Tuesday 31 January 2017

தற்கொலைக் கடிதம்- Reviewஎன்னோட புத்தகத்துக்கு வந்த ஒரு review இது.....
......................................

வணக்கம் மேடம்.

உங்களின் தற்கொலைக்கடிதம் புத்தகம் படித்த ஒரு சாதாரண மனிதன் நான்.

எனக்கு review எல்லாம் எழுதத்தெரியாது.

தமிழ் தட்டச்சும் தகராறுதான்.

புத்தகம் படிக்கப்படிக்க மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.

Thursday 26 January 2017

புத்தக வெளியீட்டு விழா - தற்கொலைக் கடிதம்
நாள்: 22/01/2017 (ஞாயிறு)

இடம்: தமிழ் அரங்கம்

நேரம்: மாலை 4.30
…………………………………………………………..

இந்த நாளையும் இடத்தையும் நேரத்தையும் என்னால எப்பவுமே மறக்க முடியாது. காரணம், அன்னிக்கி தான் என்னோட முதல் சிறுகதை தொகுப்பு “தற்கொலைக் கடிதம்” வெளியாகின நாள்.

அதென்னமோ தெரியல, உடம்பு சரியில்லாததாலோ என்னவோ ரொம்ப லேட்டா தான் கிளம்பினேன். ஏற்கனவே பொன்னீலன் சார் என்னை காணோம்னு போன் வேற பண்ணிட்டார். அவசர அவசரமா கிளம்பி அவர கூட்டிட்டு விழா நடக்குற இடத்துக்கு போனப்ப மணி அஞ்சு. அதிகமான பேர் வரலைனாலும் சொந்த பந்தங்கள், நட்புகள், அப்பா, மாமான்னு எல்லாரும் முன்கூட்டியே அங்க உக்காந்துட்டு இருக்காங்க.


விழா நாயகி நீ, இப்படி லேட்டா வரலாமான்னு கேட்டுகிட்டே படபடன்னு மேடைல கூப்ட்டு உக்கார வச்சுட்டாங்க. எனக்கு ஒரே பயம். என்னடா இது, வந்த உடனே மேடைல ஏத்திட்டாங்களேன்னு. அப்பாவும் மேடைக்கு வருவார்ன்னு பாத்தா, அவர் கீழே உக்காந்துட்டு இருந்தார். சரிதான், ஆள் மேல வர மாட்டேன்னு அடம்பிடிச்சிருப்பார்ன்னு நினைச்சுகிட்டேன்.

.....................................................................

புத்தகம் ரெடி ஆனதுமே உடனே வெளியீட்டு விழா வச்சுடணும்ன்னு ரொம்ப துடிச்சேன். ஆனா பதிப்பாளர் ஜெபா தான் ஜனவரி இருபத்தி ரெண்டை தேர்வு செய்தார். அந்த நாள்ல தான் பொன்னீலன் சார் ப்ரீயா இருப்பார்ன்னு சொன்னார். நமக்கு நாள் கிழமை எல்லாம் முக்கியம் இல்ல, ஆனா பொன்னீலன் சார் வந்தே ஆகணும்ன்னு அடம். அதனால சரின்னு சொல்லிட்டேன். நூல் ஆய்வுரை சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் அவார்ட் வாங்கின மலர்வதி பண்ணினா நல்லா இருக்கும்னு ஜெபா விருப்பபட்டார்.


திடீர்னு ஒருநாள் ஜெபா, நம்ம program கூடவே இன்னொருத்தர் புக்கும் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்கன்னு கேட்டார். எனக்கு திடீர்னு என்ன சொல்லன்னு தெரியல. அன்னிக்கி சாயங்காலமே ஜெபாவும் ராமும் வீட்டுக்கு வந்து, இப்படி வைக்குறதால நமக்கு நல்லது தான். முத்தலக்குறிச்சி காமராசு சார் நிறைய புத்தகங்கள் எழுதினவர். அவர் கூட நம்மோட புத்தகத்த வெளியிடுறது ரொம்ப நல்லதுன்னு புரிய வச்சாங்க. வேலைகள் மளமளன்னு நடக்க ஆரம்பிச்சுது.

........................................................

இரண்டு புத்தகங்களோட வெளியீட்டு விழா இது.

முதல் புத்தகம் “தற்கொலைக் கடிதம்” நான் எழுதினது. இன்னொன்னு முத்தலக்குறிச்சி காமராசு சார் எழுதின “எனது பயணங்கள்” நூல்.

இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டது எழுத்தாளர் பொன்னீலன். தற்கொலைக் கடிதத்த பெற்றுக் கொண்டது சாட்சாத் என்னோட அப்பா, ஸ்ரீதரன் குமாரபெருமாள். நூல் ஆய்வுரை செய்தது எழுத்தாளர் மலர்வதி. எனது பயணங்கள பெற்றுக் கொண்டது டாக்டர். ச. மனக்காவல பெருமாள். அவரோட நூலை ஆய்வு செய்தவர் எழுத்தாளர் குமரி எழிலன்.

தலைமை: யுத்தப்பிரசங்கி ஜாண்முறே

வரவேற்புரை: கடிகை ஆன்றனி

முன்னிலை: வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன்

வாழ்த்துரை: ஜே.இ. ஜெபா

நன்றியுரை: கார்த்திக் புகழேந்தி

விழா ஏற்பாடு: திரிவேணி இலக்கிய சங்கமம்


நிகழ்ச்சி சரியா அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு எட்டே காலுக்கு முடிஞ்சுது. நானெல்லாம் புத்தகம் எழுதுவேனா அப்படிங்குற சந்தேகம் இருந்ததால கடிகை ஆன்றனி என்னை பத்தி என்ன சொல்லன்னு தெரியாம பாவம் நிறைய சமாளிச்சார். புத்தகத்தோட தலைப்பு பத்தி தான் அதிகமா கேட்டாங்க, எப்படி ஒரு எதிர்மறை தலைப்பை வைக்க முடிஞ்சுதுன்னு.

ராம் பேசுறப்ப, இந்த புத்தகத்த நான் தான் எடிட் பண்ணினேன். அதுக்கு என்ன தலைப்பு வைக்கன்னு தெரியாம இருந்தப்ப மனசுல தோணினது தான் இந்த தலைப்புன்னு சொன்னார்.

முத்தலக்குறிச்சி காமராசு சார் ஏற்கனவே மேடைல இருந்தவங்களுக்கு அறிமுகம் ஆனவர்ங்குறதால அவர பத்தின நிறைய விஷயங்கள் பேசினாங்க. அவர் எழுதின புத்தகங்கள், சாதனைகள்ன்னு நிறைய சொன்னாங்க. அதனால என்னோட புத்தகத்த பத்தியும் விழாவ பத்தியும் நான் இங்க சொல்லிக்குறேனே. முத்தலக்குறிச்சி காமராசு சார் என்னை மன்னிக்கணும்.

.............................................

பொன்னீலன் சார் பேச ஆரம்பிச்சப்ப தான் நான் கொஞ்சம் நிமிர்ந்து உக்காந்தேன். மேடைல இருந்தவங்கள்ல நமக்கு அவர மட்டும் தான தெரியும். என்னோட புத்தகத்த கைல வச்சுட்டு பக்கத்துக்கு பக்கம் அவர் குறிப்பு எழுதி வச்சிருந்தார். மெல்ல எட்டிப் பாத்தேன், என்ன எழுதி இருக்கார்ன்னு. ஆனா எதுவுமே தெரியல. மேடைல பேசுறப்ப, இந்த புத்தகத்த பத்தி பேச நிறைய விஷயம் இருக்குன்னு ஆரம்பிச்சு, முதல் கதை கன்னி பூஜை பத்தி பேச ஆரம்பிச்சார். பேச ஆரம்பிச்சார்ன்னு சொல்றத விட வரிவரியா வாசிக்க ஆரம்பிச்சார். இது தான் உன் மொழி. யாராலயும் சொல்ல முடியாத மொழின்னு பாராட்டினார். அதோட “இறந்து போன கன்னி பெண்களுக்கு பூஜை செய்வாங்க, ஆனா கன்னியா இறந்த ஒரு ஆணுக்கு நடக்குற பூஜையை நீ தான் முதல் முதல்ல பதிவு பண்ணியிருக்க”ன்னு சொன்னப்ப நான் என்னோட சித்திகள், மாமாக்கள் முகத்த கவனிச்சேன். அவங்க முகத்துல ஒரு பெருமிதம். பின்ன, எங்க வீட்ல நடக்குற கன்னி பூஜைய தான நான் எழுதி இருந்தேன். அப்புறமா, “இருப்புக் குழி” சிறுகதை பத்தி பேசினார். “அன்புள்ள ராமையாவுக்கு” எழுதின கடிதத்த பாராட்டித் தள்ளினார். நான் வாயடைச்சு போய் எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருந்தேன்.அடுத்ததா என்னோட நூலை ஆய்வு செய்த எழுத்தாளர் மலர்வதி என்ன சொல்லுவாங்களோன்னு பதட்டத்தோட இருந்தேன். ஆனா எடுத்ததுமே “தற்கொலைக் கடிதம்” பத்தி பேச ஆரம்பிச்சு என் பதட்டத்த தணிச்சுட்டாங்க. “எனக்கு வாழணும். மனசுல இருக்குற வெறி அடங்க அடங்க வாழணும்”ன்னு நான் எழுதி இருந்தத குறிப்பிட்டு அவ்வளவு தான், இது தான் மொத்த சாராம்சமும்ன்னு சொன்னாங்க. அப்பா பத்தி எழுதி இருந்தத குறிப்பிட்டு, தன்னோட பூனை குட்டி நியாபகம் வந்ததாகவும், தீனிப் பண்டாரங்கள் படிச்சுட்டு கருவாட்டுக் குழம்ப பத்தி பேசினாங்க. மொத்தத்துல நிறைய பாராட்டினாங்க. ஒரு மாதிரி நான் காத்துல மிதந்துட்டு இருந்ததால அதெல்லாம் இங்க என்னால எழுத்துல குடுக்க முடியல.

ஜெபா பேசுறப்ப, என்னோட மனைவி தலைவலிக்குதுன்னு இப்ப சொன்னா எனக்கு பதறுது. அது தான் இந்த புத்தகத்தோட வெற்றின்னு சொன்னார். ஜெபா, அடுத்த முறை உங்க மனைவி தலைவலிக்குதுன்னு சொன்னா கண்டிப்பா நீங்க அவங்க பக்கத்துல இருப்பீங்க. எனக்கு தெரியும்.

........................................

நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லாரும் வந்து கைக்குடுத்தாங்க. என்னோட மாமா, மாமி, சித்தின்னு ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோசமா கிளம்பி போனாங்க. எனக்கு அது தான் வெற்றியா தோணிச்சு.

சொக்கலிங்கம் சார் நான் ரொம்ப நல்லா பேசினேன், மனசுல இருக்குறத யதார்த்தமா பேசினேன்னு சொன்னார். இந்த இடத்துல என்னையும் அவங்கள்ல ஒருத்தியா மதிக்குற “கலை இலக்கிய பெருமன்ற”த்துக்கு என்னோட நன்றிய கண்டிப்பா நான் சொல்லியாகனும்.

.......................................

இந்த பதிவ எழுதிட்டு இருக்கும் போது இந்தா இப்ப தான் பொன்னீலன் சார்கிட்ட இருந்து போன்....

கால் அட்டென்ட் பண்ணி "ஹலோ"ன்னு சொன்னதுமே "எம்மா உன் புத்தகத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கு"ன்னு சொன்னார். குரல்ல அவ்வளவு உற்சாகம்...

"மனக்காவல பெருமாளே உன்னோட புத்தகத்துல அஞ்சு காப்பி வேணும்னு சொன்னாராம். இப்படியே உன் புக் வித்து தீர்க்குது. உன்கிட்ட இருக்குற மொழி அப்படிப்பட்டது"ன்னு பாராட்டினார்.

"எழுத்துலகத்தில் நீ அங்கீகரிக்கப்பட்டு விட்டாய்"ன்னு அவர் சொல்றது எல்லாம் சாதாரணமான விசயமா என்ன?

"இனி நீ படிபடியா உன்னை முன்னேற்றி உன் மொழிய உன் ஊருக்குள்ள இழுத்துட்டு வா. வேற எவனும் சொல்ல முடியாத மொழிக்கு போயிரு. அந்த மொழில நீ நின்னுட்டா ஒருத்தராலயும் நிக்க முடியாதுல"ன்னு சொன்னப்ப நன்றி சொன்னேன்.

"நன்றி எல்லாம் வேணாம் மா. நீ ஆரம்பி"ன்னு சொல்லிட்டு அடுத்த கூட்டங்களுக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்மான்னு சொல்லி போன வச்சார்.

இதுக்கு மேல வேறென்ன வேணும்?

................................................................


கொசுறு தகவல்: அன்னிக்கி மொத்தமா வித்த என்னோட புத்தகத்து எண்ணிக்கை அறுபது

புத்தகத்தை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.marinabooks.com/detailed?id=5%200280

http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html


 

Friday 13 January 2017

சென்னை புக் ஃபேர்: - தற்கொலைக் கடிதம் reviewநான் blog எழுதுறது, பேஸ்புக்ல page வச்சிருக்குறது எதுவும் என் நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியவே தெரியாது...

சொந்தக்காரங்க யார் ஐடி கண்ணுல பட்டாலும் block பண்ணிட்டு, facebook-கா அப்படினா என்னதுன்னு அவங்ககிட்டயே திருப்பி கேப்பேன்...

ஆனா முதல் தடவையா துணிச்சலோட என்னோட எழுத்துக்கள ஒரு சிறுகதை தொகுப்பு புத்தகமா போடலாம்ன்னு முடிவெடுத்து, நானாவே தான் எழுத்தாளர் பொன்னீலன்Bhaktavatsalan Ponneelan சார்கிட்ட போய் காமிச்சேன்.

படிச்சு பாத்துட்டு நிறைய பாராட்டினார். அவரே அதுக்கான அணிந்துரையும் எழுதி குடுத்து, அத எப்படி புத்தகமாக்குறதுன்னு வழி முறையும் காட்டித் தந்தார்.

அவரோட வழிகாட்டுதல்ல என்னோட புத்தகம் வெளிவந்து இப்ப சென்னை புக் ஃபேர்ல விற்பனைக்கும் வந்துடுச்சு.

என்னதான் துணிச்சலோட நான் இத எல்லாம் செய்தாலும் சொந்தக்காரங்க மத்தியில எனக்கு எந்த விதமான ரியாக்சன் இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்...

அதனால தான் யார் கண்ணுலயும் என்னோட புத்தகத்த காட்டாம எல்லாத்தையும் அல்மாராவுல வச்சு பூட்டி வச்சேன்...

அப்படி இருக்குறப்ப தான் என் மாமா பொண்ணு என்கிட்ட என் புத்தகத்த படிக்க கேட்டா. பயம் தான், என் எழுத்த படிச்சுட்டு என்ன சொல்லுவாங்களோன்னு. ஆனாலும் ஏதோ ஒரு துணிச்சல்ல எடுத்து குடுத்தேன்...

புத்தகத்த முழுசா படிச்சுட்டு அவ குடுத்த review இனி....
______________________________

ஒரு வித்யாசமான உணர்ச்சிகள புரிஞ்சுக்குற மாதிரி ஒரு புக் அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல படிக்குறது ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு.

சிரிப்பு, அழுகை ரெண்டையும் ஒரே புத்தகத்துல கொண்டு வந்துட்டீங்க. நம்ம ஊருல இருக்குற specialities-சும் வித்தியாசமான விதத்துல சொல்லியிருக்கீங்க. என்னோட generation-கே இதெல்லாம் தெரியல...

Food items- ச சாப்பிடுறது மட்டும் இல்லாம அதையும் தாண்டி.... ரொம்ப சுவாரஸ்யம்.

உங்கள சின்ன வயசுல இருந்து தெரிஞ்சதால உங்களோட பார்வை & எண்ணங்கள், மாமா, அத்தை எல்லாரையும் உங்க எழுத்துக்கள்ல புதுசா உணர முடிஞ்சுது...

உங்க மேல இன்னும் பெரிய மரியாதை வந்துருக்கு.

கதைகள்ல என்னோட favorites by order.... 2,5,1,13,20,10,14,17

மத்த எல்லா கதைகளும் பிடிச்சிருந்துச்சு. ஆனா இதெல்லாம் என்னோட உணர்ச்சிய வெளிப்பட வச்சது...

12-ல நீங்க சொல்லியிருக்குற திமிரான உணர்ச்சி பூர்வமான காதல் கலக்கல்...

இந்த review -லாம் சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்குதானு எனக்கு தெரியாது. but சொல்லலனா என் மனசு கேக்காது.

உங்கள் அடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்....
______________________________

இத படிச்சதும் நிஜமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு... அப்படியும் என்னால நம்ப முடியாம "அப்போ துணிஞ்சு அடுத்த புக் ரெடி பண்ணலாம்ல. பயந்துட்டே இருந்தேன்"ன்னு கேட்டேன்...

"கண்டிப்பா அண்ணி. நம்ம ஊரு ஸ்டைல்ல எங்கள மாதிரி பிள்ளைகளுக்கு தெரியாத விசயத்த வித்யாசமான கண்ணோட்டத்துல சுவாரஸ்யமா சொல்ல ரொம்ப கஷ்டம். அத எதார்த்தமா படிக்கவும் உணரவும் முடியுது. இன்னும் எதிர்பார்ப்பு கூடியிருக்கு. கண்டிப்பா ரெடி பண்ணுங்க, நாங்க இருக்கோம்"ன்னு சொன்னா.
_______________________

அவ குடுத்த review தைரியத்துல நான் இன்னும் சத்தமா உங்களுக்கு எல்லாம் சொல்லிக்குறேன்....

சென்னை புக் ஃபேர்ல என்னோட புத்தகம் கிடைக்குற அரங்குகள்

புதினம் புக்ஸ் : ஸ்டால் எண் 35B
நூலகம் பேசுகிறது: ஸ்டால் எண் 409
வீ கேன் புக்ஸ்: ஸ்டால் எண் 536

___________________________

என்னை பத்தி எதுவுமே தெரியாத போதும் துணிச்சலா இந்த புத்தகத்த அழகா வடிவமைச்சு, அச்சிலேற்றி குடுத்துருக்குற J.e. Jebha-வுக்கும் உறுதுணையா இருந்த Ram Thangam- அவர்களுக்கும் என்னோட நன்றி.

Thursday 5 January 2017

தலைகால் புரியாத தருணம் - தற்கொலைக் கடிதம்நாலு பேரு நாலு வார்த்த நல்லதா சொன்னா நம்ம மனசுக்குள்ள வர்ற சந்தோசமே தனி. என்னதான் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாதுன்னு சொன்னாலும் நம்மள தூக்கி கொண்டாடவும் சில உறவுகள் வேணும் கண்டிப்பா... சோர்ந்து போற நேரத்துல எல்லாம் அவங்க வார்த்தைகள் தான் நமக்கு உற்சாக டானிக்...

நம்மோட நலன் விரும்பிகள நாம தேர்வு செய்ற விதம் ரொம்ப அவசியம். நாம எது செய்தாலும் சரின்னு சொல்றவங்க சில பேரு இருப்பாங்க. கிட்டதட்ட கண்மூடித்தனமா நம்மள நம்புறவங்க அவங்க. அவங்களோட அன்பு மெய்சிலிர்க்க வைக்கும், அதே நேரம் நிறைய கூச்சத்தையும் தயக்கத்தையும் குடுக்கும். என்ன இவங்க இப்படி பாராட்டுறாங்க, இதுக்கெல்லாம் நாம வொர்த் இல்லையே அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பயம் எட்டிப் பாக்கும். இவங்கள எல்லாம் நான் தள்ளி நின்னே அன்பு செய்வேன். நிறைய அன்பு செய்வேன், அவங்க பாராட்டினா கூச்சத்தோட ஒரு ஓரமா ஒதுங்கிடுவேன்...

இன்னொரு வகை உண்டு. நாம செய்ற செயல் அவங்கள ஈர்க்கலன்னா அப்படியே கடந்து போய்டுவாங்க. அதே நேரம், அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை பாராட்டாம போக மாட்டாங்க. அப்படி ஒருத்தர் வெற்றி விடியல் சீனிவாசன் சார். மனுஷன் நச்சுன்னு ஒரு கமன்ட் தான் போடுவார், அத பாத்தாலே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோசம் எட்டிப்பாக்கும் பாருங்க... அத எல்லாம் எழுத்துல விவரிக்கவே முடியாது.

அடுத்தது, நாம செய்ற நல்ல விசயங்கள பாராட்டவும், தப்பு செய்தா நச்சுன்னு குட்டவும் செய்ற தோழமைகள். Academic side –ல எனக்கு அப்படி ரெண்டு பேர் வாய்ச்சிருக்காங்க. ஆள் பெரிய ஆள், multitalented- ன்னு பாராட்டவும் செய்வாங்க, லூசாப்பா நீயி, உனக்கு அறிவே கிடையாதான்னு பளிச்சுன்னு கேட்டுறவும் செய்வாங்க.

ஒரு விஞ்ஞானியாகணும்ன்னு கண்ட கனவெல்லாம் சாத்தியமேயில்லன்னு ஆனதுக்கப்புறம், எழுத்துப் பக்கம் என் கவனம் திரும்பிய போது, பாராட்டவும் குட்டவும் சரியான ஒரு ஆள் இல்லாம நிறைய திணறியிருக்கேன். இங்க இருக்குற நட்புக்கள் எல்லாம் எனக்கு உற்சாகத்த மட்டுமே குடுக்குறவங்களா அமைஞ்சு போய்ட்டாங்க. யார்கிட்ட போய் என் நிறை குறைகள கேக்குறதுன்னு புரியவும் இல்ல.

ஏன்னா, குறைகள் சொல்லணும்னே நிறைய பேர் இருப்பாங்க. அவங்க வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்தோம்னா நம்மோட வீழ்ச்சி ஆரம்பிச்சிடுச்சுன்னு அர்த்தம். அதே நேரம், நாம நல்லா இருக்கணும்ன்னு நம்மோட குறைகள சுட்டிக் காட்டுறவங்க இருப்பாங்க. அவங்க தான் நம்மோட வரம். அவங்கள விட்டுடவே கூடாது. ஏதோ ஒரு தருணத்துல மனசு வலிச்சாலும் எதார்த்தத்த புரிஞ்சுக்குற பக்குவத்த நாம வளத்துக்க இவங்க பக்கபலமா இருப்பாங்க.

வட்டார வழக்குல தான் எழுதுறேன் அப்படின்னு நான் நம்பிட்டு இருந்த நேரத்துல, “எம்மா, நேத்து ரொம்ப நேரம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப நேரம்... நல்லா எழுதுற, ஆனா உன்கிட்ட ஒரு கொற இருக்கு. உன் ஊரு மொழி இருக்கே, அது ஒலகத்துல எந்த இடத்துலயும் இல்லாதது, நீ அத தவற விட்டுருக்க. வட்டார மொழிய படி, அத பிடி, அத எழுது” அப்படின்னு பொன்னீலன் ஐயா சொன்னதுக்கப்புறம் தான் ஆஹா இப்படி தான ஒரு மனுசன தேடிட்டு இருந்தேன்-ன்னு ஒரே சந்தோசமாகிடுச்சு.

“என்னைப் பத்தி அப்படி என்ன பேசுனீங்க”ன்னு கேக்க ஆச தான். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. எல்லாமே வெளியீட்டு விழா அன்னிக்கி கேக்கத் தானே போறேன்னு மனச தேத்திகிட்டேன்.

“இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கு. நான் எழுதினத மக்கள் ஏத்துக்குவாங்களாங்குற ஒரு உதறல் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு. பயத்துல கையெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. என்னோட புத்தக வெளியீட்டு விழாவுல நீங்க பேசப் போறத கேட்டு தான் என்னை பத்தி நானே ஒரு முடிவுக்கு வர முடியும்” அப்படின்னு சொல்லிட்டு வேற என்ன பேசன்னு கூட தெரியாம வார்த்தைகளற்று நின்னுட்டேன்.

“அந்த பயம் இருக்கத்தானே செய்யும். இது உன்னோட பிரசவம்ல. பிரசவ நேரத்துல ஒரு தாய்க்கு எவ்வளவு பயம் இருக்கும். அந்த பயம் தான் உனக்கும் இருக்கு. போக போக பழகிடுவ. அனுபவங்கள ஆசானா எடுத்துக்கோ”ன்னு ஆறுதலும் சொன்னார்.

புத்தகம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன, அந்த ஒவ்வொரு கதை ஆரம்பத்துலயும் வர்ற டிசைன் கருப்பா இருக்கு. அத வெள்ளையா போட்டுருக்கலாம், சரி, அடுத்த புத்தகத்துல சரி பண்ணிப்போம்” அப்படினார்.

நீ எழுதணும்ன்னு வந்துட்ட. இனி நீ நிறைய புத்தகங்கள படிக்கணும், அப்ப தான் ஒவ்வொருத்தரும் என்னென்ன கண்ணோட்டத்துல எழுதுறாங்கன்னு உனக்கு பிடிபடும். அத தொடர்ந்து உனக்குன்னு ஒரு பாணிய பிடிச்சுக்கோ, நீ நல்லா வருவ”ன்னார்.

நான் சொன்னேன் “எனக்கு புத்தகங்கள படிக்குறத விட மனுசங்கள படிக்கணும்னு ஆச. நேரடியா அந்த மக்களோட கலந்து இருக்கணும்னு ஆச”ன்னு சொன்னேன்.

“எம்மா, இது பெரிய விஷயம். நீ தாராளமா செய்”ன்னு சொன்ன ஆசீர்வாதத்த பிடிச்சுட்டு கொஞ்சமாவது மேல வரணும்னு ஒரு ஆச துளிக்க ஆரம்பிச்சிடுச்சு.

கடைசியா கிளம்பும் போது என் புத்தகத்த அவர் கைல குடுத்து, உங்களோட “ஆட்டோகிராப்” வேணும். எழுதி குடுங்கன்னு கேட்டேன்.

அவர் எழுதினது இது தான்....

“பொட்டல் வட்டாரத்தில் என் தொடர்ச்சியாக வளரும் இனிய படைப்பாளி Dr. ஜீவாவுக்கு

- அன்புடன் பொன்னீலன்

4-1-2017