Tuesday 15 October 2013

மீன் பிடிக்க போவோமா? தவளை பிடிக்க போவோமா?


காலேஜ் அஞ்சு நாள் லீவ் விட்டாலும் விட்டாங்க, ஊர்ல இருந்து தங்கச்சிங்க எல்லாம் வந்துட்டாங்க. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு ப்ளான் போட்டு வந்தவங்களுக்கு சனிகிழமை நான் காலேஜ் போயிட்டேன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அப்செட் ஆகிட்டதா சொன்னாங்க... நானும் அப்படியே நம்புற மாதிரியே நம்பாம அவங்கள மேலும் கீழும் பாத்துட்டு ரூம்க்கு போனா, ரூம் எல்லாம் தலைகீழா இருக்கு. அம்மாவோட சாரி எல்லாம் எடுத்து குலைச்சு போட்டுருந்தாங்க. ஒருத்தி, என்னோட ஜீன்ஸ் எடுத்து போட்டுட்டு இருக்கா.
நான் எப்பவுமே என்னோட பொருள அடுத்தவங்க யூஸ் பண்ணினா, மறுபடி நான் யூஸ் பண்ண மாட்டேன். சின்ன வயசுல இருந்தே அப்படியே பழகிட்டேன். அது தான், நீயே அந்த ஜீன்ஸ் வச்சுக்கோன்னு சொல்லிட்டேன்.

அடுத்த நாள், சமையல், பாயாசம்னு மதியம் ஓடி போக, சாயங்காலம் மீன் பிடிக்க போகலாம்னு முடிவு பண்ணினோம். நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிடலாம்னு ரூம்க்கு போய் எப்.பி ல உக்காந்துட்டேன். சாயங்காலம் போய் பாத்தா, அப்பா ரூம்ல எல்லாம் பயங்கரமா தூங்கிட்டு இருக்குதுங்க. சரி, இனி எழுப்ப வேண்டாம்னு முடிவு பண்ணி, மீன் பிடிக்குற ப்ளான நானே அடுத்த நாளுக்கு போஸ்ட்பான்ட் பண்ணிகிட்டேன். இந்த பிசாசுங்க எல்லாம் ஈவினிங் நல்லா தூங்கிட்டதால, ராத்திரி பனிரெண்டு மணி வரை தூங்க விடாம தொல்ல பண்ணி, ஒரு வழியா எல்லோரையும் ஹால்க்கு துரத்தி விட்டுட்டு நான் தூங்க ஆரம்பிச்சேன்.

அடுத்த நாள், காலைல நான் முழிச்சதே பத்தரை மணி மேல... அப்புறமா போய் எல்லோருக்கும் சாம்பார் சாதமும் கூடவே அவியலும் எல்லோருமா சேர்ந்து செய்து முடிச்சோம். மணி ஒண்ணு ஆகிடுச்சு. பட படன்னு சாதம் கூட மாங்கா ஊறுகா, தேங்கா துவையல் எடுத்து வச்சு, எல்லாம் தூக்கி கார்ல போட்டுட்டு மீன் பிடிக்க கிளம்பிட்டோம்...

யாரெல்லாம் கிளம்பினோம்னு சொல்லவே இல்லையே, நான், என்னோட சித்தி பொண்ணுங்க, அப்புறம் பக்கத்து வீட்டு நந்து, அவ தம்பி ன்னு கிளம்பி போனோம். மீன் பிடிக்க மறக்காம ஒரு குற்றாலம் முண்டு (டவல்) எடுத்துட்டு, மீன் பிடிச்சு போட ஹார்லிக்ஸ் பாட்டிலும் கொண்டு போனோம். அங்கயே போய் சாப்டணும்ங்குறது பிளான்.

வீட்ல தம்பி வரேன்னு கார் எடுக்க போனான். அதுக்குள்ள அப்பா ஒரு சின்ன வேலை குடுக்க, சரி, நீங்க கிளம்புங்க, நான் பின்னால வரேன்னு சொல்லிட்டான். ஹைய்யா ஜாலி, நான் மலை மேல வண்டி ஓட்ட போறேனேன்னு எனக்கு ஒரே குதூகலம். அப்படியே ஓடி போய் உக்காந்து கார் எடுத்துட்டு கிளம்பிட்டோம்.

மனசு முழுக்க ஒரே கற்பனை. என்னவோ, மீன் எல்லாம் ஆத்துல துள்ளி குதிச்சு நீந்துறது மாதிரியும், நாங்க லபக் லபக்னு ஓடி ஓடி அத பிடிச்ச மாதிரியும், கற்பனை நான்-ஸ்டாப்பா எல்லோருக்கும் வந்துட்டே இருக்கு. இதுல என்னோட கற்பனைல ஒரு சுறா மீன் வேற எகிறி குதிச்சுதுன்னா பாருங்களேன்... கண்ண முழிச்சு பாத்தா ரோடு எல்லாம் ஒரே குண்டும் குழியுமா இருக்கு. கார் அதுக்குள்ளே உருண்டு பொரண்டு போய்கிட்டு இருக்கு. மீன் துள்ளுற மாதிரியே நாங்க எல்லாம் காருக்குள்ள துள்ளிக்கிட்டு இருக்கோம். அந்த மாதிரி ஒரு ரோட் நான் அங்க தான் பாத்ருக்கேன். கொஞ்ச நாளா பெய்ஞ்ச மழைல ரொம்ப மோசமா ஆகியிருந்தது.

எல்லோருமே ஆசை ஆசையா ஆறு கிட்ட போயாச்சு. அங்க ஆத்துல குதிச்சு குளிக்க பாலம் எல்லாம் போட்டு வச்சிருப்பாங்க. ஆத்துல கண்டிப்பா குளிக்கணும்னு தங்கச்சிங்க வேற ரொம்ப ஆசையோட வந்தாங்க. ஆறு வந்ததும், கார ஒரு ஓரமா பார்க் பண்ணிட்டு எல்லோரும் இறங்கி ஓடுறாங்க....அவ்வ்வ்வ் ஆறு மட்டும் தாங்க இருக்கு, தண்ணிய காணோம்.......

அங்கங்க கொஞ்சம் தண்ணி குட்டை மாதிரி தேங்கி இருக்கு. சரி, அதுலயாவது மீன் இருக்குமான்னு பாத்தா, எதுவுமே காணோம். மீன் இல்லாதது கூட எனக்கு வருத்தம் இல்லைங்க, நான் மீன் பிடிக்க போறேன்னு சொன்ன உடனே, நீ தவளை குட்டி தான பிடிக்க போற, அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்ட்-அப்னு கார்த்திக் கேட்டார், அதே நியாபகமா வேற இருந்துச்சா, தேங்கி இருந்த தண்ணியில நான் தவள குட்டியாவது இருக்குமான்னு தேட ஆரம்பிச்சுட்டேன்... அவ்வ்வ்வ்....

வடை போச்சேன்னு எல்லோரும் தலைல கைய வச்சுட்டு உக்காந்தாச்சு. சரி, வந்தது தான் வந்தோம், எல்லோரும் மலைல ஏறி காட்டுக்குள்ள போயிட்டு வருவோம்ன்னு அடுத்த பிளான் போட்டாங்க. சரி, முதல்ல சாப்டுவோம்னு முடிவு பண்ணி, சாப்பாடு எடுத்தா, ஒரு பெரிய பாத்திரத்துல சாம்பார் சாதம் இருக்கு, ஒரு பாட்டில்ல மாங்கா ஊறுகா இருக்கு, ஒரு டிபன் பாக்ஸ்ல தேங்கா துவையல் இருக்கு, ஆனா எடுத்து சாப்பிட தட்டு எதுவும் இல்ல. ஹிஹி, அவசரத்துல நான் தான் அத எல்லாம் எடுத்து கிட்சன்லயே வச்சுட்டு வந்துட்டேன்.

எல்லோரும் இடுப்புல கைய வச்சுட்டு என்னை வில்லி ரேஞ்சுக்கு பாக்குதுங்க. இதுக்கு எதுக்கு முறைப்பு, நானே உருண்டை பிடிச்சு தரேன்னு சொல்லி ஒரு வழியா எல்லோரையும் சமாதானம் பண்ணி நானே உருட்டி உருட்டி அவங்க கைல வச்சு குடுத்துட்டேன். துவையல் அப்படியே டிபன் பாக்ஸ்ல வச்சே எல்லோரையும் எடுத்துக்க சொல்லிட்டேன். மாங்கா ஊறுகாய டிபன் பாக்ஸ் மூடியில வச்சு குடுத்துட்டேன். ஆனாலும் மனசுக்குள்ள நமக்கு இப்படி எடுத்துக் குடுக்க ஆள் இல்லையேன்னு வருத்தமா தான் இருந்துச்சு.

ஒருவழியா சாப்ட்டு முடிச்சு, தேங்கி கிடந்த குட்டைல கை எல்லாம் அலம்பிட்டு எல்லோரும் மலைல ஏற தயார் ஆகிட்டாங்க. அப்பவே மணி மூணு ஆகிடுச்சு. நான் கார்லயே இருக்கேன், வரலன்னு சொல்லிட்டேன். சரின்னு கொஞ்ச தூரம் போயிருப்பாங்க, நந்து, மீன் இருக்கு அக்கான்னு சொல்லிட்டு ஓடி வரா. எங்கடான்னு கேட்டேன், நீ வா, போவோம்னு கைய பிடிச்சு இழுத்து கூப்ட்டா.

அது பக்கத்து வாய்க்காலுக்கெல்லாம் தண்ணி தொறந்து விடுற மதகு இருக்குற இடம். ஆத்துல தண்ணி இல்லாததால மதகு மூடி இருந்துச்சு. நல்லா வேகமா விழுற தண்ணியில ஆத்துல சுவரும் மண்ணும் அரிச்சுடக்கூடாதுன்னு பெரிய பெரிய கல் பதிச்சு வச்சிருப்பாங்க. அங்க தான் தண்ணி ஆழமா தேங்கி இருந்துச்சு. யாருமே அசையாம கொஞ்ச நேரம் அப்படியே இருந்தோம். அப்போ தான் கல் இடுக்குல இருந்து மீன் எல்லாம் வெளில வர ஆரம்பிச்சுது. சின்ன பொடி மீன்ல இருந்து, கொஞ்சம் பெரிய சைஸ் மீன் எல்லாமே அங்க இருந்துச்சு. ஆனா அத எப்படி பிடிக்குறதுன்னு தான் தெரியல. காரணம், கொஞ்சம் அசைவு இருந்தாலும் எல்லாம் ஓடி போய் கல் இடுக்குகள்ல ஒளிஞ்சுக்குது.

கொண்டு போன டவல் எடுத்து தங்கச்சிங்க ரெண்டு பேர் மீன் பிடிச்சே தீருவோம்னு இறங்கிட்டாங்க. ஆத்துல மீன் பிடிக்கணும்னா கூட ஒரு லாவகம் வேணும்ங்க.... ரெண்டு பக்கமும் டவல் பிடிச்சுட்டு, மீன் உள்ள வர மாதிரி நைசா பிடிச்சு, அது வெளில குதிச்சுடாத படி மெதுவா டவல தூக்கி பிடிக்கணும். இதெல்லாம் இவங்களுக்கு எங்க தெரியும், இவங்கள பாத்ததுமே எல்லாம் ஓடி ஒளிஞ்சுகிச்சு. அப்புறம் டவல அப்படியே தண்ணிக்குள்ள வச்சு பிடிச்சுட்டே அசையாம இருக்காங்க, ரெண்டு மூணு மீனு மெதுவா எட்டிப்பாக்கும். பிடி பிடின்னு கத்துறதுக்குள்ள ஓடி போயிடும். இதுல நந்து, அந்த தண்ணிக்குள்ளயே படுத்துகிட்டா. கிட்ட தட்ட ஒரு மணிநேரம் போராடின பிறகு, ச்சீ ச்சீ இந்த மீன் புளிக்கும்ன்னு பின் வாங்கியாச்சு.

சரி தான், வந்ததுக்கு மீனையாவது பாக்க முடிஞ்சுதே அப்படின்னு லைட்டா ஒரு திருப்தியோட எல்லோரும் மலை மேல ஏற முடிவு பண்ணினாங்க, நான் மீன் பாத்துட்டு அங்கயே இருக்குறேன்னு சொல்லிட்டேன். இந்த மீன் பிடி போராட்டம் நடந்துட்டு இருந்தப்பவே ரெண்டு பசங்க பைக்ல அங்கயும் இங்கயும் சர்ர்ர் சர்ர்ர்னு அந்த இடத்துலயே சுத்திட்டு இருந்தாங்க. நான் பாத்துட்டு இருந்தாலும் மனசுக்குள்ள கொஞ்சம் திக் திக் தான். தம்பிக்கு போன் போட்டு எங்க இருக்கன்னு கேட்டேன். ஏன், வரணுமான்னு கேட்டான், வந்தா நல்லதுன்னு போன் வச்சுட்டேன். தம்பியும் வந்து சேர்ந்துட்டான்.

அவன் தான் சொன்னான், மீன் எல்லாம் இங்க பிடிக்க முடியாது. ஆத்துல இருந்து கிட்டத்தட்ட நூறு மீட்டர் கீழ இறங்கினா அங்க வயலுக்கு எல்லாம் தண்ணி பாய்க்குற வாய்க்கா இருக்கும். அங்க தான் ஈசியா மீன் பிடிக்கலாம்னு. அப்படியே கீழ இறங்கி போய் பாத்தா எவ்வளவு மீனு???????????? ஆத்தாடி.............. எல்லாம் குட்டி குட்டியா ஜாலியா நீந்திக்கிட்டு இருக்கு. மீன் எங்க இருக்கும்னு கூட தெரியாம மீன் பிடிக்க வந்த எங்க சமார்த்தியத்த நானே மெச்சிகிட்டேன்....

அப்புறம் என்னங்க, தம்பி கடகடன்னு வாய்க்காக்குள்ள இறங்கி, அவன் ஒரு பக்கம், என் தங்கச்சி ஒரு பக்கம்ன்னு டவல் பிடிச்சு மீன் அரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என் தங்கச்சிக்கு சரியாவே மீன் பிடிக்க தெரியலன்னு நல்லா திட்டும் வாங்கினா. அப்படி இப்படி மொத்தமாவே ஒரு பத்து மீனு தேறிச்சு. பிடிச்ச மீனை பாட்டில் உள்ள வச்சு அடச்சுட்டு, அப்படியே வீட்டுக்கு திரும்பிட்டோம். மலை எல்லாம் ஏறல... இன்னொரு நாள் மலை ஏறி, காட்டுக்குள்ள போய் மயில் பாக்கணும்ன்னு எல்லோரும் பேசிகிட்டாங்க. 

வீட்டுக்கு வந்து பிடிச்ச மீன, மீன் தொட்டியில விடுவமான்னு ஒரு ஆர்க்யூமென்ட். அப்படி விட்டா, ஏற்கனவே இருக்குற மீனுக்கு ஈசியா நோய் வந்து செத்து போய்டும்னு நான் விடக்கூடாதுன்னு சொல்லிட்டேன். சரிதான்ன்னு அந்த மீன பக்கத்து வீட்டு ஆடு வெட்டி தாத்தா வீட்டு கிணத்துல விடலாம்னு முடிவு பண்ணி அங்கயே கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டாங்க...

ஆனா ஒண்ணுங்க, கடைசி வர அந்த தவள குட்டிங்கள நான் பாக்கவே இல்ல. இதுக்காகவே ஒரு நாள் தவளை வேட்டைக்கு போயே ஆகணும்ன்னு மனசுக்குள்ள சபதமே எடுத்துகிட்டேன்....

18 comments:

 1. எழுத்து நடை நல்லா இருக்கு . keep it up

  ReplyDelete
 2. மீன் பிடிச்சு மீன் கொழம்பு வைக்காம கிணத்துல விட்டா எப்படி!?

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் குட்டி மீன்... அப்புறம், அத கொல்ல மனசே வரல எங்களுக்கு , அதான் கிணத்துல விட்டுட்டோம்

   Delete
 3. ஆகா... ரசித்துப் படித்தேன்... பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. ஹஹ தவளை வேட்டைனு பாத்திர கடைக்கு போயிட போறிங்க..

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ் அது தவலை வேட்டைல.... நல்ல வேளை நியாபக படுத்துனீங்க இல்லனா நான் அங்க தான் போறதா இருந்தேன்

   Delete
 5. சிறு வயதில் வயல் நண்டுகளை பிடிக்க போய் வளையில் தண்ணீர் பாம்பை பிடித்து அலறியடித்து ஓடியதை நினைவு படுத்துகிறது உங்கள் இடுகை.தொடருங்கள் பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. ஹஹா இது மாதிரி நிறைய அனுபவங்கள் இருக்கத்தானே செய்யுது, என்ன, இப்போ எல்லாம் இயந்திரத்தனமா இயங்கி பழகிட்டோம்

   Delete
 6. உங்கள் அனுபவத்தை மிக அழகாக நகைச்சுவை இழையோட எழுதி இருக்கிறீர்கள். கீப் இட் அப்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு தேங்க்ஸ்...

   Delete
 7. வீட்டுக்கு வந்து பிடிச்ச மீன, மீன் தொட்டியில விடுவமான்னு ஒரு ஆர்க்யூமென்ட். அப்படி விட்டா, ஏற்கனவே இருக்குற மீனுக்கு ஈசியா நோய் வந்து செத்து போய்டும்னு நான் விடக்கூடாதுன்னு சொல்லிட்டேன்.////


  akka unga vittula fish tank irukka? ungalukku alaku min valarkkurathu pidikkuma?
  nangalum vittula chinna min thotti vangi valarthom but ovvoru minum 4 allathu 5 masam mela illa.. so vittuttom.
  ninga sonna vitham eluthu nadai super,, athuvum car la pokum pothu varnichathu nice. thodarungal akka.

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்ல மீன் தொட்டி இருக்கு மகேஷ். முன்னாடி இருந்த வீட்ல ரொம்ப பெரிய தொட்டி இருந்துச்சு. அது அப்பா பராமரிச்சுட்டு இருந்தார். தோட்டத்துல சிமென்ட் வச்சு கட்டி, அதுல ஒரு பக்கம் மட்டும் மீன் பாக்க பெரிய கண்ணாடி பிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. இப்போ இருக்குறது சின்னது. நானே அதோட நோய்க்கு மருந்து குடுத்துடுவேன். பிறகு ஒரு நாள் இத பத்தி டீட்டைலா ஒரு பதிவு போடுறேன்

   பாராட்டுக்கு தேங்க்ஸ் மகேஷ்

   Delete
 8. ஜூப்பர் ஜூப்பர் :-)

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் தேங்க்ஸ் உங்க எக்ஸ்பிரசனுக்கு

   Delete
 9. நல்லா இருக்கு. நான் சின்ன வயசுல மீன் பிடிக்க போனது, அப்புறம் என் பசங்கள கூட்டிட்டு மீன் பிடிக்க போற அனுபவம் எல்லாம் நியாபகம் வருது

  ReplyDelete
 10. பழைய நினைவுகளை அசை போட வச்சிருக்கு டா உன் எழுத்து...

  ReplyDelete