Sunday, 4 January 2015

நானென்னும் நான்இந்த சமூகம் உனக்கு என்ன செய்ததுன்னு கேக்குறத விட, இந்த சமூகத்துக்கு நீ என்ன செய்தன்னு யோசிச்சுப் பாருன்னு சொல்லுவாங்க.

நானெல்லாம் சின்ன வயசுல இருந்தே கொஞ்சம் அலட்டல் டைப். காசு பணத்த கண்ணால பாக்குறோமோ இல்லயோ ஏதாவது வேணும்னு முடிவு பண்ணிட்டா அத அடைஞ்சே ஆகணும்னு அடம் புடிக்குற கேரக்டர். நிஜம் சொன்னா, அதிகமா அடம்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாத்தாலே குறிப்பறிஞ்சு வாங்கித் தந்துடுவாங்க. காசு பணத்தோட அருமை தெரியாது. ஒரு பொருளோட மதிப்பு தெரியாது, வேணும்னா வேணும், அவ்வளவு தான்.

தினமும் ஒரு ட்ரெஸ், செருப்பு. அது மட்டும்னாலாவது பரவாலயே, அதுக்கு மேட்சா வளையல், பொட்டு, ஹேர் பின், ரிப்பன்னு அலட்டல் கொஞ்ச நஞ்சமில்ல. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்காதீங்க, அதெல்லாம் அப்படி தான்.

ஆனாலும் என்னோட இந்த கேரக்டருக்கு பின்னணியில ஒருத்தங்க இருந்தாங்க. என் பாட்டி. அம்மாவால என்னை அதிகம் கண்டிக்க எல்லாம் முடியாது. காரணம் பெரியவங்கள பகைச்ச மாதிரி இருக்குமே. ஆனா இதெல்லாம் எந்த வயசு வரைக்கும்னு நினைக்குறீங்க, ஆறு, ஏழு வயசு வரைக்கும் தான். அப்புறமா தான் நான் கொஞ்சம் கொஞ்சமா அம்மா கண்ட்ரோல்க்குள்ள வர ஆரம்பிச்சேன்.

அம்மானா அன்பாவே இருந்துருக்கலாம். ஆனா அவ எனக்கு ஒரு நல்ல தோழியா இருந்தா. செய்யாதேன்னு எதையும் கண்டிச்சதில்ல, செய்ன்னு கட்டயப்படுத்தினதுமில்ல. ஆனா தந்திரமா ஒண்ணு செய்வா, என் பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியும், அவ செய்தா எல்லாமே சரியா செய்வான்னு ஒரு புகழ் மாலை. தப்பா செய்து அம்மா வார்த்தைய தப்பாக்கிடக் கூடாதுங்குற ஒரு ஜாக்கிரதை உணர்வ எனக்குள்ள விதைச்சு விட ஆரம்பிச்சுட்டா. சரி, அம்மாவ கொஞ்சம் ஒதுக்கி வச்சிடுவோம்.

ஸ்கூல் லைப். வழக்கமா எல்லோருக்கும் இருக்குறத போல தான் எனக்கும் இருந்துச்சு. என்னதான் அன்பையும் பண்பையும் புரிஞ்சு வச்சிருந்தாலும் அலட்டல் மட்டும் குறையவே குறையாது. அதிகாரம் பண்றதுங்குறது என்னோட ரெத்தத்தோட ஊறி போன விசயமா கூட இருக்கலாம். நான் என் அப்பாவையும் பாத்து வளர்ந்தவ இல்லையா, அப்பாவுக்கு எல்லாரும் குடுக்குற மரியாத, கைகட்டி நிக்குற பண்பு, கொஞ்சம் எனக்கு தலைகனத்தை அதிகமாக்க தான் செய்திருந்தது.

