Showing posts with label ஹாலிவுட் டைம்ஸ். Show all posts
Showing posts with label ஹாலிவுட் டைம்ஸ். Show all posts

Friday, 10 July 2015

“பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers) - விமர்சனம்
































நேரெதிர் குணம் கொண்ட ரெண்டு ஹை-ப்ரொபைல் நண்பர்கள். அவங்க லைப்ல வர்ற லோ-ப்ரொபைல் பொண்ணு. மூணு பேருக்கும் இடைல வர்ற காதல்... அத மொத்தமா இருபத்தி அஞ்சு மணி நேரம் ரசிக்க வச்சிருக்காங்க.


ரொம்ப குழம்ப வேணாம், இவ எத பத்தி பேசுறான்னு. நெட் கனெக்சன் சரியா கிடைக்காததால மூணு நாளா உக்காந்து  ஒரு கொரியன் சீரியல் இருபத்தியஞ்சி எப்பிசோட் பாத்து முடிச்சிருக்கேன். விறுவிறுப்பு, பயம், சந்தோசம், அழுகை, கலாட்டான்னு  செம இன்ட்ரெஸ்ட்டிங்கா போன முதல் நாலு எப்பிசோட் தான் என்னை தொடர்ந்து அந்த சீரியல பாக்க வச்சுது.


பொதுவா நம்ம இடங்கள்ல முக்கோண காதல்னாலே ரெண்டு பேரு ஹீரோயின/ ஹீரோவ லவ் பண்ணுவாங்க. ஆனா அடுத்த பக்கம் யாராவது ஒருத்தர் மேல தான் காதல் வரும். இங்க ஹீரோயின் தன்னை லவ் பண்ற ரெண்டு பேரையும் காதலிக்குறா. ஆனா  சீக்கிரமே தன்னோட உண்மையான காதல் யார் மேல இருக்குங்குறத புரிஞ்சுக்குறா.

சரி, உங்கள எல்லாம் குழப்புறதுக்கு முன்னாடி கதைய கொஞ்சம் சுருக்கமா சொல்லிடுறேன். என்ன ஒண்ணு, இந்த கேரக்டர்களோட பெயர்கள பாத்தா தான் வாய்லயே நுழைய மாட்டேங்குது.

கொரியாவோட மிக சிறந்த ஸ்கூல்கள்ல ஒண்ணான ஷின்வா ஹை-ஸ்கூல ஹை-ப்ரொபைல் ஆளுங்களோட பசங்க தான் படிக்க முடியும். அந்த ஸ்கூலயே கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்காங்க அங்க படிக்குற நாலு அழகான பணக்கார திமிர்பிடிச்ச பசங்க (F4 டீம்). அதுல “குஜுன் ப்யோ” ஷின்வா க்ரூப்ஸ் ஓனரோட பையன். இன்னொருத்தன் “ஜின் ஹோ” கொரிய முன்னாள் ஜனாதிபதியோட பேரன். மத்த ரெண்டு பசங்களும் கூட நாட்டோட முக்கிய பணக்கார வம்சங்கள் தான்.

இந்த நாலு பசங்களும் சேர்ந்து பண்ற அட்டகாசத்துல ஒரு பையன் பலியாக, மாடில இருந்து  குதிச்சிடுறான். அந்த நேரம் அவனோட யூனிபார்ம்ம டெலிவரி குடுக்க வந்த லாண்டரி கடை ஓனரோட பொண்ணு அவன காப்பாத்திடுறா. விஷயம் கொரியா முழுக்க பரவ, நிலைமைய சமாளிக்க அந்த பொண்ணுக்கு ஷின்வா ஹை-ஸ்கூல்ல ஒரு அட்மிசன்ன போட்டுக் குடுத்து சம்பவத்த அமுக்கிடுறாங்க நிர்வாகத்தார். அப்படி தான் “கும் ஜாண்டி” அந்த நாலு பசங்க லைப்ல என்ட்டர் ஆகுறா.

“ஜாண்டி” பத்தி நம்ம நாட்டாம ஸ்டைல்ல சொல்லனும்னா ஒரு அடம்புடிச்ச கழுத. எதுக்கும் பிடிவாதம், அத்தனை அடம். எப்ப பாத்தாலும் ஓ-ன்னு கத்தி தான் பேசுவா. ஆனா எல்லாத்துலயும்  நேர்மை இருக்கும்.  ஸ்கூலுக்குள்ள நுழைஞ்ச உடனே “குஜூன் ப்யோ” கூட மோதல் ஆரம்பிச்சுடுது. கூடவே “ஜின் ஹோ” கூட ஒரு இனம்புரியாத அன்பு ஏற்படுது.  
பொண்ணுங்க எல்லாருக்கும் F4 டீம் மேல ஒரு க்ரேஸ் இருக்க, “குஜூன் ப்யோ” மூஞ்சிலயே ஐஸ்க்ரீம தேய்ச்சி உன் ட்ரெஸ் கிளீன் பண்ண இவ்வளவு காசு தான் இருக்கும், போய் கிளீன் பண்ணிக்கோ, இல்லனா எங்ககிட்ட அனுப்பு நாங்க கிளீன் பண்ணித் தரோம்ன்னு பணத்தையும் விசிறியடிச்சுட்டு போய்டுறா.

சும்மாவே “குஜூன் ப்யோ” யாரையும் விட்டு வைக்க மாட்டான், அவன் கிட்டயே மோதினா விடுவானா, அவ சரண்டர் ஆகி மன்னிப்பு கேக்குற வரைக்கும் அவள விடக் கூடாதுன்னு F4 டீமோட ரெட் கார்ட் “ஜாண்டி”க்கு குடுக்கப்படுது.

தன் மேல எறியப்படுற முட்டை, மாவு எல்லாத்தையும் “ஜாண்டி” தாங்கிக்குறா. உணவுப் பொருட்களோட மதிப்பு தெரியாத அவங்க மேல இன்னும் கோபப்படுறா. அவள செக்சுவல் அபியூஸ் பண்ண வர்ற பசங்க கிட்ட இருந்து “ஜின் ஹோ” காப்பாத்துறான். கடைசியா அவ கர்ப்பிணின்னும் பல பசங்க கூட சுத்துறவன்னும் கேவலப்படுத்துறான் “குஜுன் ப்யோ”.

ஒவ்வொரு இக்கட்டுலயும் தனக்கு ஆதரவா இருக்குற “ஜின் ஹோ” மேல ஜாண்டிக்கு ஒரு பரிவு வர்ற அதே நேரத்துல, எவ்வளவு தொல்லை பண்ணியும் தன்கிட்ட சரண்டர் ஆகாம செருப்பு காலால மூஞ்சில எட்டி உதச்ச “ஜாண்டி” மேல “குஜுன் ப்யோ”வுக்கு காதல் வருது. “நான் ஆண்கள் கூட தூங்கினதையும், பசங்க கூட கைகோர்த்து சுத்தினதையும் நீ பாத்தியாடா, ஒரு சுத்தமான இன்னமும் முதல் முத்தம் கூட வாங்காத ஒரு பொண்ண பாத்து இப்படி பழி போட உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு”ன்னு கேட்ட அவ குரல் திரும்ப திரும்ப அவனுக்குள்ள எதிரொலிக்குது.

இந்த சீரியலோட ரெண்டாவது எப்பிசோட்ல என் ஓட்டு மொத்தமா “குஜுன் ப்யோ”வுக்கு தான். ஒரு முரடன், ஈவு இரக்கமே இல்லாதவன் காதல் வயப்பட்டா சரியான இளிச்சவாயன் ஆகிடுறான். மூஞ்சில செருப்பு காலால பஞ்ச் வாங்குன நிமிசத்துல இருந்து கேனத்தனமா சிரிச்சுட்டே இருக்கான். அவன் சிரிக்க ஆரம்பிச்ச அந்த நிமிஷம் நமக்கும் சிரிப்பு தொத்திக்குது. உனக்கெல்லாம் காதலிக்க கூட தெரியலடான்னு செல்லமா அவன் மூஞ்சி மேலயே குத்தணும் போல இருந்துச்சு.

அவனோட அந்தஸ்த்த காட்ட “ஜாண்டி”ய தூக்கிட்டு போய் முழு மேக் அப் போட்டு அழகாக்கி அவன் முன்னால கொண்டு வந்து நிக்க வச்சுட்டு “இப்ப சொல்லு, உன் காதல, நான் ஒத்துக்குறேன்”ன்னு அவ கிட்ட சொல்றான். இவரா ப்ரொபோஸ் பண்ண மாட்டாராமாம். ஒரு இடத்துக்கு அவள வர சொல்லிட்டு நாலு மணி கழிச்சு வர்ற அவ கிட்ட கோச்சுக்காம ஒரு குழந்தை மாதிரி குழையுறான். அவ கிட்டயே சொல்லாம ஹாலிடே ட்ரிப்ன்னு பிரெண்ட்ஸ் கூட அவளையும் தூக்கிட்டு பறந்துடுறான். அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு அவன் செய்ற ஒவ்வொரு நடவடிக்கையும் பாத்துட்டு “ஜாண்டி” “எனக்கு என்ன தேவைன்னு நீ முடிவு பண்ணாத, எப்பவாவது என் கிட்ட என்ன பிடிக்கும்னு கேட்டுருக்கியாடா”ன்னு எகிறி குதிக்குறா. அவன் பக்கத்துல வந்தாலே ஆஆஆஆ-ன்னு கத்தியே அவன ஓட விடுறா.

அந்த ஹாலிடே ட்ரிப்ல வச்சு “ஜாண்டி”ய லவ் பண்றதா சொல்றான் “ஜின் ஹோ”. “ஜாண்டி” தன்னோட முதல் முத்தத்த “ஜின் ஹோ”கிட்ட வாங்கிக்குறா.  அப்புறம் என்ன, இத “குஜுன் ப்யோ” பாத்துட, பிரச்சனை ஆரம்பிச்சுடுது. இவங்க ரெண்டு பேரையும் அவன் எதிர்க்க, தங்களோட முதல் டேட்டிங்காக லவ் ஜோடி ரெண்டும்  
வெளில போகுது. “ஜாண்டி”யோட தயக்கத்தையும் “குஜுன் ப்யோ”வோட பதற்றத்தையும் பாத்து அவள விட்டுக் குடுக்குறான் “ஜின் ஹோ”.

