Tuesday, 11 September 2012

குறிஞ்சி மலர்கள்... !!!

வெளியே சருகு சலசலக்கும் ஓசை கேட்டது. ஜன்னல் திரையை நீக்கி எட்டி பார்த்தேன். சுப்பன் உலர்ந்த சருகுகளை கூட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு ஐம்பத்திரண்டு வயதிருக்குமா? இப்பவே முதுமை இவனை இப்படி அரவணைத்து கொண்டதே, கையில் இருந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பார்த்தவாறே மெதுவாக கண் மூடினேன்.

நான் சிவகலா. இந்த அருமைநாயகன்பட்டிக்கு இரண்டு வருடத்துக்கு முன் கிராம அதிகாரியாக மாற்றலாகி வந்தேன். பாரதிராஜாவின் செழுமையான கிராமமாக இல்லாவிட்டாலும் அந்த குளக்கரையும், வாழை தோப்பும் மனதுக்கு இதமாக இருக்கும்.ஆனால் வாழை மரங்கள் அடிக்கடி கண்ணீர் விடும். ஆமாங்க, இங்கு ஜாதி கலவரம் வெகுசாதாரணம். எடுத்தவுடன் வாழைகளைத் தான் வெட்டுவார்கள். இந்த இரண்டு வருடங்களில் பலகலவரங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த அந்த முதல் கலவரம் ..... அந்த நான்கு குருத்துகள்.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.

இங்கு வந்த புதிதில் நேரம் போகவில்லை எனில் குளக்கரையில் தான் அமர்ந்து படம் வரைவது வழக்கம். அன்றும் அப்படிதான் படம் வரைந்து கொண்டிருந்தேன். ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

'அட. செல்லியும் வர்றா போலிருக்குதே' தலை தூக்கி பார்த்தேன்.

செல்லி சுப்பனின் மகள். இந்த கிராமத்து தேவதை. எண்ணை வழியும் தலையோடு இருந்தாலும் செல்லி செல்லிதான்.

"அக்கா அக்கா, இவங்க என்னோட பிரண்ட்ஸ். இவ ஸ்டெல்லா, இவன் டேவிட், அப்புறமா இவன் அப்துல்லா".

"நீங்க இதே கிராமமா" எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் இவர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை".

"ஆமாக்கா, டேனியல் கேள்விபட்டிருப்பீங்களே, நாங்க ரெண்டு பேரும் அவரோட பசங்கதான். கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு இருக்கோம். எங்க கிளாஸ்மேட் தான் அப்துல்லா, இந்த வருஷம் ஊருக்கு நானும் வர்றேன்னு சொன்னான், கூட்டிட்டு வந்துட்டோம்..."

அப்துல்லாவை பார்த்தேன். அவன் ஆர்வத்தோடு நான் வரைந்திருந்த பாரதத்தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"அப்துல் படிப்பில் எப்படி" எதையாவது கேட்க வேண்டுமே என கேட்டேன்.

"தப்பு பண்றீங்கக்கா" திடுக்கிட்டு அவனை நோக்கினேன்

"பாரதத்தாயோட நெத்தியில பொட்டு இல்ல பாருங்க"

"நான் இன்னும் வரைந்து முடிக்கவில்லை அப்துல்"

"முடிக்கா விட்டாலும் பரவில்லை, ஆனால் முதல்ல அவ நெத்தியில பொட்டு வைங்க. பொட்டு இல்லாம அவ நல்லா இல்லை"

"சிகப்பு கலர் இப்போ என்கிட்ட இல்லப்பா, பாரு, சுத்தமா துடைச்சு வச்சிருக்கேன்" டப்பியை எடுத்து காட்டினேன்.

அவன் விரல்கள் வாஞ்சையோடு பாரதத்தாயை வருடிக்கொடுத்தன.

"நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாதுக்கா, பொண்ணுங்களுக்கு பொட்டுங்குறது சின்ன அகல் விளக்குல எரியுற தீபம் மாதிரி. அது இருந்தாதான் அழகு".

"இவன் எப்பவும் இப்படிதான், நம்ம நாட்டையோ இல்லை நம்ம பாரம்பரியத்தையோ யாராவது குத்தம் சொன்னா இவனுக்கு பொறுக்காது. உடனே லெக்டர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்" ஸ்டெல்லா முதன் முறையாக வாய் திறந்தாள்.

எனக்கு அவர்களில் அப்துல்லா தனியாக தெரிந்தான். சிறிது நேரம் அமைதியாகஇருந்தேன்.

"ஆமா, செல்லி எப்படி உங்களுக்கு பிரெண்டானா?"

"நாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். அப்புறமா நாங்க கோயம்புத்தூர் போயிட்டோம் . செல்லிய அவங்கப்பா மேற்கொண்டு படிக்கச் வைக்கல. நாங்க வெளியூர்ல படிச்சிகிட்டு இருந்தாலும் செல்லிக்கு அடிக்கடி லெட்டர்போடுவோம், அப்துல்லாவும் செல்லிக்கு பேனா நண்பன் ஆகிட்டான்".

"நேரம் ஆச்சு , நாங்க கிளம்புரோம்கா " செல்லி ஏனோ அவசரபட்டாள்.

"ஏய் அப்துல், கிளம்புப்பா" உரிமையோடு கை பிடித்து இழுத்தாள்.

"அக்கா, பாரதமாதாவுக்கு உடனே பொட்டு வச்சுடுக்கா " அவன் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்ப வில்லை போலும். கிளம்ப மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தான்.

அந்த இடத்தை விட்டு எட்டடி கூட வைத்திருக்கமாட்டர்கள். அதற்குள் நாற்பது, ஐய்பது பேர் திபுதிபுவென ஓடி வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள், வேல்கம்பு.

நான் முதன்முறையாக மிரண்டு நண்பர்களை நோக்கினேன். அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

"பிடிங்கடா, விட்டுடாதீங்க" ஒரு முரட்டு குரல். யாரென திரும்பி பார்த்தேன். பெரிய மீசையோடும் முரட்டு உருவத்தோடும் டேனியல் நின்று கொண்டிருந்தார்.

அடியாட்கள் செல்லியும், அப்துல்லாவையும் பிடித்து கொண்டார்கள். டேனியல் அப்துல்லாவிடம் திரும்பினார்.

"இங்க பாருப்பா, இந்த ஊருல வேத்து ஜாதிகாரனோ, இல்ல வேத்து மதத்துகாரனோ வரணும்னா என்ன மாதிரி பெரிய மனுசங்கிட்ட அனுமதி வாங்கணும். எம்புள்ளைங்க கூட்டிட்டு வந்ததால உன்ன ஒண்ணும் செய்யல, மரியாதையா உடனே பெட்டிய தூக்கிட்டு ஓடி போய்டு" டேனியலின் குரலில் கடுமை இருந்தது.

"நிறுத்துங்கப்பா, இவன் எங்கள்ள நம்பி வந்திருக்கான், இவன நாங்க போக விடமாட்டோம்" ஸ்டெல்லாவும் கத்தினாள்.

"சும்மா வாய மூடு கழுத. டாய், இந்த செல்லிக்கு மொட்ட போட்டு ஊர் நடுவுல கட்டுங்கடா"

"அப்பா, அவ ரொம்ப நல்லா பொண்ணு, அவ என்ன தப்பு செய்தான்னு அவளுக்கு மொட்ட போடசொல்றீங்க?"

"என்ன பண்ணுனாளா? ஏண்டா, கீழ்சாதிகார நாயி அவ, அவளுக்கு பெரிய வீட்டு பசங்க பழக்கம் கேக்குதோ? இன்னும் ஏண்டா பாத்துகிட்டு இருக்கீங்க, போய் ஆக வேண்டியதை பாருங்க" இப்போது டேனியல் வெறியின் உச்சியிலேயே இருந்தார். செல்லியை பிடித்திருந்தவர்களின் பிடி இறுகியது. அவள் இப்போது அவர்கள் பிடிக்குள் கோழிகுஞ்சாக வெடவெடத்தாள்.

"அவள விடுங்க" கதறும் நண்பர்களோடு நானும் கத்தினேன்.

"ஐயா, எம்புள்ளைய விட்டுடுங்கயா வாழ வேண்டிய பச்சை மண்ணுயா" சுப்பன் டேனியலின் காலடியில் கதறியழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

"நம்ம சாதி புள்ளைய இவனுக மொட்ட அடிச்சுருவானுகளா, அதையும் பாத்ருவோம்லே" செல்லிக்கு ஆதரவாக சில இளவட்டங்கள் குதித்தனர்.

அப்புறம் என்ன நடந்தது என்று என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லை, சுற்றும்முற்றும் பார்த்தேன். வாழை மரங்கள் குளத்து நீரில் பிணமாய் மிதந்தன. சிலர்வலியில் துடித்து கொண்டிருந்தனர். சிலர் கத்தகூட இயலாமல் மயங்கி கிடந்தனர். இவங்க நாலு பேரும் எங்கே? என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவர்கள் மேல்நிலைத்தது.

நால்வரும் கைகளை இணைத்திருந்தனர் . ஐயோ, இதென்ன! அவர்கள் பிஞ்சுக்கரங்களிலிருந்து இரத்தம் வழிகிறதே!

"நிறுத்துங்க" நான் வாயை திறப்பதற்குள் அவர்களே கத்தினார்கள். அவர்களின் பலமான பலமுறை கத்தல்களுக்கு தாமதமாக பலன் கிடைத்தது. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டுஅவர்களை நோக்கினார்கள்.

"ஜாதி, மதம்னு அலையுறீங்களே, யாருக்கு வேணும் உங்களோட இந்த சாக்கடை. இதோ, ஓடிகொண்டிருக்கிற ரத்தத்துல எது மேல்சாதி ரெத்தம், எது கீழ் சாதி ரெத்தம்னு உங்களால சொல்ல முடியுமா? ம் சொல்லுங்கடா!..."

ஸ்டெல்லாவின் முழக்கத்தோடு அவர்கள் கரங்கள் உயர்ந்தன. பட்டன ஒரு சொட்டுத்தெறித்து பாரத தாயின் நெத்தியில் விழுந்தது. தெறித்த ரெத்தம் வழியாமல் இருக்க என் கைவிரல்களால் தடுத்துக் கொண்டேன். இந்த அப்துல்லாவுக்கு என்ன ஒரு பார்வை. அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நீண்ட நேரம் கழித்து தான் தாயை பார்க்கும் குட்டியின் பரவசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

கலவரக்கூட்டம் இப்போது நண்பர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் என்ன நினைத்ததோ கலைந்து சென்றது. இந்த இளம் வீரர்களை எதிர்க்க அவர்களுக்கு துணிவில்லையோ என்னவோ?அதன் பிறகு எப்படி வீட்டுக்கு வந்தேன் என தெரியவில்லை. என் அருகில் பாரதமாதா நெற்றியில் தன் மைந்தர்கள் வைத்த திலகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

செல்லி கையில் கட்டோடு மெதுவாக உள்ளே வந்தாள். "வா செல்லி, உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே காணோம்?" என் கண்கள் அங்கும்இங்கும் அலைந்து அவர்களை தேடியது.

"அவங்க போய்டாங்கக்கா. இனி எப்போதான் அவங்கள நேர்ல பாக்க போறேனோ" சொல்லும் செல்லியை ஆராய்ந்தேன். அவள் முகத்தில் துளி வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை. 

"ஏன் செல்லி, உனக்கு வருத்தமே இல்லையா?" என்னால் கேக்காமல் இருக்க முடியவில்லை.

"வருத்தம்தான்க்கா. ஆனா என்ன செய்றது. எங்களால ஊரு ரெண்டுபட்டு நின்னா நல்லாவா இருக்கும். என்ன! எப்போ கலவரம் வந்தாலும் ரெண்டு மூணு உசிரு போகும். ஆனா இந்த தடவ யாரும் போய் சேரல. அந்த வகைல கொஞ்சம் சந்தோசம்".

இவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்கின்றனர். அவளிடமே கேட்டேன்.

"அக்கா, இந்த சமுதாயம் சீக்கிரமா மாறணும்னு நாம நினைக்க கூடாது. அதுக்குகாலமாகும். எங்க தலைமுறைல இல்லனாலும் எங்க புள்ளைங்க காலத்திலாவது மாறும்.அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்".

"இனிமே நீங்க நாலுபேரும் எப்போதான் சந்திப்பீங்க"

"வழக்கம் போல லெட்டர்ல தான் "

பேசிய செல்லிய நான் ஆச்சர்யமாக பார்த்தேன். இவர்கள் என்ன நட்புக்கு ஒரு உதரணமா? பனீரெண்டு வருசத்துக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை விட இவர்களின் நட்பு சிறந்த மலரோ?

அதற்கு பிறகு செல்லியை நான் எவ்வளவோ முறை சந்தித்தேன். நண்பர்களிடம் வருகிற கடிதங்களை காட்டுவாள். சுகமான நினைவுகளை அசைப்போட்ட நான் மெதுவே கண் விழித்துப் பார்த்தேன். சுப்பன் இப்போது சருகுகளை சாக்கு பையில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் ஏழைகளுக்கு சருகுதானே அக்னி பகவானை தாரை வார்க்கும் அட்சயபாத்திரம்.

"சுப்பா! செல்லி வீட்ல இருந்தா கொஞ்சம் வர சொல்றியா?"

"சரி தாயி! உடனே வர சொல்லுதேன்" சுப்பன் போய் விட்டான்.

இப்பவே கிளம்பினா தான் நேரத்தோட திருநெல்வேலி போய் சேர முடியும். துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தேன். நான் வரைந்த ஓவியங்களை எடுக்கையில் பாரதமாதா. அவள் கண்களில் எனக்கு அப்துலா தெரிந்தான். அவளை மார்போடு அணைத்தவாறு நாற்காலியில் சரிந்தேன். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் கலவைகள் என்னை அரித்தன. கண்கலங்கியவாறு நிமிர்ந்தேன். வாசல்படியில் செல்லி நின்றிருந்தாள்.

"வா செல்லி"

"ஊருக்கு புறப்பட்டுடீங்களாக்கா? எங்களயெல்லாம் மறந்துற மாட்டீங்களே"

"மறக்கற முகமா உங்களோடது? என் கண்கள் பனித்தன.

"செல்லி, உனக்கு உன் நண்பர்களை மீண்டும் பார்ப்போம்குற நம்பிக்கை இருக்கா?"

"நிச்சயமா இருக்குக்கா"

"அப்படின்னா இந்த தாயை அப்துல்கிட்ட குடுத்துரு" செல்லியிடம் கையளிக்கும் போது மனதுக்குள் தைரியம் பிறந்தது.

நிச்சயம் இந்த கிராமம் ஒருநாள் அமைதி பூங்காவாக, ஜாதி, மதம்ங்குற சச்சரவு இல்லாமல் மாறத்தான் போகுது. அதற்கு முதல் புள்ளியாய் இந்த சின்னஞ்சிறுசுகள் கிளம்பி விட்டனரே. வண்டிக்கு நேரமாகவே வேகவேகமாக புறப்பட ஆயத்தமானேன். என் மனத்திரையில் நான்கு நண்பர்களும் குறுஞ்சி மலர்களாய் சிரித்தனர்.

1 comment:

  1. ஒரு இலட்சியக் கதையைப் படித்த திருப்தி ஏற்படுகிறது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete