Saturday 22 August 2015

அப்பாவும் நானும்படுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒரு வாரமா தான் எழுந்து உக்காந்து, காலை கீழ தொங்க போட்டுட்டு, நாலு ஸ்டெப் வாக்கர் உதவியோட எடுத்து வைக்க முடியுது. அதுவும் இன்னும் காலை கீழ ஊனல. இது சரியானா தான் அடுத்த சர்ஜரி பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க.

ஏற்கனவே சர்ஜரி முடிஞ்ச பத்தாவது நாளு எனக்கு ரிவியூ மீட்டிங் இருந்துச்சு. நான் போக முடியாததால முடிஞ்ச அளவு படுத்துக் கிடந்தே ரிபோர்ட் ரெடி பண்ணி வேற ஸ்டுடென்ட்ட ப்ரெசென்ட் பண்ண சொல்லி அனுப்பி வச்சேன். ஸ்பெசல் கேஸ்னு ஒத்துகிட்டாங்க.

ஆறு நாள் முன்னால என்னோட ரிபோர்ட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கு, அத சரி பண்ணி வைங்கன்னு திரும்பி வந்துடுச்சு. எனக்கு பயங்கர ஷாக். வாழ்க்கைல முதல் முறையா லைப்ல தோத்துப்போன பீலிங். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு எதுல மிதப்பு இருக்கோ இல்லையோ, என்னோட சப்ஜெக்ட்ல பயங்கர மிதப்பு உண்டு. என்ன டாப்பிக்கா இருந்தாலும் அசால்ட்டா சொல்லிட்டு போய்டுவேன். இது எனக்கு பெரிய அவமானமா போச்சு.

அந்த ரிபோர்ட்ட திரும்பி வாசிக்கவே எனக்கு மனசு இல்ல, இதுல எங்க தப்ப கண்டுபிடிச்சு திருத்துறது? தொடாமலே வச்சிருந்தேன்.

நேத்து காலைல அப்பா ஹால்ல இருந்துட்டு என்னை கூப்ட்டாங்க. “என்னப்பா?”ன்னேன். “வா இங்க”ன்னு அழுத்தி சொன்னாங்க. சரின்னு மெதுவா காலை தூக்கி வச்சு எழுந்து, கட்டில இருந்து இறங்கி, வாக்கர் எடுத்து ஒத்த கால்ல துள்ளி துள்ளி அப்பா கிட்ட போய் நின்னேன். “உக்காரு”ன்னு பக்கத்துல காட்டுனாங்க. உக்காந்தேன்.

“ரிபோர்ட் ரெடி பண்ணிட்டியா?”

“இல்லப்பா, மனசு ரொம்ப ஒரு மாதிரி இருக்கு”

“என்னாச்சுடா?”

“அம்மா இருந்துருந்தா நல்லா இருந்துருக்கும்லப்பா”

நான் இப்படி சொல்லியிருக்க கூடாது. பாவம், அவர் என்ன வேணும்னா அம்மாவ போன்னு அனுப்பி வச்சிருப்பாரு. எங்களுக்காக தான இத்தன நாளும் வாழ்ந்துட்டு இருக்கார். இந்த வார்த்தைய சொல்லி முடிச்சதும் சட்டுன்னு நாக்க கடிச்சுக்கிட்டேன். என்ன கடிச்சி என்ன பிரயோஜனம், வார்த்தைய விட்டுட்டேனே.

“சாரிப்பா, சாரி... நான் வேற எந்த அர்த்தத்துலயும் சொல்லல” சட்டுன்னு நெருங்கி அப்பா கைய புடிச்சுகிட்டேன். அப்பா முகத்த பாக்க தெம்பில்லாம அவர் தோள்ல சாஞ்சுகிட்டேன்.

என்ன நினைச்சார்னே தெரியல, கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துட்டு இருந்தார். அப்புறம் மெதுவா, “அப்பா உனக்கு ஏதாவது கஷ்டம் குடுக்குறேனாடா”ன்னார்.

“ஐயோ, இல்லப்பா, உங்கள மாதிரி அப்பா யாருக்கு கிடைப்பா, நான் ஏதாவது கஷ்டம் குடுக்குறேனா?” இன்னும் நெருக்கமா அப்பா நெஞ்சுல சாஞ்சுகிட்டேன்.

அப்பா எனக்கு நெத்தில முத்தம் குடுத்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவர் கிட்ட உக்காந்து பேசியும் நாள் ஆகிடுச்சு. இதுக்கு முன்னால கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னாடி நான் கொஞ்சம் தடுமாற்றத்துல இருந்தப்ப, “ஒரே ஒரு வாக்குறுதி குடுப்பியா”ன்னு கேட்ருந்தார். என்னன்னு கேட்டதுக்கு, “எப்படியாவது பி.ஹச்.டி முடிச்சுடு, மனச மட்டும் தளர விட்டுடாத”ன்னு கேட்டுகிட்டார்.

“நாம நினைக்குற மாதிரி எப்பவும் வாழ்க்க அமைஞ்சுடாது. அதுக்காக நம்மோட பாதைய அப்படியே விட்டுரவும் கூடாதுல. என் பொண்ணு புத்திசாலின்னு எனக்கு தெரியும். அவளுக்கு தெரியாதது எதுவுமில்ல” அப்பா திடீர்னு அப்படி சொன்னப்ப எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு.

“நான் முடிச்சுடுறேன்ப்பா. ஒரு மூணு மணி நேரம், அவ்வளவு தான் ஆகும். கண்டிப்பா திங்கள் கிழமை நாம திருப்பி சப்மிட் பண்றோம்”

அப்பா முகத்துல புன்னகை. உச்சந்தலைல முத்தம் குடுத்தார்.

“அம்மா இருந்துருந்தா, உன்னை இன்னும் நல்லா கவனிச்சிருப்பா. ஆனா என் பொண்ணு அவளுக்கு என்ன தேவைங்குறத கேக்க தயங்க மாட்டான்னு ஒரு நம்பிக்கை. அதனால தான் அப்பா உன்னை அதிகம் கண்டுக்குறதில்ல”

“இத நீங்க சொல்லவே வேணாம்ப்பா. எனக்கே தெரியும்”

அடுத்து என்ன பேசுறதுன்னே தெரியல. கேக்க நிறைய வார்த்தைகள், சொல்ல நிறைய வார்த்தைகள்ன்னு இருந்தாலும் என்னவோ தொண்டைக்குள்ள அடச்சுட்டு இருந்துச்சு. மனசு முழுக்க குழப்பம். நான் சரியா தான் இருக்கேனா, ஒருவேளை சரியில்லனா என்னை எப்படி மாத்திக்க? அப்பாகிட்ட எப்படி கேக்க? எதுவுமே புரியல. மவுனம் மட்டும் தான் அந்த இடத்துல இருந்துச்சு.

“அப்பா”

“சொல்லுடா”

“நான் ஏதாவது தப்பு பண்றேனா?”

“உன் மனசுக்குள்ள பயம் இருக்கா?”

இதுக்கும் என்ன பதில் சொல்லன்னு தெரியல. மறுபடியும் மவுனம். அப்பா தான் அத உடைச்சாங்க.

“என் பொண்ணு மனசுல பயம் வராதே”

“அது வந்துப்பா....”

“தப்பு பண்ணிட்டோம்னு பயப்படுறியா?

“................................”

“என் பொண்ணு தப்பு பண்ணினாலும் உடைஞ்சு போய் உக்கார மாட்டா. அத எப்படி சரி செய்றதுன்னு இந்நேரம் யோசிச்சு முடிவு எடுத்துருப்பா”

எனக்கு கொஞ்சம் வெக்கமும் சிரிப்பும் வந்துடுச்சு...

“ப்ப்ப்ப்பா.... போங்கப்பா”

“பயம் மட்டும் மனசுக்குள்ள வராம பாத்துக்கோ. தப்பு பண்ணிட்டன்னு தோணிச்சுனா வருத்தப்படு, அதுக்காக அதையே நினச்சுட்டு இருக்காத. அடுத்த ஸ்டெப் அடுத்த ஸ்டெப்ன்னு போய்ட்டே இரு”

அப்பாவ இன்னும் இறுக்கமா அணைச்சுகிட்டேன். மெதுவா என் கால குனிஞ்சு பாத்தேன்.

“கால் இல்லாம கார் ஓட்ட முடியாதாப்பா?”

“ஓட்டலாமே, அது உனக்கு அவசியப்படாது, அப்படி அவசியப்பட்டா, அப்பா உனக்கு புதுசா கார் வாங்கித் தாரேன்”

என் முகத்துல பெருசா ஒரு புன்னகை. மெல்ல எழுந்தேன், “நான் போய் ரிபோர்ட் ரெடி பண்றேன்ப்பா... அத முடிச்சுட்டு தான் அடுத்த வேலை”ன்னு சொல்லிட்டு அப்பா கைய புடிச்சுகிட்டேன்.

“லவ் யூ அப்பா”

அப்பா எதுவுமே சொல்லல, சின்னதா ஒரு சிரிப்பு, “போ”ன்னு ஒரு சின்ன தலையசைப்பு. அவ்வளவு தான், நான் ரூமுக்கு வந்துட்டேன்.

இந்தா, இப்ப ரிபோர்ட் ரெடி பண்ணிட்டேன். படிச்சு பாத்து தான் எவ்வளவு தப்பு போட்ருக்கேன்னு எனக்கே தெரியுது. ஹஹா... நான் தப்பு பண்ணிட்டு எக்சாமினர திட்டிட்டு இருந்துருக்கேன்...


13 comments:

 1. உண்மையாலுமே நெகிழ்ந்தேன். உறவுகளின் பலம் மிக முக்கியம். அதுவும் இப்படிப்பட்ட உறவுகளின் பலம்தான் உயிரின் பலம்.

  வாழ்த்துக்கள்.

  God Bless You

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். இந்த உறவுகள் மட்டும் இல்லனா நானெல்லாம் இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன். உங்க வாழ்த்துக்கு தாங்க்ஸ்

   Delete
 2. உறவின் வலிமையை அவர்கள் அருகில் இருக்கும்போதே உணர்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்! நீங்களும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா.... அதனால தான் எல்லாத்தையும் எழுதி வைக்கனும்னு ஆசைப்படுறேன்...

   Delete
 3. அப்பா சொன்னது உங்களுக்கு மட்டும் இல்ல ...எல்லாருக்கும் ..

  “பயம் மட்டும் மனசுக்குள்ள வராம பாத்துக்கோ. தப்பு பண்ணிட்டன்னு தோணிச்சுனா வருத்தப்படு, அதுக்காக அதையே நினச்சுட்டு இருக்காத. அடுத்த ஸ்டெப் அடுத்த ஸ்டெப்ன்னு போய்ட்டே இரு”

  மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு ....

  ReplyDelete
  Replies
  1. தப்பு பண்றது எதோ ஒரு வகைல நடக்குறது தான். எமோசன், தெரியாம பண்றது, இல்ல தெரிஞ்சே பண்றது, இப்படி நிறைய நிறைய தப்புகள் பண்ணிட்டு தான் இருக்கோம். ஆனா, அதையே நினைச்சுட்டும் இருக்க கூடாது, அத உணர்ந்து நம்மள மாத்திக்காமலும் இருக்க கூடாது... தேங்க்ஸ்

   Delete
 4. “பயம் மட்டும் மனசுக்குள்ள வராம பாத்துக்கோ. தப்பு பண்ணிட்டன்னு தோணிச்சுனா வருத்தப்படு, அதுக்காக அதையே நினச்சுட்டு இருக்காத. அடுத்த ஸ்டெப் அடுத்த ஸ்டெப்ன்னு
  போய்ட்டே இரு”///

  sariyaaka nan irukkum tharppothaiya sulalukku aaruthalaana varikal akkaa.
  thodarunthu ezuthungal.

  ReplyDelete
  Replies
  1. இது உனக்கு ஆறுதலா இருந்தா நிஜமாவே ரொம்ப சந்தோசம் மகேஷ்... தேங்க்ஸ் மா

   Delete
 5. மிகச்சிறந்த ஓர் தந்தைக்கு மகளாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

   Delete