Sunday 3 March 2013

வேண்டும் ஒரு உயிர்சாசனம்...!

நானும் யோசித்து கொண்டுதான் இருக்கிறேன்…
விரக்தியும் சோர்வுமில்லாத ஒரு கவிதையை
எழுதி விட வேண்டுமென்று...!

எழுதி விடலாம் தான்...

மூச்சடக்கி தத்தளிக்க வைக்கும்
உணர்வலைகளுக்கு மத்தியில்
பற்றிக்கொள்ள கிடைத்த சிறு மரத்துண்டாய்
நீ என்னோடு தனித்திருந்தால்...!

இத்தனை நாள் காதலில்
எத்தனை நாள் உன்
அருகாமையை வேண்டி நின்றேன் என்று
உண்மையாய் நீ என்னை புரிந்து கொண்டிருந்தால்...!

உன்னை மறந்து என்னோடு
லயித்துக்கிடந்த நாட்களெல்லாம்
மீண்டுமொருமுறை என்றில்லாமல்
ஆயுளுக்கும் தொடருமென உயிர்சாசனம்
எழுதி விட்டு இறுதிவரை காத்திருந்தாயென்றால்...!

எத்தருணங்களிலும் எனக்கான சந்தோசங்களை
நான் இழந்து விடுவதில்லை...
ஆனாலும் உன்னை மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று
எப்படி புரிய வைப்பேன் உன்னிடம்?

உன் சுகம் மட்டுமே பெரிதாய் தெரிகிறதே,
என் நிலை யோசித்தாயா என்று...
சடுதியும் சிந்திக்காமல் கேட்டாயே ஒரு கேள்வி...
இதையே நானும் திருப்பி கேட்டால்?

எங்கிருந்து கற்றுக்கொண்டாய்? என்னிடத்தில்
பொய் சொல்லலாம் என்னும் வித்தையை?
மறந்து விட்டாயே... உன்னை விட
உன்னை அதிகமாய் அறிந்தவள் நான் தானென்று...!

அத்தனையும் அடக்கி விடத்தான் துடிக்கிறேன்...
அடக்கப்பட்ட நெஞ்சுக்குள் ஆக்சிஜன் புறம் தள்ளி
சிகப்பணுக்கள் கைப்பற்றி வெடித்துச் சிதறுகிறது,
அணுஅணுவாய் உன்மேல் நான் கொண்ட காதல்...!

அர்த்தங்களும் அனர்த்தங்களும் உள்ளிருப்பு செய்வது,
உமிழப்படுவதற்கு முன்பு வரை மட்டுமே தான்...
என்னை காணாது இத்தனை தவிக்கும் நீ...
நான் இல்லாது போனால் என்ன செய்வாய்
என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாய்...

உன்னுள் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை குன்றுகளோ
நெருப்பு லாவாக்களை அள்ளி வீசுகின்றன...
எனக்குள் தகித்திருக்கும் இயலாமை மேகங்களோ
கண்ணீர் துளிகளை பேய் மழையாய் பொழிகின்றன...!

தவித்திருக்கும் நேரத்தில் உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும் முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய் எனக்கொரு வரம் கொடு...
என் உயிரோடு உறவாடி கவிதையாக பயணிக்கிறேன்...!

நிஜங்களின் கனவு...!

புதைக்குழி ஒன்று என்னை ஈர்ப்பதாய் ஓர் உணர்வு....
சகதிக்குள் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறேன்...

சுவாசப்பாதையின் வழுக்குப்பாதைக்குள்
உட்புகுந்து ஊர்ந்து செல்கிறது
இடம்பெயர்ந்த மண்புழு ஓன்று....

நட்புக்கரம் நீட்டி பாசக்கயிறு வீசும்
எமன் பார்த்து புன்னகைக்கிறேன்
புது விடியல் காணும் மலர்ச்சியாய்....

கனவுதான் என்றாலும்
மூழ்கித்தான் போவேனோ,
இல்லை மூச்சடைத்து எழுவேனோ...

சிந்தையில் பாரதி சிரித்துவிட்டுப் போகிறான்...!

உறவாடும் உயிர்ப்பூ...!

என் நினைவு பொக்கிசத்திலே
இவள் என்றும் கவலை ஏதுமறியா
ஒரு மான் குட்டியாய் சுற்றித் திரிகிறாள்...!

ஒவ்வொரு நாளையும்
எண்ணிக்கையால் நிரப்பி
மரணம் எதிர்நோக்கி
பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்பவர் மத்தியில்
மரணத்தின் நிழலை கூட
அவள் அறிந்தவளில்லை...!

அவளின் அறிமுகம்
இதோ என் மனதில்
மயிலிறகால் பளிச்சென
வருடி விட்டு செல்கிறது...!

விரித்த கூந்தலிலே
ஒற்றை சாமந்தி சூடி
என் அறை வாசல் கடக்கையிலே…
ஏதோ நினைத்துக்கொண்டவளாய்
பூனை பாதம் வைத்து
அருகில் வந்து நின்றவள் அவள்...!

வலி மறக்கும் காரணிகளை
தேடி தேடி அலுத்துப்போன
மூளை செல்களுக்குள்
சில நொடிகளில் ஆக்சிஜனை
ஏராளமாய் நுழைக்கச் செய்தவள்...!

இப்படியே முடிந்து தான் போகுமோ
என் ஆயுள் என்று விரக்தியாய் நானிருக்க
என் வேதனைகளை மறக்கடிக்கும்
வாசமாய் இந்த செண்பகப்பூ
சிரித்துக்கொண்டிருக்கிறாள்...!

எங்கும் அமைதியாய், சோகமாய்
ஒரு ராணுவ கட்டுப்பாட்டுக்குள்
கட்டுண்ட கைதி போலே
களையிழந்த சிறைச்சாலைக்குள்
இவளின் சிரிப்பொலி
குயிலின் கீதத்தை நினைவிருத்தி
பசுங்சோலையை உயிர்ப்பித்துக் கொடுத்தது...!

எத்தனை வாய்ப்பிருந்தும்
பிடிவாதமாய் கற்க மறுத்த
கொஞ்சும் மொழியை
அவள் பிஞ்சு வாயால் கேட்க
அத்தனை ஆனந்தம் எனக்கு...!

தட்டுத்தடுமாறி அவள் பேசும்
லயத்தில் தமிழ் இன்னும் இன்னும்
அழகாய் மிளிர்கிறது...!

தலையசைத்து தாளத்தோடு சிரிக்கையிலே
நடனமாடும் அவள்
ஜிமிக்கிகளோடு இணைந்து
கண்களும் அபிநயம் பிடிக்கும்...!

நாளை வருகிறேன், தமிழ் படித்துக்கொடு என
கையசைத்து அவள் விடைபெற்ற போது
நாளைக்கான விடியலையும்
நம்பிக்கையோடு விதைத்துச் சென்றாள்
எனக்கும் சேர்த்து...!

இதோ இன்று அவள்...
தண்ணீர் உறிஞ்சிய
இலவம்பஞ்சாய் வீழ்ந்து கிடக்கிறாள்...!

அசைவற்று கிடக்கும் வலக்கையினிலே
உயிர்திரவம் உள்நுழைந்து கொண்டிருக்கிறது...!
இடபக்கத்து முக்காலியிலோ அவளை
காப்பாற்ற துடிக்கும் தந்தையின் மனம்
மருந்துகளாய் இறைந்து கிடக்கின்றன...!

இன்னமும் உயிர் மிச்சம் இருப்பதை
ஏறி இறங்கும் அவள் நெஞ்சுக்கூடு
உணர்த்திக்கொண்டிருக்கிறது...!
என்றும் மாறா புன்னகை மட்டும்
அவள் உதட்டில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்தது...!

அவள் உயிர் பிடிக்கும் கிரகமாய்
புற்றுநோய் உருவெடுத்து
வந்த எமன் கொஞ்சம் தயங்கியே
எட்ட நின்று வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறான்...!

தன்னம்பிக்கை விதைத்துச் சென்றவள்
இன்னமும் அதை விட்டு விடாமல்
ஒரு சுவாச போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள்...!

இறைவா இவளுக்கு
வலி இல்லா மரணம் கொடு என
முடிவு புலப்பட்டு விட்ட
ஏழாம் அறிவு வேண்டிக்கொண்டாலும்
எழுந்து வா எழுந்து வா என
ஆழ்மனம் அழைத்துக்கொண்டிருக்கிறது...!