Saturday 26 May 2012

சுவாசமாய் தொடர்வேன்...!

முதல் பார்வையும்
முதல் புன்னகையும்
தீர்மானிக்கும் ஈர்பென்ற
மாய வலைக்குள்
ஈர்த்துக்கொள்ளாமலே
வீழ்ந்து விட துடித்த
புற்றீசல்களாய் நாம்...!

சாதிக்கத் துடிக்கும்
உன் இதய கூட்டுக்குள்
சோதனை காலமாய்
நான் வருவேனென நினைத்தாயோ?

முரண்பாடான உன்
வாழ்க்கை பயணத்தில்
உன் பார்வையில் நான்
வெறும் ரெயில் சிநேகிதியே...!

நீ தேடி அலையும்
வெற்றிக் களிப்புக்காய்
என்னை தொலைத்து விட்டே
தேடி அலைகிறாய்...!

விலகியே நிழல் போல
தொடர்கிறேன் என்றவனே
உனக்குத் தெரியுமா?
உன் சுவாசமாய்
கூடவே தொடர்வதே
எனக்கும் பொழுதாய் போனதென்று...!

Tuesday 22 May 2012

யாரடா நீ..................?


வெப்ப மூச்சுக்களின் பிரசவ காலமே
முத்தமாய் யுத்தம் புரியும் காலமென்றனர்...
எண்ண அலைகளில் நீந்தி நீ
என் கண்முன்னே வந்தாய்...!

கண்மூடி உன்னை நேசித்தே பார்க்கிறேன்
பெருமூச்சாய் வந்து என்
உள்ளம் நிறைத்து சிரிக்கிறாய்...

என் மவுன பார்வையை உள்வாங்கி
மெதுவே முத்தமிடுகிறாய்...
உன் முத்தம் கண்டு வெட்கம் ஏனோ
என்னுள் நாணம் கொள்ளவில்லை...

விடைதெரியாமல் பதறியே போனேன்
“எப்படியடி வரும் உன்னைக் கண்டு உனக்கே வெட்கம்?”
ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு தொடர்கிறாய்
உன் யுத்தத்தை... இல்லையில்லை முத்தத்தை...!

Saturday 19 May 2012

காதலும் முதல் முத்தமும்...!


உன்னை நான் பார்த்திருக்கிறேன்...
என்னை நீ பார்த்திருக்கிறாய்...
பார்வைகள் சந்தித்துக் கொண்டாலும்
ஏனோ மோதிக் கொள்ளவில்லை...!
மோதலில்லா நம் பார்வைகளை
மோகத்துள் தள்ளி விட
இருவீட்டார் நிர்பந்திக்க
கண்ணசைத்தே விட்டாய் நீ
என் சம்மதம் தெரியாமலே...!

என்ன சொல்லி புரிய வைப்பது?
எனக்குள் நீ இல்லையென...
எதை சொல்லி தெளிய வைப்பது
எனக்குள் எதுவோ தகித்துக் கொண்டிருப்பதை...!

எத்தனையோ இரவுகள் நம்மை
சேர்த்து வைத்திருந்தாலும்
இன்று தான் உனை நான்
முழுமையாய் பார்க்கிறேன்...!

காதோரம் எட்டிப் பார்த்த இளநரையை
உன் உதட்டுச் சிரிப்பு மறக்கச் செய்கிறது...
கண்மூடி தூங்கும் உன் இமைகளிரண்டும்
என்னை ஒளித்து வைக்க இடம் தேடினவோ?

தாயிடம் அமுதருந்தி சயனம் கொண்ட
ஓர் மழலை போல்
உன் உதட்டின் ஓரம் முத்தம்,
மிச்சமாய் தகித்துக் கொண்டிருக்கிறது...!

“உயிரே உனை உயிரென ஏற்றேன்”
என் கரம் பற்றி நீ சொன்ன வார்த்தைகள்
இன்றுதான் எனக்குள் மாயாஜாலத்தை
நிகழ்த்தி வேடிக்கை பார்க்கிறது...!

எங்கிருந்தாய் கள்ளா?
இப்படி என்னை திருடிக் கொண்டாயே...!
இதற்கான அனுமதியை
என் அனுமதியின்றி
எங்ஙனம் நீ கவர்ந்துக் கொண்டாய்?

உன் நேர்பட்ட கேசம்
கலைத்து விட விரல்கள் துடிக்கின்றன...
என்றுமே அறிந்திரா வெட்கம்
இன்று என் மேனி படர்ந்து
ஆளுமைக் கொள்கிறது...!

எத்தனையோ முறை நீ கேட்டும்
நான் அளிக்கா முதல் முத்தத்தை
இதோ உன் நெற்றியில்
பதியமிட்டுச் சொல்கிறேன்
“எனக்கும் உன் மேல் காதல்
எங்கோ துளிர்க்குதடா”...!Tuesday 15 May 2012

பெற்றவளை பெற்றவள்...!


தன்னுயிர் தனதுயிரை
ஈன்றெடுத்த நேரம்
பெருவுவகை கொண்டிட்டாளாம்
என் பாட்டி...!

தொட்டிலிட்டு ஆராட்டி
அழுத நேரம் அமுதூட்ட
பாங்காய் கையளித்து
பரவசமடைந்த என்
இரண்டாம் தாயவள்...!

தூங்கா இரவுகளில்
என் அழுகை ஒலியை
சங்கீதமாய் ஏற்று
தூக்கம் தொலைந்து
இன்பம் ஈட்டிய
ஈன்றெடுக்கா அன்னையவள்...!

நிலவுக்குள் ஒழிந்த பாட்டியையும்
பாட்டியை ஏமாற்றிய காக்கையையும்
திராட்சை வெறுத்த நரியையும்
வென்று விட்ட ஆமையையும்
நண்பர்களாக்கி உலாவ விட்டவள்...!

ஆலும் வேலும் பல்லுக்குறுதியென
ஆசான் கற்பிக்கும் முன்பே
வேப்பங்குச்சிக் கொண்டு
பல்தேயக்க வைத்த முதல் ஆசான்...!

தந்தையின் மிரட்டல்களை
அவள் முதுகின் பின்னால்
சாந்தமடைய செய்தவள்...
தாயின் அதட்டல்களை
சரிதானென தன்னைத்தானே
சாந்தப் படுத்திக் கொண்டவள்...!

“தாய்மடி வாசம் மீறிய
ஏதோ ஒரு பிடிமானம் அவளிடத்தில்...”
நான் கூற வந்ததை
யாரிடத்தோ கூறிக்கொண்டிருந்தாள்
என்னை பெற்றவள்...

Sunday 13 May 2012

அன்னையின் பொம்மை...


என் புன்னகை...
ரோஜா இதழ்களால்
ஸ்பரிசிக்கபடும் ஆழ்நிலை உணர்வாய்...!

என் சிரிப்பு...
பொங்கிய பாலில்
நுரை விடும் நிறைவாய்...!

என் மவுனம்...
அடித்து ஓய துடிக்கும்
அலைகளின் நிசப்தமாய்...!

என் கண்ணீர்...
பிறர் இரக்கம் வேண்டா
தனிமை சிறையாய்...!

என் தவிப்பு...
வேடன் வலையில் சிக்குண்ட
இளந்தளிர் மானின் மருட்சியாய்...!

என் கோபம்...
செந்தணலில் இடப்பட்ட
திருஷ்டி மிளகாயாய்...!

மென்ஸ்பரிசமும் இளகிய மனமுமாய்
பார்த்து பார்த்து சேகரித்த அன்னை
கடுகும் காரமும் சேர்ந்தல்லவோ
பிசைந்திட்டாள் என்னை...!

Tuesday 8 May 2012

என்னில் நீ என்றும் நானாய்...

நட்புக் காலம் நமக்குள்
முழுதாய் மூன்று வருடங்களை
ஆலமரத்து விழுதாய்
பதியமிட்டுச் சென்றிருந்தது...

நான், எனது என்ற தனிப்பட்ட
இரகசியங்கள் என்றுமே
நமக்குள் இருந்ததில்லை
நம் சுதந்திரத்தில் நாம்
இடைமறித்ததுமில்லை...

நட்புக்காலம் தடையின்றி
தொடர விடாமல் வழி மறித்து
நின்றாள் தோழியொருத்தி
நமக்கிடையில் புகுத்து விட்ட அவள்
நமக்கிடையில் உன்னோடலான
என்னின் பெரும்பான்மை
நேரங்களை அபகரித்துக் கொண்டாள்...

யாரிடமும் என்னை
விட்டுக்கொடுக்காத நீ
அவளிடத்தில் விட்டுக் கொடுத்தாய்...
உன் செல்லச் சீண்டல்களும்
வம்பிழுத்த பண்பும்
என்னை இன்னும் இன்னும்
உன்னுள் ஈர்த்துக் கொண்டே சென்றது...

அவள் மேல் கொண்ட உன் ஈர்ப்பு
என் நட்பை சாகடித்து சென்றதா?
கேவலொன்று தொண்டையடைத்து
பெரிதாய் வெடித்தது...

"அடி லூசு பெண்ணே...!
எப்படியடி அவளை உன்னோடு ஒப்பிடலாம்?
நீ என் உயிரில் கலந்து விட்டவளடி" என்றாய்...
அந்த ஒற்றை சொல்லில்
பற்றிக் கொண்டது உன் மேலான காதல்....

காதெலெனும் மாயாஜாலத்துள்
நாம் கட்டுண்டு கிடந்தது
ஒற்றை மாதமே...

எமனொருவன் வாகனமேறி எனை
அபக்கரிக்க முயன்ற போது
போராடி நான் மீண்டது யாருக்காக?

உன் ஒற்றை விரல் பற்றி
தத்திச் சென்ற வழித்தடங்களிலெல்லாம்
உரத்தக் குரலில் அழைத்தே
நான் ஓய்ந்துப் போகிறேன்...

உன் நினைவுப் புதைகுழியில்
விரும்பி அமிழ்ந்து
என்னை நானே
புதைத்துக் கொண்டிருக்கிறேன் ...
உன் நினைவில் மரித்து விட்டிருந்த என்னை
உன் மூச்சுக்காற்றால் உயிர்க் கொடுத்து
காதோரம் கிசுகிசுக்கிறாய்...

உயிரோடு உயிர் உரசிச் செல்லும் நீ
எதையும் பற்ற வைக்காமலே
அணைத்துச் செல்கிறாய்...
உன் பிரிவு வெப்பத்தில்
நான் தத்தளித்த போது
தென்றலாய் வந்து
கன்னம் வருடி செல்கிறாய்...
இமை மூடி சுவாசிக்கும் போதெல்லாம்
என் இதழ் மீட்டிச் சிரிக்கச் செய்கிறாய்...

"ஏனடா விட்டுச் சென்றாய்?"
உன்னை மடக்கி விட்ட
கேள்வியென நான் கேட்க
"அடி லூசுப் பெண்ணே...
என் உயிர் நீ தானேயடி
உன்னில் நான் வாழ்கிறேனே"
உன் மோன புன்னகையால்
கண்ணடித்தே பதிலுரைத்துச் செல்கிறாய்...


Saturday 5 May 2012

மீண்டும் எனக்குள் தனிமை...


உறவொன்று பிரிந்தது...
தனிமை தேடி வந்தது...
யாருமில்லா நேரங்களில்
ஏக்கங்களோடு தனித்திருக்கிறேன்...
தேவை எதுவென்று நானாய் உணர்ந்துமிருக்கிறேன்...

தனிமையை நான் நேசிக்க துவங்கியதும்
உறவுகள் தேடி வந்தன...
எனக்கு பிடித்ததாய் எண்ணிக்கொண்டு
ஏதேதோ செய்கின்றனர்
என்ன வேண்டுமென கேட்காமலே...

யாருமில்லா நேரங்களில்
ஏக்கங்களோடு தனித்திருந்த தருணங்களும்
தேவைகள் இன்னதென்று
உணர்ந்து கொண்ட தருணமும்
உணர்வுகள் கலந்து முற்றுப் பெற துடித்தன...
 
செத்துவிட முயலும் உடலுக்குள்
வாழ்ந்து விட துடிக்குது மனசு
உணர்ந்து விட்ட உலகத்தை
நேசிக்க துவங்கியதன் விளைவு
மீண்டும் எனக்குள் தனிமை...

பேனாவும் துண்டுக் காகிதமும்...


ஆழ்மனதின் ஏக்கங்கள்
திடீரென முளையிட
துக்கங்கள் உயிருடைத்து
தூக்கம் தின்று போனது...

தூக்கம் தொலைந்து போனதால்
கவிதை பிறந்து தொலைத்தது

பொறுமையாய் கேட்க ஆளுமில்லை
புலம்பி தீர்க்க வழியுமில்லை...

வழியில்லாமல் அலைபாய்ந்த நேரம்
மாட்டிக்கொண்டது பேனாவும் துண்டுக் காகிதமும்...

எண்ணப்பிசிறுகள் பேனாவை வழிநடத்த
கண்ணீராய் கொட்டத் துவங்கியது பேனாவின் மை...தொலைந்தும் தொலையா மனம்...


பாற்கடலின் அடி ஆழம் சென்று
ஒளிந்துக் கொள்ள விழைகிறேன் நான்...
நெஞ்சம் பிளந்து இதயம் தொலைத்து விட
துடிக்குது மனது...
ஓ...வென கூக்குரலோடு வெளிப்படுகிறது
ஒரு ஆக்ரோஷம்...

பைத்தியக்காரியாய் மனம் பிறழ்ந்திருந்தால்
என் நிலை அறியாமல் தொலைந்திருப்பேன்
சுயம் என்ற ஒன்றை தொலைக்காமல் போனதால்
நிலையறிந்து பேதலித்து தவிக்கிறேன்...

உணவு கண்டு மொய்க்கும்
காக்காய் கூட்டமாய் உறவுகள்...
மாமிச ருசியறிந்து புசித்து விட
விரையும் கழுகு மனிதர்கள்...
கட்டாய சூழ்நிலைக்குள் தள்ளி விட்டு
ரெத்தம் சுவைக்கும் டிராகுலா மிருகங்கள்...
கொன்று தின்னும் ஓநாய்கள் மத்தியில்
மனம் பிழைக்க ஒரு
உணர்வு போராட்டம்...

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஊமையாய்
போய் விட்ட மனமொன்று
அழிக்கும் சூறாவளியாய்
ஆக்ரோஷம் கொள்ள துடிக்கிறது...
இறுதிவரை போராட்டம் மட்டுமே
நிலையாய் போகலாகாதென
சுதந்திரம் பெற முனைந்து
விட்டதொரு உரிமை போராட்டம்...
ஒளிந்து கொள்ள முயல்வது
தொலைந்து போக அல்ல...
தொலைந்து போன மனதினை
முத்தாய் மீட்டெடுக்க...

Tuesday 1 May 2012

நான் கவிதாயினி இல்லை


நான் கவிதாயினியுமில்லை
கவிதைக் காதலியுமில்லை...
என்னின் உணர்வுகளின்
மொத்த வெளிப்பாடு நான்...
என்னை நானே நேசிக்க கற்றதால்
எனக்குள் நானே ஊடலும் கொள்கிறேன்...

உணர்வு குவியலின்
உணர்ச்சிப் பிழம்பாய் நான்...
என் மனம் எப்பொழுதும்
ஏதோ ஒன்றால் நிரப்பப்பட்டுக்
கொண்டிருக்கிறது...

நண்பர்களின் கவிதைகள்
மலைப்பாய்த் தோன்றும் தருணம்
மலையளவு மலைத்திருக்கிறேன்...
மலைப்பு மாறும் முன்
மனம் சிறுபிள்ளையாய் விளையாடக் கெஞ்சும்..

வார்த்தைகளின் கோர்வைகள்
சிந்தனைச் சிதறாமல் உதிரும்போது
ஒரு பூக்காரியாய் அதை
மாலையாக்கி கோர்த்துவிட விழைகிறேன்...


அழுகை வந்தால் அழவும்
சிரிப்பு வந்தால் சிரிக்கவும்
காதல் வந்தால் காதலிக்கவும்
தெரிந்த உயிருள்ள பொம்மை நான்...

உற்சாகம் கொப்பளிக்கும் நாட்களில்
மனம் தென்றல் வருடும் புயலாய்
பெருக்கெடுக்கிறது...
சஞ்சலத்தால் சலிப்புற்ற நேரங்களிலோ
அமைதி ஆழிப்பேரலையாய்
ஆக்ரோஷம் கொள்கிறது...

என்னை உணரா நட்பூக்கள்
உதிரும் நேரம் என்னின்
ஒருசொட்டு உற்சாகம் கூடவே உதிர்கிறது...
புரிந்துக் கொண்ட நட்பூக்களால்
லட்சம் முறை ஜனனம் சேர்ந்தே
ஆயுள் நீட்டிக்கிறது....

மொத்தத்தில்...
நான் என்றும் நானாய்...
அதே நிலையில் நீடிப்பதால்
வாழ்வின் எல்லா பக்கங்களையும் சுவாசிக்கிறேன்...
நான் கவிதாயினியுமில்லை
நல்ல கவிதை வாசிப்பவளுமில்லை...
மனமென்னும் சுதந்திர வானில்
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி...