Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, 12 April 2016

செல்லாக்காசு



“நீயெல்லாம் ஏண்டி சனியனே பொறந்து தொலஞ்ச? இப்படி வந்து வந்து வயித்தக் கழுவுறதுக்கு பேசாம செத்துத் தொலையேன். அப்படி என்னடி சொகம் வேண்டிக் கிடக்கு” இறைந்துக்கொணடே சென்ற நர்ஸ் பின்னே மெதுவே எட்டிப் பார்த்தேன்.

மிகவும் இளவயசு. கிட்டத்தட்ட பதினைந்து வயதிருக்கலாம். பூஞ்சையாய் தேகம். வாரப்படாத தலை. வயிற்றைப் பிடித்தப்படி மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்து இரக்கம் எதுவும் தோன்றவில்லை, “இந்த வயசுல இப்படியா” என்ற கேள்வி மனதில் தோன்றியதையும் தடுக்க முடியவில்லை.

************

வர வர பாட்டியின் உடம்பு சீர் கெடத் துவங்கியிருந்தது. படிப்பறிவும் இல்லாமல் புருசனும் இல்லாமல் அண்ணனின் நிழலில் ஒதுங்கி, அதனாலேயே இந்த சமூகத்திலிருந்தும் மறைந்து வாழ்ந்தவள். பெற்றப்பிள்ளைகளை கூட சீராட்டி வளர்க்க முடியாமல் தனிமைக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் அவள்.

அப்பாவுக்கு எப்பொழுதும் பாட்டியின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததாய் தெரியவில்லை. மாசாமாசம் சொற்ப காசு அனுப்பி வைப்பார். அதற்கும் மேல் வேண்டுமென்றால் ஒவ்வொரு காசுக்கும் செலவு கணக்கு கொடுத்தாக வேண்டும். வீட்டு வாடகையும் கொடுத்து சாப்பாட்டுக்கும் என்ன செய்வாள், மருத்துவ செலவுகளுக்கு எங்கு போவாள் என்றெல்லாம் எண்ணுவதே இல்லை. அதனால் தானோ என்னவோ பாட்டி தனக்கென தேவைகளை கூட எப்பொழுதும் பூர்த்தி செய்துக்கொள்வது இல்லை. எதைக் கேட்டாலும் “எனக்கெதுக்கு” என்று ஒதுங்கி போகின்றவள்.

போன மாதம் ஊருக்கு வந்தபொழுது தான் கவனித்தேன், பாட்டியின் கால்கள் நீர் கோர்த்துக் கொண்டிருந்ததை. அதன் பின் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்து, இதோ கட்டாயமாய் அவளை இந்த மருத்துவமனை வரவேற்பறையில் அமர வைத்துள்ளேன்.

*************

“ஏண்டி, இது மூணாவது தடவ, பதினோரு மாசத்துல இத்தனவாட்டி வந்துட்ட. எவடி ஒன்ன கொண்டு வந்து விடுறா? என்ன தொழில் செய்றாளா ஒன்ன வச்சு?” – மறுபடியும் அதே நர்ஸ். இப்பொழுது அந்த சிறுமி அழ ஆரம்பித்திருந்தாள். அழுகையின் ஊடே அவள் என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“பசிக்கி. மூணு நாளாச்சு. ஏதாவது தாங்கக்கா”

தனக்கு நேர்ந்தது என்ன என்பது அறியாது, வயிற்றை பிடித்து அவள் எதற்காக அழுதுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த பொழுது உள்ளுக்குள் நொறுங்கிப் போவதைப் போன்ற உணர்வு. அதைத் தொடர்ந்து “நம்மால என்ன செய்ய முடியும்?” என்று எனக்குள் நானே சமாதானமும் செய்துக் கொண்டேன்.

“அந்த புள்ள ஒரு அனாத சிறுக்கியாம். தவுப்பன் தாயில்லாம ஒவ்வொருத்தன் திண்ணையிலா படுத்து கெடக்குமாம். வயித்துக்கு சோத்த போட்ட எவனோ அவ வயித்தையும் நெரப்பி விட்டுருக்கான். பாவம் புள்ள, வயித்துப் பாட்டுக்கு வழியில்லாம இப்படி வயித்துல சொமந்துகிட்டு நிக்குவு. அந்த வீட்டுவளுக்கு பத்து பாத்திரம் தேய்க்குரவ தான் எரக்கப்பட்டு வயித்த கழுவ இங்க கொண்டு வந்து விட்டுருக்கா. ஹ்ம்ம்ம்... இனிமேல எவன் வந்து இவள கெட்டி, இவ கூட குடும்பம் நடத்தி... புள்ள வாழ்க்கைய சீரழிச்சுப் புட்டானுவ” பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு அமர்ந்த பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.

“நம்மால என்ன செய்ய முடியும் பாட்டி”

“ஏதாவது செய்துர முடியாதான்னு மனசு கெடந்து அடிக்குது ஆத்தா. இந்த வயசுல இந்த புள்ள இப்படி திரியுவே, இத எல்லாம் மனுச சென்மமா மதிச்சு நடத்த ஒருத்தரும் இல்லையா? அந்த நர்சு ஒரு பொம்பள தான, அவளுக்கு அந்த புள்ள நெலம புரியாதா? இப்படி போட்டு கரிச்சுக்கொட்டுறா. என்னவோ போத்தா, பொட்டப்புள்ளையா பொறந்துட்டமே. ஒந்தாத்தன் விட்டுட்டு ஓடுனப்பவே அவன் கொதவளைய நெருச்சிப் போட எனக்கு துப்பில்ல. எவன் மூஞ்சியையும் நிமிர்ந்து பாக்க வக்கில்லாம செல்லாகாசா கூடப்பொறந்தவன் பிச்ச போடுற மாதிரி போட்டத துன்னுட்டு கெடந்தேன். இப்ப ஒன் அப்பன் எரியுற அஞ்சு பத்து காச பொறிக்கிகிட்டு கெடந்து அல்லாடிக்கிட்டு கெடக்கேன்”

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மெல்ல பாட்டியின் கைகளை பற்றிக் கொண்டேன்.

“பாட்டி, நாம வருத்தப்பட்டு எதுவும் ஆவப்போறது இல்ல. நம்ம பொழப்பயே நம்மளால பாக்க முடியல, இதுல அடுத்தவ எப்படிப் போறான்னு எப்படி பாக்குறது?”

“இப்படியே சொல்லிக்கிட்டு கெடந்தா எப்படித்தா. மனசுக்குள்ள என்னென்னவோ பண்ணுது ஆத்தா... பொண்ணா பொறந்துட்டாலே சாவுற வரைக்கும் அண்டி தான் பொழைக்கணுமாத்தா? எதாவது செய்யணும்த்தா, ஏதாவது செய்யணும்” வெடித்து அழும் பாட்டியை இப்பொழுது என்னோடு சேர்ந்து அவளும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கியிருந்தாள்.

Thursday, 5 November 2015

தூமைத் துணி



அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது. ஒரு வாரம் முன்பே ஊரையே அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். பத்து வருடமாய் தவமாய் தவமிருந்து ராக்காயி பெற்றெடுத்த ஒரே மகனான தவசிக்கல்லவா கல்யாணம்.

தட்டான்விளைக்காரியான ராக்காயி வாக்கப்பட்டு லெவிஞ்சிபுரத்துக்கு போன போது ஊரில் அவ்வளவு மழை. அப்பன் ஆத்தாவயும் ஒண்ணுமண்ணா பழகின ஊரையும் விட்டுவிட்டு வந்தது முதலில் அவளுக்கு அலுப்பைக் கொடுத்தாலும் அந்த மண்ணோடு அவளும் சீக்கிரமே ஐக்கியமாகி போயிருந்தாள். கோலப்பன் தலையாரி மகன் என்பதால் ராக்காயிக்கு ஊரில் பெருமதிப்பு. ஊரில் எங்கு விசேசமென்றாலும் அவளைத் தான் முன்னிறுத்துவார்கள்.

எல்லாம் நாலஞ்சு மாசம் தான். அதன் பிறகு ராக்காயி போகுமிடம் எல்லாம் “ஏன்த்தா, விசேசம் ஏதும் உண்டா?”, “இன்னுமா ஒரு புழு பூச்சி உண்டாவல” என்பது போன்ற விசாரிப்புகளை எதிர்க்கொள்ள ஆரம்பித்தாள். மருமகளை தலைமேல் தூக்கி வைத்துத் திரிந்த பேச்சியம்மா மட்டும் மருமகளை ஒரு வார்த்தை கடுத்து சொன்னதில்லை.

“ஊரு ஆயிரம் சொல்லுமாத்தா. அந்த மாகாளி கண்ணத் தொறந்தா எல்லாம் தானா சரியா போவும். நீ கெடந்து சங்கடப் படாத” என்று பேச்சியம்மா அவளை சமாதானப்படுத்தினாலும் என்னவோ அது தன்னோட பெருமைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றே நினைத்து கோவில் கோவிலாக ஓடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மாதம் மாதவிடாய் வரும்போது இருட்டு அறைக்குள் ஆங்காரமாய் அரற்றிக் கொண்டிருப்பாள்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து வருடங்கள் ஒவ்வொரு கோவில் படியாய் ஏறி இறங்கி, அக்கம் பக்கம் இருக்கும் வைத்தியர்கள் எல்லாரிடமும் காசிரைத்து, ஒருவழியாய் ஜனித்தவன் தான் தவசி. தவமாய் தவமிருந்து பெற்ற மகனுக்கு ஒரு விசேசம் என்றால் பெருமை இருக்கத் தானே செய்யும்.. தான் மாமியார் ஆகப் போகிற சந்தோசம் அவள் ஆட்டத்தில் எதிரொலித்தது.

“ஏலேய் முத்தையா, எங்கலே போன, அடுப்பங்கரைல ஆத்தா உன்ன தேடிகிட்டு கெடக்கு” பேச்சியம்மா குரலைக் கேட்டதும் மடித்திருந்த இடுப்பு வேஷ்டியை கால் வரை அவிழ்த்துவிட்டுவிட்டு சமையலறை நோக்கி ஓடினான் முத்தையா.

கையை கட்டிக் கொண்டு பவ்யமாய் நின்றுக் கொண்டு “ஆத்தா கூப்ட்டியளா?”

“என்னலே, கண்ணாலத்துக்கு இன்னும் நாலு நாலு தான் கெடக்கு. வேல கீல எல்லாம் ஒழுங்கா நடக்குவா?”

“அதெல்லாம் நல்லா போயிட்டு இருக்கு ஆத்தா. ஐயா இல்லாத கொற தெரியாத அளவு நம்ம சொந்தகாரவுங்க எல்லா வேலையும் இழுத்துப்போட்டுட்டு செய்றாவ”

“என்னவோ போலே. மூர்த்தத்துணி எடுக்கப் போன எளயவ பழஞ்சீல மாதிரி ஒண்ண தூக்கிட்டு வந்துருக்கா. ராக்காயி மருமவன்னா சும்மாவாலே. அப்படியே பந்தல்ல ரதி மாதிரி ஜொலிக்கண்டாமா?”

முத்தையா பதில் ஏதும் சொல்லாமல் தலையை சொறிந்துக் கொண்டு நின்றிருந்தான். பின், அவர்கள் வீட்டு விவகாரமெல்லாம் வேலைக்காரனாகிய அவனுக்கு எதற்கு? கொழுந்தன் பொஞ்சாதிய குறை சொல்லவில்லை என்றால் ராக்காயிக்கு தூக்கம் வருவதில்லை.

ஆச்சு. அப்படியும் இப்படியுமாய் தடபுடலாய் கல்யாணமும் நடந்து முடிந்தாயிற்று. நாகர்கோவில் பொண்ணு. பெயர் அமுதா. பார்க்க அப்படியே ரதி மாதிரி தான் இருந்தாள். படித்தப் பிள்ளை வேற. தவசியையும் அமுதாவையும் ஜோடியாக பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் சொல்லிக் கொண்டது இது தான்.

“தறுதலக்கு வந்த வாழ்வ பாருடே. கொரங்கு கைல பூமாலைய குடுத்துருக்கான் பொண்ண பெத்தவன். இனி அந்தப் புள்ள என்ன பாடுப் படப் போவுவோ?

ஊரார் என்ன பேசிக்கொண்டிருந்தால் கண்ணப்பனுக்கு என்ன. தலையாரி குடும்பம். ஊருக்குள் பாதி தோப்பும் துறவும் அவர்களுடையது தான். ரெண்டு ப்ளசர் கார் இருந்தும் புல்லட்டில் பகட்டாய் ஊர் சுற்றும் மாப்பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நாலஞ்சு வேலையாட்கள். பெண் பார்த்து சம்மந்தம் முடிவு செய்த அன்றே பத்து பவுனில் மருமகளுக்கு காசுமாலை போட்ட மாமியார்காரி. “கட்டுன துணியோட பொண்ணை குடுப்பேய், நாம் பாத்துகிடேன் எம் மருமவள” என்று வாயெல்லாம் பல்லாய் சிரித்த ராக்காயியை பார்த்து பெண்ணை குடுக்க மாட்டேனென்று மூஞ்சியில் அடித்தார்ப்போல் சொல்லவா முடியும்? தவிர தலையாரி குடும்பத்திற்கு பெண் கொடுக்க அசலூர் ஆட்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று வரிசையில் நிற்க, தன் பெண்ணுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்ததில் எந்த தகப்பன் தான் பெருமைக் கொள்ளாமல் இருப்பான். “ஊர்க்காரப்பயப்புள்ளைவளுக்கு வேற என்ன சோலி. பொறாமைல போட்டுக் குடுத்துட்டு திரிவானுவ” இப்படித் தான் அரசல் புரசலாய் காதில் விழுந்த சேதிகளையெல்லாம் புறம்தள்ளி விட்டிருந்தார். தாயில்லா புள்ளைய கஷ்டமேப் படாமல் நல்லதொரு சம்மந்தத்திற்கு கட்டிக் கொடுத்த திருப்தி அவருக்கு.

“போட்டோ எடுக்கணும், அப்படியே கொஞ்சம் நெருங்கி நில்லுங்க” போட்டோக்காரனின் கட்டளைக் கேட்டு பொண்டாட்டி தோளில் கைப்போட்டு “ஈஈஈ” என்று இளித்தான் தவசி. ராக்காயி தூரத்தில் நின்று மகனையும் மகனின் முதலிரவு அறையையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராத்திரி முழுதும் உறக்கம் வரவில்லை ராக்காயிக்கு. “எல்லாம் நல்லபடியா முடிஞ்சி ஊரே மெச்ச ஒரு புள்ளைய பெத்துக் குடுத்துரனும் எம்மருமவ. அதுக்கு நீ தானாத்தா தொண இருக்கனும்” குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே தூங்கியும் போனாள்.

முதலிரவு அறை திறக்கப்படும் சத்தம் கேட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உக்கார்ந்தாள். கசங்கிப் போய் சோம்பல் முறித்துக் கொண்டு வந்த அமுதாவைப் பார்த்து “ஏங் ஆத்தா, இவ்வளவு சீக்கிரம் எழும்பிபுட்ட. செத்த நேரம் நீயும் ஒரங்கியிருக்கலாம்ல, பாரு அந்த கழுத மூதி எப்படி மலந்து கெடந்து ஓரங்குவுன்னு. அவசரத்துக்கு பொறந்தவன், ராத்திரி ஒண்ணும் மொறட்டுத்தனம் பண்ணலயே, பூ மாறி தான பாத்துகிட்டான்?” என்றாள்.

அமுதாவுக்கு வெக்கம் பிடுங்கித் தின்றது. “போங்கத்த” என்று சிணுங்கியவாறே வலது பெருவிரலை வாயில் கடித்தப்படி வெட்கத்தோடு அடுப்படிக்கு ஓடலானாள்.

“என்ன இந்தப்புள்ள இப்படி வெக்கப்படுது?” ராக்காயிக்கு மகனை நினைத்து பெருமையாய் தான் இருந்தது.

“பத்தே மாசத்துல பொறந்து வருவாம்லே என் சிங்கக்குட்டி” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு விறகெடுக்க கிணத்தடி வரை சென்று திரும்பியவள் உள்ளே அமுதாவை சீண்டிக் கொண்டிருந்த தவசியை பார்த்ததும் சுருக்கென்று முள் தைத்தவள் போல் முகம் சுளித்தாள்.

“என்னலே, கல்யாணம் ஆன மறுநாளே இந்த ஆத்தா மொகம் தொரைக்கு மறந்துப் போச்சோ. முழிச்சதும் எங்கிட்ட தான வந்து நிப்ப. இப்ப பொண்டாட்டி முந்தி சொகமா இருக்கோ. இந்தா, ஏ மூதேவி, அவுத்துப் போட்டு எந்திரிச்சி அப்படியே இங்கன வந்து நிக்க. குளிச்சி சுத்தபத்தமா வரணும்னு கூட ஓங் ஆத்தாக்காரி சொல்லித் தரலியா?”

“சவத்த மூதி, கெட்டிகிட்டு வந்த அன்னிக்கே புள்ளைய முந்திக்குள்ள மொனைய பாக்குறா. எங்க வந்து எவ சொத்த புடுங்கலாம்னு நிக்கா. இழுத்து வச்சி கொண்டைய அறிஞ்சிர மாட்டேன்” ஆத்திரத்தோடு கொண்டையை அவிழ்த்து விட்டு பின் முடிந்து கொண்ட மாமியார்காரியைப் பார்த்து வெலவெலத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தாள் சற்று முன் முகமெல்லாம் வெட்கம் பிடுங்க சிவந்திருந்த அமுதா.

மெல்ல தவசியை ஏறெடுத்துப் பார்த்தாள். அவனோ “விடு ஆத்தா, புது பொண்டாட்டி. கொஞ்சம் ஆசப்பட்டுட்டேன்” என்றவாறே ஆத்தாவின் குரலில் ஆட்டுக்குட்டியாகி அவள் முந்தியை பிசைந்துக் கொண்டிருந்தான். கண்கள் குளமாக விருட்டென்று குளியலுக்கென்று வைத்திருந்த தடுப்பில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“ந்தா... புதுசா கட்டிக்கிட்டதுங்க. இளந்தாரி ஜோடிங்க. அப்படி இப்படி தான் இருக்கும். நீ ஏன் இப்படி பூட்டு போடணும்னு கெடந்து அடிச்சிக்குற. விடாத்தா. நாளும் கிழமையும் போனா எல்லாம் அலுத்துப் போவும்” பேச்சியம்மாளின் குரலை ராக்காயி காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அதன் பின் ராக்காயிக்கு மருமகளைக் கண்டால் ஒரு இதுதான். என்ன ஒன்று, அந்த குடும்பத்து வாரிசு அவள் வயிற்றில் வளர்ந்தாக வேண்டுமேயென்று மகனோடு இரவு மட்டும் படுக்க அனுப்பி வைப்பாள். மற்ற நேரங்களில் அவள் பார்வை மீறி தவசியால் அமுதாவை நெருங்கவே முடியாது.

கல்யாணம் முடிந்து இருபது நாட்கள் ஓடி விட்டிருந்தன. என்னதான் மாமியார்காரி கரிச்சுக் கொட்டினாலும் விருந்து, மறுவீடு, சொந்தக்காரங்க வீடு என்று அலைந்ததில் அமுதா சந்தோசமாகவே இருந்தாள். கல்யாண விருந்துக்கு தன் ஒண்ணுவிட்ட சித்தி வாங்கிக் கொடுத்த புதுத்துணியை உடுத்தியபடி வீட்டு வாசலை மிதித்தவள் காலுக்கிடையில் சட்டென்று உணர்ந்தாள் அந்த வித்தியாசத்தை.

“வீட்டு விலக்காவி போச்சு போலயே” என்றவாறே விறுவிறுவென முன்னறையைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து அந்த பொட்டலத்தை கையில் எடுத்தவள் மீண்டும் போன வழியே திரும்பி வந்து கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“மூணாது வீட்டு மருமவ பொட்டப்புள்ளைய பெத்துப் போட்ருக்கா. என்னதாஞ்சொல்லு, தலைச்சான் புள்ள ஆம்பள புள்ளையா பொறந்தாதான் நமக்கெல்லாம் மருவாத” எதிர்த்தவீட்டு பரிமளத்திடம் பேசியபடியே முன்னறையை கடந்த ராக்காயி கண்களில் பட்டது அமுதாவிடமிருந்து வழிந்திருந்த ரெத்த துளிகள்.

“எந்த எளவெடுத்தவ இத செஞ்சான்னு தெரியலயே. ஏளா, ஏ மேனாமினுக்கி, என்னட்டி இது? நாசமா போறவளே, ஏன்ளா ஏங் வூட்ல வந்து எளவெடுக்க? த்தூத்தேறி, பிள்ளைய பெத்துத் தருவான்னு பாத்தா தூமைய கொண்டு வந்து நடு வீட்ல வடிச்சி வச்சிருக்கா” தீயில் போட்ட வத்தலாய் வெடித்துப் புகைந்துக் கொண்டிருந்தவள் கழிவறைக்குளிருந்து அவசர அவசரமாய் வெளி வந்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் இன்னும் ரவுத்திரமானாள்.

“அய்ய அய்ய அய்யோ... இந்த கொடுமைய கேப்பாரு ஆருமில்லியா? ஆம்பளயும் பொழங்குற இடத்துல தூமைய தூக்கிகிட்டு போறாளே” ஒப்பாரி வைத்தவள் கண்கள் அமுதாவின் கைகளில் இருந்த பொட்டலத்தின் மேல் நிலைத்தது. வெடுக்கென்று அதை கையில் வாங்கியவள் மறுகணம் அதை உதறி வீசினாள். “பெரிய தொர வீட்டு மகாராணி. இவ சாமானம் பஞ்சி தான் வேணும்னு கேக்குதாக்கும். யேம்ளா, கொப்பன் காச எல்லாம் இந்த கண்றாவிய வாங்கித் தான் கரச்சியோ? காலேசில போயி இதத் தான் படிச்சிட்டு வந்தியா? இன்னும் என்னென்ன கருமாந்த்ரத்த நான் பாக்க வேண்டியிருக்கோ ஐயோ கடவுளே” அப்படியே தரையிலமர்ந்து கையை வீசி வீசி ஒரு பாட்டம் அழ ஆரம்பித்தாள்.

அமுதாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் என்றே முதலில் புரியவில்லை. ஏழையாக இருந்தாலும் பெண்ணை சுதந்திரமாக வளர்த்திருந்தாள் வளர்மதி. மாதாமாதம் மாதவிடாய் நேரங்களில் துணி வைப்பதால் தொடை எல்லாம் அறுத்து, சிவந்து மகள் படும் இன்னல்களைப் பார்த்து வருத்தப்பட்டவள் நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தாள். “பொட்டப்புள்ளைக்கு என்னத்துக்கு இவ்வளவு செல்லம்” என்று கண்ணப்பன் முணுமுணுத்தாலும் மனைவியின் செயல்களுக்கு குறுக்கே நிற்க மாட்டான். அமுதாவினால் மாதவிடாய் நேரங்களில் பூஜையறை தவிர்த்து வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிய முடிந்தது. ஓட்டு வீட்டுக்குள் அந்த மூன்று நாட்களும் நினைத்த இடத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் உருள முடிந்தது. அதனால் தான் வளர்மதி தீராத காய்ச்சலில் போய் சேர்ந்த பிறகும் கண்ணப்பனே மகள் படும் பாட்டைப்பார்த்து வலிக்கு ஓமத்தண்ணியும் ரெத்தப்பாட்டுக்கு நாப்கினும் வாங்கிக் கொடுத்து பழகியிருந்தான். அக்கம் பக்கம் பாட்டி வைத்தியம் கேட்டுக் கொண்டு வந்து வெந்தயமும் கொத்தமல்லியும் வாங்கிக் கொடுத்தான்.

ஒரு கை நிறைய கொத்தமல்லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வெறும்வயிற்றில் தண்ணீரை குடித்ததில் அமுதாவுக்கு மாதவிடாய் நேரங்களில் உருவாகும் வாயுத்தொல்லை மட்டுபட்டிருந்தது. பச்சை முட்டையை அப்படியே உடைத்து குடுத்தால் இழந்து போன ரெத்தம் ஊறி, வலி அறவே இருக்காது என்று பக்கத்து ஊர் பாம்படக்கிழவி சொன்னதைக் கேட்டு மகள் சுருண்டு படுத்திருந்தால் நாளுக்கொன்று என்று ஐந்து நாட்டுக்கோழி முட்டை வாங்கிக் கொண்டு கொடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

கல்லூரி படித்தக்காலங்களில் தன் சோட்டுக் பெண்களுக்கு அமுதா தான் மருத்துவச்சி. “இந்தா, உனக்கு ஜலதோஷம் பிடிக்காதுனா வலி இருக்குற நேரத்துல உள்ளங்கை அளவு வெந்தயத்த எடுத்து வாய்ல போட்டு டபக்குன்னு தண்ணி விட்டு முழுங்கு, வலி போய்டும்” என்று அவள் சொன்னதைப் போல் செய்து நிவாரணமடைந்த வசந்தி அவளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறாள். அப்படிப்பட்டவளைத் தான் இதோ மாமியார் இப்படி கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கிறாள். செய்வதறியாது திகைத்து, பின் சற்று நிதானித்து, “அவசரத்துல கீழ சிந்தினத கழுவாம போயிட்டேன்த்த, இந்தா கழுவிடுறேன்”. முற்றத்திற்கு ஓடிச் சென்று விளக்குமாறும் வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு வந்தவளை அப்படியே எரித்து விடுவதைப் போல் பார்த்தாள் ராக்காயி.

“போதும் தாயி, நீ பண்ணி கிழிச்சதெல்லாம். பண்ற காரியத்த பாத்தா ஊர் மேயுற நாயாவுல இருப்ப போலிருக்கு. ஏம்ளா, இப்படியாளா விசுக்குவிசுக்குன்னு தூமய தூக்கிகிட்டு நடுவூட்ல ராவுவ? இஞ்சேரு, அடக்க ஒடுக்கமா இருக்குறதா இருந்தா இங்கன கெட. இல்ல, பொட்டிய தூக்கிக்கிட்டு இப்பவே கொப்பன் ஊட்டுக்கு போயிரு” என்றவள் பின்புறமாக பார்த்து “ஏளா, குருவாத்தி, அந்த தூமய கழுவி விட்டு கொஞ்சம் மாட்டு மோள தொளிச்சி வுடு. இந்த நாசமா போறவ வந்து வீடே வெளங்காம போச்சி” என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்படியே திரும்பி பார்த்தவள் “இந்தா, நீ பாட்டுக்கு சிங்கிடி சிங்கிடின்னு உள்ளார வந்துறாத. தூம நிக்குற வரைக்கும் அங்குட்டும் இங்குட்டும் லாந்துரத வுட்டுட்டு பொறக்கால இருக்குற அறைக்குள்ள அடைஞ்சு கெடந்துக்க. ஏ, ந்தா, இந்த பஞ்சி வச்சிக்குற பழக்கத்த இன்னோட மறந்துரு. ஓம் புருஷன் கிழிஞ்ச வேட்டி அந்தா அந்த தேங்காப் பத்தயத்துல போட்டு வச்சிருக்கேன், குருவாத்திய விட்டு எடுத்துக் கேட்டு, அத கிழிச்சு வச்சுக்க. இப்படி ஆம்பளைங்க பொழங்குற கக்கூசுக்குள்ள போவாத. பின்னால ஒரு ஓல மறைப்பு இருக்குலா, அதுக்குள்ள போயி துணி மாத்து. எளவெடுத்தவளே, தூமத் துணிய நாலு பேரு பாக்குற மாதிரி வெளில காயப்போடாத, உள்ளயே தொவச்சிப்போடு. எங்கருமம், இப்படி ஒருத்திய புடிச்சிகிட்டு வந்துருக்கேன்” தலையிலடித்துக் கொண்டே நடையை கட்டினாள்.

அமுதா இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள். தவசியிடம் சொல்லலாமென்றால் எங்கே, அவளை வீட்டுக்குள் விட்டால் தானே. அவனும் ஆத்தா பேச்சைக் கேட்டு இவள் என்னவானாள் என்று எட்டிக் கூட பார்க்கவில்லை. எப்படியோ அப்படியும் இப்படியுமாய் ஐந்து நாட்களை வலியோடு கழித்து விட்டு அடுத்த மாதம் தாய் வீட்டில் தங்கலாம் என்றிருந்தவள் தலையில் அடுத்த இடியை இறக்கினான் கண்ணப்பன்.

“இந்தா பாராத்தா, கட்டிக்கிட்டு போன இடத்துல அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். நீ இங்க இருக்குற மாதிரியே சொகுசா அங்கயும் இருக்கணும்னு நினச்சா எப்படி? கொஞ்சம் அசஞ்சு குடுத்து போத்தா. இந்த அப்பனால முடிஞ்சது நாலு பச்ச முட்டையும் கொத்தமல்லியும் தான். வாங்கித் தாரேன், நீ எப்படியாவது சமாளிச்சுக்க”

“தாயி, பொண்ணா பொறந்த பொறப்பு நாய் பொழப்பாத்தா. இந்தா எம்மருமவ இந்த ஆட்டம் போடுறாளே, பத்து வருசமா புள்ள இல்லாமத் தான் கெடந்தா. மாசாமாசம் அவளுக்கும் வழியத்தான் செஞ்சுது. வேளாவேளைக்கு கஞ்சிய காய்ச்சி குடுத்து, அவள நல்லா தான் பாத்துக்கிட்டேன் நானும். உன்னைய மாதிரி அவளுக்கு கஷ்டமா இருக்காது தாயி. இம்முடுகூண்டு துணிய கிளிச்சி வச்சானா ஒரு நாளைக்கு தாங்கும். ரெண்டு நாளைக்கு மேல தூமப் படாது. அவளுக்கு அஞ்சு நாளும் நீ வலில துடிக்க துடிப்பு எங்க தெரியப் போவு? வாத்தா, இந்த கஞ்சிய குடிச்சிட்டு செத்த நேரம் ஒரங்கிப்பாரு” பேச்சியம்மா தான் அமுதாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

சரியாக ஆறாவது மாதம். நாளெல்லாம் பெய்திருந்த மழையில் அந்த ஓலை மறைப்பு கரையான் தட்டிப் போயிருந்தது. கரையான்களோடு தேளும், கரப்பான் பூச்சியும் இன்ன பிற ஜீவராசிகளும் அங்கே தான் மழைக்கு ஒதுங்கியிருந்தன. போதாதகுறைக்கு கொஞ்சம் பலகைகளை வேறு மழைக்கு ஒதுக்கி போட்டு வைத்திருந்தார்கள். துணி மாற்றும் பொழுது யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதற்றம் வந்திருந்தது அமுதாவிற்கு. தவசியிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆசை வந்தால் மட்டும் அணைக்க வருபவன். ஒவ்வொரு மாதமும் துணியை வைத்து வைத்து தொடை எல்லாம் புண்ணாகி அவள் படும் அவஸ்தையை கூட கண்டுக்கொள்ளாதவன். வாஞ்சையாய் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாதவன்.

அமுதாவிற்கு வலி சுருக்சுருக்கென்று தைத்தது. கறைப்பட்டு விட்ட பாவாடையை லாவகமாய் கழட்டி கல்லில் போட்டு விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு கிணற்றில் வாளியை இறக்கி நீர் இறைக்க துவங்கினாள்.

“ஏட்டி மேனாமினுக்கி, எங்களா போன? போனா போன இடம்னு கதியா கெடக்க வேண்டியது. சீக்கிரம் வாளா”

“போச்சு. மாமியாக்காரி கூப்பாடு போட ஆரம்பிச்சுட்டா. இனி வந்து தொவைக்கலாம்” என்று நினைத்தப்படி அவசரம் அவசரமாக சேலையை உடுத்தி, பொந்துக்குள் சொருகி வைத்திருந்த தூமைத் துணியை மடித்து கால்களுக்கிடுக்கில் சொருகிக் கொண்டு “ந்தா வந்துட்டேன்த்த” என்றவாறே விரைவாக நடக்கலானாள்.

மடித்து வைத்திருந்த துணிக்குள் குஞ்சும் குளுவானமுமாய் குடும்பம் நடத்திய தேள் இப்பொழுது நெளிய ஆரம்பித்திருந்தது.


Wednesday, 24 June 2015

ராமையாவுக்கு - எழுதுகிறேன் ஒரு கடிதம்



ராமயாவுக்கு,

அன்புள்ள ராமையாவுக்குன்னு தொடங்கலாமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். சின்ன வயசுல நீங்க தான் என்னை மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்தீங்களாம், அம்மா சொன்னா. அப்படியும் எனக்கு உங்கள அன்புள்ளன்னு சொல்ல மனசு வரல.

காரணம் நீங்களே தான். பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்பத் தான் சொந்த ஊருக்கு வர்றேன். இங்க யாருக்குமே என்னை தெரியாதுன்னு நினச்சுட்டு தான் வந்தேன். ஆனா தூரத்துல இருந்து பாத்ததுமே நீங்க என்கிட்ட ஓடி வந்தீங்க. உங்க முகத்துல அப்படி ஒரு சந்தோசம். தாயி, நல்லாயிருக்கியா தாயின்னு என் ரெண்டு கையையும் புடிச்சுகிட்டீங்க. உங்க உடை எல்லாம் அவ்வளவு அழுக்கு. வெத்தல போட்டு குதப்பி குதப்பி பல் எல்லாம் வெத்தல கறை. போதாதுக்கு வாய்ல இருந்து வாய்நீர் வேற ஒழுகிட்டு இருந்துச்சு.

இதுக்காகவா என்னை அன்புள்ளன்னு சொல்ல நீ யோசிக்குறன்னு நீங்க கேக்கலாம். இல்ல, நிச்சயமா இல்ல. உடம்புல அழுக்கு இருந்தாலும் மனசுல அப்பழுக்கத்த ஜனங்க நீங்க எல்லாம்னு எனக்குத் தெரியும். ஆத்துலயும் கொளத்துலயும் ஊரான் வீட்டு அழுக்க எல்லாம் அடிச்சு தொவைக்குற ஜனங்க நீங்க. உங்கள அழுக்குன்னு நான் எப்படி ஒதுக்க முடியும்?

பின்ன எதுக்கு என்னைப் பாத்ததும் மேலோட்டமா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சுட்டு கைய இழுத்துட்டு ஒதுங்கி போனன்னு கேக்குறீங்களா? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு புறப்பட்டப்ப தூரமா நீங்க கைல துண்ட வச்சுட்டு என்னையே எட்டி எட்டிப் பாத்தப்ப படக்குன்னு மூஞ்சிய திருப்பிக்கிட்டு ஏன் கார்ல ஏறிப் போனேன்னு கேக்குறீங்களா?

அதுக்கும் காரணம் நீங்களே தான். உங்க உருவம் என்னை ஒரு நொடி உருக்குலைய வச்சது உண்மை தான். திடீர்னு ஒரு அந்நிய ஆடவர் என் கைய புடிச்சா எனக்கு அதிர்ச்சியா இருக்குமா இருக்காதா? ஆனா இதெல்லாம் ஒரு காரணமே இல்ல. திகைச்சாலும் புரிஞ்சுகிட்டு சந்தோசமா உங்கள பாத்து சிரிச்சிருப்பேன்.

ஆனா உங்க மேல அடிச்சுது பாருங்க குப்புன்னு ஒரு நாத்தம், என் இத்தன வருஷ வாழ்க்கைல நான் உணர்ந்திடாத நாத்தம் அது. குடலை பிரட்டிகிட்டு வந்துடுச்சு. விட்டா எங்க அங்கயே வாந்தி எடுத்துருவனோன்னு தான் உடனே அங்க இருந்து வந்துட்டேன்.

அதுக்காகத் தான் உங்க மேல அன்பு இல்லாம போய்டுச்சுன்னு எல்லாம் இல்ல. அன்னிக்கி முழுக்க அம்மா நீங்க முட்ட வந்த மாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாத்தினதையும் அதனால கீழ விழுந்து உங்க கை முறிஞ்சு போன விசயத்தையும் கதைகதையா சொன்னா. பாம்புனா கூட பயமே இல்லாம பிடிச்சு தூக்குவேனாமே, பச்சப் பாம்பும் தண்ணி பாம்பும் நீங்க தான் பிடிச்சுட்டு வருவீங்கன்னு அம்மா சொன்னா. என் காலுல நீங்க மாட்டி விட்ட கொலுசு தான் ரொம்ப நாளைக்கு இருந்துச்சாம். பாப்பா படிச்சு பெரிய டாக்டராகணும்னு கனவெல்லாம் கண்டீங்களாமே. ஆனா ஒண்ணு ராமையா, நான் டாக்டராகி எம்.ஜி.ஆர் மாதிரி முதலமைச்சர் ஆகணும்னு கனவு கண்ட ஒரே ஆள் நீங்களா தான் இருக்க முடியும். ஹஹா.

ராமையா, உங்கள பத்தின விஷயங்கள் எல்லாமே எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு. அன்னிக்கி சாயங்காலம் மட்டும் நான் அவள பாக்காம இருந்துருந்தா இந்நேரம் உங்க தோள்ல தொங்கி பழைய நினைவுகள புதுபிச்சிருப்பேனோ என்னவோ?

அவ உங்க பொண்ணாமே. பதினெட்டு வயசு இருக்குமா அவளுக்கு. அதுக்குள்ள கண்டாங்கி கட்டிக்கிட்டு கைல ஒரு புள்ளையோட ஒருத்தன்கிட்ட மிதி வாங்கிட்டு இருந்தா. கேட்டா அவ புருசனாம். ஏன் ராமையா, நீங்களும் தான அப்ப அந்த இடத்துல இருந்தீங்க. அவன் போட்டு அந்த அடி அடிக்குறான், நீங்க எல்லாம் விதின்னு வாய்ல துண்ட பொத்திகிட்டு அம்மாகிட்ட வந்து அழுதுட்டு நிக்குறீங்க. அந்த நொடி உங்கள பாத்து எனக்கு ஆத்திரம் வந்துச்சு.

நான் என்ன தாயி பண்றதுன்னு என்கிட்ட கேக்காதீங்க, இப்படி தான குடிச்சு குடிச்சு ஒதைச்சு உங்க பொண்டாட்டி படக்கூடாத இடத்துல பட்டு அல்பாயுசுல போய் சேந்துருக்காங்க. அப்பயாவது திருந்துனிங்களா நீங்க? வயசுப் புள்ளைய வீட்ல வச்சிருக்க கூடாதுன்னு பத்தாங்க்ளாஸ் பரிச்ச எழுத போன புள்ளைய புடிச்சி இந்த குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கீங்க.

அவன் குடிகார நாயின்னு தெரிஞ்சும் கல்யாணம் ஆனா திருந்திருவான்னு அவன் தலைல இந்த புள்ளைய கட்டியிருக்கீங்க. ஏன்யா, தெரியாம தான் கேக்குறேன், நீங்க எல்லாம் பரிசித்து பாக்கவா பொம்பள புள்ளைங்க எல்லாம் பிறப்பெடுத்துருக்கோம்? பெத்த புள்ளைய வச்சு காப்பாத்த துப்பில்லனாலும் பரவால, அத பாழும்கிணத்துல தள்ளி விட எப்படியா மனசு வந்துச்சு? அதுவும் மனசாட்சியே இல்லாம எல்லாம் அவ விதி, பொறந்த பொறப்புன்னு அவ மேலயே பழி போடுறீங்க?

நான் ஒருத்தி உங்கள பாத்து மூஞ்சிய திருப்பிகிட்டது தான் உங்களுக்கு குறைச்சலா போய்டுச்சாக்கும். கண் எல்லாம் கலங்கி தூரமா நான் மறையுற வரைக்கும் பாத்துகிட்டே இருந்தீங்க. ஆனா ராமையா, நீங்க அழுதது என் கண் முன்னால நிக்குது. என்ன இருந்தாலும் என்னை தூக்கி வளத்த மனுஷன் இல்லையா. அதனால தான் இத எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு.

உங்க பொண்ணு அழுறது உங்க மனச உறுத்தவே இல்லயா. மனசுக்குள்ள ஆயிரம் வருத்தம் இருக்கு அதான் குடிக்குறேன்னு சப்பக் கட்டு கட்டாதீங்க. அந்த பய தான் குடியால சீரழிஞ்சு உங்க பொண்ணையும் சீரளிக்குறான்னா நீங்களும்ல குடிச்சி குடிச்சி அவ வாழ்க்கைய சீரளிக்குறீங்க. என்ன பாக்குறீங்க?

பாசம்குறது தூக்கி வளத்த புள்ளைய பாத்து அவ பகட்டா திரியுறத பாத்து சந்தோசப்படுறது இல்லயா, பெத்து வளத்த புள்ள நல்ல துணி போடணும், நாலெழுத்து படிக்கணும், சீண்டுறவன அவ ஏறி மிதிக்கணும்னு நினைக்குறது தான்.

முதல்ல அந்த வீணாப்போன குடிய தூக்கிப் போட்டுட்டு எம்புள்ளய ஏண்டா அடிக்குற நாயேன்னு அவன ஒரு வார்த்த கேளுங்க. குடிய விட்டுட்டு வாடா, எம்புள்ளைய வாழ அனுப்புறேன்னு அவன் கிட்ட சொல்லுங்க. திருந்தினா திருந்தி வரட்டும். இல்லனா கவலையே படாதீங்க, அவன் கிட்ட அடியும் ஒதயும் வாங்கிட்டு அந்த புள்ள அணுஅணுவா செத்துப் போறதுக்கு உங்க வீட்ல வந்து மகாராணியா வாழ்ந்துட்டு போய்டலாம்.

ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷன் அமைஞ்சா நல்லது, ஆனா எல்லாருக்கும் அப்படி அமையுறது இல்லையே. ஒரு பாவிய கட்டிக்கிட்டு காலம்பூரா கஷ்டப்படணும்ன்னு அவசியமே இல்ல. புருஷன் மட்டும் ஒரு பொண்ணுக்கு உலகமும் இல்ல. அவளுக்கு ஒண்ணும் நாலு கழுத வயசும் ஆகிடல. இன்னும் பால் மணம் மாறாத அந்த பச்ச கைல இன்னொரு குழந்தை. கொடுமையா இருக்குயா.

என் மேல இன்னும் அன்பும் பாசமும் இருந்தா திருந்தி வாங்க. அப்பாவோட போன் நம்பர் உங்ககிட்ட இருக்கும்னு நம்புறேன். இல்லனா மாமாகிட்ட வாங்கிக்கோங்க. உங்க போனுக்காக காத்திருக்கிறேன். அதுல சந்தோசமா உங்க பொண்ணு குரலை தான் நான் முதல்ல கேக்கணும்.

கவலையே படாதீங்க, அவ என் தங்கச்சி. அவள படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். புள்ளைய பெத்தது நீங்க, நீங்க தான் அவள நல்லா பாத்துக்கணும். சம்பாதிக்குற காச சேர்த்து வைக்கப் பாருங்க. அவள படிக்க வைங்க. நல்ல உத்தியோகத்துல இருத்தி அழகு பாருங்க. அவ புள்ளைய வளர்த்தெடுக்குற தெம்பு அவளுக்கு வரணும். அதுக்கு என்னென்ன வழிகாட்டணுமோ அத எல்லாம் நான் காட்டுறேன்.

எப்படி வாழணும்னு நான் கத்துக் குடுக்குறேன் உங்களுக்கு. முதல்ல அந்த பாழாப்போன குடிய மறந்து தொலைங்க.

அன்பெல்லாம் இப்ப இல்ல. வந்தா பாத்துக்கலாம்.

- ப்ரார்த்தனா


.

Friday, 5 June 2015

அது ஒரு விபத்து


அது ஒரு விபத்து...

காலைல எட்டரை இருக்கும். அப்ப தான் எழும்பி வெளில வந்து நின்னு பல் தேய்ச்சுட்டு இருந்தேன். அந்தப் பக்கமா சைக்கிள்ல வந்த கனகவேலும் பிரான்சிசும் ஹாய்ன்னு கை காட்டிட்டு போனானுங்க. ஒருத்தன் தூங்கு மூஞ்சி வெவ்வெவேன்னு பழிப்பு காட்டிட்டு போனான். சீ ப்பே, செருப்பு பிஞ்சுடும்னு நான் இங்க இருந்து சைகை காட்டினேன்.

அப்ப தான் அது நடந்துச்சு. எதுக்க வந்த லாரிய கவனிக்காம சல்லுன்னு ரோட்டுல ஏறுன அந்த டூ வீலர் காரர அது பாட்டுக்கு தட்டி விட்டுட்டு லாரி போய்ட்டே இருந்துச்சு.

ஹே ஹேன்னு பசங்க ரெண்டு பேரும் சைக்கிள கீழ போட்டுட்டு ஓடுறானுங்க. நானும் என்ன நடந்துச்சுன்னு பாக்க ஓடுறேன். பின்னால அம்மா ஓடி வர்றா.

உயிர் இருக்கான்னு தெரியல. அப்படியே மல்லாந்து விழுந்து கிடக்கார். தலைல அடி. ரெத்தம் மெதுவா எட்டிப் பாக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

செத்துட்டான் போலயேன்னு பிரான்சிஸ் கைய பிடிச்சு பாக்கான். திடீர்னு விலுக்குன்னு உடம்பு தூக்கி வாரி போட்டுச்சு. அதோட இப்ப மெல்லுசா மூச்சு ஹெக்ஹெக்ன்னு இழுக்க ஆரம்பிச்சுது.

ஞாயிற்று கிழமை, பக்கத்துல ஆம்பளைங்க யாரும் இல்ல. எல்லாரும் தோப்பு, வயல்ன்னு தண்ணி பாய்க்க, புல்லு வெட்டன்னு காலைலயே போய்டுவாங்க. அப்படியும் இல்லனா சர்ச் வாசல், இல்லனா கோவில் வாசல்ல சீட்டு விளையாடிட்டு இருப்பாங்க.

ஏய், உசிரு இருக்கு. யாராவது வண்டி புடிச்சுட்டு வாங்க, தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுப் போய்டுவோம்ன்னு கனகவேல் அவர தூக்கி மடில கிடத்தி பதமா தலைய பிடிச்சு பக்கத்து பைப்ல அம்மா பிடிச்சுட்டு வந்த தண்ணிய தெளிக்கான்.

கூடி நின்னவங்க பூராவும் பொம்பளைங்க. அதிகமா வண்டிகளும் அந்த தெரு பக்கம் வராது. என்னப் பண்ணலாம்? நான் ஓடி வீட்டுக்குள்ள வந்து அப்பாவ தேடினா காணோம். அப்படியே அம்மா மொபைல் எடுத்து அப்பாவுக்கு கூப்பிட ஆரம்பிச்சேன்.

இல்ல, அவசரத்துல டயல் கூட பண்ண முடியல, கை எல்லாம் நடுங்குது. எப்படியாவது அந்த உயிர் பொழைச்சு வந்துடணும்ன்னு மட்டும் தான் மனசும் வாயும் முணுமுணுத்துட்டு இருக்கு. டக்குன்னு கார் சாவிய எடுத்தேன், வெளில வெறித்தனமா ஓடி வந்தேன்.

அம்மா, கேட்டை தொறன்னு கத்திகிட்டே கார்ல ஏறி வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன். அம்மாவும் ஓடி வந்து கேட்டை திறந்து விட, நான் நேரே வண்டிய கொண்டு வந்து அந்த ஆள் பக்கமா நிறுத்திட்டு, ஏத்துங்கடா, நாமளே போய்டுவோம்ங்குறேன்.

ரெத்தம், ரெத்தம் ரெத்தம். தேங்கி நின்ன ரெத்தத்த பாத்தா அப்படியே மயக்கம் வந்துது. அதுக்குள்ள ஒரு வேஷ்டி கொண்டு வந்து தந்த பாட்டி, நீ பொட்ட புள்ள தாயி, அந்த பயலுவள ஓட்ட சொல்லு, நாளபின்ன ஒரு பிரச்சனையாகிடப் போகுதுன்னு சொன்னதுக்கு இல்ல, நான் பாத்துக்குறேன்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணி சீறிப் பாய ஆரம்பிச்சுட்டேன்.

டேய், ஹாஸ்பிடல் எங்க இருக்கு, வழி சொல்லு, எனக்கு தெரியாதுன்னு நான் சொல்ல, பிரான்சிஸ் தான் லெப்ட் ரைட் சொல்லிட்டே, அந்த வேஷ்டிய அடிபட்டவர் தலைய சுத்தி கட்ட ஆரம்பிச்சான். கனகவேல் அவர் கால் ரெண்டயும் பிடிச்சு உள்ளங்கால பரபரன்னு தேய்ச்சு குடுத்துட்டு வந்தான்.

யாருடா இது, இவர் வீட்டுக்கு சொல்ல வேணாமா?

புதுசா இருக்காரு, நான் இதுவரைக்கும் இவர பாத்தது இல்ல - இது கனகவேல்.

நல்லவேளை, ட்ராபிக் அவ்வளவா இல்ல, பத்தே நிமிசத்துல ஹாஸ்பிடல் அடைஞ்சு, எமெர்ஜென்சி எமர்ஜென்சின்னு கனகவேல் இறங்கி ஓடுறான். ஒரு நர்ஸ் டீமோட திரும்பி வந்தவன் மெதுவா அடிபட்டவர காலை பிடிச்சுக்க, பிரான்சிஸ் மெதுவா தூக்கி குடுத்து, ஸ்டெச்சர்ல கிடத்தினாங்க. அப்புறம் வேக வேகமா உள்ள கொண்டுப் போய்ட்டாங்க.

உசிரு இருக்கான்னு நர்ஸ் ஒருத்தங்க கேக்க, ஓடிகிட்டே பிரான்சிஸ் தெரியலன்னு சொல்லிட்டுப் போறான்.

நான் காருக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கேன். அப்படியே ஸ்டியரிங் மேல கவுந்து படுத்துகிட்டேன். பல் தேச்சுட்டு இருந்த அந்த நிமிஷம் எவ்வளவு ரம்மியமா இருந்துச்சு. எப்படி ஒரே ஒரு நொடி அத தலைகீழா புரட்டிப் போட்டுடுச்சு.

அடிபட்டவருக்கு அப்படி ஒண்ணும் பெரிய வயசு இல்ல, ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா ஒண்ணோ ரெண்டு பொடியா பிள்ளைங்க இருக்கும். அவ்வளவு தான். அவங்க அப்பா அம்மா எப்படி துடிச்சுப் போவாங்க. தலைல வேற அடி. ஆண்டவா, பொழைச்சுக்கணும்ன்னு வேண்ட மட்டும் தான் முடிஞ்சுது என்னால.

கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும்னு நினைக்குறேன், கனகவேல் ஓடி வந்தான். ஆள் உயிரோட தான் இருக்கார். பின் மண்டைல அடி, கல் எதுவோ வெட்டி சதை பிளந்திருக்கு. இப்ப ஓ பாசிட்டிவ் ரெத்தம் வேணும். மொபைல் இருக்கான்னு கேட்டான்.

"இல்ல, எதுவும் எடுத்துட்டு வரல, அம்மா மொபைல கூட அங்கயே விட்டுட்டு வந்துட்டேன், அப்பா நம்பர் தவிர வேற எதுவும் மனப்பாடமா தெரியவும் செய்யாது".

"சரி, வா, அப்பாவுக்கு கால் பண்ணு" கதவ தொறந்து, என்னை வெளில இழுத்து கதவ சாத்திட்டு ஓடிட்டே சொன்னான் கனகவேல்.

ஹாஸ்பிடல்ல இருந்த காயின் பாக்ஸ்ல போய், நம்பர் சொல்லுன்னு சொல்ல, நான் சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அப்பாவும், என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. எந்த ஹாஸ்பிட்டல் போனோம்னு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்துருக்காங்க.

ஹாஸ்பிடல் எதுன்னு சொன்னதும், பத்தே நிமிசத்துல அங்க வந்தவங்க, ஓ பாசிட்டிவ் ரெத்தம் கிடைக்குமான்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.

எங்கள்ல எனக்கும் அப்பாவுக்கும் தான் ஓ பாசிட்டிவ். தம்பி சென்னைல இருக்கான். என்னால ரெத்தம் குடுக்க முடியாது, அப்பாவுக்கு சுகர். அப்படியும் போய் கேட்டோம், ரெத்தம் எடுத்துக்கோங்கன்னு. முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

ஓ பாசிட்டிவ் ஒண்ணும் கிடைக்காத ரேர் க்ரூப் எல்லாம் இல்ல. ஆனா அன்னிக்கின்னு பாத்து ஒரு பயலும் பக்கத்துல இல்ல. மாப்ள நான் குற்றாலத்துல இருக்கேண்டா, மதுரைல இருக்கேன்டான்னு ஆளாளுக்கு ஒரு இடத்த சொல்றானுங்க.

என் பிரெண்ட் சுந்தர் ஹாஸ்பிட்டல் வராண்டால இருக்குறவங்ககிட்ட எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். எல்லாருமே ப்ச்ன்னு உதடு தான் பிதுக்கினாங்க.

பரபரப்பா இன்னும் பத்து நிமிஷம் ஓடிப் போய்டுச்சு. அந்த ஆளு எப்படி இருக்காரோ? எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி பயம். கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. தலைய புடிச்சுட்டு அப்படியே ஒரு சுவர்ல சாஞ்சு தரையோட தரையா உக்காந்துட்டேன்.

அப்ப தான் அந்த அம்மா வந்தாங்க. பிரசவத்துக்காக பொண்ணை அங்க சேர்த்துருக்காங்களாம். என்னோட ரெத்தம் என்ன வகைன்னு தெரியாது தம்பி, ஆனா வேணும்னா எடுத்துக்கோங்கன்னு சொன்னாங்க. அவங்கள கூட்டிட்டு போய் ப்ளாட் குரூப் டெஸ்ட் பண்ணி பாத்தா, நன்றி சேசுவேன்னு பிரான்சிஸ் மேல பாத்து சிலுவை போடுறான்.

அப்பவே தெரிஞ்சிடுச்சு, ஓ பாசிட்டிவ் கிடச்சிடுச்சுன்னு.

அப்புறமா நிறைய பார்மாலிட்டீஸ்.போலிஸ் அது இதுன்னு. பசங்க தான் சுத்தி சுத்தி பரபரப்பா இயங்கினானுங்க. ஆனாலும் ஆள் யாருன்னு தெரியவே சாயங்காலம் ஆகியிருந்துச்சு. இங்க யார் வீட்லயோ நாய் குட்டி இருக்குன்னு கேள்விப் பட்டு அத வாங்க கிட்டத்தட்ட பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருந்து வந்தாராம். இடுப்புல ஒரு புள்ளைய வச்சுட்டு அவங்க மனைவி அழுதது அப்படியே கண் முன்ன நிக்குது. பாவம் அந்த புள்ளையால நடக்க முடியாது, கால் ரெண்டும் சூம்பிப் போய் இருக்கு. அதுக்கு விளையாட தான் நாய்க்குட்டியாம்.

நல்லவேளை, தலைல அடி அவ்வளவு பலமா இல்ல. தலைல சதைகள் தான் சிதைஞ்சு போய் இருந்துச்சு.

ஒரு வாரம் கழிச்சு அம்மாவோட ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். தலை முழுக்க கட்டோட அவர் கட்டில்ல படுத்து கிடந்தார். அவர் வயித்துல அவர் பொண்ணு ஏறி உக்காந்துகிட்டு அப்பா, நாய் குட்டி எப்பப்பா வாங்கித் தருவன்னு கேட்டுட்டு இருக்கா.

Saturday, 18 April 2015

அவள் பெயர் ப்ரியம்வதனா



என்னடி, ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் போவேன். நிம்மதியா மனுசனால ஒரு படம் கூட பாக்க போவ முடியல, எப்பப்பாரு உன்னையே தூக்கி வச்சிட்டு இருக்க முடியுமா?

உனக்கென்ன பார்த்தி, உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் இருக்கலாம், ஆனா நான் உன்னை மட்டும் தான நினச்சுட்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா சொல்லு...

உன்னை யாருடி என்னையே நினச்சுட்டு இருக்க சொன்னது? நானா உன்னை கட்டுப்படுத்தினேன், நானா உன்னை யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொன்னேன்.

ஆனா எனக்கு வேற யார் கூடவும் பேசத் தோணலயே”

“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“நான் கேக்காமலே நீ தான சொன்ன, இன்னிக்கி முழுக்க என் கூட இருக்கப் போறேன்னு”

“சொன்னேன் தான், ஆனா அவங்க கூப்ட்டாங்க, மறுக்க முடியல”

“அப்போ ஏன் நான் மட்டும் உனக்கு மறந்து போய்டுறேன்?”

“எதுக்கு திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க, எனக்கு தூக்கம் வருது, தூங்கப் போறேன். குட் நைட்”

பட்டென்று அவளோடலான மொபைல் உரையாடலை துண்டித்துக் கொண்டான் பார்த்தி...

பிரியம்வதனா முகம் இறுகி போயிருந்தது. இந்த மாதிரியான சம்பவங்கள் அவளுக்கு புதிதில்லை தான். எப்பவுமே பழகிப் போனது தான். எப்பொழுதெல்லாம் அவளோடு கூடவே அவன் இருக்க வேண்டுமென்று நினைக்குறாளோ அப்பொழுதெல்லாம் அவன் அவளை விட்டு விலகியே இருந்திருக்கிறான். இதற்காக ஒட்டு மொத்த பழியையும் அவன் மேல் தூக்கிப் போட்டு விட முடியாது தான், அப்படி போட நினைப்பது கூட தப்பு. சூழ்நிலைகள் அவளையும் அவனையும் எப்பவுமே கைதிகளாகவே வைத்திருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

ஆனாலும் அன்று அவனாகவே அவளிடம் வந்தான். “இன்று முழுக்க உன்கூடத் தான் இருக்கப் போகிறேன்” என்றான். அவளுக்கும் அவன் தேவையாய் இருந்தான். சோர்ந்து போயிருந்ததாலும் வலிகளால் துவண்டிருந்த காரணத்தாலும் அவன் அருகில் இருந்தால் அத்தனையையும் மறக்கலாம் என்றிருந்தாள்.

அழைத்துச் செல்ல வருவான் என்று காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் தூக்கம் தழுவிய நேரத்தில் தான் அவன் அவளை அழைத்திருந்தான்.

காலம் கடந்து அவளிடத்தில் ஓடி வந்தவனை அவள் திட்டியிருக்க கூடாது தான். கோபத்தில் வார்த்தைகளை விட்டிருக்க கூடாது தான். ஆனாலும் நடந்தது நடந்தே விட்டது. வார்த்தைகள் தடித்து விடக் கூடாதென்ற பயத்தில் அவன் அந்த நிமிடம் அவளை புறக்கணித்து சென்று விட்டான்.

இன்று என்று இல்லை, கொஞ்ச நாளாவே அவள் மனதுக்குள் ஒரு விஷயம் தொண்டையை அடைத்துக் கொண்டேயிருக்கிறது. அவன் நண்பனாய் இருக்கையில் எத்தனை விட்டுக் கொடுத்தல்கள் இருந்திருக்கிறது. ஏன் காதலில் ஆரம்பத்தில் அவர்கள் ஊடல் இப்படி தான் ஆரம்பித்திருந்தது.

“நான் இருக்குறப்பவே வர்ற போற பொண்ணுங்கள எல்லாம் சைட் அடிக்குற, தலை வலிக்குது, கால் வலிக்குதுன்னு அப்படியே என்னை கழட்டி விட்டுட்டு அவங்க கூட கடலப்போட போய்டுற”

“அழகா பொறந்துது என் தப்பா...”

“நீயாடா அழகா இருக்க? அப்படியே ஹிப்போபோட்டாமஸ் மாதிரி இருக்க. அவங்க எல்லாம் சைட் அடிக்க என் புருஷன் தான் கிடைச்சானா?”

“உனக்கு பொறாமை டி”

“எனக்காடா பொறாமை. எருமை. மூஞ்சப் பாரு, சகிக்கல, ஆனாலும் அழகா தாண்டா இருக்க”

அப்புறம் என்ன, கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்ன்னு ரெண்டு பக்கமும் பாட்டு சத்தம் கேக்க ஆரம்பிச்சுடும்.

“இருந்தாலும் அவனுக்கு ஒரு குட் நைட் சொல்லல. கூப்ட்டு சொல்லிடுவோமா?” ப்ரியம்வதனா மனசுக்குள் பெரிய பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

“அட, இதென்ன நமக்கு புதுசா?” என மனதை சமாதானப் படுத்தியப் படி அவன் மொபைலை தொடர்புக் கொண்டாள். அந்த பக்கம் ரிங் போய்ட்டு இருந்தது. இரண்டு மூன்று புறக்கணிப்புகளுக்கு பின்

“ஹல்லோ”

“ஏண்டா நான் குட் நைட் சொல்றதுக்குள்ள வச்சிட்ட”

“என்னை தூங்க விடக் கூடாதுன்னே முடிவு பண்ணிட்டியா?”

எரிச்சலோடு அவன் விலகிப் போவதை கவனித்து உள்ளுக்குள் நொறுங்கி அழ ஆரம்பித்தாள்.

“உனக்கு என்னை தவிர வேற எல்லாருமே வேணும் பார்த்தி. அவங்களுக்காக என்னை எப்பவுமே விட்டுக் குடுத்துடவ இல்ல”

“நீ ஏன் உன்னை அவங்களோட கம்பேர் பண்ணி உன்னை நீயே தாழ்த்திக்குற?”

“நீ ஏன் என்னை தவிர அவங்கள எல்லாம் உயர்த்தி பிடிச்சு கொண்டாடிக்குற?”

“அவங்க எல்லாம் ஒண்ணுமே இல்ல தெரியுமா எனக்கு?”

“ஆனா நான் தான் உனக்கு எல்லாமேன்னு தெரியுமா உனக்கு?”

“இதென்னடி கேள்வி? கேள்வியே தப்பா இருக்கு?”

“இல்ல அப்படி தெரிஞ்சிருந்தா ஒண்ணுமே இல்லாத அவங்களுக்காக எல்லாமுமா இருக்குற என்கிட்ட இப்படி எடுத்தெரிஞ்சி பேசிட்டு இருக்க மாட்ட”

உனக்கு பைத்தியம் தாண்டி புடிச்சிருக்கு. நான் போறேன். நாளைக்கு பேசுறேன். குட் நைட்.

படீர்னு மூஞ்சுக்கு நேரே கதை இழுத்து மூடினா எப்படி இருக்கும். பிரியம்வதனா அப்படி ஒரு மனநிலையில் இருந்தாள். சமீப காலமாவே அவளுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது தான்...

“பார்த்தியோட வாழ்க்கைல நான் யார்?”

“நீ தாண்டி எல்லாமே”ன்னு அவன் கண்டிப்பா சொல்லுவான் தான். இப்படி ஒரு கேள்வியை தெரிந்து கொண்டே கேட்க அவளுக்குள் எத்தனை குரூரம் இருக்கணும் என்று மனசுக்குள் மருகி தான் போவான். ஆனாலும் அவளுக்கு அந்த கேள்விக்கான பதில் தேவையாயிருந்தது.

ஏதோ ஒரு ஆக்ரோசம் அவளுக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

“எல்லாரையும் அரவணைத்துப் போகிறான், தட்டிக் கொடுக்கிறேன் என்று அனைவரையும் பாராட்டித் தள்ளுகிறான். ஏன், நான் அதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவளாகி தான் போனேனா? காதல் கிண்டல்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறான், அதுவும் எனக்கு பயந்து தான் இருக்க வேண்டும். எனக்கு என்ன கொறைச்சல்? என்கிட்ட எந்த திறமையுமே இல்லையா? நான் ஏன் இப்படி இருக்கேன்?

கொஞ்சிக் கொண்டே இருக்கும் காதல்களில் எப்பவுமே அவளுக்கு உடன்பாடு இருந்ததே இல்ல. ஏன் காதலிக்குறவங்க அவங்க இணையை சின்னதா பாராட்டிக்க கூடாதா, தட்டிக் கொடுக்க கூடாதா?

கோபம் வெடிக்க ஆரம்பித்தது. “நான் ஒண்ணும் தியாகி இல்ல, நான் எதுக்கு இப்படியே இருக்கணும்? எனக்கு இதையெல்லாம் தாண்டி எதுவோ தேவைபடுதுங்குறத அவனுக்கு எப்படி புரிய வைக்குறது?”

அவனோடு கதை பேசிக் கிடந்த நாட்களும், வாக்குவாதங்கள் புரிந்த நாட்களும், சந்தோசமாய் பாடித் திரிந்த நாட்களும் திரும்ப திரும்ப அவள் நினைவுகளில் மோதத் துவங்கி விட்டது. எத்தனையோ தர்க்கங்கள், படித்த கதைகள், பார்த்த நிகழ்வுகள் என்று நண்பர்களோடு அவளையும் முன்னிறுத்தி அவன் பகிர்ந்து கொண்டது ஏராளம். இப்பொழுதோ அதையெல்லாம் பேசி மகிழ புதிது புதிதாய் தோழர்கள், தோழிகள். இவள் காதலுக்கு மட்டுமேயானவள்ன்னு முடிவே கட்டிவிட்டானா என்ன?

“இந்த பாழாய்ப்போன வெற்றுக் காதலால நானும் ஒரு சராசரி பொண்ணா மாறித்தான் போனேனோ? அப்படி மாறிட்டதால இவ இனிமேல் என் தனி சாம்ராஜ்யத்துள் நுழைய தகுதி இல்லாத அந்தப்புர மகாராணின்னு அவனே முடிவு பண்ணி தள்ளி வச்சிட்டானோ. அப்படி தள்ளி வைக்குற அளவு நான் உணர்ச்சிகளே இல்லாத வெற்று காகிதம் இல்லையே”

இவன் ஒருத்தனின் புறக்கணிப்பின் பெயரால் அத்தனை பேர் மேலேயும் கோபம். “ஆமா, என்னை விட அவங்க தான் அவனுக்கு ஒசத்தி”ங்குற இயலாமை. அதனால ஏற்படுற ஆங்காரம், ஆக்ரோசம். இவனால் அத்தனை பேரும் அவளுக்கு கெட்டவர்களாகி போனார்கள்.

யோசிக்க யோசிக்க தலையே வெடிச்சிடும் போல இருந்தது அவளுக்கு. ராத்திரி முழுக்க தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விட்டு காலைலயே காரை எடுத்து வேக வேகமாக அவன் வீடு சென்று கதவை தட்டினாள்.

“டொக் டொக்”

கதவை திறந்தவன் ஆச்சர்யமானான்.

“என்ன இது, இவ்வளவு காலைல வந்துருக்க. நானே உன்னைப் பாக்க வரணும்னு நினச்சிட்டு இருந்தேன். சாரிடா, நேத்து கொஞ்சம் கோபமா பேசிட்டேன். மன்னிச்சுடு”

“பார்த்தி, நான் வந்தது என்னைப் பத்தி பேசுறதுக்கு”

“இதென்னது, புதுசா இருக்கு, நான் நீன்னு பிரிச்சு பேச ஆரம்பிச்சிருக்க. அப்போ நான் வேற நீ வேறயா?”

“இது நீ வேற நான் வேறங்குற மாதிரியான விஷயம் இல்ல பார்த்தி”

“அப்புறம் என்ன விஷயம்?”

“எனக்கு எல்லாமே வெறுமையா தோணுது பார்த்தி, எனக்குன்னு எதுவுமே இல்லாத மாதிரி”

“உனக்கு நான் எதுவுமே செய்யலன்னு சொல்றியா வதனா?”

“எனக்கு பதில் சொல்லத் தெரியல பார்த்தி. எனக்கு எல்லாமே நீயா தான் இருந்துருக்க, இருக்குற. அப்புறம் நீ எனக்கு எதுவுமே செய்யலன்னு நான் எப்படி சொல்ல முடியும்? ஆனா என்னவோ ஒரு வழிப் பாதையாவே இருக்குறதா எனக்கு தோணுது. இது ஒரு வேளை என்னோட பிரம்மையா கூட இருக்கலாம், ஆனா தோணுது. பிரிச்சு பாக்காத அந்த இடத்துல நீ மட்டும் தான் கண்ணுக்கு தெரியுற, என்னை காணவே காணோம்”

“நீயும் எனக்கு எல்லாமுமா இருந்துருக்க. வேற யாரா இருந்தாலும் இப்படி செய்ய மாட்டாங்க”

“இங்க பாரு பார்த்தி, உனக்கு நான் யாரு, உனக்காக நான் என்ன செய்தேன்னு எல்லாம் கண்டிப்பா கேக்க மாட்டேன், காரணம் எல்லாமே முழுக்க முழுக்க காதல், காதல் மட்டும் தான்னு எனக்கு தெரியும். ஆனா அதே காதலால இப்ப எனக்கு பெரிய மன அழுத்தம் இருக்கோன்னு தோணுது”.

“இப்போ என்ன பண்ணனும்னு நினைக்குற?”

“உன் காதல் என்கிட்ட இருக்குறப்போ அது மட்டும் தான் என்கிட்ட இருக்கு. வேற எதுவுமே இல்ல. ஒரு வேளை அந்த காதல நான் விட்டுட்டா? இந்த காதல தவிர வேற எல்லாமே எனக்கு கிடைச்சிடும்ல”

“அப்படி எது கிடைச்சாலும் அதுல சந்தோசம் இருக்காதுடி”

“பாக்கலாம் பார்த்தி. கொஞ்ச நாள் கண்டிப்பா கஷ்டப்படுவேன், நான் என்னை மாத்திக்க முயற்சிப் பண்றேன். என்னால முடியும்னு நம்பிக்கை இருக்கு. எனக்குன்னு நான் வாழணும்னு ஆசையா இருக்கு”.

“அந்த வாழ்க்கைய என் கூட வாழலாம்ல”

“நீ என் லைப்ல வந்ததுக்கு அப்புறம் தான சின்ன சின்ன பாராட்டுக்கு எல்லாம் ஏங்கிப் போக ஆரம்பிச்சுது மனசு. நீ என்னைத் தவிர எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடும் போது அத பாத்து நான் ஏன் தாழ்வு மனப்பான்மைல கூனிக் குறுகி போகணும்? எனக்கு என்ன கொறைச்சல் பார்த்தி. உனக்குத் தெரியுமா? உன்னைத் தாண்டிய என் உலகத்துல என்னை எல்லாரும் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. நான் அவங்களோட ராஜ குமாரி. பிரியம்வதனா நினச்சா சாதிக்காம விட மாட்டான்னு அவ்வளவு பெருமையா பேசுவாங்க. அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் என் வாழ்க்கைல நீ வரதுக்கு முன்னால சந்திச்சதே இல்ல பார்த்தி”.

“வதனா”

“கொஞ்ச நாளாவே என் மனசு ரணமா காயப்பட்டு துடிக்குரத உனக்கு நான் எப்படி புரிய வைப்பேன் பார்த்தி? என்னோட மனநிலைல இருந்து என்னிக்காவது யோசிச்சு பாத்திருக்கியா?”

நான் என்னடி பண்ணுவேன்? என் இயல்பே அது தான, நான் மாறிட்டா அப்புறம் நான் நானாவே இருக்க மாட்டேனே”

“அதுவும் எனக்கு தெரியும், நீ மாறினாலும் உன்னை எனக்கு பிடிக்காம போய்டும். நீ மாறாத, ஆனா எனக்கு உன்னை தாண்டிய எதுவோ தேவையா இருக்கு. என்னை போக விடேன்...”

சொல்லும் போதே குரல் கம்ம ஆரம்பித்தது. உதட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். “இல்ல, நான் பலவீனமாவள்ன்னு அவன் நினச்சிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் கண்ணீரை அவன் முன்னாடி சிந்திடக் கூடாது”.

கவனத்தை திசைத் திருப்ப சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்து மேஜை மேல் அடுக்கி வைத்தாள். கடகடவென்று சமையலறை சென்று வெந்நீரை கொதிக்க வைத்தாள். டீத்தூள் எடுத்து திறந்தவள் அப்படியே அதை ஓரமாய் வைத்து விட்டு வெறும் வெந்நீரை ஆற்றிக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“இங்கப் பாரு, இனிமே நீ யார வேணா சைட் அடிச்சுக்கோ, எவ கூட வேணா கடலை போட்டுக்கோ. உன்னை கேக்க யாருமே இருக்க மாட்டாங்க. நான் போறேன். எப்போ நீ எனக்கு தேவைன்னு நினைக்குறேனோ அப்ப நானே வரேன்”.

“அதுக்கு முன்னாடி வேற யாராவது என்னை கொத்திட்டு போய்டுவா”

வாசலை நோக்கி அடி எடுத்து வைத்தவள் ஒரு கணம் நின்றாள். அப்படியே திரும்பி அவன் சட்டையை பிடிச்சு

“எனக்கு தெரியும், என்னைத் தவிர வேற எவளாலும் உன் கூட குடும்பம் நடத்த முடியாது”

“அதான் திமிரு”

விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள். மனதுக்குள் வைராக்கியம் உறுதியாய் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தது


“வது, திரும்பிராத வது. வது திரும்பவே திம்பிராத, வது திரும்.....”




.

Wednesday, 15 April 2015

லெட்சுமி பிரசவம்



ஏ வசு எங்க இருக்க? இங்க ஓடி வா....

சுந்தரி கத்துனத கேட்டு பதறியடிச்சு வசந்தி ஓடி வந்தா.

“என்னாச்சுமா, எதுவும் பிரச்சனையா?”

“அந்த டாக்டருக்கு ஒரு போன போட்டுப் பாரு. ஆள இன்னும் காணல”

கைல கொதிக்க கொதிக்க வென்னிப் பானைய துணி வச்சி பிடிச்சு தூக்கிகிட்டே அவசர அவசரமா பின் வாசல் வழியா இறங்கி போனா சுந்தரி.

வசந்திக்கு பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. நேரே போன் வச்சிருக்குற இடத்துல போய் டாக்டர் நம்பர் எடுத்துட்டு கால் பண்ணினா.

“ஹல்லோ, டாக்டர் இருக்காரா? நான் குமாரசாமி வீட்ல இருந்து பேசுறேன்”

“அவர் அப்பவே கிளம்பி போய்ட்டாரே”

பின் கட்டுல என்ன நடக்குதுன்னு போய் பாக்க வசந்திக்கு பயம். ஏற்கனவே சுந்தரியும் குமாரசாமியும் பேசிகிட்டத கேட்டுட்டு தான் இருந்தா.

.......................................................................

“இன்னிக்கி நெறஞ்ச அமாவாச. எப்படியும் லெட்சுமி பிரசவம் நடந்துரும்”

அவங்க பேசிகிட்ட மாதிரி லெட்சுமிக்கு அப்படி ஒண்ணும் பெரிய மாத்தம் வந்துடல. பத்து மணி வரைக்கும் குடுத்தத எல்லாம் நல்லா தின்னுகிட்டு நல்லா மினுக் மினுக்ன்னு தான் இருந்தா. பதினோரு மணி வாக்குல தான் லேசா வலி வந்து முனங்க ஆரம்பிக்க, சுந்தரி வசந்திய எழுப்பி “நானும் அப்பாவும் பின்கட்டுக்கு போறோம். லெட்சுமி பிரசவம் நடக்கப் போவுது. நீ கதவ பூட்டிகிட்டு ஒரங்கு”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.

வசந்திக்கு இந்த மாதிரி பேரு காலங்கள பாக்குற திராணி இல்ல. இதுவே பகல் நேரமா இருந்தா அந்த இடத்த விட்டே எங்கயாவது ஓடிப் போயிருப்பா. அப்படியே ஆத்தங்கரைல கொஞ்ச நேரம் கல்லெடுத்து பொறுக்கிப் போட்டு, கூடவே மாந்தோப்புக்குள்ள போய் கல்லெறிஞ்சி மாங்கா பறிச்சு தின்னுட்டு மெதுவா தான் வீட்டுப் பக்கம் எட்டிப்பாத்துருப்பா.

ஆனா இன்னிக்கி பாத்து இருட்டிப் போச்சு. இனி எங்கயும் ஓட முடியாது. பேசாம அவ கட்டில்ல போய் குப்புற படுத்துட்டு தலையணைக்குள்ள மூஞ்ச பொதச்சுகிட்டா.

..........................................................

இங்க லெட்சுமியால வலிய பொறுக்க முடியல. கால கால தூக்கி தூக்கி அடிக்குறா. ரெண்டு மூணு தடவ நீரும் சொட்டு சொட்டா போவுது, வயிறு இளக்கி அது வேற கஷ்டமா இருக்கு.

சுந்தரி தான் தலைமாட்டுல ஆறுதலா தடவிக் குடுத்துட்டு இருந்தா. குமாரசாமி முதுகுல வாஞ்சையா தடவுனத பாத்து லட்சுமிக்கு கொஞ்சம் ஆசுவாசமாச்சு. கண்ணெல்லாம் நிறைஞ்சு போய் “ம்ம்ம்மா....”ன்னு முனங்க ஆரம்பிச்சுட்டா. “எப்படியும் இன்னும் அரமணி நேரத்துல பிரசவம் முடிஞ்சிரும். வலிய பொறுத்துக்கோ, புள்ளைய பாத்தா உன் கஷ்டம் எல்லாம் பறந்துரும்”னு ஆறுதலா குமாரசாமி லெட்சுமிக்கி சொல்லிட்டு இருக்கார்.

நேரம் ஆக ஆக இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு லெட்சுமி வாய்விட்டு கதற ஆரம்பிச்சா “அம்மாஆஆஆஆஆஆ”

லெட்சுமி கதறல கேட்டு லேசா கண்ணசந்து போன வசந்தி விருட்டுன்னு எழுந்து உக்காந்தா. “சீக்கிரமா பிரசவம் நடந்துரனும் சாமி, எங்க லெட்சுமிய கஷ்டப்படுத்தாத”

சுந்தரிக்கும் குமாரசாமிக்கும் பரபரப்பு தொத்திகிச்சு. “கொஞ்சம் படுத்து முக்கிப் பாரு. இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி?”. சுந்தரி பேச்சுக்கு கட்டுப்பட்டத போல லட்சுமி படுத்து முக்க ஆரம்பிச்சா.

இல்ல, முடியல, மறுபடியும் எந்திரிச்சிட்டா. எப்படியாவது புது உயிர பத்திரமா இந்த ஒலகத்துக்கு கொண்டு வரணுமே, லெட்சுமி படுக்குறா, முக்குறா, கதறுறா, எழும்புறா... ஒருக்கட்டத்துல எழும்பவே முடியாம மாறி மாறி முக்கும் போது தான் மெல்ல கன்னிப்பை எட்டிப் பாக்க ஆரம்பிச்சுது.

“அவ்வளவு தாண்டா, இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இந்தா வந்துட்டு, முக்கு முக்கு...” குமாரசாமி லெட்சுமிகிட்ட ஆறுதல் சொல்லிகிட்டே, “அந்த சாமி வீட்டு திருநீர எடுத்துட்டு வா”ன்னு சுந்தரிக்கு கட்டள போடுறாரு.

சுந்தரி அவ தலைய ஒரு தடவ மார்ல புதைச்சு அணைச்சுக்கிட்டு “இந்தா வந்துடுறேன், சீக்கிரம் முடிஞ்சிரும்”னு ஓடிப் போய் திருநீர எடுத்துட்டு வந்து நெத்தியில பூசி விட்டா.

அப்படியே முதுகு, பின் பக்கம்ன்னு எல்லா இடத்துலயும் திருநீர தடவ, படீர்ன்னு கன்னிக்குடம் வெடிச்சு அந்த இடம் முழுக்க ஈரம்.

இந்தா இப்ப வந்துரும் இப்ப வந்துரும்னு குமாரசாமி வாய் முணுமுணுத்தாலும் படக்குன்னு உள்ள போய்ட்ட கால்கள பாத்து கொஞ்சம் பீதியாக தான் செய்துட்டார்.

“சுந்தரி, டாக்டர கூப்டுவோமா, எதுக்கும் வந்து பாத்துடட்டும்”

“எனக்கும் அப்படி தாங்க தோணுது. ராத்திரி பனிரெண்டு மணி. ஆனாலும் கூப்ட்டு தான் ஆவணும்”

இப்ப லெட்சுமி எழுந்து நின்னுருந்தா. கன்னி வாய்ல எந்த அடையாளத்தையும் காணோம். உள்ள போய்டுச்சு.

டாக்டர கூப்ட்டுட்டு வந்தவகிட்ட கொஞ்சம் வென்னி ஒத்தடம் குடுப்பமான்னு கேட்டவர பாத்து, அதுவும் சரிதான்னு சாணி அடுப்புல வென்னிப் போட்டுட்டு வந்து கவலையோட உக்காந்தா சுந்தரி.

“ஏங்க, இவ ஏன் இன்னும் படுத்து முக்கல. காலோ தலையோ எதுவும் வெளில தெரியலயே”

“பொறு எல்லாம் சரியாகிடும்” குமாரசாமி லெட்சுமி முதுக விடாம தடவிட்டு இருந்தார்.

...........................................................................

ரெண்டாவது தடவையா டாக்டர கூப்ட்டு பாத்துட்டு வசந்திக்கு இனிமேலயும் படுத்துக் கிடக்க முடியல. எழும்பி மெதுவா கொல்லப்பக்கமா வந்தா.

“ஏம்மா, லெட்சுமிக்கி பிரசவம் ஆச்சா இல்லியா? சத்தத்த காணோம்”

“இன்னும் இல்லடி. வயித்துல அசைவையும் காணோம். எனக்கென்னமோ பயமா இருக்கு”

“ஒண்ணும் ஆவாதுமா” வாய் சொன்னாலும் வசந்திக்கும் இப்ப பதற்றம் தொத்திகிச்சு.

அந்நேரம் பாத்து லெட்சுமி கொஞ்சம் படுத்து முக்க, வெள்ளையா ரெண்டு காலு வெளில தெரியுற மாதிரி இருக்க, “வசு, நாம பிரசவம் பாத்துருவோமா” குமாரசாமி கேட்டதுக்கு சட்டுன்னு “சரிப்பா”ன்னு பதில் சொல்லிட்டா வசந்தி.

சுந்தரி லெட்சுமிய எழும்ப விடாம கழுத்த கட்டிக்கிட்டு கிடக்க, குமாரசாமி மெதுவா கைய உள்ள விட்டார். அவர் தயக்கத்த பாத்த வசந்தி, இருங்கப்பான்னு அவர தள்ள சொல்லிட்டு லாவகமா கைய உள்ள விட்டு கால பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சா.

“அம்மாஆஆஆஆ.......”

“பொறுடா பொறுடா... இந்தா இப்ப வந்துரும்” வசந்தி இழுத்த இழுப்புல ரெண்டு காலும் கொஞ்சம் வெளில வர, இப்ப குமாரசாமியும் சேந்துகிட்டார்.

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“அம்மாஆஆஆஆ.......”

“என்னப்பா, தலையக் காணோம்”

பொறுக்க மாட்டாம லெட்சுமி மறுபடியும் எந்திரிச்சு நின்ன நேரத்துல தான் டாக்டர் மெல்ல வெடலிக்கு அந்தப்பக்கமா நின்னு குரல் குடுக்குறார்.

“வர்ற வழில வண்டி மக்கர் பண்ணிடுச்சு. நட்டநடு ராத்திரியில நம்ம முத்த எழுப்பி அத சரி பண்ணிகிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிட்டு”

இந்த நேரம் கம்பவுண்டரயும் சேத்து எதிர்ப்பாக்குறது தப்பு. இவர் வந்ததே பெரிய விஷயம்.

வந்தவரு நேரா வென்னிய எடுத்து கைய நல்லா அலம்பிட்டு கூடவே டெட்டால் சோப்பும் போட்டு கைய கழுவுனார். சட்டைய களத்தி அங்க நின்ன மாமரத்து கிளை ஒண்ணுல தொங்க விட்டுட்டு மெல்ல லெட்சுமி பின்பக்கமா தடவிகிட்டே கைய உள்ள விட்டு பதம் பாத்து முடிச்சவர் நின்னு யோசிச்சுட்டு “கயிறு போடணும் போல”

இன்னும் ரெண்டு பேர் இருந்தா லெட்சுமிய பிடிச்சுக்க வசதியா இருக்கும். ஆனாலும் என்னப் பண்றது, நாமளே சமாளிப்போம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ண, டாக்டர் கொண்டு வந்த நைலான் கயித்த லாவகமா முடிச்சுப் போட்டு ஈத்துவாய்ல கைய உட்டு கால சேர்த்து கட்டுனார்.

நல்லா இழுங்க.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... இன்னும் கொஞ்சம்.... இன்னும் கொஞ்சம்....

லெட்சுமிய பாக்க முடியல. அவளால இப்ப கதறக் கூட முடியல. ஏதாவது செய்து என் புள்ளைய காப்பாத்திருங்கன்னு அவ கெஞ்சுற மாதிரி இருக்கு. இந்த வலிய என்னால பொறுக்க முடியலயேன்னு அழுற மாதிரியும் இருக்கு. குமாரசாமியும் டாக்டரும் இழுத்துப் பாத்துட்டு ரொம்பவே சோர்ந்து போய் இருந்தாங்க. லேசா ரெத்தமும் மாசியும் கலந்து ஒழுக்கி விளுந்தத பாத்து வசந்திக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்க, “எம்மா, நான் வேணா லெட்சுமி தலைமாட்டுல நிக்கேன், நீ வந்து இழுக்குறியா”ன்னு சுந்தரிகிட்ட கேட்டா.

“எனக்கென்னமோ முடியும்னு தோணல, கம்பி போட்ருவோமா”

டாக்டர் என்ன சொல்றார்ன்னு புரியாம வசந்தி திருப்பிக் கேட்டா

“அப்படினா என்ன டாக்டர்”

“இந்த மாதிரி ரொம்ப முடியாம போனா புள்ளையோட ரெண்டு கண்ணுக்கும் இடையில இருக்குற மூக்கு தண்டு பகுதில ஒரு கொக்கிய போட்டு இழுப்போம். புள்ள வழுக்கிகிட்டு வசமா வெளில வந்துரும்”

“ஐய்யய்யோ, அப்படினா புள்ளயோட கண்ணு போய்டுமே, மூக்கு உடைஞ்சுப் போனா புள்ள செத்துருமே... அத உயிரோட எடுக்க முடியாதா” வசந்தி அழ ஆரம்பிச்சுட்டா. பாவம் லெட்சுமி, எதுவுமே புரியாம ஏக்கமா பாத்துட்டு நிக்கா..

“அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. ரெண்டு கண்ணுக்கும் இடப்பட்ட அந்த பகுதி ரொம்ப உறுதியானது. கால புடிச்சு இழுத்தா கூட பயப்படணும்... இது பயம் இல்ல... புள்ள ஜம்முன்னு வந்து விழும் பாரேன்”

டாக்டர் சொன்னதுல நம்பிக்க இல்லனாலும் இப்ப நம்பி தான் ஆகவேண்டியிருக்கு. வேற வழியில்ல. எல்லார் முகத்துலயும் சோகம். ஆனாலும் நடக்குறது நடந்து தான ஆவணும்.

இங்க நடந்த களேபரத்துல அப்ப தான் பக்கத்து வீட்டு நடேசன் கண்ண முழிச்சி லைட்ட போட்டுட்டே எட்டிப் பாக்குறான்.

“லே... நடேசா, கொஞ்சம் வந்து உதவி பண்ணுடே... லெட்சுமி பிரசவம் சிக்கலாய்டுச்சு”

வெளிச்சத்த பாத்து சுந்தரி குரல் குடுத்ததும் உடனே அங்க வந்துட்டான்.

டாக்டர் அந்த வளஞ்ச கொக்கிய எடுத்து மறுபடியும் ஈத்து வாய்க்குள்ள கைய உட்டு தலைய தேடுறார். கொஞ்ச நேர போராட்டத்துக்கு பொறவு “மாட்டிட்டேன், இழுங்க”ங்குறார்.

இப்ப டாக்டர் முதல் ஆளா இழுக்க, பின்னால குமாரசாமியும் நடேசனும் தம் கட்டி இழுக்க ஆரம்பிச்சாங்க. சுந்தரி கடைசி ஆளா கைகுடுக்க, அம்மா....ஆஆஆ.....ன்னு அலறுன லெட்சுமிய வசந்தி அணைச்சுகிட்டா...

“இந்தா வந்துடுச்சு, இந்தா வந்துடுச்சுன்னு ஒரு மூணு நிமிஷம் போராடினதுக்கு பொறவு லெட்சுமியோட மூணாவது கதறலோட விருட்டுன்னு வெளில வந்து விழுந்துது புது உசுரு.

புள்ள கண்ணுல மாட்டியிருந்த கொக்கிய உருவிகிட்டு இருந்தவர் கிட்ட “என்ன டாக்டர் இது? அசைவே இல்ல” வசந்தி கலவரத்தோட பாக்குறா.

பிரசவிச்ச அடுத்த நிமிஷம் லெட்சுமி திரும்பி புள்ளைய பாக்கலாம்னா கழுத்துல கட்டியிருந்த கயிறு தடுக்குது. இவங்க மூணு பேரையும் பாத்து வயித்த எக்கி “ம்ம்மா.....”ன்னு கூப்டுறா.

குமாரசாமி புள்ள மூஞ்சில ஒட்டி இருந்த மாசியயும் ரெத்தத்தயும் துணி வச்சு தொடச்சுட்டு இருக்கும் போது டாக்டர் குட்டி நெஞ்சுல கை வச்சு பரபரன்னு தேய்ச்சு பட் பட்ன்னு அடிச்ச அடில புள்ள லேசா அசஞ்சு குடுத்துது. தலைய தூக்க முயற்சி பண்ணி முடியாம தலைய கீழ போட்டுடுச்சு.

எப்பா, உயிரு இருக்கு” அஞ்சு பேர் மூஞ்சிலயும் இப்ப சந்தோசம்.

டாக்டர், குமாரமாமி, நடேசன்ன்னு மூணு பேருமா சேந்து குட்டிய தூக்கி லெட்சுமிகிட்ட போட்டப்ப லெட்சுமி மூஞ்சிய பாக்கணுமே. புள்ளைய அப்படியே நக்கி நக்கி எடுக்குறா.

புள்ள நல்ல கலருன்னு சொல்லிகிட்டே சுந்தரி வாலத் தூக்கிப் பாத்து, பொட்டப் புள்ளைங்கன்னு கலகலன்னு எல்லாரும் சிரிச்சுட்டு இருக்குறப்ப தான் போன உசிரு திரும்ப வந்துச்சு குமாரசாமிக்கு.

அப்புறம் என்ன, தள்ளைக்கும் புள்ளைக்கும் ஆளுக்கொரு ஊசிய போட்டுட்டு விடிஞ்சி வந்து பாக்குறேன்னு லெட்சுமிய ஒரு தடவ தடவிக் குடுத்துட்டு நூறு ரூவா தாளையும் வாங்கிட்டு டாக்டர் கிளம்பிப் போய்ட்டார். நடேசனும் அவன் வீட்ல போய் படுத்துட்டான்.

இங்க ஒரே பரபரப்பு....

“எப்பா, புள்ளைக்கு நான் குளம்பு வெட்டுறேன்”

“நீ வெட்டத் தெரியாம வெட்டிருவ, கத்திய இங்க கொண்டா நான் வெட்டுறேன்”

“எது, எங்களுக்கு வெட்டத் தெரியாதாக்கும். புள்ளைக்கு கண்ணுல மருந்து போட்டு இனி கவனிக்கப் போறதே நான் தான் தெரியும்ல”

“ஆமாமா, பயந்தாங்கொள்ளி, போ போ, போய் தலையணைய கட்டிபுடிச்சு ஒரங்கு. இனி லெட்சுமி கொடி போடுற வரைக்கும் எங்களுக்கு ஒறக்கமில்ல” புள்ளய வாக்கா புடிச்சு பால் குடிக்க வச்சுகிட்டே குமாரசாமி மகள விரட்டிட்டு இருக்கார்....

Tuesday, 7 April 2015

கன்னி பூசை





எங்க குடும்பத்த பொருத்தவரைக்கும் நாலுதலைமுறைக்கு முன்னால தாய்மாருங்க தாலாட்டுக்கும், கிழவிங்களோட காட்டுவழி கடைசி ஒப்பாரிக்கும் எப்பவும் குறையின்னு இருந்ததே இல்ல. பால் குடிக்குற பச்சப்புள்ளைங்கள்ல இருந்து, சிங்காரிச்சி நிக்கும் சமைஞ்ச புள்ளைங்க வரைக்கும் வயசு வித்யாசமே இல்லாம சாவு அள்ளிக்கிட்டுப் போச்சாம். வாழவேண்டிய வயசு, வாழ்ந்துகெட்ட வயசுன்னு எந்த வித்யாசமும் இல்லாம ஏதாச்சும் ஒரு துக்கச்செய்தி கேட்டு விடிஞ்சுட்டு இருந்த காலம் அது. தப்பிப்பொழைச்ச புள்ளைங்களை கண்ணுக்கு தூசியில்லாம முந்தானைக்குள்ள முடிஞ்சே வளத்துருக்காங்க.

அப்படி பொழைச்சவருதான் ராமைய்யா தாத்தா. அவர் உடம்பிறப்பா பொறந்த ஒன்பது உசிரும் நிக்கவேயில்ல. ராமைய்யா தாத்தாவுக்கு தலைச்சான் புள்ள ஆம்பளப் புள்ளையா பொறந்ததும் கொண்டாடவா இல்ல கொலை நடுங்கவான்னு தெரியாம குடும்பத்துல உள்ளவங்க எல்லாம் பரிதவிச்சுக்கிடந்தாங்களாம்.

ராமைய்யா தாத்தாவோட அய்யா இளையபெருமாள் நிலபுலன்களோட செல்வச் செழிப்பா இருந்தவரு. ராமைய்யா தாத்தா பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு சுசீந்திரத்திலிருந்து இன்னொரு பொண்ண கல்யாணங்கட்டி மாட்டுவண்டியிலே கூட்டிக்கிட்டு வந்துட்டாராம். என் எடத்துல இன்னொருத்தி சக்காளத்தியான்னு முந்தியை அள்ளிமுடிஞ்சுட்டு புள்ளையை தூக்கிக்கிட்டு வீட்டைவிட்டு வெளியேறின வீராப்புக்கிளவிதான் ராமைய்யா தாத்தாவோட ஆத்தாக்காரியான பொட்டுக்கட்டி.

ஆத்தாவும் மகனும் ரெட்ட உசுரா காடழிச்சு, கழனி திருத்தி, களை பறிச்சு, பனைமரம் ஏறி கிளவி பாக்காத வேலை கிடையாது, தன்வயித்துப் பசி அடக்கி புள்ளைய தங்கமா வளர்த்திருக்கா. அரசனே ஆனாலும் புருசன் தப்பு பண்ணினா தூக்கி எறிஞ்சவ-ன்னு அக்கம் பக்கத்து ஊருல உள்ளவங்க எல்லாருக்கும் அவ மேல தனி மரியாதை. எடுபட்டவன் ஒருத்தனும் அவ இருந்த திசைபக்கம் தீண்டுனது கிடையாதாம். காட்டுல தனியா மேய்ச்சலுக்குப் போன புள்ளைகிட்ட பாய நெனைச்ச கள்ளனை பனைமட்டையாலே அடிச்சு நடுமுதுக ரெட்டையா பொளந்து விட்டிருக்கா! அன்னையிலிருந்து மேய்ச்சல்குடி ஆட்களுக்கு ஆச்சிகிட்ட மரியாதையோடு பக்தியும் சேர்ந்துடுச்சு.

தம் மகன் ராமைய்யாவை கூறுள்ள புள்ளையா வளத்து ஒரு கல்யாணத்தையும் பண்ணி வச்சு அவருக்கு ஒரு புள்ள இல்லையேன்னு வருத்தத்திலே பூமிக்குள்ள போன ஆச்சிக்கு இன்னைக்கும் அஞ்சுகிராமத்துக்கு கிழக்கே கோயிலெடுத்து கும்பிட்டுட்டு இருக்காங்க மேய்ச்சல்காரங்க. அவங்களுக்கு அவ காவல் தெய்வம். எங்களுக்கும் தான்.

ஆச்சிக்குப் பின்னும் உழைப்புகளை விடாம நிலபுலன்களை கொத்தி, கால்நடைங்க பராமரிச்சு பெரும்பணம் சேர்த்த ராமைய்யா தாத்தாவுக்கு பதிநாலு வருஷம் கழிச்சு பொறந்த பிள்ளைக்கு கணேசன்னு பேரு வச்சிருக்கார் ராமய்யா தாத்தா.

பிறப்பிலே முகத்தில் தெய்வக்களையாம். அப்படியே ஆச்சியை உரிச்சு வச்ச முகம். ஓங்கின காலோட பிறந்தவருன்னு சொல்வாங்க. உள்ளங்கையிலே சங்கு ரேகை ஓட அத்தனை ஊரு ஜோசியக்காரனும், செல்வமும் சினைமாடும் நிறைஞ்சு நிக்கும் வீடா உன் வீடிருக்கும்ன்னு குறிசொல்லிப் போயிருக்காங்க. சொன்னபடியே சினைப்பசு மொத ஈத்தே கிடாரிக்கன்னு ஈனிருக்கு. அடுத்த அஞ்சாறு வருசத்தில் வீட்டில் வரிசையா தொட்டில் கட்டவேண்டி இருந்துச்சாம், எங்கம்மா அன்னரதி, நாராயணன் மாமா, வைகுண்டம் மாமா, சாருமதி சித்தி, விஜயா சித்தின்னு எல்லாரும் அடுத்தடுத்து பொறந்தவங்க தானாம்.

ஆறு புள்ளை பெத்தாலும் ராமைய்யா தாத்தா முகத்தில் ஏதோ ஒரு கவலைக்குறி இருந்துட்டே வந்ததுருக்கு. அது எதனாலன்னா, கணேசன் மாமா பிறந்தப்ப “இந்த குடும்பத்துக்கே குலசாமி இவன் தான், ஊரறிய உலகறிய பெரியவனா வருவான், ஆனா பதினாலு வயசுல கண்டம் ஒண்ணு தொரத்துது, அத தாண்டிக் காப்பாத்தனும் ராமய்யா இந்த கொடியவிட்டுட்டா நம்ம வம்சத்துக்கு தொப்புள்கொடி எதுவும் நிலைக்கொள்ளாது”ன்னு பொட்டுக்கட்டி ஆச்சி கனவா வந்து சொல்லிட்டு போயிருக்கு.

ஒன்னரை வயசுல சரளமா பேச ஆரம்பிச்சு, அஞ்சு வயசுல தோப்பு கணக்கு, வயல் பகுமானம் வீட்டோட நிர்வாகம் முழுசும் நடத்துற அளவுக்கு திறமையாம் கணேசன் மாமாவுக்கு. எப்பவும் தாத்தா அவரைமட்டும் தோள்லயே தூக்கி சுமந்துருக்காங்க. மத்த புள்ளைங்களை ஆச்சி சுமந்திருக்கு.

பதினோரு வருசமா உள்ளுக்குள்ள துக்கத்தையும், கண்ணுக்குள்ள கண்ணீரையும் ஒழிச்சு ஒழிச்சு வளர்த்துக்கிட்டாங்களாம். கணேசன் மாமாவுக்கு பத்து வயசானப்ப மதமதன்னு வீட்டுக்குள்ள மத்த அஞ்சு புள்ளைங்களும் தவழ்ந்து ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா அதுல மூத்தப் பொண்ணுங்குறதால அம்மா மேல கணேசன் மாமாவுக்கு கொள்ள ஆசை. ஆசை ஆசையா அம்மாவ கைல தூக்கி கணேசன் மாமா வச்ச பேரு தான் அன்னரதி. வீட்டுக்கு வந்த முதல் லெட்சுமின்னு அம்மாவ அவர் தாங்கு தாங்குன்னு தாங்கியிருக்கார்.

ராமைய்யா தாத்தாவோட மனபாரமும் தோள்பாரமும் இறங்கும் நாளும் வந்துருக்கு. எண்ணி பதினோராவது வயசு முடியுற அன்னைக்கு கிணத்தடியில் குளிச்சு, என்னைக்குமில்லாமல் திருநாமம் போட்டுக்கிட்டு ஆச்சியோட படத்துக்குமுன்னாடி போய் உட்கார்ந்துட்டு வில்லா விறைச்சு துள்ளியிருக்கார். சுத்தி உட்கார்ந்து சாமிகும்பிட்டுட்டு இருந்தவங்க தாவிப்புடிக்க அருள்வாக்குமாதிரி ”ஏ மக்கா நான் எங்கயும் போகலலே ஒவ்வொரு பூஜைக்கும் தவறாம வருவேன் இந்த கொடி என்னைக்கும் வாடாது. நான் இருக்கேம்மக்கா காவலா”ன்னு சொல்லி அடங்கிட்டார்.

அண்ணனுக்கு என்ன ஆச்சுன்னு அவ்வளவா விபரம் தெரியாட்டியும் அம்மாவுக்கும் நாராயணன் மாமாவுக்கும் தன்னோட அண்ணன் தெய்வமாகிட்டார்ன்னு பரிபூரண நம்பிக்கை. கணேசன் மாமாவை மூத்த புள்ளையா மட்டும் பாக்காம கடவுளாவே பாக்க ஆரம்பிச்சுட்டாங்க மொத்த குடும்பமும். தலைச்சான் புள்ளைய பறிகுடுத்த ராமைய்யா தாத்தாவுக்கு அந்த அஞ்சு புள்ளைங்களும் அடுத்து மேலும் நாலு புள்ளைங்க. பத்து புள்ளைங்கள பெத்து, அதுல ஒண்ண பறிகுடுத்து ஆலமரமா தழைக்க ஆரம்பிச்சுடுச்சு பொட்டுக்கட்டி குடும்பம்.

இன்னைக்கும் பொட்டுகட்டி குடும்பத்துல ஒரு வழக்கம் உண்டு. யாராவது கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி செத்து போய்ட்டா அவங்கள கன்னியா நினச்சு வருசத்துக்கு ஒருதரம் அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் படையல் வச்சு பூசை கொடுக்குறது. கணேசன் மாமா இறந்தப்போ இதே பூசையெல்லாம் செஞ்சு அவரை நடுவீட்டுக்குள்ளே அடக்கம் பண்ணி இருக்காங்க. தலைச்சாம்புள்ளையை வெளியெடத்துல புதைச்சா மலையாள மந்திரவாதிங்க யாரும் தலையோடை எடுக்க தோண்ட வருவான்னு அப்போ இருந்த பயத்தின் காரணமா இந்த ஏற்பாடு.

வருஷம் ஓடிட்டே இருக்க, எங்கம்மா பெரியமனுசியாகி இருக்கா. வயசுக்கு வந்த பொட்டப் புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு வீட்டுக்குள்ள முடக்கி வைக்குற காலம் அது. ஆனா அந்த வருஷம் கன்னிபூஜை பண்றப்ப தம்பி நாராயணன் மேல கணேசன் மாமா சாமியா இறங்கி, என் தங்கச்சிய வீட்டுக்குள்ள வச்சிராதீங்க, அவ படிக்கட்டும்னு சொன்னாராம். புள்ள படிக்கட்டும்னு மாமாவே சொன்னதுக்கப்புறம் மறுவார்த்த யாரும் பேசல. அதுக்குப்பிறகு தான் அம்மா படிப்புக்காக படியிறங்கி போக முடிஞ்சது.

தான் விரும்பினவரையே கட்டிக்கணும்ன்னு அம்மா ஒத்த ஆளா பிடிவாதம் பிடிச்சப்ப கணேசன் மாமா தான் சாமியா வந்து இந்த கல்யாணத்த நடத்தி வைங்கன்னு சொன்னதாவும், அதுவரைக்கும் கொலை வெறியோட இருந்த குடும்பம் மனசு மாறி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சதாவும் அம்மா சொல்லுவா. அம்மாவோட விசயங்களுக்காக ரெண்டு தடவ மட்டுமே கணேசன் மாமா சாமியா வந்து பேசினார்ன்னு கேள்விப்பட்டப்ப இதுல ஏதாவது திட்டமிட்ட சதி இருக்கும்னு அம்மாவை சந்தேகக் கண்ணோடு பாத்துருக்கேன்.

ஆனா விஷயம் அதோட முடியல. நாராயணன் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அப்போ உள்ள வந்தவங்கதான் சங்கரி மாமி. அவங்க காலடி எடுத்து வச்ச வருசத்துல இருந்து கணேசன் மாமா நிரந்தரமா அவங்க உடம்புல இறங்கி வருசா வருஷம் எல்லாருக்கும் வாக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டார். கண்ண உருட்டி, சின்ன புள்ள மாதிரி அழுது, கம்பீரமா நிமிர்ந்து பார்வை பார்த்துன்னு மாமி பண்ற எல்லா சேட்டைகளையும் பாத்து, மாமி என்னமா நடிக்குறாங்கன்னு அறியாத வயசுல விழுந்து விழுந்து சிரிச்சிருக்கேன்.

ஆனா அந்த நேரம் மாமி பண்ற ஒரு காரியம் மனசுக்குள்ள கிலிய உண்டு பண்றது உண்மை. கன்னி பூஜை பண்ற நேரம் சாயங்காலம் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். அங்கங்கே இருக்குற சொந்தம், பந்தம்னு எல்லாரும் ஒண்ணா தாத்தாவோட வீட்ல கூட ஆரம்பிப்போம். கண்ணாமூச்சி, தொட்டு விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கிளியாந்தட்டுன்னு சின்னவங்க கூட பெரியவங்களும் சேர்ந்து வீட்டையே அதகளப்படுத்திட்டு இருப்போம். மாமாக்கள்ல யாராவது ஒருத்தங்க, தென்னை மரம் ஏறி முத்துன தேங்காய் பறிச்சுட்டு வந்து குடுத்தா வீட்டு பொம்பளைங்க அத உரிச்சு, எண்ணெய் காய்ச்சுவாங்க. சுட சுட அடுப்புல கக்கன்னும் எண்ணையுமா பிரிஞ்ச பதத்துல கொதிச்சுட்டு இருக்கும். இன்னொரு பக்கம் பச்சரிசி இடிச்சி, கருப்பட்டி போட்டு பிசைஞ்சு, கொதிக்க கொதிக்க பணியாரம் ரெடி ஆகிட்டு இருக்கும். இன்னும் சில பேர் சுக்கும் இன்னும் சிலதுகள போட்டு குடிக்க பானகாரம் செய்வாங்க, அடுத்தப் பக்கம் எல்லா பழங்களையும் துண்டு துண்டா நறுக்கி, தேன் ஊத்தி, பஞ்சாமிர்தம் ரெடியாகிட்டு இருக்கும்.

அதே நேரத்துல வீட்ல பெரிய மாமா மீதம் உள்ள பழங்கள், பலகாரங்கள், உடுப்பு, இன்னும் பல ஐட்டங்கள அடுக்கி கணேசன் மாமா முன்னாடி படைப்பாங்க. தீபாராதனை காட்டி, சாம்பிராணி புகைச்சதும் மாமி ஆவேசம் வந்த மாதிரி ஓடி வருவாங்க. கொஞ்ச நேரம் அழுவாங்க, யார் என்னன்னு பாக்காம எல்லாரையும் கட்டிபிடிச்சு, கைய புடிச்சு பாத்து சிரிப்பாங்க. உங்கள எல்லாம் பாக்க ஓடி வந்தேன்னு சொல்லுவாங்க. என்னை தூக்கி கொஞ்ச வந்தா ஒதுங்கி போவேன். “எலேய் மக்கா அன்னம், கேட்டியா, இவ என்ன மாதிரிலே”ன்னு என்னை பாத்து சிரிப்பாங்க. எனக்கு எல்லாமே நாடகத்தனமா தான் படும். எல்லாரையும் நலம் விசாரிப்பாங்க. இந்த வருஷம் அறுப்பு இப்படி பண்ணுங்க, கிழக்க கடலை போடுங்க, தெக்க கெழங்கு போடுங்கன்னு எல்லா அட்வைசும் பண்ணுவாங்க. கணேசன் மாமாவுக்கு கக்கன் (தேங்காய் பால்ல இருந்து எண்ணெய் எடுக்கும் போது பிரிஞ்சி வர்ற பகுதி) ரொம்ப பிடிக்குமாம். மாமி, அடுப்பு சட்டியில கை விட்டு சுட சுட எடுத்து தின்னுவாங்க. வெந்துட்டு இருக்குற பணியாரத்த பாதி வேக்காடுல கைய விட்டு எடுத்து தட்டுல வச்சு எங்களுக்கு தருவாங்க.

அடுத்தடுத்து வந்த வருசங்கள் எங்க குடும்பத்த தலைகீழ புரட்டி போட்டுச்சு. மாமாக்கள், சித்திகள்ன்னு எல்லாருக்கும் கல்யாணம் ஆக, சண்டை, பொறாமைன்னு குடும்பத்துக்குள்ள இருந்த ஒற்றுமை சிதறி தான் போச்சு. தாத்தா வீடு ஆள் இல்லாம தனியா இருந்துச்சு. ஆனாலும் வருசாவருசம் எல்லாரும் அங்க கூடுவோம். பெரிய மாமி இந்த காலகட்டங்கள்ல எல்லாரோடும் பகையாகி போனாங்க. குடும்பத்துல யார் கூடவும் பேச மாட்டாங்க.

ஒவ்வொரு வருஷம் கன்னி பூஜையப்பவும் மாமிய தவிர வேற எல்லாரும் அங்க கூடிடுவோம். மாமி இல்லாமலே பூஜை ஆரம்பிக்கும். தீபாராதனை காட்டி, சாம்பிராணி போட்டதும் மாமி அவங்க வீட்ல இருந்தே அழுதுட்டே ஓடி வருவாங்க (ரெண்டு வீட்டுக்கும் தூரம் கிட்டத்தட்ட ரெண்டு கிலோமீட்டர்). வந்தவங்க, வழக்கம் போல எலேய் மக்கான்னு கட்டிபிடிக்க தொடங்கிடுவாங்க. அந்த நேரம் அவங்க மனசு தெளிஞ்ச நீரோடையா இருக்கும். எல்லார் மேலயும் அவங்க காட்டுற அக்கறை, நெகிழ்ச்சி, அறிவுரைன்னு சங்கரியா இதுன்னு எல்லாருக்கும் ஆச்சர்யமா இருக்கும். “சங்கரி (அவங்க தான்) மனசு பொறாமை பிடிச்சது. இந்த குடும்பத்துக்குள்ள அவள சேக்காம இருங்கடே, அதான் உங்களுக்கு நல்லது. அவ புத்தினால தான் அவ புள்ள ஓடி போய் சீரளியுரா”ன்னு அவங்களே மாமாவா வந்து சொல்லுவாங்க.

அப்படி தான் அந்த வருஷம், கொதிக்க கொதிக்க பலகாரத்த எடுத்து சின்ன மாமா கைல குடுத்து, நீயும் வந்துருவலே என்கூடன்னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. மாமா கைல எண்ணெய் பட்டு பொத்து போச்சு. ஆனா மாமி எழுந்து வந்தப்ப ஒரு காயம் இல்ல. அந்த வருசமே சின்ன மாமா செத்துப் போனாங்கன்னு நான் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன்.

இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு அம்மாவ தனியா கூட்டிட்டு போய் அழு அழுன்னு அழுதாங்க. அம்மா வந்தப்ப முகம் இறுகி இருந்துச்சு. அப்படி அம்மாவ நான் பாத்ததே இல்ல. அதுக்கப்புறம் அம்மா ரொம்ப உறுதியா இருந்தா. அவ கண்ணுல கண்ணீர நான் பாத்ததேயில்ல. எப்பவாவது கணேசன் மாமா பத்தி பேசுவா. மாமாவுக்கு சட்டை வேணுமாம்ன்னு சொல்லுவா. எடுத்து குடுப்பா. முக்கியமா என்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிட்டா. ரெண்டே வருசத்துல தலைல இடி விழுந்தாப்புல எங்கள விட்டுட்டு அவ அண்ணன் கூடவே போய்டா.

கடந்த ரெண்டு வருசமா அடுத்த வாரிசுங்க, அதான் நாங்க தலையெடுக்க ஆரம்பிச்சுட்டோம். யார் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நாங்க ஒற்றுமையா இருக்கோம். ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் எல்லாரும் கூடி அன்பை பகிர்ந்துக்குறோம். சங்கரி மாமி மட்டும் இன்னமும் வீட்டை விட்டு வராமலே இருக்காங்க...

இந்த வருசமும் என் குடும்பத்துல கன்னிபூசை உண்டு. வராத மாமியும் வருவாங்க... எல்லாம் கணேசன் மாமா செயல்...

Monday, 6 January 2014

தேவதை கதைகள்... (1)


அதிகமா, வழவழன்னு பேசாம, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல போறேன்... வாங்க, படிக்கலாம்.

(அதுக்கு முன்னாடி ஒரு முன்குறிப்பு: இந்த கதைய ஏற்கனவே பேஸ் புக்ல படிச்சுட்டேன்னு சொல்றவங்க, இருந்து முழுசா படிச்சுட்டு போங்கன்னு கேட்டுக்குறேன், முக்கியமா நம்ம கோவை ஆவி அண்ணாகிட்ட)

அது ஒரு அழகான ரோஜா தோட்டம். ரோஜானாலே அழகு தானேங்க, அப்புறம், தனியா வேற அத டிஸ்க்ரைப் பண்ணனுமா?

ஆனாலும், ஒரு பக்கம், வெள்ளை ரோஜா, அதுக்கு அடுத்து மஞ்சள் ரோஜா, அப்புறம் சிகப்பு ரோஜா, ஹை..... பாருங்களேன், அந்த பிங்க் கலர் ரோசஸ் எவ்வளவு அழகுன்னுன்னு. வாங்க, பக்கத்துல போவோம்.

ஷ்..... அதுல ஒரு பட்டர்ப்ளை தேன் குடிக்குது பாருங்க. நாம டிஸ்டர்ப் பண்ண கூடாது, இங்க இருந்தே கொஞ்சம் க்ளோஸ்ல ஜூம் பண்ணுவோம். அட, என்ன ஆச்சர்யம், இது ஒரு fairy-ங்க... அதாங்க, நம்ம தேவதை கதைகள்ல வர்ற குட்டி தேவதை.

அதோட சிறகுகள பாத்தீங்களா, வானவில் வண்ணத்துல பட்டு மாதிரி கண்ணாடி மாதிரி கூட இருக்கு. அத சுத்தி ஒரு மத்தாப்பு பொறி பறந்துட்டு இருக்கு பாருங்க. கைல ஒரு குட்டி மந்திர கோல், அத வச்சி தான் இந்த உலகத்தோட சந்தோஷ கதவுகள திறந்து விடுதுன்னு நினைக்குறேன்.

ஒரு கைய இடுப்புல வச்சுட்டு, இன்னொரு கைல மந்திரக்கோல் வச்சுட்டு அந்த ரெண்டு சிறகையும் படபடன்னு அடிச்சுட்டே ஒரு பூவுல இருந்து இன்னொரு பூவுக்கு பறந்து போகுது.

அது போட்டுருக்குற ரோஸ் கலர் ஏஞ்சல் டிரஸ் பாருங்களேன், அதுல வைரம் பதிச்சா மாதிரி எப்படி மின்னுது பாருங்க... ஹைய்யோ, பாத்துட்டே இருக்கலாம் போல இருக்குல....

சரி, சரி, அது பறக்குற அழக பாத்துட்டே இருக்காதீங்க, இதோ இங்க நான் உங்க பட்டர்ப்ளை உங்களுக்கு குட் மார்னிங் சொல்றேன். நீங்களும் குட் மார்னிங் சொல்லுங்க...

குட் மார்னிங் சொல்லிட்டீங்கல, இனி கதைய கண்டிநியூ பண்ணலாம். வாங்க, இன்னும் கொஞ்சம் பக்கத்துல போய் பாக்கலாம்.

இப்போ நம்ம குட்டி தேவதை ஒரு ஒரு வெள்ளை ரோஜா பூவுல போய் ரெஸ்ட் எடுக்குது. ஹைய்யோ, அதென்ன, குட்டி தேவதை இறுமுது?

பாவம், நம்ம குட்டி தேவதைக்கு உடம்பு சரியில்ல. எதனால உடம்பு சரியில்ல, நமக்கெல்லாம் சந்தோசத்த அள்ளிக் குடுக்குற இந்த தேவதை ஏன் திடீர்னு சோர்ந்து போச்சு?

இப்போ எனக்கும் இருமல் வருது. லொக்.... லொக்.... ம்ம்மக்க்க்கும்..... கொஞ்சம் திரும்பி பாக்கலாம்.


ஹே.... ஹே... யாரு அது சிகரட் பிடிக்குறது?

ஏங்க, நீங்க பிடிக்குற சிகரட், உங்களுக்கு கெடுதல்ன்னு தெரிஞ்சே பிடிக்குறீங்கன்னு வச்சுப்போம், அது ஏங்க மத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்றீங்க... பாருங்க, உங்களால இந்த உலகத்து சந்தோசம் கொஞ்ச கொஞ்சமா அடங்கி போறத...

நீங்க பிடிக்குற சிகரட் உங்களுக்கு மட்டும் தீங்கு இல்லீங்க, உங்கள சுத்தி இருக்குற எல்லாருக்கும் தான் தீங்கு செய்யுது.

இந்த உலகத்தோட சந்தோசம் மட்டுமில்லீங்க, உங்க சொந்த குடும்பத்தோட சந்தோசமும் தான் அழிஞ்சி போகுது. எப்படின்னு புரியலயா?

பின்ன, சிகரட் பிடிச்சி உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, உங்க குடும்பத்துல உள்ளவங்க ஈஈ-ன்னு சிரிச்சுட்டா இருப்பாங்க.

பாருங்களேன், உங்க வீட்டு குட்டி தேவதை உங்கள நோக்கி ஓடி வருது....

இப்போ என்ன பண்ண போறீங்க, நீங்களே முடிவு எடுத்துக்கோங்க...

நான் சுத்தமான காத்து அடிக்குற இடத்துக்கு குட்டி தேவதையோட போகணும்ன்னு நினைக்குறேன். அதுக்கு நான் மட்டும் நினச்சா பத்தாது, நீங்களும் நினைக்கணும்...


வழி விடுறீங்களா?

.

Monday, 18 November 2013

நல்லத்தங்காள் - ஒரு அலசல்



கவிதை எழுதுரதுங்குறது ஒரு மாதிரி போதை. சில பேர் அதுல ரொம்ப கைதேர்ந்தவங்களா இருப்பாங்க. அவங்க நினச்சா உடனே அடுத்த நிமிஷம் வார்த்தைகள் அவங்களுக்கு வசப்படும். ஆனா எனக்கு அப்படி இல்ல, அதுவா அமையணும், அப்படி அமைஞ்சுட்டா வார்த்தைகள் என்னோட வசம் வரதுல தயக்கமே இருக்காது. ஆனாலும் ரொம்ப நாள் எதுவுமே எழுதாம இருந்தேன். எதோ ஒரு தேக்கம். எப்பவுமே நான் சொல்லுவேன், இதே மாதிரி ஒரு தடவ நான் எழுத முடியாம போனப்போ கார்த்திக்கோட கவிதை தான் என்னை மறுபடியும் எழுத தூண்டிச்சுன்னு. அது தான் இப்பவும் நடந்தது. மறுபடியும் கார்த்திக் எழுதின ஒரு கவிதை என்னை மறுபடியும் இந்த பாலையாய் ஒரு வெற்றுக் கேவலை எழுத தூண்டுச்சு. எல்லோரும் ஒரு தடவ படிச்சு பாத்து அத பத்தின உங்களோட கருத்துக்கள தயங்காம சொல்லுங்க. எந்த கவிதை இத எழுத தூண்டிச்சுன்னும் நீங்க தெரிஞ்சுக்கணும்ல, அப்போ இதையும் படிங்க, படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

சரி, இப்போ விஷயம் இது இல்ல, நான் சொல்ல வந்தது வேறொரு விஷயம் பற்றி. இந்த கவிதை பத்தி பிரகாஷ் அண்ணா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ அவங்க நல்லத்தங்காள் கதை பத்தி சொன்னாங்க. அது என்ன விசயம்னு இன்னொரு நாள் பாக்கலாம். இப்போ, நான் எழுதப் போற இந்த பதிவு எனக்கு நல்லதங்காள் கதைல வந்த பல சந்தேகங்களை பத்தினது.


என் அம்மா சின்னப் பொண்ணா இருக்குறப்போ அவங்க ஊர்ல பாவை கூத்து எல்லாம் போடுவாங்களாம். தாத்தா வீட்ல தான் அந்த டீம் வந்து தாங்குவாங்களாம். அதனால அம்மா எனக்கு நல்லத்தங்காள் கதை எல்லாம் நான் சின்ன வயசா இருந்தப்போ சொல்லியிருக்காங்க. அப்போ எனக்கு அந்த கதைல பெரிய அளவு சுவாரசியம் இருந்ததில்லன்னு தான் சொல்லணும். அம்மா அத பத்தி சொன்ன உடனே “போம்மா, யாராவது அவங்க பெத்த புள்ளைங்கள கொல்லுவாங்களா? இனி இந்த கதைய சொல்லாத”ன்னு ஓடிடுவேன்.

அப்புறமா அம்மாவும் அந்த கதையை சொல்றதில்ல, நானும் நாலு நாள் முன்னாடி பிரகாஷ் அண்ணா அதை பத்தி பேசுற வரைக்கும் அதை பத்தி நினைச்சுப் பாத்ததும் இல்ல.


இப்போ, நல்லத்தங்காள் என் மனசுக்குள்ள வந்து மொத்தமா உக்காந்தாச்சு. ஒரு பொண்ணு, அதுவும் ஏழு குழந்தைகள பெத்த ஒரு பொண்ணு, எவ்வளவு மனக்காயம் அடஞ்சுருந்தா அவளோட குழந்தைகள அவளே கொன்னுருப்பா? அவளோட மனஉறுதி அப்போ எப்படி பட்டதா இருந்துருக்கும்?

நல்லத்தங்காள் கதைய பத்தி அம்மாகிட்ட இப்போ கேக்க முடியாது. கூகிள்ல தேடி பார்க்கலாம்னா எனக்கு ஏனோ சரியான ஒரு விடை கிடைச்ச மாதிரியே இல்ல. அதனால நான் என்னோட பேஸ் புக்-ல இத பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன். பிரகாஷ் அண்ணா ஒரு பி.டி.எப் பைலும் கீற்று டாட் காம்ல வந்த நல்லத்தங்காள் கதையோட லிங்க்கும் தந்தாங்க. அப்புறம் ரவி சங்கர் அண்ணா, லியாகத் அலி சாச்சா, மீரா அம்மா, பிரேமா வெங்கட் இவங்க எல்லாம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச லிங்க்ஸ் குடுத்தாங்க. அத எல்லாம் வச்சு படிச்சு பாத்தப்போ எனக்கு அதுல கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு.

அது என்னென்ன சந்தேகம்னா...

1. இந்த கதை நடைபெற்றதா சொல்ற இடம் எது? 

2. நல்லத்தங்காள் பிறந்த ஊருக்கும் திருமணம் முடிந்து போன ஊருக்கும் உள்ள தொலைவு எவ்வளவு? 

3. நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகளாம். அப்படினா சம்பவம் நடக்குறப்போ அவங்க வயசு என்ன இருக்கும்? 

4. ரொம்ப பெரிய பஞ்சம் வந்துச்சுன்னு சொல்றாங்க, அப்படினா பக்கத்து பக்கத்துக்கு ஊர் காரங்களுக்கு தெரியாமலா போயிருக்கும்? 

5. நல்லத்தங்காள் அரச குடும்பத்த சேர்ந்தவளா?


பெரும்பான்மையான தகவல் வச்சு பாக்குறப்போ நல்லத்தங்காள் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்துல உள்ள அர்ச்சுனாபுரம்ன்னு தெரியுது. ஆனாலும் ரெண்டு இடங்கள்ல அவளோட சொந்த ஊர் மதுரைன்னு இருக்கு.

அவளை கல்யாணம் பண்ணிகுடுத்த ஊர் சிவகங்கை மாவட்டத்துல உள்ள மானாமதுரைன்னு சில பேர் சொல்றாங்க. சிலபேர் அவள காசியை ஆண்ட மன்னன் காசிராஜனுக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுத்ததா சொல்றாங்க. காசியில இருந்து ஒரு பெண், தன்னோட ஏழு குழந்தைகளையும் கூட்டிகிட்டு தன்னந்தனியா மதுரை வரை வர முடியுமா? அதுவும் சாப்பிட கூட எதுவுமே கிடைக்காத நிலைலன்னு நான் ரொம்பவே யோசிச்சுட்டேன். அப்புறமா, அவள் அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது, அவளோட கணவர் பெயர் காசிராஜன்ங்குரதால அப்படி வழி வழியா வந்த கதைல திரிஞ்சு போயிருக்கலாம்னு நினைக்குறேன்.

அடுத்து அவ குழந்தைகளை பற்றினது. அவள ஏழு வயசுல கல்யாணம் பண்ணி கொடுத்ததாகவும், அவளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்ததாகவும் அதன் பிறகு பனிரெண்டு வருஷம் கடுமையான பஞ்சம் நிலவியதாகவும் ஒரு இடத்துல சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தா அவளோட முதல் குழந்தைக்கு குறைந்தபட்சம் பதினாறு வயசு ஆகியிருக்காதா? அவ்வளவு பெரிய பையன் எப்படி பாலகனாகவே இருந்துருக்க முடியும்?

இன்னொரு இடத்துல நல்லத்தங்காள் காசி மன்னரின் மனைவினும், அவருக்கு ஏழு குழந்தைகள்ன்னும், அதன் பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சம் வந்துச்சுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி பாத்தாலும் முதல் பையனுக்கு பதினாலு வயசு இருக்காதா? அந்த காலத்துல அது கல்யாணம் பண்ற வயசில்லையா? அந்த பையனுக்கு ஒரு ஆணுக்குரிய எல்லாம் பொறுப்புகளுமே இருந்துருக்கணுமே, அதுவும் ஒரு வருங்கால அரசன் எப்படி அம்மா பின்னாடி போனான்?

அதே கதைல, நல்லத்தங்காளோட அண்ணி கதாபாத்திரம் சொல்றதா ஒரு காட்சி வருது. அதாவது திருமணம் முடிந்த பத்து வருடத்துக்குள் ஏழு பிள்ளை பெற்று விட்டாளா? என்பது தான். ஏற்கனவே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழு வருடம் என்பது இங்கு திரிந்து விட்டிருந்தாலும், பஞ்ச காலத்தில் அவள் குழந்தைகளை பெற்றாள் என்றால் குழந்தைகளின் வயது சரியாய் இருந்திருக்கும்.

தங்கச்சி மேல பாசமா இருக்குற ஒரு அண்ணன், அதுவும் ஒரு அரசன் அவளை திருமணம் செய்து கொடுத்ததோட சரி, அப்புறம் பாக்கவேயில்லைன்னு சொல்றது நம்புற மாதிரி இல்ல. அப்படியே அரச குலங்களுக்குள்ள தகவல் பரிமாற்றங்களாவது இருந்திருக்காதா? பஞ்சம் வந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஒரு அரச வம்சமே அழிஞ்சுதுன்னா அது ஒரு வரலாற்று நிகழ்வு இல்லையா? அதுபத்தின கல்வெட்டுகளோ, ஒலைசுவடிகளோ எங்கயாவது இருக்குதா?

வாய்வழியா சொல்லப்படுற நாட்டார் கதைகள்ல நல்லத்தம்பியும் நல்லத்தங்காளும் அன்பான ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவங்களா தான் சொல்லப்பட்டுருக்காங்க. அதுவே ஏன் உண்மையா இருக்க கூடாது. அவங்க மேல இருக்குற அதீத அன்புல, கதைசொல்லிகள் காலப்போக்கில் அவங்கள அரசகுடும்பத்த சேர்ந்தவங்களா ஏன் சித்தரிச்சிருக்க கூடாது?

இதெல்லாம் வழி வழியா வந்த கதைங்குறதால நிறைய விஷயங்கள் திரிஞ்சு போய் இருக்கு. எல்லோரும் அவங்கவங்களுக்கு தகுந்த படி கற்பனைகள கலந்து இந்த கதைய அழியாம இவ்வளவு நாள் பாதுகாத்து வந்துருக்காங்க. உண்மையான கதை மறக்கடிக்கப் பட்டிருந்தாலும் நல்லத்தம்பி, நல்லத்தங்கள்ங்குற பெயர் மாறல, அவளுக்கு ஏழு குழந்தைகள்ங்குறது மாறல, பஞ்சம் பட்னியால அவளோட குழந்தைகளை அவளே கொன்னுட்டாங்குறதும் மாறல. அதெல்லாம் விட, வீட்டுக்கு பசின்னு வந்தவங்கள கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம வெளில துரத்தி விட்ட ஒரு பெண்ணால ஒரு அழகான குடும்பமும் அழிஞ்சு, அந்த பெண்ணோட கணவனும் அழிஞ்சான்ங்குறதும் மாறல. தன்னோட தங்கச்சியும் அவ குழந்தைகளும் தன் மனைவியால செத்து போனதால அந்த இடத்துலயே உயிரை விட்ட அண்ணனோட பாசமும் மாறல.

இனி நம்மால உண்மை எதுன்னு கண்டுபிடிக்க முடியலைனாலும், இந்த கதைக்கரு கண்டிப்பா எல்லோருக்கும் உணர்த்தப்படணும். வீட்டுக்கு ஒரே ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு சொந்த பந்தம்னா என்னன்னே தெரியாத நம்மோட வருங்கால சந்ததிக்கு நம்மோட பாரம்பரிய நடைமுறைகளையும், அது தவறினா ஏற்படுற விளைவுகளையும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

இனி கூட்டுக்குடும்பங்கள் அமையுமான்னு தெரியாது, ஆனா மனிதநேயத்த, கஷ்டபடுற உயிர்கள கண்டா இல்லன்னு சொல்லாத ஒரு பண்பை நம்மோட சந்ததிக்கு போதிக்க வேண்டியது நம்மோட பொறுப்பு இல்லையா?

அன்பா இருப்போம்

எந்த உயிரையும் இகழாது இருப்போம்

யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லைங்குற கோட்பாடை கடைபிடிப்போம்

கஷ்டப்படுற உயிர்களை தேவை அறிந்து அரவணைப்போம்.




நான் இன்னொரு பதிவோட உங்கள சந்திக்குறேன்.

Wednesday, 13 November 2013

பவர் ஸ்டாரோட பிறந்தநாளு..... (பார்ட் – ஒன்)


இந்த காலத்துல கைல மொபைல் இல்லாத யங்ஸ்டேர்ஸ் பாக்குறது அபூர்வம்ங்க. அதுவும் பிரெண்ட்ஸ்க்குள்ள மாத்தி மாத்தி எஸ்.எம்.எஸ் அனுப்புறத அடிச்சுக்கே யாராலயும் முடியாது. இப்போ இந்த எஸ்.எம்.எஸ் ட்ரன்ட் வாட்ஸ்அப், வைபர்னு டெவலப் ஆகிடுச்சு. அப்படி தான் என் வாட்ஸ்அப்க்கு என் மாமா பொண்ணு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தா. அத பாத்த உடனே அத ஒரு கதையா எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ, நீங்க இனி படிக்கப் போற கதையோட காமடி பகுதிக்கு காரணமான புண்ணியவான் யாரோ?

பிட் அடிச்சாலும், பிட் எழுதி வச்சிருந்த பேப்பரும், அதுல எழுதின பென்னும், பிட்ட பாத்த கண்ணும், எழுதின கையும் எனக்கே சொந்தமானதுன்னு நாம உரிமை கொண்டாடுற மாதிரி இதில் வரும் கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் எனக்கே சொந்தம்... (அவ்வ்வ்வ் எப்படி எல்லாம் பில்ட் அப் விட வேண்டியிருக்கு).

Thursday, 17 October 2013

ஒரு நரியும் காக்காவும், முயலும், ஆமையும் கூடவே பவ்-வவ்வும் பாட்டியும்....


ஒரு ஊருல ஒரு நரி இருந்துச்சாம். அந்த நரி அப்படியே ரோட்டோரமா நடந்து வரப்ப நிலாவுல வடை சுட்டுட்டு இருந்த பாட்டி கை தவறி ரெண்டு வடை கீழ விழுந்துடுச்சாம். இத பாத்துட்டு இருந்த நரி, ரெண்டு வடையையும் தூக்கிட்டு ஜாலியா ரோட்ல நடந்து வந்துச்சாம்.

Tuesday, 11 September 2012

குறிஞ்சி மலர்கள்... !!!

வெளியே சருகு சலசலக்கும் ஓசை கேட்டது. ஜன்னல் திரையை நீக்கி எட்டி பார்த்தேன். சுப்பன் உலர்ந்த சருகுகளை கூட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு ஐம்பத்திரண்டு வயதிருக்குமா? இப்பவே முதுமை இவனை இப்படி அரவணைத்து கொண்டதே, கையில் இருந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பார்த்தவாறே மெதுவாக கண் மூடினேன்.

நான் சிவகலா. இந்த அருமைநாயகன்பட்டிக்கு இரண்டு வருடத்துக்கு முன் கிராம அதிகாரியாக மாற்றலாகி வந்தேன். பாரதிராஜாவின் செழுமையான கிராமமாக இல்லாவிட்டாலும் அந்த குளக்கரையும், வாழை தோப்பும் மனதுக்கு இதமாக இருக்கும்.ஆனால் வாழை மரங்கள் அடிக்கடி கண்ணீர் விடும். ஆமாங்க, இங்கு ஜாதி கலவரம் வெகுசாதாரணம். எடுத்தவுடன் வாழைகளைத் தான் வெட்டுவார்கள். இந்த இரண்டு வருடங்களில் பலகலவரங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த அந்த முதல் கலவரம் ..... அந்த நான்கு குருத்துகள்.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.

இங்கு வந்த புதிதில் நேரம் போகவில்லை எனில் குளக்கரையில் தான் அமர்ந்து படம் வரைவது வழக்கம். அன்றும் அப்படிதான் படம் வரைந்து கொண்டிருந்தேன். ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

'அட. செல்லியும் வர்றா போலிருக்குதே' தலை தூக்கி பார்த்தேன்.

செல்லி சுப்பனின் மகள். இந்த கிராமத்து தேவதை. எண்ணை வழியும் தலையோடு இருந்தாலும் செல்லி செல்லிதான்.

"அக்கா அக்கா, இவங்க என்னோட பிரண்ட்ஸ். இவ ஸ்டெல்லா, இவன் டேவிட், அப்புறமா இவன் அப்துல்லா".

"நீங்க இதே கிராமமா" எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் இவர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை".

"ஆமாக்கா, டேனியல் கேள்விபட்டிருப்பீங்களே, நாங்க ரெண்டு பேரும் அவரோட பசங்கதான். கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு இருக்கோம். எங்க கிளாஸ்மேட் தான் அப்துல்லா, இந்த வருஷம் ஊருக்கு நானும் வர்றேன்னு சொன்னான், கூட்டிட்டு வந்துட்டோம்..."

அப்துல்லாவை பார்த்தேன். அவன் ஆர்வத்தோடு நான் வரைந்திருந்த பாரதத்தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"அப்துல் படிப்பில் எப்படி" எதையாவது கேட்க வேண்டுமே என கேட்டேன்.

"தப்பு பண்றீங்கக்கா" திடுக்கிட்டு அவனை நோக்கினேன்

"பாரதத்தாயோட நெத்தியில பொட்டு இல்ல பாருங்க"

"நான் இன்னும் வரைந்து முடிக்கவில்லை அப்துல்"

"முடிக்கா விட்டாலும் பரவில்லை, ஆனால் முதல்ல அவ நெத்தியில பொட்டு வைங்க. பொட்டு இல்லாம அவ நல்லா இல்லை"

"சிகப்பு கலர் இப்போ என்கிட்ட இல்லப்பா, பாரு, சுத்தமா துடைச்சு வச்சிருக்கேன்" டப்பியை எடுத்து காட்டினேன்.

அவன் விரல்கள் வாஞ்சையோடு பாரதத்தாயை வருடிக்கொடுத்தன.

"நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாதுக்கா, பொண்ணுங்களுக்கு பொட்டுங்குறது சின்ன அகல் விளக்குல எரியுற தீபம் மாதிரி. அது இருந்தாதான் அழகு".

"இவன் எப்பவும் இப்படிதான், நம்ம நாட்டையோ இல்லை நம்ம பாரம்பரியத்தையோ யாராவது குத்தம் சொன்னா இவனுக்கு பொறுக்காது. உடனே லெக்டர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்" ஸ்டெல்லா முதன் முறையாக வாய் திறந்தாள்.

எனக்கு அவர்களில் அப்துல்லா தனியாக தெரிந்தான். சிறிது நேரம் அமைதியாகஇருந்தேன்.

"ஆமா, செல்லி எப்படி உங்களுக்கு பிரெண்டானா?"

"நாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். அப்புறமா நாங்க கோயம்புத்தூர் போயிட்டோம் . செல்லிய அவங்கப்பா மேற்கொண்டு படிக்கச் வைக்கல. நாங்க வெளியூர்ல படிச்சிகிட்டு இருந்தாலும் செல்லிக்கு அடிக்கடி லெட்டர்போடுவோம், அப்துல்லாவும் செல்லிக்கு பேனா நண்பன் ஆகிட்டான்".

"நேரம் ஆச்சு , நாங்க கிளம்புரோம்கா " செல்லி ஏனோ அவசரபட்டாள்.

"ஏய் அப்துல், கிளம்புப்பா" உரிமையோடு கை பிடித்து இழுத்தாள்.

"அக்கா, பாரதமாதாவுக்கு உடனே பொட்டு வச்சுடுக்கா " அவன் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்ப வில்லை போலும். கிளம்ப மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தான்.

அந்த இடத்தை விட்டு எட்டடி கூட வைத்திருக்கமாட்டர்கள். அதற்குள் நாற்பது, ஐய்பது பேர் திபுதிபுவென ஓடி வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள், வேல்கம்பு.

நான் முதன்முறையாக மிரண்டு நண்பர்களை நோக்கினேன். அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"பிடிங்கடா, விட்டுடாதீங்க" ஒரு முரட்டு குரல். யாரென திரும்பி பார்த்தேன். பெரிய மீசையோடும் முரட்டு உருவத்தோடும் டேனியல் நின்று கொண்டிருந்தார்.

அடியாட்கள் செல்லியும், அப்துல்லாவையும் பிடித்து கொண்டார்கள். டேனியல் அப்துல்லாவிடம் திரும்பினார்.

"இங்க பாருப்பா, இந்த ஊருல வேத்து ஜாதிகாரனோ, இல்ல வேத்து மதத்துகாரனோ வரணும்னா என்ன மாதிரி பெரிய மனுசங்கிட்ட அனுமதி வாங்கணும். எம்புள்ளைங்க கூட்டிட்டு வந்ததால உன்ன ஒண்ணும் செய்யல, மரியாதையா உடனே பெட்டிய தூக்கிட்டு ஓடி போய்டு" டேனியலின் குரலில் கடுமை இருந்தது.

"நிறுத்துங்கப்பா, இவன் எங்கள்ள நம்பி வந்திருக்கான், இவன நாங்க போக விடமாட்டோம்" ஸ்டெல்லாவும் கத்தினாள்.

"சும்மா வாய மூடு கழுத. டாய், இந்த செல்லிக்கு மொட்ட போட்டு ஊர் நடுவுல கட்டுங்கடா"

"அப்பா, அவ ரொம்ப நல்லா பொண்ணு, அவ என்ன தப்பு செய்தான்னு அவளுக்கு மொட்ட போடசொல்றீங்க?"

"என்ன பண்ணுனாளா? ஏண்டா, கீழ்சாதிகார நாயி அவ, அவளுக்கு பெரிய வீட்டு பசங்க பழக்கம் கேக்குதோ? இன்னும் ஏண்டா பாத்துகிட்டு இருக்கீங்க, போய் ஆக வேண்டியதை பாருங்க" இப்போது டேனியல் வெறியின் உச்சியிலேயே இருந்தார். செல்லியை பிடித்திருந்தவர்களின் பிடி இறுகியது. அவள் இப்போது அவர்கள் பிடிக்குள் கோழிகுஞ்சாக வெடவெடத்தாள்.

"அவள விடுங்க" கதறும் நண்பர்களோடு நானும் கத்தினேன்.

"ஐயா, எம்புள்ளைய விட்டுடுங்கயா வாழ வேண்டிய பச்சை மண்ணுயா" சுப்பன் டேனியலின் காலடியில் கதறியழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

"நம்ம சாதி புள்ளைய இவனுக மொட்ட அடிச்சுருவானுகளா, அதையும் பாத்ருவோம்லே" செல்லிக்கு ஆதரவாக சில இளவட்டங்கள் குதித்தனர்.

அப்புறம் என்ன நடந்தது என்று என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லை, சுற்றும்முற்றும் பார்த்தேன். வாழை மரங்கள் குளத்து நீரில் பிணமாய் மிதந்தன. சிலர்வலியில் துடித்து கொண்டிருந்தனர். சிலர் கத்தகூட இயலாமல் மயங்கி கிடந்தனர். இவங்க நாலு பேரும் எங்கே? என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவர்கள் மேல்நிலைத்தது.

நால்வரும் கைகளை இணைத்திருந்தனர் . ஐயோ, இதென்ன! அவர்கள் பிஞ்சுக்கரங்களிலிருந்து இரத்தம் வழிகிறதே!

"நிறுத்துங்க" நான் வாயை திறப்பதற்குள் அவர்களே கத்தினார்கள். அவர்களின் பலமான பலமுறை கத்தல்களுக்கு தாமதமாக பலன் கிடைத்தது. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டுஅவர்களை நோக்கினார்கள்.

"ஜாதி, மதம்னு அலையுறீங்களே, யாருக்கு வேணும் உங்களோட இந்த சாக்கடை. இதோ, ஓடிகொண்டிருக்கிற ரத்தத்துல எது மேல்சாதி ரெத்தம், எது கீழ் சாதி ரெத்தம்னு உங்களால சொல்ல முடியுமா? ம் சொல்லுங்கடா!..."

ஸ்டெல்லாவின் முழக்கத்தோடு அவர்கள் கரங்கள் உயர்ந்தன. பட்டன ஒரு சொட்டுத்தெறித்து பாரத தாயின் நெத்தியில் விழுந்தது. தெறித்த ரெத்தம் வழியாமல் இருக்க என் கைவிரல்களால் தடுத்துக் கொண்டேன். இந்த அப்துல்லாவுக்கு என்ன ஒரு பார்வை. அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நீண்ட நேரம் கழித்து தான் தாயை பார்க்கும் குட்டியின் பரவசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

கலவரக்கூட்டம் இப்போது நண்பர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் என்ன நினைத்ததோ கலைந்து சென்றது. இந்த இளம் வீரர்களை எதிர்க்க அவர்களுக்கு துணிவில்லையோ என்னவோ?அதன் பிறகு எப்படி வீட்டுக்கு வந்தேன் என தெரியவில்லை. என் அருகில் பாரதமாதா நெற்றியில் தன் மைந்தர்கள் வைத்த திலகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

செல்லி கையில் கட்டோடு மெதுவாக உள்ளே வந்தாள். "வா செல்லி, உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே காணோம்?" என் கண்கள் அங்கும்இங்கும் அலைந்து அவர்களை தேடியது.

"அவங்க போய்டாங்கக்கா. இனி எப்போதான் அவங்கள நேர்ல பாக்க போறேனோ" சொல்லும் செல்லியை ஆராய்ந்தேன். அவள் முகத்தில் துளி வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை. 

"ஏன் செல்லி, உனக்கு வருத்தமே இல்லையா?" என்னால் கேக்காமல் இருக்க முடியவில்லை.

"வருத்தம்தான்க்கா. ஆனா என்ன செய்றது. எங்களால ஊரு ரெண்டுபட்டு நின்னா நல்லாவா இருக்கும். என்ன! எப்போ கலவரம் வந்தாலும் ரெண்டு மூணு உசிரு போகும். ஆனா இந்த தடவ யாரும் போய் சேரல. அந்த வகைல கொஞ்சம் சந்தோசம்".

இவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்கின்றனர். அவளிடமே கேட்டேன்.

"அக்கா, இந்த சமுதாயம் சீக்கிரமா மாறணும்னு நாம நினைக்க கூடாது. அதுக்குகாலமாகும். எங்க தலைமுறைல இல்லனாலும் எங்க புள்ளைங்க காலத்திலாவது மாறும்.அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்".

"இனிமே நீங்க நாலுபேரும் எப்போதான் சந்திப்பீங்க"

"வழக்கம் போல லெட்டர்ல தான் "

பேசிய செல்லிய நான் ஆச்சர்யமாக பார்த்தேன். இவர்கள் என்ன நட்புக்கு ஒரு உதரணமா? பனீரெண்டு வருசத்துக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை விட இவர்களின் நட்பு சிறந்த மலரோ?

அதற்கு பிறகு செல்லியை நான் எவ்வளவோ முறை சந்தித்தேன். நண்பர்களிடம் வருகிற கடிதங்களை காட்டுவாள். சுகமான நினைவுகளை அசைப்போட்ட நான் மெதுவே கண் விழித்துப் பார்த்தேன். சுப்பன் இப்போது சருகுகளை சாக்கு பையில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் ஏழைகளுக்கு சருகுதானே அக்னி பகவானை தாரை வார்க்கும் அட்சயபாத்திரம்.

"சுப்பா! செல்லி வீட்ல இருந்தா கொஞ்சம் வர சொல்றியா?"

"சரி தாயி! உடனே வர சொல்லுதேன்" சுப்பன் போய் விட்டான்.

இப்பவே கிளம்பினா தான் நேரத்தோட திருநெல்வேலி போய் சேர முடியும். துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தேன். நான் வரைந்த ஓவியங்களை எடுக்கையில் பாரதமாதா. அவள் கண்களில் எனக்கு அப்துலா தெரிந்தான். அவளை மார்போடு அணைத்தவாறு நாற்காலியில் சரிந்தேன். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் கலவைகள் என்னை அரித்தன. கண்கலங்கியவாறு நிமிர்ந்தேன். வாசல்படியில் செல்லி நின்றிருந்தாள்.

"வா செல்லி"

"ஊருக்கு புறப்பட்டுடீங்களாக்கா? எங்களயெல்லாம் மறந்துற மாட்டீங்களே"

"மறக்கற முகமா உங்களோடது? என் கண்கள் பனித்தன.

"செல்லி, உனக்கு உன் நண்பர்களை மீண்டும் பார்ப்போம்குற நம்பிக்கை இருக்கா?"

"நிச்சயமா இருக்குக்கா"

"அப்படின்னா இந்த தாயை அப்துல்கிட்ட குடுத்துரு" செல்லியிடம் கையளிக்கும் போது மனதுக்குள் தைரியம் பிறந்தது.

நிச்சயம் இந்த கிராமம் ஒருநாள் அமைதி பூங்காவாக, ஜாதி, மதம்ங்குற சச்சரவு இல்லாமல் மாறத்தான் போகுது. அதற்கு முதல் புள்ளியாய் இந்த சின்னஞ்சிறுசுகள் கிளம்பி விட்டனரே. வண்டிக்கு நேரமாகவே வேகவேகமாக புறப்பட ஆயத்தமானேன். என் மனத்திரையில் நான்கு நண்பர்களும் குறுஞ்சி மலர்களாய் சிரித்தனர்.