Friday 26 December 2014

தற்கொலை கதைகள்


தற்கொலை....

கனநேரத்துல என்ன பண்றதுன்னு தெரியாம சட்டுன்னு பண்றதுல இருந்து பக்காவா ப்ளான் பண்ணி செய்ற வரைக்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு.

இப்ப ஏன் திடீர்னு தற்கொலை பத்தி பேசுறேன்னு ரொம்ப யோசிக்காதீங்க, நான் எல்லாம் தற்கொலை பண்ணிக்குற அளவுக்கு அவ்வளவு பெரிய தைரியசாலி எல்லாம் கிடையாது. அப்படி பட்ட நான் கூட சட்டுன்னு எமோசனலா முடிவெடுக்க வேண்டிய நிலைமை கூட வந்துருக்கு. என்னோட மனசுக்குள்ள எப்பவுமே ஒரு ஆசை உண்டு, சாவோட விளிம்பு வரைக்கும் போய்ட்டு சட்டுன்னு திரும்பி வந்துடணும்னு எப்பவுமே நினைப்பேன். பல தடவ அத நான் அனுபவிக்கவும் செய்துருக்கேன், ஆனா இதுவரைக்கும் திருப்தியான அளவு அந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு இன்னும் கிடைக்கலன்னு தான் சொல்லுவேன்...

ஓய், என்ன நீ இப்படி எல்லாம் பேசுற, வந்தேன்னா, இந்தா பாருன்னு கம்பை எல்லாம் நீங்க எடுத்துட்டு வர்றதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் ஆகிடுறேன்... ஆனா கொஞ்சம் கதைகள் சொல்லிட்டு போய்டுறேனே...
............................

என்னோட தூரத்து சொந்தம், பெரியப்பா பொண்ணு. சின்ன வயசுல ஊர் ஊரா கொஞ்சம் சுத்தினதால ஊருக்கு வந்து செட்டில் ஆனப்ப அவள தான் முதல் முதல்ல சொந்தம்னு அறிமுகப்படுத்தினாங்க. ரொம்ப பாசமா இருப்பா. அன்பும் அடக்கமுமா பொண்ணு வேணும்னு கேப்பாங்களே அவங்க எல்லாருக்கும் அவள புடிக்கும். பட்டு சேலை கட்டி கொஞ்சம் நகை போட்டா அப்படியே மகாலட்சுமினு ஊர்ல சொல்லுவாங்க. என்னை விட ஆறு வயசு பெரியவ. எல்லாரையும் போல ஒரே மாதிரி படிக்க கூடாதுன்னு சென்னைல கெமிக்கல் இஞ்சினியரிங் படிச்சா. நாலு வருஷம் சென்னைல இருந்தாலும் ஊருக்கு வந்தப்போ அவளாவே தான் இருந்தா. அதே அன்பு. அதே பணிவு. பந்தானா கிலோ என்ன விலைன்னு கேக்குற பார்ட்டி. இங்க வந்ததும் சும்மா இருக்க வேணாமேன்னு ஒரு காலேஜ்ல லெக்சரரா போனா.

வேலைக்கு போன ஆறு மாசத்துல அவளுக்கு கல்யாணம் பேசினாங்க. பாத்த முதல் மாப்பிளையே ஓகே ஆக, நாங்க எல்லாம் அவளை கலாய்ச்சு தள்ளிட்டோம். அப்ப கூட புன்னகையோட தான் கடந்து போவா. சந்தோசமா கல்யாணத்துக்கு தேவையான எல்லாம் அவளே போய் பாத்து பாத்து வாங்கினா. ஆனா கல்யாணத்துக்கு மூணு நாள் முன்னாடி அமைதியாகிட்டா. எல்லாரும் புள்ளை எதோ வீட்ல எல்லாரையும் பிரியணுமேன்னு வருத்தத்துல இருக்குன்னு விட்டுட்டாங்க. நான் கூட கவனிச்சேன். ஆனா விளையாடுற வயசு. அத எல்லாம் அலசி ஆராய்ஞ்சுட்டா இருக்க முடியும்?

ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சு மூணே நாள்ல மாப்பிளை வீட்ல இருந்து அவள கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க. அவளுக்கு மனோவியாதி வந்துருக்குன்னு ஒரு மூணு மாசம் ட்ரீட்மென்ட் எடுத்து, அப்புறம் பையன் வீட்ல வந்து கூட்டிட்டு போனாங்க. மறுபடியும் அவ நார்மல் ஆகிட்டா.

அப்புறம் ஒரு வருஷம் அதே புன்னகை, அதே அன்பு. அதே கவனிப்பு. அவ மாமியாரும் மாமனாரும் எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவ்வளவு பெருமையா பேசுவாங்க. இவ ஒரு புன்னகையோட கேட்டுட்டு இருப்பா. ரெண்டாவது வருஷம் அவளுக்கு பொம்பள புள்ள பொறந்துச்சு. அந்த நேரம் அவ ஹஸ்பன்ட் ப்ராஜெக்ட் விசயமா பிரான்ஸ் போய்ட்டார். குழந்தை பிறந்த நாலாவது மாசம், அவ ஹஸ்பண்ட் வர்றார்ன்னு அவங்க தனியா வாழ்ந்த வீட்டுக்கு மாமியார் மாமனாரோட போய், வீடு எல்லாம் நல்லா கிளீன் பண்ணி, குழந்தையை குளிப்பாட்டி, பீடிங் பாட்டில்ல பால் கலக்கி மாமியார் கைல குடுத்துட்டு ரூம்ல போய் குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்னு போனவ ரொம்ப நேரமா வெளில வரல

என்னன்னு போய் பாத்தா ஆள் தூக்குல தொங்கிட்டு இருக்கா. நாலு மாச கைக்குழந்தை, ஊருக்கு வர்ற புருஷன், கூடவே இருந்த மாமியார் மாமனார் எல்லாரையும் விட்டுட்டு எப்படி, ஏன், எதுக்கு அவ செத்துப் போனான்னு இன்னிக்கி வரைக்கும் யாருக்குமே தெரியாது. ஒரு காலேஜ் லெக்சரர், நாலு மாச குழந்தைக்கு அம்மா.... ஏன் செத்தா? கேள்விக் குறி தான். அவளுக்கு அந்த செகண்ட் என்ன தோணிச்சுன்னு தெரியல, போய்ட்டா... ஆச்சு அஞ்சு வருஷம்.
...................................

இது என் காலேஜ் ஸ்டாப் ஒருத்தங்க சொன்னது. அந்த பொண்ணு இவங்க க்ளாஸ்மேட். ஒரு சைன்ட்டிஸ்டா வரணும்ன்குறது அவங்க கனவு. கூடவே மாமா பையன கட்டிக்கணும்னு தான். ரெண்டு பேர் வீட்லயும் பயங்கர எதிர்ப்பு. ஏதோ குடும்ப பிரச்சனை போல. இவங்க பி.ஜி பைனல் இயர் படிக்குறப்ப கடைசி செமஸ்டர் முடிஞ்ச அன்னிக்கி பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணத்த பண்ணி வச்சிட்டாங்க.

பொண்ணும் பையனும் அதே ஸ்டைல்ல யாருக்கும் தெரியாம அவங்கவங்க வீட்டுக்கு போய், பொண்ணு எம்.பில் பண்ணி முடிச்சதும் வீட்ல கல்யாணத்துக்கு பையன பாக்க, இவங்க வேற வழியில்லாம உண்மைய சொல்ல, அதே ஸ்டைல்ல வீட்ட விட்டும் தொரத்திட்டாங்க.

பையன் ஒரு ஹாஸ்பிடல்ல சீப் லேப் இன்சார்ஜ். நல்ல சம்பளம். இவங்களும் ஒரே பீல்ட்ங்குறதால அடுத்து பி.ஹச்.டி பண்ணலாம்னு சென்னைல ஒரு டாக்டர் கீழ ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. இப்படியே நாலு வருஷம் ஓடிடுச்சு. ரெண்டு வயசுல ஒரு பையன் வேற. பி.ஹச்.டி முடிய போற நேரம், வீட்ல புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சண்டை வர, மேக் அப்க்கு வாங்கி வச்சிருந்த நெயில் பாலிஸ் ரிமூவர ஹஸ்பன்ட் முன்னாடியே குடிச்சிருக்காங்க. பதறி போய் கார்ல தூக்கி போட்டுட்டு ஹாஸ்பிடல் கொண்டு ஓடினா, உள்ள போறதுக்குள்ள ஆள் அவுட்.

