தலைப்ப பாத்த உடனே “என்னடா இது, இவ இப்படி சொல்லிட்டாளே”ன்னு கோவப்படுறீங்களா? எனக்கு அதை விட கோவம் அதிகமாக இருக்கு.
“பெண் அன்பின் மறுவுருவம்”
“பெண் பொறுமையின் சிகரம்”
“பெண் தெய்வம்”
இப்படி எல்லாம் சொன்னா கேக்கவும் படிக்கவும் நல்லா தான் இருக்கும். இத எல்லாம் கேக்குற பெண்கள் கூட “அட, ஆமா. நாங்க இப்படித் தான்”னு நெஞ்ச நிமிர்த்திப்பாங்க.
அட, அதெல்லாம் விடுங்க. ரொம்ப சமீபத்துல ஒரு கவிதை பாத்தேன்.
“பெண்ணே உன் முன்னே
நான் தலை குனிந்து நிற்கின்றேன்
அன்பு கொண்ட உன்னில்
காமம் கொண்ட என் பார்வை படாதிருக்க”
படிக்குறப்பவே அப்படியே ஒரு சோக வயலின் பின்பாட்டா ஒலிக்குதுல. “அடடா, பெண்ணே, நீ எவ்வளவு அன்பானவள், பண்பானவள். உன் முன்னால எல்லாம் தலைநிமிர்ந்து நிக்க ஆண்களுக்கு தகுதியே இல்ல, மொத்த ஆண்களும் காமப்பார்வை பார்ப்பவர்கள் அப்படின்னு சொல்றப்ப, பெண்கள் எல்லாரும் “ஆமாப்பா ஆமா” அப்படின்னு அப்படியே கண்ணுல தண்ணி வச்சுட்டு பாந்தமா சாந்தமா ஸ்லோ மோசன்ல நிமிர்ந்து பாக்குற மாதிரியே ஒரு உணர்வு எனக்கு.
அப்படியே இதுக்கு பின்னால எனக்கு இன்னொரு அர்த்தமும் இருக்குறதா தோணுது. “இங்கப்பார், நீ அன்பானவள். அன்பா மட்டும் தான் இருக்கணும். காமம்ங்குறது ஆண்கள் சொத்து. எங்களுக்கு நீ தேவைனா உன்னை எல்லாம் நாங்க காமமா மட்டும் தான் பாப்போம், அன்பா எல்லாம் இருக்கத் தெரியாது”ன்னு அடக்குமுறைல சொல்ற மாதிரியே எனக்கு கேக்குதே.
அப்படினா, பெண்களுக்கு காமம் வரக்கூடாது, வந்தாலும் வெளில சொல்லக் கூடாது. அப்படி சொல்லிட்டா போச்சு, “ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா, இப்படி அலையுறியே”ன்னு வாய் வலிக்க வலிக்க திட்டித் தீக்கணும். கூடவே “உங்கள எல்லாம் நாங்க தான் ரசிக்கணும், நாங்க தான் பாராட்டணும், பெண்-னா அவளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே உண்டு. அப்படி இருந்தா தான் அவ பெண். அவள நாங்க கால்ல விழுந்து கும்பிடுவோம், தேவைபட்டா தூக்கிப் போட்டு மிதிப்போம், அப்படியே காமம் வந்தா இழுத்துட்டு போய்....” அடப்போங்கப்பா.... இத சொல்றது ஆண்கள் தான்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாதீங்க. பெண்களே ஒரு பெண்னா இப்படி தான் இருக்கணும், இதுதான் வரைமுறைன்னு சொல்றாங்க.
ஒவ்வொரு தடவ பெண்ணுக்கு எதிரா அசம்பாவிதம் நடக்குறப்ப எல்லாம் சில நடுநிலையாளர்கள் (இதுல ஆண் பெண்ன்னு எல்லாம் இல்ல, எல்லா பாலினரும் தான்) பொங்குறது அவ ஆடை விசயத்துல தான். அய்யோ அவ அப்படி ட்ரெஸ் போட்டு எங்கள உசுப்பெத்துறா, இப்படி ட்ரெஸ் போட்டு எங்கள கூப்டுறான்னு கூச்சல் வேற. ஏன்னா இவங்களுக்கா செல்ப் கண்ட்ரோல் கிடையாதாம். எல்லாமே எல்லாத்துக்குமே பொண்ணு தான் காரணமாம்.
இதுல இப்போன்னு இல்ல எப்பவுமே இன்னொரு ட்ரெண்ட். “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா”ன்னு. இந்த சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் அம்மாக்கள படுத்துற பாடு சொல்லி மாளாது. அம்மானா அவ ஒரு தியாக சொரூபி. பிள்ளைங்களுக்காக எல்லாத்தையும் இழக்கணும். தூக்கம் மறந்து துக்கம் மறச்சு, சாப்பாட்ட கூட பிள்ளைங்களுக்காக விட்டுக் குடுக்கணும். எத்தன காலத்துக்கு தான் இதயே சொல்லிக் குடுக்கப் போறாங்களோ தெரியல.
ஏன், அம்மான்னா மனுசி இல்லையா? அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக் கூடாதா? அம்மா அம்மான்னு அம்மாவ தியாகி ஆக்குற கூட்டம், அம்மாவ பாத்துக்குற பொறுப்பு பிள்ளைங்களுக்கு உண்டுன்னு எப்போ சொல்லிக் குடுக்கப் போறாங்க?
காலைல எழுந்த நேரத்துல இருந்து, அம்மாவுக்கான அத்தன வேலைகள்லயும் தானும் பங்கெடுத்து செய்யணும்னு யாரு பிள்ளைங்களுக்கு கத்துக் குடுக்கப் போறாங்க? திங்குற சாப்பாட்ட தட்டிப் பறிக்காம அம்மாவுக்கும் பங்கு உண்டுன்னு பகிர்ந்து அளிக்குற எண்ணத்த என்னிக்கி பிள்ளைங்களுக்கு விதைக்கப் போறாங்க? அம்மாவ எல்லாம் நீங்க பாத்துக்க வேணாம், ஆனா அவளோட சுயமரியாதைய அடக்கி வைக்காதீங்க. நீ அம்மா, நீ தியாகம் பண்ண பொறந்தவ, தியாகம் பண்ணியே தீரணும்னு நினைக்குற மனப்போக்க முதல்ல புள்ளைங்க மனசுல இருந்து மாத்தப்பாக்கணும்.
என்கிட்ட ஒருத்தங்க சொன்னாங்க, “எந்த ஆணும் யோக்கியன் கிடையாது, பெண்கள பாத்தா அவனுக்கு தானாவே ரசிக்கத் தோணும். அவள அடைய தோணும். இத எல்லாம் தப்புன்னு சொல்லக் கூடாது”ன்னு. எனக்கும் தெரியும், பெண்களோட கூடிக் கிடப்பவங்க எல்லாம் அயோக்கியனும் கிடையாது, பெண் வாசமே வேணாம்னு போறவங்க எல்லாம் யோக்கியனும் கிடையாதுன்னு. இன்னும் சொல்லப்போனா இந்த யோக்கியன், அயோக்கியன்ங்குற வார்த்தை பிரயோகமே தப்புன்னு தான் சொல்லுவேன்.
இயற்கையாவே மனுஷ இனம்னு இல்ல, எல்லா இனத்துக்கும் இருக்குற பொதுவான குணம் இந்த ஆண் டாமினேஷன். ஆனா ஒவ்வொரு உயிர்களோட இயங்குசக்தியே பெண்ணை சுத்தி தான் நடந்துட்டு இருக்கு. ஒரு பெண்ணுக்காக சண்டைப் போட்டு அழிஞ்ச பெரும் சாம்ராஜ்யங்கள் பத்தி நாம படிச்சதில்லையா? ஒரு பெண்ணை கவர தான் ஆண் அவன் வல்லமைய கூட்டிக்குறான்.
திறமையான ஒரு ஆணை தன்னோட இணையா தேர்ந்தெடுக்குற உரிமை எல்லா உயிரினத்து பெண்களுக்கும் உண்டு. அப்படி இருக்குறப்ப ஏன் இந்த மனுஷ இனத்துல மட்டும் ஒரு பொண்ணு தன்னோட இணைய தைரியமா தேர்ந்தெடுக்க முடியுறது இல்ல?
கேட்டா, நீ பெண், நீ அடக்க ஒடுக்கமானவள், நீ அன்பானவள், நீ வீட்டுக்கு அடங்கி நடப்பவள்... இன்னும் பல வள்... வள்... வள்...
வேற ஒண்ணுமே இல்ல, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து சலிச்சுப் போய் கொஞ்சம் ஊர் சுத்திட்டு வரலாம்னு நினச்சா கூட அந்த பெண்ணுக்கு என்ன பெயர் கிடைக்கும்னு நினைக்குறீங்க?
அதெப்படி அவள அவ இஷ்டப்படி வெளில விடலாம்? இருக்கவே இருக்கு வழக்கமான ஆராதனைகளும் அர்ச்சனைகளும். மறுபடியும், நீ பெண்ல.... ஒரு பொண்ணுனா எப்படி இருக்கணும்னு தெரியுமா? இந்தா உன் அக்காவ பாரு, பக்கத்து வீட்டு பரிமளாவ பாருன்னு ஆரம்பிச்சு அறிவுரையா சொல்லி திருத்தப் பாக்குறது (ஏன்னா ஒரு பெண் ஊர் சுத்துறது மாபாதகம் பாருங்க). இந்தபுள்ளையும் அடக்க ஒடுக்கமா இருந்துட்டா “இவள மாதிரி நல்ல பெண்ணே கிடையாது”. மீறி வெளில போயிட்டாளா, “ஓடுகாலி, அடங்காப்பிடாரி”.
நம்மள சுத்தி இருக்குற பிற உயிர்கள கூர்ந்து கவனிச்சாலே போதும், ஒரு விஷயம் நல்லாவே புரியும். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இணைபிரியாம இருக்குற இணையும் இருக்கும், திருட்டுத் தனமா இன்னொரு இணையை சேர்த்துக்குற இணையும் இருக்கும். இப்படி எல்லா குணங்களும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தான். ஆனா மத்த உயிர்கள்கிட்ட இருக்குற ஒரு நல்ல குணம் என்னன்னு பாத்தீங்கனா, யாரும் யார் விஷயத்துலயும் தலையிடுறது இல்ல. யாரும் யார் கூடவும் சேர்ந்து வாழக் கூடாதுன்னு அதிகாரம் பண்றது இல்ல, தடுக்குறது இல்ல. சேர்ந்து வாழணும்னு கட்டாயப்படுத்துறதும் இல்ல. வயசு வித்யாசம்னு எதுவும் பாக்குறது இல்ல. பிடிச்ச இணையை சேர்த்துகிட்டு கஷ்டமோ நஷ்டமோ இணைகள் அவங்க பாட்ட அவங்க தான் கவனிச்சாகணும். இதுவே மனுஷ இனமா இருந்தா?
ஆண்டாண்டு காலமா இந்த சமூகத்துல புரையோடிப் போயிருக்குற சாதீய படுகொலைகளுக்கு நாம என்ன பெயர் வச்சிருக்கோம்?
கெளரவக் கொலை. ஆணவக் கொலை.
இந்த கொலைய எல்லாம் தூண்டுறது யாரு?
இந்த சமூகம் தான் இல்லையா? சம்மந்தப்பட்ட ஆட்களை சுத்தி இருக்குற நாம எல்லாரும் தான் இல்லையா?
ஒரு ஆணும் பெண்ணும் ஓடிப் போய்ட்டா அது என்ன, ஏது, எங்க, எப்படி, யார், யாரோடன்னு தெரிஞ்சுக்கலனா தலை வெடிச்சு சிதறிடும் பாருங்க. அதுலயும் அவங்க இப்படி செய்திருக்க கூடாதுன்னு அவங்க உரிமைல தலையிடுறதுக்கு நிகர் நாமளே தான்.
ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும், இந்த சமூகம் இப்படி இருக்க நாமளே தான் காரணம். நாம மாறாம சமூகம் மாறணும்னு நினச்சா?
ஆக, பெண்ணை போற்றுதும், பெண்மை போற்றுதும்னு சொல்லி சொல்லியே பெண் இனத்துக்கு ஒரு வரைமுறை வகுக்காம, எல்லாருக்கும் பொதுவான ஒரு நீதியோட எல்லாரும் இருந்தாலே போதும்.
சுருக்கமா சொன்னா...
ஆணோ பெண்ணோ....
யார் விசயத்துலயும் யாரோட வாழ்க்கை முறையிலயும் தங்களோட அதிகாரத்த செலுத்தாம இருந்தா போதும்.
நம்மோட வாழ்க்கை நம்மோட நிம்மதின்னு இருந்துட்டாலே போதும்...
யாரும் யாரையும் போற்ற அவசியம் இல்ல.
அட, தூற்றினாலாவது ஒரு பெண் அதுல இருந்து மீள வீறுக்கொண்டு எழலாம். ஆனா போற்றினா புகழ்ச்சிக்கு மயங்கியே அடங்கிப் போவாங்க....
ஆதனால் பெண்மை தூற்றுங்கள்.
அதிரடி. பின்னுறீங்க. இதத்தான் எதிர்பார்த்தேன்.
ReplyDeleteபள்ளிப் பருவத்தில் ஒரு பாலகுமாரன் நாவலில் படித்தது.., ஒருவன் தன நண்பனிடம் சொல்வது போல வரும்..,
ReplyDelete"ஆண்களை பணத்திலும், பெண்களை புகழ்ச்சியிலும் ஈசியா கவுத்திடலாம்.., புகழுக்கு மயங்காத பெண்களே இவுலகில் கிடையாது..."
இப்பதிவை படித்த போது அவ்வரிகள் ஞாபகம் வந்தது.
இன்னும் நிறைய மாற வேண்டும்.
அருமையான பகிர்வு
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDelete