Friday, 13 February 2015

அப்பாவும் மாடு வளர்ப்பும்...அப்பா....

என் யாதுமானவர். அம்மா இருந்தப்ப எனக்கு பிரெண்ட்டா இருந்தாரு. பொம்பள புள்ளன்னு என் மேல பாசம் அதிகம். நான் அதிகமா நடந்ததே இல்ல, அப்பா தோள்ல தான் எப்பவுமே தொங்கிட்டு இருப்பேன். அம்மாவோட அதிதீவிர காதலன். அம்மா மேல இருக்குற லவ்வ அப்பா அதிகமா வெளிபடுத்தினது இல்லனாலும், எங்கயுமே எப்பவுமே அம்மாவ விட்டுத் தராத மனுஷன்.

விளையாட்டா நான் யோவ் குமாரு, உம்ம பொண்டாட்டிய டைவேர்ஸ் பண்ணுங்கயா, அவ தொல்ல தாங்க முடியலன்னு சொன்னா, இங்க பாரு, நான் உனக்கு அப்பாங்குறது முன்னாடியே அவளுக்கு புருஷன். எனக்கு முதல்ல அவ சந்தோசம் தான் முக்கியம்னு சொல்றவரு...

அப்பா மேல எப்பவுமே பயம் எல்லாம் வந்ததே இல்ல. ஊர் சுத்த கிளம்பினா அம்மாவ விட அப்பா கிட்ட பெர்மிசன் வாங்குறது ரொம்ப ஈசி. வயசாகிடுச்சுன்னு எப்பவுமே நினைக்க மாட்டார். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாருமே அவருக்கும் பிரெண்ட்ஸ். சாப்பாட்டு நேரம் (அது அம்மா டிபார்ட்மென்ட், ஊட்டி விடப்படும்) போக மீதி நேரங்கள்ல எல்லா பசங்களும் அப்பா அப்பான்னு அப்பாவையே சுத்தி வருவாங்க.

என்னதான் அப்பா அந்த காலத்து பி.எஸ்.சி மேத்ஸ், கவர்மென்ட் ஜாப்னாலும் விவசாயத்தையும், ஆடு மாடுகளையும் விட்டதேயில்ல. எங்க வீடு விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஒரு மினி இல்லல, பெரிய சரணாலயமாவே இருந்துருக்கு. அதுலயும் அப்பா பெரிய பால் பண்ணையே வச்சிருந்தார்.

எனக்கு நினைவு தெரிஞ்சி, பசு மாடு, கிடாரி, கன்னுகுட்டின்னு கிட்டத்தட்ட அம்பதுக்கு மேல மாடுங்க உண்டு எங்க வீட்ல. ஒரு நேரத்துக்கு குறைந்தபட்சம் நூறு லிட்டர் பால் பால் சொசைட்டிக்கு போகும். அங்க இருந்து வேன் நேரடியாவே வந்து எடுத்துட்டு போய்டும். நான் ப்ளஸ் டூ முடிக்குர வரைக்கும் இந்த ராஜ வாழ்க்கை அப்பாவோடது. எந்த மாட்டுக்கு என்ன பிரச்சனைன்னு தூரத்துல இருந்தே கணிச்சுடுவார். அப்பா அதயெல்லாம் வாஞ்சையா தடவிக் குடுக்குறத பாக்குறதே தனி அழகு....

நீங்க கேக்கலாம், மாடு வளக்குறது சம்பாத்தியத்துக்கு தானேன்னு. ஆனா எங்க அப்பாவ பொருத்தவரைக்கும் அப்படி இல்ல. இங்க கன்னுகுட்டிங்க சுதந்திரமா லாந்தும். காலைலயும் சாயங்காலமும் பட்டிய தொறந்து விட்டா கன்னுகுட்டிங்களே வந்து பால குடிச்சி, மீதி வைக்குற பால தான் பால்கார அண்ணா கறக்கணும். ஒரு மாட்டுல ஒரு நாள் பால் அதிகமா கறந்துட்டா அந்த அண்ணா கிட்ட அப்பா சண்டைக்கு போய்டுவார். கன்னுக்குட்டி இப்ப பட்னியால கிடக்கும், ஏன் இப்படி பண்ணினன்னு கேட்டு கேட்டு அவர் ஆள விடுங்கண்ணேன்னு ஓடிடுவார்.

எப்பவுமே அந்த அண்ணா அம்மாகிட்ட சொல்ற ஒரு விஷயம், சில வீடுகள்ல கறக்குற பால் குறைஞ்சுட்டா நம்ம கிட்ட சண்டைக்கு வருவாங்க, இதுக்காகவே நாங்க பால் கறக்கும் போது பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி சேர்த்து கறந்து குடுப்போம். ஆனா இங்க அப்படியே தலைகீழா இருக்குன்னு. அப்பா அப்படிப் பட்டவர்.

