Friday 26 February 2016

மிருதன் - திரைவிமர்சனம்



ராஜாஸ்மால்ல உக்காந்து செத்துப்போன பக்கெட் சிக்கனும் இத்துப்போன பர்கரும் சாப்ட்டுட்டு இருந்தோம். அடுத்து எப்படி நேரத்த போக்குறதுன்னு புரியாம திடீர்னு அங்கயே ஒரு படம் பாக்கப் போலாம்னு முடிவாச்சு. எனக்கு படம் கொஞ்சம் ஜாலியா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிச்சு. ஆனா இருக்குற மூணு தியேட்டர்ல என்னென்ன படம் ஓடுதுன்னே பாக்காம டக்குன்னு மிருதன் வித்யாசமா இருக்காம், அங்கப் போவோம்னு சொல்ல, சரின்னு தலையாட்டிட்டேன்.

தியேட்டர்க்குள்ள பத்து நிமிசத்துக்கு முன்னாடியே எண்டர் ஆகி, தேமேன்னு வெள்ளை ஸ்க்ரீனையே வெறிச்சுட்டு இருந்தப்ப பின்னால இருந்து அதென்னவோ சோம்பி படமாம், ஜெயம் ரவி சோம்பியா மாறிடுவாராம் அப்படின்னு ஆச்சர்யமான குரல்கள் கேட்டுட்டு இருந்துச்சு. சரிதான், அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு சீட்ல சாஞ்சு உக்காந்தாச்சு.

படம் ஆரம்பிக்குறப்பவே பயோ ஹசார்ட் ஏத்திட்டு வந்த லாரில இருந்து ஒரு ட்ரம் உருண்டு வெளில விழுது. அதுல என்னவோ வைரஸ் இருக்கு. அத ஒரு நாய் சாப்ட்டுடுது. சாப்ட்ட அஞ்சோ பத்தோ நிமிசத்துல அது உடம்பெல்லாம் மாறி, வெறிப்புடிச்சு, ஒருத்தர கடிக்க, அவர் அடுத்த ஆள கடிக்கன்னு, மளமளன்னு வைரஸ் தாக்கின மனுசங்க பெருக ஆரம்பிக்குறாங்க.

கமலோட தசாவதாரம் வந்தப்பவே எனக்கு கொஞ்சம் நெருடல குடுத்த ஸ்கிரிப்ட் அது. எந்த வைரஸ் இவ்வளவு வேகமா பெருகும்னு தெரியல. சரி, எப்படியோ பெரிகிடுச்சு. இவங்க காமிக்குற ஸ்பீடுக்கு அந்த வைரஸ் பெருகியிருந்தா ரெண்டே நாள்ல மொத்த மக்கள் தொகையும் காலி ஆகியிருக்கணும்.

சரி, அதெல்லாத்தையும் விடுங்க, இந்த கேள்விய அங்க வச்சே கேட்டதுக்கு, லாஜிக் எல்லாம் பாத்து ஓவர் ஸ்மார்ட் ஆகப் பாக்காதன்னு திட்டு விழுந்துச்சு.

ஆனா, நிஜமாவே அந்த அஞ்சோ பத்தோ நிமிஷங்கள் கொஞ்சம் பயமாவே தான் இருந்துச்சு. அம்மாவ கடிச்ச புருசன ரூமுக்குள்ள தள்ளி பூட்டிட்டு அம்மாவுக்கு என்னாச்சோன்னு பதட்டத்தோட ஓடி வந்து அம்மாவ தூக்கினா அம்மா வெறியோட பொண்ணு மேல அம்மா பாய, எதிர்பாத்ததுதான்னாலும் குப்புன்னு அய்யய்யோன்னு மனசு பதறுறத தடுக்க முடியல.

அம்மாகிட்ட இருந்து தப்பிச்சு ரோட்டுக்கு ஓடி வரப் பொண்ண அங்க நிக்குற ஆண்கள் சில பேரு வேட்டையாட நினைக்குறாங்க. ஏண்டா, அதுவே பயந்து ஓடி வருது, ஒரு பொண்ண விட மாட்டீங்களாடான்னு மனசு கேக்காமலும் இல்ல. ஆனா நான் உக்காந்துட்டு இருந்த சீட்டுக்கு பின்னால மாட்டிகிட்டானுங்க நல்லா வேணும்னு குரல் கேட்டதும், அப்போ அவனுங்க ரேப் பண்ணி தான் மாட்டிக்கணுமானு தலைல அடிக்கணும்னு நினச்சேன், ஆனா அடிக்கல.

அப்புறம் ஜெயம் ரவி. ட்ராபிக் போலிஸ். ஒரு பொண்ண பாக்குறார், உடனே லவ்ல விழுறார். ஆனா அந்தப் பொண்ணு இன்னொருத்தருக்கு நிச்சயமானது தெரிஞ்சதும் செம கடுப்புல திரியுறார். இவர லவ் பண்ணலன்னு லெக்ஷ்மி மேனன் கிட்ட ஜெயம் ரவி நடந்துக்குற விதம் வெறுப்ப தான் குடுக்குது. அந்த முன்னாள் காதலியே பாட்டுத் தேவ தானா? அதான் அந்த பொண்ணு காதலிக்கவே இல்லையே, அப்புறம் எப்படி முன்னாள் காதலி ஆக முடியும்?

ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் நடந்த சண்டை கொஞ்சம் ரசிக்க வச்சுது. என்ன தான் அமைதியா இருந்தாலும் கூட வேலைப் பாக்குறவருக்கு ஒரு பிரச்சனைனா உடனே இறங்கி மந்திரி தொண்டர்கள அடிச்சது செம.

இனி அடுத்து என்னன்னு யோசிக்குறதுக்குள்ள ஊருக்குள்ள எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணிடுறாங்க. ஜெயம் ரவி கைலயும் அவர் பிரெண்ட் கைலயும் ஆளுக்கொரு துப்பாக்கி கிடைக்குது. அதுக்கப்புறமா ரெண்டு பேரும் படம் முழுக்க டொப்பு டொப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. இதுல ஜெயம் ரவி குறி பாத்துச் சுட, அவர் நண்பர் கன்னாபின்னான்னு சுட்டுட்டு “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு கேனத்தனமா சிரிக்குறார். அந்த இடத்துல எல்லாம் கைத்தட்டல் தியேட்டர்ல பறக்குது.

அதுவும் ஒரு தடவ ஒரு வைரஸ் மனுஷன் ஜெயம் ரவிய கடிக்க வர, தப்பிக்க வேற வழியே இல்லன்னு நாம எல்லாம் கண்ணு முழி பிதுங்க பாத்துட்டு இருக்குறப்பவே அந்த நோயாளிய டொப்புன்னு சுட்டு வீழ்த்திடுறாரு அவர் பிரெண்ட். அடடேன்னு நாம கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுருக்க மாட்டோம், அதுக்குள்ள அவர்கிட்டயிருந்து அவரோட பேவரைட் டயலாக் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு வரும். சரியா தானடா சுட்டன்னு ஜெயம் ரவி மாதிரியே நாமளும் கேட்டா, நான் அங்க சுட்டேன், குண்டு இங்க பட்டுடுச்சுன்னு சொல்லி நம்மள குபீர்னு சிரிக்க வச்சுடுறார்.

ஆனாலும் க்ளைமாக்ஸ்க்கு கொஞ்ச நேரம் முன்னாடி அவர் காலை வைரஸ் மனுஷன் ஒருத்தன் பிடிச்சு இழுக்க, எப்படியோ ஜெயம் ரவி காப்பாத்திடுவார். அவர் பேண்ட்ல உள்ள ரத்தக்கறைய பாத்துட்டு, “ஒரு வேளை என்னை அது கடிச்சிருந்தா வலிக்காம சுட்டு கொன்னுரு மாப்ள”ன்னு சொல்லிட்டே துப்பாக்கிய குடுக்குறப்பவும், காயம் எதுவும் இல்லன்னு தெரிஞ்சதும் “ஜஸ்ட் மிஸ் மாப்ள”ன்னு சொல்றப்பவும் நம்மள கண் கலங்க வச்சிடுறார்.

எனக்கு இந்த படத்துல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. ஊட்டி முழுக்க வைரஸ் பரவியிருக்கு, யாரும் ஊரை விட்டு வெளில போகக் கூடாது, அப்படி போக விட்டா வைரஸ் பரவிடும்னு தடை போடுது அரசாங்கம். அப்படி தடைய மீறி போறதுல ஒரு டாக்டருக்கு காயம் இருக்குன்னு தெரிஞ்சதும் அவர வண்டியில இருந்து கீழ தள்ளி விட்டுடுறாங்க. ஆனா கோவைக்கு இந்த டாக்டர் குழு போய் சேர்ந்ததும் எப்படி அத்தன பேரும் வைரஸ் மனுசங்களா மாறி போயிருந்தாங்க? அவ்வளவு வேகமாவா கடிக்குறாங்க?

ஆரம்பத்துல மீட்டிங் போட்டு போலிஸ் கைல துப்பாக்கிய குடுக்குற போலிஸ் டிபார்ட்மென்ட் அப்புறம் எங்க போச்சுனே தெரியல. அந்த வைரஸ் மனுசங்களுக்கு எல்லாம் தண்ணிய கண்டா பயம்னு லெக்ஷ்மி மேனனுக்கும் ஜெயம் ரவிக்கும் மந்திரிக்கும் ஆரம்பத்துலயே தெரியும், ஆனா அவங்க ஏன் இத போலிஸ் டிபார்ட்மென்ட்கோ இல்ல அரசாங்கத்துக்கோ சொல்லவேயில்ல?

ஊருக்குள்ள மொத்தப்பேரும் வைரசால பாதிக்கப்பட, ஹீரோவும் அவர் சகாக்களும் மட்டும் தப்பிச்சுட்டு இருக்காங்க. அதுவும் அவங்கள எல்லாரையும் தனிமனுசனா ஜெயம் ரவி மட்டும் தான் காப்பாத்துறார்.

மொத்தத்துல சொதப் சொதப்ன்னு சொதப்பியிருக்குற படத்துல க்ளைமாக்ஸ் கொஞ்சம் ஓகே.

அதெப்படி ஜெயம் ரவி அத்தன பேரையும் ஒத்த ஆளா அடிச்சுப் போட்டுட்டு லெக்ஷ்மி மேனன காப்பாத்துறார்னு மனசுக்குள்ள சந்தேகம் வராம இல்ல. அடப்போமா, இத்தன நேரமும் அவர் மட்டும் தானே போராடிட்டு இருக்கார், இதெல்லாம் லாஜிக் பாக்க கூடாதுன்னு என் மனசாட்சியே என்னை அடக்கி வச்சதால, அத தூக்கி அப்படி ஓரமா வச்சுட்டு க்ளைமாக்ஸ் சீன ரசிக்க ஆரம்பிச்சேன்.

பெத்த அப்பா, கட்டிக்கப் போறவன் முதல்கொண்டு அத்தன பேரும் கைவிட்ட நிலைல யாருடா இவன், நம்மள காப்பாத்த வர்றான்ன்னு ஆச்சர்யமா லெக்ஷ்மி மேனன் பாக்குறது ரசிக்குற மாதிரி இருந்துச்சு. இவன் தன்னை காதலிச்சிருக்கான்னு தெரிய வர்றப்ப அவங்க முகத்துல காட்டுற பாவனைகள் சூப்பர்.



மொத்தத்துல சென்னைய நோக்கி வைரஸ் தாக்கின மிருதன் வந்துட்டு இருக்கானாம். சென்னை மக்கள் மட்டுமில்ல நாமளும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்துக்கனும். அட்லீஸ்ட் பார்ட் டூ-வையாவது கொஞ்சம் லாஜிக்கோட எடுங்கயா.

Wednesday 17 February 2016

அப்பாவும் ஆட்டுக்குட்டியும்...



அப்பா கிட்ட சிரிச்சு பேசி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கோ இல்ல அவருக்கோ முகம் பாத்து பேச ஏதோ ஒரு தயக்கம் இருந்துகிட்டே இருந்துச்சு.

இன்னிக்கி அப்பா ரூமுக்குள்ள போவேன்னு நான் நினைச்சுக் கூட பாக்கல. ஆனா போக வேண்டிய கட்டாயம்.

வேலைய முடிச்சுட்டு எட்டிப்பாத்தா, வரிசையா கொஞ்சம் புக்ஸ் இருந்துச்சு.

என்னன்னு மேல இருக்குற புக் எடுத்துப் பாத்தா, கறவை பசுக்களை பராமரிப்பது எப்படின்னு இருந்துச்சு. இத்தன வருஷம்ஆகியும் மனுஷன் இன்னும்இதத்தான் படிச்சுட்டு இருக்காரான்னு நினைச்சுகிட்டே அடுத்து என்ன புக்ன்னு நோட்டம் விட்டேன்...

அட, கார்த்திக்கோட "ஆரஞ்சு முட்டாய்". அதுக்கும் கீழ "வற்றாநதி"

புக் வாசிச்சீங்களாப்பான்னு கேக்குற தைரியம் வரல. மெதுவா வெளில வந்து உக்காந்தேன்.

திடீர்னு எங்க இருந்து ஓடி வந்தாங்களோ, முதல்ல பைரவி தான் ஓடி வந்தா. வந்தவ தயக்கத்தோட எட்டிப்பாத்தா. நான் கைநீட்டி வான்னு சொன்னதும் என்ன நினச்சாளோ மடில தாவி வந்து படுத்துகிட்டா.

அடுத்து வந்தது வருண். பயலுக்கு இதபாத்து ஒரே பொறாம. அவனும் மடியில படுக்க ட்ரை பண்ணினான். பைரவிக்கே இடம் பத்தல, இதுல அவன் வேறயா?

கீழ இறங்குடான்னு தள்ளி விட்டதும் என்ன நினைச்சானோ, என்னை முட்டித் தள்ள ஆரம்பிச்சுட்டான்.

அடேய், உன்னை மாதிரி எத்தன கேடிகள பாத்துருப்பேன், எங்ககிட்டயேவான்னு அவனுக்கு சவால் விட்டு நானும் கொஞ்ச நேரம் அவன் தலைய தடவி, கழுத்த தடவி, முட்ட வந்தவன தடுத்துட்டு இருந்தேன்.

வெண்ணிலா இங்க நடந்தத எல்லாம் பாத்துட்டு என்கிட்ட வந்து ஒரு முத்தம் வாங்கிட்டு தரைல போய் படுத்துட்டா.

அப்ப தான் அப்பா எங்கயோ வெளில போயிட்டு வீட்டுக்கு வந்தாரு. வந்தவரு, அட, நீஎப்ப வந்தன்னு கேட்டுகிட்டு, கொஞ்சம் பொறு, சாப்ட்டுட்டு வரேன்னு போய்ட்டார். நான் அப்படியே திண்ணைல உக்காந்து வேடிக்கைப்பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஊசி வாத்து முட்டைல ரெண்டு பொறிச்சியிருக்கு. மஞ்சள் நிறத்துல அழகா அதுகள பாக்குறது தனி சுகம். இதுல ஆச்சர்யமான விஷயம் என்னனா அம்மா வாத்து ரெண்டு குஞ்சுகளோடயும் மூணு முட்டைகளோடயும் கூட்டுக்குள்ள அடைக்காத்துகிட்டு இருக்கு, அப்பா வாத்து வெளில நின்னு, அந்தப்பக்கமா வர்றவங்க போறவங்கள எல்லாம் சண்டைக்கு போற மாதிரி சீறிகிட்டு தொரத்தி விடுது...

நான் அத ரசிச்சு பாத்துட்டு இருந்தப்ப தான் அப்பா வெளில வந்தார். புறா எல்லாம் பாக்குறியான்னு கேட்டார்.

சரின்னு தலையாட்டினேன்.

உடனே கொஞ்சம் அரிசி, கடலை, உளுந்து எல்லாம் எடுத்துட்டு வந்து முற்றத்துல தூவ ஆரம்பிச்சார். எங்க இருந்து தான் அவ்வளவு புறாக்கள் பறந்து வந்துச்சோ, அப்படியே முற்றம் நிறைஞ்சு போச்சு.

எல்லாமே வீட்டுலயே பொறிச்சதாம். ஒவ்வொண்ணும் தனி அழகு. அப்படியே அப்பாகிட்ட ஆட்டுக்குட்டிங்க, கன்னுகுட்டிங்க, புறாக்கள், வாத்துக்கள் பத்தி பேசிட்டே இருந்ததுல மனசு அப்படியே லேசாகிடுச்சு.

அட, சொல்ல மறந்துட்டேனே, பின்னால தோட்டத்துல சினை முயல் ஒண்ணு இருக்காம், சீக்கிரமா குட்டிப் போட போகுதாம்...








(பின்குறிப்பு:  பைரவி,  வருண், வெண்ணிலா  எல்லாம்  எங்க  வீட்டு  ஆட்டுகுட்டிங்க. அவங்கள  பத்தி  சீக்கிரமே  பெரிய  போஸ்ட்டா  எழுதுறேன்)