Monday 30 December 2013

இது என் அம்மா...என்னடா இவ, மாம்பழத்தோட படம் போட்டுருக்காளேன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. காரணம், இது என் அம்மா...

ஆமா, அம்மாவே தான். என்னை பத்து மாசம் சுமந்து பெத்த அம்மாவே தான். அதெப்படின்னு கேக்குறீங்களா?

இந்த பழம் பழுத்து வந்தது ஒரு சாதாரண மரத்துல இருந்து இல்ல. என் அம்மாவோட சரீரம், இந்த பூமி சுழற்சியினால பதபடுத்தப் பட்டு, அவளோட ஒவ்வொரு அணுவும் உரமா, உயிரா வேர் வழி பரவி, அழகா கிளையா, இலையா, இளந்தளிரா மாறி, பருவத்தோட பூவாகி, பிஞ்சாகி, காயாகி, இப்போ கனியாகி இருக்கா...

அம்மா பத்தி இன்னும் சந்தேகம் இருந்தா இத பாத்து தெரிஞ்சுக்கோங்க...

அப்புறம், இன்னொரு விஷயம் என்னன்னா, இது மாம்பழ சீசனே இல்ல. ஆனாலும் இந்த நேரம் காய்த்ததால மழைல கொஞ்சம் மாட்டிகிட்டு. அதனால அணில்கள், மற்ற மர விலங்குகள், பறவைங்கன்னு எல்லாரும் சாப்பிட்டு போக மொத்தமே அஞ்சு பழம் தான் கிடைச்சதா சித்தப்பா கொண்டு வந்து தந்துட்டு போனாங்க...

இங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், அன்னிக்கி முழுக்க (29/12/13) மனசு கொஞ்சம் அலைபாஞ்சுட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க தூக்கம் இல்லாம, எதையோ நினச்சு குழம்பிட்டு, எதுவுமே தப்பாகிட கூடாதுன்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்துச்சு. சாயங்காலம், எங்க தென்னந்தோப்புல தாவி தாவி விளையாடிட்டு, அதுகளோட வாழ்வாதாரத்த சந்தோசமா வச்சிக்கிட்டு இருந்த அணில்ல ஒண்ணு வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே துடிதுடிச்சி உயிர விட்டுடுச்சு. எல்லாமா சேர்ந்து என்னை மொத்தமா சோர்வடைய செய்தப்போ தான் சித்தப்பா அம்மாவ கொண்டு வந்து என்கிட்ட சேர்த்தாங்க.

இத விட வேற என்ன நிரூபணம் வேணும்க, அம்மா என் கூடவே தான் இருக்கான்னு சொல்றதுக்கு. நேத்து கார்த்திக் இன்னொரு விஷயம் சொன்னார், உன் அம்மா அவங்க ஆயுள உனக்கு குடுத்துருக்காங்கன்னு. அது எத்தனை உண்மையான வார்த்தைன்னு என்னை முழுசா அறிஞ்சவங்களுக்கு தெரியும்....

இப்போ நான் வாழுற இந்த ஒவ்வொரு நொடியும் என் அம்மாவோட ஆயுள் தான்...

அம்மாவுக்கு எப்பவுமே இயற்கை மேல தணியாத காதல். அத விட தணியாத காதல் அப்பா மேல இருந்துச்சு. என்கிட்ட ஒருத்தர் கேட்டாரு, அம்மா பத்தி மட்டுமே எழுதுறீங்களே, அப்பா பத்தி ஏன் எழுதலன்னு. எனக்கு எழுத தோணலங்குறது தான் நிஜம். காரணம், எப்போ எல்லாம் நான் காதல உணர்றேனோ, எப்போ எல்லாம் அமைதிய உணர்றேனோ, எப்போ எல்லாம் அஹிம்சைய உணர்றேனோ, அப்போ எல்லாம் நான் அவங்க ரெண்டு பேரையுமே உணர்றேன். இங்க, அம்மாங்குற வார்த்தைக்குள்ள ரெண்டுபேருமே அடங்கிடுறாங்க. அம்மா எனக்கு அவ ஆயுசை குடுத்தா, அப்பா, எனக்கு அவளோட அருகாமையை குடுக்குறார். இத தவிர எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல...


இந்தா, ஒரு மாம்பழம் மிச்சம் இருக்கு, இந்த அப்பாவ தின்ன விட்ற கூடாது... நான் போய் ஒரு தடை உத்தரவு போட்டுட்டு வர்றேன்.....

டைரியின் ஆட்டோகிராப்...


வருஷ கடைசி... எல்லாரும் அவங்கவங்க ஆட்டோகிராப்ப திரும்ப பாத்துக்குறாங்க. நான் கூட திரும்பி பாக்க ஏதாவது ஆட்டோகிராப் இருக்கான்னு யோசிச்சு பாத்தேன், இந்த ஆட்டோகிராப் வாங்குறதே பெரிய ஆட்டோகிராப் தானேன்னு அத பத்தி சொல்ல முடிவு பண்ணிட்டேன்.

அது ஒரு அழகிய டென்த் ஸ்டான்டர்ட் பருவம். டென்த் எக்ஸாம் ஆரம்பிக்குறது முன்னாடி என்னோட கிளாஸ் மேட்ஸ் எல்லாரும் கைல ஆள் ஆளுக்கு ஒரு ஆட்டோகிராப் புக்கோட அலைஞ்சுட்டு இருந்தாங்க. நமக்கு இதுல எல்லாம் ஏனோ சுத்தமா நம்பிக்கையே இல்ல. அதுலயும் எங்க கேங்க் கொஞ்சம் அராத்து பார்ட்டிங்க கூட... இந்த ஆட்டோக்கிராப் வாங்குறவங்கள எல்லாம் கடுமையா நக்கல் பண்ணிட்டு ஜாலியா திரிஞ்சுட்டு இருந்தோம்.

அப்போ தான் என் கேங்க்ல இருந்த ரபீக் ஒரு ஆட்டோக்கிராப் புக்க கொண்டு வந்து நீட்டினான். அந்த பக்கி கண்ணு எல்லாம் வேற கலங்கி போய் இருந்துச்சு. எதுக்குமே அசராத நாங்க எல்லாம் ஒரு நிமிஷம் அரண்டு போய் உக்காந்து இருந்த குட்டிசுவர் மேல இருந்து படார்ன்னு கீழ குதிச்சுட்டோம் (நாங்க உக்காந்து இருந்தது ஒரு சமாதி. பாவம் யாரையோ அங்க புதைச்சு எங்கள எல்லாம் அவர் தூக்கி சுமந்துட்டு இருந்தாரு. போர் அடிச்சா அது மேல ஏறி உக்காந்து தான் அரட்டையே அடிச்சுட்டு இருப்போம்). எங்க கேங்க்ல கலான்னு ஒருத்தி உண்டு. அவ தான் ஓடி போய் லூசாடா நீ, ஆட்டோக்கிராப் வாங்குறது நம்ம பிரெண்ட்ஷிப்புக்கே அவமானம்ன்னு சட்டைய புடிச்சு உலுக்குறா. பாவம், என்ன நினைச்சானோ கண்ண தொடச்சுகிட்டே திரும்பி போய்ட்டான். அதுவரைக்கும் கலகலன்னு இருந்த எங்க டீம் அப்படியே ஸ்லோமோசன்ல பீல் ஆகி, திரும்பி நடக்க ஆரம்பிச்சுட்டோம்.

அப்புறம் சாயங்காலமா வீட்ல வழக்கம் போல அரட்டை கச்சேரி நடத்திட்டு இருந்தப்போ அந்த பயல பத்தியே எல்லாரும் பேசிட்டு இருந்தோம். எதோ ஒரு சோகம் எல்லார் மனசுலயும் குடியிருக்க ஆரம்பிச்சுடுச்சு. நிஜமாவே நாம எல்லாம் பிரிஞ்சிருவோமோன்னு பயம். அப்போ தான் அம்மா சொன்னாங்க, இதெல்லாம் வாழ்க்கைல அடுத்தடுத்து வர்ற கட்டங்கள். எல்லாத்தையும் பேஸ் பண்ணனும். நீங்க ஒண்ணா இருக்க போற நேரம் வேணும்னா மாறலாம், ஆனா அன்பு இருக்கும்தானேன்னு.

அடுத்த நாள் எல்லார் கைலயும் ஆட்டோகிராப் நோட். நான் மட்டும் தான் வெறும் கைய வீசிட்டு போயிருந்தேன். அங்க போய் தான் அடடா, நாமளும் அப்பாகிட்ட ஒண்ணு வாங்கி கேட்டுருக்கலாமோன்னு தோணிச்சு. சரி, நாளைக்கு கொண்டு வரலாம்ன்னு முடிவு பண்ணி, எல்லாருக்கும் ஆட்டோகிராப் நோட்ல எழுதி குடுத்து அப்படியும் இப்படியுமா ஒரு நாள் கடந்து போச்சு. அப்பா வேற அன்னிக்கி பாத்து மாடு பிடிக்க எங்கயோ தூரமா போய்ட, எனக்கு ஆட்டோகிராப் நோட் வாங்கி தர யாருமே இல்ல.... அவ்வ்வ்வ்....

அப்புறம் அம்மா, ஒரு டைரி எடுத்து தந்தாங்க. இத கொண்டு போன்னு சொல்லி. அத வாங்கிட்டு போய் ஒருத்தி கைல குடுத்து, எல்லார்கிட்டயும் ஆட்டோகிராப் வாங்கி தந்துருன்னு குடுத்துட்டேன் (பின்ன, நாமளே போய் கேட்டா நம்ம கெத்து என்ன ஆகுறது?)

என்னோட டைரி ஒருத்தர் கைல இருந்து அடுத்தவர் கைக்குன்னு மாறி மாறி போய் சாயங்காலமா என்கிட்ட திரும்பி வந்துச்சு. அந்த நாள்க்கு அப்புறம் ஸ்டடி ஹாலிடேஸ். அடுத்து எக்ஸாம் அன்னிக்கி தான் எல்லாரும் மறுபடியும் பாக்க முடியும்ன்னு டாட்டா காட்டிட்டே எல்லாரும் கிளம்பி வந்தாச்சு. ஆனாலும் எங்க கேங்க் தான் யார் வீட்லயாவது ஒண்ணா தானே இருப்போம். அந்த தைரியத்துல அன்னிக்கி ஒருத்தி வீட்ல மீட்டிங்ன்னு பிக்ஸ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

வீட்டுக்கு வந்ததும் டைரி எங்க, டைரி எங்கன்னு பரபரத்தது அம்மா தான். என்னை கூட படிக்க விடாம பேக்ல இருந்தே பிடிங்கிட்டாங்க. அப்புறம் நானும் அம்மா மடில படுத்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன்.

சில பேர், யூ ஆர் ஸோ ஸ்வீட், டோன்ட் பார்கட் மீ ன்னு வழக்கமான பார்முலால கிறுக்கி இருந்தாங்க. ஒருத்தன், இனியாவது அம்மாவ கஷ்ட்டப்படுத்தாத, அப்பா காச வீணாக்காதன்னு அட்வைஸ் மழை பொழிஞ்சிருந்தான். ஒருத்தி நீ பெரிய லாயரா வரணும்ன்னு எழுதி இருந்தா. மூர்த்தி, நீ ஒரு டாக்டரா வரணும்ன்னு ஆசைபட்டுருந்தான். அப்புறம் ஒண்ணு நீ ஒரு இஞ்சினியரா வரணும்னு வாழ்த்தி இருந்துச்சு. எனக்கு இப்போ ஒரே குழப்பம், நான் வருங்காலத்துல அப்படி என்னவா வர்றதுன்னு.

அப்படியே புரட்டிட்டு இருந்தப்போ யாரோ ஒரு பக்கி (அது யாருன்னு சரியா தெரியல, மறந்து போச்சு) நீ வருங்காலத்துல உன் புருசனோட சந்தோசமா இருக்கணும்ன்னு எழுதி வச்சிருந்துச்சி.

எனக்கு அவ என்னை அவமானபடுத்திட்ட மாதிரி ரோசம் பொத்துகிட்டு வந்துச்சு. எல்லார் முன்னாடியும் என்ன நிக்க வச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குற மாதிரி இருந்துச்சு. காரணம், அப்போ எல்லாம் இந்த லவ், கல்யாணம்ங்குற வார்த்தை எல்லாமே எங்கள பொறுத்த வரை பேட் வேர்ட்ஸ். என்னோட பி.பி, சுகர் எல்லாம் உச்சத்துக்கு போய், அப்படியே ஒரு பத்ரகாளியா மாறி எப்படி அவ இப்படி எழுதலாம்ன்னு கோபத்துல டைரிய கிழிக்க போனேன். அம்மா உடனே அத என்கிட்ட இருந்து பிடுங்கி, அவ சரியா தான் சொல்லியிருக்கான்னு சொல்லிட்டு டைரிய தூக்கிட்டு போய்ட்டாங்க. அம்மா மேல வந்த கோபத்துல சாப்ட கூட செய்யாம அப்படியே பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டேன்.

அன்னிக்கி முழுக்க மூட் அவுட், அப்புறம் வழக்கம் போல கலாட்டா, கொஞ்ச நாள்ல எக்ஸாம்ன்னு நாள் ஓடியே போய்ட்டுது.

ஆனா கடைசி வர ஆட்டோகிராப் எழுதி குடுக்காமலும், வாங்காமலும் ஒரு ஜீவன் இருந்துச்சுன்னு அப்புறமா ஒருநாள் தெரிஞ்சுது.. அது தான் கலா... கடைசி வர ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாம அவ கெத்தா கிளம்பி போய்ட்டா. அப்புறம் ரெண்டு வருசத்துல கல்யாணம் ஆகி, ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவும் ஆகி, இப்போ தான் தட்டு தடுமாறி பி.ஜி செகண்ட் இயர் படிச்சுட்டு இருக்காளாம். இது கிளை கதை.


அந்த டைரிய அதுக்கப்புறம் நான் பாக்கவே இல்ல, கண்டிப்பா எங்கயாவது கும்பலோட கும்பலா எதோ ஒரு வீட்ல இருக்கத்தான் செய்யும். அம்மா கண்டிப்பா அத ரொம்ப பத்திரமா வச்சிருப்பாங்க. ஒருநாள் பொறுமையா உக்காந்து தேடணும்.

Monday 16 December 2013

திருடா...!என் கனவு பிரதேசத்தில் 
கன்னமிட்டு நுழைந்து
தூக்கம் திருடி சென்றாயே திருடா…!

விழி வீசும் அம்புகளை தடுத்தே நான்
தனித்திருந்தேன்
வீச்சுத் திசைமாற்றி
எப்படி நீ குறுகுறுத்தாய்... திருடா...!

மனமென்னும் விசித்திரத்துள்
கனல் ஒன்று வைத்திருந்தேன்...
அசராமல் நீயும்
எப்படி அதை தீண்டி நின்றாய்... திருடா...!

லப் டப் கூச்சலிலிடும் இதயத்தில்
தரம்பிரித்து அடுக்கி வைத்தேன் ஏக்கங்களை ...
நான்கு அறைகளிலே எவ்வறையை
கள்ளமிட்டாய்… திருடா?

சின்ன சின்ன ஆசைகளுடன்
பெருங்கோட்டை ஒன்று கட்டிவைத்தேன்
என் மன்னவனாய் அனுமதியின்றி
எங்ஙனம் நீ குடியேறினாய்... திருடா?

சுவரும் வாசலும் இல்லா உணர்வுக்குள்
கள்ளச்சாவி போட்டு எதை திறந்தாய் திருடா?

சடசடவென கொட்டும் வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் அள்ளி
நிசப்தத்தை மட்டும் விட்டுச் செல்கிறாயே திருடா...!

உன் குண்டு கண்களுக்குள்
காந்தம் ஒளித்து வைத்து
என் நெற்றிப்பொட்டில்
வசியம் வீசுகிறாயே திருடா...!

கழுத்தோரம் மயிலிறகாய் இம்சித்து
புன்னகையை இதழ்களுக்கு பரிசளித்து
அவஸ்தையை அள்ளித்தெளித்து விட்டு
மறைந்து விடுகிறாயே திருடா...!

மொத்தமாய் என்னை திருடிக்கொண்டு
யாதுமறியாததுபோல் முகம் நோக்குகிறாயே திருடா...!

இனியும் நீ திருடக் கூடாதென்கிறேன்,
சரியென திருடிக்கொண்டே
தலையசைக்கிறாய் திருடா...!- இது ஒரு மறுப்பதிவு 

Thursday 12 December 2013

உன்னிடம் ஒரு யாசகம்...!
உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்கைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்கும்மென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டிய எனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!- இது ஒரு மறுப்பதிவு 

Wednesday 11 December 2013

இன்று ஒரு தகவல்


“முந்தைய நாளின் பகலுக்கு தொடர்ச்சியாய் வந்த இரவுக்கு ஓய்வு கொடுத்து என் இன்றைய பகல் வணக்கம் வரும் இரவுக்கான வரவேற்போடு”

அவ்வ்வ்வ் என்ன, எதுவுமே புரியலயா?

இது தாங்க நான் இன்னிக்கி உங்களுக்கு சொல்லி இருக்குற குட் மார்னிங்.

நல்லா கூர்ந்து கவனிச்சு பாருங்க, முடிஞ்சா கண்ணாடிய தொடச்சு விட்டுட்டு பாருங்க, முதல்ல புரியாத மாதிரி தான் இருக்கும், ஆனா எதோ புரியுற மாதிரி இருக்கும்.

இப்படி தான் நானும் புரியாம பல விசயத்தையும் உளறிக்கிட்டே இருக்கேன். ஆனாலும் எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சிடும். எனக்கு புரிஞ்ச உடனே, உங்களுக்கு குழம்பிடும்.

அப்படி தான் டெய்லி காலைல கிளம்புறது முன்னாடி எல்லாரையும் குழப்பி விட்டுட்டு போய்டணும்.

எப்படி தெரியுமா?

இந்தா நான் குழப்புறேன் பாருங்க, இன்று ஒரு தகவல் சொல்லி:

இன்று ஒரு தகவல் 1: திங்குறதுக்கே நேரம் இல்லாம அரக்க பறக்க பாஞ்சு போய் ஆபிஸ்லயோ, காலேஜ்லயோ, இல்ல ஸ்கூல்லயோ, அப்படியும் இல்லையா, குட்டி சுவரிலோ போய் உக்காந்தாலும் இன்றைய தினம் திங்கட்கிழமைதானாம்...


இன்று ஒரு தகவல் 2: கிளிக்கு வாய் சிகப்பா இருப்பதாலும், பொண்ணு மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாலும் இன்றைய நாளில் விசேசமில்லை. இன்றைய நாள் செவ்வாயாக இருப்பதாலயே இன்று செவ்வாய் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 3: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று யாரோ சொல்லி விட்டு சென்று விட்டதால், அந்த வாக்கை பொய்த்து போகாமல் காப்பாற்ற நகை வியாபாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட நாளே புதன் கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 4: கழிந்து விட்ட நேற்று புதன்கிழமை என்பதாலும், கழியப்போகும் நாளை வெள்ளிகிழமை என்பதாலும், இரண்டுக்கும் இடையில் இன்று மாட்டிக்கொண்டதாலும் இன்றைய நாள் வியாழன் கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 5: இன்று ஆங்கிலத்தில் Friday என்பதால், தமிழில் வெள்ளிக்கிழமை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தினால் இன்றைய பொழுதின் பெயர் வெள்ளிக்கிழமையாம்...


இன்று ஒரு தகவல் 6: முந்தின நாள் அரக்கபரக்க வேலை செய்ததாலும், அடுத்த நாள் சோம்பேறியாய் தூங்க போற காரணத்தாலும், துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடைல இடிப்பட்டு கழியப் போற இன்றைய நாளின் பெயர் சனிக்கிழமையாம்.


இன்று ஒரு தகவல் 7: மிகவும் சோம்பலாகவே விடிந்து விட்ட காரணத்தாலும், இன்னும் சூரியனை கூட பலபேர் பார்க்காத காரணத்தாலும், சில பல ஆடுகள், மாடுகள், கோழிகள் கொலையுண்ட காரணத்தாலும் இன்றைய கிழமைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று பெயராம்....!


என்ன, அப்படியே ஏழு நாளுக்கும் ஏழு தகவலா சொல்லியாச்சா, இத எல்லாம் ஒரே நாள்ல சொல்லிடாம, ஒவ்வொரு நாளா வந்து, ஒவ்வொரு தகவலா தெரிஞ்சுகிட்டு போங்க.


நான் இப்போ தகவல் சொல்லி ரொம்ப களைச்சு போயிட்டேன்.ஹலோ, அந்த ஆப்பிள் ஜூஸ் எங்கப்பா?.

Tuesday 10 December 2013

தி நோட்புக் (The notebook- 2004) – திரைவிமர்சனம்சௌத் கலிபோர்னியால “சீபெர்க்”ன்னு ஒரு தீவு. அங்க ஒரு கார்னிவல் நடக்குது, அதாவது, நம்ம ஊரு பொருட்காட்சி மாதிரி ஒரே கொண்டாட்டம். அங்க வச்சி தான் நம்ம ஹீரோ நோவா ஹீரோயின் ஆலிய பாக்குறான். வழக்கமா நம்ம ஊர் சினிமால வர்ற மாதிரி, அவள பாத்ததும் அவ மேல பைத்தியம் ஆகிடுறான். அப்புறமா அவ பின்னாடியே சுத்தி, கொஞ்சம் கொஞ்சமா அவள வழிக்கு கொண்டு வந்து, அவள காதலிக்க வச்சு, கதை அப்படியே ஜாலியா போகுது.

கட், கட், கட். இதெல்லாம் ஆலியோட பதினேழு வயசுல நடந்த சம்பவம். அப்புறம் என்னாச்சுன்னு கேக்குறீங்களா, எல்லாம் நம்ம ஊர் பார்முலா தான். நோவா ரொம்ப ஏழை, ஆலி பெரிய பணக்கார குடும்ப பொண்ணு. எஸ். நீங்க நினைக்குறது சரிதான், இந்த ஏழை, பணக்கார ஏற்றத் தாழ்வுனால ஆலியும் நோவாவும் பிரிஞ்சுடுறாங்க. இல்லல, ஆலியோட அம்மாவால பிரிக்கப்படுறாங்க.

ஆலி மேற்படிப்பு படிக்க போய்டுறா. நோவா ஆர்மில சேர்ந்துடுறான்.

சரி, இது கதை. இதுல நான் ரசிச்ச விசயங்கள சொல்ல வேணாமா?

இந்த படத்துல ஆலி, நோவாவுக்குள்ள வர்றது முதல் காதல். அந்த முதல் காதலுக்கு மரணிக்கும் மரியாதை குடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஹஹா புரியலையா, அப்போ படத்த பாருங்க.

அப்புறம், ஆலிய பாத்த உடனே ஆஆஆ-னு வாயத் தொறக்குற நோவா, கடைசி வர மூடவே இல்லன்னு தான் சொல்லணும்.

ஆளே இல்லாத ரோட்டுல ஆலி கூட நடந்து போற நோவா, திடீர்னு நடு ரோட்டுல படுத்துகிட்டு அவளையும் படுக்க சொல்றான், இவன் என்ன பைத்தியமான்னு சிரிச்சுகிட்டே பக்கத்துல படுத்துகிட்டு, இப்போ வண்டி வந்தா, நாம என்னாவோம்ன்னு கேக்குறா. அவன் கூலா செத்து போவோம்னு சொல்லிட்டே பேசாம ரிலாக்ஸ் பண்ணுன்னு அவன் பாட்டுக்கு கண்ண மூடிட்டு படுத்துருக்கான்.

அந்த சீன பாக்குறப்போ எதோ சின்ன புள்ளைங்க விளையாடுற விளையாட்டு மாதிரியே இருக்கு. லூசு தனமா என்னவோ பண்றானேன்னு நினைச்சுகிட்டே அவளும் லூசு தனமா சிரிக்குறது இருக்கே, கவிதை கவிதை. ஆனா திடீர்னு வேகமா வர்ற கார பாத்து வீல்ன்னு அலறிட்டே ஓடி தப்பிச்சு, ஹஹஹஹஹா... பேய்த்தனமா சிரிக்குறா. ஆத்தீ.... நான் பயந்தே போயிட்டேன். ஆனா ரொம்ப ரொம்ப அந்த சீன ரசிச்சு ரசிச்சு பாக்கலாம்.

அப்புறம், நோவாவோட அப்பா கேரக்டர். நமக்கு ஒரு அப்பா இருந்தா இப்படி தான் இருக்கணும்னு வயசு பசங்கள ஏங்க வச்சிடுறார். அவரோட அன்பு, கனிவு, பையன் மேல காட்டுற பாசம் எல்லாமே அவ்வளவு ரசிக்கும் படியா இருக்கு. பையனோட காதலி அவன விட்டுட்டு போய்ட்டானாலும் அவன் ஆசை பட்ட விசயத்த அடைய வீட்டை வித்து காசு குடுக்குறார். அந்த நேரம் அப்பாவும் பையனும் ரொம்ப அழகா இருந்த மாதிரி எனக்கு தோணிச்சு. கொஞ்சம் கண்ணு வச்சிட்டேன்.

இந்த படத்தோட ஆரம்பமே, சுயநினைவு எல்லாம் மறந்து போன ஒரு வயசான பாட்டிக்கு, ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம்ல (முதியோர் விடுதி) வச்சு, ஒரு பெரியவர் ஒரு நோட் புக்கல இருக்குற ஒரு கதைய வாசிச்சு காட்டுற நிகழ்ச்சியா தான் வருது. அவர் தான் மெனக்கெட்டு அந்த பாட்டிக்கு இந்த லவ் ஸ்டோரிய சொல்றார்.

ஹலோ மக்களே....

ஏதாவது படத்த பாத்து நானும் விமர்சனம் பண்ணலாம்னு தான் பாக்குறேன், ஆனாலும் அதென்னவோ அப்படியே முழு கதையையும் உளறி கொட்டிடுறேன். அது என் தப்பு இல்லீங்க, அப்படியே எவ்வளவு ட்ரை பண்ணினாலும் இப்படி தான் உளற வருது. அப்புறம், இந்த படம் எல்லாம் வந்து பத்து வருஷம் ஆகிடுச்சு. படம் வசூல் சாதனை பண்ணிச்சா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா கண்டிப்பா இப்போ இத எல்லாரும் மறந்துருப்பாங்க. ஒரு அதர பழசான ஒரு படத்த நான் இப்போ ஏன் நோண்டி துருவி எழுதியிருக்கேன்னா, நான் இப்போ தானே இந்த படத்த பாத்தேன். அவ்வ்வ்வ்.....

எனக்கு இதுல ரொம்ப பிடிச்சது ஹீரோயினோட சிரிச்ச முகம். எப்போ பாத்தாலும் சிரிச்சுட்டே, எதையும் சீரியஸா எடுக்காம, அதெப்படி ஒரு பொண்ணால இருக்க முடியும்னு தெரியல. காதல வெளிப்படுத்துற விதமாகட்டும், அழுறதாகட்டும், அதுலயும் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க.

அந்த ஹீரோயின் தான் ரொம்ப வயசாகி, தலை எல்லாம் பஞ்சு பஞ்சா வெள்ளையா, எல்லாத்தையும் மறந்துட்டு, சீரியஸா மூஞ்ச வச்சுகிட்டு, பம்ப்ளிமாஸ் மாதிரி குண்டா இருக்காங்கன்னு சொல்றப்போ அத ஏத்துக்கவும், டைஜஸ்ட் பண்ணவும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.

எல்லாத்துக்கும் முக்கியமா இன்னொரு கதாபாத்திரம் கூட இந்த படத்துல உண்டு. அது தான் ஆலிக்கு நோவா வாங்கி குடுக்குறதா சொன்ன வீடு. ஆலி அவன விட்டுட்டு போயிட்டாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு தனியாளா அந்த வீட்டை புதுசா கட்டி முடிக்குறான்.

இந்த படத்துல எனக்கு பிடிக்காத ஒரு விசயமும் இருக்கு. ஆலியோட முதல் காதலாவது சில பல சம்பவங்கள்ல அடுக்கடுக்கா ஆரம்பிச்சு அழகா பூக்குது. ஆனா அவளோட ரெண்டாவது காதல் பட்டுன்னு வந்துடுது. அவனை பாத்த உடனே இவ மயங்கிடுறா, அவன் ப்ரோபோஸ் பண்ணின உடனே சந்தோசமா சிரிச்சுகிட்டே படக்குன்னு ஓகே சொல்லிடுறா. அவங்களோட அந்த காதல் விரிவா சொல்லாததாலோ என்னவோ எனக்கு மனசுல ஒட்டவே இல்ல.

ஏழு வருஷம் கழிச்சு, பழைய காதலன் கட்டின வீட்டை வச்சு அவன அடையாளம் கண்டுகிட்டு இரண்டு நாள் அவன் கூட வாழ்ந்து, தன்னோட பழைய காதலை புதுபிச்சுகிட்ட அவ, தனக்கு நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லி அவன் கிட்ட இருந்து விலகி ஓடி வந்து ரெண்டாவது காதலன்கிட்ட ஐ லவ் யூ டூன்னு சொல்றா.

“And they happily lived for ever”-னு பெரியவர் கதைய முடிக்கவும் who-ன்னு நியாபகப்படுத்திகிட்டே பாட்டியும் (ஆலி) சேர்ந்து நெகிழ்ந்து போறாங்க. அவரோட காதல புரிஞ்சுகிட்டு நான் மறுபடியும் உங்கள மறந்து போனா என்ன பண்ணுவீங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு அவர், எப்பவும் நான் உன்னை பின் தொடர்வேன்னு அவங்க கூடவே தூங்கிடுறார்.

காலைல அந்த லவ் பேர்ட்ஸ் ரெண்டும் சந்தோசமா தனி உலகத்துக்கு பறந்து போய்டுது.

அப்புறம் இன்னொரு விஷயம், இந்த படம் முழுக்க ஆளாளுக்கு கிஸ் பண்ணிட்டே இருக்காங்க. இவங்களுக்கு வாயே வலிக்காதான்னு நான் கூட கொஞ்சம் கவலையோட தான் பாத்தேன். இது ஒரு ஏ சர்டிபைட் படம். அதனால அங்கங்க மசாலாக்கள் இருக்க தான் செய்யும். அதுக்காக கட்டய எடுத்துட்டு என்னைய அடிக்க வராதீங்க, மீ எஸ்கேப்.


.

Monday 9 December 2013

உணராத பந்தம் இவள்...!
நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
நாள்காட்டியாய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!-இது ஒரு மறுபதிவு 

Friday 6 December 2013

இதோ இன்னுமோர் அக்னி பிரவேசம்...!


இதோ நான் இறந்து விட்டதாக
ஊர் சொல்கிறது...!

அவர்களுக்கு தெரியுமா?
உயிரை திரியாக்கி
என்னையே விறகாக்கி
என் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...!

உன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்
நம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து
உன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா?

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா?

என் காதலை உரமாய் போட்டு
வளர்த்து விட முனைந்த உன்னில்
களையாய் ஒருத்தி தோன்றிய
நாள் தான் காலம் மறக்குமா?

வேலிப் படரும் உன் கரங்களென்னவோ
மாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ
இன்னும் என்னுள் பிடுங்கி எறியவே
முடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா?

நீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை
உன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...
ஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்
என்னையே அழித்த கதை நீ அறிவாயா?

அக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...
இதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்
திசைமாறித் தழுவியதால்
அக்னி என்னை அணைக்க
உன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...!

ஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ
என் உடல் தான்... ஆனால் மனமல்லவோ
தகித்துக் கொண்டிருக்கிறது...!

.- இது ஒரு மறுபதிவு 

Thursday 5 December 2013

இணையத்தில் பெண்கள் நிலை...ஒரு விதை இருக்கு, அது அவ்வளவு ஈசியாவா முளைக்குது?

இல்லல

தூங்கிட்டு இருக்குற அது, கடினமான தோல துளைசுட்டு, தன் மேல மூடி இருக்குற மண்ணை தாண்டி கஷ்ட்டப்பட்டு தானே முளைக்குது. ஹைய்யோ, இவ்வளவு பெரிய ஓடு இருக்கே, கஷ்ட்டமா இருக்கே, நம்மள சுத்தி மண்ணு இருக்கே, இப்படி போட்டு நம்மள அழுத்துதேன்னு நினைக்காம, தன்னை மறைக்கும் ஓடுகிட்டையும், அழுத்துற மண்ணுகிட்டையும் இருந்து, தனக்கு தேவையான உந்து சக்திய கிரகிச்சு, போராடி வெளில வந்துடுது.

முதல்ல அதுகெல்லாம் ஒரு கைத்தட்டு....

நாம மட்டும் ஏன் எந்த கஷ்டமே இல்லாம முன்னேறணும்ன்னு நினைக்கணும்? அது சுயநலமில்லையா?

நமக்கு கஷ்ட்டம் வர வர சோர்ந்து போகாம, அதையே ஒரு பாடமா எடுத்து, அதுல இருந்து நல்ல விசயங்கள கிரகிச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறுற முயற்சி இருக்கே, அது கண்டிப்பா நல்ல பலன தரும்ங்க....

சரி, சரி, இப்போ நான் ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு, வந்த சொல்ல வந்த விசயத்த சொல்லிடுறேன்.

குட் மார்னிங்...

இணையத்தில் பெண்கள் – அப்படின்னு எழுதணும்னு ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அப்படி நாம எழுதினா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்களோன்னும் தோணிச்சு. சரி, அத எல்லாம் நமக்கெதுக்கு. நாம வந்த வேலைய கவனிப்போம்.

நான் இந்த பேஸ் புக்-ல 2010-ல இருந்து இருக்கேன். அதாவது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேலா இருக்கேன். இங்க பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா, இல்லையான்னு எல்லாம் அப்போ எனக்கு தெரியாது. எதோ விளையாட்டு தனமா உள்ள வந்தாச்சு.

ஆனாலும் நான் என்னோட போட்டோவ போடல, நெட்டுல இருந்து சுட்ட ரெண்டு கண்ணுங்க தான் என்னோட ப்ரோபைல் படம். கொஞ்ச நாள் போக போக, எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் அவங்க போட்டோவ வைக்க ஆரம்பிச்சாங்க, நான் கூட முக்கால்வாசி என் முகம் தெரியுற அளவு போட்டோ எல்லாம் வச்சேன். ஆனா எதோ ஒரு உள்ளுணர்வு, இது வேணாம்னு தடுத்துச்சு. அப்போ இருந்து, அத எல்லாம் சுத்தமா டெலிட் பண்ணிட்டு, இப்போ எனக்குன்னு ஒரு சின்ன அடையாளம், என்னை நல்லா தெரிஞ்சவங்க, புரிஞ்சவங்க நட்பு மட்டும் போதும்னு முடிவெடுத்துட்டு இன்னும் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கேன்.

இத்தன வருசத்துல, நான் புரிஞ்சுகிட்ட விசயத்த தாரளமா இங்க சொல்லலாம் தானே. அதனால தான் இந்த பேஸ் புக்ல பெண்களோட நிலைமை எப்படி இருக்குன்னு கொஞ்சமா யோசிச்சு பாத்தேன்.

ஒரு வகைல பாத்தா, இந்த பேஸ் புக், ரிலாக்ஸ் பண்றதுக்கு நல்ல ஒரு தளம். நம்மோட கருத்துக்கு ஒத்துபோறவங்க, கலகலப்பா பேசுறவங்க, ஒரு நல்ல நட்பு, இப்படி எல்லாமே இங்கயும் இருக்க தான் செய்யுது. குடும்ப பிரச்சனை, வீட்டு வேலை, வெளில ஆபிஸ் டென்சன், அது இதுன்னு ஏகப்பட்ட மெண்டல் பிரஸரோட இருக்குற பெண்களுக்கு பிரெண்ட்ஸ் கூட பேசி ரிலாக்ஸ் பண்ண இந்த பேஸ் புக் ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுது.

அது மட்டுமில்லாம, தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடி குடுத்து, அவங்களுக்கு கண்டிப்பா ஒரு தன்னம்பிக்கையும் குடுக்குது. எல்லாருக்கும் எவ்வளவோ திறமைகள் இருக்கும். அத எல்லாம் வெளிபடுத்த கூட முடியாம எத்தனையோ பேர் மனசளவுல ஒடுங்கி, தன்னோட சுயத்தையே தொலைச்சுட்டு இருக்காங்க. இந்த இன்டர்நெட் அவங்க பிரெண்ட்ஸ் மத்தியில அவங்களுக்குனு ஒண்ணு ரெண்டு கைதட்டையாவது வாங்கி குடுத்து அவங்கள சந்தோசப்படுத்துது. அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிக்கைய விதைக்குது.

என்னை பொறுத்தவரை சந்தோசம்னா எது தெரியுமா?

நான் யூ.ஜி படிச்ச காலேஜ்ல எந்த பிரச்சனைனாலும் என்னை தான் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பிரின்சிபால் ரூமுக்கு அனுப்புவாங்க. ஏன்னா பிரின்சிபால் கிட்ட அவ்வளவு ஈசியா தப்பிச்சுட முடியாது, திட்டு திட்டுன்னு திட்டி தீத்துடுவாங்க. அப்படி நான் உள்ள போனா, அங்க உள்ளவங்க கிட்ட என்னை பத்தி என்ன சொல்லுவாங்க தெரியுமா?

ஒண்ணாம் நம்பர் கே.டி, உடம்பு முழுக்க திமிரு, கொழுப்புக்கு பஞ்சமே இல்ல, ஆனா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுன்னு அப்படின்னு தான் இன்ட்ரோவே குடுப்பாங்க. அந்த நிமிஷம், நிஜமாவே ஒரு சந்தோசம் இருக்கும்.

நம்மோட கருத்த துணிஞ்சி சொல்றதும், நேர்மையா இருக்குறதும், போராடுற தைரியமும் இருந்தாலே மனசு சந்தோசம் ஆகிடுங்க.


அப்படி தான், இந்த பேஸ் புக்லயும் நிறைய பேர், ஒரு சந்தோசத்துக்காக வராங்க. இதுல சந்தோசம்குறது கண்டிப்பா அவங்க அவங்க வகுத்து வச்சிருக்குற வரைமுறைக்கு ஏற்ப மாறுபடுது. அவங்க ஆணோ பெண்ணோ, அவங்களோட சந்தோசத்தின் வரைமுறைல தான் சில நேரம் பிரச்சனையே ஆரம்பிக்குது.


என்னது, பிரச்சனையா? அதென்ன பிரச்சனை அப்படின்னு பதறுரவங்க, அப்படியே ஒரு நாற்காலிய போட்டு இப்படி உக்காருங்க.

பிரச்சனையே இல்லாத இடம்ன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க, அந்த பிரச்சனைல நம்மோட பங்கு என்னங்குறது தான் இப்போ பிரச்சனையே....

ஆரம்ப காலங்கள்ல அன்பை பரிமாறிக்குறது, திறமைகளை ஊக்குவிக்குறது, அப்படின்னு நட்பு வட்டத்துக்குள்ள நல்லா தான் போயிட்டு இருக்கும். அதுவே அந்த கூட்டத்துக்குள்ள ஒரு குள்ள நரி நுழைஞ்சிடுச்சுன்னு வைங்க, அப்புறம் நடக்குறத கொஞ்சம் நினச்சு பாருங்க....

ஒரு ஆண் ஒரு போட்டோ போட்டா அது அந்த அளவு கவனிக்கப்படுறது இல்ல... அவங்க போட்டோ கீழ வர்ற கமண்ட்ஸ் நிறைய இருந்துச்சுனா, அவங்க பிரெண்ட்ஸ் அவங்கள நல்லா கலாய்ச்சு வச்சிருப்பாங்க. அதுவே ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சுனா என்ன என்ன கமண்ட்ஸ் எல்லாம் வருதுன்னு பாத்துட்டு தானே இருக்கீங்க. நல்லா தெரிஞ்ச நட்பு வட்டங்களா இருந்தா அங்க பிரச்சனை குறைவு. அதுவே நட்பு வட்டத்த தாண்டும் போது? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இவ்வளவு ஏன், நான் என்னோட ப்ரோபைல்ல அட்வர்டைஸ்ல வர்ற சின்ன கொழந்தைங்க போட்டோ தான் வைக்குறேன், அங்க வந்தே செல்ல குட்டி, புஜ்ஜி குட்டி, ஐ லைக் யூன்னு கமன்ட் போடுறாங்க, இந்த படத்த வச்சிருக்குறது ஒரு பொண்ணு, அது அந்த பொண்ண காயப்படுத்தும்ன்னு ஒரு இங்கிதம் கூட தெரியாம. நான் அந்த மாதிரி யாராவது கமன்ட் போட்டா, கமன்ட் டெலிட் பண்ணிட்டு, சம்மந்த பட்ட ஆளையும் பிளாக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கேன். இதுக்கெல்லாம் டென்சன் ஆகி, வீணா ஏன் நம்மோட எனர்ஜி வேஸ்ட் பண்ணனும்னு.

ஏன், அப்படினா, பொண்ணுங்களுக்கு சுதந்திரம் இல்லையா, இங்லாந்துல போட்டோ போடலையா, அமெரிக்காவுல போடலையான்னு சண்டைக்கு வந்துடாதீங்க, அவங்க எல்லாம் போட்டோ போடுறாங்க, அதே நேரம், அதுக்கு வர்ற கமன்ட் என்னவா இருந்தாலும் எதுவா இருந்தாலும் அத ஒரு காம்ப்ளிமென்ட்டா தான் எடுத்துட்டு சந்தோசமா போறாங்க.

சினிமா துறை சார்ந்தவங்களுக்கு கண்டிப்பா ஒரு விளம்பரம் தேவைப்படுது, அதுவும், அவங்க அழகியல் சம்மந்தமா ஒரு விளம்பரம் தேவைப்படுது. அப்படி பட்ட சூழ்நிலைல அவங்க இந்த மாதிரி பிரச்சனைகள ஈசியா எடுத்துட்டு அதுல இருந்து கடந்து போய்டுறாங்க. இல்லனா, இத பத்தி நினைச்சுகிட்டே வருத்தபட்டுகிட்டே இருந்தா அடுத்து அவங்களால பீல்ட்ல நிம்மதியா நிலைக்க முடியாது.

அதுவே நம்ம நாட்டுல சினிமா, மாடலிங் தவிர்த்து மற்ற துறைகள்ல இருக்குற பிரபலங்கள் கூட அவங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் போது தடுமாறி தானே போறாங்க.

ஒண்ணு, நம்மள பத்தி யார் என்ன சொன்னாலும் அத கண்டுக்காம கடந்து 

போக தெரியணும், இல்ல அத காம்ப்ளிமென்ட்டா எடுத்துட்டு சந்தோசப்பட தெரியணும். ரெண்டுமே இல்லையா, நம்மோட திறமைகள வெளிப்படுத்தி நம்மளை இங்க, இந்த தளத்துல ப்ரூவ் பண்ணணும். இவங்க இப்படி தான்ன்னு ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி பாருங்க, நம்மோட புகைப்பட இமேஜ் ஒண்ணுமே இல்லன்னு தோணும்.

ஏன், ஏன், ஏன், இந்த ஆம்பளைங்க திருந்தினா என்ன, அவங்க பண்ற தப்புக்கு நாங்க ஏன் ஏன் போட்டோ போட கூடாதுன்னு கேள்வி கேட்டு கொந்தளிக்குறதுக்கு முன்னாடி நாம ஒரு விசயத்த பத்தி நல்லா யோசிக்கணும். இந்த பேஸ் புக் ஒண்ணும் நாம கண்டுபிடிச்ச விஷயம் கிடையாது. அவங்கள பொறுத்தவரை இதெல்லாம் ஒரு தப்பே கிடையாது. நம்மோட கலாச்சாரம் இங்க கட்டி காக்கப்படணும்னா கண்டிப்பா நாம தான் கட்டி காக்கணும். அது எந்த மாதிரின்னு தேவைப்படுற ஒவ்வொருத்தரும் தான் முடிவு பண்ணனும். கண்டிப்பா சமூகம் மாற வேண்டியது தான், அதுக்கு கொஞ்சம் பொறுமையா தான் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும்.

அதுவரைக்கும்,

நம்ம பேரை கேட்ட உடனே, அடடே, அவங்களா? அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களே அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்களா, ரொம்ப நல்லவங்க அப்படீங்குற இமேஜ் வேணுமா, இல்ல, அவங்க பயங்கர திறமைசாலி அப்படீங்குற இமேஜ் வேணுமா? இதுல எந்த இமேஜுமே தப்பில்ல தான், யார் யாருக்கு எது வேணுமோ, இல்ல, எதெல்லாம் வேணுமோ, அதுக்கு தகுந்த மாதிரி அவங்கவங்க பாதைல போக வேண்டியது தான்...

அப்புறம், சபாஷ், நல்லா கேட்டுக்கோங்க பெண்மணிகளா, நீங்க முதல்ல ஒழுங்கா வீட்டுக்குள்ள இருங்க, தேவையில்லாம வெளில வரது தான் பிரச்சனையே அப்படின்னு மீசைய முறுக்கிக்குற ஆம்பளைங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்குறேன்...

நீங்க ஆம்பளைங்க, நீங்களும் போட்டோ போடுறீங்க, உங்க போட்டோவ கண்ட கண்ட சைட்ஸ்ல போட்டு எந்த பொண்ணும் ஆனந்தம் அடஞ்சுக்குரதில்ல, அப்படினா, அழுக்கு முழுக்க முழுக்க எங்க இருக்குன்னு யோசிங்க.... உங்கள எல்லாம் நீங்க எப்பவும் சுத்த படுத்திக்க விரும்பவே மாட்டீங்க, அப்படி தானே, நல்லது, அப்படியே இருங்க.... 

இந்த சமூகத்த மாத்தணும்னா கூட பொண்ணுங்க தாங்க நினைக்கணும். அது எப்படின்னு அப்புறமா சொல்றேன்.

இப்போ நான் என்னோட பாதைல போறேன்.

ஹஹா அப்புறமா வரேன்....

Tuesday 3 December 2013

மறு தாயிவள்...

இருள் பரவ துவங்கிய நேரம்...
ஒற்றை குரலொன்று
கேவலாய் அழைத்தது அம்மாவென...

இத்தனை நேரம் போராடிய மனம்
இதோ இலவம் பஞ்சாய் வெடிக்கிறது...

நீர் முட்டிய கண்கள் கண்ணீரை வழிய விடுகிறது...
அதில் மனதின் பாரங்கள் கரைய துவங்கின...

உன்னை காணாது நான் தவித்த தருணங்கள்
நரகம் காட்டி சென்றதடா கண்ணா...
எத்தனை துயரென்றாலும் உன்
உதடுகள் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில்
என் சொர்க்கம் காண்பேனே...

நானுனக்கு தமைக்கை என்கின்றனர் பலர்,
நீ என் மணிவயிறு சுமக்கா குழந்தையென அறியாமல்...
வாடா என் கட்டித்தங்கமே,
அம்மாவென என்னை கட்டிக்கொள்
என் ஏழு ஜென்மம் உனக்காய் நீளும்...

என் பல்லாங்குழி ஆட்டத்துள்
குன்னிமுத்தாய் நுழைந்தவன் நீ...
என்னை இடறி விடும் வழுக்கு பாதையில்
கைபிடித்து கரை சேர்த்தவன் நீ..

பிரம்மன் எனக்கொரு வரமளித்தால்
உன் ஆயுள் நீட்டிக்க ஒரு அட்சய பாத்திரம் கேப்பேன்...
வாடா மலராய் நீ என்றும் சிரிக்க
கூடவே வாசனை சேர்ந்து பதிய கேட்பேன்...
எனக்குள்ளே உன்னையும் வைத்து
உன்னை அரணாய் காத்திட கேட்பேன்...

மழையில் நனைந்து வாடிய மலரே...
வா வந்து பசியாறு...
அன்னை நானொருத்தி காவலுக்கு உண்டென
கவலை மறந்து துயில் கொள்ளு....

வானம் வாழ்த்தி பொழிகிறது
நாளைய விடியல் அது நமக்கென தான்...

.

Monday 2 December 2013

மொக்கையிலும் மொக்க, படு மொக்க
இன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோம், அப்படி என்ன தான் பண்ணிட்டு இருந்துருக்கோம்னு பாக்கலாம்னு தோணிச்சு. பாட்டிங்க மட்டும் தான் நாங்க எல்லாம் அந்த காலத்துல...... ன்னு ஆரம்பிக்க முடியுமா? நாங்களும் ஆரம்பிப்போம்ல..... 

ஆரம்பத்துல பேஸ் புக் வந்தப்போ எல்லாரும் நிறைய ஜோக்ஸ் தான் சொல்லிட்டு இருந்தாங்க. நானும் அத பாத்துட்டு கவுன்ட்டர் குடுத்துட்டு இருந்தேன். இருந்தாலும் சொந்தமா எங்க ஜோக் சொல்றது? அதுக்கு தான் இருந்துச்சு பிரெண்ட்ஸோட எஸ்.எம்.எஸ். அத எல்லாம் வச்சு தான் ஒரு மூணு மாசம் நானும் பேஸ் புக்ல மொக்க போட்டுட்டு இருந்தேன்.


அப்படி என்ன தான் மொக்க போட்ருக்கேன்னு கொஞ்சம் பாப்பமா?


மொக்க தத்துவம்:

          1. பிறப்பு ஒரு முறை, 
              இறப்பு ஒரு முறை,
              காதல் ஒரு முறை,
              வாழ்க்கை ஒரு முறை
              ஆனால்
              சாப்பாடு மட்டும் தினமும் மூன்று முறை
              அதனால் கூச்சப்படாமல் சாப்டுங்க, ஆரோக்கியமா இருங்க 

          2. விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல,
              நம்மால் முடியும் வரை தூங்குவதுதான் தூக்கம்
              அதனால் நல்லா தூங்குங்க.

          3. யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்,
              ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்
             அதற்கு பதில்.
             அவர்களின் எலும்பை உடையுங்கள், அது 206 உள்ளது.....

சீரியஸ் தத்துவம்:

          1. நினைவுகளை உனக்குள் சுமப்பது வெற்றி அல்ல,
             உன்னுடைய நினைவுகளை அடுத்தவரை 
             சுமக்க வைப்பதுதான் வெற்றி

          2. உங்கள் அன்புக்குரியவருக்கு பரிசளிக்க நினைத்தால்,
              உங்கள் விலை மதிப்பில்லா நேரத்தை பரிசாக அளியுங்கள்...

          3. இமைகள் திறந்து நேசிப்பதை விட இதயம் திறந்து நேசித்து பார்,
              உன் உலகம் உனக்காய் காத்திருக்கும்

          4. குளம் வற்றியதும் பறந்து போகிற கொக்கு தான் காதல்
              ஆனால்
              குளம் வற்றினாலும் குளத்தோடு சேர்ந்து இறந்து போகிற 
              மீன் தான் நட்பு

          5. நீங்கள் காயப்படுத்திய மனிதரிடம் மன்னிப்பு கேட்க 
             தேவை இல்லை, ஏன் என்றால் உங்களை நேசிக்கும் 
             மனிதரையே நீங்கள் காயப்படுத்த முடியும், அவர்களோ 
            உங்களிடத்தில் மன்னிப்பை விட அதிக அன்பை தான் 
            எதிர்பார்ப்பார்கள்...

          6. நண்பன்!!! எதிரிகளின் கூட்டத்தில் உன் கைப் பிடித்து நிற்பவன்
              நீ தவறு செய்யும் போது உன் முதுகில் அறைபவன்
             உனக்காக எல்லாம் செய்து விட்டு நன்றியை எதிர்பார்காதவன்
             உன்னை புன்னகைக்க வைப்பவன்
             உன் கண்ணீரை துடைத்து ஐ மிஸ் யு சொல்பவன்
             உன் நன்றியை மறுத்து போடா லூசு என்பவன்
             நண்பேண்டா............


இப்போ கேள்வி பதில் நேரம்:

          1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?

              அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல 
              அதனால போடுறதில்லை.!

          
          2. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?

              ஏன்னா அது வாய் சைசுக்கு இன்னும் பிரஷ் கண்டுபுடிக்கலயாம்


          3. லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும், 
              தலைல ஒண்ணுமே இல்லனா?

              பளபளன்னு க்ளார் அடிக்கும்


டவுட்டோ டவுட்: 

          1. இங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி 
              தமிழ்ல ஏன் இல்ல ..?

          2. கொசுவுக்கு கொம்பு இருக்கா .?
     
          3. இருமல் வந்தால் இருமுவிங்க, 
              காய்ச்சல் வந்தால் காய்ச்சுவிங்களா?

          4. நாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழே விழுதுல,
             அப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..?

          5. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம்?

          6. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறோம், 
            அப்போ வாயில மீன் முள்ளு குத்தாம இருக்க என்ன 
            போடுறோம்?

          7. கிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும்.
             ஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறுமா?


இதெல்லாம் கூட பரவால, எதோ ஒரு எக்ஸாம் ஹால்ல யாரோ எழுதின கேள்வி பதில் அப்போ ரொம்ப பேமஸா வலம் வந்துட்டு இருந்துச்சு. அது என்னன்னும் கொஞ்சம் பாத்ருவோமே

கேள்வி 1:

நாயக்கர்கள் – பெயர் காரணம் கூறுக :

          Point no:1
          நாயக்கர்களுக்கு நாய்கள் பிடிக்கும் என்பதால் நாயக்கர்கள் என்று 
          பெயர் வந்தது என்று சிலர் கூறுகிறார்கள்.

          Point no 2: 
          நாயக்கர்களின் மண்டபங்களில் நாய் போன்ற சிற்பங்கள்                  
          வைத்திருப்பதால் நாயக்கர்கள் என்று பெயர் வந்தது என்று 
          சிலர் கூறுகின்றனர்.

          Point no 3: நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது. அது மிகவும் 
          அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் 
          படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை என் சித்தி பையன் 
          சென்று பார்த்துள்ளான். அதை பாண்டியர்களுக்கு கீழே உள்ள 
          கொத்தனார் நிருவியுள்ளமையால் பாண்டியர்களுக்கு அந்த 
          பெருமை வந்தது. உண்மையில் அந்த கொத்தனார் தான் மிகவும்   
         பாடுபட்டார். எனவே அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கேள்வி 2:

கோவில்களின் சிறப்புகளை கூறுக :

          “ஜி” படத்தில் எங்கள் தல அஜித் ஒரு பாடலை பாடியுள்ளார்
          “டிங் டாங் கோவில் மணி கோயில் மணி நான் கேட்டேன்”
          இப்பாடலடி இவ்வளவு தான் எனக்கு தெரியும். அரையாண்டு 
          தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுமையாக எழுதி விடுவேன்                     என்று நம்பிக்கை தெரிவித்து கொள்கிறேன்.

கடைசியா, 


மொக்கையோ மொக்கை:
          1. கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் 
              “காக்கையாக மாறினால்”!

          2. பரம்பரைக்கு உக்காந்து சாப்டர அளவு சொத்து
              இருந்தாலும் பாஸ்ட் பூட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்

          3. நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல 
              கால் போட்டு உட்கார முடியாது

          4. இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆகலாம், ஆனா 
              பெரசிடேன்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடென்ட் ஆக முடியாது 

இப்போதைக்கு இவ்வளவு தாங்க.... இதெல்லாம் ரெண்டு மாச பதிவு... மீதி அப்பப்போ வந்து சொல்லிட்டு போறேன்...