Thursday 21 January 2016

உன்னைத் தேடித் தேடி...
செவ்வானம் சிவந்துக் கொண்டிருக்கிறது...

தூரக் கிழக்கில்
உன் சாயலொத்த மேகம் நகர்வது
எனக்குள் ஆற்றொண்ணா நினைவுகளை
உள்ளக்கிடக்கையில் சேமித்து விடுகிறது...

அந்திம நேரத்தில் தான்
உன் வரவிருக்கும் எப்பொழுதும்...

ஒரு தேவனைப் போல் நீ
என் முன் தோன்றுவாயென
வழி மேல் விழி வைத்துக்
காத்துக் கிடப்பேன்...

உன்னைத் தேடித் தேடி
களைத்துப் போன கண்களை பின்னாலிருந்து
பொத்திக் கொள்வதில் அப்படி
என்ன பேரானந்தமோ உனக்கு...

அடப்போடா, என்று தான் உன்
நேரடி தரிசனம் கிட்டுமெனக்கென
சலிக்கவிட்டு பெரிதாய் சிரித்துக் கொள்வாய்...

ஆனாலும் கோர்த்துக்கொள்ளும்
கைகளில் மெய்மறக்கச் செய்துவிடும்
வித்தையை ஒளித்தே வைத்துள்ளாய்...

அதனால் தானோ என்னவோ
உன்னையன்றி வேறெதுவும்
நினைவுகளில் படிவதாயில்லை...

உனக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ,
அன்றைய பொழுதின்
சரணாகதி இன்னமும்
மிச்சமிருக்கிறது எனக்குள்...

நின்னை சரணடைந்தேனென்ற உன்
வார்த்தைகள் மட்டுமே
நினைவுச் சுழலின் அடுக்ககங்களை
ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது...

ஆதியும் அந்தமுமாய்
என்னைத் தொலைத்து விட்டு
முடிவிலா ஒளிப்பேழைக்குள் உனக்காகவே
காத்திருப்பது இப்பொழுதெல்லாமெனக்கு
வாடிக்கையாகி விட்டது...

அதோஅங்கேப்பார்
மீண்டும் செவ்வானம்
சிவக்கத் துவங்கி விட்டது...

Wednesday 20 January 2016

ஆரஞ்சு முட்டாய் – நூல் வெளியீடு

போன தடவ “வற்றா நதி”ல ஆரம்பிச்சு வச்சது. நூல் வெளியீடுனா நேரா போய் இருக்கைல உக்காந்துட்டு, மேடைல இருக்குறவங்க பேசுறத கேட்டு கைதட்டிட்டு, நாலு பேர பாத்து ஹாய் சொல்லிட்டு வர்றது மட்டுமில்ல, வித்யாசமா நட்புகளோட ஜாலியா களிக்குற ஒரு விழான்னு நிரூபிச்சது.

வற்றாநதி வந்து வருஷம் ஒண்ணு ஓடிட்டதால மறுபடியும் ஒரு திருவிழாவ நடத்தி தான ஆகணும். அதுக்கு தான் இந்த ஆரஞ்சு முட்டாய எல்லாருக்கும் குடுக்கலாம்னு முடிவு பண்ணினது.

“ஆரஞ்சு முட்டாய்” – இது ஒரு ஜீவா படைப்பக வெளியீடு. அப்புறம் இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுதினது, யாரு, நம்ம வற்றாநதி ஹீரோ கார்த்திக் புகழேந்தி தான்.

அப்புறம், இந்த புத்தகம் வெளியீடு வர்ற இருபத்தி மூணாம் தேதி, சனிக்கிழமை (23/ ௦1/ 2௦16) மாலை நாலு முப்பதுக்கு ஆரம்பிக்குது.

இருங்க, இருங்க, எங்க, எப்படின்னு சொல்றதுக்கு முன்னாடி இன்விட்டேசன போட்டுடுறேன்...

ஆரஞ்சு முட்டாய் -நூல் வெளியீடு
வரவேற்பு  - ஸ்ரீதேவி செல்வராஜன்.
நட்பாட்டத்தின் நேசத்தோடு – எழுத்தாளர் . ஆத்மார்த்தி
தாயார் சன்னதியிலிருந்து – எழுத்தாளர். இயக்குனர் சுகா
நூலை வெளியிடுபவர் : ஜோ டி குருஸ்.
பெற்றுக்கொள்பவர் : பாக்கியராஜ் சிவலிங்கம்.
நண்பன் விருது
வழங்குபவர் : சரவணன் சந்திரன்.
பெறுபவர் : பரிசல் சிவ.செந்தில்நாதன்.
நன்றியும் அன்பும் சொல்ல:  கார்த்திக்.புகழேந்தி
சிறப்பு அழைப்பாளர்:  நீங்க எல்லோரும் தான்
நாள் : 23- 01-2016 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 4.30 மணி முதல் 8.00மணி வரை
இடம் : “வினோபா அரங்கம்”
                 தக்கர் பாபா வித்யாலையா,
                வெங்கட்நாராயணா சாலை,
                அண்ணாசாலை, (நந்தனம்)
                சென்னை - 600 035. 
               Location : https://goo.gl/maps/RgAPQQ2rWty

என்ன, விவரங்கள எல்லாம் பாத்துட்டீங்களா? இப்ப நான் விசயத்துக்கு வரேன்.

இந்த நூல் வெளியீட்டு விழா சாயங்காலம் நாலரை மணிக்கு ஆரம்பிச்சு, எட்டு எட்டு மணி வரைக்கும் நடக்குது. கிட்டத்தட்ட மூணரை மணி நேரம். அப்படி அங்க என்ன தான் நடக்கும்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?


இருங்க லிஸ்ட் போடுறேன்:

1. பம்பரம் விடுற போட்டி – ஜெய்ச்சாலும் இல்லனாலும் கலந்துகிட்டா பம்பரம் உண்டு

2. உறியடிக்குற போட்டி – இதுல கலந்துகிட்டா உறி எல்லாம் கிடையாது, ஆனா கண்டிப்பா கிப்ட் உண்டு.

இது ரெண்டும் நிகழ்ச்சி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே அதாவது நாலரைல இருந்து அஞ்சு மணிக்குள்ள நடந்துடும். அப்புறம் தான் எல்லாரும் அரங்கத்துக்குள்ள போய் நூல் வெளியீட்டு விழாவுல கலந்துக்கணும்.

பெரிய பெரிய ஜாம்பவான்களால நிறைய போற அரங்கம் அது. ஆமா நீங்க எல்லாருமே ஜாம்பவான்கள் தானே. அதனால தாராளமா நம்பி வரலாம். எழுத்தாளர் ஆத்மார்த்தி, எழுத்தாளரும் இயக்குனருமான சுகா, எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் கூடவே பாக்கியராஜ் சிவலிங்கம் அண்ணாவும் மேடைய அலங்கரிச்சிருப்பாங்க. தமிழ் தாய் வாழ்த்து ஆரம்பிச்ச அப்புறமா புத்தகத்த வெளியிட்டு, எல்லாரும் மேடைல பேசி முடிச்ச உடனே அடுத்த அதிரடி ஆரம்பிச்சிடும்.

பின்ன, போட்டியில கலந்துகிட்டவங்களுக்கு பரிசு குடுக்க வேண்டாமா?

இருங்க இருங்க, பரிசை குடுத்து அப்படியே எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட முடியாது. இன்னும் இருக்குல.

கலந்துக்குற எல்லாருக்கும் ஆளுக்கொரு நட்புக்கயிறு குடுத்து அவங்கவங்களுக்கு விருப்பமானவங்க கைல கட்ட விடுறதோட இல்லாம அங்கயும் சுவாரசியமா போட்டியும், கூடவே பேட்டியும் இருக்கு.

அது மட்டுமா, ஒரே எழுத்துல ஆரம்பிக்குற பெயர் உள்ளவங்களுக்கு பரிசு, ஒரே கலர்ல ட்ரெஸ் போட்ருந்தா பரிசு, குழந்தைங்களுக்கு பரிசு, கேள்வி கேட்டு பதில் சொன்னா பரிசு, சொல்லாட்டியும் பரிசு, இப்படி இன்னும் நிறைய சுவாரசியங்கள் இருக்கு.

எல்லாத்தையும் சொல்லிட்டா அப்புறம் நீங்க பாட்டுக்கு அதுக்கேத்த மாதிரி ரெடி ஆகிட்டு போய்டுவீங்க பாத்தீங்களா, அப்புறம் கம்பனிக்கு அது கட்டுபடி ஆகாது பாருங்க, அதனால மீதிய சஸ்பன்சாவே விட்ருவோம்.

மொத்தத்துல எல்லாரும் வாங்க, நல்லா என்ஜாய் பண்ணிட்டு போங்க...

ஆங்.... ஒரு விசயத்த மறந்துட்டேனே.... அவ்வ்வ்வ் முக்கியமான விசயத்த எப்படி மறந்தேன்?

அதென்ன அப்படி என்ன முக்கியமான விசயம்னு ஒரு கேள்விய கேட்டுட்டீங்க?

அட, ஸ்நாக்ஸ் என்னன்னு தான்...

ஆரஞ்சு முட்டாய் கூடவே புளிப்பா ஆரஞ்சு முட்டாய், கடலை முட்டாய், எள்ளு முட்டாய், அப்புறம் கருபட்டிக் காப்பி, அய்யய்யோ கார வகைகள் என்னலாம் இருக்குன்னு தெரியலயே...

இருங்க நான் போய் விசாரிச்சுட்டு வரேன்... நீங்க, அப்படியே இருபத்தி மூணாம் தேதி, டான்னு நாலரை மணிக்கு “வினோபா அரங்கம்”, தக்கர் பாபா வித்யாலையா, வெங்கட்நாராயணா சாலை, அண்ணாசாலை (நந்தனம்), சென்னை - 600 035க்கு வந்துடுங்க... 


Wednesday 13 January 2016

கனவொன்றின் நிஜம்அந்த கனவென்னை துரத்திக் கொண்டேயிருக்கிறது.
காற்றிலும் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறேன்...
ஆம், அவனென்னைப் பார்த்து விடக் கூடாது.

அவன் கண்களில் நான் பட்டுவிட்டால்
சர்வ நிச்சயமாய் எல்லாம்
முடிவுக்கு வந்து விடும்...

தெய்வீக காதலென்ற
கூற்றுகள் உடைபட்டு
அத்தனை பிரியங்களும்
சிதறிவிடக் கூடும்.

அவன் நெருங்கி விட்டதாய்
உள்ளுணர்வு சொல்கிறது.
இல்லை, இல்லவேயில்லை,
எப்படியாயினும் தப்பித்துவிட வேண்டும்...

நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன?

காலடித் தடம் நெருங்கி வருகிறது...
அய்யோ, அவ்வளவே தானா?
என்னைப் பார்த்த நொடி
வெறுத்து விடுவானா?
இல்லையில்லை,
அதிர்ச்சியில் உறைந்து விடுவான்...

இவ்வளவு தானா நீ?
ஏமாற்றுக்காரியென
அவன் கண்கள் வெறுப்பை
உமிழ்ந்து கனலும்...

கண்கள் உறைய, அடுத்தது நடப்பது
என்னவென்று அறியாது
மயங்கி சரிந்த வேளையிலே தான்
அது சம்பவித்தது...

இதெப்படி சாத்தியம்?
யாதொரு முகச்சுளிப்போ சந்தேகமோ இல்லாது
மனம் முழுக்க காதலாய்
அவனென்னை தூக்கிச்
சுமந்துக் கொண்டிருக்கிறான்...

அதிர்ச்சியில் உறைந்து விட்ட நான்
வெகு அசட்டையாய் மறந்து விட்டிருந்தேன்,
நான் கண்டுக் கொண்டிருப்பது
கனவென்று...