Monday 9 December 2013

உணராத பந்தம் இவள்...!




நீ இல்லாத என் நாட்கள் கிழித்தெறிந்த
நாள்காட்டியாய் கழிந்து கொண்டே இருக்கின்றன...
குளிரில் நடுங்கும் என் துவண்ட மேனியோ
இதுவரை உன் அணைப்பினை உணர்ந்ததே இல்லை...!

உன் முத்தங்களை பெற்றறியா முகத்திலோ
நாய்களின் எச்சில்கள்
ஏக்கம் தீர்த்துப் போகின்றன...!

திடீரென சூழ்ந்துக்கொள்ளும்
வெறுமைக்குள் புதைந்துக் கொண்டு
எதையோ தேடுவதைப்போல் தேடியிருக்கிறேன்...
நீ எப்படிப்பட்ட உணர்வளிப்பாய் என்றே தெரியாமல்...!

யோசித்து யோசித்து பார்க்கிறேன்,
எப்பொழுதெல்லாம் உன்னை நான்
உச்சரித்துப் பார்த்திருக்கிறேன் என்று...!

பசித்த வயிற்றோடு தெருத்தெருவாய்
சுற்றிய நாட்களில் கூட
“ஐயா காசு குடுங்க பசிக்குது” என்றே
கேட்டு பழகியிருக்கிறேன் நான்...!

சோறில்லையென விரட்டப்படும் போதும்
தெருவோர குப்பைத்தொட்டிகளில்
கண்கள் அலைபாய்ந்தே பழகி விட்டன...!

மாற்றுடுப்பு வேண்டுமென
மனம் தேடும் பொழுதெல்லாம்
மாடிவீட்டு கொடிகளை
அண்ணாந்து பார்த்து ஏங்கியிருக்கிறேன்...!

காய்ச்சல் வந்து வாய்க்குழறும் போதுகூட
வடிவில்லா ஒலியெழுப்பி
வெப்பத்தாக்குதலை எதிர்க்கொண்டு
பழகி விட்டேன் நான்...!

பருவம் எய்திய நாளில்
மிரட்சியோடு தேடியிருக்கிறேன்
அதுவும் உன்னை தான் என்றே அறியாமல்...!

வெறித்தப் பார்வை ஒன்றே
எப்பொழுதும் முந்தி நிற்கிறது
தாய் மடி முட்டும் கன்றுகளை பார்க்கும் பொழுதெல்லாம்...!

என் நிலையின் காரணகர்த்தா
விதியென நான் ஏற்றுக்கொள்வதுமில்லை...
நீதானென்று சபித்து விடவும் துணியவில்லை...!
என்னை ஜனனித்து நீ மரணித்துப் போனாயோ
இல்லை ஆகாது என வீசிவிட்டு சென்றாயோ?
தொலைத்துவிட்டு தினம் தேடி தேடி வேதனிக்கிறாயோ?

உனக்கென அடையாளமெதையும்
நீ எனக்காக விட்டுச்சென்றவளில்லை…
உன் குணம் பற்றிய எதிர்பார்ப்போ
நிலைப்பாடு பற்றிய பரிதவிப்போ
என்றுமே எனக்குள் சஞ்சலத்தை புகுத்தியதில்லை...!

நீ யாராய் இருந்தால் என்ன?
எனக்கு நீ அன்னியமானவள்...!

சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
பார்ப்பது போல் வெறித்து விட்டு
பயணம் தொடர்கிறேன் நான்...!



-இது ஒரு மறுபதிவு 

16 comments:

  1. ரொம்ப சென்சிபிளான விஷயம்.. சில நொடி இன்பங்களுக்காய் இவர்கள் தெருவில் இட்டுச் சென்ற "பரிதாப" பொதிமூட்டைகள் இவர்கள்.

    //சூல் கொண்ட பெண்கள் கண்களுக்குள்
    விழும்போதெல்லாம் வினோத ஜந்துவை
    பார்ப்பது போல் வெறித்து விட்டு
    பயணம் தொடர்கிறேன் நான்...!//

    ஒரு வறண்ட புன்னகையும் முகத்தில் தவழ்வது தெரிகிறது. அருமையா எழுதி இருக்கேம்மா..

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து பாராட்டினதுக்கு தேங்க்ஸ் அண்ணா... நான் ரொம்ப பீல் பண்ணி எழுதினது இது

      Delete
  2. ஆகா...! உருகி விட்டேன்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா உங்க வாழ்த்துக்கு

      Delete
  3. படிக்கும் போதே கண்ணீர் வந்துவிடும் போல... உணர்ச்சிகரமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களோட பாராட்டுக்கு தேங்க்ஸ்

      Delete
  4. Enna ezuthu vathu endru ??? Ethuvari nan padithathu Ellai Ethu mathri oru unarchigaramana varthagalai !!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் உங்க கருத்துக்கு

      Delete
  5. உணர்வுகளின் உச்சம் காயு... உயிர் மொழியால் உணர்வை பெற்றுடுத்த பெருமை..
    தொடரும் பயணம்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா உங்க கருத்துக்கு

      Delete
  6. Replies
    1. ஹ்ம்ம்ம்... படம் மட்டும் தானா?

      Delete
  7. arumaiyaana kavithai.ammaa ena sollamal unarthiya vitham sirapu.nandru thozhi

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ், புரிஞ்சுகிட்டதுக்கு.

      Delete
  8. வணக்கம் தோழி !
    பெண்ணினம் படும் பேரவலத்தை மிக
    எளிமையாக மனதை உருக்கும்படியாக
    எழுதியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் தோழி .இன்று
    தான் தங்களின் தளத்தை அறிந்துகொண்டேன் .
    தமிழோடு என்றும் இணைந்திருப்போம் .மிக்க
    நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கு ரொம்ப தேங்க்ஸ்... தொடர்ந்து வாங்க :)

      Delete