Sunday 23 August 2015

மாதவிடாய் - தெரிஞ்சிக்கலாம்


மாதவிடாய் – உண்மைய சொல்லப்போனா இந்த வார்த்தைய சொல்றதுக்கே தயக்கமா தான் இருக்கு. என்ன, உனக்கேவான்னு கேட்டுராதீங்க, சின்ன வயசுல இருந்தே பீரியட்ஸ், பீரியட்ஸ்னு சொல்லியே பழக்கமாகிடுச்சு அதான்...

இந்த பீரியட்ஸ் விசயத்துல கஷ்டப்பட்ட ஜீவன நான் முதல் முதல்ல பாத்தேன்னா அது என் அம்மாவ தான். தத்தக்கா பித்தக்கான்னு அப்பா கைபுடிச்சு நடந்த நாட்கள்ல அப்பா அம்மாவுக்கு பக்கத்துல ஆதரவா இருந்தத பாத்துருக்கேன்.

அம்மாவ புரிஞ்சுக்க பாட்டியம்மாவுக்கு (அம்மாவோட அம்மா) ஒண்ணும் கஷ்டம் இல்ல. ஏன்னா, பாட்டியம்மாவே இந்த பீரியட்ஸ்னால நிறைய கஷ்டப்பட்டுருக்காங்க. மொத்தம் ஒன்பது புள்ளைங்க. எல்லா புள்ளைங்களும் பாட்டியம்மா மடிலயே வளர்ந்தவங்க, அதனால ஆம்பள புள்ள, பொம்பள புள்ள வித்தியாசம் பாக்காம அத்தன பேருக்கும் பாட்டியம்மாவோட கஷ்டம் தெரிஞ்சிருந்துச்சு. கடைசில அம்பத்து அஞ்சு வயசுல ஓவர் ப்ளீடிங் ஆகி, கர்ப்பப்பைய எடுத்ததோட பாட்டியம்மாவோட மாதவிடாய் சகாப்தம் முடிவுக்கு வந்துச்சு (இந்த கதை இன்னொரு நாள்).

ஒரு கட்டத்துல நாங்க அப்பாவோட பூர்வீக ஊர்ல குடியேற வேண்டிய நிலைமை வந்துச்சு. நாங்க அங்க போனதுமே அப்பா, அவரோட அம்மாவ (அப்பம்மா) கூட்டிட்டு வந்து எங்களோட வச்சுகிட்டார்.

பீரியட்ஸ் தான் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறது இல்லையே. அப்பம்மாவுக்கு மாசத்துல மூணு நாள் ப்ளீடிங் ஆனாலே அதிசயம் தான். வலி சுத்தமா இருக்காது. நாங்க அங்க போன நேரம் அவங்களுக்கு மெனோபாஸ் வேற ஆகியிருந்துச்சு. அதனால அம்மாவோட பீரியட்ஸ் பிரச்சனைகள அவங்க புரிஞ்சுக்கல.

பீரியட்ஸ் நேரத்துல அம்மா சமையல் ரூமுக்குள்ள போகக் கூடாது, ஹாலுக்கு போகக் கூடாது, ஆம்பள ட்ரெஸ் எதையும் தொடக் கூடாது, முக்கியமா எங்க அப்பாவ பாத்துரவே கூடாது. அட, இந்த மாதிரியான மன உளைச்சல்கள கூட தாங்கிக்கலாம், ஆனா எங்கம்மா வலில படுற வேதனை சொல்லி மாளாது.

விண்ணு விண்ணுன்னு தரிக்குற வலில எதோ ஒரு பக்கமா தான் ஒருக்களிச்சி படுக்க முடியும். நானே மெத்தைல படுத்தாலும் உருண்டு உருண்டு ஏதோ ஒரு பொசிசன்ல தான் வலி கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கும். கொஞ்சம் அசைஞ்சாலும் மறுபடியும் வலி கொன்னுரும். அப்படி தான அம்மாவுக்கும் இருந்துருக்கும்?

அந்த நேரத்துல அம்மாவுக்குன்னு ஒரு இருட்டு ரூமை குடுத்துருந்தாங்க. அதுல ஒரு கிழிஞ்ச பாயை தரைல விரிச்சு தான் படுக்கணும். அதுவும் வாசல் வீட்டுக்கு வெளில தான் இருக்கும்.

அங்க போன முதல் மாசம், அம்மா வலில துடிச்சி அழுதுருக்கா, அப்பா, அவள கைத்தாங்கலா கூட்டிகிட்டு பெட் ரூமுக்குள்ள வந்துட்டாங்க.

அன்னிக்கி எங்க அப்பம்மா ஆடுன ஆட்டம் இருக்கே... தீட்டு பட்ட பொம்பளைய இப்படியா வீட்டுக்குள்ள கொண்டு வருவ, அதுவும் படுக்கை அறைக்குள்ளயேன்னு. அப்பம்மாவுக்கு பயந்தே பகல்ல அம்மா தரைல படுத்துக் கிடப்பா, ராத்திரி ஆனா அப்பா அவள மெதுவா தூக்கி கட்டில்ல போடுவாங்க. நானும் தம்பியும் மலங்க மலங்க பாத்துட்டு இருப்போம். அம்மா சேலை எல்லாம் ரெத்தக்கறையா இருக்கும். திட்டு திட்டா ரெத்தம் தரை எல்லாம் வழிஞ்சிருக்கும்.

இப்ப நினைச்சுப் பாத்தா, அப்பாவும் அம்மாவும் அந்த சூழ்நிலைய எப்படி சமாளிச்சிருப்பாங்கன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. கண்டிப்பா ஒரு நாள் அப்பாவ உக்கார வச்சு இதப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.

இன்னொரு முக்கியமான விஷயம், வலில துடிக்குற ஒரு மனுஷ ஜென்மத்தோட வலியையே புரிஞ்சுக்காதவங்க, நாப்கின் பத்தியா புரிஞ்சி வச்சிருக்கப் போறாங்க.

அப்பலாம், நாப்கின் கிடையாது. துணி தான். அதுவும் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு துணி கிடையாது, தேவைக்கு கிழிச்சு, மடிச்சு வச்சுட்டு, அது முழுசா நனைஞ்சதும் அடுத்த துணி மாத்தணும். கேக்க ஈசியா தான் இருக்கு, ஆனா நடைமுறைப் படுத்துறது அவ்வளவு ஈசி இல்ல.

இந்த துணிய தூமைத்துணின்னு (இது கெட்டவார்த்தைன்னு இவ்வளவு நாள் சொல்லாம இருந்தேன், அப்படியே சொல்லி வளர்த்துட்டாங்க, ஆனா இப்ப சொல்ல துணிஞ்சுட்டேன்) சொல்லுவாங்க. இத தொட்டாலே தீட்டுன்னு சொல்லி ஒரு குச்சிய வச்சி தூக்கி ஒரு மூலைல போட்டு வச்சிருப்பாங்க. பீரியட்ஸ் வந்ததும் அந்த துணிய மடிச்சு, உள்ள வச்சு யூஸ் பண்ணிட்டு, அப்புறம் கறை படிஞ்ச துணிய ஒரு ஒதுக்கப்பட்ட இடத்துல வச்சு அலசுவாங்க. அனேகமா அது யூரின் பாஸ் பண்ணி தேங்கி நிக்குற இடமாவோ, இல்ல, ஒப்பன் டாய்லெட்டாவோ தான் இருக்கும். தேய்ச்சு துவைக்க ஒரு கல் கூட இருக்காது.

அத விடுங்க, அத கொண்டு போய் வெயில்ல நல்லா விரிச்சி காயப் போட முடியுமா என்ன? அதெப்படி போடுறது? அதான் தீட்டாச்சே, யாருக்குமே தெரியாம மடக்கி வச்சி இருட்டுல தான் காயப் போடணும். அது அவ்வளவு ஈசியா வாடுமா? அப்படியே ஈரம் ஊறி ஊறி அதுல பங்க்ஸ் புடிக்கும். அதுமட்டுமா, ரெத்த வாடைக்கு பாச்சாவும் பல்லியும் அங்க தான் குடித்தனமே பண்ணும். இப்படி காய வச்ச துணிய எடுத்து காலுக்கு இடுக்குல வச்சா, அந்த பொண்ணோட நிலைமை என்னாகுறது?

இப்படி மூலைல கழிவுகளோட கழிவா போட்டு வச்சிருந்த துணிய எடுத்து ஒரு பொண்ணு சரியா உதறாம அவசர அவசரமா மடிச்சி வச்சதுல, துணில ஒட்டி இருந்த தேள் கொட்டி செத்தே போனான்னு அம்மா சொல்ல கேள்விப்பட்டுருக்கேன்.

இப்படியே கொஞ்சம் யோசிச்சுட்டு இருங்க, உங்க வீட்டு அம்மாவும் பாட்டியும் இத தான் அனுபவிச்சி இருப்பாங்க. சந்தேகம் இருந்தா கேட்டுப் பாத்துக்கோங்க. இன்னமும் கிராமங்கள்ல பொம்பள புள்ளைங்க இப்படி தான் துணி யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.

.......................................

நான் காலேஜ்ல எம்.பில் சேர்ந்த புதுசு. அப்பவும் பிள்ளைங்களுக்கு பார்ட் டைமா க்ளாஸ் எடுத்துட்டு தான் இருந்தேன். அந்த நேரம் பி.ஜி படிக்க ஒரு பொண்ணு வந்தா. பாக்க ரொம்ப ஸ்மார்ட். பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆகி, மூணு வயசு ஆண் குழந்தைக்கு அம்மா அவ.

எந்த விசயமா இருந்தாலும் எழுந்து எழுந்து சந்தேகம் கேப்பா. தெளிவா நான் சொல்லிக் குடுக்குறத நோட்ஸ் எடுப்பா. நமக்கு தான் இப்படிப் பட்ட புள்ளைங்கள பாத்தாலே ரொம்ப புடிக்குமே, அவளுக்குனே நிறைய விஷயங்கள் க்ளாஸ்ல பேசுவேன்.

திடீர்னு ஒரு நாள் அவ மயங்கி விழுந்தா. என்னாச்சு, என்னாச்சுன்னு எல்லாருக்கும் ஒரே பதற்றம். அவள தூக்கி பென்ச்ல படுக்க வச்சுட்டு ஒரு பொண்ணு நிமிருரப்ப அவ கை எல்லாம் ரெத்தம். அப்பவே புரிஞ்சிடுச்சு, புள்ளைக்கு பீரியட்ஸ்னு. சரி ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு கொஞ்ச நேரம் அவள தனியா படுக்க வச்சுட்டோம்.

கொஞ்ச நேரம் கழிச்சு அவளா எழுந்ததுக்கு அப்புறம், தண்ணி குடுத்து, பாத்ரூம் போக வச்சு, பேட் எடுத்துக் குடுத்து, ஆசுவாசப் படுத்தி என்னன்னு விசாரிச்சா, அவளுக்கு பத்து நாளா பீரியட்ஸ் நிக்கவே இல்லையாம். அதிகமான ரெத்தப் போக்குல துவண்டு போய் இருந்தா. நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வான்னு சொன்னேன். க்ளாஸ் மிஸ் ஆகிடும் மேடம்ன்னு அழுதுட்டே சொல்றா. அந்தப் புள்ளைய என்னன்னு சொல்ல?

சரி, ரெஸ்ட் எடுத்துட்டு வந்து படின்னு அவளுக்கு ஆறுதல் குடுத்தோம். இதுவே ஒரு நாளு, உடம்பெல்லாம் கிடுகிடுன்னு நடுங்கி, ஓடிப் போக கூட முடியாம, ஓ-ன்னு நான் வாந்தி எடுத்தப்ப அவ தான் ஓடி வந்து தாங்கினா. தலைய சுத்தி நான் மயக்கமா கிடந்தப்ப, அவளும் எனக்கு பீரியட்ஸ் நேரம் இப்படி ஆகும்னு புரிஞ்சுகிட்டா. நிறைய பேசுவோம், நான் மட்டும் அந்த நேரம் அஞ்சு நாள் காலேஜ் பக்கமே போக மாட்டேன். வீட்லயே ரெஸ்ட் தான். சில நேரம் பாத்ரூம்ல மயங்கி கிடக்குறது எல்லாம் தனிக் கதை. ஆனா அவ மட்டும் என்ன கஷ்டம்னாலும் காலேஜ்க்கு வந்துடுவா.

இப்படியே அவளுக்கு ஒவ்வொரு மாசமும் பிரச்சனை அதிகமாகிட்டே போச்சு. மாசத்துல இருபது நாளும் அவளுக்கு ப்ளீடிங் இருக்கும். என்ன பிரச்சனை, ஏது பிரச்சனைன்னு எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பாத்தும் எல்லாமே நார்மல் தான்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. அதுக்கப்புறம் அவ ரொம்ப தூரத்துல இருந்து காலேஜ் வர்றதால, ட்ராவல் அவளுக்கு ஒத்து வரலன்னு சொல்லி அவள கட்டாயப்படுத்தி வீட்லயே இருந்து படின்னு சொல்லிட்டோம். அப்பப்ப சிலபஸ் கவர் பண்ற நோட்ஸ் குடுத்து, டவுட் வந்தா போன் பண்ணி கேப்பா. ஒரு மணி நேரம், ரெண்டு மணிநேரம்னு அவளுக்கு நான் போன்லயே க்ளாஸ் எடுத்துருக்கேன்.

அப்பப்ப காலேஜ் வருவா, ப்ராக்டிகல் க்ளாஸ் அட்டென்ட் பண்ணுவா, பைனல் இயர் முடிச்சுட்டு போகும் போது அவ யூனிவெர்சிடி செகண்ட் ரேங்க் வாங்கிட்டுப் போனா.


..

6 comments:

 1. உண்மைதான் சகோதரி... கிராமத்தில் இன்னும் நாப்கின் உபயோகிப்பவர்கள் கம்மிதான்... துணிதான்... இது பெண்களின் இயற்கை உபாதை என்றாலும் எவ்வளவு கஷ்டம் என்பதை நானும் என் மனைவியின் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்போ இத பத்தி நிறைய பேர் தெரிஞ்சி வச்சிருக்குறது மனசுக்கு சந்தோசமா இருக்கு. உங்க வாழ்த்துக்கு நன்றி

   Delete
 2. //வலில துடிக்குற ஒரு மனுஷ ஜென்மத்தோட வலியையே புரிஞ்சுக்காதவங்க, நாப்கின் பத்தியா புரிஞ்சி வச்சிருக்கப் போறாங்க..//
  - படிக்கையிலேயே வலிய உணர முடியுது...

  ReplyDelete
 3. na ug 2am aandu padikkumpothu ammaa over bleeding naala avathi pattu iruppanga. piraku operation senju uterus remove pannunanga.

  athukku munnadi rompa kashtta pattu iruppanga. aampala pasanga enpathala
  enga kitta ethuvum sollala/kattikkala.


  sariyaana health science (nandri avarkal unmai sir. intha blog.l oru pathivil azakaana pinnottam ittirunthar)
  palliyil irunthu pothikka vendum.

  aanal ungalin ezuthu ippothu katrukkodukkirathu.
  thodarungal akka.

  antha maanavikku vazthukkal. pirachaniyai purinthu kondu uthiya ovvorutharukkum nandrikal.

  ReplyDelete
  Replies
  1. நிறைய பேர் இத வெளிக் காட்டிக்குறது இல்ல மகேஷ். இதெல்லாம் தெரியாததால தான அந்த நேரத்துலயும் பெண்கள்கிட்ட வேலை வாங்குறோம். நான் ரொம்ப சின்னப் பொண்ணா இருந்தப்ப, படுத்துக் கிடக்குற அம்மா கிட்ட போய் சோறு வேணும், தலை பின்னி விடு, ட்ரெஸ் தச்சு தான்னு ரொம்ப தொல்லை பண்ணியிருக்கேன். முடியலன்னு சொன்னா அடம் தான். அந்த நேரத்துலயும் எனக்காக அம்மா அது எல்லாம் செய்திருக்கா. இனியும் யாரும் இப்படி கஷ்டப்படுறவங்கள மேலும் கஷ்டப்படுத்தக் கூடாதுல... அதுக்கு தான் எழுதுறேன்

   Delete