Friday 25 April 2014

குளத்துக்கு போவோமா?


ஒரு குளம். அதுல தாமரை பூத்திருக்கு.

கொஞ்சம் சூம் போங்க....

அட, அங்க பாத்தீங்களா? தாமரை இலை மேல ஒரு மீன் படுத்து ரெஸ்ட் எடுக்குது. இன்னும் இன்னும் நல்லா தேடி பாருங்க, வேற வேற இலைகள்ல மீன்கள் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கலாம்...

அப்படியே கொஞ்சம் லெப்ட்ல திரும்புங்க. அந்தா குட்டியா, சின்னதா, கருப்பா இருக்குல, அது தான் நீர் கோழி... சூ சூ.... எப்படி...... படக்குன்னு தண்ணிக்குள்ள குதிச்சி முங்கிடுச்சு பாத்தீங்களா?

அப்புறம், அந்த கரைல நின்னு மீன் பிடிக்க ஒத்த கால்ல நின்னுட்டு இருக்கு பாருங்க கொக்கு... அது கழுத்தும் வாயும் மட்டும் ஏன் கருப்பு கலர்ல இருக்கு? இதுக்கு பேர் என்னன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க... பாருங்க, பாருங்க... ஒரே பாய்ச்சல், லபக்... ஒரு மீன் காலி...

ஸ்ஸ்ஸ்.... அப்படியே கொஞ்சம் back வந்து படியில ஏறிக்கோங்க. தண்ணி பாம்பு ஒண்ணு நீந்தி வருது. அது பாட்டுக்கு போகட்டும்...

அப்புறம், அந்த வாத்து கூட்டங்கள பாத்தீங்களா? எவ்வளவு ஜாலியா நீந்திட்டு போகுது. போச்... போச்.... அதுங்க போடுற சத்தத்துல மீன குறி வச்சிட்டு இருந்த மீன் கொத்தி பறந்து போயிடுச்சு. அந்தா, இடது பக்கமா பறந்து, அந்த கல்லு மேல உக்காருது பாருங்க... மயில் நிறத்துல, மீன் கொத்தி அழகா இருக்குல...

ஹே... கொஞ்சம் நல்லா கூர்ந்து பாருங்க, இதென்ன பறவை. குட்டியா கருப்பா, குச்சி காலு வச்சிகிட்டு, பாக்க சின்ன வயசு கோழி மாதிரி... எவ்வளவு வேகமா தாமரை இலை மேல நடந்து போகுது பாருங்க... அழகு அழகு... அது பேரு பிரவுன் க்ரேக்... தமிழ்ல பேர் தெரியல...

அப்படியே கொஞ்சம் குளக்கரை பக்கமாவும் திரும்புவோம் பாஸ்... அட, எவ்வளவு புற்கள்ல அழகழகா பூக்கள் பூத்திருக்கு பாத்தீங்களா?

நல்லா பாருங்க, அதுல ஒரு வெள்ளை கலர் பட்டாம்பூச்சி வந்து உக்காருதா? அது தான் உங்களுக்கு இன்னிக்கி குட் மார்னிங் சொல்லப் போகுது...

பட பட பட்டாம்பூச்சி குட் மார்னிங்....

Wednesday 23 April 2014

இயற்கை விவசாயம்


சில விசயங்கள் நிஜமா நடந்துட்டு இருந்தாலும் அத  நாம கற்பனைல தான் பாக்க முடியும். அப்படியான ஒரு இடத்துக்கு தான் நான் இப்போ உங்கள கூட்டிட்டு போகப் போறேன்...

இது ஒரு விவசாய பூமி. பாத்தீங்களா, வயல்ல உளுந்து போட்ருக்காங்க. இந்த பக்கம் பாருங்க, தென்னந்தோப்பு. அந்தபக்கம் தக்காளி தோட்டம். பக்கத்துலயே பம்புசெட்டு. அட, இத எல்லாம் நம்மளால பாக்க முடியாதாக்கும்ன்னு அலுத்துக்காதீங்க. நான் கூட்டிட்டு போக போறேன்னு சொன்ன உலகம் இது இல்ல..

அதோ பக்கத்துலயே இலை தழைகள எல்லாம் கொட்டி மட்க வச்சிருக்காங்க பாத்தீங்களா, அங்க வாங்க, உள்ள கொஞ்சம் இறங்கி பாப்போம். இது மண்புழுக்கள் வாழுற இடம். நமக்கெல்லாம் பாக்க அருவருப்பா இருக்குல, ஆனா, இது நமக்கு எவ்வளவு நல்லது பண்ணிக்கிட்டு இருக்கு தெரியுமா?

நாம கழிவுன்னு தூக்கிப் போடுறதா எல்லாம் சாப்ட்டு, அத சத்தான பொருளா மாத்தி நம்ம மண்ணுக்கே அத திருப்பி தருது. மண்ணுக்குள்ள அங்கயும் இங்கயுமா இது ஊர்ந்துகிட்டே இருக்குல, இதனால நம்ம மண்ணு ரொம்ப மிருதுவா மாறிடுது. மண்ணுக்கு காற்றோட்டமும் கிடைக்குது.

இதுக்கு வாய் எங்க இருக்கு, வால் எங்க இருக்குன்னு கூட ஈசியா கண்டுபுடிக்க முடியாது. மண்ண அப்படியே முழுங்கி, அதுல இருக்குறத எல்லாம் ஜீரணிச்சு அப்படியே உரமா மாத்திடுது. இந்த உரத்த நாம அதோ அந்த வயலுக்கும் தோப்புக்கும் போட்டா விளைச்சல் அமோகமா இருக்கும். மண்ணும் கெட்டு போகாம இருக்கும்.

சரி, அப்படியே ஊர்ந்துகிட்டே அந்த உளுந்துச்செடி பக்கமா போவோம். அட அட அட, என்னமா காய்ச்சிருக்கு பாத்தீங்களா? இங்க கூட நாம கொஞ்சம் மண்ணுக்குள்ள முங்கி பாப்போமா?

அடடே, பாருங்க, உளுந்து செடியோட வேர்ல முடிச்சு முடிச்சா வீங்கியிருக்கு. ஏன் ஏன் பதறுறீங்க, உளுந்து செடிக்கு நோய் வந்துடுச்சுனா? ஹஹா அது வீங்கலீங்க, அது இன்னொரு இயற்கை அதிசயம். ஆமா, இங்க கடலை செடி கூட கூட்டு குடும்பமா இன்னொரு உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கு. அது ஒரு பாக்டீரியா. அது பேரு ரைசோபியம்.

இந்த ரைசொபியம் என்ன பண்ணுதுனா, காற்றுல அதிகமா இருக்குறத நைட்ரஜன புடிச்சி கொண்டு வந்து செடிகள் எல்லாம் பயன்படுத்துற மாதிரி மண்ணுல தக்க வச்சிடுது. இதனால மண்ணு ஈசியா வளம் அடஞ்சிடுது. இதனால தான் விவசாயிங்க, நெல் பயிரிட்ட பிறகு, அதே நிலத்துல உளுந்து போடுறாங்க. மண்ணுல நைட்ட்ரஜன் சத்து எக்கசக்கமா கிடைக்கும். எதுக்குங்க நமக்கு இந்த யூரியா எல்லாம்? நிலத்துல சூட்டை கிளப்பி விட்டு, மண்ணை மலடாக்கிடும்.

ரைசோபியம் மட்டுமில்லீங்க, கோடி கணக்குல நம்ம கண்ணுக்கு தெரியாத உயிர்கள் நம்ம நிலத்தை உயிர் சத்தோட வச்சிக்க போராடிட்டு இருக்கு. என்னது போராடிட்டு இருக்கான்னு ஏன் ஷாக் ஆகுறீங்க? அதுங்க எல்லாம் என்னவோ அதுங்களோட வேலைய சரியா பாக்கணும்னு தான் நினைக்குதுங்க, ஆனா நாம என்ன பண்றோம்?

அதிகமா பேராசைப்பட்டு விளைச்சல் அதிகமா கிடைக்கணும்ங்குற நினைப்புல செயற்கை உரத்தை அள்ளி தெளிச்சிடுறோம். இதனால இயற்கையா நம்ம கூட இணைஞ்சு வாழ்ந்துட்டு இருக்குற இந்த இனங்கள் அத தாங்க முடியாம அழிஞ்சு போயிடுது. எப்பவுமே இவங்களோட அருகாமைல சந்தோசமா செழிப்பா இருந்துட்டு இருந்த பூமி, கலையிழந்து வறண்டு போயிடுது.

உயிரை விட்டுட்டு வெத்து பூமிய வச்சுட்டு சாப்பாட்டுக்கு என்னங்க பண்ண முடியும்? கொஞ்சம் கொஞ்சமா மண்ணோட வளத்த அழிச்ச இந்த ரசாயன உரங்கள், அப்படியே நாம சாப்டுற சாப்பாடு மூலமா நமக்குள்ளயும் ஆக்கிரமிக்க தொடங்கியாச்சு. நம்ம உடம்புல வந்து தாங்கிகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நம்மோட உடல் செயல்பாட்டுக்கள முடக்க ஆரம்பிச்சாச்சு.

இனியாவது கொஞ்சம் முளிச்சுக்கணும். இயற்கை உயிர்கள நாம செயற்கையா ஏதாவது பண்ணி அழிக்காம விட்டாலே போதும்... கொஞ்சம் நஞ்சம் எங்கயோ உயிரோட இருக்குற இந்த பூமி, தன்னோட சந்தோஷ கிளைகள படர விட்டுக்கும்....

Wednesday 16 April 2014

மின்னுவதெல்லாம் பொன்னல்ல...வாங்க நாம இப்போ வித்யாசமான ஒரு மலைக்கு போகலாம்...

மலை ஏறப்போறோம். அதனால நல்ல தரமான சூ போட்டுக்கோங்க... கைல வேணா ஒரு குச்சி எடுத்துக்கோங்க... ஹலோ, குச்சி எடுத்துக்க சொன்னது அடுத்தவங்கள அடிச்சி விளையாட இல்ல, மலை மேல ஏறும் போது ஒரு புடியோட மலை மேல ஏறலாம், அதுமட்டுமில்ல, கால் வலிச்சா கொஞ்சம் கம்ப தரைல ஊனி அது பிடில காலுக்கு ஓய்வு குடுக்கலாம்...

சரி, இந்த மலைய பாத்தீங்களா? பெரிய பெரிய மரங்கள்ன்னு எதுவும் இல்லல... குட்டி குட்டியா புதர்கள், சின்ன புல்லு, பாறைங்கன்னு இருக்குல... ஷ்.... அங்க என்னமோ நீண்டு நெடிய அசையாம கிடக்கு பாருங்க...

அம்மே... அது மலை பாம்பு... வாங்க, மெதுவா கிட்டப் போய் பாப்போம். எப்பா.... எவ்ளோ பெரிய பாம்பு பாத்தீங்களா? பெருசா எதையோ இப்ப தான் பிடிச்சி விழுங்கியிருக்கு. இனி அது ஜீரணிக்குற வர அசையாது... யோவ், யாருயா அது, அசையாதுன்னு சொன்னதும் குச்சிய விட்டு அத சீண்டி பாக்குறது? பேசாம வர மாட்டீங்களா?

என்ன? ஏன் கூப்ட்டீங்க? என்னது, மலைல தங்கம் இருக்கா? தகதகன்னு மின்னுதா? அதுவும் கருப்பு கலருல? இருங்க இருங்க வரேன்...

ஓ.... தங்கம். பளபளன்னு மின்னுதுல... இப்போ என்ன பண்ண போறீங்க?

என்னது? மலை முழுக்க தேடி, கிடைக்குற தங்கத்த சுருட்ட போறீங்களா? அடிஈஈஈ....

இது தங்கம் இல்லீங்க... இதுக்கு பேரு தான் காக்கா பொன். கருப்பு கலர்ல பொன் மாதிரி மின்னுதுல, அதான் இதுக்கு அப்படி ஒரு பேரு. பெரியவங்க கிட்ட கேட்டா சொல்லுவாங்க, இந்த காக்கா பொன்ன கைல வச்சி உரசினா, சும்மா ஜிகினா பூசின மாதிரி பளபளன்னு மின்னும்... நாமெல்லாம் இத பாக்க இப்போ தான் முடியுது....

கால் வலிக்குதுல.... அப்படியே வாங்க, உக்காருவோம். இந்த காக்கா பொன் இருக்கே, இதெல்லாம் மலை பிரதேசங்கள்ல பாறையா கூட இருந்துருக்கு. ஆனா இப்போ இத பாக்குறதே அபூர்வம். இப்போ அது இல்ல, விஷயம்... நான் ஒரு தத்துவம் சொல்லப் போறேன்...

என்னது, தத்துவமான்னு அலறி அடிச்சி, எழும்பி ஒடுனீங்க, அப்புறம், கொண்டு வந்த குச்சி வச்சி அடிச்சிருவேன்... அப்படியே அமைதியா உக்காருங்க...

நாம வாழ்க்கைல நிறைய பேர சந்திப்போம்ங்க... நம்மோட பாதைல வர்ற எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சிட கூடாது. அலங்கார வார்த்தைகளோட நம்மள நெருங்குரவங்க தான் அதிகம்... இந்த அவசர உலகத்துல எல்லாத்தையும் ரெடிமேடா வாங்கி வாங்கியே பழகி, அன்பையும் ரெடிமேடா குடுக்க ஆரம்பிச்சுடறாங்க சில பேரு... ஆனா அதுல அன்பு இருக்குமான்னு பாத்தா நிச்சயமா இருக்காது... ஒண்ணுமே இல்லீங்க, ஒருத்தங்கள பாத்தா, நல்லா இருக்கியான்னு கேட்டா அது யதார்த்தம், அத விட்டுட்டு, நீ இங்கு நலம், நான் அங்கு நலமான்னு கேட்டா? இல்ல, தெரியாம தான் கேக்குறேன், அவங்கள நம்ம கிட்ட அடகு வச்சிட்டு அவங்க என்ன பண்ண போறாங்க? இல்ல நம்மள அவங்க எடுத்துக்க நாம எப்படி அனுமதிக்க முடியும்?

ஆத்மார்ந்தமான நட்புக்கள்ன்னு ஒருதலைபட்சமா யாரும் சொல்லிட்டு இருக்க கூடாது. அது ரெண்டு பேர் சம்மந்தப்பட்டது...

ரொம்ப குழப்புறேனோ? 

இப்போ இந்த பேஸ்புக்கையே எடுத்துக்கோங்க.. 

நம்மோட பிரெண்ட்ஸ், நமக்கு அறிமுகம் ஆனவங்க, எதோ ஒரு வகைல நம்மள ஈர்த்தவங்கன்னு அவங்கள பாத்து ஒரு குட் மார்னிங் சொல்லி, அவங்களும் நம்மள பாத்து சின்னதா ஒரு குட் மார்னிங் சொன்னா அதுல வர்ற சந்தோசம் வேற....

ஆனா இங்க போலியான புன்னகைகள் மலிஞ்சு கிடக்கு. போலி புன்னகைன்னு கூட இல்ல, ரெடிமேட் ரப்பர் ஸ்டாம்புகள்...

ஏதாவது ஒரு மாய்மால வார்த்தைய எங்க இருந்தாவது எடுக்க வேண்டியது, யாரு எவருன்னு கூட பாக்காம, என்ன விஷயம் சொல்லியிருக்காங்கன்னு கூட தெரியாம அவங்க போஸ்ட்ல போய் அத ஒட்ட வேண்டியது...

நட்புனா அர்த்தமே தெரியாம, இங்க யார பாத்தாலும் பிரெண்ட்ன்னு சொல்றது. யாருனே தெரியாதவங்க போஸ்ட்ல கூட போய் நட்பே உயிரேன்னு உருக வேண்டியது. அட, அத சொந்தமா உருகினா கூட பரவால... எங்க இருந்தாவது காப்பி பண்ணி ஒட்ட வேண்டியது... இவங்க எல்லாம் பிரெண்ட்ஷிப்போட உண்மையான வேல்யூ தெரிஞ்சா ஏன் இப்படி எல்லாம் பண்ண போறாங்க.....

மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க பெரியவங்க....

சரி, சரி, வாங்க கீழ இறங்கலாம்... வீட்டுக்கு போய் காபி சாப்பிடணும்ல... பொறுங்க, அதுக்குள்ள என்ன அவசரம், குட் மார்னிங் சொல்லணும்ல...

குட் மார்னிங்....

Wednesday 9 April 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்


ஒரு வீடு...

பிள்ளைங்க ஓடி விளையாட முற்றம், பெரியவங்க கதை பேச திண்ணை, குளிர்ச்சிக்கு ஓட்டு கூரைன்னு அழகா இருக்கு. புதுசா வெள்ளை அடிச்சிருப்பாங்க போல, பளிச்சுன்னு இருக்கு.

அப்படியே வாங்க, அந்த திண்ணைல உக்காந்து நாமளும் கொஞ்சம் சுத்தும்முத்தும் வேடிக்க பாப்போம்.

இங்க பாருங்க, ஒரு பட்டாம்பூச்சி வெள்ளை வெளேர்ன்னு பறந்து போகுது பாத்தீங்களா? அட, அதுபாட்டுக்கு போய் ஒரு சிகப்பு செம்பருத்தியில உக்காந்துடுச்சு. செம்பருத்தி பூ இதழ் விரிச்சு அழகா இருக்குல... பச்சை காம்பு, சிகப்பு இதழ், மஞ்சள் மகரந்தம்... நம்ம பட்டாம்பூச்சி மஞ்சள் மகரந்தத்துல தான் போய் உக்காருது.

என்ன இது, திடீர்னு கீச் கீச்ன்னு கிளிங்க சத்தம் கேக்குதே....
அப்படியே வலது பக்கமா திரும்பி, அண்ணாந்து வானத்த பாருங்க...

ஹப்பா.... எத்தனை கிளிங்க.... என்னா கூட்டம். ஆமா, இதுங்களுக்குள்ள சண்டையே வராதா?

ஹே.... அங்க பாருங்க, எல்லா கிளிங்களும் அந்த நாட்டு கொய்யா மரத்து மேல போய் உக்காந்தாச்சு. ஹஹா... கிளி உதடு சிகப்பா, அது கொத்தி சாப்டுற பச்சை கலர் கொய்யா பழத்தோட உள்பகுதியும் சிகப்பு... விட்டா எல்லா பழங்களையும் கிளிங்களே சாப்ட்ரும். நமக்கும் பழம் வேணும் தானே... வாங்க, போய் ஆளுக்கு ஓரே ஒரு பழம், அதுவும் கிளி கடிச்ச பழமா பறிச்சி சாப்பிடுவோம்....

சரி, பழத்த சாப்ட்டுட்டே நாம சில மனுசங்க குணங்கள தெரிஞ்சுப்போமா?


மனுசன்கள்ல சில வகை உண்டு. எப்பவும் தன் மேல ஒரு கழிவிரக்கம் இருந்து கிட்டே இருக்கும் அவங்களுக்கு.

நாம மட்டும் தான் ரொம்ப கஷ்ட்டப்படுறோம், நமக்கு மட்டும் தான் இந்த உலகம் துரோகம் பண்ணுதுன்னு எப்பவும் மனசுக்குள்ள புலம்பிட்டே இருப்பாங்க.

சின்னதா ஒரு வெற்றி அவங்க வாழ்க்கைல கிடைச்சாலும், ஹைய்யோ இந்த வெற்றிக்காக நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன், இவ்வளவு கஷ்டப்பட்டேன்ன்னு அப்பவும் தன்னோட கஷ்டங்கள முன் நிறுத்துவதுலயே குறியா இருப்பாங்க...

இவங்களோட கேரக்டர் எப்படி பட்டதுனா, எப்படியாவது மத்தவங்களோட ஈர்ப்ப தன் மேல திருப்பணும். அதுக்கு தன்னோட வாழ்க்கை சோக மயமானதுன்னு ஒரு மாயைய தன்ன சுற்றி வச்சுக்குறாங்க... தனக்கு எல்லாம் தெரியும்ங்குற மமதை வேற அவங்க மனசுக்குள்ள இருக்கும். ஆனா அத வெளிக்காட்டிக்க கூடாதுன்னு அவங்களே நினச்சாலும், புலம்பி புலம்பியே தன்னோட ஒரிஜினல் முகத்த காட்டிடுவாங்க....

எப்பவும் அடுத்தவங்க சோகத்த பாத்து தனக்கும் தாங்க முடியலன்னு புலம்பிட்டே இருப்பாங்க. கூர்ந்து பாத்தா, இதுவும் கூட அடுத்தவங்க பார்வைய தன்மேல திருப்பிக்க முயற்சிக்குற ஒரு டெக்னிக் தான்...

இப்படியானவங்க ரொம்ப சுயநலவாதிகள் கூட... தன்னோட தேவைகள நிறைவேத்த மட்டுமே அடுத்தவங்கள இவங்க பயன்படுத்திப்பாங்க...

சோகங்களை புலம்பிட்டே இருப்பவங்க கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும்.... 

பீ கேர்புல்.... நான் நாம எல்லாரையும் தான் சொன்னேன்.... 

Friday 4 April 2014

லவ் யூ அப்பா...


புதுசா ஒரு அறிமுகம் கிடச்சா ரொம்ப நாளா நம்ம கூடவே இருக்குறவங்கள கொஞ்சம் தள்ளி வச்சி வேடிக்கை பாக்குறது மனுஷ குணம்... ஆனா அது ரொம்ப நாள் நீடிக்க போறதில்லன்னு தெரிஞ்சும் அந்த புது அறிமுகத்து மேலயே அத்தனை ஆர்வமும் போயிடுது...

அட, பிரெண்ட்ஷிப் தான் இப்படின்னா, கல்யாணம் பண்ணிட்டு வாழுறவங்க நிலைமை அவ்வளவு தான்... புரிதலே இல்லாம எத்தனையோ பேர் வாழ்க்கைய வாழத்தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க...

வீட்டுக்கு வர்றவங்க, நாம ரோட்ல நடந்து போறப்ப எதிர்ல வர்றவங்க, பிரெண்ட்ஸ் இப்படி எல்லாருமே நம்மால கொஞ்சம் கூட முகம் சுளிச்சுட கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டு அவங்கள தூக்கி கொண்டாடுற ஆண்கள், இவ நம்ம பொண்டாட்டி தானேங்குற நினைப்புல தன் கூடவே இருக்குற, தனக்காகவே வாழுற ஜீவன கொஞ்சமும் சட்டை செய்றதேயில்ல....

எப்போ வருவீங்கன்னு கேட்டா, இந்தா வந்துட்டே இருக்கேன்னு நாலு மணி நேரமா ஒரே டயலாக் பேசுறது, எங்கயாவது கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு பிரெண்ட் இல்ல வேற யாரோ கூப்டதும் அவங்க கூட போறது, மனைவிய கிண்டல் பண்ற சொந்தக்காரங்களோ இல்ல பிரெண்ட்ஸ் கிட்டயோ இவ எப்பவுமே இப்படி தான்னு விட்டு குடுத்துடுறது....

தனக்கோ, தன்னை சார்ந்தவங்களுக்கோ சின்ன சின்னதா உடம்பு சரியில்லாம போறப்போ, மனைவி தன்னை நல்லா கவனிச்சுக்கணும்ன்னு நினைக்குற அவங்க, மனைவிக்கு அந்த நிலைமை வர்றபோ நாம கவனிச்சுக்கணும்ங்குறத ஏனோ மறந்துடுறாங்க...  (பெரிய வியாதிகள காசு பணம்ன்னு செலவழிச்சு கவனிக்குறாங்க... இல்லனா வீட்ட கவனிக்க ஆள் இருக்காதே).

ஒரு சின்ன பாராட்டு, அன்போட ஒரு அணைப்பு, இதுக்கு தானே பொண்ணுங்க மனசு ஏங்கி கிடக்கும்... அதை சரியா குடுக்காதப்போ தான் ஏங்குற மனச நிலைபடுத்த, அடுத்த பொருட்கள் மேல ஆசைப்பட ஆரம்பிக்குது மனசு... அது இன்னொரு ஆண் மேல வந்தா தப்பா போயிடும்ங்குற உள்ளுணர்வு, நகை, புடவை மேல ஆசைப்பட்டு, அதனால தன்னோட அழகையாவது அடுத்தவங்க ஆராதிக்கணும்ன்னு எதிர்ப்பார்க்க ஆரம்பிக்குது... எங்கயோ எதையோ எதிர்பார்த்து கிடைக்காத ஏக்கத்தோட வாழுற பொண்ணுங்க இங்க கோடி கோடி பேர்....

இப்போ இதுல நான் சொன்னதுல முதல் பாரா மட்டும் என்னோடது.... அடுத்தடுத்து வந்த டயலாக்ஸ் என் அப்பா வீட்டுக்கு வந்த ஒருத்தர் கிட்ட பேசிட்டு இருந்தப்போ எதேச்சையா கேட்டது...

இத்தன அறிவுரை சொல்ற என் அப்பா எப்படி இருந்தார்?

ஆரம்பத்துல பாட்டி பேச்சை கேட்டுட்டு அவரும் சராசரியா தான் இருந்தார்.... கோபத்துல சாப்பாடு தட்ட கூட விசிறியடிச்சிருக்கார். ஆனா எல்லாமே எங்களுக்கு விவரம் தெரியுற வரை தான்... எப்போ நானும் தம்பியும் அப்பாவ பாத்து சாப்பாடு தட்ட அம்மா மூஞ்சியிலயே விசிறியடிக்க ஆரம்பிச்சோமோ அப்போயிருந்து அம்மாவோட காதல் வாழ்க்கை ஆரம்பிச்சுது...  அப்படி தான் சொல்லணும்னு நான் நினைக்குறேன். காரணம், அப்பாவும் அம்மாவும் விரும்பி கல்யாணம் பண்ணியிருந்தாலும் அப்பா மேலே சொன்ன அலட்சியங்கள் அத்தனையும் செய்துட்டு தான் இருந்தார்...

அப்புறம் ஒரு தலைகீழ் மாற்றம். அப்பா அம்மாவ குறை சொல்லி பாத்த நாங்களும் அம்மாவ எதுக்கெடுத்தாலும் குறை சொல்ல ஆரம்பிக்க, அம்மாவுக்கு ஆதரவா அம்மாவ அணைச்சுப்பார் அப்பா.... இவ என் பொண்டாட்டி... அப்புறம் தான் உங்க அம்மா... என் பொண்டாட்டி பத்தி யார் குறை சொன்னாலும் எனக்கு பிடிக்காதுன்னு இறுக்க முகம் காட்டுவார்...

அம்மா பக்கத்துல வந்து நின்னாலே பாட்டிக்கு பயந்து ஒதுங்கி போற அப்பா, அம்மா தோள் மேல கை போட்டு சரிக்கு சமமா சோபால உக்காந்து டீ.வி பாக்க ஆரம்பிச்சார். ரெண்டு பேர் மடியிலயும் ஆளுக்கொரு பிள்ளை.... நான் எப்பவுமே அப்பா மடியில தான்... அப்பா நான் பிறந்ததுல இருந்தே எனக்கான ஹீரோ....

அப்பா தோளை கட்டி கொஞ்சி அம்மாவ வெறுப்பெத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும்.... என் புருசண்டி அவர், கீழ இறங்கி ஓடுன்னு பக்கத்துல கிடக்குற ஏதாவது துணி எடுத்து அடிச்சி விரட்டுவா அம்மா...

அப்பாவ பாத்தே அம்மாவ வா போன்னு சொல்லி பழகியிருந்தோம்... காலப்போக்குல தம்பி வாங்க போங்கன்னு பேசி பழகிட்டான்... எனக்கு தான் அவ எப்பவுமே அம்மாவா இல்லாம ஒரு டாம் அண்ட் ஜெர்ரி பிரெண்டா மாறிப் போயிட்டா...

அதெல்லாம் தனிக்கதை... இப்போ விசயத்துக்கு வருவோம்...

கூட்டமா நாங்க சேர்ந்து விளையாடிட்டு இருப்போம். பாய்ஸ் கேர்ள்ஸ்ன்னு டீம் பிரிப்போம். அப்பா பாய்ஸ் டீம், அம்மா கேர்ள்ஸ் டீம்னு பிரிச்சா அப்பா ஒத்துக்கவே மாட்டார். நான் அவளுக்கானவன். அவ எனக்கானவ. எங்கள பிரிக்க நினைக்குறது தப்புன்னு எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்... அட போங்கப்பான்னு தலைல அடிச்சுட்டே விளையாட ஓடிடுவோம்...

பல நாட்களும் பாத்து பாத்து மனசுல ஊறிப் போன இன்னொரு விஷயம் உண்டு. ஆமா, அம்மா அழுது துடிச்சுட்டு இருப்பாங்க... இல்லல, கதறிட்டு இருப்பாங்க. அப்பா அம்மாவ அணைச்சுட்டு இருப்பார். அம்மாவ விட்டு எங்கயுமே போகாம ஊட்டி விட்டுட்டு இருப்பார். இது ஏன் எதுக்குன்னு பல நாள் எனக்கு புரியவே புரியாது. அப்புறம் தான் தெரிஞ்சுது, அம்மாவோட மாதாந்திர வலிகள் அவள படுத்தி எடுக்குறப்ப எல்லாம் அவ கூடவே சேர்ந்து கண்ணீர் விட்ருக்கார் அவர்...

அந்த அணைப்பும் ஆதரவும் புரிய புரிய எனக்கு அவங்க மேல வந்த காதல்... அத வார்த்தைல சொல்ல முடியாது...

அம்மா போனப்போ அப்பா எப்படி அத தாங்கிகிட்டாங்க?
எப்படி ஒரு இறுக்க முகத்த மறைச்சுகிட்டு வலம் வர்றாங்க?
அந்த சூழ்நிலையிலயும் அம்மாவோட ஆசைய (கண் தானம்) நிறைவேற்ற எங்க இருந்து அவருக்கு துணிச்சல் வந்துச்சு?

அப்பாவால கூட பதில சொல்ல முடியாதுன்னு நினைக்குறேன்....

லவ் யூ அப்பா....


Wednesday 2 April 2014

கரைந்து சென்றவனுக்காய்...


என்றோ ஓர்நாள்
ஓர் ரம்மிய வேளையில்
சுழன்றடித்து பின் காணாமல் போன
உன் நினைவுகள் இன்று அகழ்ந்தெழுகிறது...

ஆற்றுப்படுகையின் ஓரமாய்
படிந்திருக்கும் சுவடுகளாய்
உச்சி வெயில் நேரத்தில்
பளிச்சென வெட்டிச் செல்லும்
மின்னலைப் போலத்தான் நீ...

பார்த்த உடன்
கலைத்து விடச்சொல்லும் உன் கேசம்...
பரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...
உறைந்து விட்ட புன்னகை...
நீ விரிக்கும் கைகளில்
அடைக்கலமாகத் துடிக்கும் நான்...

உன் ஸ்பரிசங்களின் உஸ்ணங்கள்
எப்பொழுதும் என்னை
கிளர்ந்தெழ செய்ததில்லை...
மாறாய்... மடியிலிட்டு தாலாட்டும்...

நம் காதல் எழுதிவைக்க
இந்த பிரபஞ்சம் போதாதென்று
உன் தோள் கட்டிக் கிடந்தேன்...
உன் முதுகு எப்பொழுதும்
என்னை ஏகாந்தமாய் சுமந்துக் கிடந்தது...

ஏனோ ஓர்நாள் விரல் நுனி பிடித்து...
உச்சிமோர்ந்து... காதோரமாய்
கிசுகிசுத்து... என் நலமென சொல்லி
நீயாய் முடிவெடுத்தாய்...
பொருள் தேடி வருகிறேனென்று
பின் காற்றிலசைத்து சென்றாய்...

நாட்கள் காத்திருப்பதில்லை...
நீ விதைத்தது துளிர்த்து விட்டிருக்கிறது...
நீ மட்டும் ஏனோ காணாமலே போனாய்...

ஹ்ம்ம்... சிரித்துக் கொள்கிறேன்...
அதில் உயிர்சுரத்து இருக்கிறதாவென
நீயே கணித்துக் கொள்...
நான்... இந்த உலகத்தின்
பரபரப்பில்... என்னை
கரைத்துக் கொள்ளப் போகிறேன்..