Tuesday 22 December 2015

உன்னை மட்டுமே


அத்தனை வடுக்களையும்
தாங்கிக் கொண்டிருக்கிறேன்...

புரையோடி போயிருந்த நேரத்திலெல்லாம்
உன் தோள் சாய்ந்து
ஒரு புன்னகை உதிர்க்க
முடிந்திருந்த என்னால்
இன்று வடுக்களாகிப் போன
இத்தடங்களை பார்த்து
கண்ணீர்விடவே முடிகிறது...

ஆறாக்காயமொன்று இதயத்துள்
அறுத்துக் கொண்டிருக்கிறது...
இச்ஜென்மம் பத்தாத தாகமாய்
ரணம் வேண்டுமென்று பெருங்குரலெடுத்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்...

கத்தியின் கூர்மையை
ருசி பார்க்கவேண்டும்...
ஓலமாய் வெளிப்படும் காற்றலை
உன் பெயரையன்றி
வேறெதை தாங்கி வரும்?

வலிகள் புதியதல்ல...
இருந்தும்
கண்கள் குளமாகும் தருணங்கள் அத்தனையிலும்
உன்னை மட்டுமே நிரப்பிக் கொள்கிறேன்...

உன்னை மட்டுமே...


.

Wednesday 9 December 2015

சென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்
கொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்கும், ரோட்டுல வண்டி எல்லாம் போக கஷ்டப்படும் அவ்வளவு தான்னு விட்டுட்டேன். காரணம் மழைன்னு சொன்னாலே எனக்கு மனசுக்குள்ள உற்சாகம் மட்டும் தான் வரும். ஆனா முதல் தடவையா இந்த மழை என்னை ரொம்ப பயமுறுத்திடுச்சு.

நவம்பர் மாசம் பெய்த மழைல சென்னை கொஞ்சம் திணறினாலும் முப்பதாம் தேதி வரை மழைய பத்தின வேடிக்கை போஸ்ட் எப்பி-ல நிறைய பாக்க முடிஞ்சுது. மழை கவிதைகளும், கிண்டல்களும் கேலிகளும் டிசம்பர் ஒண்ணாம் தேதில இருந்து நிறம் மாற தொடங்கிச்சு.

“மழையைக் காரணம் காட்டி அலுவலகத்தில் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்ல அனுமதியளித்திருக்கிறார்கள். கடந்தமுறைதான் படுக்கையில் தள்ளிவிட்டது. இந்தத் தடவை மழைக்கு வீட்டில் கிடந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்கேனும் வெள்ளபாதிப்பு உள்ள பகுதிகளுக்குச் சென்று முடிந்த உதவிகளைச் செய்யலாமென்று நானும் நண்பனும் திட்டமிட்டுக்கொண்டோம். இம்மாதிரி உதவிகளுக்காகச் செல்லும் குழுவினர் யாரும் இருந்தீர்களானால் இணைந்துகொள்வோம். அல்லது ஆற்றுப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் இயன்றதைச் செய்துகொண்டிருப்போம்”ன்னு கார்த்திக் போஸ்ட் பாத்ததும் அவர் தான் இந்த மாதிரியான சூழ்நிலைகள்ல ஹெல்ப் பண்ண முன்னாடி போய் நிப்பாரே, அது போல தான் இதுவும் இருக்கும். மனசுக்கு பிடிச்சத அவர் பண்றார்ன்னு நினச்சுட்டு சும்மா இருந்துட்டேன்.

அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சுது சென்னைல பெய்த மழை cloud buster-ன்னு. சாதாரணமா ஒரு நாள்ல பெய்ய வேண்டிய 60mm மழைக்கு பதிலா 590 mm பெய்தா எப்படி இருக்கும்? அதுதான் சென்னையால தாக்குப் பிடிக்க முடியாம போச்சு. இன்னும் கொஞ்சம் கூடுதலா பெய்திருந்தா சென்னையே மூழ்கிப் போயிருக்கும்னு சொன்னப்ப நான் ரொம்ப ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். பின்ன சென்னைய சுத்தி இருக்குற 926 ஏரிகளும் நிரம்பி கடல்ல கலந்தா சென்னை நிலைமை அவ்வளவு தான்னு என்னை ரொம்ப பயமுறுத்திட்டாங்க. நூறு வருசங்களா இப்படி ஒரு மழைய சென்னை சந்திச்சதே இல்லையாம்.

என்ன நீ, எவ்வளவு பெரிய விசயத்த எதுவுமே தெரியாத மாதிரி ரொம்ப சாதாரணமா எழுதிட்டு இருக்கன்னு கேக்காதீங்க. காரணம், குமரி மாவட்டத்துல ஒரு பாதுகாப்பான இடத்துல இருந்துட்டு, இதுவரைக்கும் இந்த மாதிரி எந்த விதமான அசம்பாவிதங்களையும் அனுபவிக்காத, அதோட சீரியஸ்னஸ் புரியாத ஒரு பொண்ணா என்னை நினைச்சுப் பாருங்க, நான் அப்படி தான் மழையை விரும்புற மனநிலைல இருந்தேன்.

அதே டிசம்பர் ஒண்ணு. மழை நிலவரங்கள் பத்தி ஒவ்வொருத்தரும் போஸ்ட் போட ஆரம்பிச்சாங்க. விசயம் கொஞ்சம் சீரியஸ்ன்னு புரிய ஆரம்பிச்சது. என்னால அப்பப்ப இங்க என்ன நிலவரம்னு எட்டிப்பாக்கத் தான் முடிஞ்சுதே தவிர, வேற எதுவும் பண்ண முடியாத சூழ்நிலை. எத்தனையோ பேர் நிறைய போஸ்ட் போட்டும், ஷேர் பண்ணியும், பாதிக்கப்பட்டவங்களுக்கும் அவங்கள தேடுறவங்களுக்கும் இடைல இணைப்பு பாலமா செயல்பட்டாங்க. தரைதளம் மூழ்கி, அப்படியே முதல் தளமும் மூழ்கிப் போய்டுச்சுன்னு கேள்விப்பட்டப்ப நிலைமை ரொம்ப சீரியஸ்னு புரிய ஆரம்பிச்சுது. பிரசவ வலில துடிக்குற பெண்கள், உடனே உதவி வேணும்னு ஒவ்வொருத்தரும் பதறினத பாத்தப்ப எதுவுமே செய்ய முடியாம உக்காந்த இடத்துல இருந்தே பிரார்த்தனை மட்டும் தான் பண்ண முடிஞ்சுது. நல்ல வேளையா அவங்க காப்பாற்றப்பட்டு பிரசவிச்ச நியூஸ் ஆறுதல் சம்பவம்.

வெள்ளத்துல இருக்குறவங்கள காப்பாத்தினா மட்டும் போதாது, அவங்களுக்கு அடைக்கலம் மட்டும் குடுத்தாலும் பத்தாது, எல்லாத்தையும் மழைல தொலைச்சுட்டு நிக்குற மக்களுக்கு சாப்ட சாப்பாடு வேணும், உடுத்திக்க மாத்து துணி வேணும், கொட்டுற மழை குளிர்ல போர்த்திக்க போர்வை வேணும், ஒரு அவசர ஆத்திரத்துக்கு ஒதுங்க ஒரு இடம் கூட வேணும். இப்படி எத்தனையோ வேணும் வேணும்கள்.

கரண்ட் இல்லாம, மொபைல்ல சார்ஜ் இல்லாம, வெளியுலக தொடர்பே இல்லாம அடுத்து என்ன நடக்குமோன்னு பயத்தோடவே கடக்குற தருணங்கள் இருக்கே. அது எப்படி இருக்கும்னு அனுபவிச்சவங்க மட்டும் தான் உணர முடியும். அப்படி ரெண்டு ராத்திரிகள் கடந்து போனா?

சென்னை மட்டுமில்லாம கடலூர்லயும் பாதிப்பு ரொம்ப ரொம்ப அதிகம்னு கேள்விப்பட்டு மனசு ரொம்ப சோர்ந்து போய்டுச்சு. நம்மால தான் எதுவும் செய்ய முடியல, அட்லீஸ்ட் ஆறுதல் கிடைக்குற மாதிரி ஏதாவது நியூஸ் கிடைக்குமான்னு தேடி தேடி நான் பாலோ பண்ணிட்டு இருந்த டீம் தான் கார்த்திக் புகழேந்தி, கிரிதரன் கிரி, கவிமணி டீம்.

முதல் நாளில் ஏதாவது உதவி செய்யலாமேன்னு எதேச்சையா களத்துல இறங்கினவங்க நிலைமையோட வீரியத்தன்மைய பாத்துட்டு ஆறு நாள் வேலைக்கு போகாம பாதிக்கப்பட மக்கள் இருக்குற ஒவ்வொரு இடமா தேடி தேடிப் போய் முழுவீச்சுல மக்களுக்கு உதவி செய்ய இறங்கிட்டாங்க.

மவுண்ட் ரோடு, தேனாம்பேட்டை, அடையார், வேளச்சேரி பகுதிகள்ல சுத்தி சுத்தி உதவி பண்ணின இவங்க, அன்னிக்கு ராத்திரியே ஊராப்பாக்கம் கொஞ்ச பேர் தண்ணியில சிக்கியிருக்காங்கன்னு கேள்விப்பட்டு மீட்பு குழுவுக்கு தகவல் சொல்லி, மறுநாள் காலைல நாலு மணிக்கு அவங்கள மீட்க ஏற்பாடு செய்துருக்காங்க.

அவங்க கண்ணுல பட்ட சாப்பாடு இல்லாதவங்களுக்கு சாப்பாடு குடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டவங்க, வயசானவங்க, தேவைப்பட்டவங்களுக்கு எல்லாம் போர்வைகள் குடுத்து தண்ணில சிக்கின வாகனங்கள மீட்க உதவி பண்ணி, மூணு மணி நேரம் தண்ணிக்குள்ள இறங்கி நின்னு சிக்கியிருந்த மக்கள கரையேற உதவி தன்னிச்சையா முதல்ல செயல்பட ஆரம்பிச்சவங்க, அடுத்த நாள் அதாவது மூணாம் தேதி காலைல சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள சந்திச்சு, அவரோட ஆசீர்வாதத்தோட இன்னும் சிலர் (லதா அருணாச்சலம், திருமதி கெளரி, அனிதா, ஞானி) உதவியோட தியாகராயநகர் பகுதியில தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், போர்வைகள் குடுத்துருக்காங்க.

அடுத்தடுத்த நாட்கள்ல தி நகர், மேற்கு மாம்பலம், ஹௌசிங் போர்ட், துரைப்பாக்கம், திருவான்மியூர், மத்திய கைலாஷ், அடையார், வடசென்னை, மணலின்னு ஒவ்வொரு இடமா போய் உதவிகள் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த நேரத்துல மக்களோட தேவைகள் உணவும் தண்ணிப்பாக்கெட்டும் மட்டுமில்லன்னு தெரிஞ்சுகிட்டவங்க டீம்ல உதய சங்கர், ஸ்ரீதேவி செல்வராஜன், வில்லன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இணைய, மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள திரட்டி விநியோகிக்க தயாராகிட்டு இருக்காங்க. இதுக்கு அவங்களுக்கு உறுதுணையா நிறைய நல்ல உள்ளங்கள் தங்களோட பெயர கூட வெளில சொல்லாம உதவிட்டு இருக்காங்க. தனிநபரா களத்துல இறங்கினதுல இருந்து, இப்ப ஒரு குழுவா இந்த நட்பு கூட்டணி உருவாகியிருக்கு.

இந்த தனிக் குழு வாலண்டியரா யார் கூடவும் இணையல. ஏன்னு காரணம் கேட்டா, “எங்க நட்புவட்டம் “தண்ணில இறங்கிப்போய்”ன்னு........ சொல்லும்போதே அடுத்த கரையில் மூட்டைகளைக் கொண்டு போய் சேர்க்கிறவர்கள். சோறு தண்ணி இல்லாமல் வேலைபார்த்துவிட்டு கிளம்பும்போது, "இருக்கட்டும்டா வீட்ல போய் சாப்டுக்குறேன்னு" கையத் துடைச்சுட்டு போய்டும் குணாதிகள். பத்துரூபாய் அந்தக்கடையில் கம்மியா கிடைக்குதுன்னு எட்டு போன்கால் போட்டு தன் காசை செலவு செய்து விசாரித்தலைந்து பொருட்கள் வாங்கித் தருகிறவர்கள். ஐந்தாவது நாளாக வேலைக்குப் போகலையே என்றால் பார்த்துக்கலாம் விடு என்று அட்டைபெட்டிகளை அடுக்குகிறவர்கள். இவர்களோடு ஒண்ணுமண்ணா வேலை பார்க்கும் அந்நியோன்யம் எல்லோர்கிட்டவும் செட்டாகுமான்னு தெரியலை. தவிர இங்கே முடிவெடுக்கும் பொறுப்பு துறப்பெல்லாம் கிடையாது. இன்னார்க்கு ஒரு தேவை இருக்கு கொடுக்கணும்ன்னு தோணுதா கொடுத்துட்டு போய்ட்டே இருப்பாங்க. நோ ஆர்க்யுமெண்ட்ஸ். அப்புறம் பண உதவி செய்பவர்கள். "சத்தம் மூச்" வெளியில் விடாமல், எப்பவோ கொடுத்த அக்கவுண்ட் நம்பரை நினைவு வச்சு,"இந்தாங்க கார்த்தின்னு" உழைச்சு சம்பாதிச்ச காசை நம்பி கையில் கொடுக்குறாங்க. அவங்க நம்பிக்கையை காப்பாத்தணும்ல. அதுமட்டுமில்லை வாலண்டியர் தேவைன்னு போஸ்ட் போட்டா நூறு ஷேர் போகிறது. இரண்டு கால் வருகிறது. சத்யம் தியேட்டரில் ஐந்து டிக்கெட் வைத்திருக்கிறேன் என்றால் நாற்பது மெஸேஜ் வாட்சப்பில் குவிகிறது. இணையத்தில் வாலண்டியராக வரிந்துகட்டிக்கொண்டுச் செயல்படுவதும், அழுக்குத்தண்ணீரில் மூட்டை முடிச்சுகளோடு இறங்குவதும் வேறு வேறு என்று தெளிவாகப் புரிந்தவர்களோடு ஒன்று சேர்ந்திருப்பது நல்லதில்லையா!”ன்னு கேள்வி எழுப்புறார் கார்த்திக் புகழேந்தி.

அடுத்தடுத்து இன்னும் நிறைய விஷயங்கள் பேசணும்... அத தொடர்ந்து எழுதுறேன். 

இப்போதைக்கு இந்த டீம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள சேகரிச்சு வழங்குறதுல மும்முரமா இருக்கு.

அந்த லிஸ்ட்ல சத்து மாத்திரைகள், சத்து மாவு, மாற்று உடைகள், உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், போர்வை, நாப்கின், உள்ளாடைகள், இருமல் மருந்து, ஸ்டவ் இப்படி சில அத்யாவசிய பொருட்கள் அடங்கியிருக்கு.

பேஸ்புக்ல இந்த டீமுக்கு இருக்குற ஹாஷ்-டாக் #‎MIHY‬


வாழ்த்துவோம், முடிஞ்சா கைகொடுப்போம்...அழைக்க:
கிரி : 9941146404, 9884543039
உதய சங்கர் : 9940232560
ஜெகதீஷ் : 9566249725
தமிழ்ச்செல்வன் : 9500030200
கார்த்திக் புகழேந்தி : 9994220250
கவிமணி : +91 9003984963 ; +91 7092702365