Tuesday 24 May 2016

டீன் ஏஜ் பருவம்




ரெண்டு நாள் முன்னாடி திடீர்னு என் இன்பாக்ஸ்ல ஒரு மெசேஜ். அவனோட ப்ரோபைல் போட்டோவ பாத்தா ஸ்கூல் பையன் இல்லனா காலேஜ் போற பையனா இருக்கும். “முதல்ல மன்னிப்பு”ன்னு ஆரம்பிச்சிருந்தார். யார்டா இதுன்னு யோசிச்சப்ப தான் என் ஸ்டேடஸ் ஒண்ணுல வந்து “புரியவில்லை கவியே, புரியும்படி நீ எழுதக் கூடாதா கவியே”ன்னு கேட்டு வச்சிருந்தது நியாபகம் வந்துச்சு. நமக்கு தான் மூக்கு மேல சுள்ளுன்னு கோபம் வருமே, ஏதோ பாட்டு வரிய பிச்சு பிச்சு போட்டத பாத்துட்டு “கவி”ன்னு சொல்லிட்டாரேன்னு ஆதங்கம் ஒருபக்கம்னா, என்ன யாருனே தெரியாம மரியாத இல்லாம “நீ” சொல்றாரே”ன்னு கோபம்.

“நான் கவின்னு சொல்லவே இல்லையே, அதோட தெரியாதவங்கள மரியாத குடுத்து முதல்ல பேச கத்துக்கோங்க”ன்னு கமன்ட் போட்டுருந்தேன். அதுக்கு தான் சார் இன்பாக்ஸ் பக்கம் வந்து மன்னிப்பு கேட்டுருந்தார்.

அடச்சீ, இதானா, இதுக்கு தானா இவ்வளவு பில்ட் அப்ன்னு சட்டுன்னு சோர்ந்து போய்டாதீங்க. விஷயம் இவ்வளவு தான்னா இத நான் எழுதி இருக்கவே மாட்டேனே. இன்னும் இருக்கு கேளுங்க...

எனக்கு ஒரு விஷயம் புரியல. பேஸ்புக் மாதிரியான சோசியல் மீடியால எல்லாரும் வயசு வித்யாசம் இல்லாம பழகுறாங்க சரிதான், ஆனா அதுக்குன்னு யார் என்னன்னே தெரியாதவங்கள எல்லாம் சட்டுபுட்டுன்னு “நீ,வா, போ”ன்னு ஒருமைல சொல்லிடுறதா? முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள பேஸ்புக் வந்துடுறாங்க. என்னவோ இந்த பேஸ்புக்கே அவங்க அப்பா எழுதி வச்ச சொத்து மாதிரி ஒரு பீலிங்ல தாம்தூம்னு நடந்துக்க வேண்டியது.

சரி, விசயத்துக்கு வருவோம். தம்பி வந்து மன்னிப்பு கேட்டார்ல, கேட்டுட்டு ஆள் தெரியாம வந்துட்டேன் இனி நீங்களே சொன்னாலும் இந்த பக்கம் வர மாட்டேன்னு சொன்னார். சரி, இப்படி வந்து மன்னிப்பு கேக்குற தம்பிய நாமளும் ரொம்ப தான் காயப்படுத்திட்டோமோன்னு நினச்சு, “என்னோட ஸ்டேடஸ் பாருங்க”ன்னு சொல்லி ஏற்கனவே “யாரும் என்னோட இன்பாக்ஸ் பக்கம் வந்துடாதீங்க”ன்னு போட்ருந்த ஸ்டேடஸ் பாக்க சொன்னேன்.

விஷயம் அதோட முடிஞ்சுதுன்னு பாத்தா, தம்பி (அவருக்கு பத்தொன்பது வயசு ஆச்சாம்) அந்த ஸ்டேடஸ் பாத்துட்டு “அக்கா உங்களை மாதிரி நாகரீகமான, கட்டுப்பாடான நாகரீகமான பெண்கள் இருந்திருந்தால் நாடு எப்பவோ முதலிடம்”ன்னு சொல்லப் போக, நமக்கு பிபி எகிற ஆரம்பிச்சிடுச்சு.

“ஏம்மா, தம்பி நல்லா தான சொல்லியிருக்குராப்ல, அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்”ன்னு எல்லாம் கேட்றாதீங்க, தம்பி ரொம்ப நாகரீகமா அப்புறம் நிறைய வார்த்தைகள் பேசினாப்ல.