ஒரு பார்வை பாத்தாலே என்னோட கட்டளைய எல்லாரும் புரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். கூட படிக்குற பிரெண்ட்ஸ் முதல் கொண்டு , ஊருல கூட சுத்துற பசங்க வரைக்கும் எல்லாரும் என்னை தூக்கி வச்சு கொண்டாடுவாங்க. அதுக்கான காரணம் என்னன்னு எப்படி யோசிச்சாலும் தெரியாது. அம்மா கிட்ட கேட்டா, உன்னோட புன்னகையும், கண்ணும் தான்னு சொல்லுவா. என்னதான் மூஞ்சிய சிடுசிடுன்னு வச்சுகிட்டாலும் அதையும் மீறின ஒரு குழந்தைத்தனம் உன்கிட்ட உண்டுன்னு சொல்லுவா... உண்மையான்னு மத்தவங்க தான் சொல்லணும்.

சரி, இது எல்லாமே என்னோட செவன்த் வரைக்கும் தான். அப்புறம் எய்த் வந்தப்ப கூடவே வந்தவன் மூர்த்தி. அவன எல்லாம் பாத்தா பாத்துகிட்டே இருக்கலாம். ரொம்ப சீக்கிரமா எல்லார்கிட்டயும் ஒட்டிகிட்டான். ஸ்கூல்ல மிஸ்ல இருந்து, பசங்க பொண்ணுங்க தாண்டி, அவங்க அம்மா அப்பா வரைக்கும் பரிட்சயம் ஆகிட்டான். அவன் முதல்ல பிரெண்ட் ஆனது எனக்கு இல்ல, என் அம்மாவுக்கு. அதிகமா இழுக்க வேணாம், எப்படியோ அவனும் நானும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம். டாட்.

மூர்த்தி எங்க லைப்ல (ஒருமை இல்ல, பன்மை தான்) வந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையோட அடுத்த அடி எடுத்து வைக்கப் பழகினோம். ரோட்டுல ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தா, அய்யேன்னு முகம் சுளிச்சு ஒதுங்கி போற எங்க மத்தியில ரெத்தக்கறையோட அத தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுறவன். காக்காவுக்கு இறைச்சு வீசுற சோத்துப் பருக்கைய கிண்ணத்துல வச்சி வைக்கணும்ன்னு தலைல குட்டி சொன்னவன். மாசத்துக்கு ஒரு யூனிபார்ம் தைக்குற எங்க மத்தியில அறுந்து போன பட்டன கூட தேடி திரியுறவன். அவனை பொறுத்தவரைக்கும் எதையுமே வீணாக்கக் கூடாது.

என் கிட்ட இன்னொரு குணமும் இருந்துச்சு, கொஞ்சம் அழுக்கை பாத்தாலே முகம் சுளிப்பேன். வீட்டுல ஆட்டுகுட்டியவே தினமும் மைசூர் சாண்டல் போட்டு குளிப்பாட்டி மணக்க மணக்க திரிய விடுறவ. அதுங்க மட்டும் சளைத்ததா என்ன, அப்படியே என் குணம். ஒரு அழுக்கு மேல ஒட்டிரக் கூடாது. உடனே பக்கத்துல இருக்குற யார்கிட்டயாவது கொண்டு போய் காலை தூக்கி காட்டும். உடனே கழுவி விடணும், இல்லனா அவங்க மேலயே நல்லா தேய்ச்சி துடைச்சி சுத்தமாக்கிக்கும். சரி, இவங்கள பத்தி அப்புறம் பேசலாம், என் விசயத்துக்கு வருவோம்.

அவன் கூட டென்த் வரைக்கும் படிச்சோம். அந்த மூணு வருசத்துல எங்களுக்குள்ள எத்தனையோ மாற்றங்கள். ஆரம்ப காலங்கள்ல லீவ் நாட்கள்ல ஊர் ஊரா சுத்தி மக்களை படிக்க ஆரம்பிச்சோம். எதுவுமே புரியாது, ஆனாலும் எதோ புரியுற மாதிரி தோண ஆரம்பிச்ச காலம் அது. நட்பு புள்ளிகள்குள்ள நானும் ஒரு சின்ன புள்ளி, அவ்வளவு தான். நாங்க நாங்களா இருந்தோம். போற இடமெல்லாம் நான் உக்காரவும் படுத்து தூங்கவும் எப்பவுமே இடத்தை சுத்தப்படுத்தி தர்றது பசங்க தான். அப்புறம் அத எல்லாம் நான் பழகிகிட்டேன்னு சொல்றத விட, நான் இருக்குற இடத்த நானே சுத்தமா வச்சுக்க பழகிகிட்டேன்.

புளிச் புளிச்ன்னு துப்புர வெத்தல வாய் பாட்டிய ரசிக்க முடிஞ்சுது.
அந்த வெத்தல வாசத்த அப்படியே உள்ளிழுத்து அனுபவிக்க முடிஞ்சுது. சொந்த பாட்டியோட பழம்சீலை வாசத்துல அடிக்குற போதை மாறி, வியர்வை வாடை அடிக்குற பாட்டிகளோட சீலை வாசம் நல்லா இருந்துச்சு.

இப்போ முதல் பாராவ மறுபடியும் படிக்கலாம். இத இத செய்தோம்னு சொல்றத விட மனசுக்கு நிறைவா செய்தோம், மனசுக்கு நிறைவா வாழ்ந்தோம். பொட்ட புள்ளைய பெத்துப் போட்டுருக்கான்னு அடிக்குரவங்க கிட்ட எதுத்து பேசி அடி வாங்கியிருக்காங்க எங்க பசங்க. எதுக்கு இத்தனை புள்ளைங்கள பெத்து போட்ருக்கீங்கன்னு குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரம் செய்யவும் தயங்குனதில்ல. பொண்டாட்டிய காசுக்கு விக்குறியேன்னு கேட்டு மிதி வாங்கவும் தவறினதில்ல, ரெத்தம் குடுத்தா எதுவும் ஆகாதுன்னு பயத்த தெளிய வைக்க நட்ட நடு ரோட்டுலயே ரெத்தம் குடுக்கவும் தவறுனதில்ல. சின்ன பசங்கடா நீங்க, இப்பவே ரெத்தம் குடுக்க கூடாதுன்னு சொன்னவங்கள கூட, முதல்ல நாம செய்துக் காட்டணும், அப்புறம் அவங்களே வருவாங்கங்குற கொள்கை உள்ளவன் மூர்த்தி.

இன்னிக்கி வருசத்துல ஒரு ட்ரெஸ் எடுக்கணும்னாலே ரொம்ப யோசிக்குறேன். என்னோட செருப்பு வாங்கி எட்டு மாசம் ஆச்சு. இது அறுந்தா தான் அடுத்தது. என் காலேஜ் பேக் பாத்து புள்ளைங்களே சிரிப்பாங்க. ஆனா இதெல்லாம் அத்யாவசியமா மட்டும் தான் இருக்கணும், ஆடம்பரமா இருக்கக் கூடாதுன்னு தீர்மானமா என்னால இருக்க முடியுது.

பெருசா எதையுமே சாதிச்சுடல. புரட்சின்னு எதையும் செய்யணும்ன்னும் நினச்சதில்ல. ஆனா போற வழில அன்பை விதைச்சு போனோம்ன்னு ஒரு சின்ன திருப்தி. உடம்ப வித்து காசு பாத்துட்டு இருந்தவங்கள தையல் படிக்க வச்சு, அதுக்கான வருமானத்துக்கும் உதவி செய்ய முடிஞ்சிருக்கு அப்பா உதவியோட. காலேஜ்ல அடியெடுத்து வைக்க ஆரம்பிச்சதும் சொந்தமா சம்பாதிக்க முடிஞ்சுது. அத வச்சு பதிமூணு குழந்தைகள தத்தெடுக்கவும் முடிஞ்சுது.

ரெண்டு வருசமா அவங்கள நான் கைவிட்டுட்டேனோன்னு ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்துது. காலைல அப்பாகிட்ட ஹோமுக்கு போகணும்னு சொன்னேன். அப்போ பொங்கலுக்கு பிள்ளைங்களுக்கு நீயே புது ட்ரெஸ் எல்லாம் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுன்னு சொன்னாங்க. நான் கைவிட்டாலும் அப்பா கைவிடலன்னு புரிஞ்சுது. இந்த அப்பா மேல பொறாமை வருது. இவர் ஏன் இப்படி இருக்குறார்?

