Tuesday 29 October 2013

உன்னைத்தேடி உன்னோடொரு பயணம்...!

கொட்டும் அருவியாய் சிலிர்க்கும் உன் கவிதைகளை
ஏனோ காணவே முடிவதில்லை இப்பொழுதெல்லாம்...!

உன் கவிதை கண்டு பொங்கும் மனமோ
ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து
கணினித் திரையை வெறிக்கத்துவங்க...

கைகள் அனிச்சை செயலாய்
உன் வலைப்பூ முகவரியை தேடியலைந்ததால்
அங்கே பதுங்கி இருக்கும்
உன் பொக்கிச சாலைகள்
ஒவ்வொன்றாய் திறக்கத் துவங்கின...!

கொல்லுஞ்சொல் விடுத்து
குரும்புன்னகை அணிந்து
எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும்
எழுத்துக்குழந்தையாய் அங்கே நீ சிரித்து நிற்கிறாய்...!

உனக்காக நான் செதுக்கி வைத்த
பச்சை புற்தரையில்
பிரத்யேகமாய் நீ அமைத்த “நண்பர்களின் கூடார(ம்)”த்தில்
உன் எண்ணத்தேடல்களும் சிந்தனைசிதறல்களும்
பொன்வண்ண மலர்களாய் கொட்டிக்கிடக்கின்றன...!

அலைபாயும் கண்களை
கட்டிபோட மனமில்லாமல்
உன் கவிப்பூக்கள்
ஒவ்வொன்றாய் தாண்டிச்செல்கிறேன்...!
ஒவ்வொன்றை கடக்கும் போதும்
ஒவ்வொரு விநோதங்கள்...!

ஒற்றை காளானாய் தனித்திருந்தும்
என்றாவது ஓர் நாள்
மண் கிளறி வேர்பதிக்கத் துடிக்கும் நீ...

மனதிற்குள் பாடும் மனங்கொத்தியாகவும்
தோல்விக்காயங்களை சொருகிய சரங்கொத்தியாகவும்
உன்னை அடையாளப்படுத்தி கொள்கிறாய்...!

அன்பை தேடி தேடி
கிறுக்கும் உன் பேனா ஏனோ
அன்னையின் அன்பை மட்டும்
எழுதுவதில்லை...!

கடலோரக்குருவியையும் கார்ல்மார்க்ஸ்-சையும்
முழுதாய் சிலாகிக்கும் நீ
எனக்காக விட்டுச்சென்ற கவிதையொன்றை
கண்கள் விரிய ஆவலாய் பார்க்கிறேன் நான்...!

இறுகிக்கிடந்த உன் மனப்பாறையில்
நம் நட்பு இதமான தூறலாய்
அங்கே சாரலடித்துக்கொண்டிருந்தது கண்டு
அந்த நாளின் நிகழ்வுக்குள்
குடையில்லாமல் சற்று நனைந்துக்கொள்கிறேன் நான்...!

யாருமே எழுதிடா கவிதையொன்றை
எழுதிவிட்டு போவென அடம்பிடித்து,
என்றோ உன் மனம்கவர்ந்து சென்ற காதலியின்
வாசத்தை ஆங்காங்கே நகர்ந்துக்கொண்டே நுகர்கிறேன்-
கொஞ்சம் பொறாமை கலந்த பெருமூச்சோடு...!

இங்கு மட்டுமே முற்றுபட்டு விட்டதா என் தேடல்?
இல்லையில்லை, பாதை சற்றே மாற்றி
வலைப்பக்கம் உன் கவிதைகளை தேடினால்
கண்ணுக்குள் வந்து கவிமழை பொழிகிறான்
கவிதைக்காரன்...!

சற்றே திகைத்து நிற்கிறேன்...
உன் கவிதைகளுக்குள் மூழ்கி விட்டால்
உறங்க நினைக்கும் முன்
என் இரவும் விடிந்து தான் போகுமோ?

பெயர் அறியா குழந்தைக்கும் கவிபாடி,
கொங்கு மண்டலத்தின் அழகினை
பொங்கும் தமிழில் சலிப்பே இல்லாமல்
பாமரனையும் ரசிக்க வைப்பதில் நீ கில்லாடி...!

மணநாள் காணும் தோழியாகட்டும்,
தலைவனை காணா தலைவியாகட்டும்
உன் கவிக்குள் வீழ்ந்துவிட்டால்
தன்னையே தலைவியாக்கி
மொத்த காதலையும் தத்தம் இணைகள் மேல்
கொட்டித் தீர்த்து விடுகின்றனர்...!

இனியும் பொறுமை எனக்கில்லையென
சற்றும் தாமதிக்காது உன்னிடமே கேட்டு விட்டேன்...
எப்படி உன்னால் கூடு விட்டு கூடு பாய்ந்து
சராமாரியாய் கவிதை சரம் தொடுக்க முடிகிறதென்று...!

அதுவென்னவோ கவிபடைக்க
கருத்துக்களை தேடும் பொழுதெல்லாம்
தாயாகவும் தனையனாகவும்,
தோழியாகவும் நிலவாகவும்,
அத்வைதமாய் உருமாறி
கவிதை ஊற்றுக்குள் மூழ்கிப் போகிறேன் என்கிறாய்...!

நீ தான் சோழநாட்டு கம்பனா என்கிறேன்
இல்லையில்லை,
பாண்டிய நாட்டுப் புலவன் புகழேந்தி என்கிறாய்…!

முண்டாசு கவிஞனின் மூத்த மகன் நீயோ என்கிறேன்...
இல்லவேயில்லை
எட்டயபுரத்துக்காரனின் இளையமகன் நான் என்கிறாய்...
சற்றும் கர்வம் குறையாமல்...!

வந்ததுதான் வந்தாய், உனக்கு பிடித்த கவிதையொன்றை
சொல்லிவிட்டு போ என்கிறேன்…
இன்னமும் எழுதா கவிதையே
எனக்கு பிடித்ததென்று சொல்லிவிட்டு சிரிக்கிறாய்...!

அட திமிர் பிடித்த தோழா...!
உன்னால் கிறுக்கப்பட்ட கவிதைகள்
என் மனமெங்கும் இறைந்துகிடக்கின்றன...
உடனடியாய் வெள்ளையடிக்க வந்துவிடு...
நாளை என் வீட்டில் பொங்கல்...!
இது ஒரு மறுப்பதிவு...... பொங்கலுக்கு எழுதினது, தீபாவளிக்கு நேரத்துல மறுபடியும் ரிலீஸ்

22 comments:

 1. வணக்கம்
  கவிதையின் வரிகள் ரசிக்கும் படிஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  வலைச்சரத்திலும் பதிவு அத்தோடு உங்கள் தளத்திலும் பதிவு... உங்கள்திறமைக்கு பாராட்டுக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ்... இது கவிதைன்னு சொல்ல முடியாது, ஏன்னா இதுல இருக்குற லைன்ஸ் எல்லாமே அவரோட கவிதைகள்ல இருந்து எடுத்தது தான்... கடைசி உரையாடல் போல் அமைந்ததும் கூட இருவருக்குமான நிஜமான உரையாடல் தான்

   Delete
 2. தமிழ்மனம் பிளஸ் வோட்டு +2

  ReplyDelete
  Replies
  1. வோட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்... அதென்ன, ரெண்டு ஓட்டு நீங்களே போட்டீங்களோ?

   Delete
 3. அடடா... என்னவொரு அக்கறையோடு ரசித்த விதம் மிகவும் பிரமாதம்.... பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு தேங்க்ஸ் அண்ணா.... அக்கறைன்னு வேற சொல்லிட்டீன்கலாம் ஒரே சந்தோசம்

   Delete
 4. kavithai padikkumpothu naduvula sila varikal puriyavittalum moththaththil kavithai super akka...

  ReplyDelete
  Replies
  1. மகேஷ், இது எல்லாமே கார்த்திக்கோட லைன்ஸ். அவர் எழுதின பல கவிதைகள்ல இருந்து லைன்ஸ் சுட்டு, நான் கொஞ்சம் அங்க இங்க ஒட்டல் வேலை செய்தது... அவ்வ்வ்வ்

   Delete
 5. சிறப்பான கவிதை. ரசித்தேன்......

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் தேங்க்ஸ், தேங்க்ஸ் எ லாட்

   Delete
 6. உண்மை கவிஞனின் ரசனை உணர்வை ஒவ்வெரு வரிகளிலும் அனுபவிக்க முடிகிறது தோழி ...:-)

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் தோழி, ரசிச்சதுக்கு

   Delete
 7. எல்லா வரிகளையும் பொருத்தமா கோர்த்திருக்கிறாய்... அழகான தொகுப்பு

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மேடம்....

   Delete
 8. நட்போட ஆழம் அழகு டா .... கவிதைகாரனின் ரசிகை நானும் ....

  ReplyDelete
 9. அருமையா இருக்கு

  ReplyDelete
 10. அப்பா, தமிழ்ல விளயாடியிருக்கேப்பா.. வொண்டர்..வொண்டர்..

  ReplyDelete
 11. //யாருமே எழுதிடா கவிதையொன்றை
  எழுதிவிட்டு போவென அடம்பிடித்து,
  என்றோ உன் மனம்கவர்ந்து சென்ற காதலியின்
  வாசத்தை ஆங்காங்கே நகர்ந்துக்கொண்டே நுகர்கிறேன்-// நான் ரசித்த வரிகள்..:)

  ReplyDelete
 12. சில வருடங்களுக்கு முன் கார்த்திக் இடம் நான் பேசிய "விஷயங்களின்" தொகுப்போ என நினைக்கும்படி இருக்கு "பல பாராக்கள்".

  ReplyDelete