Thursday, 5 November 2015

தூமைத் துணிஅந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது. ஒரு வாரம் முன்பே ஊரையே அடைத்து பந்தல் போட்டிருந்தார்கள். பத்து வருடமாய் தவமாய் தவமிருந்து ராக்காயி பெற்றெடுத்த ஒரே மகனான தவசிக்கல்லவா கல்யாணம்.

தட்டான்விளைக்காரியான ராக்காயி வாக்கப்பட்டு லெவிஞ்சிபுரத்துக்கு போன போது ஊரில் அவ்வளவு மழை. அப்பன் ஆத்தாவயும் ஒண்ணுமண்ணா பழகின ஊரையும் விட்டுவிட்டு வந்தது முதலில் அவளுக்கு அலுப்பைக் கொடுத்தாலும் அந்த மண்ணோடு அவளும் சீக்கிரமே ஐக்கியமாகி போயிருந்தாள். கோலப்பன் தலையாரி மகன் என்பதால் ராக்காயிக்கு ஊரில் பெருமதிப்பு. ஊரில் எங்கு விசேசமென்றாலும் அவளைத் தான் முன்னிறுத்துவார்கள்.

எல்லாம் நாலஞ்சு மாசம் தான். அதன் பிறகு ராக்காயி போகுமிடம் எல்லாம் “ஏன்த்தா, விசேசம் ஏதும் உண்டா?”, “இன்னுமா ஒரு புழு பூச்சி உண்டாவல” என்பது போன்ற விசாரிப்புகளை எதிர்க்கொள்ள ஆரம்பித்தாள். மருமகளை தலைமேல் தூக்கி வைத்துத் திரிந்த பேச்சியம்மா மட்டும் மருமகளை ஒரு வார்த்தை கடுத்து சொன்னதில்லை.

“ஊரு ஆயிரம் சொல்லுமாத்தா. அந்த மாகாளி கண்ணத் தொறந்தா எல்லாம் தானா சரியா போவும். நீ கெடந்து சங்கடப் படாத” என்று பேச்சியம்மா அவளை சமாதானப்படுத்தினாலும் என்னவோ அது தன்னோட பெருமைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றே நினைத்து கோவில் கோவிலாக ஓடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மாதம் மாதவிடாய் வரும்போது இருட்டு அறைக்குள் ஆங்காரமாய் அரற்றிக் கொண்டிருப்பாள்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து வருடங்கள் ஒவ்வொரு கோவில் படியாய் ஏறி இறங்கி, அக்கம் பக்கம் இருக்கும் வைத்தியர்கள் எல்லாரிடமும் காசிரைத்து, ஒருவழியாய் ஜனித்தவன் தான் தவசி. தவமாய் தவமிருந்து பெற்ற மகனுக்கு ஒரு விசேசம் என்றால் பெருமை இருக்கத் தானே செய்யும்.. தான் மாமியார் ஆகப் போகிற சந்தோசம் அவள் ஆட்டத்தில் எதிரொலித்தது.

“ஏலேய் முத்தையா, எங்கலே போன, அடுப்பங்கரைல ஆத்தா உன்ன தேடிகிட்டு கெடக்கு” பேச்சியம்மா குரலைக் கேட்டதும் மடித்திருந்த இடுப்பு வேஷ்டியை கால் வரை அவிழ்த்துவிட்டுவிட்டு சமையலறை நோக்கி ஓடினான் முத்தையா.

கையை கட்டிக் கொண்டு பவ்யமாய் நின்றுக் கொண்டு “ஆத்தா கூப்ட்டியளா?”

“என்னலே, கண்ணாலத்துக்கு இன்னும் நாலு நாலு தான் கெடக்கு. வேல கீல எல்லாம் ஒழுங்கா நடக்குவா?”

“அதெல்லாம் நல்லா போயிட்டு இருக்கு ஆத்தா. ஐயா இல்லாத கொற தெரியாத அளவு நம்ம சொந்தகாரவுங்க எல்லா வேலையும் இழுத்துப்போட்டுட்டு செய்றாவ”

“என்னவோ போலே. மூர்த்தத்துணி எடுக்கப் போன எளயவ பழஞ்சீல மாதிரி ஒண்ண தூக்கிட்டு வந்துருக்கா. ராக்காயி மருமவன்னா சும்மாவாலே. அப்படியே பந்தல்ல ரதி மாதிரி ஜொலிக்கண்டாமா?”

