Tuesday, 8 May 2012

என்னில் நீ என்றும் நானாய்...

நட்புக் காலம் நமக்குள்
முழுதாய் மூன்று வருடங்களை
ஆலமரத்து விழுதாய்
பதியமிட்டுச் சென்றிருந்தது...

நான், எனது என்ற தனிப்பட்ட
இரகசியங்கள் என்றுமே
நமக்குள் இருந்ததில்லை
நம் சுதந்திரத்தில் நாம்
இடைமறித்ததுமில்லை...

நட்புக்காலம் தடையின்றி
தொடர விடாமல் வழி மறித்து
நின்றாள் தோழியொருத்தி
நமக்கிடையில் புகுத்து விட்ட அவள்
நமக்கிடையில் உன்னோடலான
என்னின் பெரும்பான்மை
நேரங்களை அபகரித்துக் கொண்டாள்...

யாரிடமும் என்னை
விட்டுக்கொடுக்காத நீ
அவளிடத்தில் விட்டுக் கொடுத்தாய்...
உன் செல்லச் சீண்டல்களும்
வம்பிழுத்த பண்பும்
என்னை இன்னும் இன்னும்
உன்னுள் ஈர்த்துக் கொண்டே சென்றது...

அவள் மேல் கொண்ட உன் ஈர்ப்பு
என் நட்பை சாகடித்து சென்றதா?
கேவலொன்று தொண்டையடைத்து
பெரிதாய் வெடித்தது...

"அடி லூசு பெண்ணே...!
எப்படியடி அவளை உன்னோடு ஒப்பிடலாம்?
நீ என் உயிரில் கலந்து விட்டவளடி" என்றாய்...
அந்த ஒற்றை சொல்லில்
பற்றிக் கொண்டது உன் மேலான காதல்....

காதெலெனும் மாயாஜாலத்துள்
நாம் கட்டுண்டு கிடந்தது
ஒற்றை மாதமே...

எமனொருவன் வாகனமேறி எனை
அபக்கரிக்க முயன்ற போது
போராடி நான் மீண்டது யாருக்காக?

உன் ஒற்றை விரல் பற்றி
தத்திச் சென்ற வழித்தடங்களிலெல்லாம்
உரத்தக் குரலில் அழைத்தே
நான் ஓய்ந்துப் போகிறேன்...

உன் நினைவுப் புதைகுழியில்
விரும்பி அமிழ்ந்து
என்னை நானே
புதைத்துக் கொண்டிருக்கிறேன் ...
உன் நினைவில் மரித்து விட்டிருந்த என்னை
உன் மூச்சுக்காற்றால் உயிர்க் கொடுத்து
காதோரம் கிசுகிசுக்கிறாய்...

உயிரோடு உயிர் உரசிச் செல்லும் நீ
எதையும் பற்ற வைக்காமலே
அணைத்துச் செல்கிறாய்...
உன் பிரிவு வெப்பத்தில்
நான் தத்தளித்த போது
தென்றலாய் வந்து
கன்னம் வருடி செல்கிறாய்...
இமை மூடி சுவாசிக்கும் போதெல்லாம்
என் இதழ் மீட்டிச் சிரிக்கச் செய்கிறாய்...

"ஏனடா விட்டுச் சென்றாய்?"
உன்னை மடக்கி விட்ட
கேள்வியென நான் கேட்க
"அடி லூசுப் பெண்ணே...
என் உயிர் நீ தானேயடி
உன்னில் நான் வாழ்கிறேனே"
உன் மோன புன்னகையால்
கண்ணடித்தே பதிலுரைத்துச் செல்கிறாய்...


3 comments:

 1. ஆழ வேருன்றி ,அகல கிளைகள் பரப்பி ...வானோக்கி உயர்ந்து....விரிந்து விருட்சமாகி....விழுதுகள் பல இறக்கி ..எங்குமாய் வியாபிக்கும் ஆழ மரத்தினை நட்பின் வலிமைக்கு தரும் உவமை அருமை...
  காதல் பற்றிக்கொண்ட கதை ...அற்புதமான நடை.
  ஒரு பெண்ணின் ஆழ்ந்த காதலை ..அழகாகவும், கவிதை நயத்தோடும் பதிவு செய்து இருக்கிறார்.
  தென்றலாய் வந்து
  கன்னம் வருடி செல்கிறாய்...
  இமை மூடி சுவாசிக்கும் போதெல்லாம்
  என் இதழ் மீட்டிச் சிரிக்கச் செய்கிறாய்...கவித்துவம் மிளிர்கிறது.நல்ல கவிதை.
  வேலை நிமித்தமாய்...பின்னூட்டம் தர காலம் தாமதமாகிவிட்டது ..வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா

   Delete
  2. Very Nice ma........Good...Keep it up


   Delete