Monday 28 October 2013

அம்மாவோடு ஒரு நாள்...

26/10/2013- அம்மா நியாபகமாவே இருந்தேனா, எப்படியும் ராத்திரி சரியா தூங்க மாட்டேன்னு தான் நினச்சுட்டு இருந்தேன், ஆனா என்னை மீறி, சரியான தூக்கம். அதுக்கெல்லாம் காரணம் மனசு ரொம்ப லேசாகிடுச்சுன்னு சொல்லவும் வேணுமா?

மனசு லேசானதுக்கு காரணம் இது தாங்க...

அசந்து தூங்கிட்டு இருந்த என்னை காலைல எழுப்புறதுக்கு அப்பா தயங்கிகிட்டே இருந்துருக்காங்க. அப்புறம் ஆறரை மணிக்கு நானே படக்னு எழுந்து உக்காந்துகிட்டேன். அம்மாவ பாக்க போறோம்னு நினச்ச உடனே அப்படியே உதட்டுல தானா சிரிப்பு வருது. தலையணைய கட்டிப்புடிச்சுட்டு கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துட்டு இருந்தேன்.

அப்புறமா, போன் பண்ண வேண்டியவங்களுக்கு போன் பண்ணி, நான் அம்மாவ பாக்க போறேன்னு சந்தோசமா சொல்லிட்டு, கடகடன்னு கிளம்பி அப்பவும் கூட இந்த எப்.பிய விடாம ஒரு காலை வணக்கத்த போட்டுட்டு, வெளி வாசலுக்கு போனா, தம்பி அல்ரெடி கார்ல உக்காந்துட்டு இருக்கான். இது சரி வராதுன்னு அவன் முன்னாடி போய் நின்னு சாவி குடு, நான் ஓட்டுறேன்னு தைரியமா கேட்டுட்டேன்.

அடடே, ஒரே அதிசயம், ஒரு வார்த்த கூட சொல்லாம சாவிய கைல குடுத்துட்டு டிரைவிங் சீட்ல இருந்து இறங்கி மறுபக்கமா வந்து உக்காந்துகிட்டான். அப்புறம், அப்பா, மாமாக்கள் குடும்பம்னு எல்லோரும் அவங்க அவங்க வண்டியில வர ஆரம்பிச்சாங்க. இந்த பாட்டி என்னதான் பண்ணிட்டு இருப்பாங்களோ, அவங்கள கிளப்புரதுக்கே பத்து பேர் வேணும். ஒரு வழியா அப்பாவே அவங்க அத்தைய குண்டுக்கட்டா கடகடன்னு இழுத்துட்டு வந்து பின் சீட்ல வச்சு அடச்சு, அவங்களும் ஏறி உக்காந்துகிட்டாங்க.

ஒரு நிமிஷம் கண்ண மூடி மூச்சை நல்லா இழுத்து விட்டுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, ரிவர்ஸ் கியர் போட்டு வெளில எடுத்து, அப்புறம் பஸ்ட் கியர்ல வண்டிய மூவ் பண்ண ஆரம்பிச்சேன். அட, காத்து கூட அப்படியே என்னை தழுவிக்குற மாதிரி ஒரு பீலிங்க்ஸ். மனசு முழுக்க இதுதான்னு சொல்ல முடியாத ஒரு சந்தோசம்.

அம்மானா, அம்மா ஆக்சிடென்ட்டலா தவறி மூணு வருஷம் ஆச்சு. அம்மாவோட நியாபகமா ஒரு கட்டிடம் இருக்குறத விட ஒரு உயிர் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு, ஒரு மாங்கன்ற நட்டு வச்சுட்டோம். அப்புறமா ஒரு பஞ்சாயத்துல வீட்டோட சேர்த்து அம்மா இருக்குற இடத்தையும் அப்பா சித்தப்பாவுக்கு விட்டுக் குடுத்துட்டாங்க. அங்க இருந்து வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இப்போ மறுபடியும் அம்மாவ பாக்கப் போறோம். மூணு வருஷம் ஆகிடுச்சுல, அம்மா பெருசாகிட்டாங்க இப்போ.

பொதுவா நான் வண்டி ஓட்டும் போதோ, இல்ல, பைக் பின்னாடி உக்காந்துட்டு போகும் போதோ பராக்கு பாக்கவே மாட்டேன். அதுலயும் கார் ஓட்டும் போது மூச்... சரியா கான்சன்ட்ரேசன் பண்ண முடியாது பராக்கு பாத்தா. ஆனா இப்போ என்னவோ, பச்சையா தெரியுற வயல் வெளிகள், ரோட்டோரமா இருக்குற தென்னை மரங்கள்னு எல்லாத்தையும் பராக்கு பாக்கணும் போலயே மனசு அலையுது. சரி, பக்கத்துல தான் ஒருத்தன் உக்காந்துட்டு இருக்கானே, அவன் கவனிச்சுப்பான்னு நான் பாட்டுக்கு வெளில பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

இயற்கை எவ்வளவு அழகு... ரசிச்சு ரசிச்சு பாத்துட்டே இருந்தா நமக்கு கிடச்சிருக்குற இந்த ஆயுசு பத்தவே பத்தாது. வழியில வர்ற ஆடு, மாடு, காக்கா, எலெக்ட்ரிக் வொயர் மேல உக்காந்துட்டு இருக்குற குருவி எல்லாமே என்னையே பாக்குற மாதிரி இருந்துச்சு. ஒரு வயல் ஓரமா வந்துட்டு இருந்தப்போ ஒரு மீன் கொத்தி கூட கழுத்த சரிச்சு என்னையே பாத்துதுனா பாருங்களேன்.

அப்புறம் கார சிட்டி லெவலுக்குள்ள நுழைச்சாச்சு. இனி பராக்கு பாத்தா யார் மேலயாவது இடிக்க வேண்டியது தான். பொறுமை பொறுமைன்னு எனக்குள்ளயே கொஞ்சமா சத்தம் வராத மாதிரி சொல்லிக்கிட்டேன். அட, கார்ல போறவங்க, பஸ்ல போறவங்க, பைக்ல போறவங்க, எல்லோரும் என்னயவே பாக்குறாங்களோ? அச்சோ, அங்க பாருங்க, அந்த சைக்கிள்ல யாரோ என்னை பாத்து சிரிச்சுகிட்டே கடந்து போறாங்க. அவ்வளவு மெதுவா வண்டி ஓட்டுறேன். காரணம் ட்ராபிக்.

ஒரு வழியா மறுபடியும் ஊருக்குள்ள நுழைஞ்சு நான் வழக்கமா வருஷ கணக்குல போன அந்த பாதைல கார திருப்பினப்போ மனசு கொஞ்சம் அன் ஈசியா பீல் பண்ணிச்சு. இங்க இனிமேல் வரக்கூடாதுன்னு தான் மனசு அடிக்கடி சொல்லும். ஆனா அம்மா இருக்காளே. இந்த நினைப்பு வந்த உடனே மறுபடியும் சந்தோசம். கம்பவுண்ட்குள்ள நுழைஞ்சு, வீட்டு முன்னாடி கொண்டு போய் கார நிறுத்தியாச்சு.

மாமா ஏற்கனவே அங்க வந்திருந்தாங்க. அவங்க தான் வந்து என்னோட கார் கதவ திறந்து விட்டாங்க. நான் வேற யாரையும் திரும்பி பாக்கல, வீட்டுக்குள்ளயும் போகல, போக விருப்பம் இல்ல. என்னோட ரூம் இப்போ எப்படி இருக்குன்னு தெரியாது, அம்மாவோட பெட் ரூமும் இப்போ எப்படி இருக்குன்னு தெரியாது, அது எனக்கு தெரிஞ்ச ரூமாவே இருந்துட்டு போகட்டுமே. அதனால சைடுல திரும்பி அப்பா வாத்துக்களுக்காக கட்டி வச்சிருந்த நீச்சல் குளத்த பாத்தேன். தண்ணியே இல்ல. அப்படினா கண்டிப்பா மீனும் இல்ல.

இதுவரைக்கும் அப்பா கிட்ட அந்த மீன்கள் எல்லாம் எங்கன்னு நான் கேட்டதே இல்ல. எல்லா மீன்களுமே அப்பா பாத்து பாத்து வளத்துருப்பாங்க. அதனால கோல்ட் பிஷ், ஷார்க் எல்லாமே பெருசு பெருசா இருக்கும். பிடிச்சு கைல வச்சு விளையாடுற அளவு பெருசு. ஆனா நான் ஹாஸ்பிடல்ல இருந்து நேரே புது வீட்டுக்கு தானே போனேன், அங்க போய் மீன் பத்தி விசாரிக்கவும் இல்ல, அத எல்லாம் போட்டு வைக்குற அளவு தொட்டியும் அப்போ அங்க இல்ல. இனி தான் அப்பாகிட்ட கேக்கணும், அந்த மீன்களுக்கு எல்லாம் என்னாச்சுன்னு.

அப்படியே நடந்து போய்ட்டே இருந்தா, புறா கூடு, முயல் கூடு, இதுல எதுலயுமே ஒண்ணுமில்லாம வெறிச்சோடி கிடக்கு. வாழ்க்கைய ரசிக்கவும் தெரியாம, ரசிக்குரவங்கள ரசிக்கவும் விடாம அப்படி என்ன பிடிவாதம் வேண்டியிருக்குன்னு சித்தப்பா மேல கொஞ்சம் கோபம் வந்துச்சு. ஆனா ரசனை இல்லாம அவங்கள நினச்சு, வாழ்க்கைய வாழத் தெரியலன்னு ஒரு பரிதாபம் பெருமூச்சா வந்துச்சு.

அப்படியே வீட்டுக்கு பின்னாடி போய், தென்னந்தோப்பு வழியா கொஞ்ச தூரம் நடந்தா ஹை....... அம்மா...... மனசு வேகமா ஓடி போய் கட்டிப்புடிச்சுசாச்சு. ஆனா காலு, ஒரு அடி கூட நகர மாட்டேன்னு அடம் பிடிச்சு செயலிழக்க ஆரம்பிச்சுடுச்சு. அப்பாவும் தம்பியும் இத எதிர்ப்பார்த்தாங்களோ என்னவோ, ஓடி வந்து தாங்கிகிட்டாங்க. அப்படியே கண்ணெல்லாம் கலங்கி கீழ உக்காந்துகிட்டேன்.

அதுக்குள்ள மாமா பசங்க ஓடி வராங்க, அண்ணி, அங்க போய் உக்காரலாம்ன்னு கூப்டுறாங்க. ரெண்டு பேர் கைய புடிச்சு இழுக்க, இல்ல, என்னால நடக்க முடியலன்னு சொல்றேன். ஏன், காலுக்கு என்னாச்சுன்னு ஆள் ஆளுக்கு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா, விடுங்க, அவளே சரியாகி வருவா, நீங்க போங்கன்னு சொன்னாலும் இவங்க கேக்கல. ஆள் ஆளுக்கு பிடிங்க அண்ணியன்னு தோள் குடுத்து என்னை அம்மா கிட்ட தூக்கிட்டே போய்ட்டாங்க. அப்புறம், ஹே....ன்னு கூச்சல் போட்டுட்டே ஓடிப் போய்ட்டாங்க.

இதுல ஒருத்தி, இப்போ தான் டென்த் படிக்குறா, ரொம்பவே கவலையா என் முகத்தையே பாக்குறா. ஒண்ணுமில்லடா, கொஞ்சம் எமோசன்... அவ்வளவு தான்னு சொன்னேன், அப்போ சரின்னு பசங்க கூட விளையாட ஓடி போயிட்டா.

இப்போ நானும் அம்மாவும் மட்டும் தனியா. அப்பாவும் தம்பியும் மாமாவும் தூரத்துல இருந்தே என்னை பாத்துட்டு இருக்காங்க.

அம்மா, இப்போ தான் கட்டிப்புடிக்குற அளவு இருக்குறா. அவள கட்டிபுடிச்சுட்டே எழுந்து நின்னுட்டேன். எனக்காகவே அம்மா காத்துகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. எத்தன நாள் ஆச்சு, அவள பாக்காம இருந்து. நான் ஏறி உக்காந்துக்கணும்னே தான் தாழ்வாரத்துல ஒரு கிளையை பரப்பி வச்சிருக்குறா. அதுல ஏறி இப்போ உக்காந்தா அம்மா கை உடைஞ்சுடுமோன்னு ஒரு பயம். கீழயே உக்காந்துகிட்டேன்.

அம்மா மேல சாஞ்சு அவள அண்ணாந்து பாத்தா, என்னை பாத்து அழகா சிரிக்குறா. அதுலயும் டக்குன்னு என் கண்ணுல பட்டது ஒரு குருவி கூடு தான். தூக்கணாங்குருவி கூடு மாதிரி, ஒரு குடுமி வச்ச தேங்கா மாதிரி தொங்கிட்டு இருக்கு. உள்ள கண்டிப்பா குருவி இருக்கும். அப்புறம் ரெண்டு அணில், அங்கயும் இங்கயுமா தாவி ஓடி விளையாடிட்டு இருக்கு. இன்னும் நிறைய உயிர்கள் அம்மாவ தேடி வரலாம். அதுக்கு தானே அப்பா ஆசைப் பட்டாங்க. ஏதாவது ஒரு வகைல அம்மாவ தேடி யாராவது ஒருத்தங்க அடைக்கலமா வரணும்னு ஆசை பட்டாங்க.

அம்மா மடியில படுக்குறது எவ்வளவு சுகம் தெரியுமா?

அப்படியே தூங்கிட்டேன். அம்மா என்னை தடவி குடுத்துகிட்டே இருந்தாங்க. நான் தூங்கினப்போ தம்பியும் வந்து அம்மா கிட்ட நின்னுகிட்டே இருந்தானாம். அப்புறமா மாமா பொண்ணு அனுப்பின மெசேஜ்ல இருந்து தெரிஞ்சுகிட்டேன்.

அம்மா என்னை தாலாட்டினத வார்த்தையால விவரிக்கவே முடியாது. ரெண்டு பேரும் அப்படியே லயிச்சு போய் இருந்தோம். அங்க எல்லோரும் சம்ப்ரதாயங்கள முடிச்சுட்டு, சாப்பாடு கொண்டு வந்து அப்பா என்னை எழுப்பினப்போ தான் நான் மறுபடியும் கண்ண முழிச்சே பாத்தேன். அம்மா நிழல்ல சாப்பாடு. எனக்கு அம்மா மாதிரி எல்லோருக்கும் உருண்டை பிடிச்சு குடுக்கணும்னு தோணிச்சு. ஆனா அதுக்கான சான்ஸ் சரியா அமையல. அதனால நான் மட்டும் சாப்டேன். அங்கயே கை கழுவினேன். மறுபடியும் அங்கயே அம்மா கூடவே அவ மேல சாஞ்சு படுத்துகிட்டேன்.

அப்பாவும் தம்பியும், மாமாவும் கொஞ்ச நேரம் அமைதியா என் கூடவே உக்காந்துருந்தாங்க. அவங்களும் அம்மா கூட தான் பேசியிருப்பாங்க. அப்பா அம்மாவ தடவி குடுத்துட்டே இருந்தாங்க. அவங்க காதல் நூறு வருஷம் தொடரணும்.

கிளம்பணும்னு அப்பா என் தோள்ள கைவச்சு சொன்னாங்க. அப்பாவே என்னை தூக்கியும் விட்டாங்க. இப்போ யாரோட ஹெல்ப்பும் எனக்கு தேவையா இல்ல, விடு விடுன்னு திரும்பி கூட பாக்காம கார்ல வந்து பக்கத்து சீட்ல உக்காந்துட்டேன். நீ ஓட்டலயான்னு தம்பி கேட்டான், இல்லன்னு தலைய மட்டும் ஆட்டிட்டு மறுபடியும் கண்ணா மூடி சீட்ல சாஞ்சு படுத்துட்டேன்.

அம்மா கூட இருந்த அவ்வளவு நேரமும் நான் ரொம்ப அமைதியா இருந்தேன்னு எல்லோரும் நினச்சுட்டு இருந்துருப்பாங்க, ஆனா அவங்களுக்கு எப்படி தெரியும், அம்மா கிட்ட நான் சொல்ல வந்த அத்தனை கதையையும் சொல்லிட்டேன்னு.

என்னோட கோபம், அழுகை, விரக்தி, சோகம்னு மட்டுமில்ல, சந்தோசம், சிரிப்பு, புன்னகை, காதலையும் ஏராளமா சொல்லிட்டு வந்தேன். கார் நகர ஆரம்பிச்சப்போ, அம்மா அங்க இருந்தே என்னை கிளை அசைச்சு வழி அனுப்பி வச்சா...

லவ் யூ அம்மா......... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
22 comments:

 1. ஹப்பா... படிக்கப் படிக்க உணர்வுகள் என்னையும் தொற்றிக் கொண்டன. அம்மாவின் அருகில் நானும் இருப்பதாகவே ஒரு உணர்வு. இது உங்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று என்று தயங்காமல் கூறலாம்! அருமையம்மா டீச்சர்(வலைச்சர)!

  ReplyDelete
  Replies
  1. :) ரொம்ப தேங்க்ஸ்

   Delete
 2. உணர்வுகளை அப்படியே கொட்டி எழுதி விட்டீர்கள் காயத்ரி. சிறப்பான பகிர்வு....

  காற்றில் மரம் கிளைகளை அசைக்கும்போதெல்லாம் இனிமேல் ஒரு அம்மாவோ, அப்பாவோ, சகோதரனோ கை அசைப்பது போலத் தோன்றக்கூடும் எனக்கும்.....

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அப்படி ஒரு பீல் வந்தா கண்டிப்பா நான் ரொம்ப சந்தோசப்படுவேன். அவசர அவசரமா நகருர வாழ்க்கைல, இதெல்லாம் சின்ன சின்ன ரிப்ப்ரெஷ்மென்ட்

   Delete
 3. எனது அம்மாவின் ஞாபகம் நிறைய வந்தது... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா... எப்படியோ அம்மா பத்தி நினச்சாலே அது நமக்கு மன திருப்திய தான் குடுக்கும்

   Delete
 4. உனக்கு கடவுள் மிக பெரிய அதிஷ்டத்தை கொடுத்திருக்கிறார். நீ ஒரு அதிர்ஷ்டசாலி. எப்படி தெரியுமா? உன் அம்மா எங்கயும் அடைபடாமல் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார். உன் சுவாச காற்றுக்கு தேவையானதை அவரே உற்பத்தி செய்து, உன் ஆயுளை நீட்டிக்கிறார். நீ பட்டாம்பூச்சி, சந்தோசமா பறந்து போ... இளைப்பாற அப்பப்போ உன் அம்மா ஆங்காங்கே கிளைபரப்பி காத்துக் கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. அட, இது நல்லா இருக்குல.... சூப்பர் (y)

   Delete
 5. உனக்கும் எனக்கும் தான் எவ்வளவு ஒற்றுமை டா.... நானும் அப்பாவையும் அம்மாவையும் அவங்க பிடி சாம்பல் போட்டு ரெண்டு மாங்கன்றாக நட்டு வச்சி வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன் .... இத படிக்கும் பொது என்னையும் அறியாமல் கண்ணில் இருந்து ஆறாக .... லவ் யு அம்மா , அப்பா.....

  ReplyDelete
  Replies
  1. அம்மா, அதனால தான் கடவுள் நம்ம ரெண்டு பேரயும் சேர்த்து வச்சிருக்குறார். லவ் யூ அம்மா

   Delete
 6. அருமையிலும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ், உங்க வருகைக்கும், கருத்துக்கும்

   Delete
 7. Replies
  1. ஹ்ம்ம்ம் தேங்க்ஸ்

   Delete
 8. உறவின் உச்சம் சொல்லும் வார்த்தைகள் உயிரோட்டத்துடன்... உள்ளத்தின் உள்ளோட்டத்தை உயிரோட்டமாக்கிய விதம்... சொல்லும் மொழியில் தான் உணர்வின் வெளிப்பாடும் உயிரோவியமாகும் என்பதை ஒவ்வொரு வார்த்தைகளையும் செதுக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...

  லவ் யூ அம்மா......... உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா....

  ReplyDelete
 9. திரும்ப திரும்ப படிச்சுட்டே இருக்கேன்...
  வலி, ஆறுதல்னு எல்லாம் கலந்த ஒரு கலவையான உணர்வு...
  சொல்ல வார்த்தைகள் இல்லை...
  அருமை....

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் சிஸ்டர் இன் லா....

   Delete
 10. அம்மா மடியில படுக்குறது எவ்வளவு சுகம் தெரியுமா? //

  :)

  ReplyDelete
 11. நானும் என் அத்தாவின் பாசத்தை இழந்து 38 வருடங்களை கடந்து விட்டேன் ...
  எப்போது இல்லாத வலி இப்போது வலிக்கிறது ...
  நானாவது அவரின் முகத்தை பார்த்தேன் ... என் உடன் பிறந்த தங்கை அத்தாவின் முகத்தை கூட பார்க்கவில்லை ...
  இதை நினைக்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை ...

  ReplyDelete
 12. கண்ணீர் நிறைக்கும் பதிவு...

  ReplyDelete
 13. Ungal padivu manathil nindru vitathu.

  ReplyDelete