Tuesday 28 April 2015

ஆண் பெண் உறவு



கொஞ்ச நாளாவே இங்க நடக்குற விசயங்கள பாத்தா ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆளாளுக்கு ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்னு அறிவுரை சொல்றாங்க. இவங்க கிட்ட எல்லாம் நாம வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தா தான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு தலைகீழா நிப்பாங்க...

ஆனாலும் ஆண் பெண் உறவு, கற்பு சம்மந்தமான விஷயங்கள் பத்தி ஏனோ சொல்லணும்னு தோணுது.

இத நான் எழுதணும்ன்னு நினைக்குறதுக்கு காரணம் என் அம்மா. ஸ்கூல் படிக்குறப்ப ரொம்ப சுதந்திரமா இருந்தேன். பொதுவா இயற்கைய ரசிக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கூடவே தனிமையும் பிடிக்கும். ஆனா அதுக்கு அப்புறம் ஏற்பட்ட உடல்நிலை கோளாறினால என்னால பகல்ல வெயில்ல வெளில போக முடியாது. தல சுத்தும். அதுக்காகவே இருட்ட ஆரம்பிச்சுட்டுனா காரை எடுத்துட்டு எங்கயாவது ஆத்தங்கரை, இல்ல குளத்தங்கரை ஓரமா நிறுத்திட்டு இருட்டுலயும் அத எல்லாம் ரசிச்சுட்டு இருப்பேன். ஏதாவது மரக்கிளை, இல்ல வரப்பு மேட்டுல உக்காந்துட்டு இருப்பேன்.



என்னோட சொந்தக்காரங்க எல்லாம் இதுக்காக நிறைய திட்டுவாங்க. அம்மா கிட்ட போய் ஒரு பொம்பள புள்ளைய இப்படி அந்தி நேரத்துல இப்படி தனியா வெளில விடுறியே, காலம் கெட்டுக் கிடக்கு. ஏதாவது ஒண்ணு ஆகிட்டா யார் பதில் சொல்லுவான்னு கேட்டா அம்மா அவங்க கிட்ட வெறும் புன்னகைய மட்டும் தான் பதிலா தருவா.

இதுவே ஏன்மா, அப்படி நிஜமாவே எனக்கு ஏதாவது ஆகி, என்னை எவனாவது ரேப் பண்ணி கொன்னுட்டா என்ன பண்ணுவன்னு கேப்பேன்.

“என் பொண்ணு சுதந்திரமா வளர்ந்தவ. அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அவ எப்படி இருக்கணும்ன்னு அவளுக்கு தெரியும். அவளுக்கு தனிமை பிடிச்சிருக்கு. பகல்ல போக முடியாததால ராத்திரி போறா. அப்படி போறதால அவளுக்கு ஏதாவது ஆச்சுனா சம்பவம் நடக்குறதுக்கு அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடியாவது அவ சந்தோசமா இருந்துருப்பா. எனக்கு அவளோட அந்த சந்தோசம் தான் முக்கியம். இன்னொன்னு, அவளுக்கு அப்படி ஆகிடுச்சுன்னு அவள மூலைல உக்காந்து அழுதுட்டு இருக்க விட மாட்டேன். நல்ல சுடு தண்ணியில உடல்வலி போக குளிச்சுட்டு போய் வேலைய பாருன்னு அனுப்பி வச்சிடுவேன்னு சொல்லுவா. சரி, கொலை நடந்துடுச்சுனான்னு திருப்பிக் கேட்டா சாவு எப்ப வரும் எப்ப வரும்னு எதிர்பாத்துக்கிட்டு இருந்தவளுக்கு இப்ப சாவு வந்துடுச்சுன்னு நினச்சுட்டு போறேன்னு சொல்லுவா. அப்படி நடந்துடுமோ இப்படி நடந்துடுமோன்னு பயந்துகிட்டே வீட்டுக்குள்ள உயிரோட பூட்டி வச்சு தினம் தினம் கொல்லுறதுக்கு இருக்குற வரைக்கும் அவ சுதந்திரமா இருந்துட்டு போகட்டுமேம்பா...

ரேப் பண்ணினா அதெல்லாம் அசிங்கம்மா. அதெப்படி இன்னொருத்தன் நம்ம உடம்ப தொடுறத ஏத்துக்குறது? அதுக்கு செத்துப் போய்டலாம்மான்னு சொன்னா, நீ உன் பிரெண்ட்ஸ் கிட்ட எப்படி பழகுற? அவங்க கூட பைக்ல போற, மழைல கை புடிச்சுட்டு நனையுற, அவங்கள பாராட்டனும்னா தோள தட்டி சியேர்ஸ் சொல்ற, அதிகமான சந்தொசத்துலயும் உற்சாகத்துலயும் ஹக் பண்ணிக்குற, குரூப் ஸ்டடி நேரத்துல உன்ன மறந்து பசங்க தோள்ல சாய்ஞ்சு தூங்குற, அப்ப அதெல்லாம் அசிங்கம் இல்லையான்னு கேட்டா பக்குன்னு பதறிடும். ம்மா, அதெல்லாம் பிரெண்ட்ஸ்மா. அவன் ஒரு ஆண்ங்குற நெனப்பே எனக்கு வராதேன்னு நான் சொல்லுவேன். அதே மாதிரி ஒரு மிருகம், அதுகிட்ட இருந்து நீ தப்பிக்க போராடுற, முடியல, அதுக்காக அதையே நினைச்சுகிட்டா இருப்ப, மருந்து போட்டுட்டு காயம் சரியானதும் உன் வேலைய பாத்துகிட்டு தான போவன்னு கேட்டா ஆமான்னு சொல்றத தவிர வேற என்ன சொல்ல முடியும்?

ஆச்சர்யமா அம்மாவ நிறைய தடவ வச்சக் கண்ணு எடுக்காம பாத்துட்டே இருந்துருக்கேன். அவ வாய் வார்த்த இப்படி சொன்னாலும் என்னை கண்காணிச்சுகிட்டும், எனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு வேண்டிகிட்டே தான் இருப்பா. ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கப் போகுதுன்னு தோணுற பட்சத்துல பதட்டமே இல்லாம எப்படி தப்பிக்க முயற்சி பண்ணணும்னு சொல்லிக் குடுப்பா. அதனால தானோ என்னவோ நான் வெளில போன நாட்கள்ல எல்லாம் ஒரு சின்ன சம்பவம் கூட நடந்தது இல்ல.

அம்மாவும் நானும் நிறைய விஷயங்கள் விவாதிப்போம். எனக்கு கல்யாணத்து மேல எல்லாம் நம்பிக்கை இல்ல அம்மா, ஆனா ஒரு பொம்பள புள்ளைய டெஸ்ட் ட்யூப் மூலமா பெத்துக்கணும்ன்னு ஆசையா இருக்குன்னு வெளிப்படையா அம்மா கிட்ட பேசுவேன். ஒரு வேளை நான் ஏதாவது தப்பு பண்ணிட்டு வயித்துல குழந்தையோட வந்தா நீ என்ன பண்ணுவன்னு கேள்வி கேட்ருக்கேன். அம்மாவுக்கு அபார்சன் பிடிக்காது. அதென்னமோ அந்த வார்த்தைய கேட்டாலே அம்மா அவ்வளவு நடுங்குவா. இதனால தெரிஞ்சே தான் இந்த கேள்விய நான் கேப்பேன்.

நீ பண்ணினது தப்பு. ஆனா அதுக்காக உன் வயித்துல வளர்ற குழந்தைய கலைக்க சொல்ல மாட்டேன். எங்கயாவது உன்னை கூட்டிட்டு போய் அந்த குழந்தைய பெத்துடுத்துகிட்டு அத வீட்டுக்கே தூக்கிட்டு வந்துடுவேன். உன்னையும் அப்படியே விட்டுற முடியாது. தப்பு செய்தா தண்டனை அனுபவின்னு சொல்லவும் முடியாது. அடுத்து உன்னோட நல்லது என்னன்னு யோசிப்பேன். உனக்கு என்ன இஷ்டமோ அது மாதிரி நீ இருந்துக்கோன்னு சொல்லுவேன்னு சொல்லுவா.

அம்மாவோட பேச்சுக்கள் எப்பவுமே என்னை எந்த சூழ்நிலையிலும் தயார் படுத்திக்குற மாதிரி தான் இருக்கும். எல்லாரும் ரொம்ப திமிர் பிடிச்சவன்னு அவள சொல்லுவாங்க. ஆனா என் அம்மா அத்தன அன்பானவ. கற்புங்கறது மனசுல இருக்கணும். ஒருத்தன நேசிச்சா அவன தவிர வேற யாரையும் மனசார கூட தொட நினைக்கக் கூடாதுன்னு சொல்லுவா. அதே நேரம் ஏமாற்றப் படுறோம்னு தெரிஞ்சா அவன தூக்கியெறியவும் தயங்கவே தயங்கக் கூடாதுன்னு சொல்லுவா.

அம்மாவ பொருத்தவரைக்கும் நம்மோட நிம்மதிய யார் பறிக்க நினைக்குறாங்களோ அவங்கள ஜெய்க்கவே விடக் கூடாது. அவங்களே நிம்மதியா இருக்குறப்ப, நாம இன்னும் அதிக நிம்மதியோட இருக்கணும்ன்னு சொல்லுவா.

இதே அம்மா குடும்பத்துக்காக நிறைய அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கா. நிறைய விட்டுக் கொடுத்தல்கள். அத்தனை அன்பு. ஆனா ஒரு பொண்ணுனா இப்படி தான் இருக்கணும்ன்னு அவளுக்குள்ள நிறைய தீப்பொறி உண்டு. அத எல்லாம் எனக்கு ஊட்டி வளர்த்துருக்கா.

அடுத்து இந்த ஆண் பெண் உறவுங்குற தலைப்புக்கு வர்றேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருக்குற அன்னியோன்யம் நான் பாத்து பாத்து வளர்ந்த ஒண்ணு. எல்லா ஆம்பளைங்க மாதிரி என் அப்பா மூஞ்சிய எப்பவும் வெறப்பா தான் வச்சிருப்பார். ஆனா அவரையும் அப்பப்ப சிரிக்க வைக்குற திறமைசாலி என் அம்மா.

அப்பா எப்பவும் வெளிலயே தான் சுத்திட்டு இருப்பார். ஆனா அம்மாவோட பீரியட்ஸ் டைம்ல மட்டும் அப்பா அம்மாவ விட்டு நகர மாட்டார். அவளுக்கு நாப்கின் எடுத்து குடுக்குறதுல இருந்து, வலில துடிக்குறப்ப கைய புடிச்சுட்டு இருப்பார். அவ வயித்துல வெந்நீர் ஒத்தடம் குடுப்பார். நானும் தம்பியும் இத எல்லாம் எட்ட நின்னு பாத்துகிட்டே இருப்போம். அப்பப்ப தம்பியையும் வெந்நீர் எடுத்து தரவும் நாப்கின் எடுத்துக் குடுக்கவும் துணைக்கு கூப்ட்டுப்பார்.

நான் வயசுக்கு வந்த பிறகு எனக்கு நாப்கின் வாங்கிட்டு வந்ததெல்லாம் அப்பா, தம்பி, அப்புறம் என் பிரெண்ட்ஸ், அதுவும் பசங்க தான். எந்த விதமான தயக்கமும் இல்லாம நாப்கின் வாங்கி கேக்குற துணிவு எனக்கு என் அம்மா கிட்டயிருந்து தான் வந்துச்சு. இது எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்குற இயற்கை நிகழ்வு. இத மறைச்சு வைக்கனும்னு எந்த அவசியமும் இல்லன்னு சொல்லுவா.

அதனால தானோ என்னவோ, கடுமையான ரெத்தப்போக்கும் வயித்து வலியும் எனக்கு இருந்தா, அப்பாவ தவிர யாரையும் நான் பக்கத்துல விட மாட்டேன். எனக்கு என் உடம்பை மத்தவங்க பாத்தா ஒரு மாதிரி இருக்கும். அது பொண்ணா இருந்தாலும் சரி. ஆனா அப்பா கிட்ட அந்த கூச்சம் வர்றதில்ல. எனக்கு அந்த நேரத்துல பணிவிடை செய்றது எல்லாம் அப்பா தான். பாட்டி இருக்காங்க, ஆனா அவங்களையும் நான் என் ரூமுக்குள்ள விட மாட்டேன். எனக்கு வெந்நீர் ஒத்தடம் குடுத்து, சில நேரம் கீழ சிதறி கிடக்குற ரத்தக் கட்டிய கூட வாரி பாத்ரூம்ல போடுவார் அப்பா. தம்பியும் என்னோட ரூம் எல்லாம் நல்லா கழுவித் தருவான். அதென்னவோ அவங்க கிட்ட எனக்கு வர்ற கம்போர்ட் வேற யார் கிட்டயும் வர்றதில்ல.

இத எல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, பொண்ணுங்க எல்லாரும் மனுஷ ஜென்மமே இல்ல, அவங்க அடிமைங்கன்னு நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க. பொண்ணுங்கள அடிமைப் படுத்துறது தான் தன்னோட ஆண்மைய நிரூபிக்குற வழின்னு திமிறிக்கிட்டு திரியுறாங்க. அவங்களுக்கு சொல்லணும்ல... என் வீட்டு ஆண்கள பாருங்கடான்னு...

ஒரு பொண்ணு ரெண்டு ஆண்கள காதலிச்சா அவ பேரு ப்ராஸ்ட்டிடுயூட்... அதுவே ஒரு பையன் பண்ணினா அவன் ப்ளே பாய்... காலை சுத்தின பாம்பு நான், என்னை பத்தி உனக்கு நல்லாவே தெரியும்னு மிரட்டுறான். அப்படினா அவன் கிட்ட மாட்டிகிட்டு அந்த பொண்ணு என்ன கஷ்டப்பட்டுருக்கணும்? எல்லாம் பேசித் தீர்த்து அடுத்த நாளே என் கூட படுத்தான்னு சொல்றான். அப்படினா எப்படி மிரட்டி அவள வர வச்சு அவள கட்டாயப் படுத்தியிருப்பான். இதோட நம்மள விட்டுவான்னு மிரண்டு கூட அந்த பொண்ணு போயிருக்கலாம். இந்த மாதிரி விஷயங்கள்ல பசங்க ஈடுபட்டா இன்னும் அவன் ஹீரோ தான். ஆனா சமூகத்துக்கும் வீட்டுக்கும் பயந்து இந்த கால சுத்தின பாம்பு சொல்றத எல்லாம் கேட்டு நடக்குற பொண்ணுங்க ப்ராஸ்ட்டிடுயூட்...

அடப் போங்கப்பா.... இவங்க எல்லாம் சொந்த வீட்டுக்குள்ள அவங்க வீட்டுப் பொண்ணுங்க கஷ்டப்பட்டாலும் வக்கிரமா தான் பேசுவாங்க.... மனசே இல்லாத ஜென்மங்க...

நிறைய எழுதிட்டேன்னு நினைக்குறேன். சில பேரு என்னடா இந்த பொண்ணு இத எல்லாம் எழுதுறாளேன்னு நினைக்கலாம். ஆனா இந்த மாதிரியான விசயங்கள ஆரோக்கியமா விவாதிக்காம அவள கொல்லணும் அவன வெட்டணும்ன்னு பேசுறவங்கள பாக்குறப்ப எல்லாம் ஆத்திரம் ஆத்திரமா வருது. ஒவ்வொருத்தரும் அடுத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நம்ம மனசுல இருக்குற அழுக்கை நீக்கினா போதும். ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான்னால வரும்...


.

Friday 24 April 2015

எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்க மாட்டோமா என்ன?



சில நேரம் எல்லாமே முடிஞ்சிடுச்சு, வாழ்க்கையே இருண்டுடிச்சுங்குற மாதிரியான ஒரு சூழ்நிலை நமக்கு வரும்...

ஆனா அதெல்லாம் எதுவுமே நிஜமில்ல... அந்த நிமிடத்த மட்டும் கடந்துட்டா ஒரு வெளிச்சம் கண்டிப்பா நம்ம கண்ணுக்கு தெரியும்...

...................................

நாலு நாளா அப்படி தான் ஒரு சூழ்நிலைல இருந்தேன். என்னை சுத்தி நடக்குற விஷயம் எல்லாமே தப்பா தோணிச்சு. என்ன பண்ணினாலும் அடி மேல அடி வாங்கின மாதிரி இருந்துச்சு... வாய்விட்டு புலம்பலாம்ன்னு தான் பாத்தேன். புலம்பல்னா வேறெங்க, இங்க உங்க கிட்ட தான்... அப்ப தான் கார்த்திக் சொன்னார், இங்க பாரு, உன் எழுத்தைப் பாத்து உற்சாகம் அடையுறவங்க இங்க நிறைய பேரு. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன் போஸ்ட் பாத்துட்டு நானும் இப்படி இருப்பேன், என் குழந்தைய இப்படி வளர்ப்பேன்னு சொல்றவங்க இருக்காங்க. அவங்கள எல்லாம் உன் எழுத்தால நீ ஏமாத்திடாத. நீ சோகமா இருந்து அவங்கள கஷ்டப்படுத்திடாதன்னு... சரி அப்படி என்ன கஷ்டம் வந்துடுச்சு எனக்கு?

ஒண்ணு இல்ல, அடுக்கடுக்கா தொட்டதுக்கு எல்லாம் பிரச்சனை தான்... அதுல முக்கியமா மூணு பிரச்சனைகள்...

...................................

என்னோட கைட் கொஞ்சம் சீனியர் ஸ்டாப். அதனால அவங்களுக்கு குடுக்குற மரியாதைய அவங்க ஸ்டுடென்ட்டான எனக்கும் குடுப்பாங்க. என்னால என்னோட காலேஜ்ல சில முடிவுகள் எடுக்க முடியும். ஸ்டுடென்ட்ட கட்டுபடுத்துறதுல இருந்து, யார் எந்த க்ளாஸ்க்கு பாடம் எடுக்கப் போகணும்ங்குற வரைக்கும் சில வரைமுறைகள வரையறுக்கவும் முடியும்.

இப்படி பட்ட சூழ்நிலைல தான் என் கைட் இங்க இருந்து ரிலீவ் ஆகி கேராளவுல இருக்குற கொல்லத்துக்கு போறாங்க. என் கைட் இங்க இருந்து ரிலீவ் ஆகுறதால காலேஜ்ல என் அதிகாரம் பறி போனது மாதிரி தோணிச்சு... தோணுறது என்ன தோணுறது, அப்படி தான் ஆகிப் போச்சு. கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமா நான் ஆட்சி பண்ணிட்டு இருந்த லேப் விட்டு முதல்ல காலி பண்ண சொன்னாங்க. அடுத்து எனக்கு கட்டளை போட வேற ஆட்கள் வந்தாங்க... இதனால இன்னியோட காலேஜ் போறத நிறுத்திடலாம்ன்னு முடிவு பண்ணினேன்.

அடுத்து குடும்பத்துல ஒரு பிரச்சனை. இதுல நான் தலையிட்டு அதனால எல்லாமே சுபமா போயிட்டு இருந்த பாதை விலக ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு எல்லாமே என் கை விட்டு போன மாதிரி ஒரு பீலிங். ஐயோ தெரியாம இப்படி பண்ணிட்டோமேன்னு ஒரு குற்ற உணர்வு. துரோகம் பண்ணிட்டதா கூட ஒரு கில்டி பீலிங்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இங்க மந்தாகினியும், யுவாவும் கூடு கட்டி முட்டை போட்டு வச்சிருந்தாங்க. ரெண்டு நாள் முன்னாடி கூட்டை எல்லாம் கலைச்சுப் போட்டதோட இல்லாம கூட்டுல போய் அடைகாக்காமலும் இருக்க, ஒவ்வொரு நாளா ஆசை ஆசையா குஞ்சு பொறிக்குற நாளை எண்ணிட்டு இருந்த நான் திடீர்னு கூட்டுல இருந்து அந்த முட்டைய எடுத்து வெளில ஒரு டப்பாவுல போட்டு மூடி தூரமா வச்சுட்டேன். நேத்து காலைல எழுந்து காலேஜ் கிளம்புற நேரத்துல என்னமோ தோண, அந்த டப்பாவ தொறந்து பாத்தா உள்ள முட்டை பொறிச்சு குஞ்சு நெளிஞ்சுட்டு சாகுற நிலைமைல இருக்கு. அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமேன்னு பதறிட்டே குஞ்சுக்கு ஒரு சொட்டு டானிக் எடுத்து வாய்ல குடுத்து உள்ள வச்சுட்டு காலேஜ் வந்துட்டேன்.

எத்தனையோ நாள் ஆச ஆசையா எதிர்பாத்துட்டு இருந்தது, இப்ப என் கையால அது சாகுற நிலைமைக்கு தள்ளி விட்டுட்டேன். மந்தாகினியும், யுவாவும் போய் எட்டிப் பாத்து அதை கொத்துன மாதிரி இருந்துச்சு. போச்சு, குஞ்சு அவ்வளவு தான்னு கண்ணு நிறைய கண்ணீரோட காலேஜ் கிளம்பி போயிட்டேன். அங்கயும் போய் அழுதுட்டே இருந்தேன்...

...............................................................

மொத்தமா இது எல்லாமே சேர்த்து என்னை ஒரு மிகப் பெரிய அழுத்தத்துக்குள்ள தள்ளிகிட்டு போச்சு. அப்ப தான் திடீர்ன்னு தோணிச்சு. காலேஜ்ல என் கைட் இல்லனா நான் அவ்வளவு தானா? நான் ஏன் காலேஜ் போறத நிறுத்தனும்? நானும் தான் இதே காலேஜ்ல அதிகாரத்தோட இருந்துருக்கேன், ஆனா யாரையும் ஹர்ட் பண்ற மாதிரி கட்டளைகள் போட்டதே இல்ல. அப்படி இருக்க, என் சுயத்தை சீண்ட இவங்க யாரு?

நேரடியாவே என்னோட ஹச்.ஓ.டி கிட்ட போனேன். மேடம், எனக்குன்னு சில ப்ரின்சிபில்ஸ் இருக்கு. என்னால இப்படி தான் இருக்க முடியும்ன்னும் சில விஷயங்கள் இருக்கு. என்னால மாடிப் படி எல்லாம் சும்மா சும்மா ஏறி இறங்க முடியாது. சரியா காலேஜ் அட்டென்ட் பண்ண முடியாது. நான் என்னோட லேப் வொர்க் முடிச்சுட்டேன். எனக்கு உங்க ஹெல்ப் வேணும்னா மட்டும் நான் காலேஜ் வரேன், இல்லனா போய்டுறேன்னு சொன்னேன்.

எங்க ஹச்.ஓ.டி சில பேர நோட் பண்ணி வச்சிருக்குற லிஸ்ட்ல நானும் ஒருத்தி. என்ன மீட்டிங் போட்டாலும் அது என்ன இது என்னன்னு கேள்வி கேட்டே டென்சன் ஆக்கிடுவேன். ஆனா என்ன பங்சன்னாலும் என்னைக் கூப்பிட்டு தான் லீட் பண்ண சொல்லுவாங்க. நான் போடுற கண்டிசன்ஸ்க்கு முதல்ல முறைச்சாலும் ஓகே சொல்லுவாங்க. அப்படின்னா என்னோட தேவை என்னன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

அமைதியா என்னைப் பாத்த ஹச்.ஓ.டி, லேப் இன்னொருத்தங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணத் தான் செய்யணும். அது ரூல்ஸ். ஆனா நீங்க உங்க இடத்துல இருந்துக்கலாம். இனி நான் உங்களுக்கு லேப் அண்ட் க்ளாஸ் அசைன் பண்ணித் தரேன், அதப் பாருங்கன்னு சொன்னாங்க... இப்போதைக்கு ஒரு பதினஞ்சு நாள் லீவ். அதனால அடுத்து என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிக்கலாம்னு இப்ப முடிவு பண்ணியிருக்கேன். கண்டிப்பா எதோ நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

இங்க, குடும்ப விசயத்த எடுத்துக்கிட்டா எனக்கு ஆறுதல் சொன்னவங்க ஒரு விஷயம் சொன்னாங்க, இவ்வளவு நாள் ஒரு போலியை நம்பி பாசத்த காட்டுற நிலைமைல இருந்தோம். ஆனா இன்னிக்கி நீ பண்ணின செயலால தான் உண்மை என்னன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. சில விடை தெரியாத கேள்விகளுக்கு விடையும் தெரிஞ்சுது. அதனால அழவே அழாதன்னு சொன்னாங்க. அப்ப தான் தோணிச்சு, தப்பு பண்றவங்க ஆங்காரமா இருக்குறப்ப, நல்லது பண்ணணும்ன்னு நினச்ச நாம ஏன் குற்ற உணர்ச்சில உழன்றுட்டு இருக்கணும்? ஏன் நமக்குன்னு இருக்குற உறவுகள அடுத்தவங்களுக்கு விட்டுக் குடுக்கணும்? ஆமா இப்ப தெளிவாகிட்டேன், உறவுக்குள்ள குழப்பத்த உண்டு பண்ண பலரும் வருவாங்க, ஆனா எல்லோரும் தெளிவா இருக்குற வர அந்த உறவுகள எக்காரணத்த கொண்டும் மத்தவங்களுக்கு விட்டுக் குடுக்க வேண்டிய அவசியமே இல்ல...

அடுத்து, வீட்டுக்கு வந்தா குஞ்சு உயிரோட இருந்துச்சு. மந்தாகினியும் யுவாவும் கூட்டை மறுசீரமைப்பு பண்ணிட்டு குஞ்சுக்கு சாப்பாடும் ஊட்டிக்கிட்டு இருந்தாங்க... முடிவு எப்படியாயிருந்தாலும் அவங்களோட வாழ்வியல் முறைப் பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சிகிட்டேன். இனி இது மாதிரியான ஒரு தப்ப பண்ணிடக் கூடாதுங்குறதுல தெளிவாயிருக்கேன்.

..........................................................................

வாழ்க்கை இப்படித் தான்.... ஒரே நேரத்துல பல கஷ்டங்கள குடுத்து நம்மள அசைச்சுப் பாக்கும். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்... எத இழக்குறோமோ இல்லையோ வைராக்கியத்த மட்டும் இழந்துடவே கூடாது...



எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்க மாட்டோமா என்ன?

Wednesday 22 April 2015

வண்ணங்கள் நிறைந்த நாட்கள்



எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..

மரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.

இதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்... செல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..

அம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.

கூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...

அதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.

அவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழகாகப் படுகிறதோ என்னவோ...

அன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...

அன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...

இப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே! உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..

நண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.

விம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...

அந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..

அந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள். கொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...

......................................................

நான் கொடுத்த அத்தனை இடைஞ்சல்களையும் சிரமமேற்று சின்ன கன்னச்சுழிப்புகளைக் கூட உதிர்க்காமல் புன்னைகையோடு என் கனாக்களுக்குக் காகிதத்தில் வடிவம் கொடுத்த மங்காத்தாவுக்கு...

என் உலகங்களின் ஒவ்வொரு அசைவிலும் சியர்ஸ் சொல்லில் தட்டிக்கொடுத்து மொத்தக் கவிதைகளையும் படித்து அப்படியே தன் உள்ளுணர்வுகளை வார்த்தைகளால் சிந்தி அன்புக்கு அன்பு செய்த செல்வா அண்ணாவுக்கு...


எனக்கான தேசத்திற்குள் என் அன்பை அப்படியே ஏற்றுக்கொண்டு துளியும் களங்கமற்று எனக்கே திருப்பி அளிக்கும் தமிழரசி அக்காவுக்கு...

என்னுடைய பேரன்பு...



என்னைப் பாராட்டத் தெரியாத என்னை நேசிக்கத் தெரியாத என் ப்ரியங்களைப் புரிந்துகொள்ளாத இவ்வளவு ஏன் என் கோபங்களைக் கூட குழந்தைத்தனமாகக் கொள்கிற...

கார்த்திக்கு ஓங்கி மண்டமேலே ரெண்டு கொட்டு....





-இப்படிக்கு பட்டர்ஃப்ளை


(என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புத்தகத்துல வர்ற என் உரை) 





.

Saturday 18 April 2015

அவள் பெயர் ப்ரியம்வதனா



என்னடி, ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் போவேன். நிம்மதியா மனுசனால ஒரு படம் கூட பாக்க போவ முடியல, எப்பப்பாரு உன்னையே தூக்கி வச்சிட்டு இருக்க முடியுமா?

உனக்கென்ன பார்த்தி, உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் இருக்கலாம், ஆனா நான் உன்னை மட்டும் தான நினச்சுட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா சொல்லு...

உன்னை யாருடி என்னையே நினச்சுட்டு இருக்க சொன்னது? நானா உன்னை கட்டுப்படுத்தினேன், நானா உன்னை யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னேன்.

ஆனா எனக்கு வேற யார் கூடவும் பேசத் தோணலயே”

“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“நான் கேக்காமலே நீ தான சொன்ன, இன்னிக்கி முழுக்க என் கூட இருக்கப் போறேன்னு”

“சொன்னேன் தான், ஆனா அவங்க கூப்ட்டாங்க, மறுக்க முடியல”

“அப்போ ஏன் நான் மட்டும் உனக்கு மறந்து போய்டுறேன்?”

“எதுக்கு திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க, எனக்கு தூக்கம் வருது, தூங்கப் போறேன். குட் நைட்”

பட்டென்று அவளோடலான மொபைல் உரையாடலை துண்டித்துக் கொண்டான் பார்த்தி...

பிரியம்வதனா முகம் இறுகி போயிருந்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் அவளுக்கு புதிதில்லை தான். எப்பவுமே பழகிப் போனது தான். எப்பொழுதெல்லாம் அவளோடு கூடவே அவன் இருக்க வேண்டுமென்று நினைக்குறாளோ அப்பொழுதெல்லாம் அவன் அவளை விட்டு விலகியே இருந்திருக்கிறான். இதற்காக ஒட்டு மொத்த பழியையும் அவன் மேல் தூக்கிப் போட்டு விட முடியாது தான், அப்படி போட நினைப்பது கூட தப்பு. சூழ்நிலைகள் அவளையும் அவனையும் எப்பவுமே கைதிகளாகவே வைத்திருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

ஆனாலும் அன்று அவனாகவே அவளிடம் வந்தான். “இன்று முழுக்க உன்கூடத் தான் இருக்கப் போகிறேன்” என்றான். அவளுக்கும் அவன் தேவையாய் இருந்தான். சோர்ந்து போயிருந்ததாலும் வலிகளால் துவண்டிருந்த காரணத்தாலும் அவன் அருகில் இருந்தால் அத்தனையையும் மறக்கலாம் என்றிருந்தாள்.

அழைத்துச் செல்ல வருவான் என்று காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் தூக்கம் தழுவிய நேரத்தில் தான் அவன் அவளை அழைத்திருந்தான்.

காலம் கடந்து அவளிடத்தில் ஓடி வந்தவனை அவள் திட்டியிருக்க கூடாது தான். கோபத்தில் வார்த்தைகளை விட்டிருக்க கூடாது தான். ஆனாலும் நடந்தது நடந்தே விட்டது. வார்த்தைகள் தடித்து விடக் கூடாதென்ற பயத்தில் அவன் அந்த நிமிடம் அவளை புறக்கணித்து சென்று விட்டான்.

இன்று என்று இல்லை, கொஞ்ச நாளாவே அவள் மனதுக்குள் ஒரு விஷயம் தொண்டையை அடைத்துக் கொண்டேயிருக்கிறது. அவன் நண்பனாய் இருக்கையில் எத்தனை விட்டுக் கொடுத்தல்கள் இருந்திருக்கிறது. ஏன் காதலில் ஆரம்பத்தில் அவர்கள் ஊடல் இப்படி தான் ஆரம்பித்திருந்தது.

“நான் இருக்குறப்பவே வர்ற போற பொண்ணுங்கள எல்லாம் சைட் அடிக்குற, தலை வலிக்குது, கால் வலிக்குதுன்னு அப்படியே என்னை கழட்டி விட்டுட்டு அவங்க கூட கடலப்போட போய்டுற”

“அழகா பொறந்துது என் தப்பா...”

“நீயாடா அழகா இருக்க? அப்படியே ஹிப்போபோட்டாமஸ் மாதிரி இருக்க. அவங்க எல்லாம் சைட் அடிக்க என் புருஷன் தான் கிடைச்சானா?”

“உனக்கு பொறாமை டி”

“எனக்காடா பொறாமை. எருமை. மூஞ்சப் பாரு, சகிக்கல, ஆனாலும் அழகா தாண்டா இருக்க”

அப்புறம் என்ன, கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்ன்னு ரெண்டு பக்கமும் பாட்டு சத்தம் கேக்க ஆரம்பிச்சுடும்.

“இருந்தாலும் அவனுக்கு ஒரு குட் நைட் சொல்லல. கூப்ட்டு சொல்லிடுவோமா?” ப்ரியம்வதனா மனசுக்குள் பெரிய பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

“அட, இதென்ன நமக்கு புதுசா?” என மனதை சமாதானப் படுத்தியப் படி அவன் மொபைலை தொடர்புக் கொண்டாள். அந்த பக்கம் ரிங் போய்ட்டு இருந்தது. இரண்டு மூன்று புறக்கணிப்புகளுக்கு பின்

“ஹல்லோ”

“ஏண்டா நான் குட் நைட் சொல்றதுக்குள்ள வச்சிட்ட”

“என்னை தூங்க விடக் கூடாதுன்னே முடிவு பண்ணிட்டியா?”

எரிச்சலோடு அவன் விலகிப் போவதை கவனித்து உள்ளுக்குள் நொறுங்கி அழ ஆரம்பித்தாள்.

“உனக்கு என்னை தவிர வேற எல்லாருமே வேணும் பார்த்தி. அவங்களுக்காக என்னை எப்பவுமே விட்டுக் குடுத்துடவ இல்ல”

“நீ ஏன் உன்னை அவங்களோட கம்பேர் பண்ணி உன்னை நீயே தாழ்த்திக்குற?”

“நீ ஏன் என்னை தவிர அவங்கள எல்லாம் உயர்த்தி பிடிச்சு கொண்டாடிக்குற?”

“அவங்க எல்லாம் ஒண்ணுமே இல்ல தெரியுமா எனக்கு?”

“ஆனா நான் தான் உனக்கு எல்லாமேன்னு தெரியுமா உனக்கு?”

“இதென்னடி கேள்வி? கேள்வியே தப்பா இருக்கு?”

“இல்ல அப்படி தெரிஞ்சிருந்தா ஒண்ணுமே இல்லாத அவங்களுக்காக எல்லாமுமா இருக்குற என்கிட்ட இப்படி எடுத்தெரிஞ்சி பேசிட்டு இருக்க மாட்ட”

உனக்கு பைத்தியம் தாண்டி புடிச்சிருக்கு. நான் போறேன். நாளைக்கு பேசுறேன். குட் நைட்.

படீர்னு மூஞ்சுக்கு நேரே கதை இழுத்து மூடினா எப்படி இருக்கும். பிரியம்வதனா அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள். சமீப காலமாவே அவளுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது தான்...

“பார்த்தியோட வாழ்க்கைல நான் யார்?”

“நீ தாண்டி எல்லாமே”ன்னு அவன் கண்டிப்பா சொல்லுவான் தான். இப்படி ஒரு கேள்வியை தெரிந்து கொண்டே கேட்க அவளுக்குள் எத்தனை குரூரம் இருக்கணும் என்று மனசுக்குள் மருகி தான் போவான். ஆனாலும் அவளுக்கு அந்த கேள்விக்கான பதில் தேவையாயிருந்தது.

ஏதோ ஒரு ஆக்ரோசம் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

“எல்லாரையும் அரவணைத்துப் போகிறான், தட்டிக் கொடுக்கிறேன் என்று அனைவரையும் பாராட்டித் தள்ளுகிறான். ஏன், நான் அதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவளாகி தான் போனேனா? காதல் கிண்டல்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறான், அதுவும் எனக்கு பயந்து தான் இருக்க வேண்டும். எனக்கு என்ன கொறைச்சல்? என்கிட்ட எந்த திறமையுமே இல்லையா? நான் ஏன் இப்படி இருக்கேன்?

கொஞ்சிக் கொண்டே இருக்கும் காதல்களில் எப்பவுமே அவளுக்கு உடன்பாடு இருந்ததே இல்ல. ஏன் காதலிக்குறவங்க அவங்க இணையை சின்னதா பாராட்டிக்க கூடாதா, தட்டிக் கொடுக்க கூடாதா?

கோபம் வெடிக்க ஆரம்பித்தது. “நான் ஒண்ணும் தியாகி இல்ல, நான் எதுக்கு இப்படியே இருக்கணும்? எனக்கு இதையெல்லாம் தாண்டி எதுவோ தேவைபடுதுங்குறத அவனுக்கு எப்படி புரிய வைக்குறது?”

அவனோடு கதை பேசிக் கிடந்த நாட்களும், வாக்குவாதங்கள் புரிந்த நாட்களும், சந்தோசமாய் பாடித் திரிந்த நாட்களும் திரும்ப திரும்ப அவள் நினைவுகளில் மோதத் துவங்கி விட்டது. எத்தனையோ தர்க்கங்கள், படித்த கதைகள், பார்த்த நிகழ்வுகள் என்று நண்பர்களோடு அவளையும் முன்னிறுத்தி அவன் பகிர்ந்து கொண்டது ஏராளம். இப்பொழுதோ அதையெல்லாம் பேசி மகிழ புதிது புதிதாய் தோழர்கள், தோழிகள். இவள் காதலுக்கு மட்டுமேயானவள்ன்னு முடிவே கட்டிவிட்டானா என்ன?

“இந்த பாழாய்ப்போன வெற்றுக் காதலால நானும் ஒரு சராசரி பொண்ணா மாறித்தான் போனேனோ? அப்படி மாறிட்டதால இவ இனிமேல் என் தனி சாம்ராஜ்யத்துள் நுழைய தகுதி இல்லாத அந்தப்புர மகாராணின்னு அவனே முடிவு பண்ணி தள்ளி வச்சிட்டானோ. அப்படி தள்ளி வைக்குற அளவு நான் உணர்ச்சிகளே இல்லாத வெற்று காகிதம் இல்லையே”

இவன் ஒருத்தனின் புறக்கணிப்பின் பெயரால் அத்தனை பேர் மேலேயும் கோபம். “ஆமா, என்னை விட அவங்க தான் அவனுக்கு ஒசத்தி”ங்குற இயலாமை. அதனால ஏற்படுற ஆங்காரம், ஆக்ரோசம். இவனால் அத்தனை பேரும் அவளுக்கு கெட்டவர்களாகி போனார்கள்.

யோசிக்க யோசிக்க தலையே வெடிச்சிடும் போல இருந்தது அவளுக்கு. ராத்திரி முழுக்க தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விட்டு காலைலயே காரை எடுத்து வேக வேகமாக அவன் வீடு சென்று கதவை தட்டினாள்.

“டொக் டொக்”

கதவை திறந்தவன் ஆச்சர்யமானான்.

“என்ன இது, இவ்வளவு காலைல வந்துருக்க. நானே உன்னைப் பாக்க வரணும்னு நினச்சிட்டு இருந்தேன். சாரிடா, நேத்து கொஞ்சம் கோபமா பேசிட்டேன். மன்னிச்சுடு”

“பார்த்தி, நான் வந்தது என்னைப் பத்தி பேசுறதுக்கு”

“இதென்னது, புதுசா இருக்கு, நான் நீன்னு பிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்க. அப்போ நான் வேற நீ வேறயா?”

“இது நீ வேற நான் வேறங்குற மாதிரியான விஷயம் இல்ல பார்த்தி”

“அப்புறம் என்ன விஷயம்?”

“எனக்கு எல்லாமே வெறுமையா தோணுது பார்த்தி, எனக்குன்னு எதுவுமே இல்லாத மாதிரி”

“உனக்கு நான் எதுவுமே செய்யலன்னு சொல்றியா வதனா?”

“எனக்கு பதில் சொல்லத் தெரியல பார்த்தி. எனக்கு எல்லாமே நீயா தான் இருந்துருக்க, இருக்குற. அப்புறம் நீ எனக்கு எதுவுமே செய்யலன்னு நான் எப்படி சொல்ல முடியும்? ஆனா என்னவோ ஒரு வழிப் பாதையாவே இருக்குறதா எனக்கு தோணுது. இது ஒரு வேளை என்னோட பிரம்மையா கூட இருக்கலாம், ஆனா தோணுது. பிரிச்சு பாக்காத அந்த இடத்துல நீ மட்டும் தான் கண்ணுக்கு தெரியுற, என்னை காணவே காணோம்”

“நீயும் எனக்கு எல்லாமுமா இருந்துருக்க. வேற யாரா இருந்தாலும் இப்படி செய்ய மாட்டாங்க”

“இங்க பாரு பார்த்தி, உனக்கு நான் யாரு, உனக்காக நான் என்ன செய்தேன்னு எல்லாம் கண்டிப்பா கேக்க மாட்டேன், காரணம் எல்லாமே முழுக்க முழுக்க காதல், காதல் மட்டும் தான்னு எனக்கு தெரியும். ஆனா அதே காதலால இப்ப எனக்கு பெரிய மன அழுத்தம் இருக்கோன்னு தோணுது”.

“இப்போ என்ன பண்ணனும்னு நினைக்குற?”

“உன் காதல் என்கிட்ட இருக்குறப்போ அது மட்டும் தான் என்கிட்ட இருக்கு. வேற எதுவுமே இல்ல. ஒரு வேளை அந்த காதல நான் விட்டுட்டா? இந்த காதல தவிர வேற எல்லாமே எனக்கு கிடைச்சிடும்ல”

“அப்படி எது கிடைச்சாலும் அதுல சந்தோசம் இருக்காதுடி”

“பாக்கலாம் பார்த்தி. கொஞ்ச நாள் கண்டிப்பா கஷ்டப்படுவேன், நான் என்னை மாத்திக்க முயற்சிப் பண்றேன். என்னால முடியும்னு நம்பிக்கை இருக்கு. எனக்குன்னு நான் வாழணும்னு ஆசையா இருக்கு”.

“அந்த வாழ்க்கைய என் கூட வாழலாம்ல”

“நீ என் லைப்ல வந்ததுக்கு அப்புறம் தான சின்ன சின்ன பாராட்டுக்கு எல்லாம் ஏங்கிப் போக ஆரம்பிச்சுது மனசு. நீ என்னைத் தவிர எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடும் போது அத பாத்து நான் ஏன் தாழ்வு மனப்பான்மைல கூனிக் குறுகி போகணும்? எனக்கு என்ன கொறைச்சல் பார்த்தி. உனக்குத் தெரியுமா? உன்னைத் தாண்டிய என் உலகத்துல என்னை எல்லாரும் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. நான் அவங்களோட ராஜ குமாரி. பிரியம்வதனா நினச்சா சாதிக்காம விட மாட்டான்னு அவ்வளவு பெருமையா பேசுவாங்க. அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் என் வாழ்க்கைல நீ வரதுக்கு முன்னால சந்திச்சதே இல்ல பார்த்தி”.

“வதனா”

“கொஞ்ச நாளாவே என் மனசு ரணமா காயப்பட்டு துடிக்குரத உனக்கு நான் எப்படி புரிய வைப்பேன் பார்த்தி? என்னோட மனநிலைல இருந்து என்னிக்காவது யோசிச்சு பாத்திருக்கியா?”

நான் என்னடி பண்ணுவேன்? என் இயல்பே அது தான, நான் மாறிட்டா அப்புறம் நான் நானாவே இருக்க மாட்டேனே”

“அதுவும் எனக்கு தெரியும், நீ மாறினாலும் உன்னை எனக்கு பிடிக்காம போய்டும். நீ மாறாத, ஆனா எனக்கு உன்னை தாண்டிய எதுவோ தேவையா இருக்கு. என்னை போக விடேன்...”

சொல்லும் போதே குரல் கம்ம ஆரம்பித்தது. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். “இல்ல, நான் பலவீனமாவள்ன்னு அவன் நினச்சிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் கண்ணீரை அவன் முன்னாடி சிந்திடக் கூடாது”.

கவனத்தை திசைத் திருப்ப சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்து மேஜை மேல் அடுக்கி வைத்தாள். கடகடவென்று சமையலறை சென்று வெந்நீரை கொதிக்க வைத்தாள். டீத்தூள் எடுத்து திறந்தவள் அப்படியே அதை ஓரமாய் வைத்து விட்டு வெறும் வெந்நீரை ஆற்றிக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“இங்கப் பாரு, இனிமே நீ யார வேணா சைட் அடிச்சுக்கோ, எவ கூட வேணா கடலை போட்டுக்கோ. உன்னை கேக்க யாருமே இருக்க மாட்டாங்க. நான் போறேன். எப்போ நீ எனக்கு தேவைன்னு நினைக்குறேனோ அப்ப நானே வரேன்”.

“அதுக்கு முன்னாடி வேற யாராவது என்னை கொத்திட்டு போய்டுவா”

வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தவள் ஒரு கணம் நின்றாள். அப்படியே திரும்பி அவன் சட்டையை பிடிச்சு

“எனக்கு தெரியும், என்னைத் தவிர வேற எவளாலும் உன் கூட குடும்பம் நடத்த முடியாது”

“அதான் திமிரு”

விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். மனதுக்குள் வைராக்கியம் உறுதியாய் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தது


“வது, திரும்பிராத வது. வது திரும்பவே திம்பிராத, வது திரும்.....”




.

Friday 17 April 2015

வெள்ளிக்கிழமை - முதல் படி, முதல் பேச்சு



அன்னிக்கு ஒரு நாள், வெள்ளிக்கிழமை... முதல் முதலா நான் சீப் கெஸ்டா போன நாள்...

ஆரம்பத்துலயே சொல்லியிருந்தாங்க, சின்ன டிபார்ட்மென்ட், நீங்க ரொம்ப சிம்பிளா பேசினா போதும்னு...

ஆனாலும் நமக்கு வர்ற ஆர்வம் இருக்கே... அப்பப்பா.... ராத்திரி முழுக்க நல்லா தூங்கிட்டு காலங்காத்தால ஒன்பது மணிக்கு எந்திருச்சு அடடா, என்ன பேசப் போறோம்னு இன்னும் பவர் பாயின்ட் ரெடி பண்ணலயேன்னு பதறி கடகடன்னு குட்டி குட்டியா ஹிண்ட்ஸ் எடுத்து, கலர் கலரா படம் போட்டு பத்து மணிக்கு அத பென்-ட்ரைவ்ல காப்பி பண்ணிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன்...

மாமாவ கூப்ட்டுட்டு வீட்டை விட்டு நான் கிளம்புறப்ப மணி பத்தே முக்கால். பதினோரு மணிக்கு வந்துருங்கன்னு சொன்னவங்க முன்னால பதினொண்ணே காலுக்கு டான்னு போய் நின்னேன். ப்ரோக்ராம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிஷம் ஆகும், நீங்க இப்படி உக்காருங்க மேடம்னு பிரின்சிபால் ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.

அவர் கிட்ட பேசிட்டு இருக்கும் போது, அப்பா யாரு என்னன்னு விசாரிச்சு கடைசில அப்படினா சுத்தி வளச்சு நாம சொந்தக்காரங்கன்னு முடிச்சுட்டார்... அவ்வ்வ்வ்...

ஒரு வழியா ஆடிட்டோரியத்துக்குள்ள என்டர் ஆகி மேடைய பாத்தா ங்கே.... ஒரு டெகரேசன் கூட இல்ல. செயர் எல்லாம் ஸ்டேஜ் கீழ தான் போட்டு வச்சிருந்தாங்க. கூடவே ஒரு மைக் மட்டும்...

சுத்திமுத்தி பாத்தா ஒரு அம்பது பொம்பள புள்ளைங்க உக்காந்துட்டு இருக்காங்க. பின்னாடி பாத்தா ஒரு பத்து பதினஞ்சு பசங்க ஹாயா உக்காந்து என்னமோ பேசிட்டு இருக்காங்க...

ஆரம்பத்துல இருந்தே எனக்கு காபியும் கேக்கும் கொண்டு வந்து தந்து, நின்னா என்ன வேணும் மேடம், திரும்பினா என்ன வேணும் மேடம்னு ஒரு ஸ்டுடென்ட் கேட்டுட்டு இருந்தான். அவன் கிட்ட போய் எல்.சி.டி ப்ரொஜெக்டார் எங்கன்னு கேட்டதுக்கு அது எல்லாம் எதுக்கு மேடம், அத எல்லாம் செட் பண்ணவே இல்லன்னுட்டான்... அடேய், உங்கள நம்பி நான் பவர் பாயின்ட் எல்லாம் போட்டேனேடா... கொன்றுவேன்னு அவனப் பாத்து நான் முறைக்க, சும்மா பேசுங்க மேடம்ங்குறான்... படு பாவி...

ஆனாலும் நமக்குன்னு போட்டு வச்ச வி.ஐ.பி செயர்ல போய் உக்காந்து, ஒரு வழியா வரவேற்புரை, முன்னுரை எல்லாம் அவங்க முடிக்க, என்னை பேசுறதுக்கு கூப்ட்டாங்க.

நான் மைக்க பிடிச்ச உடனே, இங்க எனக்கு முன்னாடி பேசினவங்க எல்லாம் உங்களுக்கு நிறைய கதைகள் சொன்னாங்க. என்கிட்ட சொல்ல ஒரு கதை கூட இல்லையே... அட்லீஸ்ட் உங்களுக்கு அழகழகா படம் போட்டு காட்டி தப்பிக்கலாம்னு பாத்தா அதுவும் முடியாம போச்சு... இப்ப நான் என்ன பேசப் போறேன்னு எனக்கே தெரியலயேன்னு சொன்னதும் அத்தன புள்ளைங்களும் சிரிச்சுட்டாங்க. பின்னால பசங்க விசில் வேற...

நீங்க ஜூவாலாஜி படிக்குறீங்க. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வெர்டிப்ரேட்ஸ் இன்-வெர்டிப்ரேட்ஸ்.... அது என்னன்னு என்கிட்ட திருப்பி கேட்றாதீங்க, அதெல்லாம் நான் ப்ளஸ் டூ-ல படிச்சது. அதனால உங்கள நான் இப்ப உங்க கண்ணுக்கே தெரியாத உயிரினங்கள் பக்கம் கூட்டிட்டுப் போகப் போறேன்னு சொன்னேன்.

ஆமா, நம்மள ஆட்சி செய்ற உயிரினங்கள் அது. வெற்றிடம், காற்று வெளி, நிலம், பாறை, நீர், வெந்நீர் ஊற்றுகள், ஆழ்கடல்ன்னு அந்த உயிரினங்கள் இல்லாத இடமே இந்த உலகத்துல கிடையாது.

நம்மோட விவசாயமாகட்டும், உணவு செரிமானகாகட்டும், மருத்துவமாகட்டும் எல்லாத்துலயும் நிறைஞ்சிருக்குறது இந்த உயிரினங்கள் தான்ன்னு ஆரம்பிச்சு இங்க பேஸ் புக்ல எப்படி கதை சொல்ல ஆரம்பிப்பேனோ அப்படியே ஆரம்பிச்சுட்டேன்...

என்னோட சந்தோசம் எல்லாமே பிள்ளைங்க அத்தன பேர் முகமும் அவ்வளவு பிரகாசமா இருந்துச்சு. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நான் பேச பேச கைத்தட்டி ரசிச்சாங்க.

அப்படியே பேசிட்டு இருக்கும் போதே நீங்க எல்லாம் யூ.ஜி ஸ்டுடென்ட்ஸ். நீங்க எத்தன பேர் நேசனல் இல்லனா ஸ்டேட் லெவல் செமினார் அட்டென்ட் பண்ணியிருக்கீங்கன்னு கேட்டேன். இல்ல, எதுவுமே அட்டென்ட் பண்ணினது இல்ல, அதெல்லாம் மேடையேற பயம், பழக்கம் இல்லனு சொன்னாங்க.

நான் உடனே மேடைனா ஏன் பயப்படுறீங்க? என்னைக் கேட்டா நமக்கான மேடைய முதல்ல நாம தேடிப் போறதுக்கு முன்னாடி ஏன் நாமே அமைச்சுக்கக் கூடாதுன்னு கேட்டேன்.

புள்ளைங்க எல்லாம் முளிச்சாங்க.

நான் யூ.ஜி பஸ்ட் இயர் படிக்குறப்ப இந்த மாதிரியான அசோசியேசன் டே வந்துச்சு. அப்போ நாங்க ஒரு மூணு பேர் சேர்ந்து எங்களோட ஸ்டாப், பிரெண்ட்ஸ், சீனியர்ஸ் எல்லார் கிட்டயும் போராடி அந்த நாளை எங்களோட திறமைகள வெளிபடுத்துற நாளா மாத்திகிட்டோம். எங்களோட அசோசியேசன் டே பேப்பர், போஸ்டர், மாடல் பிரசென்டேசன்னு எங்களோட திறமைகள வெளிப்படுத்துறதா அமைஞ்சுச்சு. ஒரு ஆள் விடாம அத்தனை பேரும் ஏதோ ஒரு வகைல மேடையேறினோம். எங்களுக்கு நாங்களே திறமைகள ஊக்குவிச்சு பரிசுகளும் குடுத்துகிட்டோம். அதே மாதிரி நீங்களும் ஏன் அடுத்த வருசத்துல இருந்து இந்த மேடைய பயன்படுத்தக் கூடாதுன்னு கேட்டேன். கண்டிப்பா பண்றோம்னு சொன்னாங்க.

அதுல ஒரு பொண்ணு எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது மேடம் வெறும் தமிழ வச்சுட்டு என்னப் பண்றதுன்னு கேட்டா.

இப்ப நம்மள இப்படி மனசு விட்டு பேச வைக்குறது எந்த மொழி? தமிழ் தானே, அப்புறம் ஏன் அத வெறும் தமிழ்ன்னு சொல்றீங்க? நம்மோட எண்ணங்கள வெளிப்படுத்துறதுக்கு மொழிய எப்பவுமே ஒரு பிரச்சனையா நாம நினைக்கக் கூடாதுன்னதும் ஆனா அங்க எல்லாம் எல்லாரும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்கன்னு சொன்னா அதே பொண்ணு...

எனக்கு இங்கிலீஷ் தெரியும். பவர் பாயின்ட் கூட அதுல தான் போட்டுட்டு வந்தேன், ஆனா இப்ப நான் தமிழ்ல பேசலையா? அதே மாதிரி நீ ஏன் தெரியாத இங்கிலிஷ அண்ணாந்து பாத்துட்டு இருக்க. இறங்கி உன்னோட தமிழுக்கு வா.

இங்கிலீஷ்னா என்னவோ அது ஒரு பெரிய மொழி, அது நமக்கு புரியாதுன்னு ஒரு தயக்கம் இருக்கு உங்க கிட்ட. அந்த தயக்கத்த நாம விட்டுட்டா கண்டிப்பா ஜெய்ச்சுடலாம். வர்றது வரட்டும்னு இங்கிலீஷ்ல செமினார் எடு. பிரெண்ட்ஸ் கிட்ட பேசு. கிண்டல் பண்ணாலும் யார் பண்ணப் போறாங்க, உன்னோட பிரெண்ட்ஸ் தானே... அதுவும் ஒரு டீமா நீங்க எல்லாம் சேர்ந்து கத்துகிட்டா ஈசியா கத்துக்கலாம்.

அது மட்டுமில்ல, மொழி என்னதுங்குறது பிரச்சனை இல்ல, நீ கத்துக்குற விஷயம் உனக்கு புரியுதா புரியலையாங்குறது தான் பிரச்சனை.

விஷயம் மட்டும் புரிஞ்சுட்டா அப்புறம் தமிழாவது இங்கிலீஷாவது. எல்லாமே உனக்கு ஒண்ணா தான் தெரியும்.

சிம்பிளா சொல்லணும்னா எனக்கு பிடிச்சதெல்லாம் கேள்வி கேக்குறது தான். நாம பாக்குற கேக்குற படிக்குற எல்லா விசயத்திலும் சந்தேகம்னு வந்தா கேள்வி கேட்டுப் பழகணும். எப்ப நாம கேள்வி கேட்டுப் பழகுறோமோ, அப்பவே அதுக்கான விடைய நாம தேட ஆரம்பிச்சுடுவோம்னு சொன்னேன்.

ஒரு பையன் எழும்பி, மேடம் இப்ப எனக்கு உங்க சப்ஜெக்ட் படிக்க ஆசை வந்துடுச்சு. ஆனா நான் அத படிச்சா க்ராஸ் மேஜர்ன்னு வேலை கிடைக்குறதுல பிரச்சனை வராதான்னு கேட்டான்.

நானும் இப்ப ஸ்டுடென்ட் தான். எனக்கு இத பத்தி டீடைல்ஸ் தெரியாது. ஆனா உங்க ஸ்டாப் இதுக்கு பதில் சொல்லுவாங்கன்னு சொல்லிகிட்டே, சொல்லப்போனா நானும் ஒரு வகைல க்ராஸ் மேஜர் தான், பிளான்ட் பயோ-டெக்னாலஜி அப்படிங்குறது பாட்டனியோட மாடர்ன் வெர்சன். ஆனா நான் இப்ப பண்ணிட்டு இருக்குறது மெரைன். என் கிட்ட கூட நீ ஏன் பாட்டனில பி.ஜி அப்புறம் பி.ஹச்.டி பண்ணக் கூடாதுன்னு கேட்டுருக்காங்க. நான் அவங்க கிட்ட சொன்னதெல்லாம் நான் இது எத பத்தியும் கவலைப் படுறதேயில்ல. எனக்கு தெரிஞ்சதெல்லாம் பணத்துக்கு படிக்கவோ வேலை செய்யவோ கூடாது, மனசுக்கு பிடிச்சத படிக்கணும், மனசுக்கு பிடிச்ச வேலை செய்யணும் அவ்வளவு தான்னு சொன்னதும் ஒரே கைத்தட்டல்.

வெறும் கம்யூட்டர தட்டிகிட்டு இயந்திரத் தனமா வாழுறது வாழ்க்கை இல்லடா. நீங்க எல்லாம் ஜூவாலாஜி ஸ்டுடென்ட்ஸ். இயற்கைய ரசிக்குற அருமையான வாய்ப்பு உங்களுக்கு இருக்கு. மிருகங்கள், பறவைகள், புழு பூச்சின்னு உடல் கூறுகள பத்தி மட்டும் படிக்காம இயற்கையோட இசைந்த அவங்க வாழ்க்கையையும் படிங்க, கூடவே அதுகளுக்கும் நமக்கும் உள்ள உறவுப் பாலத்த பத்தியும் படிக்க ஆரம்பிங்க. உங்கள மாதிரி லக்கியஸ்ட் பசங்க யாரும் கிடையாதுடான்னேன்.

அரங்கம் அதிர்ந்த கைத்தட்டு எல்லாம் இல்ல.... ஆனா அவ்வளவு உற்சாகமா அத்தனை பேரும் கைத்தட்டினாங்க...

எல்லாருக்கும் நன்றியும் வணக்கமும்ன்னு நான் உக்காந்தப்ப அந்த ஹச்.ஓ.டி என்கிட்ட குனிஞ்சு இதுக்கு தான் உங்கள நாங்க கூப்பிடணும்ன்னு ஆசைப் பட்டோம்னு சொன்னார். நிஜமா கொஞ்சம் பெருமையா தான் இருந்துச்சு.

அப்புறம் சில டான்ஸ், லவ் ப்ரோபோசல்ன்னு சில விசயங்கள ரசிச்சு (கண்டிப்பா அத பத்தி தனியா எழுதணும்) அவங்க குடுத்த சால்வை, கிப்ட் எல்லாத்தையும் வாங்கிகிட்டு கொஞ்சம் அப்படியே ஊர் சுத்திட்டு வீடு வந்து சேர்ந்தப்ப உடம்பு சோர்வா இருந்தாலும் மனசு நிறைஞ்சு தான் போச்சு...

Wednesday 15 April 2015

லெட்சுமி பிரசவம்



ஏ வசு எங்க இருக்க? இங்க ஓடி வா....

சுந்தரி கத்துனத கேட்டு பதறியடிச்சு வசந்தி ஓடி வந்தா.

“என்னாச்சுமா, எதுவும் பிரச்சனையா?”

“அந்த டாக்டருக்கு ஒரு போன போட்டுப் பாரு. ஆள இன்னும் காணல”

கைல கொதிக்க கொதிக்க வென்னிப் பானைய துணி வச்சி பிடிச்சு தூக்கிகிட்டே அவசர அவசரமா பின் வாசல் வழியா இறங்கி போனா சுந்தரி.

வசந்திக்கு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. நேரே போன் வச்சிருக்குற இடத்துல போய் டாக்டர் நம்பர் எடுத்துட்டு கால் பண்ணினா.

“ஹல்லோ, டாக்டர் இருக்காரா? நான் குமாரசாமி வீட்ல இருந்து பேசுறேன்”

“அவர் அப்பவே கிளம்பி போய்ட்டாரே”

பின் கட்டுல என்ன நடக்குதுன்னு போய் பாக்க வசந்திக்கு பயம். ஏற்கனவே சுந்தரியும் குமாரசாமியும் பேசிகிட்டத கேட்டுட்டு தான் இருந்தா.

.......................................................................

“இன்னிக்கி நெறஞ்ச அமாவாச. எப்படியும் லெட்சுமி பிரசவம் நடந்துரும்”

அவங்க பேசிகிட்ட மாதிரி லெட்சுமிக்கு அப்படி ஒண்ணும் பெரிய மாத்தம் வந்துடல. பத்து மணி வரைக்கும் குடுத்தத எல்லாம் நல்லா தின்னுகிட்டு நல்லா மினுக் மினுக்ன்னு தான் இருந்தா. பதினோரு மணி வாக்குல தான் லேசா வலி வந்து முனங்க ஆரம்பிக்க, சுந்தரி வசந்திய எழுப்பி “நானும் அப்பாவும் பின்கட்டுக்கு போறோம். லெட்சுமி பிரசவம் நடக்கப் போவுது. நீ கதவ பூட்டிகிட்டு ஒரங்கு”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.

வசந்திக்கு இந்த மாதிரி பேரு காலங்கள பாக்குற திராணி இல்ல. இதுவே பகல் நேரமா இருந்தா அந்த இடத்த விட்டே எங்கயாவது ஓடிப் போயிருப்பா. அப்படியே ஆத்தங்கரைல கொஞ்ச நேரம் கல்லெடுத்து பொறுக்கிப் போட்டு, கூடவே மாந்தோப்புக்குள்ள போய் கல்லெறிஞ்சி மாங்கா பறிச்சு தின்னுட்டு மெதுவா தான் வீட்டுப் பக்கம் எட்டிப்பாத்துருப்பா.

ஆனா இன்னிக்கி பாத்து இருட்டிப் போச்சு. இனி எங்கயும் ஓட முடியாது. பேசாம அவ கட்டில்ல போய் குப்புற படுத்துட்டு தலையணைக்குள்ள மூஞ்ச பொதச்சுகிட்டா.

..........................................................

இங்க லெட்சுமியால வலிய பொறுக்க முடியல. கால கால தூக்கி தூக்கி அடிக்குறா. ரெண்டு மூணு தடவ நீரும் சொட்டு சொட்டா போவுது, வயிறு இளக்கி அது வேற கஷ்டமா இருக்கு.

சுந்தரி தான் தலைமாட்டுல ஆறுதலா தடவிக் குடுத்துட்டு இருந்தா. குமாரசாமி முதுகுல வாஞ்சையா தடவுனத பாத்து லட்சுமிக்கு கொஞ்சம் ஆசுவாசமாச்சு. கண்ணெல்லாம் நிறைஞ்சு போய் “ம்ம்ம்மா....”ன்னு முனங்க ஆரம்பிச்சுட்டா. “எப்படியும் இன்னும் அரமணி நேரத்துல பிரசவம் முடிஞ்சிரும். வலிய பொறுத்துக்கோ, புள்ளைய பாத்தா உன் கஷ்டம் எல்லாம் பறந்துரும்”னு ஆறுதலா குமாரசாமி லெட்சுமிக்கி சொல்லிட்டு இருக்கார்.

நேரம் ஆக ஆக இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு லெட்சுமி வாய்விட்டு கதற ஆரம்பிச்சா “அம்மாஆஆஆஆஆஆ”

லெட்சுமி கதறல கேட்டு லேசா கண்ணசந்து போன வசந்தி விருட்டுன்னு எழுந்து உக்காந்தா. “சீக்கிரமா பிரசவம் நடந்துரனும் சாமி, எங்க லெட்சுமிய கஷ்டப்படுத்தாத”

சுந்தரிக்கும் குமாரசாமிக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. “கொஞ்சம் படுத்து முக்கிப் பாரு. இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?”. சுந்தரி பேச்சுக்கு கட்டுப்பட்டத போல லட்சுமி படுத்து முக்க ஆரம்பிச்சா.

இல்ல, முடியல, மறுபடியும் எந்திரிச்சிட்டா. எப்படியாவது புது உயிர பத்திரமா இந்த ஒலகத்துக்கு கொண்டு வரணுமே, லெட்சுமி படுக்குறா, முக்குறா, கதறுறா, எழும்புறா... ஒருக்கட்டத்துல எழும்பவே முடியாம மாறி மாறி முக்கும் போது தான் மெல்ல கன்னிப்பை எட்டிப் பாக்க ஆரம்பிச்சுது.

“அவ்வளவு தாண்டா, இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இந்தா வந்துட்டு, முக்கு முக்கு...” குமாரசாமி லெட்சுமிகிட்ட ஆறுதல் சொல்லிகிட்டே, “அந்த சாமி வீட்டு திருநீர எடுத்துட்டு வா”ன்னு சுந்தரிக்கு கட்டள போடுறாரு.

சுந்தரி அவ தலைய ஒரு தடவ மார்ல புதைச்சு அணைச்சுக்கிட்டு “இந்தா வந்துடுறேன், சீக்கிரம் முடிஞ்சிரும்”னு ஓடிப் போய் திருநீர எடுத்துட்டு வந்து நெத்தியில பூசி விட்டா.

அப்படியே முதுகு, பின் பக்கம்ன்னு எல்லா இடத்துலயும் திருநீர தடவ, படீர்ன்னு கன்னிக்குடம் வெடிச்சு அந்த இடம் முழுக்க ஈரம்.

இந்தா இப்ப வந்துரும் இப்ப வந்துரும்னு குமாரசாமி வாய் முணுமுணுத்தாலும் படக்குன்னு உள்ள போய்ட்ட கால்கள பாத்து கொஞ்சம் பீதியாக தான் செய்துட்டார்.

“சுந்தரி, டாக்டர கூப்டுவோமா, எதுக்கும் வந்து பாத்துடட்டும்”

“எனக்கும் அப்படி தாங்க தோணுது. ராத்திரி பனிரெண்டு மணி. ஆனாலும் கூப்ட்டு தான் ஆவணும்”

இப்ப லெட்சுமி எழுந்து நின்னுருந்தா. கன்னி வாய்ல எந்த அடையாளத்தையும் காணோம். உள்ள போய்டுச்சு.

டாக்டர கூப்ட்டுட்டு வந்தவகிட்ட கொஞ்சம் வென்னி ஒத்தடம் குடுப்பமான்னு கேட்டவர பாத்து, அதுவும் சரிதான்னு சாணி அடுப்புல வென்னிப் போட்டுட்டு வந்து கவலையோட உக்காந்தா சுந்தரி.

“ஏங்க, இவ ஏன் இன்னும் படுத்து முக்கல. காலோ தலையோ எதுவும் வெளில தெரியலயே”

“பொறு எல்லாம் சரியாகிடும்” குமாரசாமி லெட்சுமி முதுக விடாம தடவிட்டு இருந்தார்.

...........................................................................

ரெண்டாவது தடவையா டாக்டர கூப்ட்டு பாத்துட்டு வசந்திக்கு இனிமேலயும் படுத்துக் கிடக்க முடியல. எழும்பி மெதுவா கொல்லப்பக்கமா வந்தா.

“ஏம்மா, லெட்சுமிக்கி பிரசவம் ஆச்சா இல்லியா? சத்தத்த காணோம்”

“இன்னும் இல்லடி. வயித்துல அசைவையும் காணோம். எனக்கென்னமோ பயமா இருக்கு”

“ஒண்ணும் ஆவாதுமா” வாய் சொன்னாலும் வசந்திக்கும் இப்ப பதற்றம் தொத்திகிச்சு.

அந்நேரம் பாத்து லெட்சுமி கொஞ்சம் படுத்து முக்க, வெள்ளையா ரெண்டு காலு வெளில தெரியுற மாதிரி இருக்க, “வசு, நாம பிரசவம் பாத்துருவோமா” குமாரசாமி கேட்டதுக்கு சட்டுன்னு “சரிப்பா”ன்னு பதில் சொல்லிட்டா வசந்தி.

சுந்தரி லெட்சுமிய எழும்ப விடாம கழுத்த கட்டிக்கிட்டு கிடக்க, குமாரசாமி மெதுவா கைய உள்ள விட்டார். அவர் தயக்கத்த பாத்த வசந்தி, இருங்கப்பான்னு அவர தள்ள சொல்லிட்டு லாவகமா கைய உள்ள விட்டு கால பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சா.

“அம்மாஆஆஆஆ.......”

“பொறுடா பொறுடா... இந்தா இப்ப வந்துரும்” வசந்தி இழுத்த இழுப்புல ரெண்டு காலும் கொஞ்சம் வெளில வர, இப்ப குமாரசாமியும் சேந்துகிட்டார்.

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“என்னப்பா, தலையக் காணோம்”

பொறுக்க மாட்டாம லெட்சுமி மறுபடியும் எந்திரிச்சு நின்ன நேரத்துல தான் டாக்டர் மெல்ல வெடலிக்கு அந்தப்பக்கமா நின்னு குரல் குடுக்குறார்.

“வர்ற வழில வண்டி மக்கர் பண்ணிடுச்சு. நட்டநடு ராத்திரியில நம்ம முத்த எழுப்பி அத சரி பண்ணிகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிட்டு”

இந்த நேரம் கம்பவுண்டரயும் சேத்து எதிர்ப்பாக்குறது தப்பு. இவர் வந்ததே பெரிய விஷயம்.

வந்தவரு நேரா வென்னிய எடுத்து கைய நல்லா அலம்பிட்டு கூடவே டெட்டால் சோப்பும் போட்டு கைய கழுவுனார். சட்டைய களத்தி அங்க நின்ன மாமரத்து கிளை ஒண்ணுல தொங்க விட்டுட்டு மெல்ல லெட்சுமி பின்பக்கமா தடவிகிட்டே கைய உள்ள விட்டு பதம் பாத்து முடிச்சவர் நின்னு யோசிச்சுட்டு “கயிறு போடணும் போல”

இன்னும் ரெண்டு பேர் இருந்தா லெட்சுமிய பிடிச்சுக்க வசதியா இருக்கும். ஆனாலும் என்னப் பண்றது, நாமளே சமாளிப்போம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ண, டாக்டர் கொண்டு வந்த நைலான் கயித்த லாவகமா முடிச்சுப் போட்டு ஈத்துவாய்ல கைய உட்டு கால சேர்த்து கட்டுனார்.

நல்லா இழுங்க.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்சம்.... இன்னும் கொஞ்சம்....

லெட்சுமிய பாக்க முடியல. அவளால இப்ப கதறக் கூட முடியல. ஏதாவது செய்து என் புள்ளைய காப்பாத்திருங்கன்னு அவ கெஞ்சுற மாதிரி இருக்கு. இந்த வலிய என்னால பொறுக்க முடியலயேன்னு அழுற மாதிரியும் இருக்கு. குமாரசாமியும் டாக்டரும் இழுத்துப் பாத்துட்டு ரொம்பவே சோர்ந்து போய் இருந்தாங்க. லேசா ரெத்தமும் மாசியும் கலந்து ஒழுக்கி விளுந்தத பாத்து வசந்திக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்க, “எம்மா, நான் வேணா லெட்சுமி தலைமாட்டுல நிக்கேன், நீ வந்து இழுக்குறியா”ன்னு சுந்தரிகிட்ட கேட்டா.

“எனக்கென்னமோ முடியும்னு தோணல, கம்பி போட்ருவோமா”

டாக்டர் என்ன சொல்றார்ன்னு புரியாம வசந்தி திருப்பிக் கேட்டா

“அப்படினா என்ன டாக்டர்”

“இந்த மாதிரி ரொம்ப முடியாம போனா புள்ளையோட ரெண்டு கண்ணுக்கும் இடையில இருக்குற மூக்கு தண்டு பகுதில ஒரு கொக்கிய போட்டு இழுப்போம். புள்ள வழுக்கிகிட்டு வசமா வெளில வந்துரும்”

“ஐய்யய்யோ, அப்படினா புள்ளயோட கண்ணு போய்டுமே, மூக்கு உடைஞ்சுப் போனா புள்ள செத்துருமே... அத உயிரோட எடுக்க முடியாதா” வசந்தி அழ ஆரம்பிச்சுட்டா. பாவம் லெட்சுமி, எதுவுமே புரியாம ஏக்கமா பாத்துட்டு நிக்கா..

“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. ரெண்டு கண்ணுக்கும் இடப்பட்ட அந்த பகுதி ரொம்ப உறுதியானது. கால புடிச்சு இழுத்தா கூட பயப்படணும்... இது பயம் இல்ல... புள்ள ஜம்முன்னு வந்து விழும் பாரேன்”

டாக்டர் சொன்னதுல நம்பிக்க இல்லனாலும் இப்ப நம்பி தான் ஆகவேண்டியிருக்கு. வேற வழியில்ல. எல்லார் முகத்துலயும் சோகம். ஆனாலும் நடக்குறது நடந்து தான ஆவணும்.

இங்க நடந்த களேபரத்துல அப்ப தான் பக்கத்து வீட்டு நடேசன் கண்ண முழிச்சி லைட்ட போட்டுட்டே எட்டிப் பாக்குறான்.

“லே... நடேசா, கொஞ்சம் வந்து உதவி பண்ணுடே... லெட்சுமி பிரசவம் சிக்கலாய்டுச்சு”

வெளிச்சத்த பாத்து சுந்தரி குரல் குடுத்ததும் உடனே அங்க வந்துட்டான்.

டாக்டர் அந்த வளஞ்ச கொக்கிய எடுத்து மறுபடியும் ஈத்து வாய்க்குள்ள கைய உட்டு தலைய தேடுறார். கொஞ்ச நேர போராட்டத்துக்கு பொறவு “மாட்டிட்டேன், இழுங்க”ங்குறார்.

இப்ப டாக்டர் முதல் ஆளா இழுக்க, பின்னால குமாரசாமியும் நடேசனும் தம் கட்டி இழுக்க ஆரம்பிச்சாங்க. சுந்தரி கடைசி ஆளா கைகுடுக்க, அம்மா....ஆஆஆ.....ன்னு அலறுன லெட்சுமிய வசந்தி அணைச்சுகிட்டா...

“இந்தா வந்துடுச்சு, இந்தா வந்துடுச்சுன்னு ஒரு மூணு நிமிஷம் போராடினதுக்கு பொறவு லெட்சுமியோட மூணாவது கதறலோட விருட்டுன்னு வெளில வந்து விழுந்துது புது உசுரு.

புள்ள கண்ணுல மாட்டியிருந்த கொக்கிய உருவிகிட்டு இருந்தவர் கிட்ட “என்ன டாக்டர் இது? அசைவே இல்ல” வசந்தி கலவரத்தோட பாக்குறா.

பிரசவிச்ச அடுத்த நிமிஷம் லெட்சுமி திரும்பி புள்ளைய பாக்கலாம்னா கழுத்துல கட்டியிருந்த கயிறு தடுக்குது. இவங்க மூணு பேரையும் பாத்து வயித்த எக்கி “ம்ம்மா.....”ன்னு கூப்டுறா.

குமாரசாமி புள்ள மூஞ்சில ஒட்டி இருந்த மாசியயும் ரெத்தத்தயும் துணி வச்சு தொடச்சுட்டு இருக்கும் போது டாக்டர் குட்டி நெஞ்சுல கை வச்சு பரபரன்னு தேய்ச்சு பட் பட்ன்னு அடிச்ச அடில புள்ள லேசா அசஞ்சு குடுத்துது. தலைய தூக்க முயற்சி பண்ணி முடியாம தலைய கீழ போட்டுடுச்சு.

எப்பா, உயிரு இருக்கு” அஞ்சு பேர் மூஞ்சிலயும் இப்ப சந்தோசம்.

டாக்டர், குமாரமாமி, நடேசன்ன்னு மூணு பேருமா சேந்து குட்டிய தூக்கி லெட்சுமிகிட்ட போட்டப்ப லெட்சுமி மூஞ்சிய பாக்கணுமே. புள்ளைய அப்படியே நக்கி நக்கி எடுக்குறா.

புள்ள நல்ல கலருன்னு சொல்லிகிட்டே சுந்தரி வாலத் தூக்கிப் பாத்து, பொட்டப் புள்ளைங்கன்னு கலகலன்னு எல்லாரும் சிரிச்சுட்டு இருக்குறப்ப தான் போன உசிரு திரும்ப வந்துச்சு குமாரசாமிக்கு.

அப்புறம் என்ன, தள்ளைக்கும் புள்ளைக்கும் ஆளுக்கொரு ஊசிய போட்டுட்டு விடிஞ்சி வந்து பாக்குறேன்னு லெட்சுமிய ஒரு தடவ தடவிக் குடுத்துட்டு நூறு ரூவா தாளையும் வாங்கிட்டு டாக்டர் கிளம்பிப் போய்ட்டார். நடேசனும் அவன் வீட்ல போய் படுத்துட்டான்.

இங்க ஒரே பரபரப்பு....

“எப்பா, புள்ளைக்கு நான் குளம்பு வெட்டுறேன்”

“நீ வெட்டத் தெரியாம வெட்டிருவ, கத்திய இங்க கொண்டா நான் வெட்டுறேன்”

“எது, எங்களுக்கு வெட்டத் தெரியாதாக்கும். புள்ளைக்கு கண்ணுல மருந்து போட்டு இனி கவனிக்கப் போறதே நான் தான் தெரியும்ல”

“ஆமாமா, பயந்தாங்கொள்ளி, போ போ, போய் தலையணைய கட்டிபுடிச்சு ஒரங்கு. இனி லெட்சுமி கொடி போடுற வரைக்கும் எங்களுக்கு ஒறக்கமில்ல” புள்ளய வாக்கா புடிச்சு பால் குடிக்க வச்சுகிட்டே குமாரசாமி மகள விரட்டிட்டு இருக்கார்....

Sunday 12 April 2015

பார்த்திக்காக - 6



பார்த்தி,
காதல்ங்குறது ஒரு புரிதல்டா

அந்த புரிதலே இல்லாதப்ப
எதுக்காக ரெண்டு பேரும்
காதலிக்குறதா சொல்லி ஏமாத்திக்கணும்?

உன்னை காதலிச்ச உரிமைல
ஒண்ணே ஒண்ணு
கேட்டுக்குறேன் பார்த்தி
எப்பவாவது உன்கிட்ட
பேசத் தோணினா பேசிக்குறேன் பார்த்தி

சிரிக்காதடா, உனக்கே தெரியும்
உன்கிட்ட லயிச்சுக் கிடக்க
எனக்கு இருபத்தினாலு மணி நேரம்
பத்தாதுன்னு...

ஆனா உன் முத்தம் வேண்டாம்
உன் அணைப்பு வேண்டாம்
உன் காதல் வேண்டாம்
நீ மட்டும் வேணும் பார்த்தி

பார்த்தி, நான் என்ன தப்பு செய்தேன்னு
திருப்பி கேக்காத பார்த்தி
உன்னைப் பத்தி நான் எதுவுமே சொல்லல பார்த்தி,
எல்லாமே என்னோட மனநிலை தான்...

நீயும் தான என்னை காதலிச்ச?
என்னை புரிஞ்சுக்க மாட்டியா பார்த்தி

என்னை அழ விட்டு
ரெண்டு கையையும்
விரிச்சுக்க மாட்டியா பார்த்தி

உன்னை புரிஞ்சுக்க
என்கிட்ட சக்தியில்ல பார்த்தி
மூழ்கிட்டு இருக்கேன் பார்த்தி
எங்கயோ திசை தெரியாத சுழல்ல
சிக்கிட்டு இருக்கேன்

என் முடிவு தெரியல பார்த்தி
தெரிஞ்சதெல்லாம் நீ மட்டும் தான் பார்த்தி
நீ மட்டும் தான்

Thursday 9 April 2015

முதல் படி, முதல் பேச்சு


சாயங்காலமா காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருக்கும் போது ஒரு போன் கால்...

அந்தப்பக்கம்: ஹலோ காயத்ரி மேடம்ங்களா?

நான்: ஆமா, நீங்க யாரு?

அந்தப்பக்கம்: நான் ______ காலேஜ்ல இருந்து பேசுறேன் மேடம், நாளைக்கு எங்க டிபார்ட்மென்ட் அசோசியேசன் டே. நீங்க சீப் கெஸ்ட்டா வர முடியுமா?

நான்: சார், நீங்க வேற யார்கிட்டயோ பேச வேண்டியத என்கிட்ட பேசுறீங்க. நான் ஸ்டாப் கிடையாது, ரிசெர்ச் ஸ்காலர்.

அந்தப்பக்கம்: தெரியும்ங்க, போனமாசம் நீங்க திருநெல்வேலி ராணி அண்ணா காலேஜ்ல பேப்பர் ஒண்ணு ப்ரெசென்ட் பண்ணுனீங்க தானே

நான்: ஆமா...

அந்தப்பக்கம்: அப்படினா நீங்களே தான்.

நான்: சரி, அப்படி இருந்தாலும் ஏன் நாளைய ப்ரோக்ராம்க்கு இன்னிக்கி சாயங்காலம் கூப்டுறீங்க?

அந்தப்பக்கம்: மேடம் சாரி, நாலு நாளா உங்கள காண்டாக்ட் பண்ண ட்ரை பண்றோம். உங்க நம்பர் கிடைக்கவேயில்ல. இப்ப தான் கிடைச்சு உடனே கால் பண்றோம்.

நான்: ஒரு வேளை என் நம்பர் கிடைக்காம போயிருந்தா?

அந்தப்பக்கம்: வேற ஒரு ப்ரோபஸசர் இருக்காங்க. அவங்கள கூப்ட்டு நடத்தியிருப்போம். ஆனாலும் நீங்க வந்தா நல்லாயிருக்கும்ன்னு தான் கடைசி வரை முயற்சி பண்ணினோம்.

நான்: எந்த டாபிக்ல பேசணும்

அந்தப்பக்கம்: நீங்க பேச ஆரம்பிச்சாலே டாபிக் ஆகிடும் மேடம். என்ன வேணா பேசுங்க (ங்ஞே.... இத மட்டும் தெளிவா சொல்லுவாங்களே)

நான்: சரி சார், நான் காலேஜ்ல பெர்மிசன் கேட்டுட்டு வந்து சொல்றேன்...

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி, நான் எம்.பில் பண்ணிட்டு இருந்தப்ப அந்த காலேஜ் போயிருக்கேன். அவங்க நடத்துன நேசனல் லெவல் செமினார்ல பேப்பர் ப்ரெசென்ட் பண்ணி பஸ்ட் ப்ரைசா ஒரு மெட்டல் திருவள்ளுவர் சிலை வாங்கிட்டு வந்தேன். அப்புறம் போன மாசம் திருநெல்வேலில அந்த ப்ரோக்ராம் நடத்துன ஸ்டாப் வந்து கைகுடுத்தாங்க. நீங்க அந்த செமினார்ல ப்ரைஸ் வாங்கினவங்க தானேன்னு நியாபகமா கேட்டாங்க. இந்தா இப்ப இப்படி ஒரு அழைப்பு....

பேப்பர் ப்ரெசென்ட் பண்ண பல மேடை ஏறி இறங்கியிருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு போட்டி மனப்பான்மைல... முதல் முறையா சீப் கெஸ்ட்ங்குற அங்கீகாரம், அதுவும் வேலைல சேர்றதுக்கு முன்னாடியே...

மேடைல முதல் படில கால் எடுத்து வைக்குறேன்... முதல் பேச்சும் பேசப் போறேன்....

Wednesday 8 April 2015

தென்னங்கீற்றுகளின் சாட்சியாக...



திடீர்னு ஒரு நாளு அர்த்தராத்திரியில மனசுக்குள்ள ஒரு மாதிரியான ஒரு வெறுமை. என்னடா இது, பிறந்தோம், வளந்தோம்னு ரொம்ப வெட்டியாவே இருக்கோமோன்னு தோணிகிட்டே இருந்துச்சு.

எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும், அதுவும் சீக்கிரமே வேணும்னு நினச்சப்ப தான் ஏன் நாம எழுதின உணர்வுகள எல்லாம் ஒரு புத்தகமா போட்டு இந்த மக்கள கொலை பண்ணக் கூடாதுன்னு தோணிச்சு.

உடனே சரி, நாம எழுதினதுல காதல் சார்ந்தத தனியா எடுத்து வைப்போம்னு முடிவு பண்ணி கடகடன்னு காதல் கவிதைகள (கவிதைன்னு சொல்றது தப்பு தான், ஆனா வேற என்ன பேரு குடுக்கணும்னு தெரியல) அந்த அர்த்த ராத்திரியில தொகுக்க ஆரம்பிச்சேன்.

ஒரு புக் போட தேவையான கவிதைகள தேர்ந்தெடுத்தாச்சு, அடுத்து என்னப் பண்ணலாம், காசு குடுத்து எல்லாம் நம்மால புக் போட முடியாதேன்னு ஒரே யோசனை...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ம்ம்ம்-ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, உங்க கவிதைகள புக்கா போட்ரலாம்ன்னு மங்காத்தா சொல்லிட்டே இருப்பார். அவருக்கு "நான் புக் போட ரெடி, இதெல்லாம் தான் நான் புக்ல போட தேர்ந்தெடுத்த கவிதை. எப்போ புக் வெளி வரும்னு ஒரு மெயில் தட்டி விட்டேன்...

அப்புறம் என்ன, அடுத்த நாள்ல இருந்து மளமளன்னு வேலை ஆரம்பிச்சாச்சு...

பப்ளிஷர்க்கு கால் பண்ணி, நான் அஞ்சு பைசாக் கூட தர மாட்டேன், எனக்கு மார்கெட்டிங் பண்ணத் தெரியாது, அதனால ஒரு புக் கூட என்னால விக்க முடியாதுன்னு சொன்னேன். அதனாலென்ன, எல்லாம் நான் பாத்துக்குறேன்னார்... நமக்கு அந்த வார்த்த போதாதா என்ன?

நம்மகிட்ட மாட்டிகிட்டவர சும்மா விட முடியுமா, அடுத்து, ஒவ்வொரு கவிதைக்கும் படம் போட்டு டிசைன் பண்ணுவோமான்னு கேட்டேன். பாவம், அவரும் சரின்னு தலையாட்டினார்.

இப்ப புக் கலர்ல பிரிண்ட் ஆகுறதா முடிவாகிடுச்சு. வெறுமனே ஒரு படத்த எடுத்து கவிதை மேல போடுறதுல எனக்கு விருப்பம் இல்லாததால நானே படங்கள தேர்வு செய்து, இந்த கவிதைக்கு இது தான் படம்னு முடிவு பண்ணி டிசைன் பண்ணினேன்...

எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, அடுத்து கவிதை பிரிண்ட் பண்ணப்பட வேண்டிய பேப்பர் சாதரணமா இருந்தா நல்லாயிருக்காதேன்னு அதையும் பளபளப்பா குடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. பப்ளிஷர் அதுக்கும் தலையாட்டுறார்... எனக்கு கோவில் ஆடு ஏனோ நியாபகத்துக்கு வந்து தொலைக்குது...

சரி, அடுத்து இந்த அணிந்துரை, கருத்துரை எல்லாம் இருக்கே யார் கிட்ட கேக்குறது?

எனக்கு செல்வா அண்ணா, கார்த்திக், தமிழரசி அக்கா மூணு பேரும் தான் நியாபகத்துக்கு வந்தாங்க.

கார்த்திக் கிட்ட கேக்கலாம், ஆனாலும் ஒரு பயம். திட்டி விட்ருவாரோன்னு. தயங்கி தயங்கி கேட்டேன். எழுதி தரேன்னு சொன்னார், ஆனாலும் அடுத்த நேரம் பேசும் போது கவிதை புக் எல்லாம் நீ போடுறது வேஸ்ட்ன்னு சொன்னார். சரி தான், அப்ப இவர் எழுதிக் குடுக்குறது சந்தேகம் தான்னு முடிவு பண்ணிட்டேன்...

பேஸ்புக்ல எழுத ஆரம்பிச்ச காலங்கள்ல செல்வா அண்ணா என்னை தட்டிக் குடுத்துருக்கார். இவர் மட்டும் அணிந்துரை எழுதி தந்தா "ஆத்தா நான் பாசாயிட்டேன்"ன்னு எகிறி குதிக்கலாம். ஆனா அண்ணாவுக்கு நேரம் இருக்குமா, அப்படியே நேரம் இருந்தாலும் நம்ம எழுத்தெல்லாம் அவர் ரசிக்குற மாதிரி இருக்குமான்னு எல்லாம் பயங்கர சந்தேகம். ஆனாலும் அண்ணா, நான் ஒரு கவிதை புக் போடப் போறேன், அணிந்துரை எழுதித் தருவீங்களான்னு கேட்டுட்டேன். அதுக்கென்ன தங்க்ஸ், உடனே எழுதி தரேன்னு அவரும் சொல்லிட்டார்.

அப்புறம் தமிழரசி அக்கா. எங்கடா போனாங்க இவங்கன்னு பேஸ்புக் முழுக்க வலைவீசி தேடிட்டு இருக்கேன். அவங்க வாட்ஸ் அப் நம்பர கூட நான் தொலைச்சுட்டேன் (இந்த வாக்கியம் அக்கா கண்ணுல பட்டுரக் கூடாது அவ்வ்வ்வ்). திடீர்னு ஒரு நாள் ஒரே பட்டாசு வெடிக்குற சத்தம். யாருடா இதுன்னு பாத்தா அட, நம்ம அக்கா... ஓடிப் போய் அவங்க இன்பாக்ஸ்லயும் நான் புக் போட போற விசயத்த சொல்ல அவங்களும் சந்தோசமா எழுதித் தரேண்டான்னு சொல்லிட்டாங்க...

ஆக, இப்ப செல்வா அண்ணா, தமிழரசி அக்கா ரெண்டு பேரும் ஆசிகளோட அவங்க முன்னுரைய எழுதி தர, எழுதி தரமாட்டாரோன்னு நினச்ச கார்த்திக்கும் அணிந்துரை எழுதித் தர, புக் முக்கால்வாசி தயாராக ஆரம்பிச்சாச்சு.

அட்டைப்படம் டிசைன் பண்ணணும். ஏற்கனவே சிவகாசி சுரேஷ் கிட்ட சொல்லி ஒரு அட்டை வடிவமைச்சாச்சு. ஆனாலும் மனசுக்குள்ள இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமோன்னு தோணிகிட்டே இருக்கு. யாராவது நல்லா படம் வரைய தெரிஞ்சவங்க ஒரு அட்டைப் படம் வரைஞ்சு குடுத்தா நல்லாயிருக்கும்... தேடிட்டு இருக்கேன்...

வழக்கம் போல, நான் எதுனாலும் உங்ககிட்ட தானே சொல்லுவேன், அதனால இதையும் சொல்லிட்டேன்...

நன்றியும் ப்ரியமும்

Mangaaththa Mangai க்கு

Selva Kumar அண்ணாவுக்கு

தமிழ் அரசி அக்காவுக்கு

சிவகாசி சுரேஷ் க்கு...

அப்புறம், அப்புறமா கார்த்திக்கு தனியா தேங்க்ஸ் சொல்லிக்குறேன், காரணம், இன்னும் கொஞ்சம் வேலை வாங்கவேண்டியிருக்கு அவரை. ஒருவாரமா ட்ரை பண்றேன், ஆள் இன்னும் சிக்கல...

Tuesday 7 April 2015

கன்னி பூசை





எங்க குடும்பத்த பொருத்தவரைக்கும் நாலுதலைமுறைக்கு முன்னால தாய்மாருங்க தாலாட்டுக்கும், கிழவிங்களோட காட்டுவழி கடைசி ஒப்பாரிக்கும் எப்பவும் குறையின்னு இருந்ததே இல்ல. பால் குடிக்குற பச்சப்புள்ளைங்கள்ல இருந்து, சிங்காரிச்சி நிக்கும் சமைஞ்ச புள்ளைங்க வரைக்கும் வயசு வித்யாசமே இல்லாம சாவு அள்ளிக்கிட்டுப் போச்சாம். வாழவேண்டிய வயசு, வாழ்ந்துகெட்ட வயசுன்னு எந்த வித்யாசமும் இல்லாம ஏதாச்சும் ஒரு துக்கச்செய்தி கேட்டு விடிஞ்சுட்டு இருந்த காலம் அது. தப்பிப்பொழைச்ச புள்ளைங்களை கண்ணுக்கு தூசியில்லாம முந்தானைக்குள்ள முடிஞ்சே வளத்துருக்காங்க.

அப்படி பொழைச்சவருதான் ராமைய்யா தாத்தா. அவர் உடம்பிறப்பா பொறந்த ஒன்பது உசிரும் நிக்கவேயில்ல. ராமைய்யா தாத்தாவுக்கு தலைச்சான் புள்ள ஆம்பளப் புள்ளையா பொறந்ததும் கொண்டாடவா இல்ல கொலை நடுங்கவான்னு தெரியாம குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் பரிதவிச்சுக்கிடந்தாங்களாம்.

ராமைய்யா தாத்தாவோட அய்யா இளையபெருமாள் நிலபுலன்களோட செல்வச் செழிப்பா இருந்தவரு. ராமைய்யா தாத்தா பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு சுசீந்திரத்திலிருந்து இன்னொரு பொண்ண கல்யாணங்கட்டி மாட்டுவண்டியிலே கூட்டிக்கிட்டு வந்துட்டாராம். என் எடத்துல இன்னொருத்தி சக்காளத்தியான்னு முந்தியை அள்ளிமுடிஞ்சுட்டு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டைவிட்டு வெளியேறின வீராப்புக்கிளவிதான் ராமைய்யா தாத்தாவோட ஆத்தாக்காரியான பொட்டுக்கட்டி.

ஆத்தாவும் மகனும் ரெட்ட உசுரா காடழிச்சு, கழனி திருத்தி, களை பறிச்சு, பனைமரம் ஏறி கிளவி பாக்காத வேலை கிடையாது, தன்வயித்துப் பசி அடக்கி புள்ளைய தங்கமா வளர்த்திருக்கா. அரசனே ஆனாலும் புருசன் தப்பு பண்ணினா தூக்கி எறிஞ்சவ-ன்னு அக்கம் பக்கத்து ஊருல உள்ளவங்க எல்லாருக்கும் அவ மேல தனி மரியாதை. எடுபட்டவன் ஒருத்தனும் அவ இருந்த திசைபக்கம் தீண்டுனது கிடையாதாம். காட்டுல தனியா மேய்ச்சலுக்குப் போன புள்ளைகிட்ட பாய நெனைச்ச கள்ளனை பனைமட்டையாலே அடிச்சு நடுமுதுக ரெட்டையா பொளந்து விட்டிருக்கா! அன்னையிலிருந்து மேய்ச்சல்குடி ஆட்களுக்கு ஆச்சிகிட்ட மரியாதையோடு பக்தியும் சேர்ந்துடுச்சு.

தம் மகன் ராமைய்யாவை கூறுள்ள புள்ளையா வளத்து ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சு அவருக்கு ஒரு புள்ள இல்லையேன்னு வருத்தத்திலே பூமிக்குள்ள போன ஆச்சிக்கு இன்னைக்கும் அஞ்சுகிராமத்துக்கு கிழக்கே கோயிலெடுத்து கும்பிட்டுட்டு இருக்காங்க மேய்ச்சல்காரங்க. அவங்களுக்கு அவ காவல் தெய்வம். எங்களுக்கும் தான்.

ஆச்சிக்குப் பின்னும் உழைப்புகளை விடாம நிலபுலன்களை கொத்தி, கால்நடைங்க பராமரிச்சு பெரும்பணம் சேர்த்த ராமைய்யா தாத்தாவுக்கு பதிநாலு வருஷம் கழிச்சு பொறந்த பிள்ளைக்கு கணேசன்னு பேரு வச்சிருக்கார் ராமய்யா தாத்தா.

பிறப்பிலே முகத்தில் தெய்வக்களையாம். அப்படியே ஆச்சியை உரிச்சு வச்ச முகம். ஓங்கின காலோட பிறந்தவருன்னு சொல்வாங்க. உள்ளங்கையிலே சங்கு ரேகை ஓட அத்தனை ஊரு ஜோசியக்காரனும், செல்வமும் சினைமாடும் நிறைஞ்சு நிக்கும் வீடா உன் வீடிருக்கும்ன்னு குறிசொல்லிப் போயிருக்காங்க. சொன்னபடியே சினைப்பசு மொத ஈத்தே கிடாரிக்கன்னு ஈனிருக்கு. அடுத்த அஞ்சாறு வருசத்தில் வீட்டில் வரிசையா தொட்டில் கட்டவேண்டி இருந்துச்சாம், எங்கம்மா அன்னரதி, நாராயணன் மாமா, வைகுண்டம் மாமா, சாருமதி சித்தி, விஜயா சித்தின்னு எல்லாரும் அடுத்தடுத்து பொறந்தவங்க தானாம்.

ஆறு புள்ளை பெத்தாலும் ராமைய்யா தாத்தா முகத்தில் ஏதோ ஒரு கவலைக்குறி இருந்துட்டே வந்ததுருக்கு. அது எதனாலன்னா, கணேசன் மாமா பிறந்தப்ப “இந்த குடும்பத்துக்கே குலசாமி இவன் தான், ஊரறிய உலகறிய பெரியவனா வருவான், ஆனா பதினாலு வயசுல கண்டம் ஒண்ணு தொரத்துது, அத தாண்டிக் காப்பாத்தனும் ராமய்யா இந்த கொடியவிட்டுட்டா நம்ம வம்சத்துக்கு தொப்புள்கொடி எதுவும் நிலைக்கொள்ளாது”ன்னு பொட்டுக்கட்டி ஆச்சி கனவா வந்து சொல்லிட்டு போயிருக்கு.

ஒன்னரை வயசுல சரளமா பேச ஆரம்பிச்சு, அஞ்சு வயசுல தோப்பு கணக்கு, வயல் பகுமானம் வீட்டோட நிர்வாகம் முழுசும் நடத்துற அளவுக்கு திறமையாம் கணேசன் மாமாவுக்கு. எப்பவும் தாத்தா அவரைமட்டும் தோள்லயே தூக்கி சுமந்துருக்காங்க. மத்த புள்ளைங்களை ஆச்சி சுமந்திருக்கு.

பதினோரு வருசமா உள்ளுக்குள்ள துக்கத்தையும், கண்ணுக்குள்ள கண்ணீரையும் ஒழிச்சு ஒழிச்சு வளர்த்துக்கிட்டாங்களாம். கணேசன் மாமாவுக்கு பத்து வயசானப்ப மதமதன்னு வீட்டுக்குள்ள மத்த அஞ்சு புள்ளைங்களும் தவழ்ந்து ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா அதுல மூத்தப் பொண்ணுங்குறதால அம்மா மேல கணேசன் மாமாவுக்கு கொள்ள ஆசை. ஆசை ஆசையா அம்மாவ கைல தூக்கி கணேசன் மாமா வச்ச பேரு தான் அன்னரதி. வீட்டுக்கு வந்த முதல் லெட்சுமின்னு அம்மாவ அவர் தாங்கு தாங்குன்னு தாங்கியிருக்கார்.

ராமைய்யா தாத்தாவோட மனபாரமும் தோள்பாரமும் இறங்கும் நாளும் வந்துருக்கு. எண்ணி பதினோராவது வயசு முடியுற அன்னைக்கு கிணத்தடியில் குளிச்சு, என்னைக்குமில்லாமல் திருநாமம் போட்டுக்கிட்டு ஆச்சியோட படத்துக்குமுன்னாடி போய் உட்கார்ந்துட்டு வில்லா விறைச்சு துள்ளியிருக்கார். சுத்தி உட்கார்ந்து சாமிகும்பிட்டுட்டு இருந்தவங்க தாவிப்புடிக்க அருள்வாக்குமாதிரி ”ஏ மக்கா நான் எங்கயும் போகலலே ஒவ்வொரு பூஜைக்கும் தவறாம வருவேன் இந்த கொடி என்னைக்கும் வாடாது. நான் இருக்கேம்மக்கா காவலா”ன்னு சொல்லி அடங்கிட்டார்.

அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு அவ்வளவா விபரம் தெரியாட்டியும் அம்மாவுக்கும் நாராயணன் மாமாவுக்கும் தன்னோட அண்ணன் தெய்வமாகிட்டார்ன்னு பரிபூரண நம்பிக்கை. கணேசன் மாமாவை மூத்த புள்ளையா மட்டும் பாக்காம கடவுளாவே பாக்க ஆரம்பிச்சுட்டாங்க மொத்த குடும்பமும். தலைச்சான் புள்ளைய பறிகுடுத்த ராமைய்யா தாத்தாவுக்கு அந்த அஞ்சு புள்ளைங்களும் அடுத்து மேலும் நாலு புள்ளைங்க. பத்து புள்ளைங்கள பெத்து, அதுல ஒண்ண பறிகுடுத்து ஆலமரமா தழைக்க ஆரம்பிச்சுடுச்சு பொட்டுக்கட்டி குடும்பம்.

இன்னைக்கும் பொட்டுகட்டி குடும்பத்துல ஒரு வழக்கம் உண்டு. யாராவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி செத்து போய்ட்டா அவங்கள கன்னியா நினச்சு வருசத்துக்கு ஒருதரம் அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் படையல் வச்சு பூசை கொடுக்குறது. கணேசன் மாமா இறந்தப்போ இதே பூசையெல்லாம் செஞ்சு அவரை நடுவீட்டுக்குள்ளே அடக்கம் பண்ணி இருக்காங்க. தலைச்சாம்புள்ளையை வெளியெடத்துல புதைச்சா மலையாள மந்திரவாதிங்க யாரும் தலையோடை எடுக்க தோண்ட வருவான்னு அப்போ இருந்த பயத்தின் காரணமா இந்த ஏற்பாடு.

வருஷம் ஓடிட்டே இருக்க, எங்கம்மா பெரியமனுசியாகி இருக்கா. வயசுக்கு வந்த பொட்டப் புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு வீட்டுக்குள்ள முடக்கி வைக்குற காலம் அது. ஆனா அந்த வருஷம் கன்னிபூஜை பண்றப்ப தம்பி நாராயணன் மேல கணேசன் மாமா சாமியா இறங்கி, என் தங்கச்சிய வீட்டுக்குள்ள வச்சிராதீங்க, அவ படிக்கட்டும்னு சொன்னாராம். புள்ள படிக்கட்டும்னு மாமாவே சொன்னதுக்கப்புறம் மறுவார்த்த யாரும் பேசல. அதுக்குப்பிறகு தான் அம்மா படிப்புக்காக படியிறங்கி போக முடிஞ்சது.

தான் விரும்பினவரையே கட்டிக்கணும்ன்னு அம்மா ஒத்த ஆளா பிடிவாதம் பிடிச்சப்ப கணேசன் மாமா தான் சாமியா வந்து இந்த கல்யாணத்த நடத்தி வைங்கன்னு சொன்னதாவும், அதுவரைக்கும் கொலை வெறியோட இருந்த குடும்பம் மனசு மாறி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதாவும் அம்மா சொல்லுவா. அம்மாவோட விசயங்களுக்காக ரெண்டு தடவ மட்டுமே கணேசன் மாமா சாமியா வந்து பேசினார்ன்னு கேள்விப்பட்டப்ப இதுல ஏதாவது திட்டமிட்ட சதி இருக்கும்னு அம்மாவை சந்தேகக் கண்ணோடு பாத்துருக்கேன்.

ஆனா விஷயம் அதோட முடியல. நாராயணன் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்போ உள்ள வந்தவங்கதான் சங்கரி மாமி. அவங்க காலடி எடுத்து வச்ச வருசத்துல இருந்து கணேசன் மாமா நிரந்தரமா அவங்க உடம்புல இறங்கி வருசா வருஷம் எல்லாருக்கும் வாக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டார். கண்ண உருட்டி, சின்ன புள்ள மாதிரி அழுது, கம்பீரமா நிமிர்ந்து பார்வை பார்த்துன்னு மாமி பண்ற எல்லா சேட்டைகளையும் பாத்து, மாமி என்னமா நடிக்குறாங்கன்னு அறியாத வயசுல விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன்.

ஆனா அந்த நேரம் மாமி பண்ற ஒரு காரியம் மனசுக்குள்ள கிலிய உண்டு பண்றது உண்மை. கன்னி பூஜை பண்ற நேரம் சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். அங்கங்கே இருக்குற சொந்தம், பந்தம்னு எல்லாரும் ஒண்ணா தாத்தாவோட வீட்ல கூட ஆரம்பிப்போம். கண்ணாமூச்சி, தொட்டு விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கிளியாந்தட்டுன்னு சின்னவங்க கூட பெரியவங்களும் சேர்ந்து வீட்டையே அதகளப்படுத்திட்டு இருப்போம். மாமாக்கள்ல யாராவது ஒருத்தங்க, தென்னை மரம் ஏறி முத்துன தேங்காய் பறிச்சுட்டு வந்து குடுத்தா வீட்டு பொம்பளைங்க அத உரிச்சு, எண்ணெய் காய்ச்சுவாங்க. சுட சுட அடுப்புல கக்கன்னும் எண்ணையுமா பிரிஞ்ச பதத்துல கொதிச்சுட்டு இருக்கும். இன்னொரு பக்கம் பச்சரிசி இடிச்சி, கருப்பட்டி போட்டு பிசைஞ்சு, கொதிக்க கொதிக்க பணியாரம் ரெடி ஆகிட்டு இருக்கும். இன்னும் சில பேர் சுக்கும் இன்னும் சிலதுகள போட்டு குடிக்க பானகாரம் செய்வாங்க, அடுத்தப் பக்கம் எல்லா பழங்களையும் துண்டு துண்டா நறுக்கி, தேன் ஊத்தி, பஞ்சாமிர்தம் ரெடியாகிட்டு இருக்கும்.

அதே நேரத்துல வீட்ல பெரிய மாமா மீதம் உள்ள பழங்கள், பலகாரங்கள், உடுப்பு, இன்னும் பல ஐட்டங்கள அடுக்கி கணேசன் மாமா முன்னாடி படைப்பாங்க. தீபாராதனை காட்டி, சாம்பிராணி புகைச்சதும் மாமி ஆவேசம் வந்த மாதிரி ஓடி வருவாங்க. கொஞ்ச நேரம் அழுவாங்க, யார் என்னன்னு பாக்காம எல்லாரையும் கட்டிபிடிச்சு, கைய புடிச்சு பாத்து சிரிப்பாங்க. உங்கள எல்லாம் பாக்க ஓடி வந்தேன்னு சொல்லுவாங்க. என்னை தூக்கி கொஞ்ச வந்தா ஒதுங்கி போவேன். “எலேய் மக்கா அன்னம், கேட்டியா, இவ என்ன மாதிரிலே”ன்னு என்னை பாத்து சிரிப்பாங்க. எனக்கு எல்லாமே நாடகத்தனமா தான் படும். எல்லாரையும் நலம் விசாரிப்பாங்க. இந்த வருஷம் அறுப்பு இப்படி பண்ணுங்க, கிழக்க கடலை போடுங்க, தெக்க கெழங்கு போடுங்கன்னு எல்லா அட்வைசும் பண்ணுவாங்க. கணேசன் மாமாவுக்கு கக்கன் (தேங்காய் பால்ல இருந்து எண்ணெய் எடுக்கும் போது பிரிஞ்சி வர்ற பகுதி) ரொம்ப பிடிக்குமாம். மாமி, அடுப்பு சட்டியில கை விட்டு சுட சுட எடுத்து தின்னுவாங்க. வெந்துட்டு இருக்குற பணியாரத்த பாதி வேக்காடுல கைய விட்டு எடுத்து தட்டுல வச்சு எங்களுக்கு தருவாங்க.

அடுத்தடுத்து வந்த வருசங்கள் எங்க குடும்பத்த தலைகீழ புரட்டி போட்டுச்சு. மாமாக்கள், சித்திகள்ன்னு எல்லாருக்கும் கல்யாணம் ஆக, சண்டை, பொறாமைன்னு குடும்பத்துக்குள்ள இருந்த ஒற்றுமை சிதறி தான் போச்சு. தாத்தா வீடு ஆள் இல்லாம தனியா இருந்துச்சு. ஆனாலும் வருசாவருசம் எல்லாரும் அங்க கூடுவோம். பெரிய மாமி இந்த காலகட்டங்கள்ல எல்லாரோடும் பகையாகி போனாங்க. குடும்பத்துல யார் கூடவும் பேச மாட்டாங்க.

ஒவ்வொரு வருஷம் கன்னி பூஜையப்பவும் மாமிய தவிர வேற எல்லாரும் அங்க கூடிடுவோம். மாமி இல்லாமலே பூஜை ஆரம்பிக்கும். தீபாராதனை காட்டி, சாம்பிராணி போட்டதும் மாமி அவங்க வீட்ல இருந்தே அழுதுட்டே ஓடி வருவாங்க (ரெண்டு வீட்டுக்கும் தூரம் கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர்). வந்தவங்க, வழக்கம் போல எலேய் மக்கான்னு கட்டிபிடிக்க தொடங்கிடுவாங்க. அந்த நேரம் அவங்க மனசு தெளிஞ்ச நீரோடையா இருக்கும். எல்லார் மேலயும் அவங்க காட்டுற அக்கறை, நெகிழ்ச்சி, அறிவுரைன்னு சங்கரியா இதுன்னு எல்லாருக்கும் ஆச்சர்யமா இருக்கும். “சங்கரி (அவங்க தான்) மனசு பொறாமை பிடிச்சது. இந்த குடும்பத்துக்குள்ள அவள சேக்காம இருங்கடே, அதான் உங்களுக்கு நல்லது. அவ புத்தினால தான் அவ புள்ள ஓடி போய் சீரளியுரா”ன்னு அவங்களே மாமாவா வந்து சொல்லுவாங்க.

அப்படி தான் அந்த வருஷம், கொதிக்க கொதிக்க பலகாரத்த எடுத்து சின்ன மாமா கைல குடுத்து, நீயும் வந்துருவலே என்கூடன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. மாமா கைல எண்ணெய் பட்டு பொத்து போச்சு. ஆனா மாமி எழுந்து வந்தப்ப ஒரு காயம் இல்ல. அந்த வருசமே சின்ன மாமா செத்துப் போனாங்கன்னு நான் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன்.

இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு அம்மாவ தனியா கூட்டிட்டு போய் அழு அழுன்னு அழுதாங்க. அம்மா வந்தப்ப முகம் இறுகி இருந்துச்சு. அப்படி அம்மாவ நான் பாத்ததே இல்ல. அதுக்கப்புறம் அம்மா ரொம்ப உறுதியா இருந்தா. அவ கண்ணுல கண்ணீர நான் பாத்ததேயில்ல. எப்பவாவது கணேசன் மாமா பத்தி பேசுவா. மாமாவுக்கு சட்டை வேணுமாம்ன்னு சொல்லுவா. எடுத்து குடுப்பா. முக்கியமா என்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்டா. ரெண்டே வருசத்துல தலைல இடி விழுந்தாப்புல எங்கள விட்டுட்டு அவ அண்ணன் கூடவே போய்டா.

கடந்த ரெண்டு வருசமா அடுத்த வாரிசுங்க, அதான் நாங்க தலையெடுக்க ஆரம்பிச்சுட்டோம். யார் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நாங்க ஒற்றுமையா இருக்கோம். ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் எல்லாரும் கூடி அன்பை பகிர்ந்துக்குறோம். சங்கரி மாமி மட்டும் இன்னமும் வீட்டை விட்டு வராமலே இருக்காங்க...

இந்த வருசமும் என் குடும்பத்துல கன்னிபூசை உண்டு. வராத மாமியும் வருவாங்க... எல்லாம் கணேசன் மாமா செயல்...

Saturday 4 April 2015

பார்த்திக்காக - 5



பார்த்தி,

வாழ்க்கைல சந்தோசமான தருணங்கள்ன்னு
யோசிச்சு பாத்தா, நீயும் நானும்
சேர்ந்திருக்குற எல்லா தருணமே
சந்தோசமானதுன்னு தான் சொல்லுவேன்...

அடேய், என்ன முறைக்குற,
சரி சரி, சண்டை போட்டுட்டு
இருந்த தருணமும் சந்தோசமானது தான் போதுமா?

கண்ணு ரெண்டையும் உருட்டுறத பாரு...
நான் கோவமா இருந்தா சாருக்கு ரொம்ப ஜாலி...
ஜன்னல் வழியா அந்த மேனகாவ
சைட் அடிக்க கிளம்பிடுற...

உன்னையெல்லாம் எந்த
ரகத்துல சேர்க்கன்னே தெரியல...
நீ இருந்தாலும் இம்ச, இல்லனாலும் இம்ச...

நேத்து என்னடானா அந்த மாலதிக்கு
ஒரு கவிதை எழுதி ரகசியமா அனுப்பி வச்சுட்டு
மாலதிய மட்டும் தூக்கிட்டு
ப்ரியம்வதனான்னு என் பேரை நிரப்பி
என்கிட்ட நீட்டுற?

நீ எந்த நேரம் எப்படி டைப் டைப்பா முழிப்ப
எந்த நேரம் ஈசிகிட்டு வருவ,
எதுக்கு என்னை நெருங்குற
எல்லாமே அத்துப்படிடா எரும...

ஐயோ, ரொமாண்டிக்கா ஒரு லெட்டர்
எழுதலாம்னு பாத்தா,
உன் பேரை எழுதினதுமே இப்படி தாண்டா
கிறுக்கத் தோணுது...

என்னோட அழகான கவிதைய அனுபவிக்க
உனக்கு குடுத்து வைக்கல...
அவ்வளவு தான் சொல்லுவேன்...

இழிக்காத, போய் தூங்கு...
கனவுல நான் தான் வருவேன்...
வேற யாராவது வந்தா கொன்றுவேன்...

இப்படிக்கு,
அன்பும் பண்பும், பாசமும் நிறைந்த ப்ரியம்வதனா
(நம்பிரு, இல்ல கழுத்துல கை வைப்பேன்)

Friday 3 April 2015

நானும் என் பலவீனங்களும்



நாம எல்லாருமே எல்லா விதத்துலயும் பெர்பெக்ட்ன்னு எப்பவும் சொல்லிடவே முடியாது. ஆனாலும் நம்மோட நெகடிவ் பக்கத்த நாம எப்பவுமே மறைச்சு வைக்கத் தான் ட்ரை பண்ணுவோம். எந்த ஒரு விசயமா இருந்தாலும் நம்மோட பாசிட்டிவ் பக்கங்கள் தவிர்த்து நாம எதையும் வெளிப்படுத்த தயாரா இருக்குறதில்ல.

சரி, இப்ப இதெல்லாம் எதுக்கு. நான் சொல்ல வந்தது என்னோட எதிர்மறை அதாவது நெகடிவ் பக்கத்த பத்தி. இத பத்தி நான் முதல் முதல்ல பேஸ்புக்ல தான் போஸ்ட் போட்ருந்தேன். கோவை ஆவி அண்ணா இன்பாக்ஸ் ஓடி வந்து இந்த மாதிரி பதிவுகள் பொதுவெளில வேணாமேன்னு சொன்னார். மறுவார்த்தை பேசாம ஓடிப் போய் அத தூக்கிட்டு, எடுத்துட்டேன் அண்ணான்னு சொன்னேன். ஆமா, அவர் சொன்னது எனக்கு சரியா பட்டுச்சு. எல்லாரும் அத சரியா புரிஞ்சுப்பாங்களாங்குறது சந்தேகம் தான். காரணம் நான் அதுல என்னோட நெகடிவ் பக்கத்த மட்டும் தான் சொல்லியிருந்தேன்.

சின்ன வயசுல இருந்து பிடிவாதம், அடம், கோபம்னு எல்லாமே எனக்கு உண்டு. ஆனா அந்த அடமும் கோபமும் யாராவது தப்பு செய்தா தான் அதிகமா வரும். ஒருத்தங்க தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சா யாரா இருந்தாலும் சண்டை போடுவேன். எதிர்த்து கேள்வி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ஆனா அத மீறி சில விஷயங்கள் விட்டுக் குடுப்பேன். எவ்வளவு தான் பகையாளியா இருந்தாலும் அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப் போய் முதல் ஆளா கைக்குடுப்பேன். இதனாலயே எனக்கு என்னை புரிஞ்சுகிட்ட பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க. எந்த நிலையிலும் என்னை விட்டுக் குடுக்க மாட்டாங்க. காரணம் அவங்களுக்கு தெரியும் நான் எப்படின்னு.

கோபம்னு வந்துட்டா அப்பாவா இருந்தாலும் விட மாட்டேன். அவங்க செய்தது தப்புன்னு அவங்க ஒத்துக்குற வரைக்கும் இல்ல, அடுத்தும் அவங்க அத திருப்பி செய்யக் கூடாதுன்னு எல்லாம் மிரட்டுவேன். வாக்குறுதி வாங்குவேன். ஆனா இதெல்லாம் நியாயமான கோபம். இப்பவும் இந்த மாதிரியான கோபம் எனக்கு வரும். இதுல தப்பு இருக்குறதா எனக்கு தெரியல...

ஆனா, நான் காரணமே இல்லாம கோபப்பட்டுருக்கேன். எத்தனையோ விதத்துல பலரை காயப்படுத்தியிருக்கேன். இதெல்லாம் ஏன் நடந்துச்சு?

சர்ஜரி, ரேடியேசன், ஹீமோன்னு ஒரு மாதிரியா அழுத்தத்துக்குள்ளயே வாழ்ந்த நாள் அது. அம்மா ஏதாவது சாப்பிட குடுத்தா கூட கத்துவேன். வேணாம் போன்னு தூக்கி விசிறியடிப்பேன். அடுத்த நிமிஷம் இதே சாப்பாட்டு தட்ட தூக்கி எரியுற அப்பாவ திருத்த நானும் தம்பியும் போடுற நாடகம் எல்லாம் நியாபகம் வரும். ஓடிப் போய் பைத்தியம் பிடிச்ச மாதிரி விசிறியடிச்ச சாப்பாட்டு தட்டுல எல்லாத்தையும் வழிஞ்சு வைப்பேன்.

அம்மா எதுவுமே சொல்ல மாட்டா. என் கூட சேர்ந்து எல்லாத்தையும் ஒவ்வொரு சோத்து பருக்கையா பொறுக்குவா. என்னை பிடிச்சு ஓரமா நிக்க சொல்லிட்டு தரைய கிளீன் பண்ணுவா. எனக்கு மன்னிப்பு கேக்கணும்ன்னு கூட தோணாது. பேசாம போய் படுத்துருவேன். அப்ப தான் அவளோட அந்த கை என் முதுகுல படும். அவ கைப் பட்ட அடுத்த நொடி உடைஞ்சு போய் ஓன்னு அழ ஆரம்பிச்சுடுவேன். இன்னும் அழுத்தம் அழுத்தமா கட்டிப் பிடிப்பா. திமிறி பாப்பேன். ஒரு கட்டத்துல அடங்கிடுவேன்.

அப்புறமா என்னன்னெவோ புலம்ப ஆரம்பிப்பேன். எல்லாத்தையும் கேப்பா. மெதுவா எழுந்துப் போய் அடுத்து சாப்பாடு எடுத்துட்டு வருவா. என் முன்னால உக்காந்து என் கண்ணையே பாத்துட்டு இருப்பா. திடீர்னு என் புள்ள எவ்வளவு அழகுன்னு சொல்லுவா. பட்டுன்னு வெக்கமா சிரிப்பான்னு தெரியாது, ஆனா சங்கோஜமா நெளிவேன். சரி சரி, சாப்டுன்னு ஊட்டி விடுவா. அந்த சாப்பாட்ட நான் தின்னு முடிக்குறதுக்குள்ள சகஜமாகி, உனக்கு சமைக்கவே தெரியல லெட்சுமி, பாரு உப்பு ஜாஸ்தியா போட்ருக்கன்னு நக்கல் அடிப்பேன். இருடி, நாளைக்கு இன்னொரு கை உப்பு சேத்து அள்ளிப் போடுறேன்னு அம்மா சொல்லுவா. அப்புறம் என்ன நீயே தின்னுன்னு நான் அவளுக்கு ஊட்ட, அவ எனக்கு ஊட்ட ஒரே லா...லா....லா.... தான்....

ஒரு உதவின்னு கேட்டு பிரெண்ட்ஸ் வருவாங்க. அதெல்லாம் முடியாது, நானென்ன உங்களுக்கு வேலைக்காரியான்னு பட்டுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவேன். அவங்க மனசு எவ்வளவு நொறுங்கி போயிருக்கும்ன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. ஆனா என்னோட மூளை வார்த்தைகள வெளில விட்ட உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும். சட்டுன்னு பல்லை கடிச்சுட்டு சரி சரி சாரின்னு சாரி கேப்பேன். அதெப்படி அவங்க மன்னிப்பாங்க, அவங்க மன்னிப்பாங்கன்னு நாமளும் எதிர்பாக்க கூடாது இல்லையா... ஒண்ணுமே பேசாம அந்த இடத்த விட்டுப் போய்டுவேன். அப்புறமா அவங்க கேட்ட உதவிய கடகடன்னு செய்து முடிச்சுட்டு, அதான் சாரி கேட்டுட்டேன்ல, அப்புறமும் என்ன மூஞ்சிய தூக்கி வச்சுட்டு, நீ என்ன பெரிய கொம்பனா/கொம்பியா ன்னு கேட்டு ஒரு வழியா அவங்கள சிரிக்க வச்சு, தோள் மேல கைப்போட்டு கதைபேச ஆரம்பிச்சுடுவோம்.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே மாதிரியான ஒரு சூழ்நிலைல பாட்டி மேல இருந்த கோபத்துல கைல இருந்த சொம்ப தூக்கி வீச, ஆச ஆசையா நான் வாங்கி வச்ச மீன் தொட்டி உடைஞ்சு போச்சு. அப்பா, தம்பி எல்லாரும் அப்படியே அசையாம நின்னுட்டு இருக்காங்க. நான் படார்ன்னு கதவ சாத்திட்டு பெட்ல வந்து விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஐயோ என் மீனுக்கு என்னாச்சுன்னு ஞானோதயம் வர ஓடிப் போய் கதவ மடீர்ன்னு தொறந்தா, அப்பாவும் தம்பியும் மீன எல்லாம் பிடிச்சு இன்னொரு பக்கெட்ல போட்டு வச்சிருந்தாங்க. அப்பா என்னைப் பாத்ததும் சிரிச்சாங்க. நான் மறுபடியும் கதவ படீர்னு சாத்திட்டேன்.

காலைல பத்து மணிக்கு நான் எழுந்து வந்து பாத்தா அதுக்குள்ள மீன் தொட்டி ரெடி ஆகி, மீன் எல்லாம் உள்ள தூக்கி போட்டுட்டு இருந்தான். . ஓடி போய் தம்பியப் பாத்து சிரிச்சேன். அவன் தான் உம்மணாமூஞ்சி ஆச்சே, மீன் வலைய என் கைல தந்துட்டு அவன் பாட்டுக்கு போய்ட்டான். பாட்டி வாயத் தொறந்து பேசக்கூடாதுன்னு அப்பா சொல்லிட்டார் போல, அவங்களும் வாயே தொறக்கல. அப்புறம் காலேஜ்க்கு ஏன் வரல, உடனே வான்னு போன் வர கடகடன்னு கிளம்பி போயிட்டேன். சாயங்காலம் திரும்பி வந்தப்ப பேக் டு நார்மல்...

இதுல இருந்து எல்லாம் என்னால மீண்டு வர முடிஞ்சதுக்கு காரணம் நான் மட்டும் தான் காரணம்ன்னா நினைக்குறீங்க?

கண்டிப்பா இல்ல... அன்னிக்கி நான் சாப்பாட்டுத் தட்ட விசிறியடிச்சுட்டு போனப்ப எனக்கென்ன, உனக்கு அவ்வளவு திமிரான்னு என் அம்மாவும் மூஞ்சை திருப்பிட்டு போயிருந்தா இன்னிக்கி இந்த காயு இருந்துருக்க மாட்டா. இன்னும் கோபமும் வெறியும் அதிகமாகி ஒரு பைத்தியக்காரியா தான் உலாவிட்டு இருந்துருப்பா. மன்னிப்பு கேட்ட உடனே மன்னிக்கணும்ன்னு என் பிரெண்ட்ஸ்க்கு அவசியம் இல்ல. அப்படி அவங்க மன்னிக்காம போயிருந்தா நட்பு வட்டத்துக்குள்ள யாருமே நேசிக்க முடியாத ஒரு விரோதியா தான் நான் மாறி போயிருப்பேன். மீன் தொட்டிய நான் உடச்சப்ப அப்படியே போகட்டும்னு விட்டுட்டு அப்பாவும் தம்பியும் போயிருந்தா, மீன் செத்து போச்சுன்னு என் ஆத்திரம் அதிகமா தான் ஆகியிருக்கும். விட்டுக்கொடுத்தலுக்கான எந்த வித புரிதலும் எனக்கு புரியாமலே போயிருக்கும்.

நல்லா பழகிட்டு இருப்போம். திடீர்னு ஒருத்தர் நமக்கு எதிரா செயல்படுவார். நிஜமா நாம அவங்கள நேசிச்சோம்னா உடனே யாரையும் வெறுத்திட முடியாது இல்லையா... அவங்களோட அந்த செயல்களுக்கான காரணம் என்னன்னு நாம நேரடியாவே அவங்க கிட்டயே கேக்குறதால ஒண்ணும் நாம குறைஞ்சு போய்ட மாட்டோம். எப்பவுமே நட்புக்குள்ள பிரச்சனைன்னா நான் சம்மந்தப்பட்டவங்க கிட்ட நேரடியாவே கேட்டு என்னோட சந்தேகத்த தீத்துப்பேன். இதனால சில விலகல்கள் மாறி இன்னும் அதிகமா நெருங்கியதும் உண்டு. சில பேர இவங்க நட்புல இருக்க வேண்டிய ஆள் நாம இல்லன்னு புரிஞ்சு விலகி வந்ததும் உண்டு. எல்லாருக்குமே அவங்கவங்க எப்படி இருக்கணும்ன்னு முடிவெடுத்துக்குற உரிமை உண்டு இல்லையா...

சரி, சொல்ல வந்த விசயத்த விட்டு விலகிப் போறேன்னு நினைக்குறேன். இந்த மாதிரியான டிப்ரஸ்ட் பெர்சன் அதாவது மன அழுத்தத்துல இருக்குறவங்கள நீங்க சந்திக்கலாம், கடந்து வந்துருக்கலாம். நான் சொல்ல வர்றதெல்லாம், அவங்கள சந்திக்குற போது அவங்க நிலைல நம்மள பொருத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாக்கலாம். நாம இப்படியான ஒரு நிலைல இருந்தா, மத்தவங்க நம்மள எப்படி ட்ரீட் பண்ணணும்ன்னு எதிர்ப்பார்ப்போம்? அப்படி நாம அவங்கள ட்ரீட் பண்ணலாம் இல்லையா?

என்னை சுத்தி உள்ளவங்க என்னை சரியா ஹேண்டில் பண்ணினதால தான் இன்னிக்கி காயு உங்க கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கா... அப்போ உங்க பக்கத்துல இருக்குறவங்கள நீங்க சரியா ஹேண்டில் பண்ணினா எத்தனையோ காயுக்கள், அவங்கள அவங்களே உணர நீங்க உதவியா இருக்கலாமே...

கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விட்டுக்குடுத்தல், கொஞ்சமே கொஞ்சம் அன்பு... இதெல்லாம் இருந்தா போதுமே... சக மனுசன நேசிக்க.... அவனும் தன்னை உணர்ந்துக் கொள்ள....

லவ் யூ ஆல்.... லவ் யூ பார் எவர்.....