Monday 23 February 2015

வெற்றியின் பொழுதுமுந்தாநேத்து, அதான் 20/02/2015, காலைல எட்டு மணிக்கு சோம்பலா கார்த்திக்கு போன் பண்ணினா, நீ நேசனல் கான்பெரென்ஸ் போகலையான்னு கேட்டார்.
...............

ஆமா, முந்தா நேத்து திருநெல்வேலில ஒரு நேசனல் கான்பரன்ஸ்... என்னோட கைட் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே அது பத்தி வந்த சர்குலர காட்டி, நீ போயிட்டு வான்னு சொன்னாங்க. அதுல குடுத்துருந்த காண்டாக்ட் நம்பருக்கு கால் பண்ணி, அப்ஸ்ட்ராக்ட் அனுப்ப லாஸ்ட் டேட் இருபதுன்னு போட்டுருக்கே சார், எப்படி ஒரே நாள்ல எல்லா அப்ஸ்ட்டாக்ட்டும் பிரிண்ட் பண்ணி புக் போடுவீங்கன்னு சந்தேகமா கேட்டேன். நாங்க அதெல்லாம் போட மாட்டோம், ஐ.எஸ்.பி.என் நம்பரோட ப்ரோசீடிங் மட்டும் தான் போடுவோம், இப்ப அப்ஸ்ட்டாக்ட் கேட்டது சர்டிபிகேட்ல உங்க டாபிக் எழுத மட்டும் தான்னு சொன்னார்...

அப்ஸ்ட்டாக்ட் இல்லாத நேசனல் கான்பெரென்ஸ்சா, அதுவும் ஸ்பாட் ரெஜிஸ்ட்ரேசனா, போங்கயான்னு அப்பவே ஒரு அலுப்பு வந்துடுச்சு. போகணும்னா கடைசியா போகலாம்னு அத பத்தின நினைப்பையே தூக்கி தூரமா வச்சுட்டேன்.

போன வாரத்துக்கு முந்தின வாரம் ஸ்டுடென்ட்ஸ்கிட்ட போய் இந்த பத்தி சொன்னேன். யார் எல்லாம் இதுல பேப்பர் ப்ரெசென்ட் பண்ண போறீங்க? போறீங்கனா என்ன டவுட்ஸ்னாலும் என் கிட்ட கேக்கலாம், கண்டிப்பா கிளியர் பண்றேன்னு சொன்னேன். ஒரு புள்ளையும் வாயத் தொறக்கல. எனக்கும் சரியா இன்ட்ரெஸ்ட் இல்லையா, சரிதான்னு விட்டுட்டேன்.

போன வாரம் மூணு நாள் காலேஜ் பக்கம் நான் போகல. ஏனோ கடுப்பா இருந்துச்சு. வெள்ளி கான்பரன்ஸ், நான் வியாழன் காலேஜ் போறேன், எல்லா புள்ளைங்களும் சுத்தி வளைச்சுட்டாங்க. மேடம், நாங்க பேப்பர் ப்ரெசென்ட் பண்ணப் போறோம், எப்படி பவர்பாய்ன்ட் ஸ்லைட்ஸ் போடுறது, எப்படி நோட்ஸ் எடுக்குறது, சொல்லிக் குடுங்கன்னு ஒரே குடைச்சல். சரி, சரி, அமைதி, ஒவ்வொருத்தரா வாங்கன்னு ஒவ்வொருத்தரையும் கூப்ட்டு சொல்லிக் குடுத்து, ப்ரெசென்ட் பண்ணப் போற பத்து பேருக்கும் ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வர லேட் ஆகிடுச்சு.

நான் போகவேணாம்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்...
...............

கார்த்திக் கிட்ட கேட்டேன், அப்டினா போயிட்டு வரவான்னு.. மணி அப்பவே எட்டு. எப்படியும் எட்டரைக்கு கிளம்பினா பத்தரைக்கு திருநெல்வேலி போய்டலாம். அவர், இதென்ன கேள்வி, உடனே கிளம்பி போன்னு சொன்னார்.

சுறுசுறுப்பா எழுந்து, கடகடன்னு கிளம்பி, கிளம்புறப்பவே மாமாவுக்கு கால் பண்ணி, நாம காலேஜ் போகல, திருநெல்வேலி போறோம், உங்க பையன்கிட்ட இருந்து லேப்டாப் வாங்கிட்டு வந்துருங்கன்னு சொல்லிட்டு, எட்டரைக்கு மாமா வந்து சேர, கார்ல ஏறி உக்காந்தேன்.

இதுவரைக்கும் எந்த ப்ரிபெரேசனும் இல்ல, ஏன், எதை பத்தி பேசப்போறோம்ன்னு ஐடியா கூட இல்ல. திடீர்னு எனக்கு கொஞ்சநாள் முன்னாடி நான் ஸ்டுடென்ட்ஸ்கிட்ட டிஸ்கஸ் பண்ணின ஒரு விஷயம் நியாபகம் வந்துச்சு. அது தான் எறும்புகள் பத்தினது.

முந்தாநேத்து வரைக்கும் எறும்புகள் மேல பெரிய ஈர்ப்புகள் இல்ல. திடீர்னு வந்துச்சு பாருங்க அதுங்க மேல ஒரு பாசம், கடகடன்னு லேப்டாப்ப ஆன் பண்ணி, எம்.டி.எஸ் எடுத்து மாட்டி, நெட்டை கனெக்ட் பண்ணி எறும்புகள் பத்தின தகவல படிக்க ஆரம்பிச்சேன். எறும்புகள் கிட்ட இருக்குற ஆன்டி-மைக்ரோபியல் ஆக்டிவிட்டி பத்தின ரிசெர்ச் இந்தியாவுல ரொம்ப குறைவு... எனக்கு அதுல ஒரு ஸ்பார்க் கிடைச்சது. பவர் பாய்ன்ட் ஓப்பன் பண்ணி கடகடன்னு ஹிண்ட்ஸ் எடுத்துட்டு முடிச்சுட்டு லேப்டாப் ஆப் பண்ணி ரிலாக்ஸ் பண்ணிகிட்டேன்.

நான் நேசனல் கான்பெரென்ஸ் ஸ்பாட்க்கு போய் சேரும்போது மணி பத்தே முக்கால். உள்ள ஒருத்தர் கெஸ்ட் லெக்சர் குடுத்துட்டு இருந்தார். நம்ம புள்ளைங்க எங்க இருக்காங்கன்னு தேடினேன். நம்ம புள்ளைங்கள பத்தி நமக்கு தெரியாதா, லாஸ்ட் வரிசைல தேடினா, அட, அங்க இருக்காங்க நம்ம பசங்க. மெதுவா பின்னால போய் ஒரு ஹாய் சொன்னேன். அவங்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம். மேடம், வாங்க, உக்காருங்க, நினச்சே பாக்கலன்னு ஆள் ஆளுக்கு சலசலக்க, பேசிட்டு இருந்தவர் ஒரு கணம் பேச்சை நிறுத்திட்டு எட்டிப் பாத்தார்.

ஷ்..ஷ்.... இது கான்பெரென்ஸ் ஹால், நாம அப்புறமா பேசுவோம், சைலென்ட்டா பேச்சை கவனிங்க, மரியாதையா ஹிண்ட்ஸ் எடுங்கன்னு கொஞ்சம் மிரட்டல் பாணில சொன்னேன். இங்க வந்தும் நம்மள விடலயானு தலைல அடிக்காத குறையா அவங்க நொந்துகிட்டாலும், ஹிண்ட்ஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...

அப்படி இப்படி அதெல்லாம் முடிஞ்சி பனிரெண்டரைக்கு பிள்ளைங்க பேப்பர் ப்ரெசென்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. சும்மா சொல்லக் கூடாது, என் புள்ளைங்க செம டேலேன்ட்டட் தான். ஒருத்தி ப்ரெசென்ட் பண்ணிட்டு வந்ததுமே சூப்பர்ன்னு கை குடுத்தேன். எல்லாம் நீங்க நேத்து என்னை திட்டுன திட்டுல வந்தது மேடம்ன்னு சொன்னா. ஹஹா... அதென்னவோ தெரியல, இந்த புள்ளைங்கள நான் என்ன திட்டு திட்டினாலும் பின்னாலயே வரும்ங்க... நம்ம ராசி அப்படி போல...

அப்புறமா, லன்ச் முடிச்சி, நான் மேடை ஏறினப்ப மணி ரெண்டு. கார்ல வச்சு ரெடி பண்ணின பவர்பாயின்ட்ட பென் டிரைவ்ல காப்பி பண்ணி, எல்.சி.டி ப்ரொஜெக்டார்ல கனெக்ட் பண்ணி எறும்புகளோட ஒரு ரவுண்ட் போயிட்டு வந்தேன். ஏழு நிமிச ப்ரெசென்ட்டேசன், மூணு நிமிஷம் அவங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு கீழ இறங்கினப்ப ஒரு காலேஜ் ஸ்டாப் ஓடி வந்து, எறும்புகள்ல இருந்து நீங்க ஆன்டி-மைக்ரோபியல் ப்ராடக்ட் எடுத்துருக்கீங்களா, கேன் ஐ கெட் தி ப்ரோசீஜர்ன்னு கேட்டதும், இனிமேல் தான் ஆரம்பிக்கப் போறேன்னா சொல்ல முடியும், இட்ஸ் ஆன் தி ப்ராசஸ் மேம், டெப்னிட்லி வில் கிவ் யூ லேட்டர்ன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.

சரி, லேட் ஆகிடுச்சு, கிளம்பலாம்னு பாத்தா, புள்ளைங்க ஓடி வந்து மேடம், கடைசி வரை இருந்துட்டு போங்க, ப்ரைஸ் கிடைக்கும் மேடம்னு சொல்ல, புள்ளைங்களா, ப்ரைஸ் எல்லாம் உங்கள மாதிரி யூ.ஜி, பி.ஜி படிக்குரவங்கள என்கரேஜ் பண்ணத் தான் குடுப்பாங்க, எங்களுக்கு இல்லன்னு சொல்லிட்டு நிஜமாவே லேட் ஆகிடுச்சுன்னு ஒருவழியா சமாளிச்சு கிளம்பிட்டேன்...

நான் யூ.ஜி, பி.ஜி படிக்குறப்ப இந்த மாதிரி கான்பெரென்ஸ் வெறித்தனமா கலந்துப்பேன். சில இடங்கள்ல ப்ரைஸ் குடுப்பாங்க. அப்போ எல்லாம் கண்டிப்பா ஏதாவது ஒரு ப்ரைஸ் தட்டிட்டு வந்துருவேன். கடைசியா எம்.பில் பண்ணப்ப ஒரு திருவள்ளுவர் சிலை முதல் பரிசா கிடச்சுது.
....................

நாலரைக்கு வீடு வந்து சேர்ந்து, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி, குட்டி தூக்கம் போட்டுட்டு இருந்தப்ப அஞ்சரைக்கு திருநெல்வேலில இருந்து போன். மேடம், எங்க ரெண்டு பேருக்கு ப்ரைஸ் கிடைச்சிருக்கு மேடம்ன்னு...

பின்ன, அவங்க எல்லாம் என் புள்ளைங்களாச்சே.... நாளைக்கு காலேஜ் போனதும் கண்டிப்பா என்னை மொய்ச்சுக்குவாங்க... என்ன ஒண்ணு, அவங்க ட்ரீட் குடுக்குறதுக்கு பதிலா என்கிட்டயே ட்ரீட் ஆட்டைய போட்ருவாங்க... நாளைக்கு எதுக்கும் காலி பர்ஸ் கொண்டு போறது எனக்கு நல்லது....

பின் குறிப்பு: நேசனல் கான்பெரென்ஸ்க்கும் போட்டோல இருக்குற இந்த எறும்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்காதீங்க, முந்தாநேத்து ப்ரௌஸ் பண்ணும்போது, பட்டுன்னு மனச கவ்விடுச்சு இது...

