Monday, 11 May 2015

பார்ன் ப்ரீ (born free) – திரை விமர்சனம்பார்ன் ப்ரீ (born free) – இந்தப் படம் என் கைல கிடைச்சு கிட்டத்தட்ட ஆறு மாசமாவது இருக்கும். எப்பவும் பாத்த படத்தையே திருப்பி திருப்பி பாக்குற பழக்கம் எனக்கு இருக்குறதால, இத பாக்க ஏனோ இன்ட்ரெஸ்ட் காட்டவே இல்ல. ஒரு நாளு மட்டும் ஒன்னரை மணி நேரப் படத்த பத்தே நிமிசத்துல பார்வர்ட் அடிச்சு பாத்துட்டு, என்னமோ வேட்டைக்கு போறாங்க, ஒரு சிங்கம் வருது, ரெண்டு ஆளுங்க வராங்க, காட்டுக்குள்ள சுத்துறாங்கன்னு நானே முடிவு பண்ணி படத்த முடிச்சுட்டேன்.

நேத்து, நல்லா ஊர் சுத்திட்டு வந்தா வர்ற வழக்கமான தலைவலி, கூடவே உடல்வலின்னு எப்படியும் தூக்கம் வராதுன்னு தெரிஞ்சி போச்சு. சரி, ஏதாவது படத்த எடுத்து பாப்போம், எவ்வளவு மொக்கையா இருந்தாலும் பாத்துரணும்னு ஒரு முடிவோடத் தேடித் தான் இந்தப் படத்த பாக்க ஆரம்பிச்சேன்.

படம் ஒரு வேட்டைல ஆரம்பிக்குது. மனுசங்கள கொல்லுற சிங்கத்த கொல்லப் போனப்ப மூணு குட்டிங்களோட தாயையும் கொல்ல நேர்ந்துடுது. அத அப்படியே விட்டா செத்துப் போய்டும்ங்குறதால அதுங்கள தன்னோட இருப்பிடத்துக்கே தூக்கிட்டு வந்து தன்னோட மனைவி ஜாய் கிட்ட ஒப்படைக்குறார் ஜார்ஜ். நாள் முழுக்க எதுவுமே சாப்டாம அடம்பிடிக்குற அந்த குட்டிகள் மூணும் அப்புறம் என்னாச்சுங்குறது தான் கதை.

என்ன தான் பீடிங் பாட்டில்ல பால் குடுத்தாலும் மூஞ்சை திருப்பிக்குற குட்டிங்க, ஜார்ஜ் பாலை ஜாய் கைல விட, அத நக்கி நக்கி குடிக்க ஆரம்பிச்சிடுறதுல இருந்து படம் பிக் அப் ஆக ஆரம்பிச்சிடுது.

அடேங்கப்பா, மூணும் சேர்ந்து என்ன சேட்டைப் பண்ணுதுங்க. ஒண்ணு மேல ஒண்ணு ஜம்ப் பண்ணுதுங்க, குட்டிக்கரணம் அடிக்குதுங்க, ஒருத்தர ஒருத்தர் தொரத்திப் பிடிக்குதுங்க. இதுல ஆம்பள பசங்க ரெண்டு பேரும் எப்பவும் தனியா விளையாடிட்டு இருக்க கடைசி பொம்பள குட்டி எல்சா மட்டும் வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள ஓடி வந்துடுது. நாளடைவுல எல்சா ஜாய் கூடவே சுத்தவும் ஆரம்பிச்சிடுது.

ஒரே அட்டூழியமா (இந்த அட்டூழியம் ரொம்ப ரசிக்க வைக்குது) போயிட்டு இருக்குற நேரத்துல தான் கதைல திடீர்னு கென்டால் வர்றார். அவர் ஜார்ஜோட பாஸ். அவர் இருக்குறப்பவே இதுங்க மூணும் வீட்டுக்குள்ள அட்டகாசம் பண்ண, அதுலயும் எல்சா அவர பாத்து ஒரு டீச்சர் ரேஞ்ச்ல உறும, அவர் அட்டென்சன்ல பெஞ்ச் மேல ஏறி நிக்குறார்.

இனி விடுவாரா அவர்? மூணு சிங்க குட்டிங்களையும் நெதர்லேண்ட்ல இருக்குற ஜூவுல கொண்டுப் போய் விட சொல்லிடுறார்.

ஜார்ஜும் ஜாயும் சிங்கக் குட்டிங்கள கொண்டுப் போய் ஜூவுல விடப் போகும் போது ஜார்ஜ் மனசு மாறி எல்சாவ ஜாய் கிட்ட திரும்பவும் ஒப்படைச்சுடுறார். அப்புறம் என்ன, எல்சா தனி மனுசியா இவங்க கூட வாழத் தொடங்குது.

காலம் ஒரே மாதிரி இருக்காதே, எல்சா பெரியவளா வளர்ந்துடுறா. ஒரு வளர்ப்பு பிராணிங்குறது தாண்டி அதுக்கும் தேவைகள் இருக்குனு ஜார்ஜும் ஜாயும் உணர ஆரம்பிக்குறாங்க. அந்த நேரத்துல தான் எல்சா ஒரு பெரிய யானைக் கூட்டத்த தொரத்தி ஊருக்குள்ள விட, யானைக் கூட்டம் ஊரையே அழிச்சுட்டு போய்டுது. ஆனா அது எதைப் பத்தியும் கவலைப் படாத எல்சா, யானைக் கூட்டத்துல இருந்து தான் கூட்டிகிட்டு வந்த யானைக் குட்டியோட விளையாடிகிட்டு இருக்கு.

நஷ்டஈடு கட்டிட்டு வந்த கென்டால் இதுக்கு மேல எல்சா அங்க இருக்கக் கூடாதுன்னு முடிவு எடுக்குறார். அவர் ஜார்ஜ், ஜாய் கிட்ட ரெண்டு ஆப்சன் குடுக்குறார்.

ஒண்ணு, எல்சா காட்டுக்கு திரும்ப போகணும், இல்லனா அவள ஜூவுக்கு அனுப்பணும்ன்னு.

அப்ப தான் அந்த துணிவான முடிவ எடுக்குறாங்க ஜாய். ஆமா, எல்சாவ காட்டுக்கு அனுப்ப போறதாவும் , அதுக்கு அவளுக்கு பயிற்சி குடுக்க மூணு மாசம் டைம் வேணும்னும் கென்டால் கிட்ட கேக்குறாங்க.

வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வந்த எல்சாவுக்கு எப்படி காட்டு வாழ்க்கை பழகும்? அதுக்காக அவங்க ரெண்டு பேரும் எடுக்குற ஸ்டெப்ஸ் பாத்தா நிஜமாவே நமக்கு பதற்றமா இருக்கு.

ஒவ்வொரு தடவையும் எல்சா காயத்தோட திரும்பி வர்றப்ப எல்லாம் ஜாய் அத ஓடிப் போய் கட்டிக்குறாங்க. ஆனா திரும்ப திரும்ப காட்டுக்குள்ள தனியா விட்டுட்டு வராங்க.

ஒரு வாரம் அடிக்குற மழைனால எல்சாவ தேடிப் போக முடியாம கடைசில குத்துயிரா எல்சாவ கண்டுபிடிக்கும் போது ஜார்ஜ் தன்னோட மொத்த நம்பிக்கையையும் இழந்துடுறார். இவளால காட்டுக்குள்ள வாழவே முடியாது, இவள இப்படியே விட்டா ஒண்ணு வேட்டைக்காரங்க கொன்னுடுவாங்க, இல்லனா அவளே செத்துடுவா, இவளுக்கு ஜூ தான் பாதுகாப்பான இடம். எப்படி நீ இவ்வளவு கொடூரக்காரியா இருக்க”னு கோபமா கத்துவார்.

அவ சுதந்திரமா பிறந்தவ, அவ சுதந்திரமா தான் வாழணும், அவளால முடியும், முடியணும். அப்படி இல்லனா வாழ்நாள் முழுசும் ஒரு கூண்டுக்குள்ள அடைபட்டு செத்துப் போறதுக்கு ஒரு நாளாவது சுதந்திரமா இருந்துட்டு செத்துப் போகட்டும்னு ஜாய் சொல்றப்ப எனக்கு என் அம்மா நியாபகம் வந்தா. அம்மாவும் என்னை இப்படியே தானே சொல்லுவா.

இந்த மொத்தப் படமே சுவாரசியமானது தான்னாலும் சில இடங்கள் கூடுதல் சுவாரசியம்.

அதுவும் எல்சாவ ஒரு புது ஆண் சிங்கத்துக்கிட்ட அனுப்பி வச்சிட்டு “முதல் தடவ தன்னோட டீன் ஏஜ் பொண்ண டேட்டிங் அனுப்பி வைக்குற அம்மாவோட மனநிலைல நான் இருந்தேன்”னு ஜாய் சொல்றப்ப உதட்டுல ஒரு புன்னகை வராம இல்ல.

வேட்டையாட ஒரு காட்டுப் பன்றிய தொரத்திட்டு போற எல்சா, அத கொல்ல எந்த முயற்சியும் எடுக்காம போன்னு அசால்ட்டா விட்டுடுறா. ஆனா அந்த பன்றி இருக்கே, ரொம்ப திமிர் பிடிச்சது. தன்னை எல்சா எதுவும் செய்யாதுன்னு தெரிஞ்சதும் கொழுப்பு புடிச்சது எல்சாவ திரும்ப திரும்ப வம்புக்கு இழுக்குது. ஓடி வந்து முட்டி முட்டி சண்டைக்கு வான்னு சவால் விடுது. வெறுத்துப் போன எல்சா அந்த இடத்த விட்டு ஒரே ஓட்டம்... ஹஹா...

இத படம் வெளிவந்த ஆண்டு ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்து ஆறு. எங்க அம்மாக் கூட பொறக்கல அப்ப. அப்பவே என்ன மாதிரி ஒரு ரியாலஸ்ட்டிக் சீன்ஸ் எடுத்துருக்காங்க. மனுசங்க நடிச்சுட்டு போய்டலாம், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல, ஆனா அதுல வர்ற ஒவ்வொரு சிங்கமும், பிரேம் பை பிரேம் அட்டகாசம் பண்ணியிருக்கு.

முகத்துல சிங்கங்க காட்டுற ஒவ்வொரு உணர்ச்சியும் சான்சே இல்ல. அதுவும் அந்த குட்டிங்க மூணும் அட்டகாசம் பண்றப்ப... ஹஹா... இத எல்லாம் ஒரு சிரிப்போட, முகம் எல்லாம் பிரகாசமா வச்சுட்டு எழுதிட்டு இருக்கேன்னு நான் சொன்னா கண்டிப்பா நீங்க நம்பணும், ஏன்னா, இப்ப உங்க முகத்துல கூட புன்னகை வருது பாருங்க...

இதே படத்த இந்த காலத்துல எடுத்துருந்தா நாலஞ்சு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து தஸ்ஸு புஸ்ஸுன்னு க்ராபிக்ஸ்ல பண்ணி முடிச்சிடுவாங்க. எடே... சிங்கத்த கட்டிபுடிச்சி உருளவும் குடுத்து வச்சிருக்கணும்டே...

எனக்கும் உடனே கென்யா காட்டுக்குள்ள ஓடிப் போய் ஒரு சிங்கத்த கட்டிப் பிடிக்க ஆச தான், ஆனா காட்டு விலங்குகள நாம தொடக் கூடாது, ஏன்னா அதெல்லாம் “பார்ன் ப்ரீ அண்ட் ஷுட் லிவ் அஸ் ப்ரீ”ன்னு ஜாய் சொல்லியிருக்காங்க. எல்சாவோட குட்டிங்கள அணைச்சுக்க அவங்க துடிச்சாலும் எவ்வளவு கட்டுப்பாடா இருந்தாங்க.

அதனால, அடுத்து நான் அடுத்தப் படம் பாக்கப் போறேன், பாத்துட்டு வந்து கண்டிப்பா சொல்லுவேன். காதுல பஞ்சை ரெடியா வச்சிக்கோங்க. ஆனா கண்ண தொறந்து வச்சு படிச்சிருங்க.

3 comments:

 1. nalla vimarsanam akka. padathai paarkka thundiyathu unga vimarsanam.

  paarkkanum.

  ReplyDelete
 2. புன்னகை வருவது கூட தெரியுதா...?

  ReplyDelete
 3. விமர்சனம் படித்தவுடன் படம் பார்க்கணுமென்று தோன்றுகிறது

  ReplyDelete