அப்புறம் ஒரு நாள் வாழ்க்கையே மாறி போச்சு. எனக்காக வேலை, சொந்த பந்தம்னு எல்லாத்தையும் விட்டுட்டு வர வேண்டிய சூழ்நிலை. பொண்ணுக்காக தியாகம் பண்றதே இந்த பெத்தவங்களுக்கு வேலையா போச்சே... அப்பாவோட இந்த “பசு நேசம்” ஒத்திவைக்கப்பட்டது. எல்லா பசுக்களையும் தெரிஞ்சவங்களுக்கும், நல்லா பாத்துப்பாங்கங்குற நம்பிக்கை இருக்குரவங்களுக்கும் குடுத்துட்டார். கால சக்கரம் சுழந்துட்டே இருந்துச்சு.

ஒரு நாள் அம்மாவும் திடீர்னு போய்ட, அதுவரைக்கும் எனக்கு பிரெண்ட்டா இருந்த அப்பா, அம்மாவா மாறினார். அடுத்த பெண்கள கூட என் பக்கத்துல விட மாட்டேன், என் அப்பாவை தவிர. அதனாலயே எனக்கான பணிவிடைகள அப்பா மட்டுமே பண்ணுவார். அவருக்கு தம்பியும் நானும் மட்டுமே உலகமா இருந்தோம்... கூடவே எங்க பரம்பரை பசுக்கள் ரெண்டு...

கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் முன்னாடி தான் அப்பா பழையபடி மாறத் தொடங்கினார். திடீர்னு ஒருநாள் தொழுவத்துல புதுசா ஒரு பசு வந்துச்சு. அடுத்ததடுத்த மாசங்கள்ல இப்போ கிட்டத்தட்ட ஆறு பசு, ஆறு கன்னுக்குட்டி, நாலு கிடாரி இருக்கு. காலைல எழுந்ததுமே அப்பா மாட்டுத்தொளுவத்துக்குள்ள போய்டுவாங்க. சாணி அள்ளுரதுல இருந்து, தீவனம் வச்சி, தண்ணி காட்டி, வைக்கோல் பிரிச்சி போடுறது வரைக்கும் அப்பா வேலை. பால் கறக்குறதுக்கு ஒரு அண்ணா. பால் கறந்து முடிச்சதும் ரெண்டு பேரும் சேர்ந்து அத்தனை மாட்டையும்  வரிசையா கட்டி போட்டு மோட்டார் போட்டு, வைக்கோல் வச்சி நல்லா ராவி குளிப்பாட்டுவாங்க. இப்போ தம்பியும் கூட்டு சேர்ந்துருக்கான். ஆனாலும் தம்பிக்கு ப்ரகதிய கவனிக்குரதே முழு நேர வேலை.

ஒரு தடவ அப்பா (மூணு வருஷம் இருக்கலாம்) மாட்டுத்தொழுவத்துல வழுக்கி விழுந்து கெரண்ட கால்ல விரிசல் விட்டுடுச்சு. அப்போ வீட்ல மாடு குறைவு தான்னாலும் அத எல்லாம் கவனிக்கணுமேன்னு சீக்கிரமாவே எழுந்து நடந்துட்டார்.

இன்னும் ஒரு தடவ (இது நான் ஸ்கூல் படிக்கும் போது) வீட்ல பரம்பரை பரம்பரையா வந்த பசுக்கள்ல ஒண்ணுக்கு யூட்ரஸ் கேன்சர் வந்துடுச்சு. அவ பேரு குட்டி லெட்சுமி. என்ன செலவானாலும் என் புள்ளைய காப்பாத்தணும்ன்னு தமிழ்நாடு முழுக்க இருந்து தலைசிறந்த வெட்னரி டாக்டர்களா வர வச்சார். ரோட்டுல போகும் போதும் அவ நியாபகம், தூங்கும் போதும் அவ நியாபகம். என் புள்ளைக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு புலம்பிட்டே இருப்பார். ஒரு நாள் அவளுக்கு சர்ஜரி செய்து கர்பப்பைய எடுக்கணும்னு முடிவாகி, அதுக்கான ஏற்பாடு நடந்துட்டு இருந்தப்ப என்ன நினைச்சாளோ அப்பாவ கண்கொட்டாம பாத்துகிட்டே அம்மா மடில தலை வச்சு குட்டி லெட்சுமி செத்தே போனா... எங்க குடும்பத்துல அந்த மரணம் எங்க எல்லாரையும் உலுக்கிடுச்சு.

இப்படி தான் அப்பாவுக்கும் மாடுகளுக்கும் உள்ள இந்த உறவு பிரிக்கவே முடியாத அளவு அவ்வளவு உறுதியானது. ஆறு மாசம் முன்னாடி திடீர்னு தம்பிய கூப்பிட்டு, இங்க பாரு, ஒரு வேளை நான் செத்துப் போய்டுவேன்னு தெரிஞ்சா என்னை கட்டிலோட தூக்கிட்டு வந்து இந்த மாட்டுத்தொழுவத்துல போட்டுரு, நான் அத எல்லாம் பாத்துட்டே நிம்மதியா செத்துப் போய்டுவேன்னு சொல்லியிருக்கார். கூடவே நின்னு கவனிச்சுட்டு இருந்தா மாமா, அப்பாவ திட்டித் தீத்தது தனிக் கதை.

போன வாரம், ராத்திரி எட்டு மணி இருக்கும். திடீர்னு வெளில ஒரே பரபரப்பு. வீட்ல மாமாவோட சத்தம் எல்லாம் பலமா கேக்குது. என்னன்னு எட்டிப்பாத்தா அப்பா நெஞ்சை பிடிச்சு விழுந்து கிடக்கிறார். மூக்குல ரெத்தம் வேற. படபடன்னு தூக்கி கார்ல போட்டு, வர்றேன்னு அழுத என்னை கொஞ்சமும் சட்டை பண்ணாம தன்னந்தனியா விட்டுட்டு எல்லாரும் ஹாஸ்பிட்டல் போய்ட்டாங்க. அந்த ஒரு ராத்திரி என்னோட வாழ்க்கைல நடக்கவே கூடாத ராத்திரியா இருந்துச்சு. ஓ-ன்னு கதறி அழக்கூட  ஆள் இல்லாம, அப்பாவுக்கு என்னாச்சோன்னு தவிச்ச தவிப்பு இனி யாருக்கும் வரவே கூடாது...

மதியம் வரைக்கும் டாக்டர்களால கெடு வைக்கப்பட்டு, ஒரு வழியா ரெண்டு மணிக்கு கண்ண தொறந்த அப்பா சொன்ன முதல் வார்த்தை “பால்.... மாடு... பால்.... மாடு....” இப்ப அதுவா முக்கியம்னு தடுத்த மாமாக்கள் மத்தியில, தம்பியும் நானும் அப்பாவோட புள்ளைங்க தானே... அவரோட ஆசைய நிறைவேற்ற வீட்டுக்கு கிளம்பி வந்துட்டோம். தினமும் ரெண்டு வேளை மாட்டுல பால் கறந்து, அதுக்கு தீவனம், வைக்கோல் வச்சுட்டு தான் அப்பாவ பாக்கவே போவான் தம்பி. ஸ்ட்ரோக் வந்து பேச முடியாத நிலையிலும் தம்பிகிட்ட மாட்டுக்கு தீவனம் வச்சியா, பால் கறந்தியா, எத்தன லிட்டர்ன்னு கணக்கு கேட்டுப்பார்.

இந்தா, நேத்து  சாயங்காலம் வீட்டுக்கு வந்தாச்சு. வலது கால் கொஞ்சம் இழுத்துகிட்டாலும், கைத்தாங்கலா முதல்ல மாட்டுத் தொழுவத்துக்கு தான் போனார். எல்லாரையும் நலம் விசாரிச்சுட்டு ஒரு புன்னகையோட பெருமூச்சு விட்ட எங்க அப்பா கண்டிப்பா ஒரு பால் வியாபாரி இல்லன்னு உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்.

இனி ரெஸ்ட் எடுன்னு இங்க எல்லாரும் சொல்றாங்க, ஆனா எங்கப்பா சிங்கம்டே... அவர் எழுந்து மாட்டுத் தொழுவம் போய் சாணி அள்ள இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு...

5 comments:

 1. Manam nekilnthu vittathu...Arumaiyana appa...valthukal

  ReplyDelete
 2. வணக்கம்
  செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்... உங்கள் வீட்டில் பசுமாடுகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் எங்கள் வீட்டில் 150 தாண்டிவிடும் அப்படி பண்ணை... தாங்கள் கவனிப்பது போல நாங்கள் கவனிப்பதில்லை... ஒருவரை பிடித்து அவரிடம் கொடுத்து விடுவோம் மாத மாதம் சம்பளம் கொடுப்பதும் எட்டி நின்று பார்ப்பதுதான்...கடமை... அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
  த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எண்ணிக்கை எல்லாம் முக்கியம் இல்ல அண்ணா, ஆனா அதுல முழுக்க முழுக்க அப்பாவோட நேசம் இருக்கும். தேங்க்ஸ் அண்ணா

   Delete
 3. மனம் தொட்ட பகிர்வு.....

  ReplyDelete