ஒரு நெயில் பாலிஸ் ரிமூவருக்கு இவ்வளவு எபக்ட் உண்டுன்னு கண்டிப்பா அவங்களும் நினைச்சிருக்க மாட்டாங்க, மருத்துவ உலகமும் நினச்சிருக்காது. போகுற நேரம் வந்துட்டா எப்படி வேணா போய் தான் ஆகணும் போல... இன்னிக்கி அந்த பொண்ணோட தங்கச்சியவே அவருக்கு வீட்ல கட்டி வச்சிட்டாங்க. பையன பாத்துக்கணும்ல...
......................................

இது எங்க ஊர்ல நடந்தது. பொண்ணு மதுரைல ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சுட்டு இருந்தா. பையன் எங்க ஊர்க்கார பையன். படிப்பு வராம ஊர் சுத்திட்டு இருந்தான். ரெண்டு பேருக்கும் லவ். எந்த ஊர்ல யார் இருந்தா என்ன, மொபைல் இருக்குல. இதுல அந்த பொண்ணு கூட இருக்குற பொண்ணை இவனுக்கு இன்ட்ரோ வேற பண்ணி வச்சிட்டா. மூணு பேருமே நல்லா பேசுவாங்க, இவன் மதுரைக்கு போவான் வருவான். இப்படியே ஒரு வருஷம் ஓடிப் போச்சு.

அப்புறமா இவ பிரெண்ட் அவன் கிட்ட தனியா பேசுறத எல்லாம் கண்டுபிடிச்சு, ரெண்டு பேரையும் கண்டிச்சிருக்கா. இனி எந்த தப்பும் நடக்காதுன்னு ரெண்டு பேரும் சத்தியம் எல்லாம் செய்து குடுத்துருக்காங்க.

இவங்க விசயம் தெரிஞ்ச எல்லாருமே அந்த பொண்ணை ரொம்பவே கண்டிச்சாங்க. பையன் சரியில்ல, ரெண்டு பேருக்கும் செட்டாகாது, விலகி வந்துடுன்னு. ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் தான் வேணும்னு அவளும் பிடிவாதமா வீட்ல சண்டைப் போடுவா, அப்புறம் மதுரை கிளம்பி போய்டுவா.

ஒரு வழியா பைனல் இயர் முடிஞ்சு ஊருக்கு இவ வந்தப்ப கல்யாண பேச்சு ஆரம்பிக்க, அவன் தான் வேணும்னு வீட்ல பயங்கர சண்டை. ரெண்டு பேர் வீட்லயும் என்ன பண்ண, வேற வழி இல்ல, கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுத்து நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறிச்சுட்டாங்க. அப்போ தான் அவன பாக்க இவ போயிருக்கா. அவன் மொபைல் வாங்கி எதேச்சையா பாக்குறப்ப அவன் இன்பாக்ஸ் முழுக்க அவ பிரெண்ட் கிட்ட இருந்து வந்த மெஸ்சேஜ். பாக்கவே அருவெறுப்பான அந்த மெஸ்சேஜ் எல்லாம் பாத்துட்டு ஆக்ரோசத்தோட வீட்டுக்கு வந்தவ மண்ணெண்ணெய் கேனை எடுத்து விட்டு கொளுத்திகிட்டா. ஸ்பாட் அவுட்...

ரெண்டு வருஷம் கழிச்சு அந்த பையன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான். இவ போனவ போனவ தான்...
..............................................

உடம்புல தீய வச்சுக்குறது, மல மேல இருந்து குதிக்குறது, ட்ரைன் முன்னால பாயுறது, தூக்கு போட்டுக்குறதுன்னு இதுல எது நினைச்சாலும் நடந்துட்டா அப்புறம் தடுக்க முடியாது. விஷம் சில நேரம் பட்டுன்னு உயிர எடுத்துடும், சில நேரம் பொழச்சுக்கலாம்... அப்படி பொழச்சு வந்துட்டா, அந்த நிமிசங்கள நினச்சு பகீர்ங்குது மனசு... தற்கொலை கொடுமைடா சாமி....