Tuesday 12 April 2016

செல்லாக்காசு“நீயெல்லாம் ஏண்டி சனியனே பொறந்து தொலஞ்ச? இப்படி வந்து வந்து வயித்தக் கழுவுறதுக்கு பேசாம செத்துத் தொலையேன். அப்படி என்னடி சொகம் வேண்டிக் கிடக்கு” இறைந்துக்கொணடே சென்ற நர்ஸ் பின்னே மெதுவே எட்டிப் பார்த்தேன்.

மிகவும் இளவயசு. கிட்டத்தட்ட பதினைந்து வயதிருக்கலாம். பூஞ்சையாய் தேகம். வாரப்படாத தலை. வயிற்றைப் பிடித்தப்படி மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு அவளைப் பார்த்து இரக்கம் எதுவும் தோன்றவில்லை, “இந்த வயசுல இப்படியா” என்ற கேள்வி மனதில் தோன்றியதையும் தடுக்க முடியவில்லை.

************

வர வர பாட்டியின் உடம்பு சீர் கெடத் துவங்கியிருந்தது. படிப்பறிவும் இல்லாமல் புருசனும் இல்லாமல் அண்ணனின் நிழலில் ஒதுங்கி, அதனாலேயே இந்த சமூகத்திலிருந்தும் மறைந்து வாழ்ந்தவள். பெற்றப்பிள்ளைகளை கூட சீராட்டி வளர்க்க முடியாமல் தனிமைக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் அவள்.

அப்பாவுக்கு எப்பொழுதும் பாட்டியின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததாய் தெரியவில்லை. மாசாமாசம் சொற்ப காசு அனுப்பி வைப்பார். அதற்கும் மேல் வேண்டுமென்றால் ஒவ்வொரு காசுக்கும் செலவு கணக்கு கொடுத்தாக வேண்டும். வீட்டு வாடகையும் கொடுத்து சாப்பாட்டுக்கும் என்ன செய்வாள், மருத்துவ செலவுகளுக்கு எங்கு போவாள் என்றெல்லாம் எண்ணுவதே இல்லை. அதனால் தானோ என்னவோ பாட்டி தனக்கென தேவைகளை கூட எப்பொழுதும் பூர்த்தி செய்துக்கொள்வது இல்லை. எதைக் கேட்டாலும் “எனக்கெதுக்கு” என்று ஒதுங்கி போகின்றவள்.

போன மாதம் ஊருக்கு வந்தபொழுது தான் கவனித்தேன், பாட்டியின் கால்கள் நீர் கோர்த்துக் கொண்டிருந்ததை. அதன் பின் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்து, இதோ கட்டாயமாய் அவளை இந்த மருத்துவமனை வரவேற்பறையில் அமர வைத்துள்ளேன்.

*************

“ஏண்டி, இது மூணாவது தடவ, பதினோரு மாசத்துல இத்தனவாட்டி வந்துட்ட. எவடி ஒன்ன கொண்டு வந்து விடுறா? என்ன தொழில் செய்றாளா ஒன்ன வச்சு?” – மறுபடியும் அதே நர்ஸ். இப்பொழுது அந்த சிறுமி அழ ஆரம்பித்திருந்தாள். அழுகையின் ஊடே அவள் என்ன சொல்கிறாள் என்று கவனித்தேன்.

“பசிக்கி. மூணு நாளாச்சு. ஏதாவது தாங்கக்கா”

தனக்கு நேர்ந்தது என்ன என்பது அறியாது, வயிற்றை பிடித்து அவள் எதற்காக அழுதுக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த பொழுது உள்ளுக்குள் நொறுங்கிப் போவதைப் போன்ற உணர்வு. அதைத் தொடர்ந்து “நம்மால என்ன செய்ய முடியும்?” என்று எனக்குள் நானே சமாதானமும் செய்துக் கொண்டேன்.

“அந்த புள்ள ஒரு அனாத சிறுக்கியாம். தவுப்பன் தாயில்லாம ஒவ்வொருத்தன் திண்ணையிலா படுத்து கெடக்குமாம். வயித்துக்கு சோத்த போட்ட எவனோ அவ வயித்தையும் நெரப்பி விட்டுருக்கான். பாவம் புள்ள, வயித்துப் பாட்டுக்கு வழியில்லாம இப்படி வயித்துல சொமந்துகிட்டு நிக்குவு. அந்த வீட்டுவளுக்கு பத்து பாத்திரம் தேய்க்குரவ தான் எரக்கப்பட்டு வயித்த கழுவ இங்க கொண்டு வந்து விட்டுருக்கா. ஹ்ம்ம்ம்... இனிமேல எவன் வந்து இவள கெட்டி, இவ கூட குடும்பம் நடத்தி... புள்ள வாழ்க்கைய சீரழிச்சுப் புட்டானுவ” பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டு அமர்ந்த பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.

“நம்மால என்ன செய்ய முடியும் பாட்டி”

“ஏதாவது செய்துர முடியாதான்னு மனசு கெடந்து அடிக்குது ஆத்தா. இந்த வயசுல இந்த புள்ள இப்படி திரியுவே, இத எல்லாம் மனுச சென்மமா மதிச்சு நடத்த ஒருத்தரும் இல்லையா? அந்த நர்சு ஒரு பொம்பள தான, அவளுக்கு அந்த புள்ள நெலம புரியாதா? இப்படி போட்டு கரிச்சுக்கொட்டுறா. என்னவோ போத்தா, பொட்டப்புள்ளையா பொறந்துட்டமே. ஒந்தாத்தன் விட்டுட்டு ஓடுனப்பவே அவன் கொதவளைய நெருச்சிப் போட எனக்கு துப்பில்ல. எவன் மூஞ்சியையும் நிமிர்ந்து பாக்க வக்கில்லாம செல்லாகாசா கூடப்பொறந்தவன் பிச்ச போடுற மாதிரி போட்டத துன்னுட்டு கெடந்தேன். இப்ப ஒன் அப்பன் எரியுற அஞ்சு பத்து காச பொறிக்கிகிட்டு கெடந்து அல்லாடிக்கிட்டு கெடக்கேன்”

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மெல்ல பாட்டியின் கைகளை பற்றிக் கொண்டேன்.

“பாட்டி, நாம வருத்தப்பட்டு எதுவும் ஆவப்போறது இல்ல. நம்ம பொழப்பயே நம்மளால பாக்க முடியல, இதுல அடுத்தவ எப்படிப் போறான்னு எப்படி பாக்குறது?”

“இப்படியே சொல்லிக்கிட்டு கெடந்தா எப்படித்தா. மனசுக்குள்ள என்னென்னவோ பண்ணுது ஆத்தா... பொண்ணா பொறந்துட்டாலே சாவுற வரைக்கும் அண்டி தான் பொழைக்கணுமாத்தா? எதாவது செய்யணும்த்தா, ஏதாவது செய்யணும்” வெடித்து அழும் பாட்டியை இப்பொழுது என்னோடு சேர்ந்து அவளும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கியிருந்தாள்.

2 comments:

  1. அருமையான கதை. காயு! இப்படித்தான் பல பெண்கள் செல்லாக் காசு போல் நடத்தப்பட்டு அல்லலுக்குள்ளாகின்றார்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சில பெண்களேனும் இப்படி இருப்பார்கள்தான்...இன்னும் எழுதுவேன் பின்னூட்டம் நீண்டுவிடும்...நல்ல கருத்து...வாழ்த்துகள்

    கீதா

    ReplyDelete
  2. apa apa unga kathai yarkanava padichan indru 2 thadavai padithan 3 ravathu thadavai padiththu thaan ungal kadhain saaram purithathu. vaalthukal. intha kadai elutha evalo neram eduthega.

    ReplyDelete