Showing posts with label சிரிக்கலாம் வாங்க. Show all posts
Showing posts with label சிரிக்கலாம் வாங்க. Show all posts

Wednesday, 15 July 2015

தீனி பண்டாரங்கள்



ரொம்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் பரோட்டாவும் சிக்கனும் சாப்ட்ருக்கேன். அதுக்கான காரணத்த சொன்னா யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்.

சாயங்காலமா கார்த்திக்கும் எனக்கும் சண்டை. நான் பாட்டுக்கு கோபத்துல இருக்கேன், அவர் கிச்சிலி காட்டுற மாதிரி சமாதான கொடி காட்டிட்டு இருக்கார், நான் விடுவனா கோபத்துல திட்டிட்டு இருக்கும் போதே பரோட்டா நியாபகம் வந்துடுச்சு. உடனே இன்னொரு மொபைல கைல எடுத்து அப்பாவுக்கு கால் பண்ணினேன். ரிங் போய்ட்டே இருக்கு, அப்பா அட்டென்ட் பண்ணின மாதிரி இல்ல. சரின்னு நந்து வீட்டுக்கு கால் பண்ணேன். நந்து எடுத்துட்டு தாத்தா கடைக்கு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டா. விடுவனா, எப்பவும் அப்பா போய் இருக்குற கடைக்கு கால் பண்ணி அப்பா கிட்ட பரோட்டா வாங்கிட்டு வர சொல்லிட்டு தான் கார்த்திக் கூட சமாதானத்துக்கே வந்தேன். திங்குற விசயத்துல நான் என்னிக்கும் வஞ்சம் வச்சதே இல்லன்னு உங்களுக்கு எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சிருக்கும்.

சின்ன வயசுல வீட்ல அம்மாவுக்கும் எனக்கும் எப்பவாவது பயங்கரமா சண்டை நடக்கும். அப்ப எல்லாம் நான் கோபத்துல மூஞ்சிய தூக்கி வச்சுப்பேன். சாப்பாட்டு நேரம் வந்ததும் அம்மா என்னை சாப்பிட வர சொல்ல மாட்டா. “எம்பொண்ணு ரோசக்காரி, இன்னிக்கி சாப்பிட மாட்டா”ன்னு சொல்லிட்டே மத்தவங்களுக்கு எல்லாம் தட்டு எடுத்து வைப்பா. நான் அப்படியே ஹால்ல சோபால உர்ர்ர்ன்னு உக்காந்துட்டு இருப்பேன்.

அம்மா, முதல் தோசைய சுட்டு அப்பா தட்டுல வைப்பா. நான் விடுவனா, விறுவிறுன்னு எழுந்து போய் அப்பா முதல் வாய் வைக்குறதுக்கு முன்னாடியே தட்டை பறிச்சு நான் திங்க ஆரம்பிச்சுடுவேன். அம்மா உள்ளுக்குள்ள சிரிச்சாலும் முறைச்சுட்டே இன்னொரு தட்டுல இன்னொரு தோசைய அப்பாவுக்கு கொண்டு வந்து வைப்பா. நான் விடுவனா, அதையும் தூக்கிடுவேன்.

வழக்கமா ரெண்டு தோசைக்கு மேல திங்க மாட்டேன். ஆனா சண்டைன்னு வந்துட்டா கோபம் தலைக்கேறிடும். அதனால கிட்டத்தட்ட ஏழு தோசைய பிடுங்கி பறிச்சு தின்னா தான் என் கோபம் அடங்கும். இதுல தோசைக்கு பதில் சப்பாத்தி, புட்டு, பூரி, தாளிச்ச கப்பக்கிழங்கு, கோதுமை ரவை எத வேணா போட்டு ஃபில் பண்ணிக்கலாம்.

அப்பவும் வெறும் தோசைய தின்னா நல்லாயிருக்குமா, கிட்சன் உள்ள புகுந்து மிக்சர் டப்பா, சிப்ஸ் டப்பா, ஜாங்கிரி, அதிரசம்னு இருக்குறத எல்லாம் பதம் பாப்பேன். அம்மா ஜாடைலயே தீனிப் பண்டாரம்ன்னு சொல்லுவா. விடக் கூடாதுன்னு பாட்டியோட பொறிக்கடலை, திரிச்சி வச்ச அவல், முறுக்கு, சீவி வச்ச பனங்கிழங்குன்னு உள்ளப் போகும்.

ஆனா தம்பி இதுக்கு நேர் எதிர். என்னை விட பெரிய தீனி பண்டாரம் அவன்தானாலும் கோபம்னு வந்துட்டா தொர ஒரு நாள் ஆனாலும் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டாரு. யார் வீட்டுக்கு போனாலும் தம்பி எதையுமே சாப்பிட தயங்கி தயங்கி நிப்பான். நான் தான் தட்டோட எடுத்துட்டு வந்து திங்க ஆரம்பிப்பேன். சரி போனா போகுதுன்னு அவனுக்கும் எதையாவது எடுத்து நீட்டினா பயபக்கி கூச்சத்துல தொடக்கூட செய்யாம நெளிஞ்சுட்டு நிப்பான். அவன பாக்க வச்சு தின்னா பாவம்னு போனா போகுதுன்னு நானும் ஒரு முக்கா தட்ட காலி பண்ணிட்டு மிச்சம் வச்சிடுவேன். ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வாங்கிட்டு வர்றதெல்லாம் அவன் கிட்ட முதல்ல போயே ஆகணும். அப்புறமா தான் அம்மா அத வாங்கி ரெண்டு பேருக்குமா பங்கு வச்சு தருவா. கொரங்கு, அவன் பங்க எப்பவும் வச்சி வச்சி தின்னு என்னை வெறுப்பேத்துவான். நான் தான் எல்லாத்தையும் ஒரே வாய்ல போடுற ராகமாச்சே, அடுத்த நேரத்துக்கு திங்க ஒண்ணும் மிச்சம் இருக்காது. கொஞ்சம் தாலேன்னு கேட்டா மனசிருந்தா தருவான், இல்லனா மாங்கு மாங்குன்னு அழுது காட்டிக் குடுத்துடுவான்.

ஒரு நாளு இப்படி தான், தம்பி கிட்ட பக்கத்து வீட்டு பொண்ணு சண்டைக்கு போயிருக்கா. விஷயம் வேற ஒண்ணுமில்ல, அவ எங்க வீட்ல பூனை போட்ட குட்டி ஒண்ணை தூக்கிட்டு அவ வீட்டுக்கு போய்ட்டா. இவன் அவங்க வீட்டு வாசல்லயே நின்னு அழுதுட்டு நின்னுருக்கான். பூனைக் குட்டி வேணும்னும் கேக்கல. அந்த பொண்ணு அங்க இருந்தே குட்டிய தூக்கி காட்டி அளவம் (வெவ்வவே) காட்டிட்டு இருக்கா. அப்புறம் மூஞ்சிய பாரு மூஞ்சிய, நல்லா அனுமார் மாதிரி இருக்க, என் முன்னால நிக்காத போன்னு அவன திட்டியும் விட்டுருக்கா. அவனோ பூனைக்குட்டி கிடைக்காத வரைக்கும் அந்த இடத்த விட்டு நகருறதா இல்ல.

விசயம் இன்னொரு பக்கத்து வீட்டு பையன் மூலமா எனக்கு வந்துச்சு. நேரா அவ வீட்டுக்கு போனேன். தம்பிய பாத்தேன். பாத்துட்டே அவ வீட்டுக்குள்ள போனேன். அங்க கிட்சனுக்குள்ள நுழைஞ்சேன். நல்லா கருவாட்டு குழம்பு வாசனை அடிச்சுது. சுத்தி முத்திப் பாத்தேன். புள்ள பூனைக்குட்டிய தூக்கிட்டு வெளில போயிடுச்சு போல.

தம்பி வான்னு அவன் கைய புடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் ரெண்டு பேருமா சேர்ந்து கருவாட்டு குழம்பையும் சோத்தையும் சுத்தமா வழிச்சு சாப்ட்டோம். அடுத்து என்ன இருக்குன்னு பாத்தேன். ஒரு டப்பால கடலை முட்டாய், பொறி உருண்டை எல்லாம் இருந்துச்சு. கேக்கணுமா, டப்பா காலி. இனி இத இப்படியே விடக் கூடாதுன்னு அடுப்பு பக்கத்துல பப்படம் இருந்துச்சு. கூடவே எண்ணெய் சட்டியும். அடுப்ப பத்த வச்சு பப்படத்தையும் பொரிச்சு சாப்ட்டு காலிப் பண்ணினோம்.

அதுக்குள்ள அந்த புள்ள வீட்டுக்குள்ள வந்துடுச்சு. அய்யய்யோ இவங்க எல்லாத்தையும் திங்குறாங்கன்னு கூச்சல் போட்டா. முதல்ல எங்க பூனை குட்டிய குடு, அப்புறம் வெளில போறோம்னு சொன்னேன். ஓடிப் போய் கடவாப்பெட்டி (பனை ஓலைல செய்த பெரிய பெட்டி) வச்சு கமத்தி வச்சிருந்த பூனைக் குட்டிய எடுத்து நீட்டிட்டு இருங்க, அம்மா வரட்டும் சொல்லிக் குடுக்குறேன்னு அழுதா.

அவ அழுறத எல்லாம் யாரு கணக்குல எடுக்குறது, நமக்கு பூனைக் குட்டி தான முக்கியம். தம்பிக்கு அவ அழுறத பாத்து ஒரே சந்தோசம். அன்னிக்கி தான் நம்மள அழ வச்சவங்கள எப்படி அழ வச்சு பழி வாங்கனும்னு தம்பிக்கு க்ளாஸ் எடுத்தேன்.

வீட்டுக்கு வந்தா அப்பா சாப்பிடக் கூப்ட்டாங்க. நல்ல புள்ளைங்களா போய் டைனிங் டேபிள்ல உக்காந்து அம்மா பொரிச்சு தந்த பூரில நால ஒரு வெட்டு வெட்டினோம். சொல்ல மறந்துட்டேனே, அந்த கருவாட்டுக் குழம்பு படு சூப்பரு.



Saturday, 14 March 2015

சைட் அடித்தல் - ஒரு பிரதாப சரித்திரம்



அவன் அழகானவன்....

அதான் அழகானவன்னு சொல்லிட்டேன்ல அப்படின்னா கண்டிப்பா சைட் அடிச்சிருப்பேன்...
.....................................

நைட் சாப்பாட்டுக்கு கொத்துப் பரோட்டா கொண்டு வந்தப்ப நந்து தோனி பத்தி ரொம்பவே சிலாகிச்சுட்டு இருந்தா... கூடவே ஐ லவ் தோனி, ஹைய்யோ அவன் என்னா அழகுன்னு சிலிர்ப்பு வேற... முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள இதுக்கு பேச்சைப் பாருங்க...
................................

கன்னாபின்னான்னு சைட் அடிக்குறதுல என் அம்மா கில்லாடி... அதுவும் அம்மா ஜடேஜாவோட பயங்கர ஃபேன். எனக்கு ஜடேஜா எல்லாம் நியாபகம் இல்லனாலும் அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவ ஜடேஜா பேரை சொல்லாம விட மாட்டா... எப்ப பாத்தாலும் என் கன்னத்த பாத்து, அப்படியே ஜடேஜா கன்னம் என் பொண்ணுக்குன்னு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுப்பா... அஞ்சு வயசுல எல்லாம் போமா, யாருக்கோ குடுக்க வேண்டிய முத்தத்த எனக்கு குடுக்குறன்னு சட்டுன்னு கைய வச்சு முத்தத்த துடச்சிடுவேன்...

நான் எய்த் படிக்குற நேரம் எல்லாம் அழகா (அது என்ன அழகுன்னு அம்மாகிட்ட தான் கேக்கணும், இங்க அழகுங்குறது ஒரு குறியீடு மட்டுமே) இருக்குற பசங்கள பாத்தா பையன் செம ஸ்மார்ட்ல... அவன் ஹேர் ஸ்டைல் பாரேன், ஹே அவன் டிரெஸ்ஸிங் சென்ஸ் பாரேன், ஸ்மார்ட்லன்னு தொணத்தொணத்துட்டே வருவா...

அம்மாவுக்கு இயற்கை பிடிக்கும், அழகு பிடிக்கும், அன்பு பிடிக்கும், நேசம் பிடிக்கும்.... எல்லாத்தையும் விட அவள் ஒரு குழந்தைத்தனமானவள்... அதனாலதானோ என்னவோ அப்பாவுக்கு அவள மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்...

நாங்க சேர்ந்து வெளில போறப்ப, அம்மா சைட் அடிச்சா, அப்பா உங்களுக்கு எந்த பொண்ணு அழகா இருக்குற மாதிரி தோணுதுன்னு கேப்பேன்.... எனக்கு எப்பவுமே உன் அம்மா மட்டும் தான் அழகுன்னு பதில் சொல்லுவார்... அம்மாவும் ஏய் என்னடி, என் புருசன மாத்தப் பாக்குறியான்னு எகிறுடுவா...

வேணாம் அன்னலெட்சுமி, பெருமாளுக்கு துரோகம் பண்ணாதன்னு நான் கலாய்ச்சா, ரெண்டும் ஜோடியா சேர்ந்துட்டு இத்துனூண்டு இருந்துட்டு பேச்சைப்பாருன்னு வலிய இழுத்துப் பிடிச்சு ஆளுக்கு ஒரு பக்கமா முத்தம் குடுப்பாங்க...
.........................................

எனக்கு அப்பா எல்லாம் சைட் அடிச்சாரான்னு இதுவரைக்குமே தெரியல... ஒருவேளை சைட் அடிக்குற உரிமை அப்பாவுக்கு மறுக்கப்பட்ருக்கலாம்.... லாம்... லாம்.... லாம்....

இந்த லாம்.... ஒரு குறியீடு, மறுக்கப்படலாம்ங்குறது யாருக்கும் சேர்த்துன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்....



.

Wednesday, 8 January 2014

மழை நியாபகங்கள்...


சோ............ன்னு மழை பெஞ்சுட்டு இருக்கு. குடை இல்லாம போனா ஜில்லுன்னு மழைல நனையலாம். ஆனா காலைல மழைல நனைஞ்சா ஜல்ப்பு புடிக்கும். அதனால ஒரு குடை எடுத்துட்டு வாங்க.

ரொம்ப குளிர தான் செய்யுது, ஆனாலும் கிடு கிடுன்னு பல்லெல்லாம் தந்தியடிக்குறது கூட சொகமா தான் இருக்கும். அப்படியே தெருவுல இறங்கி நடக்கலாம்.

அட, அங்க பாருங்க, ஒரு கோழி, வெடவெடன்னு நனைஞ்சு போய் பொம்ம மாதிரி நடந்து போகுது. காக்கா எல்லாம் இருந்த இடம் தெரியல.... அட, இந்த அணில் எல்லாம் கூட இன்னும் வெளில வரல போல, பின்ன, நேத்து சாயங்காலம் ஆரம்பிச்ச மழையாச்சே.

சரி, சரி, பக்கத்துல ஒரு டீ கடை இருக்கு. யாருக்கெல்லாம் டீ வேணும்? யாருக்கு காப்பி? பஜ்ஜி, வடை? எல்லாருக்கும் கிடைக்கும். தேவைபட்டத வாங்கி சாப்பிடுங்க.

அப்படியே, எனக்கு ஒரு குட் மார்னிங் பார்சல்....

குட் மார்னிங்….

இந்த மழை, இன்னிக்கி முழுக்க இப்படியே பெஞ்சுகிட்டு இருக்க கூடாதான்னு தோணுது. அப்போ கொஞ்சமாவது நிலத்தடி நீர் உயரும்ல... மரங்கள் எல்லாம் அதோட பெரிய பெரிய வேர் வச்சு, நீர மண்ணுல தங்கியிருக்க ஹெல்ப் பண்ணும்.

காலைல ஜன்னல் வழியா எட்டிப்பாத்தேன், தென்னை மரத்துல ஒரு வெள்ளரி கொடி படர்ந்து போயிருக்கு. எப்படி அவ்வளவு உயரமா படர்ந்துதுன்னு தெரியல. நிறைய மஞ்சள் பூக்கள் பூத்திருக்கு. ஒரு வெள்ளரி காய் கூட உயரத்துல காய்ச்சி தொங்குது. இத இத்தன நாள் பாக்காம போயிருக்கேனே...

ம்ம்ம்ம் அப்புறம், இந்த மழைய பாத்த உடனே சின்ன வயசு மழை நியாபகங்கள் எல்லாம் மனசுல அப்படியே ரீவைண்ட் ஆகுது. வாங்க, நீங்களும் அப்படியே என்கூட வந்து நாங்க பண்ணுன சேட்டைகள பாருங்க.
............................................................................................................

அப்போ எனக்கு அஞ்சு வயசு இருக்கும். மழைன்னா ரொம்ப பிடிக்கும். ரொம்ப மழை பெஞ்சா வீட்டு மாடியில இருந்து ஒரு மடை வழியா தண்ணி அருவி மாதிரி கீழ விழும். அதுல போய் நின்னு குளிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்படுவேன். அம்மாவுக்கும் மழை பிடிக்கும் தான், ஆனாலும் வீட்டுக்கு வெளில போய் எப்படி நனையுறதுன்னு அமைதியா இருப்பாங்க.

ஆனா நான் விடுவேனா, கண்டிப்பா மழைல நனஞ்ச்சே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு, அதுவும் அம்மாவும் வரணும்ன்னு அடம்புடிச்சு கூட்டிட்டு போவேன். மழைல குடை புடிச்சுட்டே என்னை குளிப்பாட்டுவாங்க அம்மா. அதோட விட்டாலாவது வரவால, நான் குளிச்சு முடிச்சதும், அம்மா கைல இருந்து குடைய பிடுங்கி எடுத்துடுவேன். பின்ன, நான் மழைல நனைஞ்சுடுவேன்ல...
..............................................................................................................................

அப்புறம், குட்டியா எனக்குன்னு ஒரு குடை உண்டு. அத எடுத்துட்டு ஓடுற தண்ணியில கப்பல் விட கிளம்பிடுவோம் நாங்க. நாங்கன்னா, நான், தம்பி, அப்புறம் அந்த தெரு பசங்க எல்லாரும். வீட்ல பெரியவங்க யாரும் வெளில விட மாட்டாங்க. அதனால அப்பவே பின்வாசல் வழியா போய் எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவோம். கப்பல் தம்பி தான் நல்லா செய்வான். அதனால அவன மோட்டார் ரூம்ல உக்கார வச்சு நிறைய கப்பல் செய்ய சொல்லுவோம். கப்பல் செய்ய பேப்பர் கிடைக்கலன்னு ஒரு தடவ அப்பா கணக்கு எழுதி வச்சிருந்த நோட் தூக்கிட்டு வந்து கப்பல் விட்டுட்டோம். அப்பா கணக்கு எல்லாம் கப்பலா போச்சு. அப்புறம் நோட்ட காணோம் நோட்ட காணோம்ன்னு தேடுனப்போ நான் முழிச்ச முழில அம்மா கண்டுபுடிச்சுட்டாங்க. அப்பா இருந்த டென்சனுக்கு ஒருவேளை என்னை அடி பின்னிருவாங்களோன்னு பயந்து அப்பா கிட்ட நீங்க எங்க கொண்டு போய் தொலைச்சீங்க? இவ்வளவு பெரிய மனுசனா இருந்துட்டு ஒரு பொருள பத்திரமா வைக்க தெரியலயேன்னு அப்பா மேல பாய ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா பயந்து அம்மாவ சமாதான படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஹஹா நானும் தம்பியும் எஸ்கேப்.

(அப்புறம் அன்னிக்கி சாயங்காலமே கிழிச்சு குதறப்பட்ட கணக்கு நோட் மோட்டார் ரூம்ல வெறும் அட்டையா கண்டெடுக்கப்பட்டது தனி கதை, அப்போ கூட பிள்ளைங்க கைக்கு எட்டுற மாதிரியா வைப்பீங்கன்னு அப்பாவும் அப்பா தான் நல்லா வாங்கிகட்டிகிட்டார். ஹை, ஜாலி ஜாலி...)

-ஆனா எனக்கு ஒரு வருத்தம், ஒரு ரூபா நோட்டு கட்டு கூட கைல மாட்டல, இல்லனா, நாங்களும் அப்பவே பச்சை கிளிகள் தோளோடு-ன்னு பாட்டு எல்லாம் பாடியிருப்போம்.
....................................................................................................................

மழைன்னு வந்தாலே இங்க செம்மண் காடு எல்லாம் சேறும் சகதியுமா இருக்கும். தோப்புக்குள்ள செருப்பு போட்டுட்டு கூட நடக்க முடியாது. நானும் தம்பியும், அப்போ தான் புதுசா வாங்கி தந்த செருப்ப எடுத்து மாட்டிகிட்டு கிளம்பிடுவோம். அங்க போய் சேறு அதிகமா இருக்குற இடத்துல போய் யார் கால் அதிகமா உள்ள போகுதுன்னு கால உள்ள விட்டு விளையாடுவோம். செருப்பு உள்ள மாட்டிகிட்டு, ஒத்த கால் செருப்ப மட்டும் நல்லா கழுவி கொண்டு வந்து ஷூ ரேக்-ல வச்சிடுவோம். ஆனா, ஒண்ணு, அம்மா கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே ஈர ஷூவுல இருந்து தண்ணி வழிஞ்ச இடத்துல ஓடி வந்து கால் வச்சு, பின்னந்தல படார்ன்னு தரைல மோதி விழுந்து அழுதா அம்மா கண்டுபிடிச்சிருவாங்கன்னு அப்பவும் ஒரு தடவ கெத்தா எழுந்து போனேன் அவ்வ்வ்வ்வ்வ். ஆனா அடுத்த தடவ அதே மாதிரி விழுந்தப்போ தாங்க முடியாம வீல்ன்னு அழுது, என்னை சமாதானம் பண்ற விசயத்துல செருப்பு விஷயம் வீட்ல தூசியா போச்சு...
......................................................................................

இன்னும் இருக்கு, ஆனா எல்லாம் இப்பவே சொல்லிட்டா எப்படி?


இன்னொரு நாள் பாப்போம். இப்போ காலேஜுக்கு லேட் ஆச்சு. நான் கிளம்புறேன். மழை ரசிச்சுட்டே போக போறேன். டாட்டா...




.

Saturday, 19 October 2013

உங்களுக்கு பிடிச்ச பத்து விஷயங்கள் என்ன?


சில நேரங்கள்ல, நமக்கு இருக்குற பெரிய பெரிய ஆசைகள் விடுத்து, குட்டி குட்டியா நமக்கு பிடிச்ச விசயங்கள பத்தி யோசிச்சு பாத்தோம்னா மனசு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

Tuesday, 15 October 2013

மீன் பிடிக்க போவோமா? தவளை பிடிக்க போவோமா?


காலேஜ் அஞ்சு நாள் லீவ் விட்டாலும் விட்டாங்க, ஊர்ல இருந்து தங்கச்சிங்க எல்லாம் வந்துட்டாங்க. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ப்ளான் போட்டு வந்தவங்களுக்கு சனிகிழமை நான் காலேஜ் போயிட்டேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அப்செட் ஆகிட்டதா சொன்னாங்க... நானும் அப்படியே நம்புற மாதிரியே நம்பாம அவங்கள மேலும் கீழும் பாத்துட்டு ரூம்க்கு போனா, ரூம் எல்லாம் தலைகீழா இருக்கு. அம்மாவோட சாரி எல்லாம் எடுத்து குலைச்சு போட்டுருந்தாங்க. ஒருத்தி, என்னோட ஜீன்ஸ் எடுத்து போட்டுட்டு இருக்கா.

Wednesday, 9 October 2013

ரொம்ப அழாதீங்க.... மூணே மூணு தத்துவம் தான்...


அரைகுறையா ஒரு முழிப்பு, அங்க இங்க போற காலடி சத்தங்கள் ஒரு பக்கம், அடுப்படியில பாத்திரம் உருளுற சத்தம் ஒரு பக்கம், விசிலடிக்குற குக்கர் ஒரு பக்கம், மூக்கை துளைக்குற கடுகு வாசனை ஒரு பக்கம், இப்படி எல்லாமா சேர்ந்து மெய் மறந்து தலயனையை கட்டிக்கிட்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா அட, அட, அட..... நல்லா தான் இருக்கும்..... ஆனாலும் கடமைன்னு ஒண்ணு இருக்கே... எப்படியும் எழுந்து தான் ஆகணும்....

Friday, 4 October 2013

ஓட்டபந்தயத்துல கலந்துகிட்ட முயல் செத்து போச்சாமே... யாராவது கேளுங்களேன்..



என்ன சொல்லணும், ஏன் சொல்லணும், எதுக்கு சொல்லணும், எப்படி சொல்லணும் அப்படின்னு சொல்றதுலயே பல மாதிரி இருந்தாலும் இந்த காலை வணக்கம் மட்டும் ஒரே மாதிரி சொல்லணுங்க.. எப்படி தெரியுமா, சும்மா மனச ப்ரெஷா வச்சுக்கிட்டு, சிரிச்சுகிட்டே, குழந்தை மனசோட சொல்லணும். அதனால நான் இப்போ உங்களுக்கெல்லாம் சிரிச்சுட்டே குட் மார்னிங் சொல்ல போறேன், எங்க நீங்களும் அதே குழந்தை மனசோட ஒரு குட் மார்னிங் சொல்லுங்க பாக்கலாம்....

Wednesday, 25 September 2013

மாங்காய் பறிக்கலாம் வாங்க


அப்போ நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த நேரம். எங்க கிராமத்துல பொம்பள பிள்ளைங்க ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்லயே தான் இருப்பாங்க. லீவு நாள்ல மொத்தமா யாராவது ஒருத்தர் வீட்ல கூடி ஊர் கதை எல்லாம் பேசுவாங்க. பசங்க ஆறு, குளம் னு ஊர் சுத்த கிளம்பிடுவாங்க. நமக்கு தான் ஒரு இடத்துல இருந்தா பிடிக்காதே, நானும் பசங்க கூட சேர்ந்து கிளம்பிடுவேன்.

Tuesday, 24 September 2013

பாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....

எப்பவும் சீரியஸா பேசிட்டு இருந்தாலும் சரிபட்டு வராது. கொஞ்சம் சிரிக்கவும் வேணுமே. ஹஹா இப்போ நீங்க சிரிக்குறத பத்தி யார் சொன்னா, நீங்க இத படிச்சுட்டு தலைல அடிச்சுட்டு போறத பாத்து நான் தான் விழுந்து விழுந்து சிரிக்க போறேன். என்னது? இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா? அப்படியா? சரி வாங்க, ஒரு கை பாத்ருவோம், நீங்க சிரிக்க போறீங்களா நான் சிரிக்க போறேனானு... ஆனா ஒண்ணு, கடைசி வர இத நீங்க படிக்கணும்... அவ்வ்வ்வ் படிச்சுடுங்க....