Thursday, 24 October 2013

உன்னோடு ஒரு வாழ்க்கை...!

வான்வெளி நட்சத்திரங்களாய்
நம் இருவருக்கிடையிலும் ஒரு துல்லிய இடைவெளி...

தூரத்தில் எட்ட நின்றே அங்கு காட்சியாகிறது
நமக்குள் ஒரு காதல் நாடகம்...!

என் நிழலின் அசைவை கண்களால் கணிக்கும் நீ
ஏனோ உன்னை நான் நோக்கும் பொழுதெல்லாம்
பார்வைகளின் சங்கமத்தை தவிர்த்துச் செல்கிறாய்...!

உனக்கும் எனக்கும் அப்படி என்னதான் பந்தம்?
என் கனவுகளில் இம்சித்துக் கொல்லும் உன்னை
அணுஅணுவாய் துடிக்க விட ஆசை...!

மொத்தமாய் உன் காதலை பருகிதான் பார்ப்போமென
துணிந்து உன்னை நெருங்குகிறேன் நான்...!

என்னை பின்தொடரும்
உன் பார்வை வீச்சுகளில் இருந்து தப்பித்து
ஓடி ஒளிந்து கொண்டு
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறேன்...!

உன் கண்களின் சிறைக்குள்
அடைபடாமல் தப்பிக்கும்
சாகச கைதியாய் கைதியாய் நான்...
என்னை காணாமல் நீ தவிக்கும் தவிப்பு
இன்னும் எனக்குள் பரவசம் ஊட்டிச் செல்கிறது...!

நீ கண்மூடி கிடக்கும் பொழுதெல்லாம்
வெண்துகில் கொண்டு உன் வேர்வை துடைக்கிறேன்...
பரவசபார்வை ஒன்றை நீ உதிர்க்கும் போதோ
போலியாய் கோபம் கொண்டு உதடு சுழித்துக்கொள்கிறேன்...!

இன்னும் என்ன தயக்கம்,
வா...! என் விரல்கள் கோர்த்து விடு என்று
என்னை இழுத்துக்கொண்டு
நம் வசந்தத்தின் வாசல் திறக்கிறாய் நீ...!

இங்கே கொட்டிக்கிடக்குறது
எனக்கான சுவர்க்க பூமி...
ஹஹா இல்லையில்லை நமக்கான சுவர்க்க பூமி...!

வெள்ளி அருவியின் முத்துச் சிதறல்
என் அங்கமெங்கும் முத்தமிட்டுச் செல்கிறது...
பொங்கும் என் மனமோ நீரலைகளை
அள்ளி அள்ளி ஆலிங்கனம் செய்து களிக்கிறது...!

என் காலில் நீ அணிந்த மெட்டியோ
உன் உயிரை என் உயிரோடு
சேர்த்து வைத்து தேய்க்கிறது...!
ஏக்கப்பார்வை பார்க்கும் கொலுசோ
கலகலவென நம் காதலை
இந்த பிரபஞ்சம் முழுதும் பறைசாற்றிச் செல்கிறது...!

கொஞ்சும் கிளியொன்றை
கண்களுக்குள் காட்டியே தீரவேண்டுமென்று
அடம் பிடிக்கிறேன் நான்....
உன் கொள்ளை அழகின் முன்
அது அரூபமாய் போனதென்று
அழகாய் பொய்யுரைக்கிறாய் நீ...!

உன் செந்தாமரை பாதங்களின் தீண்டல்களால்
இன்று நிலமகளும் மோட்சம் அடைகிறாள்...
தயவு செய்து வெட்கம் சிந்தாதே...
அதோ... உச்சி வெயிலிலே கீழ்வானம் சிவந்து விட போகிறது
என்று ஏதேதோ உளறுகிறாய்...!

அத்தனையும் ரசிக்கிறேன் நான்...
கண்மூடி லயித்திருக்கும் உன் கற்பனைக்குள் புகுந்தபடி...!
வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்
உன்னோடு அப்படி ஒரு வாழ்க்கை...!

இரவின் கரங்களுக்குள் நான்
மெல்ல மெல்ல உறங்கியே போகிறேன்
மீண்டும் விடியும்... நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையோடு...!19 comments:

 1. அற்புதமான கவிதை
  நினைவும் கனவும் கலந்த காதல்
  மயக்க நிலையை ஊணர வைக்கும்
  அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

   Delete
 2. Replies
  1. ஓட்டு போட்டதுக்கும் தேங்க்ஸ் :)

   Delete
 3. என்னவொரு ரசிப்பு + சிந்தனை...!

  அருமையாக முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசிச்சதுக்கு தேங்க்ஸ் அண்ணா :)

   Delete
 4. "ஏக்கப்பார்வை பார்க்கும் கொலுசோ
  கலகலவென நம் காதலை
  இந்த பிரபஞ்சம் முழுதும் பறைசாற்றிச் செல்கிறது...!"
  "உன் செந்தாமரை பாதங்களின் தீண்டல்களால்
  இன்று நிலமகளும் மோட்சம் அடைகிறாள்..."
  ரசிக்கவைத்த அழகு வரிகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹஹா ரசித்ததுக்கு தேங்க்ஸ்

   Delete
 5. எண்ணற்ற உவமைகள்... இயற்கையையும் காதலையும் இணைத்த வர்ணனைகள்....
  காதல் கவிதைகளில் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்து அதை மீண்டும் படிப்பவர்களின் உணர்வில் கொண்டு வருவதென்பது மிக அற்புதமானதொரு விஷயம்... அதை அருமையாய், அழகாய், குறைவின்றி நிறைவேற்றியிருக்கும் கவிதை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. tha.ma. தேவையான அளவு!!! ;-)

   Delete
  2. உங்களோட இந்த ரசனை எனக்கு இன்னும் எழுதலாம்னு உற்சாகத்த குடுக்குது. தேங்க்ஸ்

   Delete
 6. என் கனவுகளில் இம்சித்துக் கொல்லும் உன்னை
  அணுஅணுவாய் துடிக்க விட ஆசை...!
  >>
  பழிக்கு பழியா?!

  ReplyDelete
  Replies
  1. பழிக்கு பழி இல்ல, ரெண்டுபேருக்குமே அது சுகமான அவஸ்தை தானே

   Delete
 7. என் காலில் நீ அணிந்த மெட்டியோ
  உன் உயிரை என் உயிரோடு
  சேர்த்து வைத்து தேய்க்கிறது...!
  ஏக்கப்பார்வை பார்க்கும் கொலுசோ
  கலகலவென நம் காதலை
  இந்த பிரபஞ்சம் முழுதும் பறைசாற்றிச் செல்கிறது...!

  அற்புதமான எழுத்தில் ரசிக்கவைத்த வரிகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. :) தேங்க்ஸ் உங்க ரசனைக்கு

   Delete
 8. கவிதை நீண்டாலும் களிப்படைய வைத்தது! அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம் தேங்க்ஸ்

   Delete
 9. வணக்கம்

  கவிதையின் கற்பனை சொல் வீச்சு கருத்தமைப்பு எல்லாம் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete