Thursday 27 August 2015

பறவைகள் காதல்



அம்மா எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவா. பறவைகளும் சரி விலங்குகளும் சரி, அவங்களுக்கான இருப்பிடம் எப்பவுமே இயற்கை தான், அத கட்டுக்குள்ள அடக்க நினைக்குறது தப்புன்னு.

ஆனாலும் வீட்ல நிறைய விலங்குகள் உண்டு. ஆடு, மாடு, முயல், நாய், பூனைன்னு ஒரு சரணாலயமா தான் எங்க வீடு இருக்கும். இதுல மாடுகள ரொம்ப பெருசானா கட்டிப் போடுவாங்க. மத்தப்படி ஆடுகள என்னிக்கும் கட்டிப் போட்டது இல்ல. எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஏக்கர்களுக்குள்ள சுதந்திரமா சுத்திட்டு இருக்கும். அதே மாதிரி தான் முயல்களும். திறந்து விட்டுட்டா தானா போய் புல் மேஞ்சுக்கணும், அப்புறம் அதுகளே கூட்டுக்கு வந்துடும். சில முயல்கள் தோப்புக்குள்ள குட்டிப் போடுறதும் உண்டு. அத நாய்ங்க பிடிச்சுடக் கூடாதுன்னு அம்மாவுக்கு பதற்றமாவே இருக்கும். அதனால தான் ஒரே ஒரு நாய், அதுவும் இத எல்லாம் பாத்துக்காக்குற நாய வளர்த்தோம். பூனைங்க எப்பவுமே சோம்பேறிங்க, வீட்டு பால், மீன்ன்னு சாப்பிட்டு வேட்டைக்கு போகணும்னா அலுத்துக்கும்.

இத்தன விலங்குகள் இருந்தாலும், பறவைகள்ன்னு பாத்தா கோழி, வாத்து உண்டு. அதுவும் நிறைய வகைகள்ல இருக்கும். அது போக புறாக்களும் உண்டு. காலைல தொறந்து விட்டா, சாயங்காலம் அரிசி, நெல், தினை, கம்பு, பருப்பு, உளுந்துன்னு எதையாவது போடுறப்ப தான் திரும்பி வரும்ங்க. இவ்வளவும் போதாதுன்னு கூண்டுக்குள்ள வளர்க்குற பறவைகளும் அப்பா வாங்க ஆரம்பிச்சாங்க.

அப்ப தான் நான் அம்மா கிட்ட போய் கேட்டேன், பறவைகள் எல்லாம் அடைச்சி வைக்க கூடாதுல அம்மா, அப்போ இது மட்டும் சரியான்னு. அம்மா சொல்லுவா சரியில்ல தான். ஆனா இந்த பறவைகள வெளில தொறந்து விட்டா இதுகளால தனிச்சி வாழ முடியாது, ஒண்ணு, இத நாம வளர்க்க நினைக்க கூடாது, இல்லனா நிறைய வசதி செய்து குடுத்து பாத்துக்கணும்ன்னு. அத எல்லாம் நல்லா பாத்துக்க அப்பா எப்பவுமே சளைச்சதே இல்ல.

லவ் பேர்ட்ஸ்குன்னு தனியா ஒரு பெரிய கூண்டு உண்டு. அது ஒரு ரூம் சைசுக்கு, மழையும் பனியும் அடிச்சா தண்ணி உள்ள போகாத மாதிரி இருக்கும். ஒரு ஆள் உள்ள போய் தாராளமா கூண்டை சுத்தப் படுத்தலாம். உள்ளயே தொட்டியில செடி, கொடி வகைகள் எல்லாம் வச்சிருப்பாங்க. அதெல்லாம் முட்டை போட்டு குஞ்சு பொறிக்க அங்கங்க பானை வச்சு, ஒரு இயற்கை வீடு மாதிரியே தான் இருக்கும்.

லவ் பேர்ட்ஸ் போக, இன்னும் நிறைய வகைகள், ஒவ்வொண்ணுக்கும் தனித் தனியா கூண்டுகள். ரொம்ப சின்ன வயசுல அத எல்லாம் பாத்ததால எனக்கு அதுகளோட பெயர்கள் எல்லாம் நியாபகம் இல்ல. ஆனா என் மனசுல ஆழமா பதிஞ்சு போன ஒரு பறவை ஜோடி உண்டு. அது ஒரு டயமன்ட் டவ் ஜோடி.

டயமன்ட் டவ் பாக்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ்வளவு அழகா இருக்கும். புறாவோட மினியேச்சர் வகை தான் இந்த டயமன்ட் டவ். பெரிய பெரிய புறாக்கள பாத்துட்டு இத முதல் தடவையா பாத்தப்ப எனக்கு ஒரே ஆச்சர்யம். அதனால தானோ என்னவோ அது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.

இந்த டயமன்ட் டவ் ஜோடிய ஒரு தனி கம்பி வலை உள்ள கூண்டுக்குள்ள போட்டுருந்தாங்க. அதுல ரெண்டும் ரெஸ்ட் எடுக்க ஒருபக்கமா ஒரு மரப்பலகை வச்சிருந்தாங்க அப்பா. அதுங்க ரெண்டுமே ரொம்ப சாதுவா இருக்கும். ஒண்ணுகொண்ணு அனுசரணையா எப்பவும் பக்கத்து பக்கத்துலயே உக்காந்துட்டு இருக்கும். ஒரு நாள் கூண்டு பக்கத்துல நான் போய் பாக்குறப்ப, பெண் டயமன்ட் டவ் அந்த மரப்பலகைல ஒரு முட்டை விட்டுருந்துச்சு. முட்டை உருண்டு கீழ விழுந்துடாதான்னு ஒரு பயம் எனக்கு. ஆனா அதுவோ கம்பி வலையை ஒட்டி படுத்துகிட்டு முட்டைய அடைகாக்கத் தொடங்கிச்சு.

ஒரு பத்து நாள் போயிருக்கும். திடீர்னு அந்த பக்கமா ஒரு வல்லூறு வந்திருக்கு. எங்க அப்பம்மா தூரத்துல இருந்து இது ஏன் இப்படி நம்ம காம்பவுண்ட் மேல உக்காந்துருக்குன்னு யோசிக்குறதுக்குள்ள அந்த வல்லூறு அந்த பெண் டயமன்ட் டவ் தலைய கொத்தி தனியா பிச்சுகிட்டு போய்டுச்சு. அப்படியே துடிச்சு, அடைகாத்துகிட்டு இருந்த முட்டைய கீழ விழ விடாம அணைச்சுட்டே செத்துப் போச்சு அந்த பெண் டயமன்ட் டவ்.

இனி மேல என்ன பண்ண முடியும்? கம்பியை ஒட்டி அது படுத்துருந்ததால ஈசியா அது வல்லூறுக்கு இரையா போச்சு. அந்த பெண் டயமன்ட் டவ்வ எடுத்து அடக்கம் பண்றப்ப, முட்டைய என்னப் பண்ணணு யோசிச்சு, எதுவுமே பண்ணாம அப்படியே வச்சிட்டாங்க அப்பா. கொஞ்ச நேரத்துல முட்டைல வந்து அந்த ஆண் டயமன்ட் டவ் படுத்துடுச்சு. அப்பா, ஒரு சாக்கு எடுத்துட்டு வந்து, அத கிழிச்சு, அந்த கூண்டுல தொங்க விட்டு டயமன்ட் டவ் வெளில தெரியாத மாதிரி மறைச்சு விட்டுட்டாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, அந்த முட்டை பொரிச்சுது. சின்ன குஞ்சு டயமன்ட் டவ் வெளில வந்துச்சு. அதுக்கு சாப்பாடு குடுத்து பத்ரமா பாத்துகிச்சு அதோட அப்பா. ரொம்ப பசிச்சா ரெண்டு குட்டி சிறகையும் படபடன்னு அடிச்சுட்டு கீங்கீங்ன்னு கத்தும், உடனே அப்பா பறவை ஓடி வந்து சாப்பாடு ஊட்டும். அப்பாவோட அரவணைப்புல அந்த சின்ன டயமன்ட் டவ் ரொம்ப வேகமா பெருசாகிடுச்சு. அது பெருசானதுக்கு அப்புறம், அந்த ஆண் டயமன்ட் டவ் சோகமாக ஆரம்பிச்சுது. அப்பப்ப அதோட குழந்தை அன்பா பக்கத்துல இருந்து தடவி குடுத்து ஆறுதலா இருந்தாலும் ஒரு நாள் எதோ ஒரு சோகத்துல அந்த ஆண் பறவையும் செத்தே போச்சு.

அந்த குஞ்சு வளர்ந்து பெருசானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது, அது பொண்ணுன்னு. பக்கத்து ஊர்ல ஒரு பையன் கிட்ட ஆண் டயமன்ட் டவ் ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டு அப்பா அத அவன் கிட்ட குடுத்துட்டாங்க. அந்த கூண்டு ரொம்ப நாள் வெறுமையாவே கிடந்துச்சு. அத பாக்குறப்ப எல்லாம் மனசுக்குள்ள ஒரு வலி இருந்துட்டே இருக்கும்.

..................................................

நேத்து, திருநெல்வேலி போயிட்டு வந்தப்ப ஒரு கடைல டயமன்ட் டவ் இருக்குறத பாத்தேன். உடனே வாங்கணும்னு கை பரபரத்துது. ஏற்கனவே ரூம்ல ரொம்ப தூசு பறக்குது, எல்லா பறவைகளையும் வெளில கொண்டு போய் வைக்கப் போறியா இல்லையான்னு மிரட்டிட்டு இருக்காங்க. இதுல டயமன்ட் டவ் வாங்கி எங்க கொண்டு போய் விடுறது?

வேணா பாருங்க, ஒருநாள் திடீர்னு கிறுக்கு புடிச்சி, ஒரு ஜோடிய வாங்கிட்டு வந்துடப் போறேன்...



.

Sunday 23 August 2015

மாதவிடாய் - தெரிஞ்சிக்கலாம்


மாதவிடாய் – உண்மைய சொல்லப்போனா இந்த வார்த்தைய சொல்றதுக்கே தயக்கமா தான் இருக்கு. என்ன, உனக்கேவான்னு கேட்டுராதீங்க, சின்ன வயசுல இருந்தே பீரியட்ஸ், பீரியட்ஸ்னு சொல்லியே பழக்கமாகிடுச்சு அதான்...

இந்த பீரியட்ஸ் விசயத்துல கஷ்டப்பட்ட ஜீவன நான் முதல் முதல்ல பாத்தேன்னா அது என் அம்மாவ தான். தத்தக்கா பித்தக்கான்னு அப்பா கைபுடிச்சு நடந்த நாட்கள்ல அப்பா அம்மாவுக்கு பக்கத்துல ஆதரவா இருந்தத பாத்துருக்கேன்.

அம்மாவ புரிஞ்சுக்க பாட்டியம்மாவுக்கு (அம்மாவோட அம்மா) ஒண்ணும் கஷ்டம் இல்ல. ஏன்னா, பாட்டியம்மாவே இந்த பீரியட்ஸ்னால நிறைய கஷ்டப்பட்டுருக்காங்க. மொத்தம் ஒன்பது புள்ளைங்க. எல்லா புள்ளைங்களும் பாட்டியம்மா மடிலயே வளர்ந்தவங்க, அதனால ஆம்பள புள்ள, பொம்பள புள்ள வித்தியாசம் பாக்காம அத்தன பேருக்கும் பாட்டியம்மாவோட கஷ்டம் தெரிஞ்சிருந்துச்சு. கடைசில அம்பத்து அஞ்சு வயசுல ஓவர் ப்ளீடிங் ஆகி, கர்ப்பப்பைய எடுத்ததோட பாட்டியம்மாவோட மாதவிடாய் சகாப்தம் முடிவுக்கு வந்துச்சு (இந்த கதை இன்னொரு நாள்).

ஒரு கட்டத்துல நாங்க அப்பாவோட பூர்வீக ஊர்ல குடியேற வேண்டிய நிலைமை வந்துச்சு. நாங்க அங்க போனதுமே அப்பா, அவரோட அம்மாவ (அப்பம்மா) கூட்டிட்டு வந்து எங்களோட வச்சுகிட்டார்.

பீரியட்ஸ் தான் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறது இல்லையே. அப்பம்மாவுக்கு மாசத்துல மூணு நாள் ப்ளீடிங் ஆனாலே அதிசயம் தான். வலி சுத்தமா இருக்காது. நாங்க அங்க போன நேரம் அவங்களுக்கு மெனோபாஸ் வேற ஆகியிருந்துச்சு. அதனால அம்மாவோட பீரியட்ஸ் பிரச்சனைகள அவங்க புரிஞ்சுக்கல.

பீரியட்ஸ் நேரத்துல அம்மா சமையல் ரூமுக்குள்ள போகக் கூடாது, ஹாலுக்கு போகக் கூடாது, ஆம்பள ட்ரெஸ் எதையும் தொடக் கூடாது, முக்கியமா எங்க அப்பாவ பாத்துரவே கூடாது. அட, இந்த மாதிரியான மன உளைச்சல்கள கூட தாங்கிக்கலாம், ஆனா எங்கம்மா வலில படுற வேதனை சொல்லி மாளாது.

விண்ணு விண்ணுன்னு தரிக்குற வலில எதோ ஒரு பக்கமா தான் ஒருக்களிச்சி படுக்க முடியும். நானே மெத்தைல படுத்தாலும் உருண்டு உருண்டு ஏதோ ஒரு பொசிசன்ல தான் வலி கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கும். கொஞ்சம் அசைஞ்சாலும் மறுபடியும் வலி கொன்னுரும். அப்படி தான அம்மாவுக்கும் இருந்துருக்கும்?

அந்த நேரத்துல அம்மாவுக்குன்னு ஒரு இருட்டு ரூமை குடுத்துருந்தாங்க. அதுல ஒரு கிழிஞ்ச பாயை தரைல விரிச்சு தான் படுக்கணும். அதுவும் வாசல் வீட்டுக்கு வெளில தான் இருக்கும்.

அங்க போன முதல் மாசம், அம்மா வலில துடிச்சி அழுதுருக்கா, அப்பா, அவள கைத்தாங்கலா கூட்டிகிட்டு பெட் ரூமுக்குள்ள வந்துட்டாங்க.

அன்னிக்கி எங்க அப்பம்மா ஆடுன ஆட்டம் இருக்கே... தீட்டு பட்ட பொம்பளைய இப்படியா வீட்டுக்குள்ள கொண்டு வருவ, அதுவும் படுக்கை அறைக்குள்ளயேன்னு. அப்பம்மாவுக்கு பயந்தே பகல்ல அம்மா தரைல படுத்துக் கிடப்பா, ராத்திரி ஆனா அப்பா அவள மெதுவா தூக்கி கட்டில்ல போடுவாங்க. நானும் தம்பியும் மலங்க மலங்க பாத்துட்டு இருப்போம். அம்மா சேலை எல்லாம் ரெத்தக்கறையா இருக்கும். திட்டு திட்டா ரெத்தம் தரை எல்லாம் வழிஞ்சிருக்கும்.

இப்ப நினைச்சுப் பாத்தா, அப்பாவும் அம்மாவும் அந்த சூழ்நிலைய எப்படி சமாளிச்சிருப்பாங்கன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. கண்டிப்பா ஒரு நாள் அப்பாவ உக்கார வச்சு இதப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வலில துடிக்குற ஒரு மனுஷ ஜென்மத்தோட வலியையே புரிஞ்சுக்காதவங்க, நாப்கின் பத்தியா புரிஞ்சி வச்சிருக்கப் போறாங்க.

அப்பலாம், நாப்கின் கிடையாது. துணி தான். அதுவும் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு துணி கிடையாது, தேவைக்கு கிழிச்சு, மடிச்சு வச்சுட்டு, அது முழுசா நனைஞ்சதும் அடுத்த துணி மாத்தணும். கேக்க ஈசியா தான் இருக்கு, ஆனா நடைமுறைப் படுத்துறது அவ்வளவு ஈசி இல்ல.

இந்த துணிய தூமைத்துணின்னு (இது கெட்டவார்த்தைன்னு இவ்வளவு நாள் சொல்லாம இருந்தேன், அப்படியே சொல்லி வளர்த்துட்டாங்க, ஆனா இப்ப சொல்ல துணிஞ்சுட்டேன்) சொல்லுவாங்க. இத தொட்டாலே தீட்டுன்னு சொல்லி ஒரு குச்சிய வச்சி தூக்கி ஒரு மூலைல போட்டு வச்சிருப்பாங்க. பீரியட்ஸ் வந்ததும் அந்த துணிய மடிச்சு, உள்ள வச்சு யூஸ் பண்ணிட்டு, அப்புறம் கறை படிஞ்ச துணிய ஒரு ஒதுக்கப்பட்ட இடத்துல வச்சு அலசுவாங்க. அனேகமா அது யூரின் பாஸ் பண்ணி தேங்கி நிக்குற இடமாவோ, இல்ல, ஒப்பன் டாய்லெட்டாவோ தான் இருக்கும். தேய்ச்சு துவைக்க ஒரு கல் கூட இருக்காது.

அத விடுங்க, அத கொண்டு போய் வெயில்ல நல்லா விரிச்சி காயப் போட முடியுமா என்ன? அதெப்படி போடுறது? அதான் தீட்டாச்சே, யாருக்குமே தெரியாம மடக்கி வச்சி இருட்டுல தான் காயப் போடணும். அது அவ்வளவு ஈசியா வாடுமா? அப்படியே ஈரம் ஊறி ஊறி அதுல பங்க்ஸ் புடிக்கும். அதுமட்டுமா, ரெத்த வாடைக்கு பாச்சாவும் பல்லியும் அங்க தான் குடித்தனமே பண்ணும். இப்படி காய வச்ச துணிய எடுத்து காலுக்கு இடுக்குல வச்சா, அந்த பொண்ணோட நிலைமை என்னாகுறது?

இப்படி மூலைல கழிவுகளோட கழிவா போட்டு வச்சிருந்த துணிய எடுத்து ஒரு பொண்ணு சரியா உதறாம அவசர அவசரமா மடிச்சி வச்சதுல, துணில ஒட்டி இருந்த தேள் கொட்டி செத்தே போனான்னு அம்மா சொல்ல கேள்விப்பட்டுருக்கேன்.

இப்படியே கொஞ்சம் யோசிச்சுட்டு இருங்க, உங்க வீட்டு அம்மாவும் பாட்டியும் இத தான் அனுபவிச்சி இருப்பாங்க. சந்தேகம் இருந்தா கேட்டுப் பாத்துக்கோங்க. இன்னமும் கிராமங்கள்ல பொம்பள புள்ளைங்க இப்படி தான் துணி யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.

.......................................

நான் காலேஜ்ல எம்.பில் சேர்ந்த புதுசு. அப்பவும் பிள்ளைங்களுக்கு பார்ட் டைமா க்ளாஸ் எடுத்துட்டு தான் இருந்தேன். அந்த நேரம் பி.ஜி படிக்க ஒரு பொண்ணு வந்தா. பாக்க ரொம்ப ஸ்மார்ட். பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆகி, மூணு வயசு ஆண் குழந்தைக்கு அம்மா அவ.

எந்த விசயமா இருந்தாலும் எழுந்து எழுந்து சந்தேகம் கேப்பா. தெளிவா நான் சொல்லிக் குடுக்குறத நோட்ஸ் எடுப்பா. நமக்கு தான் இப்படிப் பட்ட புள்ளைங்கள பாத்தாலே ரொம்ப புடிக்குமே, அவளுக்குனே நிறைய விஷயங்கள் க்ளாஸ்ல பேசுவேன்.

திடீர்னு ஒரு நாள் அவ மயங்கி விழுந்தா. என்னாச்சு, என்னாச்சுன்னு எல்லாருக்கும் ஒரே பதற்றம். அவள தூக்கி பென்ச்ல படுக்க வச்சுட்டு ஒரு பொண்ணு நிமிருரப்ப அவ கை எல்லாம் ரெத்தம். அப்பவே புரிஞ்சிடுச்சு, புள்ளைக்கு பீரியட்ஸ்னு. சரி ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு கொஞ்ச நேரம் அவள தனியா படுக்க வச்சுட்டோம்.

கொஞ்ச நேரம் கழிச்சு அவளா எழுந்ததுக்கு அப்புறம், தண்ணி குடுத்து, பாத்ரூம் போக வச்சு, பேட் எடுத்துக் குடுத்து, ஆசுவாசப் படுத்தி என்னன்னு விசாரிச்சா, அவளுக்கு பத்து நாளா பீரியட்ஸ் நிக்கவே இல்லையாம். அதிகமான ரெத்தப் போக்குல துவண்டு போய் இருந்தா. நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வான்னு சொன்னேன். க்ளாஸ் மிஸ் ஆகிடும் மேடம்ன்னு அழுதுட்டே சொல்றா. அந்தப் புள்ளைய என்னன்னு சொல்ல?

சரி, ரெஸ்ட் எடுத்துட்டு வந்து படின்னு அவளுக்கு ஆறுதல் குடுத்தோம். இதுவே ஒரு நாளு, உடம்பெல்லாம் கிடுகிடுன்னு நடுங்கி, ஓடிப் போக கூட முடியாம, ஓ-ன்னு நான் வாந்தி எடுத்தப்ப அவ தான் ஓடி வந்து தாங்கினா. தலைய சுத்தி நான் மயக்கமா கிடந்தப்ப, அவளும் எனக்கு பீரியட்ஸ் நேரம் இப்படி ஆகும்னு புரிஞ்சுகிட்டா. நிறைய பேசுவோம், நான் மட்டும் அந்த நேரம் அஞ்சு நாள் காலேஜ் பக்கமே போக மாட்டேன். வீட்லயே ரெஸ்ட் தான். சில நேரம் பாத்ரூம்ல மயங்கி கிடக்குறது எல்லாம் தனிக் கதை. ஆனா அவ மட்டும் என்ன கஷ்டம்னாலும் காலேஜ்க்கு வந்துடுவா.

இப்படியே அவளுக்கு ஒவ்வொரு மாசமும் பிரச்சனை அதிகமாகிட்டே போச்சு. மாசத்துல இருபது நாளும் அவளுக்கு ப்ளீடிங் இருக்கும். என்ன பிரச்சனை, ஏது பிரச்சனைன்னு எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பாத்தும் எல்லாமே நார்மல் தான்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதுக்கப்புறம் அவ ரொம்ப தூரத்துல இருந்து காலேஜ் வர்றதால, ட்ராவல் அவளுக்கு ஒத்து வரலன்னு சொல்லி அவள கட்டாயப்படுத்தி வீட்லயே இருந்து படின்னு சொல்லிட்டோம். அப்பப்ப சிலபஸ் கவர் பண்ற நோட்ஸ் குடுத்து, டவுட் வந்தா போன் பண்ணி கேப்பா. ஒரு மணி நேரம், ரெண்டு மணிநேரம்னு அவளுக்கு நான் போன்லயே க்ளாஸ் எடுத்துருக்கேன்.

அப்பப்ப காலேஜ் வருவா, ப்ராக்டிகல் க்ளாஸ் அட்டென்ட் பண்ணுவா, பைனல் இயர் முடிச்சுட்டு போகும் போது அவ யூனிவெர்சிடி செகண்ட் ரேங்க் வாங்கிட்டுப் போனா.


..

Saturday 22 August 2015

அப்பாவும் நானும்



படுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒரு வாரமா தான் எழுந்து உக்காந்து, காலை கீழ தொங்க போட்டுட்டு, நாலு ஸ்டெப் வாக்கர் உதவியோட எடுத்து வைக்க முடியுது. அதுவும் இன்னும் காலை கீழ ஊனல. இது சரியானா தான் அடுத்த சர்ஜரி பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.

ஏற்கனவே சர்ஜரி முடிஞ்ச பத்தாவது நாளு எனக்கு ரிவியூ மீட்டிங் இருந்துச்சு. நான் போக முடியாததால முடிஞ்ச அளவு படுத்துக் கிடந்தே ரிபோர்ட் ரெடி பண்ணி வேற ஸ்டுடென்ட்ட ப்ரெசென்ட் பண்ண சொல்லி அனுப்பி வச்சேன். ஸ்பெசல் கேஸ்னு ஒத்துகிட்டாங்க.

ஆறு நாள் முன்னால என்னோட ரிபோர்ட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு, அத சரி பண்ணி வைங்கன்னு திரும்பி வந்துடுச்சு. எனக்கு பயங்கர ஷாக். வாழ்க்கைல முதல் முறையா லைப்ல தோத்துப்போன பீலிங். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு எதுல மிதப்பு இருக்கோ இல்லையோ, என்னோட சப்ஜெக்ட்ல பயங்கர மிதப்பு உண்டு. என்ன டாப்பிக்கா இருந்தாலும் அசால்ட்டா சொல்லிட்டு போய்டுவேன். இது எனக்கு பெரிய அவமானமா போச்சு.

அந்த ரிபோர்ட்ட திரும்பி வாசிக்கவே எனக்கு மனசு இல்ல, இதுல எங்க தப்ப கண்டுபிடிச்சு திருத்துறது? தொடாமலே வச்சிருந்தேன்.

நேத்து காலைல அப்பா ஹால்ல இருந்துட்டு என்னை கூப்ட்டாங்க. “என்னப்பா?”ன்னேன். “வா இங்க”ன்னு அழுத்தி சொன்னாங்க. சரின்னு மெதுவா காலை தூக்கி வச்சு எழுந்து, கட்டில இருந்து இறங்கி, வாக்கர் எடுத்து ஒத்த கால்ல துள்ளி துள்ளி அப்பா கிட்ட போய் நின்னேன். “உக்காரு”ன்னு பக்கத்துல காட்டுனாங்க. உக்காந்தேன்.

“ரிபோர்ட் ரெடி பண்ணிட்டியா?”

“இல்லப்பா, மனசு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு”

“என்னாச்சுடா?”

“அம்மா இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்லப்பா”

நான் இப்படி சொல்லியிருக்க கூடாது. பாவம், அவர் என்ன வேணும்னா அம்மாவ போன்னு அனுப்பி வச்சிருப்பாரு. எங்களுக்காக தான இத்தன நாளும் வாழ்ந்துட்டு இருக்கார். இந்த வார்த்தைய சொல்லி முடிச்சதும் சட்டுன்னு நாக்க கடிச்சுக்கிட்டேன். என்ன கடிச்சி என்ன பிரயோஜனம், வார்த்தைய விட்டுட்டேனே.

“சாரிப்பா, சாரி... நான் வேற எந்த அர்த்தத்துலயும் சொல்லல” சட்டுன்னு நெருங்கி அப்பா கைய புடிச்சுகிட்டேன். அப்பா முகத்த பாக்க தெம்பில்லாம அவர் தோள்ல சாஞ்சுகிட்டேன்.

என்ன நினைச்சார்னே தெரியல, கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துட்டு இருந்தார். அப்புறம் மெதுவா, “அப்பா உனக்கு ஏதாவது கஷ்டம் குடுக்குறேனாடா”ன்னார்.

“ஐயோ, இல்லப்பா, உங்கள மாதிரி அப்பா யாருக்கு கிடைப்பா, நான் ஏதாவது கஷ்டம் குடுக்குறேனா?” இன்னும் நெருக்கமா அப்பா நெஞ்சுல சாஞ்சுகிட்டேன்.

