணைப்பாளர்,                                               -                    
                                                                                         ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவை                              
               
வரவேற்புரை:                                      தோழர் நிஷா - WSB Rebels - பெண்கள் குழு

வாழ்த்துரை:                                         தோழர் ஸ்ரீரசா - மாநில துணைச்செயலாளர்
                                                            - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
                        
                                                               தோழர் முரளி - அகில இந்தியச் செயலாளர் 
                                                                                    - மக்கள் சிவில் உரிமைக் கழகம்

                             
நூல் அறிமுகம்:                                    தோழர் மதி கண்ணன் - அமைப்புச் செயலர்  
                                                                                   - மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

                                                           
வெளியிட்டு உரையாற்றுபவர்:            தோழர் செல்வி - மனிதி - பெண்கள் அமைப்பு

பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்:   தோழர் இரா. காமராசு -  பொதுச்செயலாளர் -                                                                  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                                                         
ஏற்புரை:                                                         தோழர் ஜீவா - நூலாசிரியர்

நன்றியுரை:                                                    தோழர் திருப்பூர் குணா
                                                                 - பொன்னுலகம் புத்தக நிலையம்      

வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.... 


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235




2 comments: