Thursday 12 December 2013

உன்னிடம் ஒரு யாசகம்...!




உன் வார்த்தை ஜாலங்களில்
கள் குடித்த வண்டாய் மயங்கும் நான்...
உன் சில நேர அலட்சியத்தால்
அனலில்லிட்ட புழுவாய்
துடித்து தான் போகிறேன்...!

குற்றால சாரலாய் மழலை குறும்பால்
சிலிர்ப்பிக்கும் சாகசம் புரியும் நீ...
சில சமயம் வெந்நீர் குளியலென
கொதிக்கும் கொப்பறைக்கைக்குள்
தள்ளி விட்டு வேக வைக்கிறாய்...!

உன் சிறு நேசம் வேண்டுமெனக்கு
உப்பு பெறா விஷயமென சட்டென
அலட்சியம் காட்டுகிறாய்
கடுகளவும் என் துடிப்பறியாமல்...!

பட்டாசு சிதறலாய் வெடிக்கும்மென்
வார்த்தை ஜாலங்களை அண்ணாந்து
ரசித்து விட்டு சில நேரம்
நீரூற்றி அதை நீர்பிக்க செய்து
என் அழுகை ரசித்து ருசி காண்கிறாய்...!

உன் தேடல் துவங்கும் நேரம்
என் உள்ளங்கை அணைப்புள்
அடைக்கலமாகும் நீ
பதறியே விலகியோடுகிறாய்
உன்னை நான் வேண்டும் பொழுதெல்லாம்...!

உன் கட்டை விரல் ரேகையாய்
உறைந்திருக்க வரமொன்று வேண்டிய எனக்கு
சுட்டு விரல் காட்டி விலகிப்போவென
மவுனமாய் சுட்டி உயிர் வதைக்கிறாய்...!

உன்னிடம் நான் வேண்டுவது
உன் வாழ்நாளையல்ல...
எனக்கென ஆயுள் நீட்டிக்கும்
உன் சின்ன புன்னகையை...
ஒரு சிறு கையசைப்பை...
சிறிதே சிறிது அக்கறையை...
கொஞ்சம் என் மனம் சொல்லத் துடிப்பதை...!

தொடர்ந்து செல்லும் உன் வழிப்பயணத்தில்
நீ திரும்பிட வேண்டாம்...
திரும்பி ஒரே ஒரு புன்னகை
அடிக்கடி வீசி விட்டு போ...!

யாசித்து யாசித்தே ஓய்ந்து விட்டேன் நான்...!
மீண்டும் நினைவூட்டினால் என்னை
மனம்பிறழ்ந்தவள் வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால் சதுரங்கமாடுவாய்யென
மவுனமாய் நானும் மரணித்தே போகிறேன்...!



- இது ஒரு மறுப்பதிவு 

9 comments:

  1. ஏங்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் தேங்க்ஸ் அண்ணா

      Delete
  2. எளிய நடையில் ஒரு அருமையான கவிதை.. சூப்பர் தங்கச்சி!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா உங்க பாராட்டுக்கு

      Delete
  3. உணர்வுகளை எத்தனை இதமாய் காட்டிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்.... உங்க ரசனைக்கு

      Delete
  4. உயிராடும் உணர்வுகளின் யாசிப்பு, மௌனத்தின் மொழியால் வரைந்திருக்கும் வா(ழ்)ய் மொழி...

    உள்ளம் தொடும் உன்னிடம் ஒரு வா(யா)சகம்...
    வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.. காயு

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, ரொம்ப தேங்க்ஸ்... உங்களோட எழுத்து இன்னும் ஊக்கப்படுத்தும் என்னை

      Delete