Sunday 22 February 2015

சக்தி - என் உலகம்


இந்தா டைப் அடிச்சுட்டு இருக்கேன்ல, இந்த கீ-போர்ட் இருக்குல, இது மேல தான் சக்தி எப்பவும் ஏறி உக்காந்துட்டு இருப்பான். நான் டைப் பண்ணினா என் விரல்கள ஓடி வந்து கடிப்பான். எப்பவுமே குட் மார்னிங் ஸ்டேடஸ் போட அவன வலது கைல பிடிச்சு வச்சுட்டு இடது கையால தான் டைப் பண்ணுவேன்.

சக்தி - போன வருஷம் புது வருஷத்துல எனக்கு கிடச்ச கிப்ட் அவன்.

அவன் அம்மா ரெண்டு நாள் முன்னாடியே எங்க வீட்டு ஹால்-ல வந்து எங்க கண்ணு முன்னாலயே செத்து போய்ட்டாங்க. விசாரிச்சா அணில்களுக்கு எல்லாம் ஒரு வகை நோய் பரவிட்டு இருக்குறதாகவும், தோட்டத்துல இது மாதிரி நிறைய அணில்கள் செத்து செத்து விழுறதாவும் சொன்னாங்க.

எப்படியோ சக்தி என் கிட்ட வந்து சேர்ந்தான். அவனுக்கு பெயர் வச்சதே இங்க எல்லாரும் திருவிழா மாதிரி கொண்டாடினோம். குட்டிப் பய, முதல் நாளே கூட்டுக்குள்ள படுக்க மாட்டேன்னு என் கைய கெட்டியா பிடிச்சுகிட்டான். கஷ்டப்பட்டு தான் அவன கூட்டுக்குள்ள தூங்க வச்சேன்.

ஒரு ரெண்டு மூணு நாள் நந்து, அவங்க அம்மா எல்லாம் வந்து பாத்தாங்க. சின்ன பையன்ல, அவனுக்கு அப்ப ஓடி ஒளிய தெரியல. ஆனா அதுக்கப்புறம் யார் வந்தாலும் ஓடி போய் என்னோட பிரிண்டர்குள்ள ஒளிஞ்சுப்பான்.

அய்யய்யோ, அந்த பய பண்ற அநியாயம் சொல்லி மாளாது. எப்ப பாரு சேட்டை சேட்டை சேட்டை... ஒரு நாய்க்குட்டி என்னவெல்லாம் பண்ணுமோ அத்தனையும் இந்த பயலும் பண்ணுவான்.
சக்தி எப்பப் பாத்தாலும் வாய நல்லா தொறந்து ஹாவ்...ன்னு கொட்டாவி விடுவான். என் கை மேல ஏறி உக்காந்து நக்கி வச்சுட்டே இருப்பான். நான் கீ-போர்ட் தோட்டா ஓடி வந்து அசையுற விரல்கள பிடிச்சு கடிச்சு விளையாட வருவான்.

எலேய் கொஞ்சம் என்னை ப்ரீயா விடுடானா எங்க கேப்பான். அப்படியே லேப் டாப் பக்கத்துல போய் நின்னுட்டு அங்க இருந்தே என்னை பாத்து ஒரு முறை முறைப்பான். அப்புறம் ஓடி வந்து மடில ஏறி, பரபரன்னு முதுகு வழியா தோள்ல ஏறி, அங்க இருந்துட்டு காதுல ரெண்டு கையையும் வச்சுட்டு கம்மலை கடிச்சுட்டு இருப்பான்.

வெளில லேசா சத்தம் கேட்டா போதும், விருட்டுன்னு பாய்ஞ்சு போய் பிரிண்டர்க்குள்ள பதுங்கிடுவான். அவனுக்கு இங்க பிடிச்சதெல்லாம் நான் மட்டுமா தான் இருந்தேன். என்னை கண்டா ஓடி வந்துருவான். அவனோட வீரம் எல்லாம் என் கிட்ட தான்... அவனுக்கு பல் முளைக்க குறுகுறுன்னு வரும் போதெல்லாம் என்னோட தலை மேல ஏறி உக்காந்துட்டு முடிய கர்க் கர்க்ன்னு கடிச்சு துப்பிடுவான். விடுடா விடுடான்னு அவன புடிச்சு கீழ தூக்கிப் போட்டாலும் அடுத்த செகண்ட் மறுபடியும் என் தலைல இருப்பான். அப்புறம் என்ன நினைப்பானோ, முடிய வெட்டி விட்ட இடத்த எல்லாம் நக்கி குடுப்பான்.

இந்த சக்கப் பழத்துக்கு நானும் சக்தியும் போடுற சண்டை இருக்கே... பக்கி, எப்பவும் கூடவே இருக்குற அவன், சக்கப் பழத்த கண்டா மட்டும் அத தூக்கிட்டு பீரோ மேல போய்டுவான். அங்க நின்னுட்டு என்னை பாத்து கேலியா சிரிச்சுட்டு இருப்பான். குசும்பு புடிச்சவன்.

அவனுக்குன்னு ஸ்பெசலா ஆப்பிள், கிரேப்ஸ், கொறிக்க பாதாம் பருப்பு, நிலக்கடலை எது குடுத்தாலும் இந்த விசயத்துல நாங்க ரெண்டு பேருமே பிடுங்கி பறிச்சு திங்குரதுல போட்டி தான் போடுவோம். அவனுக்கு ஒரு ஆப்பிளை குடுத்துட்டு நான் ஒண்ணை எடுத்து கடிச்சா, அவன் என் தோள்ல ஏறி நான் கடிக்குற ஆப்பிள தான் கடிப்பான். பொறாமக்காரன்.

ஒரு நாலஞ்சு நாள் தான் அவன் கூட்டுக்குள்ள படுத்துருப்பான். அப்புறம் எப்பவும் என் முதுல தான் அவன் தூக்கம். அவனுக்காக புரண்டு கூட படுக்க முடியாம தூங்காம நைட் முழுக்க முழிச்சி கிடப்பேன். அப்புறம் அதவே பழகிடுச்சு. நான் அசைஞ்சா அவனும் அதுக்கேத்த மாதிரி அசைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

எப்ப பாத்தாலும் என் விரல கடிச்சுட்டு, அப்படியே தோள் மேல ஏறி காத கடிச்சி, கம்மல கடிச்சி, கொஞ்சம் அசந்தா மூக்கையும் கடிச்சி வைக்குற சக்தி, பாசமா நாய்க் குட்டி மாதிரி நக்கியும் வைப்பான்.

எனக்கும் அவனுக்கும் ரொம்ப சண்டை வந்தா மட்டும் கோவிச்சுட்டு லேப்டாப் பக்கத்துல போய் படுத்துப்பான். அங்க இருந்துட்டே அவன் பண்ற சேட்டைய பாத்தா கோபம் போய் சிரிப்பு வந்துரும். அப்புறம் என்ன, விருட்னு மறுபடியும் தோள்ல ஏறிப்பான்...

நான் காலேஜ் போய்ட்டா ஜன்னல் மேல குரங்கு மாதிரி தொத்திட்டு இருப்பான். இப்பவும் ஜன்னல்ல ஏதாவது அசைவு தெரிஞ்சா சக்தின்னு ஒரு செகண்ட் மனசு அதிரத்தான் செய்யுது. கூடவே அந்த பயல நினச்சு ஒரு புன்னகையும்....

Thursday 19 February 2015

வற்றா நதி - சிறுகதைத் தொகுப்பு


வற்றா நதி – இத பத்தி இதுவரைக்கும் நான் மூச்சு கூட விடல. ஆனா இதோட மேக்கிங் ப்ளான் எப்ப ஆரம்பிச்சுதோ, அப்ப இருந்து கூட இருக்கேன். இதுல இருக்குற இருபத்தி ரெண்டு கதைகளும் புத்தக தயாரிப்புல இருக்கும் போதே நான் வாசிச்சுட்டேங்குரதால புக் கைல கிடைச்சதும், யாதுமாகியவளுக்கு ப்ரியமும் அன்புமாய் மு. கார்த்திக் புகழேந்தி அப்படிங்குற வார்த்தையையே ஒரு மாசத்துக்கு வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்துட்டேன் (புக் ரிலீஸ் டிசம்பர் இருபத்தி ஒண்ணு, எனக்கு புக் கைல கிடைச்சது ஜனவரி பத்து. என்ன ஒரு வேகம் பாருங்க).

அப்புறம் அதுல இருக்குற கதைகள பத்தி சொல்லனும்னா, ஒவ்வொரு கதையும் படிச்சுட்டு ரசிச்சு ரசிச்சு நான் கொண்டாடின கதைகள் தான் எல்லாமே. திருநெல்வேலில வச்சு, இந்த கதைய படிச்சுப் பாருன்னு கார்த்திக் சொன்னா முந்திரிகொட்டைதனமா நான் முதல்லயே படிச்சுட்டேன்னு சொல்லி திட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். லூசு, இது எடிட்டெட் வெர்சன், வர வர உனக்கு பொறுப்பும் இல்ல அக்கறையும் இல்லன்னு மண்டைல கொட்டும் வாங்கியிருக்கேன். அதனால ஒருவேளை வற்றா நதி-ல சில அடையாளக் கதைகள் நான் சரியா வாசிக்காம விட்டுருக்கலாம்... (என் மேல தப்பே இல்ல, இந்த கண்ணாடி தான் பிரச்சனையே... திட்டனும்னா என் கண்ணாடியை திட்டிக் கொள்ளவும்).

எனக்கும் கார்த்திக்குக்கும் வாக்குவாதங்கள் எல்லாம் வந்துச்சுன்னா அது “சிவந்திப்பட்டி கொலை வழக்கு” கதைல தான். நிறைய விவாதம் பண்ணியிருக்கேன் அதுல. அந்த கதைய வாசிச்ச வேகத்துல எனக்கு மனசே ஆரல. யார திட்டுறேன்னே தெரியாம நிறைய திட்டித் தீத்திருக்கேன். அப்புறம் வந்த கமண்ட்ஸ், திருப்பி கதைய எல்லாம் படிச்சுட்டு தான் நடக்குறத தான் சொல்லியிருக்கார், இங்க மெஸ்சேஜ் சொல்ல இடம் இல்ல தானேன்னு எனக்கு நானே சமாதானம் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள் என்னை கோபப்பட வச்ச கதை அது. அவ்வளவு தாக்கம்.

“அப்பாவும் தென்னை மரங்களும்”ல கார்த்திக் ஆந்தைகள் பத்தி சொல்லியிருப்பார். அதுவும் அதோட அருமை பெருமைகள எல்லாம் அடுக்கியிருப்பார். என் அப்பா அத எல்லாம் சொல்லித் தந்தது இல்லைனாலும் ஆந்தைகள் அப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும். யாரு சொன்னா எங்கையா செத்துட்டார்ன்னு கார்த்திக் அதுல கெத்தா நிமிர்ந்து நிப்பாரு, அதே தான் நானும் சொல்லுவேன், எங்கப்பா சிங்கம்டே...

எங்களோட பழைய வீடு, அந்த வீட்ல ஒரு நிலை கதவு உண்டு. தம்பி எப்பவும் அந்த நிலைகதவுல தான் தொங்கிட்டு இருப்பான். எல்லாரோட வீட்லயும் இப்படி ஒரு நிலைக்கதவு கண்டிப்பா இருக்கும். அது பழைய நியாபகங்கள கண்டிப்பா தட்டி எழுப்பும். “நிலை கதவு” படிச்சா இப்படி தான் இப்படி தான், எங்க வீட்ல நானும் ____ம் ன்னு சொந்த கதைய நாமளும் ஆரம்பிச்சுடுவோம். இத தான நான் சொல்ல வந்தேன், அதுக்குள்ள இந்தாளு சொல்லிட்டாரேன்னு கண்டிப்பா பொறாம வரும்... ஏன்னா, எனக்கு வந்துச்சு.


இவர் எழுதின லவ் ஸ்டோரி படிச்சுட்டு இன்பாக்ஸ் பக்கமா ஒதுங்குன பொண்ணுங்க ஏராளாம். எல்லார் கிட்ட இருந்தும் இவர படாதபாடு பட்டு காப்பாத்த நான் பட்ட பாடு எனக்கு தான தெரியும்... “இதுக்கு மேல பச்சை, பிரிவோம் சந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி” கதைகள் பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லன்னு நினைக்குறேன். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட முறைல ஹப்பா... என்னமா எழுதியிருக்க, செம, ஐயோ செல்லம் சான்சே இல்ல பின்னிட்ட போன்னு கால் பண்ணி சிலாகிச்சாலும் பக்கி ஒரு வேளை இவரே சைட் அடிச்சிருப்பாரோன்னு கொஞ்சம் கிலிய உண்டு பண்ணினது என்னவோ உண்மை. அவ்வளவு தத்ரூபம் (இந்த இடத்துல ஒரு சோக ஸ்மைலி எனக்கு மட்டும் நானே போட்டுக்குறேன் L )

ஆனாலும் “காற்றிலிடைத் தூறலாக” படிச்சதும், அப்படியே இல்லாத சட்டைக் காலர நானே தூக்கி விட்டுகிட்டேன். ஏன் தெரியுமா, அதுல வர்ற ஹீரோயின் கல்கி என்னை மாடலா வச்சு எழுதினது தான். நான் இம்பூட்டு நல்லவளா அப்படின்னு நானே பெரும பட்டுகிட்டேன்னா பாத்துக்கோங்களேன். அந்த கதை ரொம்ப நல்லா இருக்கு, சான்சே இல்லன்னு பெரிய பெரிய ரைட்டர்ஸ் எல்லாம் பாராட்டினாங்க மக்கான்னு கார்த்திக் சொன்னப்ப, அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்கும். அதே மாதிரி “வணக்கத்துக்குரிய” படிச்சுட்டு பெரும தாங்கல. இத எல்லாம் கல்வெட்டுல பொரிக்கணும் அதுக்கு பதிலா தான் புக் போட்ருக்கு. பின்ன நாளைக்கு இவர் பேச்சு மாறிடக் கூடாதுல. இன்னொரு முக்கியமான விஷயம், அந்த கதைல அப்படி என்ன விசேசம்னு கேக்குறீங்களா, மாமனாருக்கு லெட்டர் எழுதினாராமாம், அதையே கதையாக்கிட்டார். படிச்சு பாருங்க, புரியும்.


இந்த பொங்கலோ பொங்கல் கதைய படிச்சதும், பாரு, இந்த பக்கி அப்பவே இப்படி, அதான் இப்பவும் ரசிகைகள் கூட்டம் இவருக்கு மொய்க்குதுன்னு செம கடுப்புல இருக்கேன். அதனால அத பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களும் படிச்சுடாதீங்க, அப்புறம் உங்களுக்கும் கடுப்பு ஏறும், எப்படி எல்லாம் வாழ்ந்துருக்கான் பாருயான்னு...


“பற்றியெரியும் உலை” பத்தி நான் அதிகமா சொல்ல விரும்பல. காரணம், நீங்க அதுல ஆழ்ந்து வாசிச்சா உங்களுக்கே புரியும். நம்மளை பேசவே விடாம, ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியில தள்ளி விடுற கதை அது. மனசு படபடத்து என்ன பண்றதுன்னே தெரியலயேன்னு ஒரு தவிப்பு நாலு நாளுக்கு மனச பிசைஞ்சுட்டே இருக்கும். உங்களுக்கு குற்றவுணர்ச்சி வரவேனாம்னா அந்த கதைய படிக்காதீங்க, அதுவும் ரெண்டு தடவ படிச்சிடவே படிச்சிடாதீங்க.

இன்னும் நிறைய கதைகள். அத பத்தி எல்லாம் இன்னொரு நாள் சொல்றேன். இப்ப மூச்சு வாங்குது...


கடைசியா ஒண்ணு, இவர் கே.பி இல்ல கே.டி.... ஒவ்வொருத்தரோட பல்ஸ் அறிஞ்சி ஆள ஈசியா மயக்கிடுறாரு... நான் ரொம்ப ரொம்ப கேர்புல்லா இருக்கணும்... 

Tuesday 17 February 2015

என் உலகம்


ரொம்ப நாள் அப்புறம் வீடு எல்லாம் ஒதுங்க வைக்குற வேலை. எல்லா ரூமும் ஈசியா தூசி தட்டி கழுவி விட முடிஞ்சுது, என்னோட ரூம் தான் அத்தனை பேரையும் திணறடிச்சிடுச்சு...

எல்லாருமே, இந்த மீனையும் குருவிகளையும் உன் அப்பா வளர்க்குற மத்த குருவிகளோட கொண்டு போய் விட்டுடுன்னு சொல்லிட்டாங்க. எல்லாரையும் ஒரு முறை முறைச்சுட்டு யாருமே வேணாம், நானே க்ளீன் பண்றேன்னு சொல்லி, நந்து ஹெல்ப்போட ஒரு வழியா என் ரூமை தலைகீழா புரட்டி ஏதோ சுமாரா க்ளீன் பண்ணி முடிச்சாச்சு.

நளனுக்கும் தமயந்திக்கும் ஏற்கனவே கூடு கட்ட வச்சிருந்த பானைய மாத்தி, புது பானை இன்னும் வசதியா வச்சாச்சு. தமயந்தி ஏற்கனவே ஒரு முட்டை போட்டு அது உடைஞ்சு போச்சு, அதனாலயே இப்போ கூடுதல் வசதி...

குறிஞ்சிக்கும் பிரபாவுக்கும் பழைய கூடு, ரெண்டு பேரும் ஜோடியா செட்டில் ஆயாச்சு. அதுவும் குறிஞ்சி என்னை போலவே கொஞ்சம் திமிர் பிடித்தது. ப்ரபாவ படாத பாடு படுத்திட்டு இருக்கு. வா, வா, இங்க வந்து உக்கார், ஹலோ எனக்கு இந்த இடத்த சுத்தம் பண்ணித் தான்னு ஒரே அலும்பு. ப்ரபா அலுக்காம அது சொல்ற வேலை எல்லாம் செய்யுது.

மந்தாகினி புது கூட்டுல யுவாவோட கொஞ்சம் ஓகே ரேஞ்ச்ல உக்காந்துட்டு இருக்கு. என் ரூம்ல அப்பாவி ஜோடிகள்னா அது இவங்க ரெண்டு பேரும் தான். கூடிய சீக்கிரம் பிள்ளை குட்டிகள் எல்லாம் பெத்துக்கணும்ன்னு வாழ்த்துவோம்...

மருதத்துக்கும் நெய்தலுக்கும் புதுசா தண்ணி மாத்தி, கூடவே உள்ள கொஞ்சம் மண் போட்டு, செடியும் நட்டு வச்சு அழகாக்கியாச்சு. ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து மீன் தொட்டியில இருந்து சைட் அடிச்சுட்டு இருக்காங்க. அப்படியே இருக்கட்டும்...

அடுத்த மீன் தொட்டியில ஒரு மினி குளம் ரெடி. பச்சை பசேல்ன்னு பாசிகளோட, நத்தைகளும் ஊர்ந்துட்டு இருக்கு. கூடவே மருதம் நெய்தலோட பிள்ளை குட்டிகளும் நீந்திட்டு இருக்கு. எல்லாமே ரொம்ப குட்டியா இருக்குறதால எத்தனை குட்டிங்கன்னு தெரியல, ஆனாலும் அதுல வெள்ளையா ஒரு குட்டி வேற இருக்கு. அந்த வெள்ளை குட்டி சூப்பரா பெருசாகிடணும்ன்னு நந்து ப்ரே எல்லாம் பண்ணினா...

ஆக மொத்தம் என் ரூம் முழுக்க டூயட் ஒலிக்குது. கூடவே அதுங்க குளிச்சுட்டு லேப் டாப் முழுக்க தண்ணி தெளிச்சு விடுறாங்க...

இப்ப என் ரூமுக்கு வர்றவங்க எல்லாம், இவங்க எல்லாரும் பண்ற சேட்டை பாத்துட்டு நல்லா நேரம் போகுது உன் ரூம் வந்தான்னு பாராட்டிட்டு போறாங்க...


- ஹோம் ஸ்வீட் ஹோம்

Sunday 15 February 2015

இயற்கை - என்றும் வரம்


என்னை எப்போ பாத்தாலும் நந்து கேக்குற ஒரு கேள்வி, “அது எப்படி அக்கா, உன்னால மட்டும் இந்த ப்ரகதிய ஈசியா அடக்க முடியுது? இந்த குருவிங்க உன்னை பாத்தா பயப்பட மாட்டேங்குது”ன்னு தான்.... 

அதுக்கு காரணம், நான் சின்ன வயசுல வாழ்ந்த சூழலா கூட இருக்கலாம்... 

ஆடு மாடுகள்ன்னு மட்டுமில்ல, எந்த உயிரினமா இருந்தாலும் எங்க வீட்ல கண்டிப்பா அடைக்கலம் உண்டு. ரொம்ப சின்னப் புள்ளையா இருந்தப்ப, (சுமார் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி) எங்க வீட்டை சுத்திலும் காடு தான் இருக்கும். ஒரு பக்கம் கொல்லாங்காடு, இன்னொரு பக்கம் பச்சை பசேல்ன்னு வயல், இன்னொரு பக்கம் மாந்தோப்பு, அது பக்கத்துல தென்னந்தோப்பு, அதுக்குள்ள சின்னதா ஒரு வீடுன்னு ஒரு தோப்பு வாழ்க்கை எங்களோடது. 

இந்த தோப்புகள்ல கிடைக்குற விளைச்சல்கள எப்பவுமே முழுசா பறிச்சு எடுத்தது கிடையாது அப்பா. ஏன் இப்படி பண்றன்னு யாராவது கேட்டா, இங்க இருக்குற மத்த உயிர்களும் சாப்பிடனும் இல்லையான்னு கேப்பார். காய்ச்சு தொங்குற கொய்யா பழங்கள தேவைக்கு மட்டுமே பறிச்சு சாப்பிடணும். மீதி எல்லாம் அணில்களுக்கும், கிளிகளுக்கும் தான். நான் எப்பவுமே அணில் கடிச்ச, கிளி கொத்தின பழங்கள மரத்து மேலயே அதுவும் அதுங்க மத்தியிலயே உக்காந்து சாப்பிடுறது தான் பழக்கம். ஆரம்பத்துல என்னை கண்டா தலைதெறிக்க ஓடவும் பறக்கவும் தான் செய்யும்ங்க, ஆனா போக போக நம்மள எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்குறது இல்ல. என்னோட தல மேலயும், கால்லயும் உக்காந்து பழம் சாப்பிடுரதே அதுங்களுக்கு வேலையா போச்சு. 

கொய்யா மரத்து மேல உக்காந்து பாத்தா, பக்கத்துல தென்னந்தோப்புல தேங்கி நிக்குற தண்ணியில பூச்சி, புழு பிடிச்சி சாப்பிட வரும் கொக்குங்க வெள்ளை வெளேர்ன்னு தெரியும். கூடவே இடையிடைல தவுட்டு கொக்கும் இருக்கும். அப்புறம், அதிசயமா எப்பவாவது மீன் கொத்தி வேற வரும். இதுங்கள எல்லாம் வசியம் பண்ண ஒரு டெக்னிக் உண்டு. அது தான் குப்பைமேனி கீரை. எப்பவுமே நானும் தம்பியும் இந்த குப்பைமேனி கீரைய வேரோட பிடுங்கி எங்க பக்கத்துல வச்சுப்போம். அந்த வேரை எப்படியாவது எடுத்துடணும்ன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ம கிட்ட ஒட்டி ஒட்டி வர ஆரம்பிச்சுடும். 

இதுங்க இப்படினா, பக்கத்து வீடு, மேல் வீடு, கீழ வீடுன்னு எல்லார் வீட்லயும் பூனைங்க இருக்கும். அதுங்களுக்கு குப்பைமேனி வேர்னா அவ்வளவு இஷ்டம். நம்ம மேல விழுந்து ஐஸ் வச்சு, செல்ல கடி கடிச்சுன்னு எப்படியாவது எங்ககிட்ட இருந்து அத புடுங்கிட்டு போய்டும். 

தோப்புக்குள்ள வளர்ந்து நிக்குற புற்கள  திங்க வர்ற காட்டு முயல்களும் உண்டு. வெள்ளை வெளேர்ன்னு எல்லாம் இல்லாம சாம்பல் கலர்லயும், செவல கலர்லயும் இருக்கும். தோட்டத்துல போடுற காய்கறிகள பறிச்சு தின்னுட்டு ஓடிடும். கிழங்கு வகைகள்னா கேக்கவே வேணாம். முயல் கேரெட் சாப்பிடும்னு புக்ல மட்டும் தான் நான் படிச்சிருக்கேன். ஆனா இங்க உள்ள முயல்கள் எல்லாம் முட்டைகோஸ் சாப்பிடுமே தவிர கேரெட் தின்னு நான் பாத்தது இல்ல. குட்டி குட்டி காட்டு முயல்கள் தான் எப்பவுமே ஜாக்கிரதையா இருக்கும். நம்ம பக்கம் எட்டிக்கூட பாக்காது. 

எங்க ஏரியால குயில்களும் உண்டு. காலை, மாலைன்னு நேரம்காலம் இல்லாம அங்கங்க குயில்கள் பாட்டு பாட கிளம்பிடும். நாங்க மட்டும் விடுவோமா என்ன, கூ.... கூ....ன்னு அதோட பாட்டுக்கு எசப் பாட்டு பாடுவோம். நானெல்லாம் ஒரு பாடகியா உருவெடுக்க இந்த குயில்கள் தான் காரணம். குயிலுக்கு அப்படி என்ன சாப்பாடு நாம குடுத்துற முடியும்? அதுக்கு தான் எங்க தோப்புல நாவல் மரங்கள் நின்னுச்சு. இந்த நாவல் மரத்துல தான் குயில் கூடு கட்டும். 


அடுத்து மண்ணுழுந்தி பாம்புங்க. கட்டையா உருண்டையா, விறகு கட்ட எடுக்க போகும்போது எல்லாம் உள்ள இருந்து நெளியும். ஐயோ பாம்புன்னு கதறாம, சூசூ....ன்னு விரட்டி விடுவோம். இந்த பாம்புக்கு பால் வச்சு வளக்கணும்ன்னு நான் ப்ளான் எல்லாம் வேற போட்ருக்கேன். ஒரு தடவ அசைய முடியாம கிடந்த பாம்ப அலேக்கா தூக்கி பால் கேனுக்குள்ள போட்ட பெருமை என்னையே சாரும். 

மண்ணுளுந்தி பாம்புனா தாங்க எனக்கு பயம் இல்ல, மத்தப்படி இந்த நல்ல பாம்பு, சாரை பாம்புன்னா ரொம்ப பயம். எப்ப எல்லாம் அதுங்க எதுக்க வருதோ அப்ப எல்லாம் அசையாம, பேஸ்மென்ட் கூட ஆடாம அப்படியே நிப்பேன். பாம்பு கண்ண விட்டு மறைஞ்சா போதும், விட மாட்டேனே, ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சு போய் ரூமுக்குள்ள கதவடச்சுட்டு அலறுவேன் பாருங்க, ஒரு அலறல்.... ஹிஹி... யாருக்கும் தெரியாது, நீங்களும் சொல்லிடாதீங்க... 

தோப்புக்குள்ள நிறைய  கரையான் புற்றுகள் உண்டு. கரையான் புற்றுக்குள்ள பாம்பு இருக்கும்னு பயமுறுத்தினாலும் தைரியமா கைய விடுரவ நான். அப்படியே கைய வெளில எடுக்கும் போது முட்டி வரைக்கும் கரையான் அப்பியிருக்கும். கடி தாங்க முடியாது. ஆனாலும் அத எல்லாம் பொறுத்துட்டு கெத்தா கரையான கொண்டு போற ஈக்காம்பெட்டிக்குள்ள போட்டு எடுத்துட்டு வருவோம். பின்ன, கோழி குஞ்சுகளுக்கு சாப்பிட குடுக்கணும்ல... 

அப்படியே ராத்திரி ஆகிட்டா, ஒரு நார் கட்டில எடுத்து வெளில போட்டு அப்பாவ படுக்க வச்சு, அப்படியே ஜம்முன்னு அவர் வயித்துல ஏறி உக்காந்து, கதை கேட்டுட்டு இருப்போம். திடீர்னு க்கும்..க்கும்ன்னு யாராவது முனங்குற மாதிரி சத்தம் கேக்கும். அப்போதான் அப்பா அந்த பறவைய காட்டித்தருவார். எங்க தோப்புல நாட்டு தென்னை மரங்கள் தான் ரொம்ப அதிகம். அதோட நடுப்பகுதியில பெரிய ஓட்டைகள் இருக்கும். அதுக்குள்ள இருந்து ஒவ்வொருத்தரா வெளில வருவாங்க அவங்க... அவங்கனா, அதாங்க, ஆந்தைங்க. ரசிச்சு பாத்தா, இந்த ஆந்தைங்க ரொம்ப அழகா இருக்கும்.  நான் அப்பா மேல ஏறி உக்காந்தா இந்த அம்மாவுக்கு எப்பவுமே பொறாமை தான். மொறச்சு பாக்குற அம்மா மூஞ்சிய விட அந்த ஆந்த மூஞ்சி அழகா இருக்குப்பான்னு எப்பவும் அம்மாவ வம்பிழுத்துட்டே நட்சத்திரங்கள எண்ணிகிட்டு, நிலவ ரசிச்சுட்டு, அப்பா நெஞ்சுல அப்படியே தூங்கிப் போறது தனி சுகம். 
  
போற போக்குல தண்ணிதொட்டி பக்கத்துல மதமதன்னு கும்பலா நத்தைங்க, கால்கள் மேல ஏறி ஓடுற பூரான், க்ராக் க்ராக்ன்னு கத்துற தவளைங்க, ஒரு மாதிரி பயத்தை உண்டு பண்ற மரவட்டை, செவல நிறத்துல அழகா சிறகு விரிச்சு, கலர்கலரா சைட் அடிக்க வச்சு, நம்மள பின்னாலயே ஓடிவர செய்யும் பட்டாம்பூச்சிங்க, மழை நேரம் வீட்டை நிறைக்கும் ஈசல்கள், ராத்திரி ஆனா கிரிச்கிரிச்ன்னு சத்தம் போடுற பூச்சி, வண்டு வகைகள், பளிச் பளிச்ன்னு வெட்டிட்டு போற மின்மினி பூச்சிகள், இளநி குடிக்க வரும் மரநாய்கள், கொஞ்சமா பயமுறுத்தும் செம்புவம், அங்கங்கே கூடு கட்டுற சிட்டுக்குருவி இப்படி எப்பவுமே எங்களோட உலகம் அழகாவே இருந்துருக்கு... 

இப்ப மட்டும் என்ன, நளன், தமயந்தி, குறிஞ்சி, ப்ரபா, மந்தாகினி, யுவா, மருதம், நெய்தல், கிரிஜா, ப்ரகதின்னு இப்பவும் அழகா தான் இருக்கு.... இது போக ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராக்கள்.... சுத்தி முத்தி ரசிங்க பாஸ்.... வாழ்க்க தானா அழகாயிடும்... 

Friday 13 February 2015

அப்பாவும் மாடு வளர்ப்பும்...அப்பா....

என் யாதுமானவர். அம்மா இருந்தப்ப எனக்கு பிரெண்ட்டா இருந்தாரு. பொம்பள புள்ளன்னு என் மேல பாசம் அதிகம். நான் அதிகமா நடந்ததே இல்ல, அப்பா தோள்ல தான் எப்பவுமே தொங்கிட்டு இருப்பேன். அம்மாவோட அதிதீவிர காதலன். அம்மா மேல இருக்குற லவ்வ அப்பா அதிகமா வெளிபடுத்தினது இல்லனாலும், எங்கயுமே எப்பவுமே அம்மாவ விட்டுத் தராத மனுஷன்.

விளையாட்டா நான் யோவ் குமாரு, உம்ம பொண்டாட்டிய டைவேர்ஸ் பண்ணுங்கயா, அவ தொல்ல தாங்க முடியலன்னு சொன்னா, இங்க பாரு, நான் உனக்கு அப்பாங்குறது முன்னாடியே அவளுக்கு புருஷன். எனக்கு முதல்ல அவ சந்தோசம் தான் முக்கியம்னு சொல்றவரு...

அப்பா மேல எப்பவுமே பயம் எல்லாம் வந்ததே இல்ல. ஊர் சுத்த கிளம்பினா அம்மாவ விட அப்பா கிட்ட பெர்மிசன் வாங்குறது ரொம்ப ஈசி. வயசாகிடுச்சுன்னு எப்பவுமே நினைக்க மாட்டார். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே அவருக்கும் பிரெண்ட்ஸ். சாப்பாட்டு நேரம் (அது அம்மா டிபார்ட்மென்ட், ஊட்டி விடப்படும்) போக மீதி நேரங்கள்ல எல்லா பசங்களும் அப்பா அப்பான்னு அப்பாவையே சுத்தி வருவாங்க.

என்னதான் அப்பா அந்த காலத்து பி.எஸ்.சி மேத்ஸ், கவர்மென்ட் ஜாப்னாலும் விவசாயத்தையும், ஆடு மாடுகளையும் விட்டதேயில்ல. எங்க வீடு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஒரு மினி இல்லல, பெரிய சரணாலயமாவே இருந்துருக்கு. அதுலயும் அப்பா பெரிய பால் பண்ணையே வச்சிருந்தார்.

எனக்கு நினைவு தெரிஞ்சி, பசு மாடு, கிடாரி, கன்னுகுட்டின்னு கிட்டத்தட்ட அம்பதுக்கு மேல மாடுங்க உண்டு எங்க வீட்ல. ஒரு நேரத்துக்கு குறைந்தபட்சம் நூறு லிட்டர் பால் பால் சொசைட்டிக்கு போகும். அங்க இருந்து வேன் நேரடியாவே வந்து எடுத்துட்டு போய்டும். நான் ப்ளஸ் டூ முடிக்குர வரைக்கும் இந்த ராஜ வாழ்க்கை அப்பாவோடது. எந்த மாட்டுக்கு என்ன பிரச்சனைன்னு தூரத்துல இருந்தே கணிச்சுடுவார். அப்பா அதயெல்லாம் வாஞ்சையா தடவிக் குடுக்குறத பாக்குறதே தனி அழகு....

நீங்க கேக்கலாம், மாடு வளக்குறது சம்பாத்தியத்துக்கு தானேன்னு. ஆனா எங்க அப்பாவ பொருத்தவரைக்கும் அப்படி இல்ல. இங்க கன்னுகுட்டிங்க சுதந்திரமா லாந்தும். காலைலயும் சாயங்காலமும் பட்டிய தொறந்து விட்டா கன்னுகுட்டிங்களே வந்து பால குடிச்சி, மீதி வைக்குற பால தான் பால்கார அண்ணா கறக்கணும். ஒரு மாட்டுல ஒரு நாள் பால் அதிகமா கறந்துட்டா அந்த அண்ணா கிட்ட அப்பா சண்டைக்கு போய்டுவார். கன்னுக்குட்டி இப்ப பட்னியால கிடக்கும், ஏன் இப்படி பண்ணினன்னு கேட்டு கேட்டு அவர் ஆள விடுங்கண்ணேன்னு ஓடிடுவார்.

எப்பவுமே அந்த அண்ணா அம்மாகிட்ட சொல்ற ஒரு விஷயம், சில வீடுகள்ல கறக்குற பால் குறைஞ்சுட்டா நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க, இதுக்காகவே நாங்க பால் கறக்கும் போது பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி சேர்த்து கறந்து குடுப்போம். ஆனா இங்க அப்படியே தலைகீழா இருக்குன்னு. அப்பா அப்படிப் பட்டவர்.

அப்புறம் ஒரு நாள் வாழ்க்கையே மாறி போச்சு. எனக்காக வேலை, சொந்த பந்தம்னு எல்லாத்தையும் விட்டுட்டு வர வேண்டிய சூழ்நிலை. பொண்ணுக்காக தியாகம் பண்றதே இந்த பெத்தவங்களுக்கு வேலையா போச்சே... அப்பாவோட இந்த “பசு நேசம்” ஒத்திவைக்கப்பட்டது. எல்லா பசுக்களையும் தெரிஞ்சவங்களுக்கும், நல்லா பாத்துப்பாங்கங்குற நம்பிக்கை இருக்குரவங்களுக்கும் குடுத்துட்டார். கால சக்கரம் சுழந்துட்டே இருந்துச்சு.

ஒரு நாள் அம்மாவும் திடீர்னு போய்ட, அதுவரைக்கும் எனக்கு பிரெண்ட்டா இருந்த அப்பா, அம்மாவா மாறினார். அடுத்த பெண்கள கூட என் பக்கத்துல விட மாட்டேன், என் அப்பாவை தவிர. அதனாலயே எனக்கான பணிவிடைகள அப்பா மட்டுமே பண்ணுவார். அவருக்கு தம்பியும் நானும் மட்டுமே உலகமா இருந்தோம்... கூடவே எங்க பரம்பரை பசுக்கள் ரெண்டு...

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி தான் அப்பா பழையபடி மாறத் தொடங்கினார். திடீர்னு ஒருநாள் தொழுவத்துல புதுசா ஒரு பசு வந்துச்சு. அடுத்ததடுத்த மாசங்கள்ல இப்போ கிட்டத்தட்ட ஆறு பசு, ஆறு கன்னுக்குட்டி, நாலு கிடாரி இருக்கு. காலைல எழுந்ததுமே அப்பா மாட்டுத்தொளுவத்துக்குள்ள போய்டுவாங்க. சாணி அள்ளுரதுல இருந்து, தீவனம் வச்சி, தண்ணி காட்டி, வைக்கோல் பிரிச்சி போடுறது வரைக்கும் அப்பா வேலை. பால் கறக்குறதுக்கு ஒரு அண்ணா. பால் கறந்து முடிச்சதும் ரெண்டு பேரும் சேர்ந்து அத்தனை மாட்டையும்  வரிசையா கட்டி போட்டு மோட்டார் போட்டு, வைக்கோல் வச்சி நல்லா ராவி குளிப்பாட்டுவாங்க. இப்போ தம்பியும் கூட்டு சேர்ந்துருக்கான். ஆனாலும் தம்பிக்கு ப்ரகதிய கவனிக்குரதே முழு நேர வேலை.

ஒரு தடவ அப்பா (மூணு வருஷம் இருக்கலாம்) மாட்டுத்தொழுவத்துல வழுக்கி விழுந்து கெரண்ட கால்ல விரிசல் விட்டுடுச்சு. அப்போ வீட்ல மாடு குறைவு தான்னாலும் அத எல்லாம் கவனிக்கணுமேன்னு சீக்கிரமாவே எழுந்து நடந்துட்டார்.

இன்னும் ஒரு தடவ (இது நான் ஸ்கூல் படிக்கும் போது) வீட்ல பரம்பரை பரம்பரையா வந்த பசுக்கள்ல ஒண்ணுக்கு யூட்ரஸ் கேன்சர் வந்துடுச்சு. அவ பேரு குட்டி லெட்சுமி. என்ன செலவானாலும் என் புள்ளைய காப்பாத்தணும்ன்னு தமிழ்நாடு முழுக்க இருந்து தலைசிறந்த வெட்னரி டாக்டர்களா வர வச்சார். ரோட்டுல போகும் போதும் அவ நியாபகம், தூங்கும் போதும் அவ நியாபகம். என் புள்ளைக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு புலம்பிட்டே இருப்பார். ஒரு நாள் அவளுக்கு சர்ஜரி செய்து கர்பப்பைய எடுக்கணும்னு முடிவாகி, அதுக்கான ஏற்பாடு நடந்துட்டு இருந்தப்ப என்ன நினைச்சாளோ அப்பாவ கண்கொட்டாம பாத்துகிட்டே அம்மா மடில தலை வச்சு குட்டி லெட்சுமி செத்தே போனா... எங்க குடும்பத்துல அந்த மரணம் எங்க எல்லாரையும் உலுக்கிடுச்சு.

இப்படி தான் அப்பாவுக்கும் மாடுகளுக்கும் உள்ள இந்த உறவு பிரிக்கவே முடியாத அளவு அவ்வளவு உறுதியானது. ஆறு மாசம் முன்னாடி திடீர்னு தம்பிய கூப்பிட்டு, இங்க பாரு, ஒரு வேளை நான் செத்துப் போய்டுவேன்னு தெரிஞ்சா என்னை கட்டிலோட தூக்கிட்டு வந்து இந்த மாட்டுத்தொழுவத்துல போட்டுரு, நான் அத எல்லாம் பாத்துட்டே நிம்மதியா செத்துப் போய்டுவேன்னு சொல்லியிருக்கார். கூடவே நின்னு கவனிச்சுட்டு இருந்தா மாமா, அப்பாவ திட்டித் தீத்தது தனிக் கதை.

போன வாரம், ராத்திரி எட்டு மணி இருக்கும். திடீர்னு வெளில ஒரே பரபரப்பு. வீட்ல மாமாவோட சத்தம் எல்லாம் பலமா கேக்குது. என்னன்னு எட்டிப்பாத்தா அப்பா நெஞ்சை பிடிச்சு விழுந்து கிடக்கிறார். மூக்குல ரெத்தம் வேற. படபடன்னு தூக்கி கார்ல போட்டு, வர்றேன்னு அழுத என்னை கொஞ்சமும் சட்டை பண்ணாம தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் ஹாஸ்பிட்டல் போய்ட்டாங்க. அந்த ஒரு ராத்திரி என்னோட வாழ்க்கைல நடக்கவே கூடாத ராத்திரியா இருந்துச்சு. ஓ-ன்னு கதறி அழக்கூட  ஆள் இல்லாம, அப்பாவுக்கு என்னாச்சோன்னு தவிச்ச தவிப்பு இனி யாருக்கும் வரவே கூடாது...

மதியம் வரைக்கும் டாக்டர்களால கெடு வைக்கப்பட்டு, ஒரு வழியா ரெண்டு மணிக்கு கண்ண தொறந்த அப்பா சொன்ன முதல் வார்த்தை “பால்.... மாடு... பால்.... மாடு....” இப்ப அதுவா முக்கியம்னு தடுத்த மாமாக்கள் மத்தியில, தம்பியும் நானும் அப்பாவோட புள்ளைங்க தானே... அவரோட ஆசைய நிறைவேற்ற வீட்டுக்கு கிளம்பி வந்துட்டோம். தினமும் ரெண்டு வேளை மாட்டுல பால் கறந்து, அதுக்கு தீவனம், வைக்கோல் வச்சுட்டு தான் அப்பாவ பாக்கவே போவான் தம்பி. ஸ்ட்ரோக் வந்து பேச முடியாத நிலையிலும் தம்பிகிட்ட மாட்டுக்கு தீவனம் வச்சியா, பால் கறந்தியா, எத்தன லிட்டர்ன்னு கணக்கு கேட்டுப்பார்.

இந்தா, நேத்து  சாயங்காலம் வீட்டுக்கு வந்தாச்சு. வலது கால் கொஞ்சம் இழுத்துகிட்டாலும், கைத்தாங்கலா முதல்ல மாட்டுத் தொழுவத்துக்கு தான் போனார். எல்லாரையும் நலம் விசாரிச்சுட்டு ஒரு புன்னகையோட பெருமூச்சு விட்ட எங்க அப்பா கண்டிப்பா ஒரு பால் வியாபாரி இல்லன்னு உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்.

இனி ரெஸ்ட் எடுன்னு இங்க எல்லாரும் சொல்றாங்க, ஆனா எங்கப்பா சிங்கம்டே... அவர் எழுந்து மாட்டுத் தொழுவம் போய் சாணி அள்ள இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு...

Wednesday 11 February 2015

தாய்ப்பால்இந்த பதிவ நான் ஒரு எட்டு நாள் முன்னாடியே எழுதியிருக்கணும், ஆனாலும் ஏற்கனவே ப்ளட் குரூப் பத்தி ஒரு பதிவு போட்டுட்டேன்ங்குரதாலயும் ஒரே மாதிரியான பதிவை போட்டா இவ இப்படிதாங்குற முத்திரை குத்திடக் கூடாதுங்குரதாலயும் அத எழுதாமலே விட்டுட்டேன்.

சரி, இப்ப எதுக்கு இந்த பதிவு?

நாலு நாள் முன்னாடி Abdulwahab Sherkhan​ அண்ணா கேன்சர் சம்மந்தப்பட்ட பதிவ அவரோட ப்ளாக்ல போட்ருந்தார். கேன்சருக்கான மாற்று மருத்துவம்ங்குற தொணில அந்த பதிவு இருந்தாலும், அதுல சொல்லப்பட்ட ஒரு விஷயம் தாய்ப்பால் பற்றியது. கண்டிப்பா அது என்ன விசயம்னு கடைசில சொல்றேன்... அதுக்கு முன்னாடி, வாங்க, ஒரு ப்ளாஸ்பேக் போவோம்....

......................

அன்னிக்கி க்ளாஸ்ல நுழைஞ்சதுமே பிள்ளைங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். சரி தான், இன்னிக்கும் க்ளாஸ் எடுக்க முடியாது போல, ஆனாலும் அவங்களுக்கு பிடிச்ச டாபிக் போறதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் க்ளாஸ் எடுத்துரணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ப்ளட் குரூப் பத்தின க்ளாஸ் முடிஞ்சதால, அடுத்து நான் எடுக்க வேண்டிய டாபிக், இம்யூன் சிஸ்டம். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி பத்தினது. நான் டாபிக் உள்ள போக ஆரம்பிச்சேன்...

இன்னிக்கி நாம எல்லோரும் நல்ல ஆரோக்கியமா இருக்குறோம்னா அதுக்கு காரணம் நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்தி தான். நமக்கு தெரிஞ்சதெல்லாம் நல்ல சாப்பாடு, நல்ல பொழுது போக்கு, நல்ல தூக்கம், அப்பப்ப கொஞ்சம் வேலை இல்ல படிப்பு, இதெல்லாம் தான். ஆனா நாம இப்படி ஆரோக்கியமா இருக்க, நம்ம உடம்புக்குள்ள பெரிய போராட்டமே நடக்கும் தெரியுமான்னு கேட்டேன்.அதென்ன மேடம் போராட்டம், அஹிம்சை போராட்டமான்னு ஒருத்தன் கிண்டலா கேட்டான். அப்படியே அவன ஒரு பார்வை பாத்துட்டு நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

உங்களுக்கே தெரியும், ஒரு நோய் கிருமியோட உடல்பெருக்க (இனபெருக்கம்ன்னு சொல்லியிருக்கலாம், ஆனா இந்த மைக்ரோப்ஸ் ரெண்டா பிரிஞ்சி தான் தன்னோட சந்திதிய பெருக்கிக்குது. அப்படினா அது உடல் பெருக்கம் தானே) நேரம் இருபது நிமிசத்துல இருந்தே ஆரம்பிச்சுடுது. அப்படி பாத்தா நம்மள சுத்தி இப்போ நிறைய நோய் கிருமிகள் இருக்குது. ஆனாலும் நாம ஆரோக்கியமா தான் இருக்குறோம். அது எப்படின்னு கேட்டேன்...

அப்படினா நாம ஸ்ட்ராங்கா இருக்கோம்னு அர்த்தம் மேடம்ன்னு ஒரு பொண்ணு சொன்னா. அதெல்லாம் சரி தான், அந்த ஸ்ட்ராங் எப்படி கிடைக்குதுன்னு திரும்ப கேட்டேன், நீங்களே சொல்லுங்கன்னு சொல்லிட்டா.

இப்படி நம்மள சுத்தி இருக்குற கிருமிகள அழிக்குறதுக்கு நம்ம உடம்புல ஒரு போர் படையே இருக்கு. படைகள் உருவாகும் இடம், ஆயுதக் கிடங்கு, உளவாளிகள், படை வீரர்கள், மல்யுத்த வீரர்கள், பீரங்கி, அம்பு மாதிரியான ஆயுதங்கள் எல்லாமே இருக்குன்னு சொன்னதும், ஆ....ன்னு கொஞ்ச பேர் தாடைல கைவச்சுட்டு உக்காந்து கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த நேரம் நான் நம்மோட "இம்யூன் சிஸ்டம்" பத்தி விளக்கமா சொல்ல ஆரம்பிச்சேன். தைமஸ், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் பத்தி எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்கும் போது ஒருத்தன் எலும்பு மஜ்ஜைனா என்னன்னு கேட்டான். வீட்ல ஆட்டு இறைச்சி எடுக்கும் போது ஆட்டு கால் எலும்பு உள்ள இருந்து உஸ்ஸ்ன்னு உறிஞ்சி தின்னுவியே அது தான் எலும்பு மஜ்ஜைன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க.

நம்மோட உடலை பாதுகாக்குறதுல இந்த எலும்பு மஜ்ஜையோட பங்கு ரொம்பவே பெருசு. அதே மாதிரி தான் தைமஸ்சும். நம்மோட படை வீரர்களான “பி” செல்ஸ் மற்றும் “டி” செல்ஸ்கள உருவாக்குற படைத் தளம் அதுன்னு சொன்னேன்.

சரி, யார் இந்த “பி” “டி” செல்ஸ்?

சுருக்கமா சொல்லப்போனா இதெல்லாம் நம்ம ரெத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்கள் அப்படின்னு சொன்னதும் எல்லாரும் ஓ இப்ப தெரியுதுன்னு சிரிச்சுட்டே நிமிர்ந்து உக்கார ஆரம்பிச்சாங்க.

சட்டுன்னு நான் டாபிக்க மாத்தி, “எய்ட்ஸ்”னா என்னன்னு கேட்டேன்... அந்த பக்கம் இருந்து அதுக்கான விளக்கங்கள் வர ஆரம்பிச்சுது. அது ஒரு நோய் இல்ல உடல் குறைபாடுன்னு ஒரு பொண்ணு எழுந்து சொன்னா... சரி, அப்படி என்ன குறைபாடு வருதுன்னு கேட்டேன். வெள்ளை அணுக்கள இந்த ஹச்.ஐ.வி வைரஸ்கள் அழிச்சுடும்னு சொன்னதும், வெரி குட்ன்னு கைதட்டிகிட்டேன். இன்னும் இத விளக்கமா சொல்ல முடியுமான்னு கேட்டேன். காரணம் இன்னிக்கி எய்ட்ஸ்னா என்னன்னு ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அது எப்படி பரவும், அத தடுக்க என்ன பண்ணனும்னு எல்லாம் பெரும்பாலும் எல்லாரும் தெரிஞ்சே வச்சிருப்பாங்க. நான் பிள்ளைங்க கிட்ட கேட்டப்பவும் அவங்க அத தெளிவாவே சொன்னாங்க. ஆனாலும் இந்த ஹச்.ஐ.வி வெள்ளை அணுக்கள தாக்குங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க.

நான் விரிவா சொல்ல ஆரம்பிச்சேன்.

வெள்ளை அணுக்கள்ன்னு நாம பொதுவா சொல்லிடுறோம். ஆனா இந்த வெள்ளை அணுக்கள்லயே பல வகைகள் உண்டு. தற்கொலை படை, ஆயுதப் படை, தற்காப்பு படைன்னு இங்க ஏகப்பட்ட வகைகள் உண்டு. அதுல ஒண்ணு தான் “டி-ஹெல்பர்” செல். இந்த “டி-ஹெல்பர்” எதிரிய அடையாளம் கண்டுக்க பெரிய உதவியா இருக்கும். எதிரியோட அத்தனை செயல்களையும் அதை அழிக்கும் தந்திரத்தையும் கண்டுபிடிச்சு, அத மத்த செல்கள்கிட்ட எடுத்து சொல்லும். வைரஸ், இல்ல மத்த கிருமிகளால பாதிக்கப்பட்ட நம்மோட சொந்த செல்கள், கேன்சர் செல்கள், அழிக்கப்பட வேண்டிய வயசான செல்கள்ன்னு எல்லாத்தையும் அழிக்க இந்த “டி-ஹெல்பர்” செல் தேவைபடுது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த “டி-ஹெல்பர்” செல்களுக்குள்ளயே போய் தன்னோட இனத்த இந்த ஹச்.ஐ.வி வைரஸ் பெருக்கிக்குது. ஒவ்வொரு “டி-ஹெல்பர்” செல்லா அது கைப்பற்றி நம்மோட மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் முடக்கிடுது. . “டி-ஹெல்பர்” செல்களோட உதவி இல்லனா பெரும்பாலும் நம்மால எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியலனா எதிரிகள் நம்ம உடல் முழுக்க ஊடுருவிடுவாங்க. அப்புறம் என்ன, ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதிய கொண்டு வந்துருவாங்க.

கடைசியில அத்தனை உடல் வலிமையையும் இழந்து, வர்ற நோய்கள எதிர்த்துப் போராட சக்தி இல்லாம மரணம் வந்துடுதுன்னும், ஆரோக்கியமா இருந்தா ஒரு ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஆள் இன்னும் கொஞ்ச வருஷம் வாழலாம்ன்னும் சொன்னேன். இனிமேல், ஹச்.ஐ.வி வைரஸ் எதை தாக்குதுன்னு கேட்டா, வெள்ளை அணுக்களோட முக்கிய படையான “டி-ஹெல்பர்” செல்சை தாக்குதுன்னு சொல்லுங்கன்னும் சொன்னேன்.

இன்னும் இன்னும் பாடம் உள்ள போய்ட்டே இருந்தோம். போர் வீரர்கள் பத்தி சொன்னேன், இப்போ போர் ஆயுதம் பத்தி சொல்லப்போறேன். நம்ம உடம்புல நடக்குற போர்ல முக்கியமான ஆயுதங்கள் தான் “ஆன்டி-பாடீஸ்”ங்குற “இம்முனோக்ளோப்லின்ஸ்” (பிறபொருளெதிரிகள்ன்னு கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்ல வருது). இது ஒரு அம்பு மாதிரி, நம்மோட “பி” செல்ஸ்ல பிறந்து, எதிரிகள நோக்கி ஏவப்படுதுன்னு சொன்னதும், செம மேடம், இப்படி எல்லாம் நம்ம உடம்புல நடக்குதான்னு ரொம்பவே இன்ட்ரெஸ்ட் ஆகிட்டாங்க பசங்க. இந்த “ஆன்டி-பாடீஸ்” ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். நம்மள சுத்தி உள்ள லெட்சகணக்கான கண்ணுக்குத் தெரியாத எதிரிகள அழிக்க அதே அளவு விதமான “ஆன்டி-பாடீஸ்” நம்ம உடம்புல உண்டு. இந்த “பி” செல்ஸ் முதல் தாக்குதல்ல எதிரிய அடையாளம் கண்டு, அதை நியாபகம் வச்சிருக்கும். அடுத்த முறை அதே எதிரி நம்ம உடம்புக்குள்ள நுழைஞ்சா ஒரே, அடி, எதிரி காலின்னதும் க்ளாஸ் முழுக்க ஹஹான்னு சிரிப்பு.

இதனால தான் நாம பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுறோம். இந்த தடுப்பூசிங்குறது வேற எதுவுமே இல்ல, நமக்கு நோய் உருவாக்குற அதே எதிரிய கொலை பண்ணியோ இல்ல கைய கால கட்டிப் போட்டோ நாம நம்மோட வெள்ளை அணுக்கள் கிட்ட பிடிச்சு குடுத்துடுறோம் (நீண்ட விளக்கம் குடுத்தேன்). நம்ம எதிரிய தெரிஞ்சிகிட்ட நம்ம போர் படைகள் அதுக்கு எதிரான ஆயுதங்களையும் படைவீரர்களையும் தயாரா வச்சு அத அழிச்சிடுது. கூடவே அத நியாபகமா தன்னோட மெமரி செல்ஸ்ல சேமிச்சும் வச்சுடுது. அடுத்த தடவ அதே எதிரி உள்ள வந்தா, முதல் தாக்குதல்லயே அதை அடிச்சு காலி பண்ணிடுது. அதனால தான் போலியோ, தட்டம்மை, இன்னும் பல, இந்த மாதிரி வியாதிகளுக்கு நாம தடுப்பூசி போட்டா, அந்த நோய் திரும்ப வர்றதேயில்ல.

சரி, இது எல்லாத்தையும் விடுங்க, தாய்ப்பால் பத்தி என்ன நினைக்குறீங்கன்னு அடுத்த கேள்விய கேட்டேன். அது ரொம்ப சத்தானது அப்படிங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க பிள்ளைங்க. ஒரு பொண்ணு எழுந்து சொன்னா, எங்க அக்காவுக்கு ஆப்பரேசன் பண்ணி தான் மேடம் குழந்தைய எடுத்தாங்க, அதனால ரெண்டு மூணு நாள் புட்டிப்பால் குடுத்தாங்க, அப்புறம் அவ தாய்ப்பால் தான் குடுத்தா, அது தான ரொம்ப சத்துன்னு சொன்னா.

நான் சிரிச்சுட்டே, கொலஸ்ட்ரம்(colestrum)னா என்னன்னு கேட்டேன். யாருக்கும் தெரியல. இது கண்டிப்பா எல்லாருமே தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்னு சொல்லிட்டு அத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

கொலஸ்ட்ரம்ங்குறது ஒரு தாயோட இறுதி பிரசவகாலங்கள்ல சுரக்குற சீம்பால். இது பால் மாதிரி வெள்ளையா இருக்காது. ஒரு மாதிரி பிசுபிசுப்பா மஞ்சள் கலந்தோ, சில நேரங்கள்ல நிறம் இல்லாமலோ இருக்கும்ன்னு சொன்னதும், ஐயே மேடம் அது கெட்டுப்போன பால், அத எல்லாம் பிள்ளைக்கு குடுக்க கூடாதுன்னு ஒருத்தன் சொல்றான்.

உக்காருடான்னு அவன உக்கார வச்சுட்டு நான் தொடர ஆரம்பிச்சேன்.

இப்படி தான் நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க. அந்த பால் கெட்டுப் போய்டுச்சுன்னும், அத பிள்ளைக்கு குடுக்க கூடாதுனும் வயசானவங்களே தடுக்குறாங்க. இன்னும் கொஞ்ச பேர் பிள்ள பெத்த உடம்பு, அத போய் ஏன் கஷ்டப்படுத்தணும், மெதுவா தாய்ப்பால் குடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி ரெண்டு மூணு நாள் பிள்ளைக்கு தாய்ப்பால் குடுக்குறதில்ல. ஆனா அவங்களுக்கு தெரியுறதில்ல, அதுல தான் அத்தன உயிர் சத்தும் இருக்குன்னு.

ஒரு குழந்தை பிறந்து, இந்த பூமியில எதிர்கொள்ளப் போற அத்தனை கிருமிகளுக்கும் எதிரான உயிர்பொருள் அந்த கொலஸ்ட்ரம்ல இருக்கு. குழந்தை பிறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள இந்த சீம்பாலை குழந்தைகளுக்கு கண்டிப்பா குடுக்கணும். அது இருபத்திநாலு மணிநேரமோ இல்ல நாப்பெத்தெட்டு மணி நேரமோ தான் சுரக்கும். நீங்க புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களோ இல்லையோ, நல்ல படிப்பு சொல்லி குடுக்குறீங்களோ இல்லையோ ஆனா தயவு செய்து ஆரோக்கியத்த குடுங்க. நீங்க உங்க பிள்ளைக்கு குடுக்குற விலைமதிப்பு இல்லாத ஒரே சொத்து இந்த கொலஸ்ட்ரம் தான்னும் சொன்னேன்.

இந்த கொலஸ்ட்ரம் எல்லா உயிர்கள்லயும் சுரக்கும். நம்ம வீட்ல பசு போடுற நேரத்துல கன்னுக்குட்டிக்கு குடுத்து போக மீதி பாலை (முதல் சீம்பாலை) தீட்டுன்னு கீழ கொட்டிடுவோம். ஆனா அதுல அத்தன உயிர்பொருள் இருக்கு. வீணாக்காதீங்கன்னு சொன்னதும் கண்டிப்பா சொல்றோம் மேடம், இனிமேல் எங்க வீட்டு பசு குட்டி போட்டுச்சுனா கண்டிப்பா அத வீணாக்க விட மாட்டேன்னு ஒருத்தி சொன்னா. அத எல்லாருமே ஆமோதிச்சாங்க.

.............................................................
தாய்ப்பால் பற்றின ஒன்னொரு விஷயம் இருக்குன்னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா, அது வேற ஒண்ணும் இல்ல, கேன்சருக்கு எதிரா போராடவும் இந்த கொலஸ்ட்ரம் பெரிய உதவி செய்யுது. பசுவோட கொலஸ்ட்ரம் மனுஷ கொலஸ்ட்ரம் அளவு அதே சக்தி வாய்ந்தது. அதனால அத கூட கேன்சர் நோயாளிகள் எடுத்துக்கலாம். கூடவே பிற சிகிச்சைகளையும் எடுத்துக்கலாம்.

கொலஸ்ட்ரத்துல இருக்குற என்சைம்கள், இமுனோக்ளோபின்கள் எல்லாம் நம்மை தாக்குற பேக்டீரியா, வைரஸ்கள், எல்லாத்தையும் அழிச்சு உடம்ப அம்பது வழிகள்ல புத்துணர்ச்சியாக்குது. அலர்ஜி, டயாபடிஸ், அல்சர், இதயநோய்ன்னு எல்லா வகை நோய்க்கும் பாரபட்சமே இல்லாம குணம் அளிக்குது.

................................................

அட, அதெல்லாம் விடுங்கங்க, நம்பிக்கையும் தைரியமும் இருந்தா, எந்த வியாதியும் நம்மள அண்டவே அண்டாது இல்லையா....

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை, வாழ்ந்து தான் பாத்துறலாமே

Friday 6 February 2015

பார்த்திக்காக -3


பார்த்தி,

சில நேரங்கள்ல
இந்த மாதிரியான சூழ்நிலை
எல்லோருக்கும் வந்துரும் போல...

எப்பவுமே உன்னோட
தோள்ல தொங்கிட்டே இருக்க
ஆசப்பட்டேண்டா,
அதனால தான் சுமைன்னு
இறக்கி வைக்க நினைச்சியா?

பார்த்தி, என்னை பாத்தா
ஏன் உனக்கு இத்தன வெறுப்பா இருக்கு?
எதனால பார்த்தி இப்படி விலகிப் போற?

நீ இல்லாத
ஒவ்வொரு நிமிசமும் தகிக்குதுடா.
அப்படியே நெருப்பு கங்குகள
விழுங்குற மாதிரி இருக்கு.

அம்மாவா இருப்பேன்னு
சொன்னியேடா பார்த்தி,
பாரு, என் கண்ண நல்லா பாரு பார்த்தி,
அழக் கூட உரிமை இல்லாம
ஈரம் கசிஞ்சு கலங்குறத...

நான் அழுதா
உன்னால தாங்கிக்க முடியாதா பார்த்தி,
என்னை அழாம பாத்துக்க மாட்டியா?

என்னிக்காவது ஒரு நாளு
என்னைத் தேடி வந்துருவடா,
ஆனா வர்றப்ப நான் நானா இருப்பேனான்னு
சந்தேகமா இருக்கு பார்த்தி...
பைத்தியம் பிடிச்சுடும்டா அதுக்குள்ளே...

பார்த்தி,
நேத்து ராத்திரி என்னை
மிஸ் பண்றதா சொன்னியே,
நிஜமாவே அது நீ தானா?
கனவு மாதிரி இருந்துச்சுடா,
சொல்லிட்டு அடுத்த நொடி காணாம போய்ட்ட?

புலம்ப விட்டுராத பார்த்தி,
உன் பிரியம்வதனா பாவமில்லையா?

நான் உன்னை காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடு பார்த்தி...

வந்துருடா...


- உயிரற்ற பிரியம்வதனா


Wednesday 4 February 2015

பார்த்திக்காக -2வெளில என்னமா மழை பெய்யுது,
டேய் பார்த்தி,
இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான
நீ என்கிட்ட உன் காதல சொன்ன?

ஹேய்... என்ன,
நான் எவ்வளவு உருகிப் போய்
பேசிட்டு இருக்கேன்,
நீ அங்க என்னடா பாத்துட்டு இருக்க?

அட, இதெல்லாம் தெரியாத்தனமா
உன்னை லவ் பண்றப்ப
நான் உனக்கு எழுதின லெட்டர்ஸ் தான?

பார்த்தி, இங்க பாரு,
இந்த லெட்டர்ல உன்ன எப்படி
திட்டு திட்டுன்னு திட்டியிருக்கேன்,
நல்லா வேணும்டா உனக்கு...

ஒரு நாளு நல்லா சண்டை போட்டுட்டு
அப்புறம் பெரிய இவனாட்டம் சமாதானத்துக்கு வந்தியே,
அப்ப நீ குடுத்த முத்தத்துக்கு பதில் முத்தம் இது....
ஹீ-ன்னு இளிக்காதடா, பாக்க சகிக்கல...
அன்னிக்கி உன் உதடு எப்படி வீங்கி போச்சுன்னு
எனக்கு தான தெரியும்...

இந்த லெட்டெர பாரு,
உன்னையெல்லாம் நல்ல பையன்னு நம்பி
ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்.
அடேங்கப்பா, என்னடா லெட்டர் முழுக்க
அதையே எழுதியிருக்கேன்?

ஹ்ம்ம். இதப் பாரு பார்த்தி,
மனசுக்கு பாரமா இருந்தப்ப
உன்கிட்ட தான் ஓடி வந்துருக்கேன்.
நீ என்னை எப்படி தாங்கிப்பன்னு
எனக்கு தான தெரியும்...
ஆனாலும் கொஞ்சம் நல்லவன்டா நீ...

ஆமா, ஏண்டா, மழை பெய்யுது,
பக்கத்துல சுட சுட காபி,
அத விட சூடா நீ லவ் பண்றேன்னு அலைவியே
அந்த பிரியம்வதனா,
இத எல்லாம் விட்டுட்டு இன்னும் என்னடா
அந்த லெட்டர்ஸ்சயே பாத்துட்டு இருக்க?

நகருடா,
அந்த பேப்பரும் பென்னும் எங்க வச்சேன்,
உனக்கெல்லாம் நாலு வார்த்த
நறுக்குன்னு திட்டி
ஒரு லெட்டர் எழுதினா தான் நிமிர்ந்து பாப்ப....


இப்படிக்கு ப்ரியம்வதனான்னு சொன்னாத்தான் தெரியுமோ?

Tuesday 3 February 2015

பார்த்திக்காக - 1கண்ணாடி முன்னின்று
பார்த்துக்கொண்டிருக்கிறேன் பார்த்தி.
பாரேன், காலம் என்னை
எத்தனைப் புரட்டிப் போட்டிருந்தாலும்
என் எழில் மட்டும் குறையவேயில்லை.

இதோப் பார் இந்த கண்களை.
சோகங்கள் இறுகப் பற்றி திரைவிழுந்திருந்தாலும்
அந்த கருந்திரை உன் பிம்பம் சுமந்து
குதூகலிக்கிறது பார் பார்த்தி.

நீ வருடிய கன்னங்கள்
இன்னும் வறண்டுப் போய்விடவில்லை பார்த்தி.
தொட்டுப்பார்த்தால்
உன் முத்தங்களால் ஜில்லிடுகிறது.

கண்களை மூடிக்கொண்டு
நடக்க முயல்கிறேன். பின்னின்று அணைத்து
என்னை தாங்கிக் கொள்ளும் அந்த
பாதங்கள் உன்னுடையது தானே பார்த்தி?

அடிக்கடி யாரோ அழைப்பது போல்
தோன்றுகிறது பார்த்தி.
நீ தான் அழைக்கிறாயா?

உன்னைத் தான்
வார்த்தைகளால் கொன்றுவிட்டு
திரும்பிப்பார்க்காமலே வந்துவிட்டேனே.
பார்த்தி, திடீரென்று இருண்ட குகைக்குள்
விழுந்து விட்டது போல் தோன்றுகிறது பார்த்தி.

மன்னிப்பாயா பார்த்தி,
நான் காயப்படுத்த
எனக்கு உரிமையானவன்
நீ மட்டும் தானே பார்த்தி.

இதோ வரைமுறையே இல்லாமல்
வழிந்தோடும் இந்த கண்ணீர் கூட
அழகாய் தானே இருக்கிறது பார்த்தி.

விம்மித் துடிக்கும் இந்த உதடுகள் தான்
எத்தனை அழகு பார்த்தி.
இன்னமும் என் உதட்டுச்சாயம்
உன்னில் மிச்சமிருக்கிறதா பார்த்தி.

என் மேற்பூச்சுகளை உதிர்த்து விட்டு பார் பார்த்தி.
உனக்காக நான் இன்னும் அழகாய்
மெருகேறியப்படியேதானிருக்கிறேன்.

இந்த கண்ணாடியை ஓர் நாள்
தூக்கிப் போட்டுவிடத்தான் வேண்டும் பார்த்தி.
எத்தனை பொல்லாதது பார்த்தாயா?
உள்ளிருக்கும் உன்னையும் வெளிச்சம் போட்டு
காட்டிக்கொடுத்து விடுகிறது.

பார்த்தி, நேரமாகிவிட்டது.
பள்ளியிலிருந்து மகள் வந்துவிடப் போகிறாள்.
அவளுக்கு என் எழில் தெரிய வேண்டாம்.
நீ கலைத்து விட்ட என் கூந்தலுக்குள்
ஒளிந்துக் கொள் பார்த்தி.

மீண்டுமொருமுறை உன்னை இங்கு சந்தித்துக் கொள்கிறேன்.
நேரம் தவறிவிடாதே பார்த்தி.
நீயில்லையென்றால் துடித்துப் போய்விடுவேனென்பது
நீயறியாததா பார்த்தி.

- உன் பிரியம்வதனா

Monday 2 February 2015

குடி குடியை கெடுக்கும்...நேத்து மதியம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். ஏற்கனவே உடம்பு சரியில்லன்னு சொல்லியிருந்ததால வீட்ல யாரும் டிஸ்டர்ப் பண்ணல. திடீர்னு ஒரு குரல் என் ரூம் பக்கத்துல ஒலிச்சுது. நான் பாப்பாவ பாக்கணும், பாத்துட்டு தான் போவேன்னு. பாட்டி அவளுக்கு உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுக்குறான்னு சொன்ன பிறகும் கேக்கல. நான் உடனே மெதுவா எழுந்து கதவைத் திறந்தேன்.

ஒரு ஆள் நின்னுட்டு இருந்தார். கூடவே பாட்டி. அப்பா ஹால்ல சோபால உக்காந்துட்டு இருக்காங்க.

“பாப்பா, நல்லா இருக்கியாமா, என் பேர் பால்ராஜ்மா. இங்க தான்மா நம்மூருல டீக்கடை வச்சிருக்கேன். நீ வெளில போகும்போது பாப்பேன் பாப்பா, ஆனா பேச எல்லாம் வாய்ப்பு கிடைக்கல. வர்ற ஞாயிற்று கிழமை தங்கச்சிக்கு (அவர் பொண்ணுக்கு) நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன் பாப்பா. நீ கண்டிப்பா வரணும். வந்து நான் எப்படி ஏற்பாடு எல்லாம் பண்ணியிருக்கேன்னு பாக்கணும்”ன்னு சொன்னார். அவர் கிட்ட அப்படி ஒரு ஆர்வம். ஆளை முழுங்குற மாதிரி பாக்குறாங்கன்னு சொல்வாங்களே, அப்படி தலை முதல் கால் வரைக்கும் என்னை பாத்து பாத்து சந்தோசப்படுறார்.

எனக்கு ஒரே குழப்பம். யாருடா இந்த ஆளு, சம்மந்தமே இல்லாம நம்மள பாப்பா பாப்பாங்குறார், அப்பா வேற பாத்து புன்னகைச்சுட்டே இருக்கார்ன்னு. இதுல அவர் பொண்ணு நிச்சயதார்த்தத்த வேற நான் எதுக்கு போய் பாக்கணும்ன்னு சுத்தமா புரியல.

நின்னுட்டேயும் இருக்க முடியல, சரி இந்தாளு விட மாட்டார் போலன்னு மெதுவா ஹால்ல போய் அப்பா பக்கத்துல உக்காந்துட்டு நீங்களும் உக்காருங்கன்னு சொன்னேன்.

இல்ல, பரவாலமா, எனக்கு நேரம் ஆச்சு, மத்த வீடுகளுக்கும் போய் எல்லாருக்கும் அழைப்பு வைக்கணும்ன்னு சொல்லிட்டே, பாப்பாவுக்கு என்னை தெரியுதான்னு கேட்டார். நான் இல்ல தெரியலன்னு சொன்னதும், அதானே உனக்கு தெரியாது, அப்போ நீ ரொம்ப சின்ன கொழந்தை, ஆனா எனக்கு தெரியும், என்னோட வாழ்க்கைல வெளக்கு ஏத்தி வச்சவமா நீன்னு சொன்னதும் எனக்கு ஒரே குழப்பம்.

அப்பாவ பாக்குறேன், சரி, அப்பாகிட்ட கேட்டா நல்லாயிருக்காதுன்னு அவர் கிட்டயே அப்படி என்ன பண்ணினேன்னு கேட்டேன்.

நீ அப்போ ரொம்ப சின்னக் கொழந்த பாப்பா, தெருவுல உன் வயசு புள்ளைங்களோட விளையாடிட்டு இருப்ப. நான் ஒரு மொடாக் குடிகாரன். அன்னிக்கி குடிச்சுட்டு கருமம் ஒடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம கிடந்துருக்கேன். சுத்தமா முடியல பாப்பா. வர்றவன் போறவனெல்லாம் காறித் துப்புறான். எட்டிட்டு சவுட்டிப் போட்டு போனவனும் உண்டு. அப்ப நீ தான் பாப்பா வீட்ல இருந்து ஒரு சீலத் துணி கொண்டு வந்து போர்த்தி விட்ட. என்கிட்ட தண்ணி வேணுமான்னு கேட்ட. ஆனா அப்புறம் என் பொண்டாட்டி வந்து கூட்டிட்டு போய்ட்டா. அம்மா இருந்தா சொல்லியிருப்பாங்க. என் பொண்டாட்டி புள்ளையோட அம்மா கிட்ட தான் வந்து அழுதேன். புத்தியோட பொழச்சுக்கன்னு அறிவுரை சொன்னாங்க பாப்பா. உங்க மாமன் பெரியய்யா கிட்ட சொல்லி கடை வைக்க உதவி பண்ணுனதே நம்ம தாயி தான் பாப்பா. அன்னியோட அந்த கருமத்த உட்டவன் தான் பாப்பா. இன்னிக்கி என் புள்ளைக்கு நல்ல நெலமைல கல்யாணம் கட்டிக் குடுக்கப் போறேன். நான் நல்லா வந்தத உங்க கிட்ட எல்லாம் காட்டணும்ன்னு ஆச பாப்பான்னு சொல்லிட்டே போனார்.

எனகென்னமோ அம்மா தான் நிறைய அட்வைஸ் பண்ணியிருப்பான்னு தோணிச்சு. சின்ன புள்ளைல அப்படி நான் என்ன செய்துருக்க முடியும்?

உங்க பொண்ணு என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டேன். ஏதோ டீச்சராம்ல, அதுக்கு படிச்சிருக்கா பாப்பா, அடுத்த தடவ வேலைக்கு ஆள் எடுக்கும் போது இவளுக்கும் கிடச்சிருமாம்ல, இப்ப நம்ம பெரிய தாத்தன் ஸ்கூல்ல தான் வாத்திச்சியா இருக்கான்னு சொன்னார்.

மனசுக்குள்ள சந்தோசமா இருந்துச்சு. அவர அனுப்பிட்டு ரூமுக்குள்ள வந்தப்ப எதுவுமே செய்யலனாலும் என்னமோ சாதிச்சுட்ட மாதிரி அப்படி ஒரு கெத்து வந்துச்சு. தன்னாலயே சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்துடுச்சு.

படுத்துட்டே யோசிச்சு பாக்க ஆரம்பிச்சேன். இந்த குடியும், போதையும் எத்தன குடும்பங்கள சீரழிச்சு போட்ருக்கு? குடிக்குற எத்தனை பேருக்கு அவங்க வீட்டு புள்ள குட்டிங்க வாழ்க்கையோட அவங்க விளையாடுறது தெரியும்? குடிக்கும் போது அத எல்லாம் நினச்சு பாத்தா ஒரு மிடறு உள்ள இறங்குமா என்ன?

ஸ்கூல் படிக்குறப்ப பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கிராமம் கிராமமா சுத்தியிருக்கோம். பெரும்பாலும் எங்க நோக்கம் ரெத்த தானமும், எய்ட்ஸ் அவேர்னஸ்சும் தான்னாலும் இந்த மாதிரி நிறைய ஆட்கள கடந்து வந்துருக்கோம். குடிச்சு குடிச்சு குடல் அழுகி, வாழத் தெரியாம பொண்டாட்டியவே தொழிலா மாத்தி வாழ வேண்டிய அவல நிலையையும் பாத்துருக்கோம், நடு ரோட்டுல பையன தூக்கி போட்டு அடிச்சு உதச்சு, அவன் ஸ்கூல் பீச பிடிங்கிட்டு போற அப்பனையும் பாத்துருக்கோம். குடி போதைல ரோட்டுல அடிபட்டு நாயை விட கேவலமா செத்துக் கிடந்தவங்கள பத்தி கேள்வியும் பட்ருக்கோம். எங்கப்பன் எல்லாம் செத்தா தாண்டா எங்களுக்கு நிம்மதின்னு பிஞ்சு மனசு கதறுனத கேட்ருக்கோம்.

நாங்கெல்லாம் சொல்லி எந்த ஆளும் திருந்துன மாதிரி எனக்கு நியாபகம் இல்ல. ஆனா அந்த வகைல பால்ராஜ் ஒரு சாதனை மனுஷன் தானே... அந்த மனுஷன் வீட்டு கல்யாணத்துக்கு போகாம வேற எந்த வீட்டு கல்யாணத்துக்கு போகப் போறோம்?

இந்த நேரத்துல குடி பத்தி நான் எழுதின கவிதைய உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணிச்சு...

இதோ அந்த கவிதை....

அப்பா ப்ளீஸ்ப்பா.....
..........................................................
நீயெல்லாம் ஏன்ப்பா குடிக்குற?
குடிச்சுட்டு வந்து அம்மாவ போட்டு அடிக்குற...
அம்மா பாவம்லப்பா, நமக்காக தானே
அடுத்த வீட்ல போய் பத்து பாத்திரம் தேச்சுட்டு வருது.

அடுத்தவங்க கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு
அவங்களுக்கு மாடா ஒழச்சுட்டு
அவங்க குடுக்குற காச பாத்து பாத்து
வீட்டுக்கு கொண்டு வந்தா
நீ அத புடிங்கிட்டு போய் குடிச்சுட்டு வர...

நான் ஏன்ப்பா உனக்கு பொண்ணா பொறந்தேன்?
பொட்ட புள்ளைய பெத்து போட்டுருக்கா
சிறுக்கினு அப்பவும் அம்மாவ தான் திட்டுற...

என்கிட்ட நீ பாசமா தான் இருக்க,
ஆனா குடிச்சுட்டு வந்தா
புள்ளனு கூட பாக்காம
பொட்டச்சிக்கி எதுக்கு படிப்புன்னு
எட்டில ஒதைக்குற...

போன பரிட்சையிலயாவது அந்த கோபிய முந்திட்டு
நான் முதலாவதா வரணும்னு நினைச்சேன்.
என் புத்தகத்த எல்லாம் கிழிச்சு போட்டுருந்தா கூட
ஒட்டி வச்சி படிச்சிருப்பேன்,
நீ தீயில போட்டு கருக்கிட்ட.

பள்ளி கூடத்துல நான் தான் நல்லா பாடுறேனாம்
பெரிய பாட்டுக்காரியா வருவன்னு சார்மார்
எல்லாம் சொல்றாங்க...
இப்போ நடந்த பாட்டு போட்டியில
நான் தான் பஸ்ட்...
கலக்டர் முன்னால பாட சொன்னாங்க...
ஆனா பாக்க நீ வரலயேப்பா...

நம்ம சங்கீதா அப்பா
அவள சந்தைக்கு கூட்டிட்டு போய்
கேட்டதெல்லாம் வாங்கி குடுப்பாராம்...
கத கதயா சொல்றா...

போன மாசம் திருவிழாவுக்கு
பெரியப்பா கூட எனக்கு பலூன் வாங்கி தந்தாரு,
நடேசன் மாமா தேன்குழல் வாங்கி தந்தாரு...
நீ என்ன எங்கயுமே கூட்டிட்டு போனது இல்ல,
ஆசையா என்ன தூக்கி தட்டாமால சுத்தினதில்ல...

ஆனாலும் அப்பா, நீ அப்பப்போ வாங்கிட்டு வருவியே
அந்த முட்ட போண்டா, வாழக்கா பஜ்ஜி, பரோட்டா...
அதெல்லாம் நீ பக்கத்துல உக்காந்து
தின்னுடி ராசாத்தி னு சொல்லுறப்போ
எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

கண்ணுல இருந்து தண்ணி வருதுப்பா,
எனக்கு எங்கப்பா தான் ஒலகமேனு
கூட்டாளிங்க கிட்ட எல்லாம் ஓடி போய்
சொல்லணும் போல இருக்கும்.

நீ ஏன்ப்பா அப்படியே இருந்துர கூடாது. உன்ன நான்
படிச்சு பெரிய ஆபீசர் ஆகி
ராஜா மாதிரி வச்சுப்பேன்ப்பா...

உன் மடியில படுத்து தூங்கணும்,
உன் கழுத்த கட்டிக்கிட்டு
அந்த ராமாயியக்கா பசங்க
என்ன கிண்டல் பண்ணின கதை சொல்லணும்.
நீ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினா
நான் விழுந்து விழுந்து சிரிப்பேனே...

அப்பா, குடிக்க மட்டும் செய்யாதப்பா.
நீ குடிச்சுட்டு வந்துபுட்டா
உங்கண்ணுக்கு புள்ளையா தெரிய மாட்டேங்குறேன்...
கழுத கழுதனு என்னைய கழுதைய விட கேவலமா நினைக்குற...

உன்கிட்ட சொல்ல வேண்டியத எல்லாம்
சுவர பாத்தும் வானத்த பாத்தும் தான்
சொல்ல வேண்டியதா இருக்கு...
அப்பா, ப்ளீஸ்ப்பா......