இந்த காயு செதுக்கப்பட்டவள். இது தான் என் குணம்ன்னு தெரியாமலே வளர்ந்த என்னை, இது தான் நீ-ன்னு செதுக்கி விட்டவங்க நிறைய பேர். காலம் எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்குமான்னு தெரியாது, அடுத்து நடக்கப் போறது என்னன்னும் தெரியாது. திரும்பி பாத்தா நேத்து என் கூட  இருந்தவங்க பலபேர் இன்னிக்கி காணாம இல்ல, இல்லாமலே போய்ட்டாங்க. ஆனாலும் நான் நானாவே இருக்கணும்னு நினைக்குறேன்... இருப்பேன்... இருக்கணும்...5 comments:

 1. நாம் நாமாகவே எப்போதும் இருக்க முடிவதில்லை.ந்யூட்டனின் முதல் விதியைப் போல ஏதோ ஒரு புறவிசை நம் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திகிறது. தன்னை உணர்ந்த உணர்த்தும் பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சில நேரம் நாம இதுதான்னு சரியா கண்டுபிடிச்சு நம்மள மெருகேத்துரவங்க கிடைக்குறது வரம்

   Delete
 2. நாம் நாமாகவே எப்பொழுதும் இருப்போம்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. அதானே.... நாம நாமாவே இருப்போம். ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

   Delete
 3. / பெருசா எதையுமே சாதிச்சுடல. புரட்சின்னு எதையும் செய்யணும்ன்னும் நினச்சதில்ல. ஆனா போற வழில அன்பை விதைச்சு போனோம்ன்னு ஒரு சின்ன திருப்தி./ எளிமையான அழகான வார்த்தைகள். இது போதாதா தோழி?

  / அத்யாவசியமா மட்டும் தான் இருக்கணும், ஆடம்பரமா இருக்கக் கூடாது / ‘உன்னிடம் 2 ரூபாய்கள் மட்டும் தான் இருக்கிறதென்றால் ஒரு ரூபாய்க்கு ரொட்டி வாங்கி ஒரு ஏழையில் பசியை போக்கு. ஒரு ரூபாயில் உனக்கு ஒரு ரோஜாப்பூ வாங்கிக் கொள் ஒரு பழமொழி உண்டு. எளிமை அழகென்ற போதும் அவசியம் என்றால் மட்டும் என்று இல்லை. உங்களுக்கு ஆசையாய் இருக்கிறதென்றும் அபூர்வமாய் ஒன்றை வாங்கிக் கொள்ளுவதில் தப்பில்லை தோழி. அது பரமானந்தம்:)

  தேநீரை எந்தக் குவளையில் குடித்தாலும் ருசி ஒன்று தான். ஆனால் எனக்கு அதை ஒரு வசீகரமான குவளையில் குடிக்கும் போது பிறக்கும் ஆனந்தம் தனியானது. அப்படி எல்லோருக்கும் இருக்கக் கூடும் சில ஆசைகள். எளிமையான தனித்துவமான அபூர்வ ஆசைகள். அவை நமக்கே நமக்கானவை. கெடுதல் இல்லாதவை தீர்க்கப்பட முடிபவை மற்றும் வேண்டியவை.

  மனமறிந்து நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை. மனச் சாட்சியை மீறி ஒரு போதும் நடந்ததில்லை என்ற இரு வாசகங்கள் சுகமான நித்திரைக்கு என்னை இப்போதும் இட்டுச் செல்லுகின்றன காயத்திரி.

  எனக்கு ஒரே ஒரு ஆசை. நாம் போகின்ற போது நான் இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். அதை நீங்கள் இபோதே ஆரம்பித்து விட்டீர்கள்.

  மகிழ்ச்சி!

  ReplyDelete