“ஜாண்டி” “ஜின் ஹோ” மேல தனக்கிருக்குறது வெறும் பிரெண்ட்ஷிப் தான், தான் “குஜுன் ப்யோ”வ தான் விரும்புறத உணர்ந்துக்குறா. லவ் ஜோடி சேர்ந்தாங்களாங்குறது தான் மீதிக் கதை.

இதுல வில்லியா வர்ற “குஜுன் ப்யோ”வோட அம்மாவ பாத்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது. இப்படியும் கூட ஒரு லேடி இருப்பாளான்னு திட்டணும் போல இருக்கு. “ஜாண்டி குடும்பத்த சிதைக்குறதோட இல்லாம அவ பிரெண்ட்ஸ் எல்லாரோட குடும்பத்தையும் ஆட்டி வைக்குறா.

காதலிக்குறேன்னு சொன்னதோட சரி, அப்புறம் அவ என்ன பண்றா, ஏது பண்றா, எப்படி கஷ்டப்படுறா எதையும் கண்டுக்காத ஒரு காதலன் “குஜுன் ப்யோ”. அவன் ஏன் இப்படி இருக்கான்னு கேட்டா அவனுக்கே தெரியாது. அவன் வளர்ப்பே அப்படி தான். தனிமை தவிர அவன் வாழ்க்கைல எதையும் அனுபவிச்சது கிடையாது. அவன் வாழ்க்கைல வந்த முதல் பொண்ணு “ஜாண்டி”. அவள எப்படி பாதுகாக்கணும்னு கூட தெரியாத ஒரு பிடிவாத குழந்தை அவன். ஒவ்வொரு கஷ்டத்துலயும் அவ கூட இருக்குற “ஜின் ஹோ”வ பாத்து பொறாமை மட்டும் படத் தெரியும். அத கூட அவனால ஒழுங்கா படத் தெரியாது. அம்மாவுக்கு பயந்த ஒரு பணக்கார கோழை.

“ஜின் ஹோ”. கடைசி வரைக்கும் அவள காதலிச்சுட்டு, அவளுக்காக எதுவும் செய்யும் ஒரு கேரக்டர். அவளுக்காக தன்னோட காதலையே விட்டுக் குடுக்குறான். “குஜுன் ப்யோ”வ “ஜாண்டி” தேடி அலையுறப்ப அவ கூடவே அலையுறான் “ஜின் ஹோ”. அவ அழுற ஒவ்வொரு நிமிசமும் அவளுக்கு ஆறுதலா இருக்கான். இப்படி ஒருத்தன் இருப்பானா, இந்த அளவு ஒரு பொண்ணை காதலிக்க முடியுமான்னு மலைக்க வைக்குற கேரக்டர் “ஜின் ஹோ”வோடது. இந்த சீரியல பாத்துட்டு இருக்குற நமக்கு பேசாம இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் லவ் பண்ணினா என்னன்னு தோணும். ஆனா எல்லாத்தையும் இழந்துட்டு “குஜுன் ப்யோ”வையும் விட்டுக் குடுத்துட்டு வர்ற “ஜாண்டி” அவன தவிர தன்னோட மனசுல யாருக்குமே இடம் இல்லன்னு சொல்லிடுறா.

ரெண்டாவது எப்பிசோட்ல எனக்கு “குஜுன் ப்யோ” மேல இருந்த க்ரேஸ் கொஞ்சம் கொஞ்சமா போக போக இறங்கியிருந்துச்சு. காதலிக்கவும் தெரியாத, அடுத்தவங்க உணர்ச்சிகள புரிஞ்சுக்கவும் தெரியாத, அம்மாவுக்கு பயந்து வாயே தொறக்காத அவன் எல்லாம் ஏன் காதலிக்கணும்னு தோணிச்சு. தன் காதலிய விட்டுகுடுக்கவும் மாட்டானாம், அவள பாதுகாக்கவும் மாட்டானாம். ஆனா, தன்னோட நிலை என்னன்னு அவன் முழுசா உணர்ந்த அந்த நொடி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. “என்னை மாதிரியான ஒரு கோழை, ஒரு அரக்க குடும்பத்துல பிறந்தவன் காதலிக்கவே தகுதி இல்லாதவன். எனக்கு அவளுக்கு என்ன தேவை, அவள என்ன பண்ணனும்னு கூட தெரியலயே”ன்னு அவன் கண் கலங்குரப்ப “இல்லடா, ஜாண்டி உனக்கு தான்”னு சீரியல் பாத்த நானே வாய் விட்டு சொல்லிட்டேன்.

காதலிக்காக அவன் எதுவுமே செய்யாத மாதிரி தோணினாலும் அவளுக்காக அவன் பண்ற ஒவ்வொரு விசயமும் கவிதை தான். கடல்ல மாட்டின “ஜாண்டி”ய “ஜின் ஹோ” காப்பாத்துறப்ப அடுத்த தடவ என் காதலிய எவனும் தொடக் கூடாதுன்னு நீச்சல் கத்துக்குறான், பனி மலைல அவ மாட்டிகிட்டப்ப பதறி போய் தூக்கிட்டு வர்றான், அட, எப்ப பாத்தாலும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க. ஒரு டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி. அதாவது பரவால, டேட்டிங் போனாலும் சண்டைப் போடுற ஜோடி இந்த ஜோடியா தான் இருக்கும். ஒரு முத்தம் குடுக்க கூட அவ அனுமதி வேணும்னு எதிர்பாக்குறான். அவன் நினச்சா அவள என்ன வேணா பண்ணலாம், ஆனா தள்ளி நின்னே ரசிக்குறான்.

கடைசில “ஜாண்டி”ய பொறுப்பா பாத்துக்க தெரிஞ்ச ஒரே ஆள் “ஜின் ஹோ” தான்னு உணர்ந்துக்குறான். “உன்னைத் தவிர வேற யாராலயும் அவள பாதுகாக்க முடியாது”ன்னு நேரா சொல்றான். அந்த இடத்துல “குஜுன் ப்யோ” ஸ்கோர் பண்ணிட்டான்.


ஒரு சாதாரண குடிமகன்ல இருந்து இந்த பணக்கார பசங்க வாழ்க்கை எப்படி வேறுபட்டு இருக்குங்குறத ஒரு வித்யாசமான கோணத்துல சொல்லியிருக்காங்க. டெய்லி சாப்பிடுற சாப்பாட்டையே இங்க சேர்ந்து உக்காந்து சாப்பிடுறாங்க ஆனா அங்க கிறிஸ்மஸ் நாள்ல கூட அஞ்சு வயசுலயே தனியா உக்காந்து கேக் வெட்ட வேண்டியிருக்கு. அப்புறம் அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்?


எப்படியோ, ஆரம்ப நாலு எப்பிசோட் குடுத்த அந்த பரபரப்பும் சந்தோசமும் அடுத்தடுத்து வந்த எப்பிசோட்ஸ் குடுக்கலனாலும் கடைசி வரைக்கும் பாக்க வைக்குற சுவாரஸ்யம் அந்த சீரியல் முழுக்க இருக்கு. ஆக  மொத்தம்  என்  மூணு நாளை முழுசா எடுத்துகிடுச்சு இந்த  சீரியல். பாத்தீங்களா, எந்த சீரியல்ன்னு சொல்ல மறந்தே  போயிட்டேன். சீரியல் பேரு “பாய்ஸ் பிபோர் ப்ளவேர்ஸ்” (Boys before flowers).

Monday, 11 May 2015

பார்ன் ப்ரீ (born free) – திரை விமர்சனம்



பார்ன் ப்ரீ (born free) – இந்தப் படம் என் கைல கிடைச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாவது இருக்கும். எப்பவும் பாத்த படத்தையே திருப்பி திருப்பி பாக்குற பழக்கம் எனக்கு இருக்குறதால, இத பாக்க ஏனோ இன்ட்ரெஸ்ட் காட்டவே இல்ல. ஒரு நாளு மட்டும் ஒன்னரை மணி நேரப் படத்த பத்தே நிமிசத்துல பார்வர்ட் அடிச்சு பாத்துட்டு, என்னமோ வேட்டைக்கு போறாங்க, ஒரு சிங்கம் வருது, ரெண்டு ஆளுங்க வராங்க, காட்டுக்குள்ள சுத்துறாங்கன்னு நானே முடிவு பண்ணி படத்த முடிச்சுட்டேன்.

நேத்து, நல்லா ஊர் சுத்திட்டு வந்தா வர்ற வழக்கமான தலைவலி, கூடவே உடல்வலின்னு எப்படியும் தூக்கம் வராதுன்னு தெரிஞ்சி போச்சு. சரி, ஏதாவது படத்த எடுத்து பாப்போம், எவ்வளவு மொக்கையா இருந்தாலும் பாத்துரணும்னு ஒரு முடிவோடத் தேடித் தான் இந்தப் படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

படம் ஒரு வேட்டைல ஆரம்பிக்குது. மனுசங்கள கொல்லுற சிங்கத்த கொல்லப் போனப்ப மூணு குட்டிங்களோட தாயையும் கொல்ல நேர்ந்துடுது. அத அப்படியே விட்டா செத்துப் போய்டும்ங்குறதால அதுங்கள தன்னோட இருப்பிடத்துக்கே தூக்கிட்டு வந்து தன்னோட மனைவி ஜாய் கிட்ட ஒப்படைக்குறார் ஜார்ஜ். நாள் முழுக்க எதுவுமே சாப்டாம அடம்பிடிக்குற அந்த குட்டிகள் மூணும் அப்புறம் என்னாச்சுங்குறது தான் கதை.

என்ன தான் பீடிங் பாட்டில்ல பால் குடுத்தாலும் மூஞ்சை திருப்பிக்குற குட்டிங்க, ஜார்ஜ் பாலை ஜாய் கைல விட, அத நக்கி நக்கி குடிக்க ஆரம்பிச்சிடுறதுல இருந்து படம் பிக் அப் ஆக ஆரம்பிச்சிடுது.

அடேங்கப்பா, மூணும் சேர்ந்து என்ன சேட்டைப் பண்ணுதுங்க. ஒண்ணு மேல ஒண்ணு ஜம்ப் பண்ணுதுங்க, குட்டிக்கரணம் அடிக்குதுங்க, ஒருத்தர ஒருத்தர் தொரத்திப் பிடிக்குதுங்க. இதுல ஆம்பள பசங்க ரெண்டு பேரும் எப்பவும் தனியா விளையாடிட்டு இருக்க கடைசி பொம்பள குட்டி எல்சா மட்டும் வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள ஓடி வந்துடுது. நாளடைவுல எல்சா ஜாய் கூடவே சுத்தவும் ஆரம்பிச்சிடுது.

ஒரே அட்டூழியமா (இந்த அட்டூழியம் ரொம்ப ரசிக்க வைக்குது) போயிட்டு இருக்குற நேரத்துல தான் கதைல திடீர்னு கென்டால் வர்றார். அவர் ஜார்ஜோட பாஸ். அவர் இருக்குறப்பவே இதுங்க மூணும் வீட்டுக்குள்ள அட்டகாசம் பண்ண, அதுலயும் எல்சா அவர பாத்து ஒரு டீச்சர் ரேஞ்ச்ல உறும, அவர் அட்டென்சன்ல பெஞ்ச் மேல ஏறி நிக்குறார்.

இனி விடுவாரா அவர்? மூணு சிங்க குட்டிங்களையும் நெதர்லேண்ட்ல இருக்குற ஜூவுல கொண்டுப் போய் விட சொல்லிடுறார்.

ஜார்ஜும் ஜாயும் சிங்கக் குட்டிங்கள கொண்டுப் போய் ஜூவுல விடப் போகும் போது ஜார்ஜ் மனசு மாறி எல்சாவ ஜாய் கிட்ட திரும்பவும் ஒப்படைச்சுடுறார். அப்புறம் என்ன, எல்சா தனி மனுசியா இவங்க கூட வாழத் தொடங்குது.

காலம் ஒரே மாதிரி இருக்காதே, எல்சா பெரியவளா வளர்ந்துடுறா. ஒரு வளர்ப்பு பிராணிங்குறது தாண்டி அதுக்கும் தேவைகள் இருக்குனு ஜார்ஜும் ஜாயும் உணர ஆரம்பிக்குறாங்க. அந்த நேரத்துல தான் எல்சா ஒரு பெரிய யானைக் கூட்டத்த தொரத்தி ஊருக்குள்ள விட, யானைக் கூட்டம் ஊரையே அழிச்சுட்டு போய்டுது. ஆனா அது எதைப் பத்தியும் கவலைப் படாத எல்சா, யானைக் கூட்டத்துல இருந்து தான் கூட்டிகிட்டு வந்த யானைக் குட்டியோட விளையாடிகிட்டு இருக்கு.

நஷ்டஈடு கட்டிட்டு வந்த கென்டால் இதுக்கு மேல எல்சா அங்க இருக்கக் கூடாதுன்னு முடிவு எடுக்குறார். அவர் ஜார்ஜ், ஜாய் கிட்ட ரெண்டு ஆப்சன் குடுக்குறார்.

ஒண்ணு, எல்சா காட்டுக்கு திரும்ப போகணும், இல்லனா அவள ஜூவுக்கு அனுப்பணும்ன்னு.

அப்ப தான் அந்த துணிவான முடிவ எடுக்குறாங்க ஜாய். ஆமா, எல்சாவ காட்டுக்கு அனுப்ப போறதாவும் , அதுக்கு அவளுக்கு பயிற்சி குடுக்க மூணு மாசம் டைம் வேணும்னும் கென்டால் கிட்ட கேக்குறாங்க.

வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வந்த எல்சாவுக்கு எப்படி காட்டு வாழ்க்கை பழகும்? அதுக்காக அவங்க ரெண்டு பேரும் எடுக்குற ஸ்டெப்ஸ் பாத்தா நிஜமாவே நமக்கு பதற்றமா இருக்கு.

ஒவ்வொரு தடவையும் எல்சா காயத்தோட திரும்பி வர்றப்ப எல்லாம் ஜாய் அத ஓடிப் போய் கட்டிக்குறாங்க. ஆனா திரும்ப திரும்ப காட்டுக்குள்ள தனியா விட்டுட்டு வராங்க.

ஒரு வாரம் அடிக்குற மழைனால எல்சாவ தேடிப் போக முடியாம கடைசில குத்துயிரா எல்சாவ கண்டுபிடிக்கும் போது ஜார்ஜ் தன்னோட மொத்த நம்பிக்கையையும் இழந்துடுறார். இவளால காட்டுக்குள்ள வாழவே முடியாது, இவள இப்படியே விட்டா ஒண்ணு வேட்டைக்காரங்க கொன்னுடுவாங்க, இல்லனா அவளே செத்துடுவா, இவளுக்கு ஜூ தான் பாதுகாப்பான இடம். எப்படி நீ இவ்வளவு கொடூரக்காரியா இருக்க”னு கோபமா கத்துவார்.

அவ சுதந்திரமா பிறந்தவ, அவ சுதந்திரமா தான் வாழணும், அவளால முடியும், முடியணும். அப்படி இல்லனா வாழ்நாள் முழுசும் ஒரு கூண்டுக்குள்ள அடைபட்டு செத்துப் போறதுக்கு ஒரு நாளாவது சுதந்திரமா இருந்துட்டு செத்துப் போகட்டும்னு ஜாய் சொல்றப்ப எனக்கு என் அம்மா நியாபகம் வந்தா. அம்மாவும் என்னை இப்படியே தானே சொல்லுவா.

இந்த மொத்தப் படமே சுவாரசியமானது தான்னாலும் சில இடங்கள் கூடுதல் சுவாரசியம்.

அதுவும் எல்சாவ ஒரு புது ஆண் சிங்கத்துக்கிட்ட அனுப்பி வச்சிட்டு “முதல் தடவ தன்னோட டீன் ஏஜ் பொண்ண டேட்டிங் அனுப்பி வைக்குற அம்மாவோட மனநிலைல நான் இருந்தேன்”னு ஜாய் சொல்றப்ப உதட்டுல ஒரு புன்னகை வராம இல்ல.

வேட்டையாட ஒரு காட்டுப் பன்றிய தொரத்திட்டு போற எல்சா, அத கொல்ல எந்த முயற்சியும் எடுக்காம போன்னு அசால்ட்டா விட்டுடுறா. ஆனா அந்த பன்றி இருக்கே, ரொம்ப திமிர் பிடிச்சது. தன்னை எல்சா எதுவும் செய்யாதுன்னு தெரிஞ்சதும் கொழுப்பு புடிச்சது எல்சாவ திரும்ப திரும்ப வம்புக்கு இழுக்குது. ஓடி வந்து முட்டி முட்டி சண்டைக்கு வான்னு சவால் விடுது. வெறுத்துப் போன எல்சா அந்த இடத்த விட்டு ஒரே ஓட்டம்... ஹஹா...

இத படம் வெளிவந்த ஆண்டு ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்து ஆறு. எங்க அம்மாக் கூட பொறக்கல அப்ப. அப்பவே என்ன மாதிரி ஒரு ரியாலஸ்ட்டிக் சீன்ஸ் எடுத்துருக்காங்க. மனுசங்க நடிச்சுட்டு போய்டலாம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, ஆனா அதுல வர்ற ஒவ்வொரு சிங்கமும், பிரேம் பை பிரேம் அட்டகாசம் பண்ணியிருக்கு.

முகத்துல சிங்கங்க காட்டுற ஒவ்வொரு உணர்ச்சியும் சான்சே இல்ல. அதுவும் அந்த குட்டிங்க மூணும் அட்டகாசம் பண்றப்ப... ஹஹா... இத எல்லாம் ஒரு சிரிப்போட, முகம் எல்லாம் பிரகாசமா வச்சுட்டு எழுதிட்டு இருக்கேன்னு நான் சொன்னா கண்டிப்பா நீங்க நம்பணும், ஏன்னா, இப்ப உங்க முகத்துல கூட புன்னகை வருது பாருங்க...

இதே படத்த இந்த காலத்துல எடுத்துருந்தா நாலஞ்சு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து தஸ்ஸு புஸ்ஸுன்னு க்ராபிக்ஸ்ல பண்ணி முடிச்சிடுவாங்க. எடே... சிங்கத்த கட்டிபுடிச்சி உருளவும் குடுத்து வச்சிருக்கணும்டே...

எனக்கும் உடனே கென்யா காட்டுக்குள்ள ஓடிப் போய் ஒரு சிங்கத்த கட்டிப் பிடிக்க ஆச தான், ஆனா காட்டு விலங்குகள நாம தொடக் கூடாது, ஏன்னா அதெல்லாம் “பார்ன் ப்ரீ அண்ட் ஷுட் லிவ் அஸ் ப்ரீ”ன்னு ஜாய் சொல்லியிருக்காங்க. எல்சாவோட குட்டிங்கள அணைச்சுக்க அவங்க துடிச்சாலும் எவ்வளவு கட்டுப்பாடா இருந்தாங்க.

அதனால, அடுத்து நான் அடுத்தப் படம் பாக்கப் போறேன், பாத்துட்டு வந்து கண்டிப்பா சொல்லுவேன். காதுல பஞ்சை ரெடியா வச்சிக்கோங்க. ஆனா கண்ண தொறந்து வச்சு படிச்சிருங்க.

Saturday, 17 May 2014

ப்ரிட்டி வுமன் (Pretty Woman) – திரை விமர்சனம்


ஒரு நாள். கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கும். ரொம்ப போர் அடிக்குதுன்னு ஏதாவது ஒரு படம் பாக்கலாம்ன்னு இந்த படம் நல்லா இருக்குமான்னு பேஸ்புக்ல ஒரு கேள்வி கேட்டுட்டு பாக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. சட்டுன்னு அடுத்தடுத்து வந்த சீன்ஸ் என்னடா இது ஒரு மாதிரி படமா இருக்கும் போலயேன்னு நினைக்க வச்சு, அப்படியே விண்டோஸ்ல போய் க்ளோஸ் பட்டன அழுத்த வச்சிடிச்சு... அப்புறம் அந்த படம் பத்தி வந்த கமண்ட்ஸ், நல்ல படம், அப்படின்னு வந்தத எல்லாம் படிச்சாலும் ஏனோ அது மேல ஈர்ப்பு இல்லாம போய்டுச்சு.

நேத்து ராத்திரி தூக்கம் கலைஞ்சு எழுந்து உக்காந்துட்டேன். இனி தூக்கம் அவ்வளவு தான்னு தெரியும். என்ன பண்ணலாம்ன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். சரி, அந்த படம் தான் நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்களே, பாத்தா தான் என்னன்னு தோணிச்சு...

படம் இருந்த பென் டிரைவ் எடுத்து லேப்டாப்ல போட்டு, போல்டர் திறந்து அந்த படத்த ஆன் பண்ணினேன்.... எந்த படத்த?

அந்த படம் தான் “ப்ரிட்டி யுமன்”

படத்தோட கதை சுருக்கம் இதான்...

ஹீரோ எட்வர்ட் லூயிஸ் ஒரு பெரிய வியாபார புள்ளி. தன்னோட முக்கியமான கட்டங்கள்ல தன்னோட கேர்ள் பிரெண்ட் தன் கூட இருக்கணும்ன்னு ஆசைப்படுறார். ஆனா அவளோ எனக்கு பெர்சனல் வாழ்க்கை இருக்குன்னு சொல்லிடுறா... அப்புறமா அவருக்கு ஒரு சின்ன உதவி தேவைப்பட ஹாலிவுட்ல விபச்சாரம் பண்ற விவியன் உதவி பண்றா. அவளால எதேர்சையா ஈர்க்கப்படுற எட்வர்ட் ஒரு வாரம் அவள தன் கூட தங்க வச்சிக்க மூவாயிரம் டாலர் பேசி புக் பண்றாரு. அந்த ஒரு வாரங்கள்ல அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சு, முடிவு என்ன ஆச்சுங்குறது தான் கதை....

இங்க நான் விவியன அவள் இவள்ன்னு குறிப்பிட ஏனோ எனக்கு தயக்கமே வரல, காரணம் படம் முடியுறப்போ அவள் என்னோட மிக நெருங்கிய சிநேகிதியா மாறி போனா... சில இடங்கள்ல சின்ன குழந்தை மாதிரி துள்ளி குதிக்குறா. விவியன்- நிஜமாவே அவ ஒரு ப்ரிட்டி யுமன் தான்...

என்னை முதல்ல இம்ப்ரெஸ் பண்ணினது எட்வர்ட் தான். பாத்த உடனே வித்யாசமான ரசனை உள்ளவரா தெரிஞ்சார். எட்வர்ட் கிட்ட விவியன் ரொம்ப அதிமேதாவியா பேசுறா. ஐயம் நீட் அண்ட் கிளீன்ன்னு சொல்றப்பவே அவருக்கு சிரிப்பு பொத்துகிட்டு வந்துடுது. அவள பாத்துகிட்டே இருக்குற அவர், தன்னோட ஒரு நாள் தங்க முதல்ல அவளுக்கு முன்னூறு டாலர் குடுக்குறார். நாகரீகமா வளர்ந்த பெண்கள பாத்த அவருக்கு ஷாம்பைன தரைல அடுக்கி வச்சுட்டு சின்ன புள்ள மாதிரி தரைல உருண்டுட்டே காமடி ஷோ பாத்து ரசிக்குற விவியன் வித்யாசமா தெரியுறா. அவள கண்கொட்டாம புன்னகையோட பாத்துட்டு இருக்கார்.

அப்புறம் விவியன். அவ கிட்ட இருக்குற ஒரே ஒரு அரைகுறை ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு எட்வர்ட் கூட ஒரு வாரத்த கழிக்கணுமேன்னு புதுசா டிரஸ் எடுக்க போறா. அவளோட நடை உடைகள பாத்துட்டு அவங்க கடைல டிரஸ் எடுக்க அவளுக்கு தகுதி இல்லன்னு துரத்தி விடுறப்போ உடைஞ்சு போய்டுறா. அப்புறமா அவளுக்காக எட்வர்ட் எக்கச்சக்கமா ட்ரெஸ் எடுத்து குடுக்குறப்போ அவங்க கிட்ட போய் நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்கன்னு துள்ளி குதிக்குறா...

விவியன உளவாளின்னு சந்தேகப்படுற தன்னோட வக்கீல் பிலிப்கிட்ட அவ ஒரு உடலியல் தொழிலாளின்னு உண்மைய எட்வர்ட் போட்டு உடச்சுடுறார். பிலிப் அவ கிட்ட தரம்கெட்டு பேசுறப்போ அத்தன வலிகளையும் உள்ளுக்குள்ள வாங்கிகிட்டு அவர்கிட்ட சிரிச்சுட்டே நகர்ந்து போற விவியன், எட்வர்ட் கிட்ட வெடிச்சுடுறா. கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு நான் உங்களை சந்திச்சிருக்கவே கூடாது, என் காசை குடு, நான் இப்பவே கிளம்புறேன்னு கோபமா கேக்குறா. பணத்த கைல கொடுக்காம கட்டில்ல தூக்கி போட்டத எடுக்காம ரோசமா கிளம்பிடுறா. ஏன், எங்களுக்கு ரோசம், மானம் எதுவும் இருக்க கூடாதான்னு எட்வர்ட் முகத்துல ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு அவளோட செயல். சபாஷ்.

விவியன், எட்வர்ட்டோட அன்புல ஒவ்வொரு தடவையும் உருகி, அவர் மேல தனக்கு வந்த காதல வெளிபடுத்துறப்ப அத கேட்டு சாதரணமா எடுத்துகிட்டு ஒண்ணுமே சொல்லாதது ஏன்னு எனக்கு புரியவே இல்ல.

கடைசியா விடைப்பெறுறப்போ எட்வர்ட் நம்ம ரெண்டு பேர் இடையில என்ன இருக்குன்னு கேக்குறப்போ, எனக்கு தெரியாது. சின்ன வயசுல என் அம்மா என்னை ரூம்ல அடச்சு வச்சுட்டு போறப்போ, எப்பவுமே ஒரு கனவு காணுவேன். ஒரு பெரிய டவர்ல மாட்டிக்குற இளவரசி தான் நான்னும், என்னை கூட்டிட்டு போக என் ராஜகுமாரன் குதிரைல வருவான்னும் நினைச்சுப்பேன். ஆனா இப்போ, இங்க வேட்டைக்கு போறதே நான் தான்னு சொல்லுவா. அதுக்கு அவர், நான் எப்பவுமே உன்னை ஒரு விபச்சாரியா நடத்தலன்னு அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுறார். தொண்டையடைக்க அவளோ “ஹி ஜஸ்ட் டிட்” அவர் அப்படி நடத்தினார்ன்னு உடைஞ்சி போய்டுறா.

என் கூடவே இரு, எனக்காக இல்ல, உனக்கு என் கூட இருக்க பிடிச்சிருக்குல, அதனாலன்னு எட்வர்ட் அவ கிட்ட சொல்றப்போ, இல்ல, எனக்கு வேலை இருக்குன்னு காண்ட்ராக்ட் முடிஞ்சு அவ கிளம்பி போய்டுறா. அவ வலி, நமக்கு புரியுது.

செண்டிமெண்ட்ஸ் இல்லாம படமா? இங்க கூட அப்பா பையன் செண்டிமெண்ட் இருக்கு. பதினாலரை வருஷம் தன்னோட அப்பா கூட பேசாம இருக்கும் எட்வர்ட் ரோட்டுல ஒரு அப்பா மகன பார்த்து உணர்ச்சிவசப்பட்டு போய்டுறார். அப்பா மேல இருக்குற கோபத்த அத்தனையும் பிசினஸ்ல காட்டுற அவர், கடைசில மனசு மாறி, தன்னோட பிசினஸ் உத்திகள மாத்திக்குற கட்டம் அருமை.

இந்த படத்துல எனக்கு பிடிச்ச ரொமான்ஸ் சீன் ஒண்ணு இருக்கு. மீட்டிங் போயிட்டு இருக்குறப்ப எட்வர்ட் விவியனுக்கு கால் பண்ணுவார். அவ போன் அட்டென்ட் பண்ணின உடனே, உன்ன கால் அட்டென்ட் பண்ணாதன்னு சொன்னேன்லன்னு கலாய்ப்பார். மறுபடியும் மறுபடியும் கால் பண்ணி, “நெவர், எவர் பிக் அப் தெ போன்”ன்னு அதட்டுவார். அவ அழகா சிரிச்சுட்டே “தென் ஸ்டாப் காலிங்”ன்னு சொல்லுவா. அப்போ அவங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் எக்ஸ்ப்ரசனயும் பாக்கணுமே... பின்னிட்டாங்க போங்க... இத்தன நடிப்ப எங்கயா வச்சிருந்தீங்க?

நான் இதுல ரசிச்ச இன்னொரு கேரக்டர் அவங்க தங்கியிருக்குற ஹோட்டலோட மானேஜர் பார்னி. ஆரம்பத்துல விவியன் உடை, நடை எல்லாம் பாத்து கடுப்பாகுற அவர், அடுத்தடுத்து அவள மரியாதையோட பாத்து ரசிக்குற சீன்ஸ் செம. ஒரு நல்ல ட்ரெஸ் வாங்க முடியாம தவிக்குற அவளுக்கு ஹெல்ப் பண்றதாகட்டும், பார்ட்டில எப்படி சாப்பிடுறதுன்னு தெரியாத அவளுக்கு கிளாஸ் எடுக்குறதாகட்டும், தேவதை மாதிரி வர்ற விவியன புருவம் உயர்த்தி அழகா ரசிக்குறதாகட்டும், மனுஷன் பின்னி எடுத்துருக்கார்.

இங்க இன்னொரு உறவை பத்தி சொல்லணும். அதான், விவியனுக்கும் அவள் தோழி கிட் லூக்காவுக்குமான உறவு. பணம்ன்ன உடனே அவங்க படுற சந்தோசம், அலும்பல், ஆனா அத மீறி அவங்ககிட்ட இருக்குற சின்னப்புள்ளத்தனம்... வெகுளித்தனம்... அவங்க ரெண்டு பேர் இடைல இருக்குற விட்டுக்குடுத்தல், புரிதல்... அட்டகாசம்.

ஆக மொத்தத்துல படம் அடி பொழி. ஆனா என்ன, கொஞ்சம் பாக்க பொறுமை வேணும். எனக்கு அந்த பொறுமை வந்துடுச்சுன்னு நினைக்குறேன். இன்னொரு படம் பாத்துட்டு மறுபடியும் வரேன், இப்போ டாட்டா....



Friday, 28 March 2014

மிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)


மிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த விதமான டயலாக்கும் இல்லாம பின்னணி இசைலயே காமடிய சேர்த்துட்டு, முட்ட கண்ண வச்சுட்டு திரு திருன்னு முழிச்சுட்டு, பேக்கு மாதிரி மூஞ்சிய வச்சுட்டு சேட்டைகள் பண்ற மிஸ்டர் பீன் ஏனோ எனக்கு ஹீரோவா தெரிஞ்சார்... அந்த அளவு விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்...

அப்புறமா, எப்பவுமே சேட்டை பண்ணிட்டு, வீட்டை விட்டு வெளியிலயே சுத்த ஆரம்பிச்ச காலங்கள்ல பீன் கொஞ்சம் கொஞ்சமா என்னோட ஹீரோ இமேஜ்ல இருந்து விலகி, எதோ கோமாளின்னு ஒதுங்கி போற அளவு ஆகி போச்சு... அப்புறமா நான் மிஸ்டர் பீன் பத்தின எந்த படத்தையும் பாத்ததே இல்ல....

ஒரு வருஷம் முன்னாடி பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் படங்கள் தந்தான். நாம தான் படம் பாக்குறதுல சூப்பர் பாஸ்ட் ஆச்சே, போன வாரம் தான் அவன் என்னென்ன படங்கள் தந்துருக்கான்னு பாத்தேன். அதுல மிஸ்டர் பீன் படங்கள் ரெண்டு இருந்துச்சு...

போன வாரமே அத பாக்க முயற்சி பண்ணி அப்புறம் போர் அடிக்கும்னு நானே முடிவு பண்ணி பாக்காம விட்டுட்டேன். அப்புறமா இன்னிக்கி தான் வழக்கத்துக்கு மாறா ரொம்ப போர் அடிக்குதேன்னு படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

இந்த படத்த காமடி படமா பாக்க ஆரம்பிச்சிருந்தேன்னா கண்டிப்பா போர் அடிச்சிருக்கும். ஆனா, இது ஒரு செண்டிமெண்ட் படம். படம் முழுக்க எதோ ஒரு வகைல ஒரு உணர்வ தெளிச்சி விட்டுருக்காங்க...

படம் ஆரம்பிக்குறப்பவே வட்ட மேஜை மாநாடு மாதிரி ஒரு கும்பல் தீவிரமா முகத்த வச்சுட்டு எதையோ டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க... அப்படியே அடுத்த ஷாட்-ல பீன் என்ட்ரி... அவசர அவசரமா கிளம்புற அவரு, காப்பி கோப்பைய தட்டி விட, சீனி, பால், தூள்னு எல்லாத்தையும் வாய்ல போட்டே கொப்பளிச்சே கலக்கி குடிச்சு முடிக்குறார். ஒரு ஆர்ட் கேலரியில வேலை பாக்குற அவரு டூட்டி நேரத்துல தூங்கி வழியிறாரு...

இப்படி சதா சர்வ காலமும் தூங்கி வழியுற பீன அம்பது மில்லியன் டாலருக்கு வாங்கின ஒரு வரைபடத்த பாதுக்காக்குற பணில கோர்த்து விட்டுடுறாங்க ஆர்ட் கேலரி மக்கள். இவரே ஒரு தூங்குமூஞ்சி, இவர வேற செக்யூரிட்டியா போட்டா விளங்கவா போகுது?

அப்புறம் என்ன? படம் முழுக்க இவர் பண்ற அலம்பல் தான்.

அந்த படத்த பாதுகாக்க வர்றப்பவே இவர் ஏர்போர்ட்ல பண்ற அட்டகாசம் இருக்கே... அங்க இருக்குற போலிஸ்க்காரர் துப்பாக்கிய பாத்து இவரும் துப்பாக்கிய எடுக்க ட்ரை பண்ண, இவர தீவிரவாதின்னு போலிஸ் துரத்த, ஒரு இடத்துல இவர மடக்கி பிடிக்குற போலிஸ் “புட் யுவர் கன் டௌன்”ன்னு சொன்னதும் நடுங்கிகிட்டே துப்பாக்கிய எடுத்து கீழ வைப்பார் பாருங்க.... ஹஹா வயிறு குலுங்க சிரிக்க வச்சிடுச்சு.

போற இடத்துல மிஸ்டர் டேவிட்டோட குடும்பத்தோட தங்கிக்குறார். இந்த டேவிட், அந்த வரைப்படத்த பாதுக்காக்குற பெரிய பொறுப்புல இருக்குறவர். அந்த குடும்பத்தோட பீனுக்கு ஏற்படுற அனுபவங்கள், அவர் பண்ற முட்டாள்த்தனத்தால பாழாகி போற அந்த வரைப்படம்ன்னு படம் கொஞ்சம் திக் திக்ன்னு போகுது.

நம்மாளு தான் எதுக்கும் அஞ்சாதவராச்சே, பிரச்சனைய சமாளிச்சாரா, அந்த வரைப்படம் கடைசியில என்னதான் ஆச்சுங்குற கேள்விக்கு எல்லாம் பதில சொல்லிட்டு சுபம் சொல்லி தூங்க போறார்...

இதுல பீனை விட என்னை அதிகம் கவர்ந்தவர்ன்னு பாத்தீங்கனா அது டேவிட் தான்.

பீன் பண்ற அழிச்சாட்டியம் பொறுக்க முடியாம வீட்டை விட்டு கிளம்பிடுற அவரோட குடும்பத்த விட்டுட்டு, பீன் கூட சுத்துறார் டேவிட்... சின்னப்புள்ளைல தொலைச்சுட்ட குழந்தைத்தனத்த பீன் கிட்ட பாக்குற அவரு, விரும்புராரோ இல்லையோ, பீன் கூடவே இருக்குறார்.... அட, ரெண்டுபேரும் பாத்ரூம்ல குளிக்குறதுக்கு சின்னப்புள்ள மாதிரி சண்டையெல்லாம் போட்டுக்குறாங்க... சமைச்சு குடுக்குறேன் பேர்வழின்னு சமையல் அறையையே அதகளமாக்கி வச்சிட்டு அப்பாவி மாதிரி முளிக்குற பீன பாத்து இவர் ஒரு லுக் விடுவார் பாருங்க.... ஹஹா... செம.... பீன் பற்றி தப்பான தகவல் குடுத்து தன்னோட கோர்த்து விட்டுட்டாங்கன்னு தெரிஞ்ச உடனே மனுஷன் விரக்தியா அதையும் ஏத்துக்கிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க... பலத்த கைதட்டல் அவருக்கு...

அரும்பாடு பட்டு தனக்கு கிடைச்ச பெரிய பொறுப்பு பீனால போகப் போகுதுன்னு தெரிஞ்சும் ஏனோ பீன் மேல அதிகமா கோபத்த காட்டாம தனக்குள்ளயே வேதனை பட்டுக்குறார். பார்ல போய் தண்ணியடிச்சுட்டு பீன் கைய புடிச்சுட்டே தெருவுல சுத்துறார். அவர் படுற மனவேதனைய சகிக்க முடியாம, பீன் எப்படியாவது தான் நாசம் பண்ணின அந்த வரைபடத்த சரிபண்ண முடியுமான்னு முயற்சி பண்றார்...

படம் முடிஞ்சுதுன்னு நினைக்குறப்பவே கதையை இழுக்குறதுக்காக கொஞ்சம் மொக்கை போட்ருக்காங்க. எல்லாம் சுபமேன்னு வெளில வர்ற டேவிட்டுக்கு அவர் பொண்ணு விபத்துல மாட்டிக்குறதா தகவல் வருது. அவர் கூடவே மருத்துவமனைக்கு போற பீன், அங்க பண்ற சேட்டைகள் சிரிக்க வேணா வைக்கலாம், ஆனா அறிவு, அவர் பண்றது படு அபத்தம், இப்படி பட்ட சீன்ஸ் வச்சிருக்கவே கூடாதுன்னு என் மண்டைல ஓங்கி அடிச்சு அடிச்சு சொல்லிச்சு. அவ்வ்வ்வ்....

அந்த விபத்துக்கு அப்புறம், பீனை முழுசா ஏத்துக்குற டேவிட் குடும்பத்தோட சந்தோசமா கொஞ்ச நாள் கழிக்குறார் பீன்....

எல்லார்கிட்ட இருந்தும் டாட்டா காட்டி கிளம்பி, தன்னை வழியனுப்பி விட வர்ற டேவிட்ட ஓடி வந்து கட்டிக்குற போது, கண்ணுல தண்ணி வந்துடுது... லவ்வர்ஸ் மட்டும் தான் கட்டிக்கணுமா என்ன? இவங்க கட்டிக்குறத பாருங்க... என்ன ஒரு சீன்... அந்த கொஞ்சல்ஸ் பாக்கவே முழு படத்தையும் பாக்கலாம்...

இப்படி படம் முழுக்க முழுக்க ஒரு நட்போட பாசத்த அதிகம் காமடி கலக்காம தெளிச்சு விட்டுருக்காங்க...

ஆனாலும் எனக்கு பிடிக்காத சீன்னு பாத்தா, மூக்கு ஒழுகுறப்போ அத கர்சீப்ல அவர் சிந்துற சீன், வாந்தி எடுத்து வச்சிருக்குற பேப்பர் பைய பிடுங்கி ஊதி, தூங்கிட்டு இருக்குற மனுஷன் முகத்துக்கு நேரா அடிச்சி உடைக்குறது.... ஹய்யே.... மூஞ்சி சுளிக்க வச்சிடுச்சு. இதே சீனை சின்னப் புள்ளையா இருக்குறப்போ பாத்திருந்தா விழுந்து விழுந்து சிரிச்சிருப்பேனோ என்னவோ?

இத எழுதிட்டு இருக்கும் போது மறுபடியும் அந்த க்ளைமாக்ஸ் பாத்துட்டு இருக்கேன்.... கண்டிப்பா நீங்களும் பாருங்க.... உங்கள அறியாம ஒரு புன்னகை உதட்டுல வரும். இழந்து போன நட்புக்கள் கண்முன்னால வந்து ஹாய் சொல்லுவாங்க....

இப்படியே பாத்துட்டு இருந்தா எப்படி, போங்க போங்க, நீங்களும் உங்க பிரெண்ட்ஸ் பத்தி, அவங்க கூட லூசுத்தனமா சுத்தினத பத்தி யோசிச்சுட்டே இருங்க... நான் அப்புறமா வர்றேன்....


Tuesday, 10 December 2013

தி நோட்புக் (The notebook- 2004) – திரைவிமர்சனம்



சௌத் கலிபோர்னியால “சீபெர்க்”ன்னு ஒரு தீவு. அங்க ஒரு கார்னிவல் நடக்குது, அதாவது, நம்ம ஊரு பொருட்காட்சி மாதிரி ஒரே கொண்டாட்டம். அங்க வச்சி தான் நம்ம ஹீரோ நோவா ஹீரோயின் ஆலிய பாக்குறான். வழக்கமா நம்ம ஊர் சினிமால வர்ற மாதிரி, அவள பாத்ததும் அவ மேல பைத்தியம் ஆகிடுறான். அப்புறமா அவ பின்னாடியே சுத்தி, கொஞ்சம் கொஞ்சமா அவள வழிக்கு கொண்டு வந்து, அவள காதலிக்க வச்சு, கதை அப்படியே ஜாலியா போகுது.

கட், கட், கட். இதெல்லாம் ஆலியோட பதினேழு வயசுல நடந்த சம்பவம். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா, எல்லாம் நம்ம ஊர் பார்முலா தான். நோவா ரொம்ப ஏழை, ஆலி பெரிய பணக்கார குடும்ப பொண்ணு. எஸ். நீங்க நினைக்குறது சரிதான், இந்த ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வுனால ஆலியும் நோவாவும் பிரிஞ்சுடுறாங்க. இல்லல, ஆலியோட அம்மாவால பிரிக்கப்படுறாங்க.

ஆலி மேற்படிப்பு படிக்க போய்டுறா. நோவா ஆர்மில சேர்ந்துடுறான்.

சரி, இது கதை. இதுல நான் ரசிச்ச விசயங்கள சொல்ல வேணாமா?

இந்த படத்துல ஆலி, நோவாவுக்குள்ள வர்றது முதல் காதல். அந்த முதல் காதலுக்கு மரணிக்கும் மரியாதை குடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஹஹா புரியலையா, அப்போ படத்த பாருங்க.

அப்புறம், ஆலிய பாத்த உடனே ஆஆஆ-னு வாயத் தொறக்குற நோவா, கடைசி வர மூடவே இல்லன்னு தான் சொல்லணும்.

ஆளே இல்லாத ரோட்டுல ஆலி கூட நடந்து போற நோவா, திடீர்னு நடு ரோட்டுல படுத்துகிட்டு அவளையும் படுக்க சொல்றான், இவன் என்ன பைத்தியமான்னு சிரிச்சுகிட்டே பக்கத்துல படுத்துகிட்டு, இப்போ வண்டி வந்தா, நாம என்னாவோம்ன்னு கேக்குறா. அவன் கூலா செத்து போவோம்னு சொல்லிட்டே பேசாம ரிலாக்ஸ் பண்ணுன்னு அவன் பாட்டுக்கு கண்ண மூடிட்டு படுத்துருக்கான்.

அந்த சீன பாக்குறப்போ எதோ சின்ன புள்ளைங்க விளையாடுற விளையாட்டு மாதிரியே இருக்கு. லூசு தனமா என்னவோ பண்றானேன்னு நினைச்சுகிட்டே அவளும் லூசு தனமா சிரிக்குறது இருக்கே, கவிதை கவிதை. ஆனா திடீர்னு வேகமா வர்ற கார பாத்து வீல்ன்னு அலறிட்டே ஓடி தப்பிச்சு, ஹஹஹஹஹா... பேய்த்தனமா சிரிக்குறா. ஆத்தீ.... நான் பயந்தே போயிட்டேன். ஆனா ரொம்ப ரொம்ப அந்த சீன ரசிச்சு ரசிச்சு பாக்கலாம்.

அப்புறம், நோவாவோட அப்பா கேரக்டர். நமக்கு ஒரு அப்பா இருந்தா இப்படி தான் இருக்கணும்னு வயசு பசங்கள ஏங்க வச்சிடுறார். அவரோட அன்பு, கனிவு, பையன் மேல காட்டுற பாசம் எல்லாமே அவ்வளவு ரசிக்கும் படியா இருக்கு. பையனோட காதலி அவன விட்டுட்டு போய்ட்டானாலும் அவன் ஆசை பட்ட விசயத்த அடைய வீட்டை வித்து காசு குடுக்குறார். அந்த நேரம் அப்பாவும் பையனும் ரொம்ப அழகா இருந்த மாதிரி எனக்கு தோணிச்சு. கொஞ்சம் கண்ணு வச்சிட்டேன்.

இந்த படத்தோட ஆரம்பமே, சுயநினைவு எல்லாம் மறந்து போன ஒரு வயசான பாட்டிக்கு, ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்ல (முதியோர் விடுதி) வச்சு, ஒரு பெரியவர் ஒரு நோட் புக்கல இருக்குற ஒரு கதைய வாசிச்சு காட்டுற நிகழ்ச்சியா தான் வருது. அவர் தான் மெனக்கெட்டு அந்த பாட்டிக்கு இந்த லவ் ஸ்டோரிய சொல்றார்.

ஹலோ மக்களே....

ஏதாவது படத்த பாத்து நானும் விமர்சனம் பண்ணலாம்னு தான் பாக்குறேன், ஆனாலும் அதென்னவோ அப்படியே முழு கதையையும் உளறி கொட்டிடுறேன். அது என் தப்பு இல்லீங்க, அப்படியே எவ்வளவு ட்ரை பண்ணினாலும் இப்படி தான் உளற வருது. அப்புறம், இந்த படம் எல்லாம் வந்து பத்து வருஷம் ஆகிடுச்சு. படம் வசூல் சாதனை பண்ணிச்சா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா இப்போ இத எல்லாரும் மறந்துருப்பாங்க. ஒரு அதர பழசான ஒரு படத்த நான் இப்போ ஏன் நோண்டி துருவி எழுதியிருக்கேன்னா, நான் இப்போ தானே இந்த படத்த பாத்தேன். அவ்வ்வ்வ்.....

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சது ஹீரோயினோட சிரிச்ச முகம். எப்போ பாத்தாலும் சிரிச்சுட்டே, எதையும் சீரியஸா எடுக்காம, அதெப்படி ஒரு பொண்ணால இருக்க முடியும்னு தெரியல. காதல வெளிப்படுத்துற விதமாகட்டும், அழுறதாகட்டும், அதுலயும் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க.

அந்த ஹீரோயின் தான் ரொம்ப வயசாகி, தலை எல்லாம் பஞ்சு பஞ்சா வெள்ளையா, எல்லாத்தையும் மறந்துட்டு, சீரியஸா மூஞ்ச வச்சுகிட்டு, பம்ப்ளிமாஸ் மாதிரி குண்டா இருக்காங்கன்னு சொல்றப்போ அத ஏத்துக்கவும், டைஜஸ்ட் பண்ணவும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.

எல்லாத்துக்கும் முக்கியமா இன்னொரு கதாபாத்திரம் கூட இந்த படத்துல உண்டு. அது தான் ஆலிக்கு நோவா வாங்கி குடுக்குறதா சொன்ன வீடு. ஆலி அவன விட்டுட்டு போயிட்டாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு தனியாளா அந்த வீட்டை புதுசா கட்டி முடிக்குறான்.

இந்த படத்துல எனக்கு பிடிக்காத ஒரு விசயமும் இருக்கு. ஆலியோட முதல் காதலாவது சில பல சம்பவங்கள்ல அடுக்கடுக்கா ஆரம்பிச்சு அழகா பூக்குது. ஆனா அவளோட ரெண்டாவது காதல் பட்டுன்னு வந்துடுது. அவனை பாத்த உடனே இவ மயங்கிடுறா, அவன் ப்ரோபோஸ் பண்ணின உடனே சந்தோசமா சிரிச்சுகிட்டே படக்குன்னு ஓகே சொல்லிடுறா. அவங்களோட அந்த காதல் விரிவா சொல்லாததாலோ என்னவோ எனக்கு மனசுல ஒட்டவே இல்ல.

ஏழு வருஷம் கழிச்சு, பழைய காதலன் கட்டின வீட்டை வச்சு அவன அடையாளம் கண்டுகிட்டு இரண்டு நாள் அவன் கூட வாழ்ந்து, தன்னோட பழைய காதலை புதுபிச்சுகிட்ட அவ, தனக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லி அவன் கிட்ட இருந்து விலகி ஓடி வந்து ரெண்டாவது காதலன்கிட்ட ஐ லவ் யூ டூன்னு சொல்றா.

“And they happily lived for ever”-னு பெரியவர் கதைய முடிக்கவும் who-ன்னு நியாபகப்படுத்திகிட்டே பாட்டியும் (ஆலி) சேர்ந்து நெகிழ்ந்து போறாங்க. அவரோட காதல புரிஞ்சுகிட்டு நான் மறுபடியும் உங்கள மறந்து போனா என்ன பண்ணுவீங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு அவர், எப்பவும் நான் உன்னை பின் தொடர்வேன்னு அவங்க கூடவே தூங்கிடுறார்.

காலைல அந்த லவ் பேர்ட்ஸ் ரெண்டும் சந்தோசமா தனி உலகத்துக்கு பறந்து போய்டுது.

அப்புறம் இன்னொரு விஷயம், இந்த படம் முழுக்க ஆளாளுக்கு கிஸ் பண்ணிட்டே இருக்காங்க. இவங்களுக்கு வாயே வலிக்காதான்னு நான் கூட கொஞ்சம் கவலையோட தான் பாத்தேன். இது ஒரு ஏ சர்டிபைட் படம். அதனால அங்கங்க மசாலாக்கள் இருக்க தான் செய்யும். அதுக்காக கட்டய எடுத்துட்டு என்னைய அடிக்க வராதீங்க, மீ எஸ்கேப்.


.

Friday, 15 November 2013

ப்ரொமிதியஸ் (PROMETHEUS) - திரைவிமர்சனம்



நான்லாம் படம் பாக்குறதே அபூர்வம், அதுலயும் இந்த ஹாலிவுட் பிலிம்ஸ் எல்லாம் பாத்தா இன்னார் இன்னார் டைரக்சன், இன்னார் இன்னார் நடிச்சிருக்காங்கன்னு எல்லாம் சொல்லத் தெரியாது. எதோ, புரியாத பாசைல எதையோ ஒண்ண பாத்த மாதிரி தான் பாத்துட்டு இருப்பேன். அப்படி இந்த Prometheus படத்த பாத்து நான் என்ன புரிஞ்சுகிட்டேன்னு தான் நான் இப்போ சொல்லப்போறேன். அதனால இந்த டெக்னிக்கல் விசயங்கள தேடுறவங்க, ஸோ சாரி, அப்படியே அப்பீட்டாகிடுங்க...

மத்தப்படி என்னை மாதிரி ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்க எல்லாம் இத தொடர்ந்து படிங்க, நான் என்ன பீலா விட்டாலும் அப்படியா அப்படியான்னு ஆச்சரியமா தலையாட்டி கதை கேக்க வேண்டியது தான் உங்க பொறுப்பு. அப்புறம் அப்பப்ப கை தட்டிக்கோங்க, விசில் அடிக்க தெரிஞ்சவங்க எல்லாம் விசில் அடிச்சுக்கோங்க, எனக்கு நோ ப்ராப்ளம்.. சரி வாங்க, நாம படம் பாக்க போவோம்..

படம் ஆரம்பிக்குறப்பவே ஒரு பெரிய நிலப்பரப்பு. கொஞ்சம் விசித்திரமா தான் இருக்கு. அந்த இடத்துல ஒரு பெரிய அருவி... அந்த தண்ணி கீழ விழுந்து சலசலன்னு ஆறா ஓடிட்டு இருக்கு. அங்க தான் ஒரு ஏர்-கிராப்ட் அதாங்க, பறக்கும் தட்டு வந்து அந்தரத்துல நிக்குது. அதுக்கு இந்த பக்கமா ஒரு மனுஷன், பாத்தா எதோ மெழுகுல செஞ்சு வச்ச மாதிரியே இருக்கான், அவன் வந்து நிக்குறான். அவன் கைல என்னமோ ஆசிட் மாதிரி ஒண்ணு, அத எடுத்து எதோ ஜுஸ் குடிக்குற மாதிரி குடிக்குறான். அவ்வளவு தான், அவன் உடம்பு அப்படியே அரிக்க ஆரம்பிக்குது. அவனோட டி.என்.ஏ எல்லாம் சிதைஞ்சு போகுது. அப்படியே அவன் கை கால் எல்லாம் பீஸ் பீஸா சிதறிகிட்டே அப்படியே அருவியில விழுறான். அவனோட அழிஞ்சு போன டி.என்.ஏ எல்லாம் தண்ணியில இருக்குற மத்த உயிர்களோட டி.என்.ஏ கூட சேர்ந்து, டபுள் ஹெலிக்ஸ்ஸா (double helix) மாறுது.

அடுத்த சீன் ஸ்காட்லேன்ட்-ல நடக்குது. அது 2089-வது வருஷம். அங்க ஒரு குகைய ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குற ஒரு ஆர்கியாலாஜி குழு ஒரு பெயின்ட்டிங்க கண்டுபுடிக்குறாங்க. அப்படி அவங்க என்ன பெயின்டிங் கண்டுபுடிச்சாங்கன்னு எனக்கு புரியல, ஆனா அது அவங்களுக்கு ரொம்ப முக்கியமான ஒரு க்ளுவா இருக்கு. அந்த க்ளுவ வச்சு பூமிக்கு ரொம்ப தொலைவுல இருக்குற எதோ ஒரு இடத்த தேடி December 21, 2093 அன்னிக்கி ப்ரொமிதியஸ்ங்குற விண்கலத்துல தெரியாத ஒரு இடத்துக்கு கொஞ்ச பேர் கிளம்பி போறாங்க.

அங்க போய் ஒரு மலை மாதிரி இருக்குற இடத்துல லேன்ட் ஆகுறாங்க. அங்க ஏற்கனவே பாதை எல்லாம் போட்டு வச்சிருக்கு. அப்படியே அவங்க அங்க ஒரு குகை மாதிரி ஒரு இடத்துக்குள்ள போறாங்க. அங்க ஒரு மனுச தலை மாதிரியே ஒன்ன கண்டெடுக்குறாங்க. அப்புறமா அங்க திடீர்னு புயல் அடிக்க, அங்க இருந்து அந்த தலை கூடவே ஒரு சிலிண்டர எடுத்துட்டு பழையபடி ப்ரொமிதியஸ்-க்கு திரும்ப வந்துடுறாங்க. இன்னொரு சிலிண்டர் அங்கயே லீக் ஆகிட்டு இருக்கு (சஸ்பென்ஸ்சாமாம்).

எனக்கு இந்த படத்துல பிடிச்ச ஒரு வார்த்த “big things have small beginings”. இந்த வார்த்தைய சொல்லிகிட்டே ஒரு விஷப்பரிட்சைக்கு தயராகுவார் ஒருத்தர். அவர் பெயர் டேவிட். அவர் ஒரு மனுசனும் ரோபார்ட்டும் கலந்த கலவைன்னு படத்தோட இடையில தான் நான் தெரிஞ்சுகிட்டேன். படுபாவி மனுஷன், பரீட்சை வைக்குறதா இருந்தா அவரையே சோதிச்சு பாக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு சும்மா இருந்த ஒரு மனுசன்கிட்ட, அவர் தூக்கிட்டு வந்த சிலிண்டர்ல இருக்குற திரவத்த குடிக்க குடுத்துடுவார். அப்புறமா அதுதான் எல்லோருக்கும் வினையா போகுது.


அவ்வ்வ்வ் நான் பயந்த விஷயங்கள்ன்னு பாத்தா இதுல நிறைய இருக்கு, ஆனாலும் அப்புறமா கொஞ்சம் ஸ்டெடியாவே பாக்க ஆரம்பிச்சேன். அதுலயும் ரெண்டு பேர், ஒருத்தர் பெயர் மில்பர்ன், இன்னொருத்தர் பெயர் பிபெத். பெயர் எல்லாம் சரியான்னு எனக்கு தெரியாது, நானே காதால கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைகள உறிஞ்சி தெரிஞ்சிகிட்டது இது. அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் அந்த இடத்துக்கு போறாங்க. அங்க நிறைய மனுஷ உடல்கள பாக்குறாங்க. அப்புறமா அந்த சிலிண்டர் இருந்த இடத்துக்கு வராங்க. அப்போ திடீர்னு பாம்பு மாதிரி எதோ ஒண்ணு அங்க வருது. அத பாத்து பயந்து தொபுக்கடீர்னு விழுற பசங்க, அப்புறம் ஜாக்கிரதையா அத டீல் பண்ண வேண்டாமா, அத விட்டுட்டு அத பாத்து ஹே... பேபி, ஷி ஈஸ் பியூட்டிபுல்-ன்னு கொஞ்சிகிட்டு இருக்காங்க. எனக்கு அப்பவே பி.பி எகிற ஆரம்பிச்சாச்சு. அது கிட்ட கொண்டு போய் கைய நீட்டிக்கிட்டு அது சீறினதும் இட்ஸ் ஓகே, இட்ஸ் ஓகே-ன்னு கேனத்தனமா சிரிக்குறாங்க. எனக்கு அப்பவே அவங்களுக்கு சங்கு ஊதுற சத்தம் காதுல கேக்க ஆரம்பிச்சுடுச்சு. அவ்வளவு தான், அப்புறம் நடக்குறத எல்லாம் என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது, நீங்களே பாத்துக்கோங்க. இதுல மில்பர்ன் அவுட், பிபெத் ஹெல்மட் உருகி, அவர் முகத்துல அந்த சிலிண்டர்குள்ள இருக்குற திரவம் பட்டுடும்.

அப்புறமா அந்த டீம் இவங்க ரெண்டு பேரையும் தேடி கிளம்புவாங்க. அப்படி போறப்போ டேவிட் தனியா போய் ஒருத்தரோட உறைந்த உடம்பையும் ஒரு உலக மேப்பையும் (அப்படி தான் நினைக்குறேன்) கண்டுபுடிக்குறார். அந்த ஆள் உயிரோட தான் இருப்பார்னு நான் அப்போ நினச்சது சரியா இருந்துச்சு. உயிரோட தான் அவர் உறைஞ்சு இருப்பார். இன்னொரு பக்கம், மில்பர்னையும் பிபெத்தையும் தேடி போற ஆளுங்க மில்பர்னோட உடம்ப கண்டுப்பிடிக்குறாங்க. அந்த நேரம் அங்க ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம போக, அவர கூட்டிட்டு அவசர அவசரமா ப்ரொமிதியஸ்க்கு திரும்புறாங்க. அவர் தான் இந்த படத்தோட ஹீரோயினோட லவ்வர். அவருக்கு தான் டேவிட் அந்த கருப்பு திரவத்த குடிக்க குடுத்துருப்பார். அவரோட உடம்பு ரொம்ப மோசமா போய்டவே அந்த டீம் கேப்டன் ஒரு லேடி (விக்கெர்ஸ்), அவங்க இவர உயிரோட அப்படியே எரிச்சுடுவாங்க.

இப்போ நான் ஹீரோயின் பத்தி சொல்லணும். இவங்க பெயர் ஷா. இவங்களும் இவங்க லவ்வரும் தான் அந்த ஆர்க்கியாலஜிஸ்ட். ஒரு குகைல ஓவியம் கண்டுபிடிப்பாங்களே அவங்க. அவங்களோட லவ்வர உயிரோட எரிச்சத பாத்து அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போறப்போ டேவிட் அவங்க மூணு மாசம் கர்ப்பம்னு சொல்றத கேட்டு அவங்க முகம் டைப் டைப்பா மாறுது. அது எப்படி அது எப்படின்னு யோசிச்சுகிட்டே இருக்காங்க. அப்புறமா அவங்க வயித்துல இருக்குறது கண்டிப்பா ஒரு ஏலியன் குழந்தையா தான் இருக்கும்ன்னு முடிவு எடுத்து அவங்கள பாத்துட்டு இருக்குற மெடிக்கல் டீம அடிச்சு போட்டுட்டு ஓடுறாங்க.

இந்த இடத்துல நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். நானெல்லாம் ரெத்தத்த பாத்தாலே நாலு கிலோமீட்டர் ஓடுற ஆளு. ஷா ஓடி வந்து சிசேரியன் பண்றதுக்கான மெடிக்கல் ப்ரோசீஜர் தேடுறாங்க. இதுக்கு மேல அந்த சீன பாக்கணுமா வேணாமான்னு கொஞ்சம் குழம்பிட்டேன். அப்புறம், எதோ ஒரு துணிச்சல்ல பாக்க ஆரம்பிச்சேன். அந்த சீன அப்புறமா நான் ரொம்ப ரசிச்சு பாத்தேன்னா பாருங்களேன், அது எவ்வளவு சுவாரசியமான சீனா இருந்துருக்கும்னு.

அவங்களே அந்த ஆட்டோமடிக் சர்ஜெரி டேபிள்(?)-ல படுத்துகிட்டு, கேரி அவுட், கமான் கமான்-ன்னு கட்டளை போடுறாங்க. அவங்க வயித்த கிழிக்கும் போது வலியை தாங்கிகிட்டு கதறுறாங்க. உள்ள இருந்து குழந்தையை(?) எடுத்ததும் அப்படியே கைய வச்சு தொப்புள் கொடிய அத்து எடுத்துட்டு தையல் போட பட்டன தட்டுறாங்க. பரபரன்னு தையல் போட்டதும், அவசர அவசரமா வெளில வந்து அந்த ஏலியன் குழந்தைய எதையோ தட்டி சாகடிச்சுட்டு ஓடுறாங்க.

அவ்வ்வ்வ் அப்புறமா ஒரு அகோரமான சீன்... இந்த சிலிண்டர்க்குள்ள தலைய விட்டுட்டு விழுவாரே பிபெத் அவர் தான், அந்த திரவத்தால மியூடேட் (mutate) ஆகி, திரும்பி வந்து அவர் டீம் ஆட்களையே வெறும் கையாலயே அடிச்சு கொல்லுவார். அந்த சீன் ஓடுறப்போ நான் திரும்பி உக்காந்துகிட்டு அரைகுறையா தான் பாத்தேன். என்னோட பார்வைல அந்த சீன் அவ்வளவு கொடூரமா இருந்துச்சு (எனக்கு விஸ்வரூபம் படத்துல கமல் போடுவாரே ஒரு பைட் சீன், அது தான் நியாபகம் வந்துச்சு). அந்த ஆள ஒருவழியா எரிச்சு கொல்றதுக்குள்ள பல பேர அவர் காலி பண்ணிடுறார்.

சிசேரியன் பண்ணிக்கிட்டு ஓடிட்டு இருக்குற ஷா படத்துல முக்கியமான ஒரு ட்விஸ்ட்ட கண்டுபுடிப்பாங்க. ஆனா எனக்கென்னமோ அது படு மொக்கையான விசயமா தான் தோணிச்சு. அடச்சீ... இதுக்கு போயா இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னு சப்புன்னு போச்சு. ஹிஹி எனக்கு தான் சப்புன்னு போச்சு, ஆனா நீங்க அத என்னான்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பீங்கன்னு நானே நினைச்சுக்குறேன், ஆனாலும் அது என்னன்னு சொல்ல மாட்டேனே.

அந்த மொக்க ட்விஸ்ட்டால டேவிட் கண்டுப்புடிப்பாரே ஒரு உலக மேப்பும், ஒரு ஆளும், அந்த ஆளு உயிரோட எழும்பி வராரு. வந்தவர் டபடபன்னு ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரையும் காலி பண்றான் (“ர்”... என்ன வேண்டியிருக்கு, அந்த வெள்ளை மண்டயனுக்கு “ன்” போதும்). டேவிட் தான் மனுஷன் பாதி, ரோபார்ட் பாதி கலந்து செய்த கலவையாச்சே, அவர் தலைய அந்த வெள்ளை மண்டையன் பிச்சு போட்ட பிறகும் டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கார்.

இதுல எனக்கு பிடிச்ச ஒரு விஷயம்னு சொல்லி, சொல்லாம விட்ட சொச்ச கதைய சொல்லிடுறேன். பூமிய அழிக்கத்தான் அந்த வெள்ளை மண்டையன் பிளான் போடுறான்னு ஷா-வுக்கு தெரிஞ்சி போச்சு. அவங்க உடனே ஸ்பேஸ் ஷிப்-ல உயிரோட இருக்குற நாலு பேர் கிட்ட விசயத்த சொல்றாங்க. அந்த வெள்ளை மண்டையன் கிளம்புற ஸ்பேஸ் ஷிப்ப இந்த ஸ்பேஸ் ஷிப் வச்சு மோதி எப்படியாவது தடுக்கணும்னு சொல்றாங்க. அதுல இருக்குற மூணு ஆண்களும் அத புரிஞ்சுகிட்டு தற்கொலை படையா மாறி, அந்த ஸ்பேஸ் ஷிப் மேல மோதி நிலைகுலைய வைக்குறாங்க. அதுக்கு ஒத்துவராத பொண்ணு, அங்க இருந்து தப்பிச்சு, ஸ்பேஸ் ஷிப் அடியில மாட்டி நசுங்கி போறா.

இந்த கதைல, இத்தன களேபரத்துலயும் இருந்து தப்பிக்குறது ஷா-வும் இன்னொரு ஜீவனும் தான். அந்த ஜீவன் தப்பிச்சு அடுத்த பார்ட் வெளியாக தூபம் போட்டுருக்கு. எப்படியோ அந்த வெள்ளை மண்டையன் கிட்ட இருந்தும் அந்த இடத்துல இருந்தும் ஷா தப்பிச்சு போறாங்க. அப்படி போகும் போது இந்த இடத்துல இருந்து தப்பிச்சு போற கடைசி உயிர் ரிப்போர்ட் பண்றேன், இனிமேல் தயவு செஞ்சு யாரும் இங்க வர ட்ரை பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு டேவிட்டோட தலை, அப்புறம் உடம்போட கிளம்பி போறாங்க.


அப்படியும் படத்துக்கு சுபம் போடாம, இன்னொரு ட்விஸ்ட்டோட அடுத்த பார்ட்க்கு டேக் ஆப் குடுத்து படத்த முடிச்சிருக்காங்க.


எனக்கு இந்த படத்துல புரியாத ஒரு புதிர் இருக்கு, அது என்னன்னா, படத்தோட ஓப்பனிங்ல ஒரு சீன் வருதே, அது எதுக்குன்னே தெரியல, ஒருவேளை அடுத்த பார்ட்-ல சொல்லுவாங்களோ என்னமோ? அதுல வர்ற வெள்ளை மண்டையனும், இந்த வெள்ளை மண்டையனும் மட்டும் பாக்குறதுக்கு ஒரே மாதிரி இருக்காங்க. அது மட்டும் தான் எனக்கு புரிஞ்சுது.

என்னதிது, இவ முழு படத்தோட கதையையும் சொல்லிட்டாளேன்னு பதறாதீங்க. படம் வந்து பல நாள் ஆகிடுச்சு. கண்டிப்பா பாத்துருப்பீங்க, இது ஒரு ரீக்கால் அவ்வளவு தான். அப்படி பாக்கலையா, இத படிச்சுட்டே போய் பாத்தா, கதை நல்லா புரியும். ஏன்னா நான் தான் அரைகுறையா உங்களுக்கு கிளாஸ் எடுத்துட்டேனே.


இப்போ இத படிச்சுட்டு பயந்து போய் திட்டுறவங்க எல்லோரும் தாராளமா கமண்டல திட்டிக்கலாம், இல்ல, சூப்பர்ன்னு நினச்சீங்கன்னா அதையும் கமன்ட்ல ஒரு பாராட்டா தெரிவிச்சுட்டு போய் படத்த பாக்கலாம்...



ஆல் ஈஸ் வெல்.... ஈஈஈஈ.... நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்.

 

Monday, 21 October 2013

டாங்கில்ட் (tangled) - வாங்களேன், நாமளும் அவங்க கூட பயணிச்சுட்டு வருவோம்


ஒருநாள் ப்ராஜெக்ட் சம்மந்தமா நிறைய வொர்க்ஸ் இருந்ததால நைட் புல்லா முழிச்சு இருக்க வேண்டி இருந்தது. அப்போ ரிலாக்ஸ் பண்றதுக்காக, பிரேக்ல புல்லா டாங்கில்ட் (tangled) படம் தான் பாத்துட்டு இருந்தேன்...