அவருக்கு நான் குடுத்த பதில் இதுதான், “பெண்களுக்கான கட்டுக்கோப்பையும் நாகரீகத்தையும் எதை வச்சு வரைமுறைப்படுத்துறது? பெண்கள் இப்படி தான் இருக்கணும்னு வரைமுறைப்படுத்த நினைக்குற எதையும் இனிமேல் என்கிட்ட பேசவேணாம்”ன்னு சொன்னேன்.

அவ்வளவு தான், நம்ம தம்பிக்கு வந்துது பாருங்க கோபம். “கொஞ்சம் இறங்கி போனா என்ன பெரிய பருப்பு மாதிரி பேசுற, நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர், நீ எனக்கே கத்துக் குடுக்குறியா” அப்படி இப்படின்னு மறுபடியும் ஒருமை வார்த்தைகள். பாவம் தான் அவர், அவருக்கு தான் ஒரு பி.ஹச்.டி டாக்டரேட் வாங்கின காலேஜ் ப்ரொபசர் கிட்ட பேசிட்டு இருக்கோம்னு தெரியுமா என்ன? ஆனாலும் தனக்கு பத்தொன்பது வயசு தான் ஆகுது, தான் பேசிகிட்டு இருக்குற எதிராளி தன்னை விட வயசுல பெரியவர், அவர்கிட்ட எப்படி பேசணும்னு கூடவா தெரியாம போச்சு?

எனக்கு இப்ப ரெண்டு விஷயத்த பத்தி சொல்லணும். முதலாவது, அந்த தம்பி சொன்ன மாதிரி இந்த நாடு முன்னேறாம இருக்குறது பொண்ணுங்களோட நடத்தையினால தானா? அப்புறம் எதுக்கு இந்த அரசியல், அரசாங்கம், வியாபாரம், விவசாயம் எல்லாம்? எல்லா பொண்ணுங்களையும் புடிச்சு ஜெயில்ல போட்டுட்டா நாடு வளரோ வளருன்னு வளர்ந்துடும்ல. அதோட தம்பி மாதிரியான மரியாதை தெரிஞ்ச பசங்க நாட்டுல பெருகிடுவாங்க. அவங்க இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போய்டுவாங்க.

அதுவும், ஊருல ஒரு பொண்ணு கூட நடமாடக் கூடாது. அப்படி நடமாடிட்டா அஞ்சு வயசு புள்ளைல இருந்து தொண்ணூறு வயசு பாட்டி வரைக்கும் தம்பி மாதிரி ஆளுங்கள உசுப்பி விட்ருவாங்க. அப்புறம் அவங்க கற்பழிப்பு, கொலைன்னு இறங்கிடுவாங்க. தேவையா இதெல்லாம். அதனால தம்பி மாதிரியான ஆட்கள் வாடி,போடி, பருப்புன்னு எல்லாம் பொண்ணுங்கள பாத்து சொன்னா அமைதியா அடக்க ஒடுக்கமா எதிர்ப்பே இல்லாம கேட்டுக்கணும். அப்ப தான் நாடு முன்னேறும்.

இதுக்கும் மேல பேசினா என்னவோ நான் பெண்ணீயம் பேசுறேன்னு நினைப்பு வந்துடக் கூடாது. அத பத்தி நாம இன்னொரு நாள் தெளிவா பேசலாம். இப்ப நான் ரெண்டாவது விசயத்துக்கு வரேன். அது என்னன்னா, இந்தா, அந்த தம்பி என்னை பேசினாரே மரியாதை வார்த்தைகள். அதப்பத்தி தான்.

இந்த கத்துக்குட்டிகள்கிட்ட இருக்குற ஒரு எண்ணம் என்னனா, பேஸ்புக்னா அங்க வர்ற பொண்ணுங்க எல்லாமே என்னவோ ஆம்பளங்க கிட்ட வழியுறவங்களாவே தான் இருப்பாங்க, பேஸ்புக் வந்தா, நிறைய “ஆன்டிங்க” கிடைப்பாங்க. சும்மா கிளுகிளுன்னு பேசவும், கோக்குமாக்கா நாலஞ்சு போட்டோவும் பாக்கவும் முடியும்ங்குற எண்ணம் தான்.

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி பேஸ்புக்ல நான் ரொம்ப ஆக்டிவா இருந்த நேரம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பக்கங்கள முடிஞ்ச அளவு முடக்கிடணும்னு தீவிரமா இருந்த காலம். அந்த மாதிரியான பக்கங்கள தேடித் தேடி ரிபோர்ட் குடுத்துட்டு இருந்தோம். ஒரு கட்டத்துல வெறுத்து போயிடுச்சு. பெண்கள என்னென்ன விதமா எல்லாம் பாலியல் ரீதியா காமிக்குறாங்கன்னு பாத்துட்டு இத எல்லாம் ஒழிக்கவே முடியாதாங்குற ஆதங்கம். விடாம முயற்சி செய்தா ஏதோ ஓரளவு பக்கங்களையாவது நீக்கலாமேங்குற நம்பிக்கை.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பக்கங்களை பாத்தா அதை விட கொடுமை. அஞ்சு வயசு குழந்தைல இருந்து பதினஞ்சு வயசு குழந்தைகள் வரைக்கும் விதவிதமா குழந்தைகள் போட்டோவ போட்டு, அதுக்கு அவங்க குடுக்குற வக்கிரமான கமண்ட்ஸ், நினச்சாலே நெஞ்சு பதறும். பேஸ்புக்ல தங்களோட பிள்ளைங்களோட போட்டோவ சோசியல் மீடியாவுல போடுற அத்தனை பேருக்குமான எச்சரிக்கை அது.

என்கிட்ட ஒருத்தங்க கேட்டாங்க, “ஏன்மா, இந்த மாதிரி பேஸ்புக்ல பக்கங்கள் இருக்குறதே பலபேருக்கும் தெரியாது, நீ இத எல்லாம் வெளில சொன்னா, அப்புறம் அத தேடிப் போய் பாக்க மாட்டாங்களா? இது அந்த பக்கங்களுக்கு நீ மறைமுகமா செய்ற விளம்பரம் தானே”ன்னு.

அந்த பக்கங்கள்ல ஒவ்வொரு போட்டோவுக்கும் கிடைக்குற லைக்ஸ் பாத்தா தெரியும், அது எத்தனை பேரை போய் ரீச் ஆகியிருக்குன்னு. ஒரு குழந்தை போட்டோவுக்கு ஆயிரத்துக்கும் மேல லைக்ஸ், இருநூறுக்கும் மேலான வக்கிர கமண்ட்ஸ். நாம கண்ணை மூடிக்கிட்டு இப்படி எதுவும் நடக்கலன்னு இருந்துட்டா, இதெல்லாம் நடக்காம போய்டுமா?

கண்ணை திறந்து உங்களை சுத்தி நடக்குறத பாருங்க. ஆபாச பக்கங்கள கண்டா அய்யய்யோ நமக்கு தேவையில்லன்னு ஒதுங்கி ஓடாம, ஒரு நிமிஷம் நின்னு நிதானிச்சு அதுல இருக்குற விஷயங்கள் ஒவ்வாமையா இருந்தா அந்த பக்கத்தை ஒரு ரிபோர்ட்டாவது செய்துட்டு வரலாமே. யார் கண்டா, உங்க வீட்டு போட்டோவோ,இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க போட்டோவோ கூட அங்க இருக்கலாம். இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தா தான் ஒண்ணு, பாத்து பாத்து சலிச்சு போய் ஒதுங்க முடியும், இல்லனா அட்லீஸ்ட் ஒரு ரெண்டு பேராவது அதுக்கு எதிரா ஏதாவது செய்ய முடியும்.

இதெல்லாத்தையும் விடுங்க. இந்த பேஸ்புக் பக்கங்களை புரட்டிகிட்டு இருந்தப்ப கிடைச்ச நிறைய ஆபாச பக்கங்கள் முழுக்க முழுக்க அம்மாக்களுக்குன்னு ப்ரெத்யேகமா வடிவமைக்கப்பட்டது. இந்த பக்கங்கள்ல உலாவந்தா மேலே சொன்னேனே இந்த கத்துக்குட்டி விடலைப் பசங்க, முழுக்க முழுக்க அவங்க ராஜ்யமா தான் இருக்கும்.

அதுல இருக்குற போட்டோக்களும் சரி, கமண்டுகளும் சரி, பெரும்பான்மையானவை எல்லாம் அக்மார்க் ஒரிஜினலா இருக்கும். அதுல கமன்ட், போட்டோ போட்டுருக்குற பசங்களோட ப்ரோபைல் அலசி பாத்தா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலான பேரு பதினேழுல இருந்து இருபது வயசுக்குள்ள இருக்குற பசங்க. ஏதோ ஆர்வக்கோளாறுல பேஸ்புக் திறந்துடுறாங்க. பேஸ்புக் கேக்குற அத்தனை தகவலையும் அதாவது, போட்டோ, படிச்ச பள்ளி, வயசு, ஊருன்னு எல்லா தகவலும் இருக்கும். அதுவும் பப்ளிக் மோட்ல. இதுல போலிகளும் இருக்கத் தான் செய்யும், இல்லன்னு சொல்லல, ஆனாலும் பெரும்பாலும் உண்மையான தகவல்களா தான் இருக்கும். அத எப்படி மறைச்சு வைக்குறதுன்னு கூட இந்த தம்பிகளுக்கு தெரியாது. இப்படி ஆபாச பக்கங்கள்ல அவங்க போடுற போட்டோக்கள், கமன்ட்கள் எல்லாம் ரொம்ப சுலபமா அவங்க லிஸ்ட்ல இருக்குற மத்தவங்களுக்கும் தெரியும்ங்குற விசயமும் அவங்களுக்கு தெரியாது.

நான் அப்படி ஒரு பக்கத்த புரட்டிகிட்டு இருந்தப்ப ஒருதம்பி “என் அம்மா”ன்னு ஒரு போட்டோவ போட்டு விட்ருந்தார். வீட்ல ஓடியாடி வேலை செய்து, களைச்சு போய், மாடிப்படி கீழ அசுவாரசியமா உக்காந்து பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா. ஒரு நேர் கண்ணோட்டத்துல பாத்தா, அந்த போட்டோ குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்த ஒரு தியாகியோட போட்டோவா தான் தெரியும். ஆனா இந்த தம்பிங்க பார்வைல, பருத்த இடுப்பும், சேலை விலகின மாராப்பும் தான் பிரதானம். இதுல ஒரு தம்பி “டேய் டேய், இது என் அம்மா, உன் அம்மாவ இன்னும் காட்டேன்”ன்னு அவர் அம்மாவோட ஆடை விலகி தூங்குற போட்டோவ போட்டு கெஞ்சிகிட்டு இருந்தார்.

இந்த மாதிரி தம்பிகளை எல்லாம் நல்லா புளிய விளாறு வச்சு விளாசு விளாசுன்னு விளாசனும்னு தோணுது தான். ஆனாலும் பாவம், அந்த தம்பிகளோட அம்மாவும் அப்பாவும், தன் புள்ளை தன்னை இப்படி எல்லாம் போட்டோ புடிக்குறான்னு கூட தெரியாத அப்புராணியா, பையன் கேட்டதுக்கு மேலேயே அவனுக்கு சகல வசதிகளோட மொபைல் போன் வாங்கிக் குடுத்துட்டு, ஆடை விலக வீட்டு வேலை செய்துட்டு இருக்காங்க. நம்மால என்ன செய்ய முடியும்?



எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்து முடிக்குறேன். ஆனா இது முடிவும் இல்ல. சம்பவங்கள மட்டும் தான் அடுக்கி இருக்கேன். என்ன செய்யலாம்னு நீங்க தான் சொல்லணும். பேசலாம். இன்னும் நிறைய.

6 comments:

  1. உண்மைதானான்னு நம்ப முடியாத அளவுக்கு உண்மைகள் இருக்கறது நிதர்சனம்

    ReplyDelete
  2. vaalthukal. 10 perla 7 per nega solara matheri irukaga nu vaichukuvom ipa matra antha 3 perla 1 thar ithai patri therithu ipa 8 vathu aala maaralam. ipa fb yala ena nanmai iruku itha inum epadi mampaduthalam ithu pondra seithei veli itaal 7 il 3 peaer maara vaaipu athegam . eduthu kaata kadavul kita pass aaga vendum endru prathenai seivathum athuku padila fail aaga kudathu endru prathenai seivathukum uala veru paadu paaruga.

    ReplyDelete
    Replies
    1. இங்க நான் அந்த வயசு பசங்களுக்கு எதுவுமே சொல்ல வரல. ஆனா பெரியவங்களுக்கான எச்சரிக்கைன்னு தான் சொல்ல வரேன். பாசிட்டிவ் விசயங்களை கண்டிப்பா பாசிட்டிவா பேசலாம். தாங்கள் பண்றது வெளிஉலகத்துக்கு தெரியாதுன்னு நினச்சு பண்றவங்களுக்கு அதெல்லாம் ஈசியா தெரியும்னு சொன்னா ஒரு பயம் வரும் இல்லையா. தான் செய்த செயல்கள வச்சு தான் தான் கணிக்கப்படுவோம்ங்குறது புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தானே

      Delete
  3. எல்லாம் ஆர்வக்கோளாறு தான். சின்னப் பசங்களை சத்தமில்லாம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்... எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஆபாச பக்கங்களுக்கு லைக் போட்டிருக்கும் நண்பர்களை உடனே அன்பிரென்ட் பண்ணிருவேன். காரணம் தேவையில்லாம கண்ட போட்டோவெல்லாம் நம்மோட டைம்லைன்ல வந்து நிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நான் ஃப்ரென்ட் லிஸ்ட்ல சேர்க்குரப்பவே பாத்து பண்றது. அப்படி யாராவது லைக் போட்ருந்தா ப்ளாக் தான்.

      Delete