நாலு பேரு நாலு வார்த்த நல்லதா சொன்னா நம்ம மனசுக்குள்ள வர்ற சந்தோசமே தனி. என்னதான் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாதுன்னு சொன்னாலும் நம்மள தூக்கி கொண்டாடவும் சில உறவுகள் வேணும் கண்டிப்பா... சோர்ந்து போற நேரத்துல எல்லாம் அவங்க வார்த்தைகள் தான் நமக்கு உற்சாக டானிக்...
நம்மோட நலன் விரும்பிகள நாம தேர்வு செய்ற விதம் ரொம்ப அவசியம். நாம எது செய்தாலும் சரின்னு சொல்றவங்க சில பேரு இருப்பாங்க. கிட்டதட்ட கண்மூடித்தனமா நம்மள நம்புறவங்க அவங்க. அவங்களோட அன்பு மெய்சிலிர்க்க வைக்கும், அதே நேரம் நிறைய கூச்சத்தையும் தயக்கத்தையும் குடுக்கும். என்ன இவங்க இப்படி பாராட்டுறாங்க, இதுக்கெல்லாம் நாம வொர்த் இல்லையே அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பயம் எட்டிப் பாக்கும். இவங்கள எல்லாம் நான் தள்ளி நின்னே அன்பு செய்வேன். நிறைய அன்பு செய்வேன், அவங்க பாராட்டினா கூச்சத்தோட ஒரு ஓரமா ஒதுங்கிடுவேன்...
இன்னொரு வகை உண்டு. நாம செய்ற செயல் அவங்கள ஈர்க்கலன்னா அப்படியே கடந்து போய்டுவாங்க. அதே நேரம், அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வார்த்தை பாராட்டாம போக மாட்டாங்க. அப்படி ஒருத்தர் வெற்றி விடியல் சீனிவாசன் சார். மனுஷன் நச்சுன்னு ஒரு கமன்ட் தான் போடுவார், அத பாத்தாலே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சந்தோசம் எட்டிப்பாக்கும் பாருங்க... அத எல்லாம் எழுத்துல விவரிக்கவே முடியாது.
அடுத்தது, நாம செய்ற நல்ல விசயங்கள பாராட்டவும், தப்பு செய்தா நச்சுன்னு குட்டவும் செய்ற தோழமைகள். Academic side –ல எனக்கு அப்படி ரெண்டு பேர் வாய்ச்சிருக்காங்க. ஆள் பெரிய ஆள், multitalented- ன்னு பாராட்டவும் செய்வாங்க, லூசாப்பா நீயி, உனக்கு அறிவே கிடையாதான்னு பளிச்சுன்னு கேட்டுறவும் செய்வாங்க.
ஒரு விஞ்ஞானியாகணும்ன்னு கண்ட கனவெல்லாம் சாத்தியமேயில்லன்னு ஆனதுக்கப்புறம், எழுத்துப் பக்கம் என் கவனம் திரும்பிய போது, பாராட்டவும் குட்டவும் சரியான ஒரு ஆள் இல்லாம நிறைய திணறியிருக்கேன். இங்க இருக்குற நட்புக்கள் எல்லாம் எனக்கு உற்சாகத்த மட்டுமே குடுக்குறவங்களா அமைஞ்சு போய்ட்டாங்க. யார்கிட்ட போய் என் நிறை குறைகள கேக்குறதுன்னு புரியவும் இல்ல.
ஏன்னா, குறைகள் சொல்லணும்னே நிறைய பேர் இருப்பாங்க. அவங்க வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்தோம்னா நம்மோட வீழ்ச்சி ஆரம்பிச்சிடுச்சுன்னு அர்த்தம். அதே நேரம், நாம நல்லா இருக்கணும்ன்னு நம்மோட குறைகள சுட்டிக் காட்டுறவங்க இருப்பாங்க. அவங்க தான் நம்மோட வரம். அவங்கள விட்டுடவே கூடாது. ஏதோ ஒரு தருணத்துல மனசு வலிச்சாலும் எதார்த்தத்த புரிஞ்சுக்குற பக்குவத்த நாம வளத்துக்க இவங்க பக்கபலமா இருப்பாங்க.
வட்டார வழக்குல தான் எழுதுறேன் அப்படின்னு நான் நம்பிட்டு இருந்த நேரத்துல, “எம்மா, நேத்து ரொம்ப நேரம் உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன், ரொம்ப ரொம்ப நேரம்... நல்லா எழுதுற, ஆனா உன்கிட்ட ஒரு கொற இருக்கு. உன் ஊரு மொழி இருக்கே, அது ஒலகத்துல எந்த இடத்துலயும் இல்லாதது, நீ அத தவற விட்டுருக்க. வட்டார மொழிய படி, அத பிடி, அத எழுது” அப்படின்னு பொன்னீலன் ஐயா சொன்னதுக்கப்புறம் தான் ஆஹா இப்படி தான ஒரு மனுசன தேடிட்டு இருந்தேன்-ன்னு ஒரே சந்தோசமாகிடுச்சு.
“என்னைப் பத்தி அப்படி என்ன பேசுனீங்க”ன்னு கேக்க ஆச தான். ஆனாலும் என்னவோ ஒரு தயக்கம் தடுத்துடுச்சு. எல்லாமே வெளியீட்டு விழா அன்னிக்கி கேக்கத் தானே போறேன்னு மனச தேத்திகிட்டேன்.
“இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கு. நான் எழுதினத மக்கள் ஏத்துக்குவாங்களாங்குற ஒரு உதறல் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கு. பயத்துல கையெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. என்னோட புத்தக வெளியீட்டு விழாவுல நீங்க பேசப் போறத கேட்டு தான் என்னை பத்தி நானே ஒரு முடிவுக்கு வர முடியும்” அப்படின்னு சொல்லிட்டு வேற என்ன பேசன்னு கூட தெரியாம வார்த்தைகளற்று நின்னுட்டேன்.
“அந்த பயம் இருக்கத்தானே செய்யும். இது உன்னோட பிரசவம்ல. பிரசவ நேரத்துல ஒரு தாய்க்கு எவ்வளவு பயம் இருக்கும். அந்த பயம் தான் உனக்கும் இருக்கு. போக போக பழகிடுவ. அனுபவங்கள ஆசானா எடுத்துக்கோ”ன்னு ஆறுதலும் சொன்னார்.
புத்தகம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன, அந்த ஒவ்வொரு கதை ஆரம்பத்துலயும் வர்ற டிசைன் கருப்பா இருக்கு. அத வெள்ளையா போட்டுருக்கலாம், சரி, அடுத்த புத்தகத்துல சரி பண்ணிப்போம்” அப்படினார்.
நீ எழுதணும்ன்னு வந்துட்ட. இனி நீ நிறைய புத்தகங்கள படிக்கணும், அப்ப தான் ஒவ்வொருத்தரும் என்னென்ன கண்ணோட்டத்துல எழுதுறாங்கன்னு உனக்கு பிடிபடும். அத தொடர்ந்து உனக்குன்னு ஒரு பாணிய பிடிச்சுக்கோ, நீ நல்லா வருவ”ன்னார்.
நான் சொன்னேன் “எனக்கு புத்தகங்கள படிக்குறத விட மனுசங்கள படிக்கணும்னு ஆச. நேரடியா அந்த மக்களோட கலந்து இருக்கணும்னு ஆச”ன்னு சொன்னேன்.
“எம்மா, இது பெரிய விஷயம். நீ தாராளமா செய்”ன்னு சொன்ன ஆசீர்வாதத்த பிடிச்சுட்டு கொஞ்சமாவது மேல வரணும்னு ஒரு ஆச துளிக்க ஆரம்பிச்சிடுச்சு.
கடைசியா கிளம்பும் போது என் புத்தகத்த அவர் கைல குடுத்து, உங்களோட “ஆட்டோகிராப்” வேணும். எழுதி குடுங்கன்னு கேட்டேன்.
அவர் எழுதினது இது தான்....
“பொட்டல் வட்டாரத்தில் என் தொடர்ச்சியாக வளரும் இனிய படைப்பாளி Dr. ஜீவாவுக்கு
- அன்புடன் பொன்னீலன்
4-1-2017
இந்த டானிக் அவசியம் வேண்டும்...!
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி...
arumai vaalthukal. dr.jeeva ? ? ?
ReplyDelete
ReplyDeleteசிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
வாழ்த்துக்கள்...
ReplyDelete