Wednesday, 24 June 2015

ராமையாவுக்கு - எழுதுகிறேன் ஒரு கடிதம்ராமயாவுக்கு,

அன்புள்ள ராமையாவுக்குன்னு தொடங்கலாமான்னு ரொம்ப நேரம் யோசிச்சேன். சின்ன வயசுல நீங்க தான் என்னை மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்தீங்களாம், அம்மா சொன்னா. அப்படியும் எனக்கு உங்கள அன்புள்ளன்னு சொல்ல மனசு வரல.

காரணம் நீங்களே தான். பதினஞ்சு வருஷம் கழிச்சு இப்பத் தான் சொந்த ஊருக்கு வர்றேன். இங்க யாருக்குமே என்னை தெரியாதுன்னு நினச்சுட்டு தான் வந்தேன். ஆனா தூரத்துல இருந்து பாத்ததுமே நீங்க என்கிட்ட ஓடி வந்தீங்க. உங்க முகத்துல அப்படி ஒரு சந்தோசம். தாயி, நல்லாயிருக்கியா தாயின்னு என் ரெண்டு கையையும் புடிச்சுகிட்டீங்க. உங்க உடை எல்லாம் அவ்வளவு அழுக்கு. வெத்தல போட்டு குதப்பி குதப்பி பல் எல்லாம் வெத்தல கறை. போதாதுக்கு வாய்ல இருந்து வாய்நீர் வேற ஒழுகிட்டு இருந்துச்சு.

இதுக்காகவா என்னை அன்புள்ளன்னு சொல்ல நீ யோசிக்குறன்னு நீங்க கேக்கலாம். இல்ல, நிச்சயமா இல்ல. உடம்புல அழுக்கு இருந்தாலும் மனசுல அப்பழுக்கத்த ஜனங்க நீங்க எல்லாம்னு எனக்குத் தெரியும். ஆத்துலயும் கொளத்துலயும் ஊரான் வீட்டு அழுக்க எல்லாம் அடிச்சு தொவைக்குற ஜனங்க நீங்க. உங்கள அழுக்குன்னு நான் எப்படி ஒதுக்க முடியும்?

பின்ன எதுக்கு என்னைப் பாத்ததும் மேலோட்டமா ஒரு சிரிப்பு மட்டும் சிரிச்சுட்டு கைய இழுத்துட்டு ஒதுங்கி போனன்னு கேக்குறீங்களா? ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு புறப்பட்டப்ப தூரமா நீங்க கைல துண்ட வச்சுட்டு என்னையே எட்டி எட்டிப் பாத்தப்ப படக்குன்னு மூஞ்சிய திருப்பிக்கிட்டு ஏன் கார்ல ஏறிப் போனேன்னு கேக்குறீங்களா?

அதுக்கும் காரணம் நீங்களே தான். உங்க உருவம் என்னை ஒரு நொடி உருக்குலைய வச்சது உண்மை தான். திடீர்னு ஒரு அந்நிய ஆடவர் என் கைய புடிச்சா எனக்கு அதிர்ச்சியா இருக்குமா இருக்காதா? ஆனா இதெல்லாம் ஒரு காரணமே இல்ல. திகைச்சாலும் புரிஞ்சுகிட்டு சந்தோசமா உங்கள பாத்து சிரிச்சிருப்பேன்.

ஆனா உங்க மேல அடிச்சுது பாருங்க குப்புன்னு ஒரு நாத்தம், என் இத்தன வருஷ வாழ்க்கைல நான் உணர்ந்திடாத நாத்தம் அது. குடலை பிரட்டிகிட்டு வந்துடுச்சு. விட்டா எங்க அங்கயே வாந்தி எடுத்துருவனோன்னு தான் உடனே அங்க இருந்து வந்துட்டேன்.

அதுக்காகத் தான் உங்க மேல அன்பு இல்லாம போய்டுச்சுன்னு எல்லாம் இல்ல. அன்னிக்கி முழுக்க அம்மா நீங்க முட்ட வந்த மாட்டுகிட்ட இருந்து என்னை காப்பாத்தினதையும் அதனால கீழ விழுந்து உங்க கை முறிஞ்சு போன விசயத்தையும் கதைகதையா சொன்னா. பாம்புனா கூட பயமே இல்லாம பிடிச்சு தூக்குவேனாமே, பச்சப் பாம்பும் தண்ணி பாம்பும் நீங்க தான் பிடிச்சுட்டு வருவீங்கன்னு அம்மா சொன்னா. என் காலுல நீங்க மாட்டி விட்ட கொலுசு தான் ரொம்ப நாளைக்கு இருந்துச்சாம். பாப்பா படிச்சு பெரிய டாக்டராகணும்னு கனவெல்லாம் கண்டீங்களாமே. ஆனா ஒண்ணு ராமையா, நான் டாக்டராகி எம்.ஜி.ஆர் மாதிரி முதலமைச்சர் ஆகணும்னு கனவு கண்ட ஒரே ஆள் நீங்களா தான் இருக்க முடியும். ஹஹா.

ராமையா, உங்கள பத்தின விஷயங்கள் எல்லாமே எனக்கு சந்தோசத்த தான் குடுத்துச்சு. அன்னிக்கி சாயங்காலம் மட்டும் நான் அவள பாக்காம இருந்துருந்தா இந்நேரம் உங்க தோள்ல தொங்கி பழைய நினைவுகள புதுபிச்சிருப்பேனோ என்னவோ?

அவ உங்க பொண்ணாமே. பதினெட்டு வயசு இருக்குமா அவளுக்கு. அதுக்குள்ள கண்டாங்கி கட்டிக்கிட்டு கைல ஒரு புள்ளையோட ஒருத்தன்கிட்ட மிதி வாங்கிட்டு இருந்தா. கேட்டா அவ புருசனாம். ஏன் ராமையா, நீங்களும் தான அப்ப அந்த இடத்துல இருந்தீங்க. அவன் போட்டு அந்த அடி அடிக்குறான், நீங்க எல்லாம் விதின்னு வாய்ல துண்ட பொத்திகிட்டு அம்மாகிட்ட வந்து அழுதுட்டு நிக்குறீங்க. அந்த நொடி உங்கள பாத்து எனக்கு ஆத்திரம் வந்துச்சு.

நான் என்ன தாயி பண்றதுன்னு என்கிட்ட கேக்காதீங்க, இப்படி தான குடிச்சு குடிச்சு ஒதைச்சு உங்க பொண்டாட்டி படக்கூடாத இடத்துல பட்டு அல்பாயுசுல போய் சேந்துருக்காங்க. அப்பயாவது திருந்துனிங்களா நீங்க? வயசுப் புள்ளைய வீட்ல வச்சிருக்க கூடாதுன்னு பத்தாங்க்ளாஸ் பரிச்ச எழுத போன புள்ளைய புடிச்சி இந்த குடிகாரனுக்கு கட்டி வச்சிருக்கீங்க.

அவன் குடிகார நாயின்னு தெரிஞ்சும் கல்யாணம் ஆனா திருந்திருவான்னு அவன் தலைல இந்த புள்ளைய கட்டியிருக்கீங்க. ஏன்யா, தெரியாம தான் கேக்குறேன், நீங்க எல்லாம் பரிசித்து பாக்கவா பொம்பள புள்ளைங்க எல்லாம் பிறப்பெடுத்துருக்கோம்? பெத்த புள்ளைய வச்சு காப்பாத்த துப்பில்லனாலும் பரவால, அத பாழும்கிணத்துல தள்ளி விட எப்படியா மனசு வந்துச்சு? அதுவும் மனசாட்சியே இல்லாம எல்லாம் அவ விதி, பொறந்த பொறப்புன்னு அவ மேலயே பழி போடுறீங்க?

நான் ஒருத்தி உங்கள பாத்து மூஞ்சிய திருப்பிகிட்டது தான் உங்களுக்கு குறைச்சலா போய்டுச்சாக்கும். கண் எல்லாம் கலங்கி தூரமா நான் மறையுற வரைக்கும் பாத்துகிட்டே இருந்தீங்க. ஆனா ராமையா, நீங்க அழுதது என் கண் முன்னால நிக்குது. என்ன இருந்தாலும் என்னை தூக்கி வளத்த மனுஷன் இல்லையா. அதனால தான் இத எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு.

உங்க பொண்ணு அழுறது உங்க மனச உறுத்தவே இல்லயா. மனசுக்குள்ள ஆயிரம் வருத்தம் இருக்கு அதான் குடிக்குறேன்னு சப்பக் கட்டு கட்டாதீங்க. அந்த பய தான் குடியால சீரழிஞ்சு உங்க பொண்ணையும் சீரளிக்குறான்னா நீங்களும்ல குடிச்சி குடிச்சி அவ வாழ்க்கைய சீரளிக்குறீங்க. என்ன பாக்குறீங்க?

பாசம்குறது தூக்கி வளத்த புள்ளைய பாத்து அவ பகட்டா திரியுறத பாத்து சந்தோசப்படுறது இல்லயா, பெத்து வளத்த புள்ள நல்ல துணி போடணும், நாலெழுத்து படிக்கணும், சீண்டுறவன அவ ஏறி மிதிக்கணும்னு நினைக்குறது தான்.

முதல்ல அந்த வீணாப்போன குடிய தூக்கிப் போட்டுட்டு எம்புள்ளய ஏண்டா அடிக்குற நாயேன்னு அவன ஒரு வார்த்த கேளுங்க. குடிய விட்டுட்டு வாடா, எம்புள்ளைய வாழ அனுப்புறேன்னு அவன் கிட்ட சொல்லுங்க. திருந்தினா திருந்தி வரட்டும். இல்லனா கவலையே படாதீங்க, அவன் கிட்ட அடியும் ஒதயும் வாங்கிட்டு அந்த புள்ள அணுஅணுவா செத்துப் போறதுக்கு உங்க வீட்ல வந்து மகாராணியா வாழ்ந்துட்டு போய்டலாம்.

ஒரு பொண்ணுக்கு நல்ல புருஷன் அமைஞ்சா நல்லது, ஆனா எல்லாருக்கும் அப்படி அமையுறது இல்லையே. ஒரு பாவிய கட்டிக்கிட்டு காலம்பூரா கஷ்டப்படணும்ன்னு அவசியமே இல்ல. புருஷன் மட்டும் ஒரு பொண்ணுக்கு உலகமும் இல்ல. அவளுக்கு ஒண்ணும் நாலு கழுத வயசும் ஆகிடல. இன்னும் பால் மணம் மாறாத அந்த பச்ச கைல இன்னொரு குழந்தை. கொடுமையா இருக்குயா.

என் மேல இன்னும் அன்பும் பாசமும் இருந்தா திருந்தி வாங்க. அப்பாவோட போன் நம்பர் உங்ககிட்ட இருக்கும்னு நம்புறேன். இல்லனா மாமாகிட்ட வாங்கிக்கோங்க. உங்க போனுக்காக காத்திருக்கிறேன். அதுல சந்தோசமா உங்க பொண்ணு குரலை தான் நான் முதல்ல கேக்கணும்.

கவலையே படாதீங்க, அவ என் தங்கச்சி. அவள படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். புள்ளைய பெத்தது நீங்க, நீங்க தான் அவள நல்லா பாத்துக்கணும். சம்பாதிக்குற காச சேர்த்து வைக்கப் பாருங்க. அவள படிக்க வைங்க. நல்ல உத்தியோகத்துல இருத்தி அழகு பாருங்க. அவ புள்ளைய வளர்த்தெடுக்குற தெம்பு அவளுக்கு வரணும். அதுக்கு என்னென்ன வழிகாட்டணுமோ அத எல்லாம் நான் காட்டுறேன்.

எப்படி வாழணும்னு நான் கத்துக் குடுக்குறேன் உங்களுக்கு. முதல்ல அந்த பாழாப்போன குடிய மறந்து தொலைங்க.

அன்பெல்லாம் இப்ப இல்ல. வந்தா பாத்துக்கலாம்.

- ப்ரார்த்தனா


.

14 comments:

 1. மிகவும் அருமையான, மிகவும் நியாயமான கடிதம்.

  அந்தப்பெண்ணுக்கு விடுதலை கிடைக்கட்டும்.

  குடிப்பழக்கம் எல்லோரிடமிருந்தும் ஒழியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு கற்பனை கடிதம். ஆனாலும் இப்படியான ராமயாக்கள் நிறைய பேர் இருக்காங்க

   Delete
 2. மிகவும் சிறப்பாக இருந்தது! அருமையான பதிவு! குடிப்பழக்கத்தின் தீமை! இளவயது திருமணத்தை இதைவிட நாகரீகமாக சாட முடியாது! மனதில் பதிந்து போனது எழுத்துக்கள்! ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி இருக்கும் எத்தனையோ ராமையாக்களில் ஒருவராவது திருந்தினால் சரி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்துக்கு தேங்க்ஸ். நானும் எதிர்பாக்குறேன் ஒருத்தராவது திருந்தணும்னு

   Delete
 3. ungal kaditham makal thiruthenaal arasu thaanaga moodividum ungal eluthin palam. peiyarelum oru ether paarpu inemeyana payar uadn mudivu.

  ReplyDelete
  Replies
  1. ஹஹா அப்படி நடந்தா சந்தோசம் தான். ப்ரியம்வதனாவும் ப்ரார்த்தனாவும் என் கற்பனை நாயகிகள். என்னோட நிழல் உருவம்னு வேணா வச்சுக்கலாம். இனி அடிக்கடி இங்க எட்டிப் பாப்பாங்க

   Delete
 4. மிகவும் வருத்தமாக இருக்கிறது... தானே விரைவில் உணர்ந்து திருந்தட்டும்... வேண்டுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அண்ணா, இது ஒரு கற்பனை கடிதம். ஆனா நிறைய பேரு இப்படி இருக்காங்க. தொடர்ந்து இந்த மாதிரியான கடிதங்கள் எழுதலாம்னு இருக்கேன். பல சமூக விசயங்கள எடுத்து

   Delete
 5. இது ஒரு கற்பனை கடிதம்.///

  தொடர்ந்து இந்த மாதிரியான கடிதங்கள் எழுதலாம்னு இருக்கேன். பல சமூக விசயங்கள எடுத்து///

  nalla vidayam.
  vizippunarvu erpattu yaarukkaavathu uthavinal nallathuthane akka.

  ezuthungal.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மகேஷ். ஆன்லைன் வரதே இல்ல இப்ப, சீக்கிரம் சரியாகிட்டு நிறைய எழுதணும்

   Delete
 6. அருமையான கடிதம்! சொல்லிச் சென்ற விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. மிகவும் ரசித்தோம். எத்தனை ராமையாக்கள் இருக்கின்றார்கள்! திருந்துமா உலகம்...இதுக்கு டாஸ்மாக் வேற இருக்கே..அரசே ஊக்கப்படுத்தும் விதத்தில்...ஸோ மக்களா த்ருந்தினாத்தான் உண்டு...

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ். உண்மை தான், மக்களா திருந்தினா தான் உண்டு. பாப்போம், ஒரு மாற்றம் வரணும்

   Delete
 7. ராமையாக்/கள்/ உணர்ந்தால் நல்லது ..

  ReplyDelete
  Replies
  1. அதே தான், உணர்ந்தா நல்லது

   Delete