Tuesday 24 April 2012

பதிலுரைப்பார் எங்கே???


சந்ததி வேண்டி
பிள்ளையாரை சுற்றிய நான்...
சந்ததி சொல்லியதால்
தெருக்கோடியில் இன்று...
முற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...!
முடிந்து போனதென
எதை வைத்து கணித்தார்கள்???

ஏக்கங்கள் நிறைந்த மனதுக்குள்
காரணங்கள் அறிய...
என் வெள்ளிவிழா வாழ்க்கைக்கு
பதிலுரைப்பார் எங்கே???
கொதித்து கொண்டிருந்த குருதியில்
குளிர் காய்ந்தவர்கள்...
இவர்கள் இன்று வற்றிய
மனித நேயத்தின் காரணகர்த்தாக்கள்...

பெருகும் மக்கட்தொகை நடுவே
மலையாய் பெருகும் தேவைகள்...
பெருகி வரும் எண்ணிக்கைகளில்
சொந்தங்கள் மட்டும் அருகுவதேனோ???

சுருங்கி கொண்டிருக்கும் என் தோல்
காட்டுவது என் வயதையல்ல...
நான் பெற்றவனின் மனதை...!
தேவைகளுக்கிடையில் நடந்த போட்டியில்
நான் தேவையில்லாமல் போய்விட்டேன்...!!!

மறக்க நினைத்தலும் மறக்காமல் நினைத்தலும்...




நட்பென்னும் இன்முகம் காட்டி வந்தாய்...
மர்ம புன்னகையில் ரகசியம் காத்தாய்....
மலைப்பாய் நான் உன்னை நோக்கிய தருணம்
உன் கண்கள் காதலை விதைத்து சென்றது...

உன்னோடிருந்த ஒவ்வொரு நொடியும்
நீ என்னை உணர்ந்தாய் என நினைத்தேன்...
உயிரோடு கொன்று போட்டது
நீ இறுதியாய் சொல்லிவிட்டு சென்ற வார்த்தை..

கருப்பு நாட்களில் வெண்மதியாய் வந்த நீ
கலைந்தே சென்றிட்டாய் கார்மேகம் போல...
விடியலின் விதிப்பயன் நீ என்னை சந்தித்தது....
விடியாமல் முடிந்தது சந்திப்பின் விளைபயன்...

மறக்க நினைத்தலும் மறக்காமல் நினைத்தலும்
ஒரே விதமாய் தான் இம்சித்து கொண்டிருக்கிறது...
மறக்க நினைத்து எத்தனை முறை முயன்றாலும்
நினைவில் வந்து மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறாய்...!

Monday 9 April 2012

ஏக்கங்களின் நிறைவு....



பரபரப்பாய் இயங்கி கொண்டிருக்கும்
உணர்வு கலவைகளின்
ஆத்ம சங்கமம்...
நிரம்பி வழியும் புத்தகத்தில்
இன்னதென்று நிரப்பப்படாத
ஒரு வெற்றுப் பக்கம்...

ஆழ்ந்த மோனநிலையில்
எனக்கான என் உலகம்
சிலிர்த்தெழும் தேகத்தில்
பூப்பூக்க செய்கிறது...
நெஞ்சு கூடு விம்மி சிரிக்க
என் மரண தேவதை
என்னை ஆலிங்கனம் செய்வதெப்போது?

இனியொரு பிறவி வேண்டாம்...
மனம் நிறைந்து சொல்கிறேன்...
மரணம் நினைக்கும் ஒவ்வொரு தருணமும்
மனம் மகிழ்ச்சியில் புன்னகைக்கிறது...

என்னை அணைத்து கொள்ள துடிக்கும்
எனக்கே சொந்தமான என் மரணம்......
நிலையற்ற வாழ்வு வாழ்கிறேன்
நிலையான மரணம் தேடி...

Sunday 1 April 2012

கனவு காதலனும்... கைப்பிடித்த கணவனும்...


வாய் வரை நீண்டுயர்ந்த கை
ஏனோ உணவூட்ட மறக்கிறது...
வெறித்து முறைக்கும் விழிகள்
எங்கும் பார்வை கொடுக்க மறுக்கிறது ...

இன்னதென்று அறிந்துவிட துடிக்கும்
இனமறியா உணர்வுக் கலவை
உயிர்நாடி தொட்டு
ஊடுருவி பாய்கிறது.....

வியர்வை ஊற்றில்
நீராடும் காலமுமாய்....
நீ வரும் நொடி வரை
எதிர்பார்ப்புகள் பொய்யாய்...
வந்து விட்ட நொடியோ
தூண்டில்புழு கவ்விய மீனாய்....
  
காதலாகி, காமமாகி
பின் அதுவே பயமுமாகி...
வெறித்து விட்டப் பார்வையும்
பதில் சொல்லா மவுனமும்
இன்று வரை தொடர்கதையே...