Wednesday, 11 February 2015

தாய்ப்பால்இந்த பதிவ நான் ஒரு எட்டு நாள் முன்னாடியே எழுதியிருக்கணும், ஆனாலும் ஏற்கனவே ப்ளட் குரூப் பத்தி ஒரு பதிவு போட்டுட்டேன்ங்குரதாலயும் ஒரே மாதிரியான பதிவை போட்டா இவ இப்படிதாங்குற முத்திரை குத்திடக் கூடாதுங்குரதாலயும் அத எழுதாமலே விட்டுட்டேன்.

சரி, இப்ப எதுக்கு இந்த பதிவு?

நாலு நாள் முன்னாடி Abdulwahab Sherkhan​ அண்ணா கேன்சர் சம்மந்தப்பட்ட பதிவ அவரோட ப்ளாக்ல போட்ருந்தார். கேன்சருக்கான மாற்று மருத்துவம்ங்குற தொணில அந்த பதிவு இருந்தாலும், அதுல சொல்லப்பட்ட ஒரு விஷயம் தாய்ப்பால் பற்றியது. கண்டிப்பா அது என்ன விசயம்னு கடைசில சொல்றேன்... அதுக்கு முன்னாடி, வாங்க, ஒரு ப்ளாஸ்பேக் போவோம்....

......................

அன்னிக்கி க்ளாஸ்ல நுழைஞ்சதுமே பிள்ளைங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். சரி தான், இன்னிக்கும் க்ளாஸ் எடுக்க முடியாது போல, ஆனாலும் அவங்களுக்கு பிடிச்ச டாபிக் போறதுக்கு முன்னாடி நாம கொஞ்சம் க்ளாஸ் எடுத்துரணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ப்ளட் குரூப் பத்தின க்ளாஸ் முடிஞ்சதால, அடுத்து நான் எடுக்க வேண்டிய டாபிக், இம்யூன் சிஸ்டம். அதாவது நோய் எதிர்ப்பு சக்தி பத்தினது. நான் டாபிக் உள்ள போக ஆரம்பிச்சேன்...

இன்னிக்கி நாம எல்லோரும் நல்ல ஆரோக்கியமா இருக்குறோம்னா அதுக்கு காரணம் நம்மோட உடம்புல இருக்குற நோய் எதிர்ப்பு சக்தி தான். நமக்கு தெரிஞ்சதெல்லாம் நல்ல சாப்பாடு, நல்ல பொழுது போக்கு, நல்ல தூக்கம், அப்பப்ப கொஞ்சம் வேலை இல்ல படிப்பு, இதெல்லாம் தான். ஆனா நாம இப்படி ஆரோக்கியமா இருக்க, நம்ம உடம்புக்குள்ள பெரிய போராட்டமே நடக்கும் தெரியுமான்னு கேட்டேன்.அதென்ன மேடம் போராட்டம், அஹிம்சை போராட்டமான்னு ஒருத்தன் கிண்டலா கேட்டான். அப்படியே அவன ஒரு பார்வை பாத்துட்டு நான் சொல்ல ஆரம்பிச்சேன்.

உங்களுக்கே தெரியும், ஒரு நோய் கிருமியோட உடல்பெருக்க (இனபெருக்கம்ன்னு சொல்லியிருக்கலாம், ஆனா இந்த மைக்ரோப்ஸ் ரெண்டா பிரிஞ்சி தான் தன்னோட சந்திதிய பெருக்கிக்குது. அப்படினா அது உடல் பெருக்கம் தானே) நேரம் இருபது நிமிசத்துல இருந்தே ஆரம்பிச்சுடுது. அப்படி பாத்தா நம்மள சுத்தி இப்போ நிறைய நோய் கிருமிகள் இருக்குது. ஆனாலும் நாம ஆரோக்கியமா தான் இருக்குறோம். அது எப்படின்னு கேட்டேன்...

அப்படினா நாம ஸ்ட்ராங்கா இருக்கோம்னு அர்த்தம் மேடம்ன்னு ஒரு பொண்ணு சொன்னா. அதெல்லாம் சரி தான், அந்த ஸ்ட்ராங் எப்படி கிடைக்குதுன்னு திரும்ப கேட்டேன், நீங்களே சொல்லுங்கன்னு சொல்லிட்டா.

இப்படி நம்மள சுத்தி இருக்குற கிருமிகள அழிக்குறதுக்கு நம்ம உடம்புல ஒரு போர் படையே இருக்கு. படைகள் உருவாகும் இடம், ஆயுதக் கிடங்கு, உளவாளிகள், படை வீரர்கள், மல்யுத்த வீரர்கள், பீரங்கி, அம்பு மாதிரியான ஆயுதங்கள் எல்லாமே இருக்குன்னு சொன்னதும், ஆ....ன்னு கொஞ்ச பேர் தாடைல கைவச்சுட்டு உக்காந்து கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த நேரம் நான் நம்மோட "இம்யூன் சிஸ்டம்" பத்தி விளக்கமா சொல்ல ஆரம்பிச்சேன். தைமஸ், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் பத்தி எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்கும் போது ஒருத்தன் எலும்பு மஜ்ஜைனா என்னன்னு கேட்டான். வீட்ல ஆட்டு இறைச்சி எடுக்கும் போது ஆட்டு கால் எலும்பு உள்ள இருந்து உஸ்ஸ்ன்னு உறிஞ்சி தின்னுவியே அது தான் எலும்பு மஜ்ஜைன்னு சொன்னதும் எல்லாரும் சிரிச்சுட்டாங்க.

நம்மோட உடலை பாதுகாக்குறதுல இந்த எலும்பு மஜ்ஜையோட பங்கு ரொம்பவே பெருசு. அதே மாதிரி தான் தைமஸ்சும். நம்மோட படை வீரர்களான “பி” செல்ஸ் மற்றும் “டி” செல்ஸ்கள உருவாக்குற படைத் தளம் அதுன்னு சொன்னேன்.

சரி, யார் இந்த “பி” “டி” செல்ஸ்?

சுருக்கமா சொல்லப்போனா இதெல்லாம் நம்ம ரெத்தத்துல இருக்குற வெள்ளை அணுக்கள் அப்படின்னு சொன்னதும் எல்லாரும் ஓ இப்ப தெரியுதுன்னு சிரிச்சுட்டே நிமிர்ந்து உக்கார ஆரம்பிச்சாங்க.

சட்டுன்னு நான் டாபிக்க மாத்தி, “எய்ட்ஸ்”னா என்னன்னு கேட்டேன்... அந்த பக்கம் இருந்து அதுக்கான விளக்கங்கள் வர ஆரம்பிச்சுது. அது ஒரு நோய் இல்ல உடல் குறைபாடுன்னு ஒரு பொண்ணு எழுந்து சொன்னா... சரி, அப்படி என்ன குறைபாடு வருதுன்னு கேட்டேன். வெள்ளை அணுக்கள இந்த ஹச்.ஐ.வி வைரஸ்கள் அழிச்சுடும்னு சொன்னதும், வெரி குட்ன்னு கைதட்டிகிட்டேன். இன்னும் இத விளக்கமா சொல்ல முடியுமான்னு கேட்டேன். காரணம் இன்னிக்கி எய்ட்ஸ்னா என்னன்னு ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. அது எப்படி பரவும், அத தடுக்க என்ன பண்ணனும்னு எல்லாம் பெரும்பாலும் எல்லாரும் தெரிஞ்சே வச்சிருப்பாங்க. நான் பிள்ளைங்க கிட்ட கேட்டப்பவும் அவங்க அத தெளிவாவே சொன்னாங்க. ஆனாலும் இந்த ஹச்.ஐ.வி வெள்ளை அணுக்கள தாக்குங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க.

நான் விரிவா சொல்ல ஆரம்பிச்சேன்.

வெள்ளை அணுக்கள்ன்னு நாம பொதுவா சொல்லிடுறோம். ஆனா இந்த வெள்ளை அணுக்கள்லயே பல வகைகள் உண்டு. தற்கொலை படை, ஆயுதப் படை, தற்காப்பு படைன்னு இங்க ஏகப்பட்ட வகைகள் உண்டு. அதுல ஒண்ணு தான் “டி-ஹெல்பர்” செல். இந்த “டி-ஹெல்பர்” எதிரிய அடையாளம் கண்டுக்க பெரிய உதவியா இருக்கும். எதிரியோட அத்தனை செயல்களையும் அதை அழிக்கும் தந்திரத்தையும் கண்டுபிடிச்சு, அத மத்த செல்கள்கிட்ட எடுத்து சொல்லும். வைரஸ், இல்ல மத்த கிருமிகளால பாதிக்கப்பட்ட நம்மோட சொந்த செல்கள், கேன்சர் செல்கள், அழிக்கப்பட வேண்டிய வயசான செல்கள்ன்னு எல்லாத்தையும் அழிக்க இந்த “டி-ஹெல்பர்” செல் தேவைபடுது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த “டி-ஹெல்பர்” செல்களுக்குள்ளயே போய் தன்னோட இனத்த இந்த ஹச்.ஐ.வி வைரஸ் பெருக்கிக்குது. ஒவ்வொரு “டி-ஹெல்பர்” செல்லா அது கைப்பற்றி நம்மோட மொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் முடக்கிடுது. . “டி-ஹெல்பர்” செல்களோட உதவி இல்லனா பெரும்பாலும் நம்மால எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி நாம எதிரிய அடையாளம் கண்டுபிடிக்க முடியலனா எதிரிகள் நம்ம உடல் முழுக்க ஊடுருவிடுவாங்க. அப்புறம் என்ன, ஆள் ஆளுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதிய கொண்டு வந்துருவாங்க.

கடைசியில அத்தனை உடல் வலிமையையும் இழந்து, வர்ற நோய்கள எதிர்த்துப் போராட சக்தி இல்லாம மரணம் வந்துடுதுன்னும், ஆரோக்கியமா இருந்தா ஒரு ஹச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஆள் இன்னும் கொஞ்ச வருஷம் வாழலாம்ன்னும் சொன்னேன். இனிமேல், ஹச்.ஐ.வி வைரஸ் எதை தாக்குதுன்னு கேட்டா, வெள்ளை அணுக்களோட முக்கிய படையான “டி-ஹெல்பர்” செல்சை தாக்குதுன்னு சொல்லுங்கன்னும் சொன்னேன்.

இன்னும் இன்னும் பாடம் உள்ள போய்ட்டே இருந்தோம். போர் வீரர்கள் பத்தி சொன்னேன், இப்போ போர் ஆயுதம் பத்தி சொல்லப்போறேன். நம்ம உடம்புல நடக்குற போர்ல முக்கியமான ஆயுதங்கள் தான் “ஆன்டி-பாடீஸ்”ங்குற “இம்முனோக்ளோப்லின்ஸ்” (பிறபொருளெதிரிகள்ன்னு கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்ல வருது). இது ஒரு அம்பு மாதிரி, நம்மோட “பி” செல்ஸ்ல பிறந்து, எதிரிகள நோக்கி ஏவப்படுதுன்னு சொன்னதும், செம மேடம், இப்படி எல்லாம் நம்ம உடம்புல நடக்குதான்னு ரொம்பவே இன்ட்ரெஸ்ட் ஆகிட்டாங்க பசங்க. இந்த “ஆன்டி-பாடீஸ்” ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். நம்மள சுத்தி உள்ள லெட்சகணக்கான கண்ணுக்குத் தெரியாத எதிரிகள அழிக்க அதே அளவு விதமான “ஆன்டி-பாடீஸ்” நம்ம உடம்புல உண்டு. இந்த “பி” செல்ஸ் முதல் தாக்குதல்ல எதிரிய அடையாளம் கண்டு, அதை நியாபகம் வச்சிருக்கும். அடுத்த முறை அதே எதிரி நம்ம உடம்புக்குள்ள நுழைஞ்சா ஒரே, அடி, எதிரி காலின்னதும் க்ளாஸ் முழுக்க ஹஹான்னு சிரிப்பு.

இதனால தான் நாம பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுறோம். இந்த தடுப்பூசிங்குறது வேற எதுவுமே இல்ல, நமக்கு நோய் உருவாக்குற அதே எதிரிய கொலை பண்ணியோ இல்ல கைய கால கட்டிப் போட்டோ நாம நம்மோட வெள்ளை அணுக்கள் கிட்ட பிடிச்சு குடுத்துடுறோம் (நீண்ட விளக்கம் குடுத்தேன்). நம்ம எதிரிய தெரிஞ்சிகிட்ட நம்ம போர் படைகள் அதுக்கு எதிரான ஆயுதங்களையும் படைவீரர்களையும் தயாரா வச்சு அத அழிச்சிடுது. கூடவே அத நியாபகமா தன்னோட மெமரி செல்ஸ்ல சேமிச்சும் வச்சுடுது. அடுத்த தடவ அதே எதிரி உள்ள வந்தா, முதல் தாக்குதல்லயே அதை அடிச்சு காலி பண்ணிடுது. அதனால தான் போலியோ, தட்டம்மை, இன்னும் பல, இந்த மாதிரி வியாதிகளுக்கு நாம தடுப்பூசி போட்டா, அந்த நோய் திரும்ப வர்றதேயில்ல.

சரி, இது எல்லாத்தையும் விடுங்க, தாய்ப்பால் பத்தி என்ன நினைக்குறீங்கன்னு அடுத்த கேள்விய கேட்டேன். அது ரொம்ப சத்தானது அப்படிங்குற அளவு மட்டுமே தெரிஞ்சி வச்சிருக்காங்க பிள்ளைங்க. ஒரு பொண்ணு எழுந்து சொன்னா, எங்க அக்காவுக்கு ஆப்பரேசன் பண்ணி தான் மேடம் குழந்தைய எடுத்தாங்க, அதனால ரெண்டு மூணு நாள் புட்டிப்பால் குடுத்தாங்க, அப்புறம் அவ தாய்ப்பால் தான் குடுத்தா, அது தான ரொம்ப சத்துன்னு சொன்னா.

நான் சிரிச்சுட்டே, கொலஸ்ட்ரம்(colestrum)னா என்னன்னு கேட்டேன். யாருக்கும் தெரியல. இது கண்டிப்பா எல்லாருமே தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்னு சொல்லிட்டு அத பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

கொலஸ்ட்ரம்ங்குறது ஒரு தாயோட இறுதி பிரசவகாலங்கள்ல சுரக்குற சீம்பால். இது பால் மாதிரி வெள்ளையா இருக்காது. ஒரு மாதிரி பிசுபிசுப்பா மஞ்சள் கலந்தோ, சில நேரங்கள்ல நிறம் இல்லாமலோ இருக்கும்ன்னு சொன்னதும், ஐயே மேடம் அது கெட்டுப்போன பால், அத எல்லாம் பிள்ளைக்கு குடுக்க கூடாதுன்னு ஒருத்தன் சொல்றான்.

உக்காருடான்னு அவன உக்கார வச்சுட்டு நான் தொடர ஆரம்பிச்சேன்.

இப்படி தான் நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க. அந்த பால் கெட்டுப் போய்டுச்சுன்னும், அத பிள்ளைக்கு குடுக்க கூடாதுனும் வயசானவங்களே தடுக்குறாங்க. இன்னும் கொஞ்ச பேர் பிள்ள பெத்த உடம்பு, அத போய் ஏன் கஷ்டப்படுத்தணும், மெதுவா தாய்ப்பால் குடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி ரெண்டு மூணு நாள் பிள்ளைக்கு தாய்ப்பால் குடுக்குறதில்ல. ஆனா அவங்களுக்கு தெரியுறதில்ல, அதுல தான் அத்தன உயிர் சத்தும் இருக்குன்னு.

ஒரு குழந்தை பிறந்து, இந்த பூமியில எதிர்கொள்ளப் போற அத்தனை கிருமிகளுக்கும் எதிரான உயிர்பொருள் அந்த கொலஸ்ட்ரம்ல இருக்கு. குழந்தை பிறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள இந்த சீம்பாலை குழந்தைகளுக்கு கண்டிப்பா குடுக்கணும். அது இருபத்திநாலு மணிநேரமோ இல்ல நாப்பெத்தெட்டு மணி நேரமோ தான் சுரக்கும். நீங்க புள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கீங்களோ இல்லையோ, நல்ல படிப்பு சொல்லி குடுக்குறீங்களோ இல்லையோ ஆனா தயவு செய்து ஆரோக்கியத்த குடுங்க. நீங்க உங்க பிள்ளைக்கு குடுக்குற விலைமதிப்பு இல்லாத ஒரே சொத்து இந்த கொலஸ்ட்ரம் தான்னும் சொன்னேன்.

இந்த கொலஸ்ட்ரம் எல்லா உயிர்கள்லயும் சுரக்கும். நம்ம வீட்ல பசு போடுற நேரத்துல கன்னுக்குட்டிக்கு குடுத்து போக மீதி பாலை (முதல் சீம்பாலை) தீட்டுன்னு கீழ கொட்டிடுவோம். ஆனா அதுல அத்தன உயிர்பொருள் இருக்கு. வீணாக்காதீங்கன்னு சொன்னதும் கண்டிப்பா சொல்றோம் மேடம், இனிமேல் எங்க வீட்டு பசு குட்டி போட்டுச்சுனா கண்டிப்பா அத வீணாக்க விட மாட்டேன்னு ஒருத்தி சொன்னா. அத எல்லாருமே ஆமோதிச்சாங்க.

.............................................................
தாய்ப்பால் பற்றின ஒன்னொரு விஷயம் இருக்குன்னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா, அது வேற ஒண்ணும் இல்ல, கேன்சருக்கு எதிரா போராடவும் இந்த கொலஸ்ட்ரம் பெரிய உதவி செய்யுது. பசுவோட கொலஸ்ட்ரம் மனுஷ கொலஸ்ட்ரம் அளவு அதே சக்தி வாய்ந்தது. அதனால அத கூட கேன்சர் நோயாளிகள் எடுத்துக்கலாம். கூடவே பிற சிகிச்சைகளையும் எடுத்துக்கலாம்.

கொலஸ்ட்ரத்துல இருக்குற என்சைம்கள், இமுனோக்ளோபின்கள் எல்லாம் நம்மை தாக்குற பேக்டீரியா, வைரஸ்கள், எல்லாத்தையும் அழிச்சு உடம்ப அம்பது வழிகள்ல புத்துணர்ச்சியாக்குது. அலர்ஜி, டயாபடிஸ், அல்சர், இதயநோய்ன்னு எல்லா வகை நோய்க்கும் பாரபட்சமே இல்லாம குணம் அளிக்குது.

................................................

அட, அதெல்லாம் விடுங்கங்க, நம்பிக்கையும் தைரியமும் இருந்தா, எந்த வியாதியும் நம்மள அண்டவே அண்டாது இல்லையா....

நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை, வாழ்ந்து தான் பாத்துறலாமே

4 comments:

 1. Replies
  1. புற்று நோய் ஏன் பெருகுகிறது என்பதும் புரிகிறது...

   சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி... தொடர்க... பாராட்டுக்கள்...

   Delete
 2. சூப்பர் பதிவு காயத்ரி!

  இன்றுதான் இந்தப்பக்கம் வந்தேன்!

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 3. அருமையான பதிவு. பாராட்டுகள்....

  ReplyDelete