அப்பா எனக்கு நெத்தில முத்தம் குடுத்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவர் கிட்ட உக்காந்து பேசியும் நாள் ஆகிடுச்சு. இதுக்கு முன்னால கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னாடி நான் கொஞ்சம் தடுமாற்றத்துல இருந்தப்ப, “ஒரே ஒரு வாக்குறுதி குடுப்பியா”ன்னு கேட்ருந்தார். என்னன்னு கேட்டதுக்கு, “எப்படியாவது பி.ஹச்.டி முடிச்சுடு, மனச மட்டும் தளர விட்டுடாத”ன்னு கேட்டுகிட்டார்.

“நாம நினைக்குற மாதிரி எப்பவும் வாழ்க்க அமைஞ்சுடாது. அதுக்காக நம்மோட பாதைய அப்படியே விட்டுரவும் கூடாதுல. என் பொண்ணு புத்திசாலின்னு எனக்கு தெரியும். அவளுக்கு தெரியாதது எதுவுமில்ல” அப்பா திடீர்னு அப்படி சொன்னப்ப எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு.

“நான் முடிச்சுடுறேன்ப்பா. ஒரு மூணு மணி நேரம், அவ்வளவு தான் ஆகும். கண்டிப்பா திங்கள் கிழமை நாம திருப்பி சப்மிட் பண்றோம்”

அப்பா முகத்துல புன்னகை. உச்சந்தலைல முத்தம் குடுத்தார்.

“அம்மா இருந்துருந்தா, உன்னை இன்னும் நல்லா கவனிச்சிருப்பா. ஆனா என் பொண்ணு அவளுக்கு என்ன தேவைங்குறத கேக்க தயங்க மாட்டான்னு ஒரு நம்பிக்கை. அதனால தான் அப்பா உன்னை அதிகம் கண்டுக்குறதில்ல”

“இத நீங்க சொல்லவே வேணாம்ப்பா. எனக்கே தெரியும்”

அடுத்து என்ன பேசுறதுன்னே தெரியல. கேக்க நிறைய வார்த்தைகள், சொல்ல நிறைய வார்த்தைகள்ன்னு இருந்தாலும் என்னவோ தொண்டைக்குள்ள அடச்சுட்டு இருந்துச்சு. மனசு முழுக்க குழப்பம். நான் சரியா தான் இருக்கேனா, ஒருவேளை சரியில்லனா என்னை எப்படி மாத்திக்க? அப்பாகிட்ட எப்படி கேக்க? எதுவுமே புரியல. மவுனம் மட்டும் தான் அந்த இடத்துல இருந்துச்சு.

“அப்பா”

“சொல்லுடா”

“நான் ஏதாவது தப்பு பண்றேனா?”

“உன் மனசுக்குள்ள பயம் இருக்கா?”

இதுக்கும் என்ன பதில் சொல்லன்னு தெரியல. மறுபடியும் மவுனம். அப்பா தான் அத உடைச்சாங்க.

“என் பொண்ணு மனசுல பயம் வராதே”

“அது வந்துப்பா....”

“தப்பு பண்ணிட்டோம்னு பயப்படுறியா?

“................................”

“என் பொண்ணு தப்பு பண்ணினாலும் உடைஞ்சு போய் உக்கார மாட்டா. அத எப்படி சரி செய்றதுன்னு இந்நேரம் யோசிச்சு முடிவு எடுத்துருப்பா”

எனக்கு கொஞ்சம் வெக்கமும் சிரிப்பும் வந்துடுச்சு...

“ப்ப்ப்ப்பா.... போங்கப்பா”

“பயம் மட்டும் மனசுக்குள்ள வராம பாத்துக்கோ. தப்பு பண்ணிட்டன்னு தோணிச்சுனா வருத்தப்படு, அதுக்காக அதையே நினச்சுட்டு இருக்காத. அடுத்த ஸ்டெப் அடுத்த ஸ்டெப்ன்னு போய்ட்டே இரு”

அப்பாவ இன்னும் இறுக்கமா அணைச்சுகிட்டேன். மெதுவா என் கால குனிஞ்சு பாத்தேன்.

“கால் இல்லாம கார் ஓட்ட முடியாதாப்பா?”

“ஓட்டலாமே, அது உனக்கு அவசியப்படாது, அப்படி அவசியப்பட்டா, அப்பா உனக்கு புதுசா கார் வாங்கித் தாரேன்”

என் முகத்துல பெருசா ஒரு புன்னகை. மெல்ல எழுந்தேன், “நான் போய் ரிபோர்ட் ரெடி பண்றேன்ப்பா... அத முடிச்சுட்டு தான் அடுத்த வேலை”ன்னு சொல்லிட்டு அப்பா கைய புடிச்சுகிட்டேன்.

“லவ் யூ அப்பா”

அப்பா எதுவுமே சொல்லல, சின்னதா ஒரு சிரிப்பு, “போ”ன்னு ஒரு சின்ன தலையசைப்பு. அவ்வளவு தான், நான் ரூமுக்கு வந்துட்டேன்.

இந்தா, இப்ப ரிபோர்ட் ரெடி பண்ணிட்டேன். படிச்சு பாத்து தான் எவ்வளவு தப்பு போட்ருக்கேன்னு எனக்கே தெரியுது. ஹஹா... நான் தப்பு பண்ணிட்டு எக்சாமினர திட்டிட்டு இருந்துருக்கேன்...


Thursday 20 August 2015

பொறாமைகளின் இரவு


மழைத்துளிகளாய் மனம்
குதூகலிக்கிறது பார்த்தி...

இன்று நீ வரப் போகிறாய்...
அதுவும் நீண்ட ஒரு பிரிவுக்கு பின்...

காதுகளை தீட்டி வைத்துள்ளேன்
சருகுகளின் மேல் விழும்
சாரலின் லயம் மீறி
உன் காலடி ஓசை கேட்குமென்று...

அப்பப்பா, இந்த இரவுக்கு தான்
எத்தனை பொறாமை என்னோடு...
பாரேன், உன்னை கண்ணில் காட்டுவேனா என்று
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது...

பார்த்தி, சில்வண்டுகள் கூட
சிலுசிலுத்து அடங்கி விட்டன...
அதோ அந்த பன்னீர் ரோஜா
உனக்காகவே இரவில் மலர்வதாய்
சபதம் பூண்டிருக்கிறது...

வந்து விட்டாயா பார்த்தி,
இரு, இரு, அப்படியே
முன்னால் வந்து நிற்காதே...

கொஞ்சம் ஒளிந்து கொள்...
உனக்கான இந்த இரவின் தவிப்பை
இன்னும் கொஞ்சம் அனுபவித்துக் கொள்கிறேன்...
நீயும் ஆசுவாசப் படுத்திக் கொள்...

அதன்பின் அதோ,
அந்த மழைத்துளிகள்
பன்னீர் ரோஜா,
சில்வண்டுகள்,
அடர் இருள் அத்தனையும்
பொறாமையால் பொசுங்கட்டும்...

Thursday 13 August 2015

செக்ஸ் கல்வி – எப்படி இருக்கணும்?


லேப்டாப் பார்மட் குடுத்த இடத்துல இருந்து கிடைக்கவே இல்ல. மொபைல்ல பேஸ்புக் வர்றது கடுப்பா இருக்குங்குறதால அதிகமா இன்பாக்ஸ் பக்கம் எட்டிப் பாக்குறது இல்ல. எதேச்சையா இன்னிக்கி பாக்கும் போது மகேஷ் ஒரு லிங்க் குடுத்து, அக்கா இத படிங்கன்னு மெசேஜ் அனுப்பி வச்சிருந்தான்.

லிங்க் கிளிக் பண்ணி என்னன்னு பாத்தா, இந்த வார “வலைச்சரம்”ல என்னைப் பற்றிய அறிமுகம். வலைச்சரத்துல அறிமுகப்படுத்தப்படுறது புதுசு இல்லனாலும் இந்த வாரம் என்னை பற்றி எஸ்.பி.செந்தில் குமார் அண்ணா எழுதியிருந்தது கொஞ்சம் யோசிக்க வச்சது. இதுவரைக்கும் எல்லாருமே என்னோட எழுத்துக்கள பாராட்டியிருந்தாலும் இவர் தான் என்னை துணிவான பெண்னு சொல்லியிருக்கார். பாலியல் கல்வியை ஒரு பக்கம் கொண்டு வரலாமா வேணாமான்னு ஒரு பக்கம் விவாதம் நடந்துகிட்டு இருக்குற நேரத்துல அத நான் அமைதியா செயல்படுத்திட்டு வரேன்னு சொல்லியிருந்தார்.

வழக்கமா என்னோட எழுத்துக்கள் யாரையும் புண்படுத்தாம படிச்சா ஜாலியா சந்தோசமா உணர்ந்துட்டு போய்டணும்ங்குற ரேஞ்ச்க்கு தான் இருக்கும். எந்த புள்ளியில இருந்து என்னோட எழுத்துக்கள் இந்த மாதிரி மாற ஆரம்பிச்சதுன்னு சொல்லத் தெரியல. ஆனா, ஒரு விசயத்துல நான் தெளிவா இருக்கேன். என்னோட பதிவு உணர்சிகள தூண்டுற மாதிரி இருந்துடக் கூடாது, புத்தியை தூண்டுறதா தான் இருக்கணும்னு. நான் இப்படி எழுத என்னோட அம்மா பெரிய இன்ஸ்பிரேசனா இருந்தா. எத்தனை பேருக்கு இப்படி ஒரு அம்மா கிடைப்பான்னு தெரியல. அதனால தான் என்னோட அம்மாவையும், அவ வளர்ப்புல வளர்ந்த என்னையும் உங்க முன்னால நிறுத்தி, உங்கள் குழந்தைகள சுதந்திரமா சிந்திக்க விடுங்கன்னு கேட்டுட்டு இருக்கேன்.

எல்லா குழந்தைகளுமே அவங்கவங்க ப்ரெண்ட்ஸ் மூலமாவோ இல்ல, வீட்ல அம்மா அப்பா தனியா இருக்கும் போதோ பாத்துட்டு தான் தங்களோட உலகம் தவிர்த்து இன்னும் என்னவோ நடக்குதுன்னு புரிய ஆரம்பிக்குறாங்க. அப்படி தான் நான் எய்த் படிக்கும் போது பிரெண்ட் ஒருத்தி குழந்தை எப்படி பிறக்கும் தெரியுமான்னு கேட்டு காதுக்குள்ள குசுகுசுன்னு சில விசயங்கள சொன்னா. அதோட, இந்த விசயத்த பத்தி பசங்க கிட்டயோ இல்ல வேற யார் கிட்டயுமே கேக்க கூடாது, இது அவ்வளவு பெரிய டாப் சீக்ரெட்ங்குற ரேஞ்ச்ல பில்ட் அப் வேற.

அத கேட்ட நிமிசத்துல இருந்து ஒரு மாதிரி அருவெறுப்பு. இப்படி எல்லாம் நடக்குமா, கண்டிப்பா நடக்காது, இந்த புள்ள என்னவோ பொய் சொல்லுதுன்னு தான் திரும்ப திரும்ப மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். வீட்டுக்கு வந்த உடனே அம்மா கிட்ட ஓடிப் போய் “அம்மா, அம்மா, இந்த மாலதி என்னென்னமோ சொல்றா, அதெல்லாம் தப்பு தான, அப்படி எல்லாம் நடக்காது தான”ன்னு தலையும் இல்லாம வாலும் இல்லாம படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டேன்.

“ஏய், ஏய் பொறு, அப்படி அவ என்ன சொன்னா?”ன்னு அம்மா கேட்டதுக்கு அப்புறம் தான் “அம்மா, மாலதி சித்திக்கு கல்யாணம் ஆச்சுல, அவ சொல்றா, பஸ்ட் நைட்ல இப்படி எல்லாம் நடக்கும், அப்ப தான் குழந்தை பிறக்கும்னு. அதெல்லாம் பொய் தான”ன்னு கேட்டுட்டு அம்மா பொய் தான்னு சொல்லணும்னு எதிர்பார்ப்போட அம்மாவையே பாத்துட்டு இருந்தேன்.

அம்மா சிரிச்சுட்டே என் தோள் பிடிச்சு சோபால உக்கார வச்சா. முட்டிப் போட்டு என் முன்னால உக்காந்துட்டு என் கண்ணையே பாத்துட்டு இருந்தா. அப்புறமா, நம்ம வீட்ல கோழி எப்படி முட்டை போடுதுன்னு கேட்டா. சேவல் கொத்தினா தானமா முட்டைப் போடும்ன்னு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சுட்டு சரி வேற சொல்றேன், மாடு எப்படி சினை பிடிக்கும்?ன்னா. டாக்டர் வந்து ஊசிப் போடுவாங்கன்னேன். க்ளுக்ன்னு சிரிச்சுட்டா.

எனக்கு செம கோபம். “ம்மா, நான் என்ன கேக்குறேன், நீ என்ன சொல்லிட்டு இருக்க, இப்ப எதுக்கு சிரிச்ச”ன்னு. “இல்ல, உனக்கு `புரிய வைக்குற மாதிரியான உதாரணத்த நான் சொல்லலல, அத நினச்சு சிரிச்சேன்னு சொல்லிட்டே, எல்லாத்தையும் விடு. நம்ம வீட்டுல ஆடு எப்படி சேர்த்து விடுவாங்க, கிடா என்னப் பண்ணும்?

அது வரைக்கும் அத எல்லாம் பாத்துருந்தாலும் ஜஸ்ட் லைக் தட், ஆடு சேர்த்து விட்டா தான் குட்டிப் போடும்னு கடந்து போயிருக்கேன். இப்ப தான் யோசிக்க ஆரம்பிச்சேன். அப்ப சேவல் கூட அப்படி தான் பண்ணுதா. எல்லாருமே அப்படி தானா?

“அதே தான், இது தான் இயற்கை. நீ சின்னப் பொண்ணு, இப்போதைக்கு இது தெரிஞ்சுகிட்டா போதும், அதுக்காக சந்தேகம் வரக் கூடாதுன்னு இல்ல, என்ன சந்தேகம்னாலும் அம்மா கிட்ட கேட்டுக்கலாம்” அம்மா தலைய செல்லமா கலைச்சு விட்டுட்டு போய்ட்டா.

அதுக்கப்புறம் அதுக்கான தெளிதல்கள் புரிதல்கள்ன்னு வர ஆரம்பிச்சப்ப, நான் சரியா தான் சிந்திக்குறேனான்னு அம்மா கிட்ட கேட்டுப்பேன். (இந்த காலத்துல இப்படி ஒரு கேள்விய எதிர்கொள்ற அம்மாக்களுக்கு விளக்கம் குடுக்க கஷ்டம் தான், பாவம் கோழிய பக்கட் சிக்கனா தான் பாத்துருப்பாங்க, ஆடு, மாடுனா மட்டன். அவ்வளவு தான். உயிரோட பாக்குறதே அபூர்வம்ங்குரப்ப அத தாண்டி அதுகளோட வாழ்வியல் முறைகள எங்க உத்துப் பாக்குறது?)

“மாடு கூட காளை கூட சேர்ந்தா தான் குட்டிப் போடும், ஆனா நம்ம வீட்ல மட்டும் எப்படி டாக்டர் ஊசி போட்டா மாடு சினையாகுது?” –இந்த கேள்வி எழுந்ததுக்கு பலனா, ஒரு உயிர் உருவாகுரதுக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு பேரும் இணையுறது காரணம் இல்ல, ஆனா அவங்க உடல்ல இருக்குற சினை முட்டையும், விந்துவும் தான் காரணம்னு புரிஞ்சுது. அப்பவே என்னோட தேடல் விஞ்ஞானம் நோக்கி நகர ஆரம்பிச்சுடுச்சு.

க்ளாஸ்ல எல்லாரும் அப்பவும் பஸ்ட் நைட் பத்தி ஆச்சர்யப்பட்டுட்டு இருக்குற நேரத்துல நான் டெஸ்ட் ட்யூப் பேபி பத்தி சிலாகிச்சுட்டு இருப்பேன்.

அப்ப தான் பக்கத்து வீட்ல ஒரு அக்காவுக்கு குழந்தை இல்லன்னு ரொம்ப நாள் வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. நான் அம்மா கிட்ட போய், அவங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல, அப்ப அவங்களும் அவங்க ஹஸ்பன்டும் அப்படி பண்ணுவாங்கல, அப்புறம் ஏன் குழந்தை பிறக்கலன்னு கேட்டேன். அதுக்கப்புறம் தான் அதையெல்லாம் தாண்டி, ஒரு குழந்தை உருவாகுறதுல இருந்து பிறக்குறது வரைக்கும் நிறைய சிக்கல்கள கடந்து வரணும்னு புரிஞ்சுகிட்டேன்.

மேட்டிங் (mating) மட்டுமே ஒரு குழந்தையை பிறக்க வைக்குறதுக்கான தகுதியாகி விடாது. அதுக்கான சரியான நேரம்ன்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு முன்னால ஆண் பெண் ரெண்டு பேரும் உடல் அளவுல முழு வளர்ச்சி அடைஞ்சிருக்கணும். ரெண்டு பேருமே வயசுக்கு வந்துருக்கணும். ஒரு பொண்ணோட உடம்புல நடக்குற மாதாந்திர சுழற்சி தான் அவள தாயாகுற பக்குவத்துக்கு தயார் படுத்தும். ஆண்களோட உடம்புல கோடி கணக்குல விந்தணுக்கள் இருக்கு. ஆனா பெண்ணுக்கு ஒரு மாசம் ஒரே ஒரு முட்டை தான் உருவாகுது (சிலநேரம் அதிகம் இருக்கும்). அதுவும் சரியான நாள்ல விந்தணுக்கள எதிர்கொள்ளலனா அழிஞ்சு போய்டுது.

வீட்ல மாடுகளாகட்டும் ஆடுகளாகட்டும், சினை பிடிக்குற நாட்கள்ல ரொம்ப ரெஸ்ட்லஸ்சா இருக்கும். யூரின் போற இடத்துல வெள்ளையா மாசியடிக்கும். ம்மா... ம்ம்மான்னு அடிக்குரல்ல அது கத்துறத பாத்தே அது எதுக்காக கத்துதுன்னு கண்டுப் பிடிச்சிடுவாங்க. இந்த நாட்கள்ல சேர்த்து விட்டா தான் அதுக்கு சினை பிடிக்கும். அப்படி இருக்கும் போது அதுவே தானே பெண்களுக்குமாவும் இருக்கணும். பெண்களுக்கும் ஹீட் பீரியட் இருக்கு. அந்த நேரத்துல அவங்க உடம்புல மாறுதல் வரும். பீரியட்ஸ் வந்த ஏழுல இருந்து இருபத்தி ஓரு நாட்களுக்குள்ள பெண்களோட உடல் அமைப்பை பொறுத்து இந்த நாள் மாறுபடும். இது கிட்டத்தட்ட மூணு நாள் நீடிக்கும் (வித்யாசங்கள் உண்டு). இந்த நேரம் முழு வளர்ச்சி அடைஞ்ச முட்டை கருக்குழாய்ல வந்து விந்துக்காக காத்திருக்குது. செக்ஸ்சுவல் ஆர்ஜ் (செக்ஸ் பசின்னு கூட வச்சுக்கலாம்) இந்த நேரம் பெண்களுக்கு அதிகமாகுது. இதனால அவங்களுக்கு தங்களோட இணை மேல ஆசை அதிகமாகுது.

ஆசைகளை வெளிப்படுத்துற பக்குவமோ, இல்ல துணிச்சலோ பெண்களுக்கு இல்லாம போயிடுது. இந்த சமூக கட்டமைப்பு அப்படியானதா அமைஞ்சு போயிடுது. அப்படியும் மறைமுகமா வெளிபடுத்துற பெண்கள் இருக்க தான் செய்றாங்க. சில பேர் வேற வழியில்லாம கோபமா அத வெளிப்படுத்துறாங்க. தன்னோட தேவைகள புரிஞ்சுக்காத கணவன் மேல எரிஞ்சி எரிஞ்சி விழுறாங்க. ஆனா பெண்களோட இந்த உணர்ச்சிகள எத்தனை கணவர்கள் புரிஞ்சுப்பாங்கன்னு தெரியாது. அவங்களுக்கு தேவ இல்லனா மனைவியை திரும்பி கூட பாக்குறது இல்ல. மாசத்துல அந்த மூணு நாட்களும் மனைவியை உதாசீனப்படுத்தினா அப்புறம் எத்தனை முறை முயற்சித்தாலும் எப்படி குழந்தை பிறக்கும்?

கருக்குழாய் அடைப்பு, மாத விடாய் பிரச்சனைகள், விந்துக்களோட வீரிய பிரச்சனை, விந்துக்களோட எண்ணிக்கை பிரச்சனைன்னு குழந்தை உருவாக தடையா இருக்குற பிரச்சனைகள்ன்னு இத தாண்டி பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா அதெல்லாம் இன்னொரு நாள் சொல்லணும்னு தோணுற நேரத்துல சொல்றேன். இப்ப நான் தலைப்புக்கு வர்றேன்.

செக்ஸ் கல்வி அவசியமா இல்லையான்னு கேட்டா, அத சரியான முறைல புரிஞ்சு, மாணவர்களுக்கு சொல்லிக் குடுக்குற பக்குவம் முதல்ல ஆசிரியர்களுக்கு வரணும்னு சொல்லுவேன். வெறும் புத்தகத்த வாசிச்சு அதுல இருக்குறத விளக்கிட்டு போற கல்வி முறை மாணவர்களுக்கு தேவை இல்ல. அத சமுதாய கட்டமைப்புகளோடும், உணர்வுகளோடும் சம்மந்தப்படுத்தி, குடும்பத்த எப்படி சரியான முறைல வழிநடத்தணும்னு சொல்லிக்குடுக்க தெரிஞ்சா செக்ஸ் கல்வி, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப அவசியமான ஒண்ணு.

சமீபத்துல ஒருத்தங்களோட போன்ல பேசிட்டு இருந்தேன் (சம்மந்தப்பட்டவங்க இத பார்க்க நேர்ந்தா என்னை தப்பா எடுத்துக்காதீங்க). அப்ப சமீபத்துல வயசுக்கு வந்த அவங்க பொண்ணு ஏதோ சந்தேகம் கேட்டா. பாரேன், அவ இப்படி எல்லாம் கேள்வி கேக்குறா, பெரியவ தான் ஏண்டி இப்படி எல்லாம் கேக்குறன்னு அதட்டி வைக்குறான்னு சொன்னாங்க. அப்ப நான் அவங்க கிட்ட சொன்னது இது தான். புள்ளைய கேள்வி கேக்காதன்னு அடக்கி வைக்காதீங்க. அவளுக்கு வர்ற சந்தேகத்த அவ வேற யார் கிட்ட போய் கேப்பா? நாம அடக்கி வச்சா ப்ரெண்ட்ஸ் கிட்ட போய் கேப்பா. அங்க அவளுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்னு என்ன நிச்சயம்? இதுக்கு நாமே பக்குவமா அவளுக்கு புரிய வைக்கலாமேன்னு. வயசுக்கு வந்த பொண்ணுக்கு வர்ற சந்தேகத்த தீர்க்குறதுல இருந்து, அவளோட பயத்த போக்குறது, சுத்தமா எப்படி இருக்குறதுங்குற வரைக்கும் சொல்லிக் குடுக்க வேண்டியது அம்மாவோட கடமை தானே.

நான் படிச்சது மெட்ரிக்குலேசன்ங்குறதால டென்த்-லயே ஆண் பெண் உடல் பகுதிகள், பெண்களுக்கு வர்ற பீரியட்ஸ், ஆண்களுக்கு நடக்குற மாறுதல்கள், கரு எப்படி உருவாகுது, கருத்தடை சாதனம் ஏன் உபயோகப்படுத்தணும்னு எல்லாமே புக்ல இருந்துச்சு. ஆனா அத சரியா சொல்லிக் குடுக்க சரியான ஆசிரியர் இல்ல. நாங்களே தான் படிச்சுக்க வேண்டியதா போச்சு. ஆனா அம்மா இருந்ததால குரூப் ஸ்டடி போட்டு சந்தேகத்த தீர்த்துக்குற அளவு துணிச்சலா இருந்தோம். அப்புறம் ஸ்டேட் சிலபஸ்ல ப்ளஸ் டு போனப்பவும் இதே பாட முறைகள் தான் இருந்துச்சு. ஆனா அந்த நேரம் நாங்க அத விட பலமடங்கு பிரச்சனைகள தெரிஞ்சுக்குற அளவு முன்னேறி இருந்தோம்.

இப்ப சமீபத்துல யூ.ஜி பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்கப் போனப்ப குழந்தை எப்படி பிறக்குதுன்னு ஒரு கேள்விய கேட்டேன். எல்லாருமே ஒருத்தர் மூஞ்சிய பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்குற அளவு தான் இருந்தாங்க. இந்த கேள்வி கேக்குறதே தப்புங்குற ரேஞ்ச்ல தான் இருந்துச்சு அவங்களோட புரிதல்கள். அப்படினா ப்ளஸ் டூ-ல இந்த பாடத் திட்டம் இருந்தும் ஏன் பிள்ளைங்க இதப் பத்தி பேச தயங்குறாங்க?

கொஞ்சம் கொஞ்சமா அவங்க தயக்கத்த போக்கி பேச வச்சா, குழந்தை பிறக்குறது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுற செக்ஸ் பீலிங்க்ஸ்னால தான் குழந்தை பிறக்குது. அது செக்ஸ் சம்மந்தப் பட்ட விஷயம்ன்னு பதில் வருது. ஒரு குழந்தை இல்லாம எத்தனையோ பேர் இந்த சமூகத்துல பல கேள்விகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்றாங்க. கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகிட்டாலே இன்னுமா எதுவும் விசேசம் இல்லன்னு கேக்க ஆரம்பிச்சுடுறாங்க. இந்த மாதிரியான கேள்வி கேக்குறதே தப்புன்னு எப்ப அவங்க புரிஞ்சுக்க போறாங்க. அது அவங்க உணர்வுகள காயப்படுத்துனு ஒரு சின்ன விசயம் கூடவா தெரியாம போயிடுது? நான் பிள்ளைங்களுக்கு சொல்றது இது தான், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை இல்லாம போறதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல மூக்கை நுழைச்சு அவங்கள காயப்படுத்துறது அநாகரீகம். ஒரு குழந்தை பிறந்தா மட்டுமே கணவன் மனைவிங்குற அங்கீகாரம் கிடைக்கும்ங்குற கட்டமைப்பை உடைச்சு எறியனும்னு. உடல் சார்ந்த க்ளாஸ் எடுக்கப் போற நீ இப்படி மனம் சார்ந்த பிரச்சனைகள பேசுறது சரிதானா, சிலபஸ்ல என்ன இருக்கோ அத நடத்திட்டு போக வேண்டியது தானேன்னு என் கோ-ரிசர்சர் ஒருத்தி ஒரு நாள் என் கிட்ட கேட்டா.

இந்த விசயங்கள தெரிஞ்சுக்க பிள்ளைங்களுக்கு சிலபஸ் தேவையில்ல. கூகிள தட்டினா போதும். ஆனா இந்த மாதிரியான மன உணர்வுகள அவங்களுக்கு யார் சொல்லிக் குடுப்பா. அவுட் ஆப் சிலபஸ்னு நினைச்சாலும் சரி, நான் இப்படி தான் இருப்பேன், இப்படி தான் சொல்லிக் குடுக்கப் போறேன்னு சொல்லிட்டேன்.

செக்ஸ் கல்வி எப்பவுமே வெறும் உடல் சார்ந்ததா இருக்க கூடாது, மனம் சார்ந்தும் இருக்கணும்ங்குறது தான் என்னோட நிலைப்பாடு, அத தான் நான் க்ளாஸ் எடுக்குற வரைக்கும் செயல்படுத்திட்டும் இருப்பேன். பெண் மனச ஒழுங்கா புரிஞ்சுக்குற ஆணால தான் அவள் உடலையும் மனசையும் புண்படுத்தாம ஆள முடியும். அதே தான் பெண்ணுக்கும். தன்னோட இணையின் தேவை அறிஞ்சி, ஒருத்தருக்கொரத்தர் விட்டுக் குடுத்தும் தட்டிகுடுத்தும் வாழுற தாம்பத்தியத்துல குழந்தை ஒரு பிரச்சனையே இல்ல.

இதெல்லாம் எப்படி எழுதுறீங்க காயத்ரி, உங்களுக்கு கூச்சமாவோ, தயக்கமாவோ இருக்காதா, எழுதுறதுக்கு முன்னால இப்படி தான் எழுதணும்னு எதுவும் முடிவு எடுத்து வச்சுப்பீங்களான்னு என் கிட்ட ஒருத்தங்க கேட்டாங்க. எனக்கு இத பத்தி சொல்ல எப்பவுமே கூச்சமோ தயக்கமோ வந்ததே இல்ல, இதெல்லாம் தப்புன்னு தோணுறதும் இல்ல. என்னைக் கேட்டா இதெல்லாம் ரொம்ப சாதரணமா பேசிக்க வேண்டிய விஷயம். எழுத ஆரம்பிச்சா எந்த விதமான தயக்கமும் இல்லாம அந்த நேரம் மனசுக்குள்ள இருக்குறத கடகடன்னு எழுதிடுறேன். அதனால தானோ என்னவோ பலநேரம் எங்கயோ ஆரம்பிச்சு என்னோட பதிவு எங்கயோ போய் முடிஞ்சு போயிடுது. ஒரு டீன் ஏஜ் வயசு பசங்க இத பத்தி தேடுறப்ப அவங்களளோட உணர்ச்சிய தூண்டாம, புத்தியை என்னோட பதிவு தூண்டிச்சுனா அது தான் என்னோட எழுத்தின் வெற்றின்னு சொல்லுவேன்.


மறுபடியும் பாக்கலாம்.

.

Friday 7 August 2015

நாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்



நாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்கணும். அப்பா அப்பான்னு கூப்ட்டு பாத்து சத்தம் இல்லாததால போன் பண்ணி, நாப்கின் தீந்து போய்டுச்சுப்பா, உடனே வாங்கிட்டு வாங்கன்னேன்.

நான் கொஞ்சம் வெளில இருக்கேனே, அவசரமா தேவையான்னு அப்பா கேட்டதும் சுள்ளுன்னு கோபம் வந்துடுச்சு. அப்புறம் துணி எல்லாம் பட்டுச்சுனா தொவச்சி போடுறது யாரு? நான் பாத்ரூம்லயே இருக்கேன், உடனே வேணும்பான்னு சொன்னதும் சரி, உடனே வர்றேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டார்.

ஒரு பத்து நிமிஷம் இருக்கும், அக்கா, அக்கான்னு தம்பி கூப்ட்டு சத்தம் கேக்குது. எத்தனையோ வருசத்துக்கு அப்புறம் அவன் என்னை இப்படி கூப்டுறான். இப்ப கொஞ்ச நாளாவே என் கிட்ட பேச ஆரம்பிச்சுட்டான்னாலும் ஏதாவது தரணும்னா “இந்தா”, “பக்கெட் சிக்கன்”, “பரோட்டா வேணுமா”ன்னு ஒத்தை வார்த்தைல தான் பேசுவானே தவிர, அக்கான்னு கூப்ட்டு எதுவும் ஆரம்பிக்க மாட்டான். திடீர்னு அவன் அக்கான்னு கூப்ட்டதும் ஒரே சந்தோசம். பாத்ரூம்ல இருந்து ஹுர்ரே-ன்னு ஓடியா வர முடியும்?

“நான் பாத்ரூம்ல இருக்கேன், என்ன வேணும்”னு கேட்டேன். “நாப்கின் பாக்கெட் இந்தா, பெட்ல வைக்குறேன்”னு சொல்லிட்டு பாட்டிகிட்ட “அக்காவுக்கு நாப்கின் எடுத்து குடுத்துடுங்க”ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

ஹப்பாடா, நாப்கின் வந்துடுச்சுன்னு நிம்மதியா ஒரு பெருமூச்சு விட்டுட்டு பாக்கெட்ட நிமிர்ந்து பாத்தா நான் வழக்கமா யூஸ் பண்ற ப்ராண்ட் இல்லாம இது வேற. இந்த பயலுக்கு நான் யூஸ் பண்ற ப்ராண்ட் கூட மறந்து போச்சான்னு சிடுசிடுத்துட்டே வேற வழியில்லாம அத வச்சுட்டு வெளில வந்தேன். ரூமுக்குள்ள வந்து கட்டில்ல பாத்தா அதே ப்ராண்ட்ல இன்னும் ரெண்டு பாக்கெட் இருக்கு. உடனே அப்பாவுக்கு போன் பண்ணி அப்பா, தம்பி வேற ப்ராண்ட் வாங்கிட்டு வந்துட்டான். நீங்க வரும் போது எனக்கு தேவையானத கண்டிப்பா வாங்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டேன்.

ஒரு நாப்கின்ல என்ன ப்ராண்ட் பாக்க வேண்டியிருக்குன்னு கேட்டா, கண்டிப்பா இருக்கு. ஒவ்வொரு மாசமும் வர்ற பீரியட்ஸ் வயித்து வலிய மட்டுமில்லாம, உடம்பு வலி,முதுகு வலி, மயக்கம், தலைசுத்துன்னு எப்படி பட்ட அவஸ்த்தய குடுத்தாலும் சரியான நாப்கின் யூஸ் பண்ணினா ஒரு மாதிரி கம்போர்ட்டா இருக்குற மாதிரி பீல் ஆகும். வலில எவ்வளவு உருண்டு பொரண்டாலும் அந்த நாப்கின் தான் ட்ரெஸ்ல கறை படுறத தடுக்கும்.

நாப்கினோட வேலை, ரெத்தத்த உறிஞ்சுட்டு கறைபடாம தடுக்குறது மட்டும் தானா?

மார்கெட்ல பாத்தா அல்ட்ரா தின்ல இருந்து எக்ஸ்ட்ரா லார்ஜ் வரைக்கும் விதம் விதமா நாப்கின் விக்குறாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ராண்ட் செட் ஆகும். அத நாமா யூஸ் பண்ணி அனுபவத்துல தெரிஞ்சுகிட்டா தான் உண்டு. இன்னமும் நாப்கின் சரியா யூஸ் பண்ண தெரியாதவங்களும் எவ்வளவோ பேர் இருக்காங்க. சில பேருக்கு என்ன நடந்தாலும் சரி, ஓவர் ப்ளீட் ஆகுறதுல ட்ரெஸ் கறை பட்டுர கூடாது, அதுக்கு எது வேணா யூஸ் பண்ணலாம்னு நினைப்பாங்க.

அதென்னமோ இந்த விஸ்பர் மேல மக்களுக்கு அவ்வளவு மோகம். நாப்கின்னு சொன்னாலே முதல்ல விஸ்பர் தான் நியாபகத்துக்கு வருது. அதுலயும் அல்ட்ரா தின் நாப்கின்கள் வச்சா, வச்ச மாதிரியே இருக்காது, ரொம்ப கம்போர்டபிளா பீல் பண்ணுவாங்க. அதே மாதிரி எவ்வளவு ப்ளீட் ஆனாலும் தாங்கி பிடிக்கும். அதையே கொஞ்சம் நிதானிச்சு யோசிச்சு பாத்தா இந்த மாதிரி அல்ட்ரா தின் நாப்கின்கள்ல மேல கவர் சொரசொரப்பா இருக்கும். தொடர்ந்து யூஸ் பண்ணிட்டு இருந்தா ரெண்டாவது நாளே தொடை எல்லாம் அறுத்து சிவந்திடும். அப்புறம் பீரியட்ஸ் அவஸ்தையோட சேர்ந்து இதையும் அனுபவிக்கணும். இதுக்காகவே என்னோட சாய்ஸ் காட்டன் நாப்கின்கள் தான். கொஞ்சம் திண்ணமா இருந்தாலும் உடம்புக்கு எந்த தீங்கும் இருக்காது. ராஸஸ் வர்றது ரொம்ப கம்மி.

இன்னும் சில பேர் டாம்பான் யூஸ் பண்றாங்க. ஒரு சாக்பீஸ் துண்டு மாதிரி உள்ள சொருகி வச்சுட்டா உள்ளயே ப்ளீடிங் அரெஸ்ட் ஆகிடும். வசதியோ வசதி. ஆனா இதனால வர்ற சைட் எபக்ட்ஸ் நிறைய பேருக்கு புரியவே புரியாது. நல்ல வேளை இந்த டாம்பான் நம்ம இடங்கள்ல பயன்படுத்துறது ரொம்ப குறைவுன்னு நினைக்குறேன். ஒரு தடவ ஹாஸ்பிடல் போயிருந்தப்ப டாக்டர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது எதேச்சையா இத பத்தி பேச நேர்ந்துது. இந்த டாம்பான் யூஸ் பண்றதால டீன் ஏஜ் மரணங்கள் அதிக அளவுல ஒரு காலத்துல (1980s) நடந்துச்சாம். உடம்புல இருந்து வெளியேறுற ரெத்தத்த வெளிலயே வர விடாம உள்ளயே அடக்கி வைக்குறதால வெஜைனால இருக்குற சில நுண்ணுயிர்கள் (Steptococcus sp) ரெத்தத்த உணவா பயன்படுத்தி, விசத்த வெளிபடுத்துது. இந்த விசத்துனால செத்துப் போனவங்க ஏராளம் பேர். இத டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் (toxic shock syndrome)ன்னு சொல்றாங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், ஒரு பாக்டீரியா கிட்டத்தட்ட இருபதுல இருந்து அரைமணி நேரத்துக்குள்ள தன்னோட இனத்த டபுள் டபுளா பெருக்கிடும்னு.

மரணம் வெளில சட்டுன்னு தெரிஞ்சுடுறதால அந்த பாதிப்பு மட்டும் தான் பெருசா தெரியும். ஆனா இதே டாம்பானோ இல்ல நாப்கினோ ரொம்ப நேரம் யூஸ் பண்றதால வர்ற இன்னொரு பாதிப்பு குழந்தையின்மை. இன்னைய காலகட்டத்துக்கு வேலைக்கு போகாம வீட்லயே பொண்ணுங்க இருக்க முடியாது. அதனால இத எல்லாம் யூஸ் பண்ண வேண்டியதாயிருக்கு. ரொம்ப நேரம் வெளியேறுற ரெத்தத்த இப்படி அடைச்சி வைக்குறதால சில நேரம் ரெத்தம் ரிவர்ஸ்ல கருக்குழாய்க்குள்ள ஏறிடுமாம். இதனால கருப்பைல உருவாகுற முட்டை ஒழுங்கா கர்ப்பபைக்குள்ள வர முடியுறதில்ல. இதுவும் டாக்டர் சொன்னது தான். இத ஈசியா கரைச்சு எடுத்துடலாம்ன்னு டாக்டர் சொன்னாலும் எத்தனையோ பேர் அத பெரிய விசயமா எடுத்து, ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்னு காசை கரியாக்கினவங்களும் இருக்காங்களாம்.

அதுக்காக நாப்கின் யூஸ் பண்ணாம இருந்துடவும் முடியாது. என்ன ப்ராண்ட் யூஸ் பண்ணினாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் தான் ஒரு பேட் யூஸ் பண்ணனும். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாளைக்கு மூணு பேட் மாத்தலாம். நிறைய ப்ளீட் ஆனா அதுக்கு தகுந்த மாதிரி மாத்திகிட்டே இருக்கனும். தொடைல எரிச்சலோ, சிவந்து போனாலோ சொரசொரப்பா இருக்குற ப்ராண்ட் அவாய்ட் பண்ணிடுறது நல்லது. நல்லா ஸ்மூத் சர்பேஸ் இருக்குற ப்ராண்ட்களும் கிடைக்க தானே செய்யுது. ஆனா எது யூஸ் பண்ணினாலும் சுத்தமா பராமரிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு தடவ பாத்ரூம் போகும் போதும், பாத்ரூம் டவல் யூஸ் பண்ணி நல்லா தொடச்சுட்டு அப்புறம் நாப்கின் வச்சுக்கலாம். இதெல்லாம் ட்ராவல் நேரத்துலயோ ஆபிஸ் நேரத்துலயோ முடியலனாலும் அட்லீஸ்ட் டிஷ்யூ யூஸ் பண்ணலாம். எப்படியோ மொத்தத்துல கிளீனா இருக்கவேண்டியது முக்கியம்.

ரொம்ப போர் அடிக்குறேன்னு நினைக்குறேன். அதனால நம்ம ஸ்டைலுக்கு வந்துருவோம்.

என் ஸ்கூல் டேஸ்ல இந்த நாப்கின் கூட கிடைக்காம எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுருக்காங்க. ஆனாலும் எங்க டீம் கொஞ்சம் அதிரடியானது. எங்க டீம்ல யாருக்கு பீரியட்ஸ் வந்தாலும் கூச்சமே படாம நாப்கின் வேணும்னு மிஸ் கிட்டயோ கடைலயோ போய் கேட்ருவோம். அதுவும் பல நேரம் நடக்க முடியாம பசங்க கிட்ட சொல்லிவிட்டு வாங்குறதும் உண்டு. ஸ்கூல்ல மத்த பிள்ளைங்க எல்லாம் எங்க டீமை கொஞ்சம் வித்யாசமா தான் பாப்பாங்க.

ஒரு நாள் இப்படி தான், செவன்த் படிக்குற ஒரு பொண்ணுக்கு பீரியட்ஸ். அன்னிக்கி திங்கட்கிழமைங்குறதால யூனிபார்ம் வேற வொயிட் அண்ட் வொயிட். சின்ன பொண்ணுங்குறதால முன் யோசனை எதுவுமில்லாம நாப்கின் எதுவும் கொண்டு வராம ஸ்கூல் வந்துட்டா. அப்ப பாத்து ஸ்போர்ஸ் டே, ஸ்கூல் டே நெருங்குறதால அதுக்கான ரிகர்சல்ல நிறைய பேர் இருந்தாங்க. ஒழுங்கா க்ளாஸ் எதுவும் நடக்கல. இந்த பொண்ணு வயித்து வலில ஒரு மரத்தடில உக்காந்துட்டு இருந்துருக்கா. என் ப்ரெண்ட் ஒருத்தன் பாத்துட்டு, ஏன் இங்க வந்து உக்காந்துருக்க, ஏன் அழுறன்னு கேட்டதுக்கு பதில் எப்படி சொல்லன்னு தெரியாம அவ திருதிருன்னு முழிச்சிருக்கா.

போ, ஒழுங்கா க்ளாஸ்ல போய் உக்காருன்னு அவன் அதட்டியிருக்கான். வேற வழியில்லாம அவ எழுந்து போனப்ப தான் அவ ட்ரெஸ்ல கறைய கவனிச்சிருக்கான். எங்க கிட்ட வந்து, நாப்கின் இருந்தா அந்த பொண்ணுக்கு குடுங்க, பாவம் பிள்ள அழுதுட்டு இருக்குன்னு சொன்னான். எங்க யார் கிட்டயும் இல்ல, மிஸ் கிட்ட போய் கேட்டா, அன்னிக்கி பாத்து நாப்கின் தீந்து போய்டுச்சாம். ஸ்கூல்லயும் ஸ்டாக் இல்ல. சரி, பக்கத்து கடைல வாங்கலாம்னா எங்க கெட்ட நேரம், கடை பூட்டியிருக்கு.

கறைபடுறது ஒண்ணும் உலகமகா குத்தம் இல்ல, ஆனா அந்த கறை அதோட முடிஞ்சுடாது. மறுபடியும் மறுபடியும் ப்ளீட் ஆகிட்டே இருக்கும். அந்த பொண்ணு பயத்துல அழவே ஆரம்பிச்சுட்டா. மிஸ் எல்லாரும் ஒவ்வொரு ஈவென்ட்ல பிசி. அப்படியே சில பேரு பக்கத்துல நின்னாலும் நேப்கின் கிடைக்காம கைய பிசஞ்சுட்டு நிக்குறாங்க. எனக்கு செம கடுப்பு. இந்த ஸ்கூல்ல ஒரு நேப்கின் கூடவா கிடைக்கலன்னு. என்ன கடுப்பாகி என்ன பண்ண?

அப்ப தான் என்னோட ப்ரெண்ட்ஸ்ல ஒருத்தன் ஒரு காரியம் பண்ணினான். சட்டுன்னு அவன் போட்டுருந்த பனியன கழட்டி என் ப்ரெண்ட் ஒருத்தி கிட்ட குடுத்துட்டு, எங்க வீட்ல அம்மாவும் தங்கச்சியும் பழைய பனியன் துணிய தான் யூஸ் பண்ணுவாங்க, அதனால இத யூஸ் பண்ண சொல்லுன்னு சொல்லியிருக்கான். அவளும் நாங்களும் அப்புறம் அந்த பொண்ணை பாத்ரூம் கூட்டிட்டு போய் பனியனை மடிச்சு குடுத்து, வைக்க சொல்லிட்டு, அவ ஸ்கர்ட்ட துவைச்சு குடுத்துட்டு வந்தோம்.

அதுக்கப்புறம் ஸ்கூல்ல எது தீர்ந்தாலும் பரவால, கண்டிப்பா நாப்கின் தீரக் கூடாதுன்னு பிரின்சிபால்கிட்ட போய் சொல்லி, அதுக்கான ஏற்பாடும் பண்ண வச்சோம். அந்த பொண்ணு தான் ரொம்ப நாள் கூச்சத்துல எங்கள கண்டா ஓடி ஒளிஞ்சுகிட்டு இருந்தா. அவள சஜமாக்குறதுக்குள்ள நாங்க ஒருவழி ஆகிட்டோம்.


.