Wednesday 31 July 2019

துர்கா மாதா - நாவல் விமர்சனம் (அப்ஸரன் ஃபெர்ணாண்டொ)அன்புள்ள ஜீவா அக்காவுக்கு,

சென்னையிலிருந்து அப்ஸரன் ஃபெர்ணாண்டொ எழுதுகிறேன்.

எனது நண்பர் திருப்பதி மகேஷ் மூலமாகத்தான் உங்கள் ப்ளாக் [blog] அறிமுகம் கிடைத்தது. அவ்வப்போது உங்களின் பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்களின் புரட்சிகரமான சிந்தனையும் வித்தியாசமான அணுகுமுறைகளும் உங்கள் எழுத்துக்கு என்னை இரசிகனாக்கியது.

உங்களின் முதல்படைப்பான தற்கொலை கடிதம் என்ற சிறுகதைத் தொகுப்பை படித்திருக்கிறேன், அப்போதே உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என நினைத்தேன் ஆனால் இயலாமல் போனது. இப்போது நீங்கள் புதினம் [Novel] எழுதியிருக்கிறீர்கள் என்று நண்பர் மகேஷ் மூலம் கேள்விப் பட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, நண்பரிடம் கேட்டுப் பெற்று, படித்தும் முடித்துவிட்டேன். இதைக் குறித்து திரு மகேஷிடம் கூறியபோது, நூல் குறித்த என்னுடய பார்வையை / கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தார். அவரது யோசனையும், இந்த நாவலை படித்த பிறகு அது ஏற்படுத்திய விளைவுகளுமே என்னை இக்கடிதம் எழுதத் தூண்டியது.

நூல் குறித்து பேசுவதற்கு முன் சில விஷயங்கள்:

முதலில் என்னைப் போன்ற பார்வையற்றவர்களும் படிக்கக் கூடியவகையில் இந்தப் படைப்பையும் [துர்கா மாதா] இதற்கு முந்தய படைப்பையும் [தற்கொலை கடிதம்] மின் புத்தகமாக [E-Book] அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

இதனை தன் தொடர் வாசிப்பின் மூலமாகவும், உங்களைப் போன்ற சான்றோர்கள் நட்பின் மூலமாகவும் சாத்தியமாக்கிய மகேஷ் அவர்களுக்கும் நன்றிகள்.

விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

*************

துர்கா மாதா!

முதலில் இத்தகைய புதினத்தைப் படைத்ததற்கு என் நன்றிகள். ஏனெனில் உங்களைப் போன்ற புரட்சிகரமான எழுத்தாளர்களின் சீர்மிகு எழுத்துக்கள்தான் சமுதாயத்தைச் சீரமைக்கும் கருவியாக அமையும் என்பது என் கருத்து.

நூல் ஆரம்பத்திலிருந்தே [ஒரு சில வார்த்தைகள்] சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கூடவே இழையோடும் வலிகளும் துயரங்களும் விரைவில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா! என்ற ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் வரும் சிறுமி மலர் குறித்த காட்சிகளிலேயே, மலரையொத்த பெண்களும் சிறுமிகளும் கறுக்கி / கசக்கி போடப்படும் அவலத்தை நம் கண்முன்னே நிறுத்தி, இக்கதை கையாளப் போகும் கருவை மெதுவாய் நமக்குள் விளக்கும் / விதைக்கும் வித்தை சிறப்பு.

முதலில் ஒரு கோணத்தில் தொடங்கி பயணித்து, பின்னர் அதை முக்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு கோணத்திலிருந்து கதையை விளக்கி முடிச்சிக்களை அவிழ்த்திருக்கும் விதம் சுவையாக இருந்தது. இக்கதையின் நாயகியான துர்கா பெண்களின் திடமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தொட்டதற்கெல்லாம் கோபப்படும், அழுதுவிடும், இன்னும் இத்யாதி இத்யாதி இயல்புகளையெல்லாம் கொண்டிருக்கும் பெண்களிலிருந்து இவள் நிரம்பவே மாறுபட்டவள்.

தணக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் பாபுவைப் பற்றிச் சொல்லுவது, கழிவறைக்கு சென்றுவந்த பிறகு தன் வலியை உதட்டை அழுத்தி அடக்கிக் கொள்வது போன்ற இடங்களில் துர்காவின் தன்நம்பிக்கையும் மனதைரியமும் பயங்கரமாய் வெளிப்படுகிறது.

சீருடையை களைவதே தான் நிர்வாணமாக இருப்பதாக நினைக்குமளவிற்கு உணர்வுபூர்வமாய் தான் நேசித்த இயக்கத்தையே போதிய விளைவுகளை ஏற்படுத்தாத காரணத்தாலும் அதிலுள்ள குறைகளையும் பகிரங்கமாய்ச் சுட்டிக் காட்டிவிட்டு வெளியேறுவதும், தன் மேலாளரை நயமாய் கேன்டீனுக்கு அழைத்து தண்டிக்கும் இடத்திலும் துர்கா எந்த அளவிற்கு தான் தீர்க்கமானவள் என்றும் உடனடி விளைவுகளை விரும்புபவள் என்றும் புலப்படுத்துகிறாள். துர்கா மட்டுமின்றி, சுடரும் நிஷாவும் துணிச்சலான பெண்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குகிறார்கள்.

_________

நண்பர் மகேஷ் இந்தக் கதையைப் பற்றி கூறும்போது இது கம்யூனிசமும் ஃபெமினிசமும் கலந்ததொரு கதையென்றார். அது எப்படி சாத்தியம்!!! என வியந்தேன் நான். ஆனால் அதை மிகச் சிறப்பாய் சாத்தியமாக்கியிருக்கிறது உங்கள் எழுத்தும் நீங்கள் எடுத்துக் கொண்ட கதைக்கருவும்.

கதையின் முதல் சில வரிகளிலேயே அந்த கால ஆணாதிக்கம் பெண்களை வீட்டிலேயே அடைத்துவைத்தது ஆனால் இந்தக் கால ஆணாதிக்கம் பெண்களை வேலைக்கு அனுப்பி சோம்பேறிகளாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து கொன்டிருக்கிறது என்ற வித்தியாசத்தை சிறப்பாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.

கதாபாத்திர அமைப்பும் அவர்களின் குணாதிசயங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் சந்தித்த / சந்திப்பவர்கள் போன்றேயிருப்பதால் கதை மனதிற்கு இன்னும் நெருக்கமாகிவிடுகிறது. இடைஇடையே வரும் ஹிந்தி சொற்களும் வட இந்திய தமிழ் உச்சரிப்புகளும் அந்த மாந்தர்களூடே நம்மையும் உணர்வுபூர்வமாக உலவ விடுகிறது.

வட இந்தியர்கள் பெட்ஷீட் & பாத்திரங்கள் விற்க வந்தால்கூட ஒருவித பயத்தோடே அவர்களை பார்க்க வைத்த சில திரைபட காட்சிகளிலிருந்தும் பல செய்தித்தாள் செய்திகளிலிருந்தும் மாறுபட்டு, அவர்களுக்கு பின்னால் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் சிந்திக்க வைக்கிறது இந்த நாவல்.

முதலாளித்துவ நெருக்கடி & ஆளும் வர்க்கங்களின் அதிகார வெறியாட்டம் போன்ற விஷயங்களைப் பட்டவர்த்தனமாய் பேசி, எத்தகைய கிடுக்குபிடிகளில் சிக்கிக் கொன்டு நம் சமூகம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நாவல். ஒரு முக்கியமான இடத்தில் [“இவ்ளோ சீரியசானப் பிரச்சினையை உங்க தமிழ்ச்சமூகம் எப்படி பார்க்குது தோழர்?” “தமிழன் உயர்ந்த பண்பாடும் நாகரீகமும் கொண்ட மூத்தக்குடி என்னும் பெருமிதத்தோடுதான்...” டாக்டர் கூச்சத்தோடு சிரித்தார்.] இரண்டே வரிகளில் கலாச்சாரம் பண்பாடு என்ற பொய் பிரச்சாரத்தின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது இந்த கதை.

அருப்புக் கோட்டை விவகாரம், பொள்ளாச்சி விவகாரம் போன்றவற்றை இக்கதை தொட்டுச் செல்வதாலும் அவற்றிற்கான தீர்வுகளை பேசுவதாலும் நாவலை வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி, எதார்த்த உலகில் நாம் சில முக்கிய நண்பர்களோடு இவற்றை விவாதித்துக் கொன்டிருக்கிறோம் என்று உணரவைப்பதில் இந்நாவல் வெற்றிப் பெற்றிருக்கிறது.

குட் டச் [Good touch] பேட் டச் [bad touch] போன்ற விஷயங்களை விரிவாகவும் விவேகத்துடனும் பேசுவதால் அனைத்துத் தரப்பினரும் நிச்சயம் படிக்கவேண்டிய நாவல் என்ற தரத்திற்கு உயர்ந்து, இவற்றைக் குறித்த வழக்கமான கற்பிதங்களையும் கருத்து பிம்பங்களையும் உடைத்து, வேறொரு புதிய கோணத்திலும், வித்தியாசமான, சரியான மற்றும் நியாயமான அணுகுமுறையைக் கற்பித்து பெரியவர்கள் பெரியவர்களாக இருந்தால் குழந்தைகளும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்ற கருத்தை அழகாய் புரியவைப்பதில் இந்நாவல் தனித்து நிற்கிறது.

உரிமைகள், கடமைகள், வாழ்வியல் போன்ற இத்தியாதிகளில் ஆண்களிடமிருந்து தனித்து நிற்பதோ அல்லது ஆண்களை மிஞ்சி நிற்பதோ அல்ல பெண்ணியம், மாறாக அவர்களுக்குச் சமமாய் / நிகராய் நிற்பதே நிஜமான பெண்ணியம் என்றக் கருத்தைத் தரமாய்ப் புரியவைப்பதில் இந்நாவல் உயர்ந்து நிற்கிறது.

நாவலின் இறுதியில் துர்கா புல்லட்டில் கம்பீரமாக வரும் காட்சி வேட்டைக்கு புறப்பட்ட சாமி குதிரையேறி செல்வதை கண்முன்னே கொண்டுவருகிறது. கதை அதிகாலை நேரத்தில் ஒரு துயரக் காட்சியோடு தொடங்கி, ஒரு இரவு வேளையில் மகிழ்ச்சியோடும் துர்காவின் புன்னகையோடும் முடிவடைந்ததாக சித்தரித்திருந்த விதம் இந்நாவல் இருட்டில் மறைந்திருக்கிற / மறைக்கப்பட்டிருக்கிற துயரங்களையும் வேதனைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, அவைகளுக்கான தீர்வையும், இவற்றிற்கு காரணமானவர்களுக்கே இருளை திருப்பித் தரவேண்டும் என்ற கருத்தை அழகாய் விளக்குகிறது.

இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றா்ல்,

துஷ்டர்களை துடைத்தெரிய துரிதமாய் புறப்பட்டால், இனி துன்பங்களைத் துடைக்காமல் துளியும் ஓயமாட்டாள் இந்த துர்கா மாதா.

- அப்ஸரன் ஃபெர்ணாண்டொ


நாவலை பெற: 

விலை: ரூ: 150 மற்றும் கூரியர்செலவு மட்டும்
தொடர்புக்கு: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
அலைபேசி எண்கள்: 70104 84465, 88707 33434
வங்கி கணக்கு: PONNULAGM PUTHTHAGA NILAIYAM, Karur Vysya Bank, Thiruppur, P N Road Branch, A/C -No-1235115000041544, IFSC KVBL0001235