Monday 6 June 2016

ஜெயமோகனின் காடு நாவலும் கோதையாறு பயணமும்




“காடு”. காடும் காடு சார்ந்த இடமும், அதில் வாழ்ந்த மனிதர்களயும் பற்றிய நாவல். எழுதினது ஜெயமோகன். எழுத்தாளர் பற்றிய எந்த பரிட்சயமும் இதுக்கு முன்ன இல்ல. காரணம் நான் புத்தகங்கள் வாசிக்குற பழக்கமே இல்லாதவ. எதேச்சையா தான் எழுத்தாளர் ஊர் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. அட, நம்ம ஊரு. நாகர்கோவில்.

இந்த நாவல் ரொம்ப தாமதமா தான் என் கைல கிடச்சுது. அதாவது மே பதிமூணு, 2016- க்கு அப்புறம். அதனால என்ன, படிக்க வேண்டியது தானேன்னு கேக்குறீங்க. படிச்சேன். படிச்சு முடிக்க ரெண்டு நாள் ஆச்சு. ஆனா அதுக்கப்புறம் அதுல இருந்து வெளில வர பல நாள் ஆச்சு. இந்த நாவல பத்தி இன்னொரு நாள் விலாவரியா எழுதணும். அதுக்கு முன்னால இந்த நாவல் மே பதிமூணு, 2016- க்கு முன்னால கிடச்சிருக்க கூடாதான்னு ஒரு ஏக்கம்.

அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு இப்படியான ஒரு காட்டை பாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடச்சுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பதிமூணாம் தேதி எங்கயாவது ஒரு நாள் போயிட்டு வரலாம்னு யோசிச்சப்ப காட்டுக்கு போகலாம்னு முடிவாகிச்சு. காடுனா நம்மூரு பக்கத்துல என்ன இருக்குன்னு அலசி ஆராய்ஞ்சப்ப கோதையாறு போகலாம், அங்க தான் ஈசியா பெர்மிசன் வாங்க முடியும்னு ஃப்ரெண்ட் ஒருத்தன் சொல்ல, சரின்னு மளமளன்னு ஏற்பாடு நடக்க ஆரம்பிச்சது.

அப்படிதான் எங்க பயணம் ஆரம்பிச்சுச்சு. பேச்சிப்பாறை போய், அங்க இருந்து உள் காட்டுக்குள்ள கோதையாறு லோயர் பவர் ஹௌஸ் போய், மறுபடியும் பேச்சிப்பாறை வந்து அங்க போட்டிங் போயிட்டு, திற்பரப்பு, தொட்டிப்பாலம்ன்னு சுத்திட்டு வந்தப்பவே கொஞ்சம் மனசு குளிர்ந்து தான் இருந்துச்சு.

ஆனா அதெல்லாம் விஷயம் இல்ல. பேச்சிப்பாறைல போட்டிங் போயிட்டு செம பசியோட சாப்பிட உக்காந்தப்ப, சுத்தமான தேன், பரோட்டாவுக்கு வச்சு சாப்பிடுங்கன்னு எங்கள கூட்டிட்டு ஊர் சுத்தி காட்டின இஞ்சினியர் கனி சொன்னப்ப, ஞே, பரோட்டாவுக்கு தேனா, வேணாம் வேணாம்னு மறுத்துட்டேன். அப்புறம் பரோட்டாவுக்கு சாம்பார் தான் இருக்குன்னு கேள்விப்பட்டு, தலைல அடிச்சுட்டே, கொஞ்சமா தேன் தொட்டு சாப்ட்டு பாக்கலாமோன்னு ஒரு நப்பாசை வந்து, “சரி, கொஞ்சம் விடுங்க”ன்னு தட்டை நீட்டினதும் தான் தாமதம், அப்படியே பரோட்டா முழுக்க தேனை ஊத்தி விட்டுட்டார். “அய்யய்யோ இத எப்படி சாப்டுறது”ன்னு பதறின நொடி, ஒரு டம்ளர்ல முக்கால் பகுதி ஊத்தி, “அது பத்தலனா இத விட்டுக்கோங்க”ன்னு பக்கத்துல வச்சுட்டு போய்ட்டார்.

நானெல்லாம் சமீப காலமா தேனை நக்கிப் பாத்து தான் பழக்கம். இல்லனா ப்ரெட் சாப்பிடுறப்ப பிச்சு பிச்சு தேன்ல தொட்டுக்கிட்டு சாப்பிடுறது உண்டு. அதையும் தாண்டி சின்ன வயசுல தேனடை சாப்ட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் கடந்து போன காலமாவே மாறி மறந்தே போயிருந்தது. கடைசியா கார்த்திக் எழுதின “ஆரஞ்சு முட்டாய்” கதை தொகுப்புல வர்ற “தேனடை” கதை படிச்சப்ப பழைய நியாபகங்கள் மீண்டு வந்துச்சு. அதுக்கப்புறம் இப்ப தான் அதோட நியாபகங்கள் வர ஆரம்பிக்குது.

தோப்புக்குள்ள எங்கயாவது தேனடை இருந்துச்சுனா கைல ஒரு தீபந்தத்தோட கும்பலா கிளம்பிடுவோம். தேன்னா, சாதாரண தேனீ உருவாக்குற தேன், அப்புறம் கடந்தை தேன், இன்னொரு வகை கொசு மாதிரி இருக்கும். பேர் தெரியல, அதோட தேன்னு எனக்கு தெரிஞ்சு மூணு வகைல கிடைக்கும். தேன் எடுக்குறப்ப நானெல்லாம் எப்பவும் பாதுகாப்பு வளையத்துக்குள்ள தான். அதனால தேனீகிட்ட கொட்டு வாங்கின அனுபவங்கள் குறைவு தான். அப்படியே கொட்டு வாங்கினாலும் பாட்டி சுண்ணாம்பு எடுத்து கொட்டுப்பட்ட இடத்துல தடவி விடுவாங்க. அவ்வளவு தான். கடந்தை தேன் எல்லாம் நாங்க எடுக்க முடியாது. அது பெரியவங்க தொகுதி. காரணம், கடந்தை விஷம் ரொம்ப கடுமையானதாம். கொட்டினா ஆளே மேலே போக வாய்ப்பு அதிகமாம். ஆனா மருத்துவ குணம் நிறைஞ்சதுன்னு சொல்லுவாங்க. அந்த கொசு (மாதிரி) தேனை எல்லாம் சுலபமா எடுத்துடலாம். பெரும்பாலும் கிணற்று கல் இடுக்குகள்ல தான் கூடு கட்டியிருக்கும்.

இப்படியா கஷ்டப்பட்டு எடுத்துட்டு வர்ற தேனை அப்படியே அந்த மெழுகு கூட்டோட ஒரு பாத்துரத்துல போட்டு கொண்டு வருவோம். வீட்டுக்கு வந்ததும் அந்த மெழுகு கூட்டோட பக்குவமா அரிஞ்சி அப்படியே வாய்ல போட்டுட வேண்டியது தான். இப்ப நினச்சாலும் நாக்குல சப்பு கொட்டுது. சில நேரம் பருவம் தவறி எடுக்குற தேன் கூட்டுக்குள்ள தேனீ குஞ்சுகள் பொரிச்சு வெள்ளை புழுவா உள்ள இருக்கும். அதையும் அப்படியே அரிஞ்சு நல்லா சவைச்சு சாப்பிடுன்னு தின்னத் தருவாங்க. வாய் எல்லாம் வெள்ளையா ஒழுக, தேனையும், அதோட கூட்டு புழுக்களையும் மெழுகோட சேர்த்து சாப்ட்டு முடிச்சா முகத்துல அப்படியே ஒரு மந்தகாசமான புன்னகை வரும். அந்த தேன் மெழுகு, சப்புன்னு இருந்தாலும் அதுக்கும் ஒரு சுவை உண்டு.

அப்படியே ஒவ்வொரு பாளம் பாளமா அள்ளி தேனை குடிச்சு முடிச்சா, அம்மாவும் பாட்டியும் மீதி இருக்குற தேனை அடுப்புல விட்டு காய்ச்சு இறக்குவாங்க. அப்புறம் அந்த தேனுக்கு அதிகமா ருசி இருக்காது. நாங்க தொடக் கூட மாட்டோம். அப்பப்ப புட்டுக்கு விட்டு சாப்ட்டா தான் உண்டு. இதெல்லாம் தான் சின்ன வயசு நியாபகங்கள்ன்னு சொல்லிட்டேனே. இப்பலாம் இப்படி சுத்தமான தேன் எங்க கிடைக்குது. ரொம்ப கட்டியா, கொஞ்சம் வாய்ல விட்ட உடனே திகட்டிப் போய்டுது.

அடடா, பரோட்டாவுல தேனை விட்டுட்டு அப்படியே கதை விட வந்துட்டேன் பாருங்க. கனி சார் பரோட்டா முழுக்க தேனை விட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிட்டாரா, என்னடா இது, இத எப்படி திங்குறதுன்னு கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, வேண்டா வெறுப்பா ஒரு துண்டு பரோட்டாவ பிச்சு வாய்ல வச்சேன். கொஞ்ச நொடி ஒண்ணுமே தோணல. அப்புறமா அந்த ருசி நாக்குல ஒட்டிக்கிட்டு என்னை விடவே இல்ல. குழைய குழைய பரோட்டாவ தேன்ல முக்கி முக்கி சாப்ட்டுட்டே இருந்தேன். டம்பளர்ல இருந்த தேன் காலி ஆனதுக்கு அப்புறம் தான் நிமிர்ந்தே பாத்தேன்னா பாத்துக்கோங்களேன். ஆனா நீங்க இப்படி ஒரு விபரீத பரிச்சைல இறங்கிடாதீங்க, காரணம், இப்ப கடைல கிடைக்குறது எல்லாம் சீனி பாகு தான். அத தான் தேன்னு சொல்லி நம்மள ஏமாத்திடுறாங்க. கொஞ்சம் குடிச்சாலும் திகட்டிடும்.

கோதையாறு போயிட்டு வந்ததுல நான் பண்ணின ஒரு நல்ல காரியம், நூத்தி அறுபது ரூபா குடுத்து கிட்டத்தட்ட அரை லிட்டர் காட்டுத் தேன் வாங்கிட்டு வந்தது தான். ஆனா வாங்கிட்டு வந்த நாள் அத கொண்டு போய் பத்திரமா செல்ப்ல வச்சதுல அதப் பத்தி மறந்தே போனேன்.

கிட்டத்தட்ட இருபத்தி ரெண்டாம் தேதி நான் காடு நாவலை படிக்க ஆரம்பிக்குறேன். நாவல் அதோட முதலாம் அத்தியாயத்திலேயே ஒரு மிளாவை அறிமுகப்படுத்துது. ஒரு கல்வெர்ட் மேல கம்பீரமா நின்னு தன்னோட கால் தடத்தை பதிச்ச மிளா எனக்கு காஸ்மீராவ நியாபகத்துக்கு கொண்டு வந்துச்சு. காஸ்மீரா எங்க வீட்டு ஆட்டுக்குட்டி.

வளர்ப்பு பிராணிகள் வச்சுட்டு இருந்த வீடுகள்ல நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் படுக்கை அறைக்குள்ள தூங்கிட்டு இருந்த காலத்துல என் வீட்டு படுக்கை அறைக்குள்ள என் கூட தூங்கிட்டு இருந்தவ தான் காஸ்மீரா. அவள பத்தி சொல்ல நிறைய இருக்குறதால அத தனிப் பதிவா பகிரலாம். இப்போதைக்கு, அப்பாவோட ஹீரோ ஹோண்டா மேல கம்பீரமா ஏறி நின்னு ரெண்டு ஹேண்டில் பார் மேலயும் கால்கள அழுத்தமா ஊனி, கண்ணாடியில தன்னோட பிம்பத்த பாக்குற காஸ்மீராவ எனக்கு அந்த மிளா நியாபகப்படுத்திச்சு. அத்யாயத்தோட ஏதோ ஒரு பகுதியில அந்த மிளா காணாம போனப்ப, அதுக்கு எதுவும் ஆகி இருக்காது, சும்மா காணாம போயிருக்கும்னு மனசு சமாதானம் பண்ணிக்க தவறல. அந்த மிளா இன்னும் எங்கயாவது அந்த காட்டுக்குள்ள தான் சுத்திட்டு இருக்கணும்.

நாவலுக்குள்ள போறப்பவே கொஞ்சம் கொஞ்சமா குட்டப்பன், ரெசாலம், சினேகம்மை, ரெஜினாள் மேரி, குருசு இவங்க எல்லாம் நம்ம கூடவே வந்து ஒட்டிக்குறாங்க. அப்படியே சடசடன்னு நம்மள கதைக்குள்ள இல்லல, காட்டுக்குள்ள இழுத்துட்டு போய்டுறாங்க. ஒண்ணே ஒண்ணு மட்டும் நிச்சயம். இந்த ஒரே ஒரு போஸ்ட் எழுதி என்னால காடு நாவல முழுசா சிலாகிக்கவே முடியாது. அதனால இங்க நான் ரசிச்ச மேம்போக்கான விசயங்கள என்னோட வாழ்க்கையோட கொஞ்சம் பேராசையோட பொருத்திப் பாத்துக்குறேன் அவ்வளவு தான். மத்தப்படி காட்டை பத்தி சொல்ற தகுதி எனக்கெல்லாம் நிச்சயமா கிடையாது.

இந்த நாவல்ல குட்டி குட்டியா நான் ரசிக்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. குறிப்பா அந்த தேவாங்கு. தேவாங்குக்கும் ரெசாலத்துக்கும் இருக்குற உறவு முறைய என்னால காயுவும் சக்தியுமா உணர முடிஞ்சுது. சக்தி என்னோட அணில் குட்டி. பிறந்த கொஞ்ச நாள்ல அதோட அம்மா செத்துப் போக, என்கிட்ட அடைக்கலமா வந்தவன். ரெசாலத்துக்கு எப்படி அந்த தேவாங்கு தான் உலகமோ அப்படி தான் இந்த காயுவுக்கு சக்தி தான் உலகு. எப்படி தேவாங்குக்கு ரெசாலம் தாண்டி யாரையும் தெரியாதோ அப்படியே சக்திக்கு காயுவை தாண்டி யாரையும் தெரியாது.

இந்த காட்டுக்குள்ள முன்னேறி போக போக காட்டோட வாசமும், அதோட ஈர சொதசொதப்பும், சலசலக்குற தண்ணியும் நம்மள சூழ்ந்துக்குது. நீலி கிரிதரனுக்கு சந்தன மரக்காட்டுக்குள்ள இருந்து எடுத்துட்டு வந்த தேனடைய வாகா அரிஞ்சி குடுத்து குடிக்க சொன்ன நேரம் எனக்கு நான் வாங்கி மறந்து போயிருந்த தேன் நியாபகம் வந்துச்சு. கிரிதரன் அந்த தேனை குடிச்சுட்டு போதைல கிறங்கிக் கிடந்த நேரம் நானும் அரைலிட்டர் தேனையும் குடுச்சு முடிச்சு ஒரு மிதப்புல இருந்தேன். அந்த தருணத்த எப்படி விவரிக்கனு எனக்கு புரியவே இல்ல. முழு போதை. ஒரு தேன் இத்தன போதைய தரும்னு அதுவரைக்கும் எனக்கு தெரியவே தெரியாது. ரெண்டாயிரத்து பதினாறாம் வருஷம் கிடச்ச தேனே இத்தன போதைனா, கிட்டத்தட்ட நூற்றாண்டு பிந்திய காலத்துல கிடச்ச சுத்தமான சந்தனத் தேன் எத்தனை போதைய குடுத்துருக்கும். நமக்கு கண்டிப்பா தெரியாது, ஆனா கிரிதரன அவனோட இருப்பிடத்துக்கு கொண்டு வந்த மலையத்தி நீலிக்கு தெரிஞ்சிருக்கும்.

எப்படி காட்டுக்கு ஒரு வாசம் இருக்குதோ, அப்படி தான் இந்த நாவலுக்கும் ஒரு வாசம் இருக்கு. அது மலையாளமும் தமிழும் கலந்து ஒரு மாதிரியான புதுவிதமான கலவைய குடுக்குது. ஒவ்வொரு வசனமும் புரிய ஆரம்பிச்சுட்டா அப்புறம் நாமளும் கூட அந்த பாஷை பேசிடலாம். வாசிக்க வாசிக்க அந்த சொற்கள் மனசுக்குள்ள கர்வெட்டா நிலைக்க ஆரம்பிச்சிடுது.

எனக்கு கீரக்காதனை (யானை) பாத்ததும் என்னையே பாத்த நினைப்பு தான். கிட்டத்தட்ட அது காட்டுக்குள்ள வாழ்ந்த கம்பீர வாழ்க்கை, பிடித்த மதம், வழி தப்பி போய் யாராவது காப்பாத்த வந்துட மாட்டாங்களாங்குற ஏக்கம்... கடைசில கீரக்காதனோட அந்த “பாங்” சத்தம் இன்னும் என் காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு. அனாதையா விடப்பட்டவங்கள வேடிக்கை மட்டுமே பாக்க முடியும். மிஞ்சி மிஞ்சிப் போனா தலைய வெட்டிப் போட்டு உலக விடுதலை குடுக்கலாம். ஒரே ஒரு காட்சியில வந்தாலும் அந்த புலி மேல ஒரு வெறுப்பு பட்டுன்னு வராம இல்ல.

எப்படி பனிரெண்டு வருசத்துக்கு ஒரு தடவ பூக்குற குறிஞ்சிய பாத்து கிரிதரனுக்கு நீலி மேலயும் குறிஞ்சி மேலயும் இருந்த பிரமிப்பு அகல ஆரம்பிக்குதோ, அப்படி தான் இந்த “காட்டை” படிச்சு முடிச்ச நேரம் எனக்கு நிறைய விஷயங்கள் மேல இருந்த அசூயை, வெறுப்பு, மலைப்பு எல்லாமே தரைமட்டத்துக்கு வந்துருந்துச்சு.

ஜாதிகளும் இனங்களும் நமக்கு அவசியமானவை தான். ஆனா நாம இப்ப ஜாதிகள தூக்கி கொண்டாடிட்டு இனங்கள அழிச்சுட்டோம். அத பத்தின வருத்தம் கொஞ்சம் கூட பெரும்பாலான நம்மகிட்ட இல்ல. அவன் இவனை வச்சிருந்தான், அவள் அவனை வச்சிருந்தாள்ன்னு எல்லாம் கொஞ்சமும் பதறாம இந்த நாவல் சொல்லிகிட்டே போகுது. இந்த உறவுமுறைகள எல்லாம் மனசுக்குள்ள வஞ்சமா வச்சுக்காம “இவன் பிள்ள அவனுக்கு பிறந்ததாக்கும்”ன்னு கூடி கிசுகிசுத்து கொஞ்ச நேரம் மனக்களி அடஞ்சுட்டு அது பாட்டுக்கு நடக்கட்டும்னு அவங்கவங்க வேலைய பாத்துட்டு போற மக்கள்; வயித்துப்பாட்டுக்கு பணம் இல்லனா வர்ற லாரிக்காரங்ககிட்ட ஒதுங்கலாம்னு நினைக்குற பெண்கள், அவங்கள தப்பா பேசாத ஊரும் அதோட நடத்தையும், இயல்பும்; காமம் வந்தா அத தீத்துக்க சொல்லி இருக்குற விதம்னு இந்த நாவல் யதார்த்த மனுசங்கள அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கு.

கற்பும், காமமும்னு பேசி பேசி நாம என்னத்த சாதிச்சுட்டோம்னு தெரியல. காரணம், ஒரு நடுத்தரவர்க்கத்துக்கும் கொஞ்சம் மேலே ஒரு சமூகத்துல பிறந்து, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஒழுக்கங்கள் இது தான்னு மன கட்டுப்பாடுகளோட வளர்ந்த எனக்கு ஒரு கட்டத்துல கிட்டத்தட்ட சினேகம்மைக்களும், ரெஜினாள் மேரிக்களும் கிரிதரனோட மாமியும் அறிமுகம் ஆனப்ப ரொம்ப அதிர்ந்து போனேன். ஓட்டை பிரிச்சு இறங்குறதும் தென்னந்தோப்புக்குள்ள ஒதுங்குறதும் வெகு சஜமா கொண்டாடின அந்த ஜனங்க என் கண்ணு முன்னால வந்துட்டு போனாங்க. எல்லாத்தையும் மீறி அந்த ஊர் மக்களோட அன்னியோன்யம் எனக்கு ஏனோ இப்ப அருவெறுப்ப தரவே இல்ல.

இந்த நாவல்ல வர்ற பலபேரு முறைத்தவறிய காமத்துள் தெரிஞ்சோ தெரியாமலோ மூழ்கிப் போறாங்க. ஆனா அதப் பத்தின குற்ற உணர்ச்சி யாருக்காவது இருக்கான்னு திரும்ப திரும்ப யோசிச்சுப் பாத்தேன். கதை நாயகன் கிரிதரனாகட்டும், சதாசிவம் மாமாவாகட்டும், மாமியாகட்டும், ரெஜினாளாகட்டும், மேரியாகட்டும் எல்லாரும் அத ஒரு சம்பவமாகவோ இல்ல அனுபவமாகவோ எடுத்துட்டு கடந்து போயிட்டே இருக்காங்க. தன் சகமனுசியோட கணவன் இறந்ததும், அவளையும் அவளோட குழந்தைகளையும் ஏத்துக்குற குருசுவாகட்டும், சதாசிவத்துக்கும் தன்னோட மனைவிக்கும் பிறந்த சவலை குழந்தை நியாபகமா தேவாங்கை பிள்ளையா தத்தெடுத்துக்குற ரெசாலமாகட்டும் எல்லோருமே ஒரு வகைல கதை நாயகர்கள் தான்.

நாகரீகம் மக்கள ரொம்ப கெடுத்துடுச்சுன்னு மட்டும் தான் எனக்கு சொல்லத் தோணுது. இயல்பு மனிதர்கள் காட்டைப் போலவே தொலஞ்சுட்டு இருக்காங்க. இல்லனா இப்படியும் சொல்லலாம், ஜெயமோகன் மூலமா, அவரோட காட்டுல மட்டும் இயல்பு மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க...




இன்னும் பேசுவோம்......

7 comments:

 1. ஜெயமோகன் எழுதிய "காடு" நாவல் பற்றிய விமர்சனம் இல்லை அந்தக் கட்டுக்குள்ளே புகுந்து கண்டவை எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நயம், சொல் வளம், சுவைபடக் கூறிய நடை எல்லாமே
  நன்றாக இருந்தது என்று ஒரு தடவை கூறினால் போதாது.
  இந்தக் கதை /நாவலை என்னால் உடன் வாங்கிப் படிக்க இயலாது எனினும் கடந்த இரு வாரங்களில் இந்த நாவலின் விமர்சனங்களை ஒரு பதினைந்து இருக்கும் படித்து விட்டேன்.
  அவை யாவையும் விட உங்களது பதிவு ஜெயமோகனை இன்னமும் ஒரு படி முன் சென்று புரிந்து கொள்ள உதவியது என்று சொன்னால் மிகை ஆகாது.
  பார்க்கப்போனால்,
  "காடு" பற்றிய விமர்சனம் எனது வலை நண்பர் இரு வாரங்களுக்கு முன்பு தன தலத்திலே இட்டு இருக்கிறார்.
  www.vanavilmanithan.blogspot.com


  உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஜெயமோகன் அபிமானி ரசிகர் அவர் போலவே எழுத்து வல்லமை கொண்ட ஒருவர் எவ்வாறு இதே காட்டுக்குள் பிரவேசித்து தனது உணர்வுகளைப் பாருங்கள்.

  நான் அவரிடம் போட்ட வாட்சண்டை , இல்லை இல்லை, வாய்ச் சண்டை யும்
  பாருங்கள்.

  மறுமுறை என்று சொன்னாலும்,
  உங்களது விமர்சன ஆற்றல் என்னை பெரிதும் கவர்கிறது.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்ல. உங்கள மாதிரியான ஜீனியஸ் எல்லாம் எப்படி என்னோட எழுத்த பாராட்டுறீங்கன்னு. படிச்சுட்டு ஒரு கணம் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

   நிஜமாவே எனக்கு வாசிப்பு அனுபவம் துளியும் கிடையாது. இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன். நீங்க அங்க சொன்ன மாதிரி // ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.//// இது தான் என் நிலையும்....

   மறுபடியும் சொல்றேன், உங்க கிட்ட இருந்து என் எழுத்துக்கு கிடச்ச இந்த பாராட்டு தான் மேலும் என்னை எழுத தூண்டும்.

   ரொம்ப ரொம்ப நன்றி தாத்தா

   Delete
  2. விமரிசனமே இத்தனை அருமையாக இருக்கிறதே. சுப்புத் தாத்தா சுட்டி கொடுத்ததன் மூலம் வந்தேன். காடு நாவல் நானும் இன்னும் படித்ததில்லை. கிடைக்கும்போது தான் படிக்க முடியும். எனினும் அது குறித்த விமரிசனங்கள் படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறது. உளவியல் ரீதியாக ஆராய்ந்து நீங்கள் சொல்லி இருப்பவை பிரமிக்க வைக்கிறது என்றால் அது மிகை அல்ல. யதார்த்தத்தோடு ஒன்றிப் போய் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று சொல்லி இருப்பதால் இன்னும் எதிர்பார்க்கிறேன். அருமை!

   Delete
  3. உங்க அன்புக்கு நன்றி. இயற்கைய ரொம்ப காதலிக்குறவ நான். unfortunately இயற்கையோடு வாழ முடியாத சூழ்நிலை. அதனால தான் நான் நேசிக்குற அந்த இயற்கைய எப்போ எல்லாம் நேர்ல பாக்குறேனோ அப்ப எல்லாம் நான் அதோட ஒன்றி போய்டுறேன். இங்க நான் எழுதி இருக்குறது நுனி புல் மேய்ந்த மாதிரி தான். வாய்ப்பு வர்றப்ப இன்னும் விரிவா சொல்லணும்.

   Delete
 2. நீங்கள் எழுதிய விதம் அந்த நாவலை படிக்க தூண்டுகிறது.

  ReplyDelete
 3. அருமையான அறிமுகம்

  ReplyDelete