Wednesday 27 May 2015

சாகசப் பயணம்-1



இப்பவரைக்கும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இந்தா, தன்னோட மொத்த துடுப்புகளையும் அழகா விரிச்சு தன்னோட பேரழக வெளிப்படுத்திட்டு இருக்குற நெய்தல பாத்துட்டே இருக்கேன்.

இதே நெய்தல் தானே, தன்னோட எழில் எல்லாம் அழிஞ்சு போய் எமன் கூட போராடி மீண்டு வந்தவன். கிட்டத்தட்ட இருபது நாள் சரியா ஆகாரம் கூட எடுக்காம, வாழணும் வாழணும்னு ஒரு உந்து சக்தியோட போராடி மீண்டவன்.

அவனுக்குள்ள என்ன லட்சியம் இருந்துச்சுன்னு எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா அவனுக்குன்னு ஒரு லட்சியம் இருக்கும்.

இப்படி தான ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லட்சியம், ஆசைகள், ஏக்கம் எல்லாமே இருக்கும். எனக்கு அந்த மாதிரியான ஆசைகள் நிறைய இருந்துச்சு.

மரணம்னா என்னன்னே தெரியாத இல்ல, அதப் பத்தி தெரிஞ்சுக்க விரும்பாத பருவத்துல நான் அப்ப இருந்தேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் நண்பர்கள், அம்மா, அப்பா, தம்பி, என் வீட்டு மாட்டுத் தொழுவம், விலங்கியல் பண்ணை இதெல்லாம் தான். ரொம்ப ரொம்ப சந்தோசமான நாட்கள் அதெல்லாம்.

ஆண்டவன் நியாபக மறதிய தெரிஞ்சி தான் மனுசங்களுக்கு வச்சிருப்பாரு போல. இப்ப யோசிச்சுப் பாக்குறப்ப நான் கடந்து வந்த வலிகள் எதுவுமே நியாபகத்துக்கு இல்ல. ஆனாலும், அம்மாவும் அப்பாவும் ஒரு மாதிரி பதட்டத்தோட கைய பிசஞ்சுகிட்டு நின்ன அந்த காட்சி நியாபகத்துக்கு வருது.

நானும் தம்பியும் ஹாஸ்பிட்டல் வராண்டால ஒரு வீல் சேர்ல போற ஆள பாத்துட்டு இருந்தோம். தம்பி தான் சொன்னான், இந்த ஆளு சீக்கிரம் எழும்பி நடக்கணும்ல அக்கா அப்படின்னு. அதெல்லாம் டான்னு எழும்பிடுவாருடா, இவங்க சும்மா மிரட்டுறதுக்கு அந்தாள வீல் சேர்ல வச்சு தள்ளிட்டுப் போறாங்கன்னு சொல்லிட்டு இருக்குறப்ப தான் அம்மாவும் அப்பாவும் டாக்டர் ரூமுக்குள்ள இருந்து வெளில வந்தாங்க.

ஏன்மா, ரிப்போர்ட்ல என்ன சொன்னாங்க? எனக்கு மூளை இருக்குன்னு இப்பவாவது ஒத்துக்குறாங்களா?ன்னு நான் கேக்க, அதெல்லாம் உனக்கு கிடையவே கிடையாது, வீணா பேராசைப் படாதன்னு தம்பி சொல்லிட்டே ஆர்வமா அம்மாவையும் அப்பாவையும் பாத்தான்.

வழக்கமான அம்மா கிண்டல் பண்ணுவா. ஆனா இவகிட்ட ஒரு தடுமாற்றம் இருந்துச்சு. அதெல்லாம் ஒண்ணுமில்ல, வந்து கார்ல ஏறுங்கன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு வெளில போய் கார் பக்கத்துல நின்னுகிட்டா.

இவளுக்கு என்ன ஆச்சு, யோவ் குமாரு, பொண்டாட்டிய ஒழுங்கா அடக்கி வைக்க தெரியல உமக்குன்னு சொல்லிட்டே நானும் கார் முன் கதவ தொறந்து ஏறி உக்காந்துட்டேன்.

முன் சீட் எப்பவும் அம்மாவுக்கு தான். அவள வம்புக்கு இழுக்கணும்னே நான் அங்க போய் உக்காருவேன். நான் தாண்டி என் புருஷன் பக்கத்துல உக்காருவேன்னு புடிச்சு வெளில தள்ளிடுவா எப்பவும். ஆனா அன்னிக்கி எதுவுமே சொல்லாம பின்னால ஏறி உக்காந்துட்டா.

அப்பவே மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு என்னமோ தப்பா இருக்குன்னு. தம்பிக்கும் ஒண்ணுமே புரியல. ஒரு மாதிரியான அமானுஷ்ய அமைதியோட தான் கார் வீடு வந்து சேர்ந்துச்சு.

ராத்திரி என்னமோ சத்தம் கேக்குதுன்னு முழிப்பு வந்து அப்பா ரூம்ல எட்டிப் பாத்து கதவ தள்ளினா அது தொறந்துடுச்சு. ராட்சசி, கதவ எப்பவும் தொறந்து போட மாட்டா. என்னடா இது அதிசயம்னு பாத்தா, அம்மா அப்பா நெஞ்சுல சாஞ்சு இருக்கா. அவ விசும்புறான்னு தெரிஞ்சுது. என்னைப் பாத்ததும் டக்குன்னு விலகி, போய் தூங்குடின்னு விரட்டினா.

அடுத்த நாள் காலைல அம்மா ரொம்ப ப்ரெஸா இருந்தா. சுறுசுறுன்னு தோசைச் சுட்டு, எல்லாருக்கும் தந்துட்டு, அவளும் சாப்ட்டுட்டு இருந்தா. நானும் தம்பியும் கேசரி கிண்டப் போறோம்னு கிளம்பினோம். உடனே, உக்காருங்க, உங்க கிட்ட பேசணும்னு சொன்னா. சொல்லிட்டே ஒரு பேப்பர நீட்டினா.

இது உங்க கிட்ட மறைக்க கூடிய விஷயம் இல்ல. நேத்து டாக்டர் குடுத்த ரெக்கமென்ட்டேசன் லெட்டர் இது, நாம இப்ப திருவனந்தப்புரம் போறோம்னு சொன்னா.

கூடவே, இது மேலிக்நன்ட் ட்யூமர், கண்டுபிடிச்சது தெய்வச் செயல்னு டாக்டர் சொன்னாங்கன்னும் சொன்னா.

எனக்கு ட்யூமர்னா என்னன்னு தெரிஞ்சுது, அதுக்கே பயந்தாச்சு. கை எல்லாம் நடுங்கி, பொலபொலன்னு கண்ணுல இருந்து ஒரே தண்ணி. எதப் பத்தியும் யோசிக்கல. அப்ப செத்துருவேனாமான்னு மட்டும் தான் கேட்டேன்.

சே சே... அப்படி எல்லாம் நாங்க விட்டுற மாட்டோம். முதல்ல எதுவும் ஆகாதுன்னு நம்புவோம். கண்டிப்பா எதுவும் ஆகாது, ஆனா இப்படியே இருக்க முடியாதுல, அடுத்து என்னப் பண்ணனும்ன்னு முடிவு பண்ணுவோம்னு கடகடன்னு சொன்னா.

அடுத்து வந்த நாட்கள் பரபரப்பா ஓடிப் போச்சு. அது தான்னு கன்பார்ம் பண்ணினதும், உடனடியா சர்ஜரி பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. பொழைச்சு வர எப்படியும் இருபது சதவீத வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் சொன்னதும் சொந்தக்காரங்க எல்லாம் இல்ல, வேணாம், அவ இருக்குற வரைக்கும் இருக்கட்டும், பயமா இருக்குன்னு அங்க நடந்த கதை, இங்க நடந்த கதைன்னு சொல்லி சொல்லி பயமுறுத்த ஆரம்பிச்சாங்க. கோவிலுக்கு போ, அங்க நேர்த்தி கடன் செய் அப்படி இப்படின்னு ஒரே டார்ச்சர்.

அம்மா ஒரே முடிவா சொன்னது இது தான். எனக்கு என் புள்ள வேணும். இல்ல அட்லீஸ்ட் அவ எனக்கு கிடைப்பாளா மாட்டாளானாவது தெரியணும். அவ உயிரோட இருந்தா நிறைய நாள் இருக்கட்டும், இல்ல இப்பவே செத்துப் போகட்டும்ன்னு தான்.

பெரியளவுல நான் இதுக்கெல்லாம் தயாரானேனான்னு எனக்கு சொல்லத் தெரியல, ஆனா அம்மா மேல உள்ள நம்பிக்கை, அவ எது சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்ங்குற திண்ணம் என்னை சர்ஜரிக்கு சம்மதிக்க வச்சுது.

ஆனாலும், இந்த பரபரப்புல தம்பிய யாருமே கவனிக்காம தான் விட்டுட்டோம். எதுவுமே பேசாம, ஏதோ குடுக்குற தின்னுட்டு தனியா போய் அவன் ஒடுங்குனது எல்லாம் இந்த காலகட்டங்கள்ல தான். சரி, அத அப்புறம் பாத்துக்கலாம்.

என்னோட மனசுல பயம் எல்லாம் போய் ஒரு விதமான ஆர்வத்த அம்மா தூண்ட ஆரம்பிச்சா. ஆப்பரேசன் தியேட்டர் எப்படி இருக்கும்? நம்மள சுத்தி டாக்டர்ஸ் எல்லாம் எப்படி நிப்பாங்க, அப்புறம் என்னென்ன செய்வாங்கன்னு கற்பனைல மிதக்க ஆரம்பிச்சுட்டேன். டிவில அந்த மாதிரியான சீன்ஸ் எல்லாம் வந்தா, ஆர்வமா பாக்கவும் ஆரம்பிச்சேன்.

ரொம்ப நாள்னு இல்லாம எல்லாம் தெரிஞ்ச இருபதே நாள்ல அது நடந்துடுச்சு. ஆமா, ஆப்பரேசனுக்காக என்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினாங்க.

அந்த சூழல் ஒரு மாதிரியான மிரட்டுற சூழல். நல்லவேளை வெளில அதிகம் நடமாட முடியாத மாதிரி ஹாஸ்பிட்டல் ரொம்ப ஸ்டிரைக்ங்குறதால அதிகமா நோயாளிகள என்னால பாக்க முடியல. இல்லனா அவங்கள எல்லாம் பாத்து பாத்தே என்னோட எனர்ஜி லெவல் டவுன் ஆகியிருக்கும்.

போன உடனே ஜன்னல் வழியா தெரிஞ்ச ஒரு பெரிய மரம் தான் என்னை வரவேற்றுது. ட்ரீட்மென்ட் எடுத்து எடுத்து, நொந்து நூலாகி, அப்புறம் கடைசியா சர்ஜரிக்கு போகாம, ரொம்ப பிரெஷா நேரடியா ஆப்பரேசன் தியேட்டருக்குள்ள நான் போனது எனக்கு கிடச்ச வரம்னு தான் சொல்லணும்.

அட்மிட் ஆன அடுத்த நாள் தான் சீப் டாக்டர் என்கிட்ட வந்தார். நான் கட்டில்ல படுத்து குமுதம் புரட்டிட்டு இருந்தேன். அவர பாத்ததும் டக்குன்னு எழும்ப ட்ரை பண்ண, படு படுன்னு தோள தொட்டு படுக்க வச்சார். ரூம்ல அம்மா மட்டும் தான். என் பக்கத்துல அப்படியே ஒரு ஸ்டூல் போட்டு உக்காந்தார்.

ஏதாவது பயமா இருக்கா? (Are you afraid?). இதான் அவர் என்கிட்ட கேட்ட முதல் கேள்வி. ஒரு மாதிரி ஆமா சொல்லுவமா, இல்ல சொல்லுவமான்னு தெரியாம பொத்தாம் பொதுவா தலையாட்டி வச்சேன்.

லிசன், கவனி, உனக்கு வந்திருக்குறது கேன்சர். கேன்சர்னா உடனே பயப்பட வேண்டாம், இப்ப அதுக்கெல்லாம் நிறைய ட்ரீட்மென்ட் இருக்கு. யங் லேடி, நீ லக்கி, பாரு, உனக்கு நடந்தது என்னன்னு அனுபவிக்குரதுக்கு முன்னாடியே கண்டுப் பிடிச்சுட்டோம். அது கடவுள் அருள். அதே கடவுள் உன் உயிர மீட்டுத் தருவார்ன்னு நம்பணும்ன்னார்.

சிரிச்சுகிட்டே அம்மாவ பாத்தேன். கடவுள் கிடையாதுன்னு கடவுள் மறுப்பு வாக்குவாதங்கள்ல அதிதீவிரமா நான் ஈடுபட்டுட்டு இருந்த நாட்கள் அது. அம்மாவும் சிரிச்சா. “ஐ பிலீவ் மைசெல்ப் அண்ட் மை மாம்” அப்படின்னேன். “யுவர் மாம் ஈஸ் யுவர் காட், இஸின்ட் இட்? தென் டிபிநிட்லி யூ வில் பி பேக் வித் பவர்புல் போர்ஸ்”ன்னு சொன்னார். எனக்கு இந்த உரையாடல் இன்னமும் மறக்காம இருக்கு.

அப்புறம், மயக்கம் எப்படி வரும், சர்ஜரி எப்படி பண்ணுவாங்க, வலிக்குமா, முளிச்ச உடனே காபி குடிக்கலாமா, ஏற்கனவே நிறைய நாள் லீவ் போட்டுட்டேன் காலேஜ் போகலாமா, அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள்.

பாவம் மனுஷன், ஒரு பேப்பர் பென் எடுத்து ஹிண்ட்ஸ் எடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையா பதில் சொன்னார்.

எனக்கு ஊசினா பயம். இங்க வந்ததுல இருந்து ரெண்டு ஊசி போட்டுட்டாங்க, அத முதல்ல நிறுத்த சொல்லுங்கன்னேன். சிரிச்சுட்டே, நீ பிரேவ் கேர்ள்ன்னு நினச்சேன், இப்படியா சைல்ட்டிசா பிகேவ் பண்ணுவன்னு கேட்டதும் வெக்கம் பிடுங்கி தின்னுடுச்சு. ஊசிப் போடுறப்ப ஊருல உள்ள டாக்டர் எல்லாம் பட்ட பாட்ட நினைச்சுப் பாத்து சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.

அதுவும் இந்த அம்மா உராங்குட்டான், அவர் கிட்ட ஊருல ஊசிப் போட்டா நான் பண்ற அலப்பறை எல்லாம் எடுத்து விட ஆரம்பிச்சுட்டா. போதும் நிறுத்து, இனிமேல் ஊசிப் போட்டா நான் அழுறேனான்னு பாரு, அத விட்டுட்டு பெரிய இவ மாதிரி போட்டுக் குடுக்காதன்னு அம்மாவ முறைச்சேன்.

சரி, டாக்டர்கிட்ட பேசினதுல நான் தெரிஞ்சிகிட்டது இதுதான், எனக்கு சர்ஜரி தலைல பண்ணப் போறதால மொட்டை போட்ருவாங்க. அதுக்கு அடுத்து ரேடியேசன் தெரபி, அப்புறம் ஹீமோ தெரபி. இதெல்லாம் முடிஞ்சி நான் நார்மல் ஆகணும்னா மூணு நாலு மாசம் (அவர் புளுகு மூட்டைன்னு அப்புறம் தான தெரிஞ்சுது) ஆகும். அப்புறம் நார்மல் லைப்க்கு திரும்பிடலாம்.

எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிகிட்டேன். இப்ப எனக்கு சர்ஜரி மேல பெரிய இன்ட்ரெஸ்ட். என்னமோ பெரிய வீர சாகசம் பண்ணப் போற மாதிரி மனசுக்குள்ள ஒரு பெருமை. டிவி, தியேட்டர்கள்ல பாத்த ஆப்பரேசன் தியேட்டர நான் நேர்ல பாக்கப் போறேன். அங்க என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் ஒண்ணு விடாம பாக்கணும்னு மனசுக்குள்ள பேராசை.

அதுவும் பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தங்க டெலிவரி நேரத்துல அவங்க கண்ண கட்டியிருந்த துணி விலகி, கீழ வயித்த கீறி பிள்ளைய எடுத்தத எல்லாம் பாத்தேன்னு சொன்னது நினைவுக்கு வந்ததும், அப்ப நம்மளும் நம்ம மண்டைய கீறி மூளைய வெளில எடுத்தத எல்லாம் பாத்துட்டு வந்து பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லணும்னு நினைச்சுகிட்டேன்.

அந்த நாளும் வந்துச்சு. முந்தின நாளே மூணு நர்ஸ் வந்து வெயிட் பாத்து, கைல வெயின் எந்தெந்த பொசிசன்ல இருக்கு, பிபி நார்மலான்னு டெஸ்ட் எல்லாம் பண்ணி, முடி வெட்டி, தலைய முழுக்க வழிச்சி, கண்ணாடி எடுத்து காட்டி, யூ ஆர் சோ க்யூட்ன்னு சொல்லிட்டுப் போனாங்க. நிஜமாவே அழகா இருந்த மாதிரி தான் தோணிச்சு. திரும்ப திரும்ப தலைய தடவிப் பாத்துகிட்டேன். அம்மா உள்ள வந்தா. சிரிச்சுட்டே தலைய தடவி காமிச்சேன். அவளும் வந்து தடவி மொட்டை மண்டைல முத்தம் குடுத்தா.

ராத்திரி முழுக்க ஒரு மாதிரியான எக்சைட்மென்ட். பிழைக்க இருபது பர்சென்ட் சான்ஸ் இருந்தாலும் ஒரு வேளை நான் செத்துப் போய்ட்டா? இந்த ரூம், அம்மா வாசம், பாட்டி மடி, அப்பாவோட சிரிப்பு இப்படி எதுவுமே எனக்கு கிடைக்காம போய்டும்ல. இழுத்து ஒரு தடவ மூச்சு விட்டுகிட்டேன்.

விடிஞ்சதும் ஆசையாசையா எல்லாரையும் மறுபடி மறுபடி பாத்தேன். அப்பா கைய பிடிச்சு வச்சுட்டு முத்தம் குடுத்தேன். தம்பி எங்க, அவன தேடினா அவன் வெளில இருக்கான்னு அம்மா சொன்னாங்க. இன்னும் நேரம் இருக்கு. விஷயம் தெரிஞ்சி ஹாஸ்பிட்டல் முழுக்க ஒரே கூட்டம் (அம்மா அப்புறமா சொன்னா). அதுலயும் ஒரு நாலு பேர் கூட்டமா உள்ள வந்துட்டாங்க.

அம்மாவும் அப்பாவும் டாக்டர் கூப்பிட்டார்னு போய்ட்டாங்க. வந்தவங்க சும்மா இருக்க வேண்டியது தான, கைய குறுக்க கட்டிக்கிட்டு முந்தானைய எடுத்து வாய்க்குள்ள சொருகிட்டு விக்கி விக்கி அழுறாங்க ஒருத்தங்க. இன்னொருத்தங்க உனக்கு போய் இப்படி ஆகிடுச்சேன்னு ஒரே ஒப்பாரி. எனக்கு படக்குன்னு சாவு வீடு நியாபகம் வந்து, மனசுக்குள்ள எல்லாரும் சேர்ந்து டண்டணக்கா டணக்குணக்கான்னு தார, தப்பட்ட அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது சரி வராதுன்னு அம்மா அம்மான்னு அலறுனேன். ஒருத்தங்க அதுக்கும், பயப்படாதமா, அந்த முத்தாரம்மன் உனக்கு துணையிருப்பான்னுஓ...ன்னு ஒப்பாரி வைக்குறாங்க. நான் போட்ட கூச்சல்ல தம்பி தான் வந்து எட்டிப் பாத்து என்னன்னு கேட்டான்.

இவங்கள எல்லாம் வெளில போக சொல்லு. நிம்மதியா சாகக் கூட முடியாது போலருக்குன்னு கத்தினேன். அவங்க எல்லாம் அதிர்ச்சியில ஒரு மாதிரி பாத்துட்டு நிக்குறாங்க. அம்மா அதுக்குள்ள வந்து என்னடான்னு கேக்க, பாருமா, என்னமோ நான் கன்பார்மா சாகத் தான் போறேன் மாதிரி குலுங்கி குலுங்கி அழுறாங்க. இவங்களுக்கு நான் பொழைச்சு வரணும்னு இருக்கா, இல்ல சாகணும்னு இருக்கா. எனக்கு சர்ஜரினா பொழைச்சுப்பேன்னு சந்தோசப்படுறத விட்டு ஒப்பாரி வைக்குறாங்கன்னு படபடன்னு பொரிஞ்சுட்டேன். அம்மா மெதுவா அவங்கள வெளில தள்ளிட்டுப் போய்ட்டா.

சர்ஜரிக்கு இன்னும் நேரம் இருக்கு. அமைதியா நானும் கட்டில்ல படுத்துட்டு கைய கட்டிகிட்டேன். மனசு மறுபடியும் ஒரு மாதிரி சமாதான நிலைக்கு போய்டுச்சு. அப்பாவ பக்கத்துலயே இருக்க சொன்னேன்.

திடுதிடுப்னு ஸ்டெச்சரோட நர்ஸ் எல்லாம் உள்ள வந்தாங்க. படபடன்னு எனக்கு ட்ரெஸ் மாத்தி படுக்க வச்சாங்க. நான் இன்னும் நேரம் இருக்கேன்னு கேட்டத எல்லாம் அவங்க பொருட்படுத்தவே இல்ல. கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு தூக்கி ஸ்டெச்சர்ல போட்டு உருட்டிட்டு போக ஆரம்பிச்சுட்டாங்க. நான் அம்மா கைய பிடிச்சுட்டே வாசல் வர போனேன். அப்புறம், நாங்க பாத்துக்குறோம்னு சொல்லிட்டு, அப்பாவுக்கு ஸ்மைல் பண்ணுன்னு அவங்க சொன்னதும் அப்பாவ பாத்து சிரிச்சேன். தம்பிய தேடினா காணோம்.

சரின்னு உள்ள போனதும் எனக்கு அப்படியே டிவில பாத்த என்விரான்மென்ட் மாதிரி தான் இருந்துச்சு. எல்லாம் பச்சை கலர் ட்ரெஸ் போட்டுட்டு, அப்படியே பச்சை கலர் முகமூடி போட்டுட்டு ஆளாளுக்கு என்னமோ பண்ணிட்டு இருக்காங்க. ஸ்டெச்சர்ல இருந்து டேபிளுக்கு மாத்தினதும் மேல இருந்த கண்ணாடில நம்ம மண்டை தெரியுதான்னு பாத்தேன். ஒண்ணும் தெளிவா தெரிஞ்ச மாதிரி தெரியல. ஒரு வேளை அந்த அக்கா தப்பா சொல்லிட்டாங்களோ?

என் பக்கத்துல அனஸ்த்தீசியன் உக்காந்துட்டு இருந்தாரு. கைல நரம்பு தேடிபிடிச்சு ட்ரிப்ஸ் போட்டாங்க. வலிச்சுது. அத விட பயமா இருந்துச்சு. ஆனா வெளில சொல்ல முடியுமா? சகிச்சுகிட்டேன். அப்புறம் ஒரு ஊசி போட்டுட்டு ஒண்ணுமில்ல, ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணு. எல்லாம் சரியாப் போகும்னு சொன்னார். நான் மயங்கப் போறேன்னு தெரிஞ்சுகிட்டேன்.

நான் எப்படி மயங்குறேன்னு அந்த நிமிசத்த மனசுல வச்சுக்கணும்னு நினச்சுட்டே பக்கத்துல இருந்த மானிட்டர பாத்து ஒண்ணு, ரெண்டுன்னு மனசுக்குள்ள எண்ண ஆரம்பிச்சேன். எத்தனை வரைக்கும் எண்ணினேன்னு சுத்தமா நியாகபம் இல்ல, அனேகமா முப்பது கூட தாண்டலன்னு நினைக்குறேன். அவ்வளவு தான், எனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பு, தற்காலிகமா துண்டிச்சுப் போச்சு.

சரியா நான் படக்குன்னு முழிச்சுகிட்டேன்னு சொல்ல முடியாது, ஒரு மாதிரியான அமானுஸ்யத்துல கொஞ்ச நாள் நான் உலாவிட்டு இருந்தேன். எமெர்ஜென்சி, அர்ஜென்ட்ன்னு டாக்டர் குரலும், ஷூ சத்தமும், க்ரீச் க்ரீச் சத்தமும் அடிக்கடி கேக்கும். கண்ணத் தொறந்து பாக்கலாம்னு நினச்சா முடியாது.

எழும்பலாம்னு நினைப்பேன், முடியாது. எனக்கே புரிஞ்சுது, ஒரு மாதிரியான மயக்கத்துல நான் இருக்கேன்னு. அதுவும் டாக்டர்களோட குரல் நான் சீரியஸா இருக்கேன்னு காட்டிக் குடுக்கும். வலியும் உணர்ச்சியும் இல்லாத பொழுது அது.

அப்படினா நான் சாகப் போறேன்னு மட்டும் மனசுக்குள்ள நினைச்சுப்பேன். அம்மா தேடுவாளே, அப்பா அழுவாரா, தம்பி யார் கூட சமையல் செய்வான், இப்படி தான் கேள்வி மனசுல வந்துட்டே இருந்துச்சே தவிர பயம் சுத்தமா இல்ல.

நினைவு தப்பிக் கிடந்த அந்த மூணு நாளும் தான் எனக்கு மரணத்த பத்தின ஒரு முழுமையான புரிதல குடுத்திச்சு. அது ஒண்ணும் பயங்கரமானது இல்ல. கண்டிப்பா இல்ல. ஒரு மாதிரியான நிம்மதி வரும் மரணம் நேரும் போது. என்ன, நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கு தான் அது வேதனைய குடுக்கும். நமக்கு கண்டிப்பா இல்லன்னு நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.

இதுக்கப்புறம் தான் ஒரு சாகசப் பயணத்துல நான் அடியெடுத்து வச்சேன். இன்னிக்கி இப்ப நீ சரியாகிட்டலன்னு கேக்குறவங்க கிட்ட ஆமான்னு புன்னகையோட சொல்லிட்டு கடந்து போகப் பழகிட்டேன். என்னோட சாகசம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கு.



-தொடரும்



5 comments:

  1. அச்சத்தோடதான்மா படிக்க முடியுது...நகைச்சுவையா எழுதியிருந்தாலும் அதி மறைந்துள்ள உணர்வை உணர முடியுதும்மா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹா என்ன உணர்வுன்னு தெரியல, ஆனா எனக்கு எல்லாமே மறந்த மாதிரி தான் இருக்கு. ஒரு ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ் போலவும் இருக்கு

      Delete
  2. thalaipai padithathum kodai sagasam irukum endru nenitthhan. thangali 0 patri neriya soli irukega mendum athai patri nenithu manathirku yan0 velai kodukerega. hauhmmg Kestheri namala seiyarathu thani suvai than. ipa kestari sapidanum pola iruku...

    ReplyDelete
  3. ****அது ஒண்ணும் பயங்கரமானது இல்ல. கண்டிப்பா இல்ல. ஒரு மாதிரியான நிம்மதி வரும் மரணம் நேரும் போது. என்ன, நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கு தான் அது வேதனைய குடுக்கும். நமக்கு கண்டிப்பா இல்லன்னு நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.***

    எல்லாருக்கும் இதுபோல் அனுபவமோ, மனப்பக்குவமோ வருவதில்லை. சாவைப்பத்தி சாகும் நொடிவரை நினைக்காமலே/நினைக்க தைரியமில்லாமல் சாகத்தான் பலரும் விரும்புறாங்க. சாவு ஒண்ணும் வாழ்வைவிட அத்தனை மோசமானதில்லைனு சிந்திக்க தைரியம் இல்லாதவங்கதான் இவ்வுலகில் அதிகம்னு நினைக்கிறேன். Our death is a big loss for our friends and family and co-workers etc. Not for ourselves as we are promoted to a "next level" to learn about "life". However, unfortunately people still want to live in this "ugly world" rather than dying beautifully. It would have been easier to deal with death if we lack the sixth sense I believe. Our sixth sense is a gift or a curse for us I always wonder about! :) Take it easy, GD!

    ReplyDelete
  4. மரணம் என்பதும் ஒரு வரம் தான்...

    சாகசம் தொடரட்டும்...

    ReplyDelete