Thursday 29 January 2015

பாலின அறிதலும் பதின் பருவத்து புரிதலும்


இப்பலாம் காலேஜ்ல பொதுவா லெக்சர் க்ளாஸ் போக மாட்டேன். நாம காலேஜ் போறதே எப்பவாவது ஒரு தடவ. அதுல புள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுத்தா விளங்கிடும்னு தான் இந்த முடிவு. லேப், ப்ராஜெக்ட் டிசைன்னு என்னோட வட்டத்த என் கைடு கிட்ட சொல்லிட்டு நானே சுருக்கிகிட்டேன்.

எப்பவாவது ரொம்ப அர்ஜன்ட், இந்த டாபிக் எடுத்தே தீரணும்னா அந்த நேரம் வந்து சொல்லுவாங்க. நான் பாட்டுக்கு டாபிக்க மட்டும் உள்வாங்கிட்டு ஒரு மணிநேரம் க்ளாஸ் எடுத்துட்டு வந்துடுவேன்.

இப்படி தான் நேத்து  திடீர்னு வந்து, பிள்ளைங்களுக்கு ப்ளட் க்ரூப்பிங் பத்தி க்ளாஸ் எடுக்கணும், அர்ஜன்ட், போயிட்டு வர்றியான்னு கேட்டாங்க. அட, ஈசி சப்ஜெக்ட்ன்னு நானும் உடனே ஓகே சொல்லிட்டு க்ளாஸ் போயிட்டேன்.

ரெத்தத்தோட வகைகள் என்னென்ன, அத எப்படி கண்டுபிடிக்குறது, 'ஏ' வகை ப்ளட் குரூப்னா என்ன ஆன்டிஜன் இருக்கும், என்ன ஆன்டி-பாடி இருக்கும், 'பி'னா அதுல என்னென்ன இருக்கும்ன்னு விளக்கிட்டே இருந்தேன். அப்படியே ரெத்த தானம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கலாம், யார் யாருக்கு ரெத்தம் குடுக்கக்கூடாதுன்னு எல்லாம் சொல்லிட்டே வந்தேன்.

ரெத்த தானம் பத்தின சாதகம், பாதகம் பத்தி அலசிட்டு இருந்தப்ப திடீர்னு "எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்" (Erythroblastosis Fetalis) னா என்னன்னு தெரியுமான்னு கேட்டேன். பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி, முளிச்சாங்க...

சரி, இத எல்லாம் அப்படியே தூக்கி வச்சிடுவோம், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பேசுறப்ப ஜாதக பொருத்தம் பாக்குறாங்களோ இல்லையோ ரெத்த பொருத்தம் பாக்கணும். தெரியுமான்னு கேட்டேன். இல்ல மேடம் தெரியாது, இப்ப தான் இத கேள்வியே படுறோம். கல்யாணம்னா ஜாதகம் தானே பாக்கணும், ஏன் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு ஒரு பொண்ணு கேட்டா.

உடனே ஒரு பையன் எழும்பி, பையனுக்கோ இல்ல பொண்ணுக்கோ எய்ட்ஸ் இல்லனா வேற ஏதாவது எஸ்.டி.டி நோய்கள் இருந்தா தெரிஞ்சிக்க தான் ரெத்த பொருத்தம் பாக்கணும்ன்னு சொன்னான்.

அடேய்... அட்வான்சா இருடா, அதுக்காக ஓவர் அட்வான்சா இருக்காத, அதுக்கு ரெத்தத்த டெஸ்ட் பண்ணினா போதும், பொருத்தம் எல்லாம் பாக்க வேணாம்னு சொன்னேன். அட, ஆமாலன்னு பையன் உக்காந்துட்டான்.

நீங்க சொல்லுங்க மேடம், இன்ட்ரஸ்ட்டா இருக்குன்னு பிள்ளைங்க சொல்லவும் நான் ஆரம்பிச்சேன்.

எரித்ரோப்ளாஸ்டாசிஸ் பீட்டாலிஸ்ங்குறது சிசுக்களுக்கு வர்ற ரெத்த அணு சிதைவு நோய் (நான் அத இங்கிலீஷ்ல தான் சொன்னேன் "It's a hemolytic disease"ன்னு. அதுக்கு சரியான தமிழ் அர்த்தம் தெரியல... தெரிஞ்சா சொல்லுங்க) அப்படின்னு. இந்த நோய் வர சில காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம், குழந்தையோட அம்மா அப்பாவோட ரெத்த வகைன்னு சொன்னதும் அதெப்படின்னு புள்ளைங்க ஆர்வமாகிட்டாங்க.

நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

நம்மோட ரெத்த வகைல ஆர்.ஹச் (Rh) பாசிட்டிவ் நெகட்டிவ் ன்னு ரெண்டு வகை தெரியும் தானே, (எ.கா: O+, O-) அதுல பொண்ணு Rh நெகடிவா இருந்து பையன் Rh பாசிட்டிவா இருந்தா அவங்களுக்கு பிறக்குற அல்லது பிறக்கப் போற ரெண்டாவது குழந்தைக்கு இந்த பாதிப்பு வரும்.

எப்பவுமே நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்திகள் அந்நிய பொருட்கள் நம்ம உடம்புல நுழைஞ்சா அதுக்கு எதிரா போரிடும். ஒரு Rh நெகட்டிவ் வகை பொண்ணுக்கு Rh பாசிட்டிவ் மூலம் உருவாகுற குழந்தை Rh பாசிட்டிவா உருவாக வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு குழந்தை உருவாகுற பட்சத்துல அந்த குழந்தையோட ரெத்த வகை தாய்க்கு அந்நிய பொருள். அத எதிரியா பாக்குற தாயோட நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் குழந்தையோட ரெத்தத்துக்கு எதிரா போராட ஆரம்பிச்சிடும். இதனால குழந்தையோட ரெத்த அணுக்கள் அழிஞ்சு போய், அபார்சன் நடக்க வாய்ப்புண்டுன்னு சொன்னேன்.

சிம்பிளா சொல்லணும்னா கல்யாணம் பண்ற வயசுல இருக்குற பொம்பள புள்ளைங்க, "ஓ-நெகட்டிவ்" ரெத்த வகைய சேர்ந்தவங்களா இருந்தா ஒரு நெகட்டிவ் ஆணை கல்யாணம் பண்ணிக்கலாம், அப்படி இல்லனா கன்சீவ் ஆறதுக்கு முன்னாலயே நல்ல டாக்டரா பாத்து குழந்தை ஆரோக்கியமா பிறக்க என்ன பண்ணனும்ன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

இப்போ அறிவியல் உலகத்துல இதுக்கெல்லாம் ஈசியா தீர்வு இருக்கு. ஆனா இது தெரியாம எத்தனை பேர் குழந்தை அபார்ட் ஆனா காரணமும் தெரியாம, ஹாஸ்பிட்டலும் போகாம இருக்காங்கன்னு சொன்னதும் ஒரு பொண்ணு எழுந்து எங்க பக்கத்து வீட்ல ஒரு பொண்ணுக்கு முதல்ல ஒரு பையன் பிறந்தான். அதுக்கு அப்புறம் தொடர்ந்து அவங்களுக்கு அபார்சன் ஆகிட்டே இருக்கு. அவங்க ஹாஸ்பிட்டல் எல்லாம் போகல மேடம்ன்னு சொன்னா. இது பத்தி விசாரிக்குறேன்னும் சொல்லியிருக்கா (கிராமங்கள்ல ஹாஸ்பிட்டல் போகாம இருக்குறது இப்பவும் சகஜம் தான்).

