Friday, 5 June 2015

அது ஒரு விபத்து


அது ஒரு விபத்து...

காலைல எட்டரை இருக்கும். அப்ப தான் எழும்பி வெளில வந்து நின்னு பல் தேய்ச்சுட்டு இருந்தேன். அந்தப் பக்கமா சைக்கிள்ல வந்த கனகவேலும் பிரான்சிசும் ஹாய்ன்னு கை காட்டிட்டு போனானுங்க. ஒருத்தன் தூங்கு மூஞ்சி வெவ்வெவேன்னு பழிப்பு காட்டிட்டு போனான். சீ ப்பே, செருப்பு பிஞ்சுடும்னு நான் இங்க இருந்து சைகை காட்டினேன்.

அப்ப தான் அது நடந்துச்சு. எதுக்க வந்த லாரிய கவனிக்காம சல்லுன்னு ரோட்டுல ஏறுன அந்த டூ வீலர் காரர அது பாட்டுக்கு தட்டி விட்டுட்டு லாரி போய்ட்டே இருந்துச்சு.

ஹே ஹேன்னு பசங்க ரெண்டு பேரும் சைக்கிள கீழ போட்டுட்டு ஓடுறானுங்க. நானும் என்ன நடந்துச்சுன்னு பாக்க ஓடுறேன். பின்னால அம்மா ஓடி வர்றா.

உயிர் இருக்கான்னு தெரியல. அப்படியே மல்லாந்து விழுந்து கிடக்கார். தலைல அடி. ரெத்தம் மெதுவா எட்டிப் பாக்க ஆரம்பிச்சிருந்துச்சு.

செத்துட்டான் போலயேன்னு பிரான்சிஸ் கைய பிடிச்சு பாக்கான். திடீர்னு விலுக்குன்னு உடம்பு தூக்கி வாரி போட்டுச்சு. அதோட இப்ப மெல்லுசா மூச்சு ஹெக்ஹெக்ன்னு இழுக்க ஆரம்பிச்சுது.

ஞாயிற்று கிழமை, பக்கத்துல ஆம்பளைங்க யாரும் இல்ல. எல்லாரும் தோப்பு, வயல்ன்னு தண்ணி பாய்க்க, புல்லு வெட்டன்னு காலைலயே போய்டுவாங்க. அப்படியும் இல்லனா சர்ச் வாசல், இல்லனா கோவில் வாசல்ல சீட்டு விளையாடிட்டு இருப்பாங்க.

ஏய், உசிரு இருக்கு. யாராவது வண்டி புடிச்சுட்டு வாங்க, தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுப் போய்டுவோம்ன்னு கனகவேல் அவர தூக்கி மடில கிடத்தி பதமா தலைய பிடிச்சு பக்கத்து பைப்ல அம்மா பிடிச்சுட்டு வந்த தண்ணிய தெளிக்கான்.

கூடி நின்னவங்க பூராவும் பொம்பளைங்க. அதிகமா வண்டிகளும் அந்த தெரு பக்கம் வராது. என்னப் பண்ணலாம்? நான் ஓடி வீட்டுக்குள்ள வந்து அப்பாவ தேடினா காணோம். அப்படியே அம்மா மொபைல் எடுத்து அப்பாவுக்கு கூப்பிட ஆரம்பிச்சேன்.

இல்ல, அவசரத்துல டயல் கூட பண்ண முடியல, கை எல்லாம் நடுங்குது. எப்படியாவது அந்த உயிர் பொழைச்சு வந்துடணும்ன்னு மட்டும் தான் மனசும் வாயும் முணுமுணுத்துட்டு இருக்கு. டக்குன்னு கார் சாவிய எடுத்தேன், வெளில வெறித்தனமா ஓடி வந்தேன்.

அம்மா, கேட்டை தொறன்னு கத்திகிட்டே கார்ல ஏறி வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன். அம்மாவும் ஓடி வந்து கேட்டை திறந்து விட, நான் நேரே வண்டிய கொண்டு வந்து அந்த ஆள் பக்கமா நிறுத்திட்டு, ஏத்துங்கடா, நாமளே போய்டுவோம்ங்குறேன்.

ரெத்தம், ரெத்தம் ரெத்தம். தேங்கி நின்ன ரெத்தத்த பாத்தா அப்படியே மயக்கம் வந்துது. அதுக்குள்ள ஒரு வேஷ்டி கொண்டு வந்து தந்த பாட்டி, நீ பொட்ட புள்ள தாயி, அந்த பயலுவள ஓட்ட சொல்லு, நாளபின்ன ஒரு பிரச்சனையாகிடப் போகுதுன்னு சொன்னதுக்கு இல்ல, நான் பாத்துக்குறேன்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணி சீறிப் பாய ஆரம்பிச்சுட்டேன்.

டேய், ஹாஸ்பிடல் எங்க இருக்கு, வழி சொல்லு, எனக்கு தெரியாதுன்னு நான் சொல்ல, பிரான்சிஸ் தான் லெப்ட் ரைட் சொல்லிட்டே, அந்த வேஷ்டிய அடிபட்டவர் தலைய சுத்தி கட்ட ஆரம்பிச்சான். கனகவேல் அவர் கால் ரெண்டயும் பிடிச்சு உள்ளங்கால பரபரன்னு தேய்ச்சு குடுத்துட்டு வந்தான்.

யாருடா இது, இவர் வீட்டுக்கு சொல்ல வேணாமா?

புதுசா இருக்காரு, நான் இதுவரைக்கும் இவர பாத்தது இல்ல - இது கனகவேல்.

நல்லவேளை, ட்ராபிக் அவ்வளவா இல்ல, பத்தே நிமிசத்துல ஹாஸ்பிடல் அடைஞ்சு, எமெர்ஜென்சி எமர்ஜென்சின்னு கனகவேல் இறங்கி ஓடுறான். ஒரு நர்ஸ் டீமோட திரும்பி வந்தவன் மெதுவா அடிபட்டவர காலை பிடிச்சுக்க, பிரான்சிஸ் மெதுவா தூக்கி குடுத்து, ஸ்டெச்சர்ல கிடத்தினாங்க. அப்புறம் வேக வேகமா உள்ள கொண்டுப் போய்ட்டாங்க.

உசிரு இருக்கான்னு நர்ஸ் ஒருத்தங்க கேக்க, ஓடிகிட்டே பிரான்சிஸ் தெரியலன்னு சொல்லிட்டுப் போறான்.

நான் காருக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கேன். அப்படியே ஸ்டியரிங் மேல கவுந்து படுத்துகிட்டேன். பல் தேச்சுட்டு இருந்த அந்த நிமிஷம் எவ்வளவு ரம்மியமா இருந்துச்சு. எப்படி ஒரே ஒரு நொடி அத தலைகீழா புரட்டிப் போட்டுடுச்சு.

அடிபட்டவருக்கு அப்படி ஒண்ணும் பெரிய வயசு இல்ல, ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா ஒண்ணோ ரெண்டு பொடியா பிள்ளைங்க இருக்கும். அவ்வளவு தான். அவங்க அப்பா அம்மா எப்படி துடிச்சுப் போவாங்க. தலைல வேற அடி. ஆண்டவா, பொழைச்சுக்கணும்ன்னு வேண்ட மட்டும் தான் முடிஞ்சுது என்னால.

கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும்னு நினைக்குறேன், கனகவேல் ஓடி வந்தான். ஆள் உயிரோட தான் இருக்கார். பின் மண்டைல அடி, கல் எதுவோ வெட்டி சதை பிளந்திருக்கு. இப்ப ஓ பாசிட்டிவ் ரெத்தம் வேணும். மொபைல் இருக்கான்னு கேட்டான்.

"இல்ல, எதுவும் எடுத்துட்டு வரல, அம்மா மொபைல கூட அங்கயே விட்டுட்டு வந்துட்டேன், அப்பா நம்பர் தவிர வேற எதுவும் மனப்பாடமா தெரியவும் செய்யாது".

"சரி, வா, அப்பாவுக்கு கால் பண்ணு" கதவ தொறந்து, என்னை வெளில இழுத்து கதவ சாத்திட்டு ஓடிட்டே சொன்னான் கனகவேல்.

ஹாஸ்பிடல்ல இருந்த காயின் பாக்ஸ்ல போய், நம்பர் சொல்லுன்னு சொல்ல, நான் சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அப்பாவும், என்னோட பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. எந்த ஹாஸ்பிட்டல் போனோம்னு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்துருக்காங்க.

ஹாஸ்பிடல் எதுன்னு சொன்னதும், பத்தே நிமிசத்துல அங்க வந்தவங்க, ஓ பாசிட்டிவ் ரெத்தம் கிடைக்குமான்னு தேட ஆரம்பிச்சுட்டாங்க.

எங்கள்ல எனக்கும் அப்பாவுக்கும் தான் ஓ பாசிட்டிவ். தம்பி சென்னைல இருக்கான். என்னால ரெத்தம் குடுக்க முடியாது, அப்பாவுக்கு சுகர். அப்படியும் போய் கேட்டோம், ரெத்தம் எடுத்துக்கோங்கன்னு. முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

ஓ பாசிட்டிவ் ஒண்ணும் கிடைக்காத ரேர் க்ரூப் எல்லாம் இல்ல. ஆனா அன்னிக்கின்னு பாத்து ஒரு பயலும் பக்கத்துல இல்ல. மாப்ள நான் குற்றாலத்துல இருக்கேண்டா, மதுரைல இருக்கேன்டான்னு ஆளாளுக்கு ஒரு இடத்த சொல்றானுங்க.

என் பிரெண்ட் சுந்தர் ஹாஸ்பிட்டல் வராண்டால இருக்குறவங்ககிட்ட எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். எல்லாருமே ப்ச்ன்னு உதடு தான் பிதுக்கினாங்க.

பரபரப்பா இன்னும் பத்து நிமிஷம் ஓடிப் போய்டுச்சு. அந்த ஆளு எப்படி இருக்காரோ? எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி பயம். கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. தலைய புடிச்சுட்டு அப்படியே ஒரு சுவர்ல சாஞ்சு தரையோட தரையா உக்காந்துட்டேன்.

அப்ப தான் அந்த அம்மா வந்தாங்க. பிரசவத்துக்காக பொண்ணை அங்க சேர்த்துருக்காங்களாம். என்னோட ரெத்தம் என்ன வகைன்னு தெரியாது தம்பி, ஆனா வேணும்னா எடுத்துக்கோங்கன்னு சொன்னாங்க. அவங்கள கூட்டிட்டு போய் ப்ளாட் குரூப் டெஸ்ட் பண்ணி பாத்தா, நன்றி சேசுவேன்னு பிரான்சிஸ் மேல பாத்து சிலுவை போடுறான்.

அப்பவே தெரிஞ்சிடுச்சு, ஓ பாசிட்டிவ் கிடச்சிடுச்சுன்னு.

அப்புறமா நிறைய பார்மாலிட்டீஸ்.போலிஸ் அது இதுன்னு. பசங்க தான் சுத்தி சுத்தி பரபரப்பா இயங்கினானுங்க. ஆனாலும் ஆள் யாருன்னு தெரியவே சாயங்காலம் ஆகியிருந்துச்சு. இங்க யார் வீட்லயோ நாய் குட்டி இருக்குன்னு கேள்விப் பட்டு அத வாங்க கிட்டத்தட்ட பதினஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருந்து வந்தாராம். இடுப்புல ஒரு புள்ளைய வச்சுட்டு அவங்க மனைவி அழுதது அப்படியே கண் முன்ன நிக்குது. பாவம் அந்த புள்ளையால நடக்க முடியாது, கால் ரெண்டும் சூம்பிப் போய் இருக்கு. அதுக்கு விளையாட தான் நாய்க்குட்டியாம்.

நல்லவேளை, தலைல அடி அவ்வளவு பலமா இல்ல. தலைல சதைகள் தான் சிதைஞ்சு போய் இருந்துச்சு.

ஒரு வாரம் கழிச்சு அம்மாவோட ஹாஸ்பிட்டல் போயிருந்தேன். தலை முழுக்க கட்டோட அவர் கட்டில்ல படுத்து கிடந்தார். அவர் வயித்துல அவர் பொண்ணு ஏறி உக்காந்துகிட்டு அப்பா, நாய் குட்டி எப்பப்பா வாங்கித் தருவன்னு கேட்டுட்டு இருக்கா.

12 comments:

 1. கதைதானே?!
  அருமையான எழுத்து நடை

  ReplyDelete
  Replies
  1. கதை இல்ல, நிஜமாவே வீட்டு பக்கத்துல நடந்தது. நாங்க தான் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு ஓடினோம்

   Delete
 2. anupavam thodaratum. . . thuritha vegathil seilal patathuku vaalthukal.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ். அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒண்ணொண்ணா சொல்றேன்

   Delete
 3. என்னவொரு மாபெரும் உதவி... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அண்ணா. நிஜமாவே அந்த ஆள் செத்துட்டார்னு நினச்சேன். நல்ல வேளை தப்பிச்சுட்டார்

   Delete
 4. கதை இல்ல, நிஜமாவே வீட்டு பக்கத்துல நடந்தது. நாங்க தான் ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு ஓடினோம்///

  doubt clear achu. label la kathainu ninga kuripittirunthathu paarthu kathaiyaaka irukkanumonu ninaichitten akka.

  ReplyDelete
  Replies
  1. மகேஷ், கதை எழுதுற பக்குவம் இன்னும் எனக்கு வரலன்னு நினைக்குறேன். சீக்கிரமா எழுதுறேன். இப்போதைக்கு நடந்த விசயங்கள பகிர்கிறேன்

   Delete
 5. அது ஒரு விபத்து
  என்றாலும் அதன் மூலம் வெளிப்பட்டது
  தங்களின் அசாதாரண வேகமும்
  மனித நேயமும்
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்ல முடியாது. கண்ணு முன்னால ஒரு உயிர் துடிக்குதுனா பாத்துட்டு இருக்க முடியாதுல. எத்தனை ஆசைகளும் கனவுகளும் அவங்களுக்கு இருக்குமோ

   Delete
 6. கண் முன் விரிகின்ற காட்சிகள்.

  அற்புதம் செய்கின்ற எழுத்துகள்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete