Thursday, 4 June 2015

மாமலையும் ஓர் கடுகாம்




வேக வேகமா இல்லாம ஆமை வேகத்துல என்னோட "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" கவிதை புக் ரெடி ஆகிட்டு இருக்கு.

அது வெளி வரப்போற நாளை ஆவலோட எதிர்பாத்துக்கிட்டு இருந்தாலும், அடுத்த புத்தகத்துக்கான கவிதைகள தொகுத்துடலாமா இல்ல வேணாமான்னு ஆலோசனைல இருக்கேன்.

எதோ ஒரு தைரியத்துல என்னோட கவிதை புக்கை நானே பப்ளிஷ் பண்றேன்னு மங்காத்தா முன் வந்தாலும் அவருக்கு அச்சடிச்ச காசாவது மிச்சம் கிடைக்கணுமேன்னு எனக்கு பயமா இருக்கு. அதனால தான் கிட்டத்தட்ட ரெண்டு வருசமா, உங்க கவிதைகள புத்தகமா போட தாங்களேன்ன்னு அவர் கேட்டும் நான் ஒத்துக்கல...

இப்ப தான் ஒரு தைரியம் வந்திருக்கு. சொந்த காசைப் போட்டு கவிதை புக் அச்சடிக்குற இந்த  காலத்துல நம்ம கவிதைகள அவரே புக்கா  போடுறாரே, அப்படினா  நம்ம எழுத்துல என்னமோ கண்டிப்பா இருக்கும்ங்குற நம்பிக்கை பூத்திருக்கு.

சரி, அத எல்லாம் விடுங்க, இந்த புக்ல கார்த்திக் பணிந்துரை எழுதிருக்கார். அதென்ன பணிந்துரைன்னு கேக்குறீங்களா?

இந்தா நீங்களே படிச்சுக்கோங்க....
.............................................................................

இதுவே சங்ககாலமாக இருந்தால் தலைவியின் கவிதைகளுக்குத் தலைவன் அணிந்துரை எழுதுகிறான் என்று சொல்லியிருக்கலாம். சமகாலத்தில் அப்படிச் சொன்னால் எந்த அரசியல்கட்சித் தலைவன் என்று கேட்பார்கள். ஆகவே காதலியின் கவிதைத் தொகுப்புக்கு ஒரு காதலனாக பணிந்து உரை எழுதுகிறேன்.

உலகில் மெய்ப்பிக்க முடியாத பிரச்சனைகள் பல. பிரச்சனையாக அல்லாமல் அல்லும் பகலும் நம்மை உலுக்கியெடுக்கும் ஒன்றாக இருப்பது நம் உணர்வுகள். இந்த உணர்வுகளை இப்படி அப்படி புரட்டுப் போட்டு நிறைய கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொண்டுதான் இந்த நாகரீகம் கலாச்சாரம் பண்பாடு பாஸ்பரஸ் பயோ கெமிஸ்ட்ரி சமீப நெருக்கமாக நானோ டெக்னாலஜி வரைக்கும் நுட்பங்கள் பல உருப்பெற்றிருக்கின்றன.

பன்முக உணர்வுகளின் ஆகச் சிறந்த கிறுக்குத்தனம் கவிதை எழுதுவதென நம்பிக் கொண்டிருப்பவன் நான். ஆதியிலிருந்தெல்லாமில்லாமல் பாதியிலிருந்து கவிதை எழுதத் தொடங்கினவன். ஆனால் அவைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கும் தைரியம் இந்த நிமிடம் வரை எனக்கு வரவே இல்லை. காயத்ரிக்கு அந்த தைரியமிருப்பது எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். உணர்வுகளின் மொழி தான் காயத்ரி தேவியின் கவிதைகளின் பாடுபொருள். அவற்றை பேசுபொருள் என்றுகூட அழைக்கலாம். ஆம் இக்கவிதைகள் உங்களோடு பேசக் கூடும். இந்த உத்திரவாதம் தருவதற்குக் காரணம் இவை என்னோடும் பேசியிருக்கின்றன.

அத்துவானக் காட்டில் அடக்கமாட்டாத சிறுகுழந்தையின் ரீங்காரமிசைக்கும் குரல் போல ஒலிக்கும் காயத்ரியினது கவிதைகளை அளவுகடந்து நேசிப்பவன் நான். ஆனால் அதனை ஒருபோதும் வெளிச் சொன்னதில்லை, எப்போதாவது பொங்கும் கங்கைபோல் வார்த்தைகள் என்னையும் மீறி வெளிப்பட்டிருக்கின்றது. அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதி இருப்பார்; ஒரு மகளின் கேவல்களை எல்லாம் அசட்டையான கேள்விகளால் கடக்கச் சொல்லும் காலத்தின் வலியை பரிபூரணமாய் வெளிப்படுத்துமந்தக் கவிதை. பின்பொருநாள் தந்தைக்கு மகள் எழுதும் வேண்டலாக ஒன்று, தாய்மையோடொன்று, ஏராளமாக காதலோடு பல கவிதைகள் எழுதி இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் நீங்கள் கவிதைகள் இருக்கும் வாசிக்கலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றமடையலாம். இவை அத்தனையும் உணர்வுகள். காற்று சுழன்றடிப்பதை கண்முன்னே காண முடிந்தும் அதன் அரூபத்தை ஏற்றுக்கொள்ளமுடியும் உணர்வுகள். அவைதான் இங்கே கவிதைகளெனச் சொல்லப்பட்டிருக்கின்றன காயத்ரியால்..

இந்த பணிந்துரை எழுதுவதற்கு மட்டும் தான் வலியுறுத்தப்பட்டேன். மற்றபடி என்ன எழுதவேண்டுமென்பதெல்லாம் என் விருப்பங்கள் தான். ஆக நீங்கள் என்னை பயந்த சுபாவமுடையவன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாரதிதாசன் கூற்றை ஏற்றுக் கொள்வீர்கள் தானே!

மிகமுக்கியமாக இந்தத் தொகுப்பின் தலைப்பு பற்றிச் சொல்லியாகவேண்டும். பெளர்ணமி நிலவு ஓர் நாள் ஊரில் உள்ள அத்தனைப் பெண்களிலும் இவளொருத்தியை மட்டும் பேரழகியாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தபோது இவள் விழிப்பார்வைக்கு அடங்க மாட்டாமல் “ உன்னைப் பிடித்திருக்கிறது. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்டு வைத்தேன். அந்த இரவில் எங்களுக்கிடையில் சாட்சியாக இருந்தது அந்த மொட்டைமாடி நிலவும், தென்னங்கீற்றசைவுகளும் தான்... நான் நிலவின் மீது கொஞ்சம் போதை கொண்டிருந்ததால், இவள் தென்னங்கீற்றை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுவிட்டாள். முதலாம் தொகுப்புக்கு வாழ்த்துகள் காயு. மலர்போல் வாழ்க. என்ன மலரென்று சொல்லவில்லையே..! அதை உனது அடுத்த புத்தகத்திலெழுதுகிறேன்...


- கார்த்திக் புகழேந்தி
.

4 comments:

  1. உன் ஆட்டோகிராபோட புத்தகம் எனக்கு வரணும் காயூ. காத்திருக்கேன் ஆவலோடு. பணிந்துரை எழுதியவனுடன் சேர்ந்து உன்னையும் பார்க்க முடிந்தால் டபுள் சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. புக் வந்ததும் அனுப்பி வச்சிடுறேன் அண்ணா.

      Delete