பொண்ணுங்கள பெத்த அம்மாவும் அப்பாவும் கூட இங்க இருப்பீங்க, உங்க பொண்ணோட ரெத்த வகை என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதுக்கு தகுந்தமாதிரி பையனோ இல்ல டாக்டர் அறிவுரைகளோ கேட்டுக்கலாம்.

இது பேசிட்டு இருக்கும் போதே, கரு எப்படி உருவாகுது, எப்படி பதியுது, அப்போ என்னென்ன பிரச்சனை வருதுன்னு க்ளாஸ் நீண்டுட்டே போச்சு. அப்போ தான் ஒருத்தன் எழுந்து சொன்னான் "நாங்க ஸ்கூல்ல படிக்குரப்பவே இதெல்லாம் உண்டு மேடம். ஆனா யாருமே சொல்லித் தரலன்னு". சரி, இப்போ பேசுவோம்னு நிறைய விஷயங்கள் பேச ஆரம்பிச்சோம். பிள்ளைங்க கிட்ட பேசிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுது.

இங்க யாருக்கும் செக்ஸ் எஜுகேசன்ன்னா என்னங்குற தெளிவான புரிதல் இல்லவே இல்ல. அது என்னமோ ஆண் பெண் உறுப்புகள் பற்றின ஒரு மாய தோற்றம், அத பத்தி பேசுறதே தப்புன்னு தான் நினச்சிட்டு இருக்காங்க. ஆனா அதையும் தாண்டி அதுல இருக்குற அறிவியல், ஒரு கரு உருவாக உடல்கள்ல நடக்குற மாற்றங்கள், கர்ப்பப்பை பிரச்சனைகள், ஆண்களுக்கு வர்ற பிரச்சனைகள், குடும்ப கட்டுப்பாடு, அதோட அவசியம்ன்னு நீண்டுட்டே போற விஷயம்.

பசங்கள பாத்து கேட்டேன், எத்தன பேருக்குடா பெண்களோட மென்சஸ் நேர அவஸ்த்தை தெரியும்னு. நிறைய பேர் ஒருத்தர் மூஞ்சை இன்னொருத்தர் பாத்துட்டு தான் இருந்தாங்க. ஒரு பையன் எழுந்து, நிறைய ப்ளீட் ஆகும் மேடம், சில நேரம் தலை சுத்தி கீழ விழுவாங்க. சொல்லவே முடியாத அளவு வயித்த புடிச்சிட்டு கண் எல்லாம் கண்ணீர் நிறைஞ்சு அழுதுட்டு இருப்பாங்க. சில நேரம் நிறைய கோபம் வரும். அத மீறி கண்ணீரும் வரும். தங்கச்சி அப்படி அழுவா மேடம். சில நேரம் அவ உக்காந்து இருக்குற இடம் எல்லாம் ரெத்த கறை ஆகிடும், நான் அத கழுவி விட்ருக்கேன். அவளுக்கு சோடா வாங்கி குடுத்துருக்கேன். வேற என்ன பண்ணன்னு தெரியல மேடம், தெரிஞ்சா கண்டிப்பா செய்வேன்னு சொன்னான். அப்படி சொல்லும்போதே அவளுக்கு ஏதாவது செய்ய முடியாதாங்குற ஆதங்கம் தெரிஞ்சுது.

கொஞ்ச நேர மவுனத்துக்கு பிறகு, ஒரு சத்தம் பொண்ணுங்க பக்கத்துல இருந்து வந்துச்சு...

"நீ தான் ஆம்பளடா"

க்ளாஸ் ரூம்ல அத்தன பேரும் கைதட்டிட்டாங்க.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலனாலும் பொண்ணுனா அவ கலரு, அழகுன்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்குற பசங்க மத்தியில அவங்க வலிகளையும் தெரிஞ்சி வச்சிருக்கடா, வர போற பொண்டாட்டிய நீ பத்ரமா பாத்துக்கணும்ன்னு சொன்னேன். அதுக்கு முன்னால என் அம்மாவையும் தங்கச்சியையும் பத்ரமா பாத்துப்பேன் மேடம்ன்னு சொன்னான்...

எனக்கு என்னோட பிரெண்ட்ஸ், தம்பி எல்லாரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.... யாரு சொன்னா, என்னோட பதின்பருவம் மறைஞ்சு போச்சுன்னு. இந்தா, இந்த பசங்க ரூபத்துல அது இருந்துகிட்டே தான் இருக்கு...

Thursday 15 January 2015

பொங்கலோ பொங்கல்




வீட்ல பண்டிகைகள்ன்னு கொண்டாடி வருசகணக்கா ஆகிடுச்சு. ஏன் எதுக்குன்னு காரணங்கள் தேடிட்டு இருக்காம, அப்படி அமைஞ்சு போய்டுச்சுன்னே வச்சுக்கலாம். சின்ன வயசுல அவ்வளவு உற்சாகமா கொண்டாடுவோம். சொந்தம் பந்தம்னு எல்லாரும் எங்க வீட்ல தான் கூடுவாங்க. தீபாவளினா சின்னவங்க எல்லாரும் விடிய விடிய வெடி போட்டுட்டு இருப்போம். பெரியவங்க தீபாவளி பலகாரத் தயாரிப்புல ரெண்டு மூணு நாள் முன்னாடியே மூழ்கிடுவாங்க. முறுக்கு, அதிரசம், சீடை, உன்னியப்பம், முந்திரிகொத்து, போளி, லட்டு, மிக்சர், சிப்ஸ், பூந்தி, காரச்சேவு, தேன்குழல், ஜாங்கிரி, அல்வா, கேசரின்னு முடிவே இல்லாம லிஸ்ட் நீளும். அதுவும் கடைசி நாள் வடைகள், பாயசங்கள்ன்னு அதுலயே பல வகை வைப்பாங்க.

அதுவே பொங்கல்னா முந்தினநாளே புது ட்ரெஸ் எடுத்து ரெடியா வச்சுட்டு, கைல, கால்ல மருதாணி வச்சு அலங்கரிக்க ஆரம்பிப்போம். புது ட்ரெஸ் கண்டிப்பா ஒரு பாவாடை சட்டையா தான் இருக்கும். நாலு வருஷம் நானும் தாவணி போட்ட நியாபகம். பசங்க, எவ்வளவு குட்டியா இருந்தாலும் மல்லு வெட்டி மைனர் கெட்டப் தான். மஞ்சள் குலை, கரும்பு, காய்கறி, கிழங்கு வகைகள், பழங்கள் மண் பானை, பூஜை சாமான்ன்னு வீடே தெய்வீகமா இருக்கும். ஆனா அதுல ஒரு சிக்கல் உண்டு, காலைல நாலரைனா தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ருவாங்க. அப்போ தானே குளிச்சு முடிச்சு ரெடியாக முடியும். வெந்நீர் வேணும்னு அடம்பிடிச்சாலும் கிடைக்காது. அலேக்கா தூக்கிட்டு போய் மோட்டார் போட்டு புது தண்ணி புடிச்சு, அந்த தண்ணி தொட்டிக்குள்ள போட்டுட்டு வந்துடுவாங்க. வெடவெடன்னு வெறயல் கொஞ்ச நேரத்துல பழகிடும். அப்புறம் படபடன்னு ரெடியாகி, சூரியன் எட்டிப் பாக்குறப்ப பொங்கப் பானை பொங்கி அதை வரவேற்கும்.

நமக்கு குலவை எல்லாம் விட்டு பழக்கம் இல்ல, தம்பியும் அம்மாவும் விடுவாங்க. நாங்க எல்லாம் பொங்கலோ பொங்கல்ன்னு கோரஸ் பார்டிங்க. பொங்கல் பொங்கின உடனே அதுக்குள்ள சர்க்கரை தட்டுற பொறுப்பு என்னுது. தம்பி நெய் டப்பாவ கைப்பற்றிருவான். பக்கத்து வீட்டு பசங்க முந்திரி, கிஸ்மிஸ்ன்னு ஆளுக்கொரு தீனியை கைப்பற்றி உள்ள போடுவோம். இதுல நாலு பக்கமும் விறகு வச்சு தீ மூட்ட நாலு கைபுள்ளங்க வேற இருப்பாங்க. பொங்கல் நல்லா வெந்து, பதத்துக்கு வந்ததும் சுட சுட தலை வாழை இலைல வச்சு சூரியனுக்கு படைப்போம். கூடவே அஞ்சாறு வாழை இலை துண்டுல பொங்கல் எடுத்து வச்சு காக்காக்கும் வைப்போம். அந்த காலைலயும் காக்காங்க வரும்னா பாத்துக்கோங்களேன். இப்போ உள்ள காக்காய்ங்க சோம்பேறி போல... வீட்ல ஆறரைக்கு எழும்பி லைட்ட போட்டா ஏண்டி எங்கள எழுப்பி விடுறன்னு மொறைக்குதுங்க இந்த பின்ஞ்சஸ்...

அன்னிக்கி முழுக்க கரும்பு கடிச்சுட்டு, பொங்கல் தின்னுட்டு, கூடவே செய்து வச்ச எல்லா தின்பண்டங்களையும் பிடிச்சதா பாத்து பொறுக்கி பொறுக்கி திங்குறதுலயே வயிறு நிறைஞ்சிடும். அப்புறம் மதியம் ஆனா பருப்பு, சாம்பார், ரசம், மோர் வச்சு கூடவே அவியல், தொவரம், ஊறுகான்னு ஒரு பத்து கூட்டு வகையோட சாப்பாடு ரெடியா இருக்கும். அது மட்டுமா, சேமியா பாயாசம், அடை பாயாசம், பாசிப் பருப்பு பாயாசம்னு வகை வகையா பாயாசம் வேற.

நல்லா திம்போம், ஓடி புடிச்சு விளையாடுவோம், மறுபடியும் திம்போம், அப்பப்ப அலுப்பு தீர குட்டி குட்டி சண்டை, பட்டு பாவாடை, கொலுசு சத்தம் சகிதம் அது ஒரு சங்கீத நாளா இருக்கும். அம்மா தோள் கட்டி கிடக்குறதும், அப்பா கழுத்தை பிடித்து தொங்குறதும் தனி சுகம்.

சமீபத்துல தீபாவளி நேரத்துல தான் நான் முறுக்கு சுட்டேன் (சொன்னா நம்பணும், ஒரே ஒரு முறுக்கு, சுத்தினேன், ஆனா நல்லா வரலன்னு பிச்சு போட்டுட்டேன்). அப்புறம் அடுப்பு பக்கத்துல கூட போனதில்ல. இன்னிக்கி காலைல சோம்பலா தான் விடிஞ்சுது. கார்த்திக் தான் கூப்பிட்டு பொங்கல் வைக்கணும், போய் ரெடியாகிட்டு வான்னு சொன்னார். கார்த்திக் சென்னைல பொங்கல் பொங்க, நான் இங்க இருந்து கேட்டுட்டு தான் இருந்தேன். அப்புறம் மறுபடியும் தூக்கம்.

பத்தரை மணிக்கு அப்பா ரெடி ஆகிட்டியான்னு கேக்க, என்னப்பா விசயம்னு கேட்டேன். ஹோம்-ல போய் பசங்க கூட பொங்கல் வைக்கப் போறேன்னு நீ தானே சொன்னன்னு சொன்னதும், ஆமால, அப்படின்னு பதறி, அஞ்சே நிமிசத்துல வெளில வந்து அப்பா கூடவும் தம்பி கூடவும் வண்டியில ஏறிகிட்டேன்.

நாங்க ஹோம்க்கு போய் சேர்ரப்ப மணி பதினொண்ணே கால் ஆகிடுச்சு. நாங்க போனதும் அந்த ஐயா வாங்க வாங்கன்னு வாசல்லயே நின்னு கூப்பிட்டாங்க. லேட் ஆகிடுச்சுன்னு சாரி கேட்டுட்டு உள்ள எட்டிப் பாத்தேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒரு அந்நியத்தன்மை இருந்த மாதிரி ஒரு பீல். பின்ன, ரெண்டு வருசமா அந்த பக்கமே எட்டிப் பாக்கலனா?

மடமடன்னு சாமான் எல்லாம் கீழ இறக்கி வச்சு, பிள்ளைங்களுக்கு புது ட்ரெஸ் எடுத்து என்கிட்ட தந்து தம்பி குடுக்க சொன்னான். நிஜமாவே மனசுக்குள்ள கில்டி பீலிங்க்ஸ். இதே பசங்களுக்கு பொங்கல்னா என் காசுல தான் கரும்பு, பொங்கல் சாமான், பழங்கள்ன்னு வாங்கிட்டு போவேன். ட்ரெஸ் அப்பா எடுத்து தந்துடுவாங்க. ஆனா இப்போ நான் எதுவுமே செய்யல, ஆனா என்னை போய் அவங்க கிட்ட குடுக்க சொன்னாங்க. தயக்கமா ஆரம்பிச்சு போக போக கொஞ்சம் சகஜமாக ஆரம்பிச்சுட்டேன். தேங்க்ஸ் அக்கான்னு சொன்ன ஒரு பொடியன நன்றின்னு சொல்லுடான்னு சொன்னேன். நீ எப்பவும் தேங்க்ஸ் தான சொல்லுவன்னு கிண்டல் பண்றான். அட, பார்ரா...ன்னு சிரிக்க ஆரம்பிச்சவ தான். அப்புறம் என்ன, அவங்களோட ஒன்னுமண்ணா ஈசியா கலக்க ஆரம்பிச்சுட்டேன்.

உண்மைய சொல்லணும்னா எல்லார் பெயரும் மறந்த மாதிரி ஆகிடுச்சு. எத்தனை பேர்ன்னு எண்ணி பாத்தேன், பத்து பேர் தான் இருந்தாங்க. மூணு பேர் எங்கன்னு கேட்டா, ஒருத்திக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், ஒருத்தன் ஹாஸ்டல்ல தங்கி சிஸ்த் படிக்குறான், அங்க பொங்கல் கொண்டாடணும்னு அவனை விடலையாம், இன்னொரு குட்டி பாப்பா, அடாப்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களாம்.

ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தம்பி சாக்லேட் குடுத்துட்டு இருந்தான். பக்கி, தனியா வாங்கிட்டு வந்துருக்கான் பாருங்க, கிர்ர்ர்ர்.... ஒவ்வொருத்தர் கிட்டயும் உன் பேர் என்ன, என்ன படிக்குறன்னு கேட்டுட்டு இருந்தப்ப, நான் அத எல்லாம் கொஞ்சம் ரீ-கால் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தேன். முதல் வேலையா அவங்க பெயரை எல்லாம் நியாபகப் படுத்தி எழுதி வச்சிக்கணும். எப்படியும் அடுத்த தடவ போகும் போது பெயர் சொல்லித் தான் கூப்பிடணும்.

நட்டநடு வெயில்ல நாலு பக்கம் செங்கல் எடுத்து வச்சு, பானைக்கு மஞ்சளும் குங்குமமும் பூசி, அடுப்பு மூட்டி, பொங்கல் பொங்குறப்ப மணி பனிரெண்டரை. பெரிய பானையா இருந்ததால பொங்கலே மதியம் போதும் போதும்னு ஆகிடுச்சு. அவ்வளவு வயிறு முட்ட சாப்ட்டாச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, மதிய சாப்பாடு ரெண்டரைக்கு சாப்ட்டோம். சமையல் கூடத்துக்குள்ள நான் போகல, ஆனா தம்பி, அங்க இருந்த பெரியம்மா கூட சேர்ந்து சமையல்காரனாகிட்டான். அவன் இங்க வர்றது ரெண்டாவது தடவ தான். ஆனாலும் என்னமோ ரொம்ப தெரிஞ்சவன் மாதிரி சுத்திட்டு இருந்தது எனக்கு பொறாமையா இருந்துச்சு.

ஒரு வழியா போயிட்டு வரோம்டான்னு கைகாட்டிட்டு வண்டியில ஏறினோம். மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன மாதிரி பீலிங். ஆனாலும் பழைய சந்தோசங்கள் இன்னும் திருப்பி எடுக்க வேண்டியது நிறைய இருக்குன்னு புரிஞ்சுது. அடுத்த வருஷம், காலைல நாலரை மணிக்கே தண்ணி தொளிச்சு எழுப்பி விட்டு என்னை பொங்கல் வைக்க விரட்டணும். மண் பானை, இயற்கை காற்று, இளம் சூரியன்னு அனுபவிச்சே ஆகணும்.... கூடவே வயல் வரப்புல தழைய தழைய புடவை கட்டி நடந்து போற சுகத்த அனுபவிக்கணும்....



பொங்கலோ பொங்கல்....





Monday 12 January 2015

பிறந்தநாள்


ஜனவரி பத்து, இரண்டாயிரத்து பதினஞ்சு:

இந்த நாள்... அப்படி எல்லாம் பெரிய விசேசம் இல்ல, ஆனாலும் ஒரு பட்டாம்பூச்சி பொறந்தநாள்.... பட்டாம்பூச்சி யார்னு எல்லாம் உங்களுக்கு சொல்லவே தேவையில்ல, நான் தான்னு டக்குன்னு தெரிஞ்சி வச்சிருப்பீங்களே....

பிறந்தநாள்னா எல்லாருக்கும் விசேசம் தான். எனக்கும் அப்படி தான் இருந்துச்சு, ஸ்கூல் படிக்குறப்போ, யூ.ஜி படிக்குரப்ப எல்லாம். ஆனாலும் கொஞ்ச வருசமா எப்.பில தான் பிறந்தநாள் கொண்டாடிட்டு இருந்தேன். எனக்கான உலகம் அவ்வளவு சுருங்கியும் போய்டுச்சு...

ஆனாலும் என்ன, ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆரம்பிச்ச அம்மாக்கள், அக்காக்கள், தோழிகள், தோழர்கள்... இருங்க இருங்க, கார்த்திக் இப்படி எல்லாரோட வாழ்த்து மழைலயும் நனஞ்சுட்டே தான் இருக்கேன். இன்பாக்ஸ், வாட்ஸ் அப், கால்ஸ்ன்னு ஹிஹி கொஞ்சம் பிசி தான்.

மதியம் சாப்பிட்டு முடிச்சதுமே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எங்கயாவது வெளில போகலாமோன்னு யோசிச்சுட்டே இருக்கேன், திடீர்னு கதவு டபடபனு தட்டுற சத்தம்...

டேய், யாரா இருந்தாலும் இருங்கடா, மெதுவா தான் வர முடியும்னு சோம்பல் முறிச்சு, மெதுவா போய் கதவ தொறந்தா, "ப்ப்ப்ப்பே....."ன்னு கத்திகிட்டே ரூமுக்குள்ள மாமா பசங்க, பொண்ணுங்க, தங்கச்சிங்க, தம்பிங்கன்னு ஒரு கும்பல் கத்திகிட்டே உள்ள வருது. ஏய் ஏய்... புள்ளைங்க பயந்துருவாங்க, பிசாசுங்களா வெளில போங்கன்னு எல்லாரையும் வெளில விரட்டினா... போனா தான....

ஹே.... குருவி, குருவி, குருவின்னு அப்படியே நளன் தமயந்தி இருந்த கூட்டை தூக்கிட்டான் ஒருத்தன். எனக்கு பகீர்னு ஆகிடுச்சு. கண் எல்லாம் கலங்கி, அழுதுட்டே, "ஏல, அது முட்டை போடுறதுக்காக கூடு எல்லாம் கட்டியிருக்குல, கலைச்சுராதல"ன்னு தளுதளுதுட்டேன். அப்படியே ஒரு மயான அமைதி... சரி, சரி, வெளில வாங்கடேன்னு ஒருத்தன் எல்லாரையும் கிளப்பி ரூம் விட்டு வெளில போய்ட்டாங்க.

எனக்கு, நளனும் தமயந்தியும் என்ன ஆனாங்களோன்னு பதற்றம். மெதுவா எட்டிப் பாத்தேன். அப்படியே பானை பின்னால பம்மி போய் இருந்தாங்க... சரி சரி, டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு மெதுவா பெட்ல போய் உக்காந்தேன். என் தங்கச்சிங்கள்ல ஒருத்தி வந்து, அக்கா, ஒரு சுடி எடுத்து போட்டுக்கோ, வெளில போயிட்டு வருவோம்னு சொன்னா...

சரின்னு சொல்லிட்டு நானும் கிளம்பி வெளில வந்தா, ஹே....ன்னு மறுபடியும் இரச்சல். ஒருத்தன் ஓடி வந்து என்னை அலேக்கா தூக்கிட்டு, அண்ணி, நாம இப்போ வெளில போறோம்னு சொன்னான். டேய் டேய் விடுடான்னு பதறினா, அதுக்குள்ள பாட்டி வந்து வயசு புள்ளைய தூக்குறியே, உனக்கு அறிவு இருக்கான்னு ஒரு மாதிரி டென்சன் ஆக, நீ தூக்கிட்டு போ மக்கான்னு நான் சொல்லிட்டேன். ஹஹா... எப்படியும் நாங்க வெளில போனதுக்கு அப்புறம் ஊரை கூட்டி குலவை வச்சிருக்கும். அத பத்தி நமக்கு என்ன?

என்னை எல்லாருமா சேர்ந்து குண்டு கட்டா தூக்கிட்டு போய் மாமா கார்ல போட்டு, நேரா கோவில் போனோம். அங்க அப்பா, தம்பி எல்லாரும் இருந்தாங்க. அப்படியே உள்ள போய் சாமிகிட்ட ஒரு வணக்கத்த வச்சுகிட்டு, நெத்தியில நாமத்த இழுக்க வந்தவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி, கோவில் திண்டுல உக்கார போனேன்.

என்ன, இங்க உக்காந்தா எப்படி, நாம வேற இடத்துக்கு போகப் போறோம்னு அடுத்த அதிர்ச்சி. டேய், எது செய்தாலும் சொல்லிட்டு செய்ங்கடான்னு கெஞ்சினாலும் எங்க விடுறாங்க. மறுபடியும் காருக்குள்ள ஏத்தி விட்டுட்டாங்க.

கார் சீறி பாய்ஞ்ச திசையையும், அவங்க பேசினதுலயுமே தெரிஞ்சிடுச்சு எங்க போறோம்னு. ஆமா, அம்மாவ பாக்கத் தான் போயிட்டு இருக்கோம்...

வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ள போனதுமே, சித்தப்பா சித்தி எல்லாரும் வெளில வந்தாங்க. வாமா, நல்லாயிருக்கியான்னு கேட்டதும் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ன்னு மட்டும் தலையாட்டிக்கிட்டேன். அதென்னமோ, அவங்கள பாத்தாலே ஒரு வன்மமோ குரோதமோ மனசுக்குள்ள வந்து ஒட்டிக்குது. அதுக்குள்ள பசங்க என்னை தர தரன்னு இழுத்து அம்மா கிட்ட கொண்டுட்டு போய்ட்டாங்க.

அம்மா... இவள பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. பாக்கணும்னு கூட தோணாம எல்லாம் போய்டல, எனக்கு என்னமோ, அவ என் கூட இருக்குற மாதிரி பீல். அதனால தான் அவள இங்க வந்து பாக்க தோணல. ஆனாலும் அவள தொட்டா கிடைக்குற சுகம் தனி சுகம் தான். அதிகம் எல்லாம் அங்க இருக்கல, சித்தப்பா சித்தி பாத்துட்டு நின்னது உறுத்திச்சி, போலாம்டேன்னு கிளம்பிட்டேன். எல்லாரும் அம்மாவுக்கு அத்த பை, பெரியம்மா பைன்னு சொல்லிட்டே வந்தாங்க... திரும்பி பாத்தேன், அம்மாவும் கிளை அசைச்சு டாட்டா காட்டின மாதிரி இருந்துச்சு.

வீட்ல இருந்து கிளம்பி, கோவில், அம்மா பாக்கன்னு போனது எல்லாமே வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்துல. பயங்கர ஸ்பீட். எலேய் மெதுவா மெதுவான்னு சொன்னா எவன் கேக்குறான். சரியா வீட்டு பக்கம் வரவும் டர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்..... டயர் பஞ்சர். சரி, சரி, அத எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சா, அடுத்த ஷாக்....

எல்லாருமா சேர்ந்து கேக் எல்லாம் எடுத்து வச்சு, ஹாப்பி பர்த்டே பாடி, பலூன் ஊதி, ஒண்ணு விடாம ஒடைச்சு, கேக் வெட்டினதும் மூஞ்சி முழுக்க அப்பி விட்டுட்டாங்க. டிஷ்யூ பேப்பர் எடுத்து மூஞ்சிய தொடைக்க உள்ள வரேன், பின்னாலயே இன்னொருத்தன் வந்துட்டான். குருவி எல்லாம் நல்லா இருக்கான்னு மறுபடியும் கிட்ட போக ட்ரை பண்ண, கொன்னுருவேன், ஓடிருன்னு பிடிச்சி வெளில தள்ளி கதவ பூட்டிட்டேன்.

அப்புறமாவாவது நான் கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும்ல... அது இல்லாம, குறிஞ்சியும் மந்தாகினியும் இருக்குற கூட்டை கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணனும்னு சொல்ல, சரி, சரி, நாங்க செய்து தரோம்னு ஆசை காட்டி, அந்த கூட்டை மெதுவா வெளில தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்படியே வாசல்ல நடைல கொண்டு போய் கூட்டை வச்சிட்டு உள்ள இருந்த பானைய கழட்ட ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க கொஞ்ச குரூப். இன்னும் கொஞ்ச பேர் பஞ்சர் ஆன டயர மாத்துறதுல மும்முரமா இருக்க, நானும் அவங்க கூட போய் ஒரே ஒரு செல்பி எடுக்க ட்ரை பண்ணி, அது நல்லா இல்லன்னு டெலிட் பண்ண போனா, ஒருத்தன் ஓடி வந்து மொபைல புடிங்கிட்டான். அங்க நடந்த களேபரத்த வேடிக்கை பாத்ததுல இங்க குருவி கூட்டை திறந்து வச்சிட்டான் போல... விருட்டுன்னு மந்தாகினியோட ஜோடி வெளில பறந்துடுச்சு.

ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி ஆகிடுச்சு. அது பாட்டுக்கு வெளில மாமரம் உள்ள புகுந்து காணாம போச்சு. கண்ணீர் முட்டி, கை எல்லாம் நடுங்கி அப்படியே மடிஞ்சி உக்காந்துட்டேன். எல்லாருக்குமே ஷாக் தான். நான் அழுவேன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

அண்ணி, அண்ணி ப்ளீஸ் அண்ணி, அழாத அண்ணி, வேற வாங்கி தரேன் அண்ணின்னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டான். காக்கா கழுகு மாட்டி அது செத்து தான போகும்? நினைக்க நினைக்க எனக்கு இன்னும் இன்னும் அழுக வருது.

அப்ப தான் ஒருத்தன் சொன்னான், அது திரும்ப வருதுன்னு. அதால அதிக தூரம் எல்லாம் பறக்க முடியல. நேரா வந்து தரைல உக்காந்தது. எப்படியாவது அத பிடிச்சிடணும்டான்னு ஆள் ஆளுக்கு பொறி வச்சி காத்திருக்க, ஒவ்வொரு தடவையும் அது பறந்து போய் உயரமா உக்காரும், அப்புறம் கொஞ்ச நேரத்துல கூட்டுக்குள்ள இருக்குறவங்கள பாக்க கீழ வரும்.

எப்படியோ ஒரு வழியா அத வீட்டுக்குள்ள பறக்க விட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி, இருட்டுல அத ஒருத்தன் பிடிச்சு தந்துட்டான். ஹப்பாடா.... திரும்பவும் அத கூட்டுக்குள்ள விட்டதும் தான் நிம்மதி...

எல்லாரும் கிளம்பி போய்ட்டாங்க. நான் ஆல்டர் பண்ணினா கூட்டையே பாத்துட்டு இருக்கேன். இப்பவே குறிஞ்சியும் அதோட ஜோடியும் கூடு கட்ட தேங்காய் நார்கள சேர்க்க ஆரம்பிச்சாச்சு. இங்க நளனும் தமயந்தியும் கூட்டை பிரிச்சு போட்டு மராமத்து வேலை பாத்துட்டு இருக்காங்க...

இப்படி ஒரு பரபரப்பான பிறந்தநாள் இப்ப தான் அனுபவிச்சேன்...

எப்படியோ, மந்தாகினிக்கி நாளைக்கு கூடு ரெடி ஆகிடும்... வாழ்க ஜோடிகள்.... 

Sunday 11 January 2015

பறவை மனமும் பல் மரமும்...


இந்த பெட் ஷாப்ல குருவிங்கள எல்லாம் அடைச்சு வச்சிருக்குரத பாத்து நான் கூட இத எல்லாம் நாம வாங்கி பறக்க விட்ருவோமான்னு சினிமாட்டிக் தனமா யோசிச்சதுண்டு. அதாவது, தேவதை மாதிரி வெள்ளை உடுப்பு போட்டுட்டு ஒவ்வொரு புறாவா தலைக்கு மேல தூக்கி புடிச்சி ஒரு குதி குதிச்சி பறக்க விடுற மாதிரி...

நோ...நோ... பேட் வேர்ட்ஸ்...

புறாக்களாவது பரவாலன்னு நினைக்குறேன், காரணம், எங்க வீட்ல முன்னாடி நூத்துக்கணக்குல புறாக்கள் இருந்துருக்கு. எல்லாமே காலைல பறந்து போயிட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு வரும். சாயங்காலம் அதுங்க வீட்டு மொட்டை மாடியில அரிசி, கம்பு, கொண்டகட்டிக் கடலை, இன்னும் பல பல ஐட்டங்கள ஸ்வாகா பண்ணிட்டு அதது கூட்டுக்குள்ள போய் அடஞ்சுக்கும்... அந்த நேரத்துல அதுகள பாக்குறதே ஒரு பேரானந்தம். அப்பப்ப நானும் தேவதையா மாறி, புறாக்கள பறக்க விட்டதும் உண்டு. என்ன, அப்போ நான் ரொம்ப குட்டி தேவதையா இருந்தேன். அதனால தலைல ஒரு மலர் கிரீடம் நீங்க தாராளமா கற்பனை செய்துப் பாத்துக்கலாம். முன் பல்லு ஒண்ணை காணோம்னு தேடாதீங்க, முந்தின நாள் தான் அதை மண்ணுல புதைச்சு, தண்ணி ஊத்தி தடவி குடுத்துட்டு வந்துருக்கேன். அநேகமா எங்க வீட்ல பல் மரம் ஒண்ணு யார் கண்ணுக்கும்  தெரியாம  முளைச்சிருக்கலாம்....

சரி, இப்போ விசயத்துக்கு வருவோம். நிஜமாவே இந்த பறவைகள எல்லாம் வெளில விட்டுட்டா சுதந்திரமா வாழுமா? இந்த கேள்விய நாமளே கேட்டுட்டு நாமளே பதில் சொல்லிக்கவும் கூடாது தான். அது இந்த ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் மாதிரி மனுஷாதிக்கம். ஆனாலும் நேத்து, நான் அடைச்சு வச்சிருந்த குருவிகள்ல மந்தாகினியோட ஜோடி திவா, விருட்டுன்னு வெளில பறந்துடுச்சு.

அது திரும்பி வரணும்னோ, வரும்னோ நான் அப்போ யோசிக்கவே இல்ல. அது பாட்டுக்கு பறந்து போய்டுச்சே, இங்க காக்காக்கள் நிறைய உண்டே, படக்னு அத ஒரே கொத்துல சாகடிச்சிடுமேன்னு தான் பயந்தேன். கூடவே, அதுக்கு அத்தனை வலிமையான சிறகுகள் வேற உண்டான்னு ஆச்சர்யம். ஒரு அஞ்சு நிமிச அமைதி, சலனம் எல்லாத்துக்கு பிறகு, அது திரும்பி வந்துச்சு.

உங்கள விட்டா எனக்கு யாரைத் தெரியும்னு அது கேட்ட மாதிரி இருந்துச்சு. பக்கத்துல போனப்ப விருட்டுன்னு அது பறந்தத பாத்து, நான் சுதந்திரமா இருக்க விரும்புறேன்னு சொல்ற மாதிரியும் இருந்துச்சு.

கொஞ்சம் நானும் ஒரு பறவையா மாறி அதோட எண்ண ஓட்டங்கள படிக்க பாத்தேன். ஒரு சமயம் மனம் கழுகா மாறுது, உன்னை கொத்தி திங்குறேனா பார்ங்குது, காக்கா மனமோ, இன்னிக்கி நல்ல சாப்பாடுன்னு சப்பு கொட்டுது. மறுபடியும் சிட்டுக்குருவியா மாறி, என்னை எதுவும் செய்துடாதன்னு கெஞ்சுது. அப்பப்பா, பறவை மனம்னு இனி சொல்லக் கூடாது போல... காக்கா மனம், சிட்டுக் குருவி மனம்ன்னு தனி தனியா பிரிச்சுக்கணும்.

எப்படியோ ஒரு மணி நேர அதிதீவிர போராட்டத்துக்கு பிறகு, கூட்டுக்குள்ள விடப்பட்ட திவா, இப்போ அப்படி எந்த விதமான சம்பவமும் நடக்கவே இல்லங்குற ரேஞ்ச்ல மந்தாகினிய கரெக்ட் பண்ற வேலைல தீவிரமா இறங்கியாச்சு...

சுதந்திரமா எல்லாம் வேணாம், நீங்க கூட்டுக்குள்ளயே இருங்கன்னு என் தேவதை மனம், கொஞ்சம் மனுசத்தனமா அதிதீவிர முடிவெடுத்துடுச்சு...

அப்படியே வாய்ல இருந்து ரெண்டு கோரப்பல்லும் தலைல ரெண்டு எருமை மாட்டு கொம்பும் முளைக்குறதுக்கு முன்னாடி, எல்லாரும் எஸ்கேப் ஆகிடுங்க... நான் கொஞ்சம் பறவைகள் உலகை ரசிக்கப் போறேன்...

Sunday 4 January 2015

நானென்னும் நான்



இந்த சமூகம் உனக்கு என்ன செய்ததுன்னு கேக்குறத விட, இந்த சமூகத்துக்கு நீ என்ன செய்தன்னு யோசிச்சுப் பாருன்னு சொல்லுவாங்க.

நானெல்லாம் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் அலட்டல் டைப். காசு பணத்த கண்ணால பாக்குறோமோ இல்லயோ ஏதாவது வேணும்னு முடிவு பண்ணிட்டா அத அடைஞ்சே ஆகணும்னு அடம் புடிக்குற கேரக்டர். நிஜம் சொன்னா, அதிகமா அடம்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாத்தாலே குறிப்பறிஞ்சு வாங்கித் தந்துடுவாங்க. காசு பணத்தோட அருமை தெரியாது. ஒரு பொருளோட மதிப்பு தெரியாது, வேணும்னா வேணும், அவ்வளவு தான்.

தினமும் ஒரு ட்ரெஸ், செருப்பு. அது மட்டும்னாலாவது பரவாலயே, அதுக்கு மேட்சா வளையல், பொட்டு, ஹேர் பின், ரிப்பன்னு அலட்டல் கொஞ்ச நஞ்சமில்ல. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்காதீங்க, அதெல்லாம் அப்படி தான்.

ஆனாலும் என்னோட இந்த கேரக்டருக்கு பின்னணியில ஒருத்தங்க இருந்தாங்க. என் பாட்டி. அம்மாவால என்னை அதிகம் கண்டிக்க எல்லாம் முடியாது. காரணம் பெரியவங்கள பகைச்ச மாதிரி இருக்குமே. ஆனா இதெல்லாம் எந்த வயசு வரைக்கும்னு நினைக்குறீங்க, ஆறு, ஏழு வயசு வரைக்கும் தான். அப்புறமா தான் நான் கொஞ்சம் கொஞ்சமா அம்மா கண்ட்ரோல்க்குள்ள வர ஆரம்பிச்சேன்.

அம்மானா அன்பாவே இருந்துருக்கலாம். ஆனா அவ எனக்கு ஒரு நல்ல தோழியா இருந்தா. செய்யாதேன்னு எதையும் கண்டிச்சதில்ல, செய்ன்னு கட்டயப்படுத்தினதுமில்ல. ஆனா தந்திரமா ஒண்ணு செய்வா, என் பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியும், அவ செய்தா எல்லாமே சரியா செய்வான்னு ஒரு புகழ் மாலை. தப்பா செய்து அம்மா வார்த்தைய தப்பாக்கிடக் கூடாதுங்குற ஒரு ஜாக்கிரதை உணர்வ எனக்குள்ள விதைச்சு விட ஆரம்பிச்சுட்டா. சரி, அம்மாவ கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுவோம்.

ஸ்கூல் லைப். வழக்கமா எல்லோருக்கும் இருக்குறத போல தான் எனக்கும் இருந்துச்சு. என்னதான் அன்பையும் பண்பையும் புரிஞ்சு வச்சிருந்தாலும் அலட்டல் மட்டும் குறையவே குறையாது. அதிகாரம் பண்றதுங்குறது என்னோட ரெத்தத்தோட ஊறி போன விசயமா கூட இருக்கலாம். நான் என் அப்பாவையும் பாத்து வளர்ந்தவ இல்லையா, அப்பாவுக்கு எல்லாரும் குடுக்குற மரியாத, கைகட்டி நிக்குற பண்பு, கொஞ்சம் எனக்கு தலைகனத்தை அதிகமாக்க தான் செய்திருந்தது.

ஒரு பார்வை பாத்தாலே என்னோட கட்டளைய எல்லாரும் புரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். கூட படிக்குற பிரெண்ட்ஸ் முதல் கொண்டு , ஊருல கூட சுத்துற பசங்க வரைக்கும் எல்லாரும் என்னை தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அதுக்கான காரணம் என்னன்னு எப்படி யோசிச்சாலும் தெரியாது. அம்மா கிட்ட கேட்டா, உன்னோட புன்னகையும், கண்ணும் தான்னு சொல்லுவா. என்னதான் மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சுகிட்டாலும் அதையும் மீறின ஒரு குழந்தைத்தனம் உன்கிட்ட உண்டுன்னு சொல்லுவா... உண்மையான்னு மத்தவங்க தான் சொல்லணும்.

சரி, இது எல்லாமே என்னோட செவன்த் வரைக்கும் தான். அப்புறம் எய்த் வந்தப்ப கூடவே வந்தவன் மூர்த்தி. அவன எல்லாம் பாத்தா பாத்துகிட்டே இருக்கலாம். ரொம்ப சீக்கிரமா எல்லார்கிட்டயும் ஒட்டிகிட்டான். ஸ்கூல்ல மிஸ்ல இருந்து, பசங்க பொண்ணுங்க தாண்டி, அவங்க அம்மா அப்பா வரைக்கும் பரிட்சயம் ஆகிட்டான். அவன் முதல்ல பிரெண்ட் ஆனது எனக்கு இல்ல, என் அம்மாவுக்கு. அதிகமா இழுக்க வேணாம், எப்படியோ அவனும் நானும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம். டாட்.

மூர்த்தி எங்க லைப்ல (ஒருமை இல்ல, பன்மை தான்) வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையோட அடுத்த அடி எடுத்து வைக்கப் பழகினோம். ரோட்டுல ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தா, அய்யேன்னு முகம் சுளிச்சு ஒதுங்கி போற எங்க மத்தியில ரெத்தக்கறையோட அத தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுறவன். காக்காவுக்கு இறைச்சு வீசுற சோத்துப் பருக்கைய கிண்ணத்துல வச்சி வைக்கணும்ன்னு தலைல குட்டி சொன்னவன். மாசத்துக்கு ஒரு யூனிபார்ம் தைக்குற எங்க மத்தியில அறுந்து போன பட்டன கூட தேடி திரியுறவன். அவனை பொறுத்தவரைக்கும் எதையுமே வீணாக்கக் கூடாது.

என் கிட்ட இன்னொரு குணமும் இருந்துச்சு, கொஞ்சம் அழுக்கை பாத்தாலே முகம் சுளிப்பேன். வீட்டுல ஆட்டுகுட்டியவே தினமும் மைசூர் சாண்டல் போட்டு குளிப்பாட்டி மணக்க மணக்க திரிய விடுறவ. அதுங்க மட்டும் சளைத்ததா என்ன, அப்படியே என் குணம். ஒரு அழுக்கு மேல ஒட்டிரக் கூடாது. உடனே பக்கத்துல இருக்குற யார்கிட்டயாவது கொண்டு போய் காலை தூக்கி காட்டும். உடனே கழுவி விடணும், இல்லனா அவங்க மேலயே நல்லா தேய்ச்சி துடைச்சி சுத்தமாக்கிக்கும். சரி, இவங்கள பத்தி அப்புறம் பேசலாம், என் விசயத்துக்கு வருவோம்.

அவன் கூட டென்த் வரைக்கும் படிச்சோம். அந்த மூணு வருசத்துல எங்களுக்குள்ள எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்கள்ல லீவ் நாட்கள்ல ஊர் ஊரா சுத்தி மக்களை படிக்க ஆரம்பிச்சோம். எதுவுமே புரியாது, ஆனாலும் எதோ புரியுற மாதிரி தோண ஆரம்பிச்ச காலம் அது. நட்பு புள்ளிகள்குள்ள நானும் ஒரு சின்ன புள்ளி, அவ்வளவு தான். நாங்க நாங்களா இருந்தோம். போற இடமெல்லாம் நான் உக்காரவும் படுத்து தூங்கவும் எப்பவுமே இடத்தை சுத்தப்படுத்தி தர்றது பசங்க தான். அப்புறம் அத எல்லாம் நான் பழகிகிட்டேன்னு சொல்றத விட, நான் இருக்குற இடத்த நானே சுத்தமா வச்சுக்க பழகிகிட்டேன்.

புளிச் புளிச்ன்னு துப்புர வெத்தல வாய் பாட்டிய ரசிக்க முடிஞ்சுது.
அந்த வெத்தல வாசத்த அப்படியே உள்ளிழுத்து அனுபவிக்க முடிஞ்சுது. சொந்த பாட்டியோட பழம்சீலை வாசத்துல அடிக்குற போதை மாறி, வியர்வை வாடை அடிக்குற பாட்டிகளோட சீலை வாசம் நல்லா இருந்துச்சு.

இப்போ முதல் பாராவ மறுபடியும் படிக்கலாம். இத இத செய்தோம்னு சொல்றத விட மனசுக்கு நிறைவா செய்தோம், மனசுக்கு நிறைவா வாழ்ந்தோம். பொட்ட புள்ளைய பெத்துப் போட்டுருக்கான்னு அடிக்குரவங்க கிட்ட எதுத்து பேசி அடி வாங்கியிருக்காங்க எங்க பசங்க. எதுக்கு இத்தனை புள்ளைங்கள பெத்து போட்ருக்கீங்கன்னு குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் செய்யவும் தயங்குனதில்ல. பொண்டாட்டிய காசுக்கு விக்குறியேன்னு கேட்டு மிதி வாங்கவும் தவறினதில்ல, ரெத்தம் குடுத்தா எதுவும் ஆகாதுன்னு பயத்த தெளிய வைக்க நட்ட நடு ரோட்டுலயே ரெத்தம் குடுக்கவும் தவறுனதில்ல. சின்ன பசங்கடா நீங்க, இப்பவே ரெத்தம் குடுக்க கூடாதுன்னு சொன்னவங்கள கூட, முதல்ல நாம செய்துக் காட்டணும், அப்புறம் அவங்களே வருவாங்கங்குற கொள்கை உள்ளவன் மூர்த்தி.

இன்னிக்கி வருசத்துல ஒரு ட்ரெஸ் எடுக்கணும்னாலே ரொம்ப யோசிக்குறேன். என்னோட செருப்பு வாங்கி எட்டு மாசம் ஆச்சு. இது அறுந்தா தான் அடுத்தது. என் காலேஜ் பேக் பாத்து புள்ளைங்களே சிரிப்பாங்க. ஆனா இதெல்லாம் அத்யாவசியமா மட்டும் தான் இருக்கணும், ஆடம்பரமா இருக்கக் கூடாதுன்னு தீர்மானமா என்னால இருக்க முடியுது.

பெருசா எதையுமே சாதிச்சுடல. புரட்சின்னு எதையும் செய்யணும்ன்னும் நினச்சதில்ல. ஆனா போற வழில அன்பை விதைச்சு போனோம்ன்னு ஒரு சின்ன திருப்தி. உடம்ப வித்து காசு பாத்துட்டு இருந்தவங்கள தையல் படிக்க வச்சு, அதுக்கான வருமானத்துக்கும் உதவி செய்ய முடிஞ்சிருக்கு அப்பா உதவியோட. காலேஜ்ல அடியெடுத்து வைக்க ஆரம்பிச்சதும் சொந்தமா சம்பாதிக்க முடிஞ்சுது. அத வச்சு பதிமூணு குழந்தைகள தத்தெடுக்கவும் முடிஞ்சுது.

ரெண்டு வருசமா அவங்கள நான் கைவிட்டுட்டேனோன்னு ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்துது. காலைல அப்பாகிட்ட ஹோமுக்கு போகணும்னு சொன்னேன். அப்போ பொங்கலுக்கு பிள்ளைங்களுக்கு நீயே புது ட்ரெஸ் எல்லாம் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுன்னு சொன்னாங்க. நான் கைவிட்டாலும் அப்பா கைவிடலன்னு புரிஞ்சுது. இந்த அப்பா மேல பொறாமை வருது. இவர் ஏன் இப்படி இருக்குறார்?

இந்த காயு செதுக்கப்பட்டவள். இது தான் என் குணம்ன்னு தெரியாமலே வளர்ந்த என்னை, இது தான் நீ-ன்னு செதுக்கி விட்டவங்க நிறைய பேர். காலம் எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்குமான்னு தெரியாது, அடுத்து நடக்கப் போறது என்னன்னும் தெரியாது. திரும்பி பாத்தா நேத்து என் கூட  இருந்தவங்க பலபேர் இன்னிக்கி காணாம இல்ல, இல்லாமலே போய்ட்டாங்க. ஆனாலும் நான் நானாவே இருக்கணும்னு நினைக்குறேன்... இருப்பேன்... இருக்கணும்...