முத்தையா பதில் ஏதும் சொல்லாமல் தலையை சொறிந்துக் கொண்டு நின்றிருந்தான். பின், அவர்கள் வீட்டு விவகாரமெல்லாம் வேலைக்காரனாகிய அவனுக்கு எதற்கு? கொழுந்தன் பொஞ்சாதிய குறை சொல்லவில்லை என்றால் ராக்காயிக்கு தூக்கம் வருவதில்லை.

ஆச்சு. அப்படியும் இப்படியுமாய் தடபுடலாய் கல்யாணமும் நடந்து முடிந்தாயிற்று. நாகர்கோவில் பொண்ணு. பெயர் அமுதா. பார்க்க அப்படியே ரதி மாதிரி தான் இருந்தாள். படித்தப் பிள்ளை வேற. தவசியையும் அமுதாவையும் ஜோடியாக பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் சொல்லிக் கொண்டது இது தான்.

“தறுதலக்கு வந்த வாழ்வ பாருடே. கொரங்கு கைல பூமாலைய குடுத்துருக்கான் பொண்ண பெத்தவன். இனி அந்தப் புள்ள என்ன பாடுப் படப் போவுவோ?

ஊரார் என்ன பேசிக்கொண்டிருந்தால் கண்ணப்பனுக்கு என்ன. தலையாரி குடும்பம். ஊருக்குள் பாதி தோப்பும் துறவும் அவர்களுடையது தான். ரெண்டு ப்ளசர் கார் இருந்தும் புல்லட்டில் பகட்டாய் ஊர் சுற்றும் மாப்பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நாலஞ்சு வேலையாட்கள். பெண் பார்த்து சம்மந்தம் முடிவு செய்த அன்றே பத்து பவுனில் மருமகளுக்கு காசுமாலை போட்ட மாமியார்காரி. “கட்டுன துணியோட பொண்ணை குடுப்பேய், நாம் பாத்துகிடேன் எம் மருமவள” என்று வாயெல்லாம் பல்லாய் சிரித்த ராக்காயியை பார்த்து பெண்ணை குடுக்க மாட்டேனென்று மூஞ்சியில் அடித்தார்ப்போல் சொல்லவா முடியும்? தவிர தலையாரி குடும்பத்திற்கு பெண் கொடுக்க அசலூர் ஆட்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று வரிசையில் நிற்க, தன் பெண்ணுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்ததில் எந்த தகப்பன் தான் பெருமைக் கொள்ளாமல் இருப்பான். “ஊர்க்காரப்பயப்புள்ளைவளுக்கு வேற என்ன சோலி. பொறாமைல போட்டுக் குடுத்துட்டு திரிவானுவ” இப்படித் தான் அரசல் புரசலாய் காதில் விழுந்த சேதிகளையெல்லாம் புறம்தள்ளி விட்டிருந்தார். தாயில்லா புள்ளைய கஷ்டமேப் படாமல் நல்லதொரு சம்மந்தத்திற்கு கட்டிக் கொடுத்த திருப்தி அவருக்கு.

“போட்டோ எடுக்கணும், அப்படியே கொஞ்சம் நெருங்கி நில்லுங்க” போட்டோக்காரனின் கட்டளைக் கேட்டு பொண்டாட்டி தோளில் கைப்போட்டு “ஈஈஈ” என்று இளித்தான் தவசி. ராக்காயி தூரத்தில் நின்று மகனையும் மகனின் முதலிரவு அறையையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராத்திரி முழுதும் உறக்கம் வரவில்லை ராக்காயிக்கு. “எல்லாம் நல்லபடியா முடிஞ்சி ஊரே மெச்ச ஒரு புள்ளைய பெத்துக் குடுத்துரனும் எம்மருமவ. அதுக்கு நீ தானாத்தா தொண இருக்கனும்” குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே தூங்கியும் போனாள்.

முதலிரவு அறை திறக்கப்படும் சத்தம் கேட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உக்கார்ந்தாள். கசங்கிப் போய் சோம்பல் முறித்துக் கொண்டு வந்த அமுதாவைப் பார்த்து “ஏங் ஆத்தா, இவ்வளவு சீக்கிரம் எழும்பிபுட்ட. செத்த நேரம் நீயும் ஒரங்கியிருக்கலாம்ல, பாரு அந்த கழுத மூதி எப்படி மலந்து கெடந்து ஓரங்குவுன்னு. அவசரத்துக்கு பொறந்தவன், ராத்திரி ஒண்ணும் மொறட்டுத்தனம் பண்ணலயே, பூ மாறி தான பாத்துகிட்டான்?” என்றாள்.

அமுதாவுக்கு வெக்கம் பிடுங்கித் தின்றது. “போங்கத்த” என்று சிணுங்கியவாறே வலது பெருவிரலை வாயில் கடித்தப்படி வெட்கத்தோடு அடுப்படிக்கு ஓடலானாள்.

“என்ன இந்தப்புள்ள இப்படி வெக்கப்படுது?” ராக்காயிக்கு மகனை நினைத்து பெருமையாய் தான் இருந்தது.

“பத்தே மாசத்துல பொறந்து வருவாம்லே என் சிங்கக்குட்டி” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு விறகெடுக்க கிணத்தடி வரை சென்று திரும்பியவள் உள்ளே அமுதாவை சீண்டிக் கொண்டிருந்த தவசியை பார்த்ததும் சுருக்கென்று முள் தைத்தவள் போல் முகம் சுளித்தாள்.

“என்னலே, கல்யாணம் ஆன மறுநாளே இந்த ஆத்தா மொகம் தொரைக்கு மறந்துப் போச்சோ. முழிச்சதும் எங்கிட்ட தான வந்து நிப்ப. இப்ப பொண்டாட்டி முந்தி சொகமா இருக்கோ. இந்தா, ஏ மூதேவி, அவுத்துப் போட்டு எந்திரிச்சி அப்படியே இங்கன வந்து நிக்க. குளிச்சி சுத்தபத்தமா வரணும்னு கூட ஓங் ஆத்தாக்காரி சொல்லித் தரலியா?”

“சவத்த மூதி, கெட்டிகிட்டு வந்த அன்னிக்கே புள்ளைய முந்திக்குள்ள மொனைய பாக்குறா. எங்க வந்து எவ சொத்த புடுங்கலாம்னு நிக்கா. இழுத்து வச்சி கொண்டைய அறிஞ்சிர மாட்டேன்” ஆத்திரத்தோடு கொண்டையை அவிழ்த்து விட்டு பின் முடிந்து கொண்ட மாமியார்காரியைப் பார்த்து வெலவெலத்துப் போய் நின்றுக் கொண்டிருந்தாள் சற்று முன் முகமெல்லாம் வெட்கம் பிடுங்க சிவந்திருந்த அமுதா.

மெல்ல தவசியை ஏறெடுத்துப் பார்த்தாள். அவனோ “விடு ஆத்தா, புது பொண்டாட்டி. கொஞ்சம் ஆசப்பட்டுட்டேன்” என்றவாறே ஆத்தாவின் குரலில் ஆட்டுக்குட்டியாகி அவள் முந்தியை பிசைந்துக் கொண்டிருந்தான். கண்கள் குளமாக விருட்டென்று குளியலுக்கென்று வைத்திருந்த தடுப்பில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

“ந்தா... புதுசா கட்டிக்கிட்டதுங்க. இளந்தாரி ஜோடிங்க. அப்படி இப்படி தான் இருக்கும். நீ ஏன் இப்படி பூட்டு போடணும்னு கெடந்து அடிச்சிக்குற. விடாத்தா. நாளும் கிழமையும் போனா எல்லாம் அலுத்துப் போவும்” பேச்சியம்மாளின் குரலை ராக்காயி காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அதன் பின் ராக்காயிக்கு மருமகளைக் கண்டால் ஒரு இதுதான். என்ன ஒன்று, அந்த குடும்பத்து வாரிசு அவள் வயிற்றில் வளர்ந்தாக வேண்டுமேயென்று மகனோடு இரவு மட்டும் படுக்க அனுப்பி வைப்பாள். மற்ற நேரங்களில் அவள் பார்வை மீறி தவசியால் அமுதாவை நெருங்கவே முடியாது.

கல்யாணம் முடிந்து இருபது நாட்கள் ஓடி விட்டிருந்தன. என்னதான் மாமியார்காரி கரிச்சுக் கொட்டினாலும் விருந்து, மறுவீடு, சொந்தக்காரங்க வீடு என்று அலைந்ததில் அமுதா சந்தோசமாகவே இருந்தாள். கல்யாண விருந்துக்கு தன் ஒண்ணுவிட்ட சித்தி வாங்கிக் கொடுத்த புதுத்துணியை உடுத்தியபடி வீட்டு வாசலை மிதித்தவள் காலுக்கிடையில் சட்டென்று உணர்ந்தாள் அந்த வித்தியாசத்தை.

“வீட்டு விலக்காவி போச்சு போலயே” என்றவாறே விறுவிறுவென முன்னறையைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து அந்த பொட்டலத்தை கையில் எடுத்தவள் மீண்டும் போன வழியே திரும்பி வந்து கழிவறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

“மூணாது வீட்டு மருமவ பொட்டப்புள்ளைய பெத்துப் போட்ருக்கா. என்னதாஞ்சொல்லு, தலைச்சான் புள்ள ஆம்பள புள்ளையா பொறந்தாதான் நமக்கெல்லாம் மருவாத” எதிர்த்தவீட்டு பரிமளத்திடம் பேசியபடியே முன்னறையை கடந்த ராக்காயி கண்களில் பட்டது அமுதாவிடமிருந்து வழிந்திருந்த ரெத்த துளிகள்.

“எந்த எளவெடுத்தவ இத செஞ்சான்னு தெரியலயே. ஏளா, ஏ மேனாமினுக்கி, என்னட்டி இது? நாசமா போறவளே, ஏன்ளா ஏங் வூட்ல வந்து எளவெடுக்க? த்தூத்தேறி, பிள்ளைய பெத்துத் தருவான்னு பாத்தா தூமைய கொண்டு வந்து நடு வீட்ல வடிச்சி வச்சிருக்கா” தீயில் போட்ட வத்தலாய் வெடித்துப் புகைந்துக் கொண்டிருந்தவள் கழிவறைக்குளிருந்து அவசர அவசரமாய் வெளி வந்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் இன்னும் ரவுத்திரமானாள்.

“அய்ய அய்ய அய்யோ... இந்த கொடுமைய கேப்பாரு ஆருமில்லியா? ஆம்பளயும் பொழங்குற இடத்துல தூமைய தூக்கிகிட்டு போறாளே” ஒப்பாரி வைத்தவள் கண்கள் அமுதாவின் கைகளில் இருந்த பொட்டலத்தின் மேல் நிலைத்தது. வெடுக்கென்று அதை கையில் வாங்கியவள் மறுகணம் அதை உதறி வீசினாள். “பெரிய தொர வீட்டு மகாராணி. இவ சாமானம் பஞ்சி தான் வேணும்னு கேக்குதாக்கும். யேம்ளா, கொப்பன் காச எல்லாம் இந்த கண்றாவிய வாங்கித் தான் கரச்சியோ? காலேசில போயி இதத் தான் படிச்சிட்டு வந்தியா? இன்னும் என்னென்ன கருமாந்த்ரத்த நான் பாக்க வேண்டியிருக்கோ ஐயோ கடவுளே” அப்படியே தரையிலமர்ந்து கையை வீசி வீசி ஒரு பாட்டம் அழ ஆரம்பித்தாள்.

அமுதாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் என்றே முதலில் புரியவில்லை. ஏழையாக இருந்தாலும் பெண்ணை சுதந்திரமாக வளர்த்திருந்தாள் வளர்மதி. மாதாமாதம் மாதவிடாய் நேரங்களில் துணி வைப்பதால் தொடை எல்லாம் அறுத்து, சிவந்து மகள் படும் இன்னல்களைப் பார்த்து வருத்தப்பட்டவள் நாப்கின் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தாள். “பொட்டப்புள்ளைக்கு என்னத்துக்கு இவ்வளவு செல்லம்” என்று கண்ணப்பன் முணுமுணுத்தாலும் மனைவியின் செயல்களுக்கு குறுக்கே நிற்க மாட்டான். அமுதாவினால் மாதவிடாய் நேரங்களில் பூஜையறை தவிர்த்து வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிய முடிந்தது. ஓட்டு வீட்டுக்குள் அந்த மூன்று நாட்களும் நினைத்த இடத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியில் உருள முடிந்தது. அதனால் தான் வளர்மதி தீராத காய்ச்சலில் போய் சேர்ந்த பிறகும் கண்ணப்பனே மகள் படும் பாட்டைப்பார்த்து வலிக்கு ஓமத்தண்ணியும் ரெத்தப்பாட்டுக்கு நாப்கினும் வாங்கிக் கொடுத்து பழகியிருந்தான். அக்கம் பக்கம் பாட்டி வைத்தியம் கேட்டுக் கொண்டு வந்து வெந்தயமும் கொத்தமல்லியும் வாங்கிக் கொடுத்தான்.

ஒரு கை நிறைய கொத்தமல்லி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து வெறும்வயிற்றில் தண்ணீரை குடித்ததில் அமுதாவுக்கு மாதவிடாய் நேரங்களில் உருவாகும் வாயுத்தொல்லை மட்டுபட்டிருந்தது. பச்சை முட்டையை அப்படியே உடைத்து குடுத்தால் இழந்து போன ரெத்தம் ஊறி, வலி அறவே இருக்காது என்று பக்கத்து ஊர் பாம்படக்கிழவி சொன்னதைக் கேட்டு மகள் சுருண்டு படுத்திருந்தால் நாளுக்கொன்று என்று ஐந்து நாட்டுக்கோழி முட்டை வாங்கிக் கொண்டு கொடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

கல்லூரி படித்தக்காலங்களில் தன் சோட்டுக் பெண்களுக்கு அமுதா தான் மருத்துவச்சி. “இந்தா, உனக்கு ஜலதோஷம் பிடிக்காதுனா வலி இருக்குற நேரத்துல உள்ளங்கை அளவு வெந்தயத்த எடுத்து வாய்ல போட்டு டபக்குன்னு தண்ணி விட்டு முழுங்கு, வலி போய்டும்” என்று அவள் சொன்னதைப் போல் செய்து நிவாரணமடைந்த வசந்தி அவளை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறாள். அப்படிப்பட்டவளைத் தான் இதோ மாமியார் இப்படி கரித்துக்கொட்டிக் கொண்டிருக்கிறாள். செய்வதறியாது திகைத்து, பின் சற்று நிதானித்து, “அவசரத்துல கீழ சிந்தினத கழுவாம போயிட்டேன்த்த, இந்தா கழுவிடுறேன்”. முற்றத்திற்கு ஓடிச் சென்று விளக்குமாறும் வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு வந்தவளை அப்படியே எரித்து விடுவதைப் போல் பார்த்தாள் ராக்காயி.

“போதும் தாயி, நீ பண்ணி கிழிச்சதெல்லாம். பண்ற காரியத்த பாத்தா ஊர் மேயுற நாயாவுல இருப்ப போலிருக்கு. ஏம்ளா, இப்படியாளா விசுக்குவிசுக்குன்னு தூமய தூக்கிகிட்டு நடுவூட்ல ராவுவ? இஞ்சேரு, அடக்க ஒடுக்கமா இருக்குறதா இருந்தா இங்கன கெட. இல்ல, பொட்டிய தூக்கிக்கிட்டு இப்பவே கொப்பன் ஊட்டுக்கு போயிரு” என்றவள் பின்புறமாக பார்த்து “ஏளா, குருவாத்தி, அந்த தூமய கழுவி விட்டு கொஞ்சம் மாட்டு மோள தொளிச்சி வுடு. இந்த நாசமா போறவ வந்து வீடே வெளங்காம போச்சி” என்றபடி பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

அப்படியே திரும்பி பார்த்தவள் “இந்தா, நீ பாட்டுக்கு சிங்கிடி சிங்கிடின்னு உள்ளார வந்துறாத. தூம நிக்குற வரைக்கும் அங்குட்டும் இங்குட்டும் லாந்துரத வுட்டுட்டு பொறக்கால இருக்குற அறைக்குள்ள அடைஞ்சு கெடந்துக்க. ஏ, ந்தா, இந்த பஞ்சி வச்சிக்குற பழக்கத்த இன்னோட மறந்துரு. ஓம் புருஷன் கிழிஞ்ச வேட்டி அந்தா அந்த தேங்காப் பத்தயத்துல போட்டு வச்சிருக்கேன், குருவாத்திய விட்டு எடுத்துக் கேட்டு, அத கிழிச்சு வச்சுக்க. இப்படி ஆம்பளைங்க பொழங்குற கக்கூசுக்குள்ள போவாத. பின்னால ஒரு ஓல மறைப்பு இருக்குலா, அதுக்குள்ள போயி துணி மாத்து. எளவெடுத்தவளே, தூமத் துணிய நாலு பேரு பாக்குற மாதிரி வெளில காயப்போடாத, உள்ளயே தொவச்சிப்போடு. எங்கருமம், இப்படி ஒருத்திய புடிச்சிகிட்டு வந்துருக்கேன்” தலையிலடித்துக் கொண்டே நடையை கட்டினாள்.

அமுதா இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டாள். தவசியிடம் சொல்லலாமென்றால் எங்கே, அவளை வீட்டுக்குள் விட்டால் தானே. அவனும் ஆத்தா பேச்சைக் கேட்டு இவள் என்னவானாள் என்று எட்டிக் கூட பார்க்கவில்லை. எப்படியோ அப்படியும் இப்படியுமாய் ஐந்து நாட்களை வலியோடு கழித்து விட்டு அடுத்த மாதம் தாய் வீட்டில் தங்கலாம் என்றிருந்தவள் தலையில் அடுத்த இடியை இறக்கினான் கண்ணப்பன்.

“இந்தா பாராத்தா, கட்டிக்கிட்டு போன இடத்துல அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். நீ இங்க இருக்குற மாதிரியே சொகுசா அங்கயும் இருக்கணும்னு நினச்சா எப்படி? கொஞ்சம் அசஞ்சு குடுத்து போத்தா. இந்த அப்பனால முடிஞ்சது நாலு பச்ச முட்டையும் கொத்தமல்லியும் தான். வாங்கித் தாரேன், நீ எப்படியாவது சமாளிச்சுக்க”

“தாயி, பொண்ணா பொறந்த பொறப்பு நாய் பொழப்பாத்தா. இந்தா எம்மருமவ இந்த ஆட்டம் போடுறாளே, பத்து வருசமா புள்ள இல்லாமத் தான் கெடந்தா. மாசாமாசம் அவளுக்கும் வழியத்தான் செஞ்சுது. வேளாவேளைக்கு கஞ்சிய காய்ச்சி குடுத்து, அவள நல்லா தான் பாத்துக்கிட்டேன் நானும். உன்னைய மாதிரி அவளுக்கு கஷ்டமா இருக்காது தாயி. இம்முடுகூண்டு துணிய கிளிச்சி வச்சானா ஒரு நாளைக்கு தாங்கும். ரெண்டு நாளைக்கு மேல தூமப் படாது. அவளுக்கு அஞ்சு நாளும் நீ வலில துடிக்க துடிப்பு எங்க தெரியப் போவு? வாத்தா, இந்த கஞ்சிய குடிச்சிட்டு செத்த நேரம் ஒரங்கிப்பாரு” பேச்சியம்மா தான் அமுதாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

சரியாக ஆறாவது மாதம். நாளெல்லாம் பெய்திருந்த மழையில் அந்த ஓலை மறைப்பு கரையான் தட்டிப் போயிருந்தது. கரையான்களோடு தேளும், கரப்பான் பூச்சியும் இன்ன பிற ஜீவராசிகளும் அங்கே தான் மழைக்கு ஒதுங்கியிருந்தன. போதாதகுறைக்கு கொஞ்சம் பலகைகளை வேறு மழைக்கு ஒதுக்கி போட்டு வைத்திருந்தார்கள். துணி மாற்றும் பொழுது யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதற்றம் வந்திருந்தது அமுதாவிற்கு. தவசியிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆசை வந்தால் மட்டும் அணைக்க வருபவன். ஒவ்வொரு மாதமும் துணியை வைத்து வைத்து தொடை எல்லாம் புண்ணாகி அவள் படும் அவஸ்தையை கூட கண்டுக்கொள்ளாதவன். வாஞ்சையாய் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாதவன்.

அமுதாவிற்கு வலி சுருக்சுருக்கென்று தைத்தது. கறைப்பட்டு விட்ட பாவாடையை லாவகமாய் கழட்டி கல்லில் போட்டு விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு கிணற்றில் வாளியை இறக்கி நீர் இறைக்க துவங்கினாள்.

“ஏட்டி மேனாமினுக்கி, எங்களா போன? போனா போன இடம்னு கதியா கெடக்க வேண்டியது. சீக்கிரம் வாளா”

“போச்சு. மாமியாக்காரி கூப்பாடு போட ஆரம்பிச்சுட்டா. இனி வந்து தொவைக்கலாம்” என்று நினைத்தப்படி அவசரம் அவசரமாக சேலையை உடுத்தி, பொந்துக்குள் சொருகி வைத்திருந்த தூமைத் துணியை மடித்து கால்களுக்கிடுக்கில் சொருகிக் கொண்டு “ந்தா வந்துட்டேன்த்த” என்றவாறே விரைவாக நடக்கலானாள்.

மடித்து வைத்திருந்த துணிக்குள் குஞ்சும் குளுவானமுமாய் குடும்பம் நடத்திய தேள் இப்பொழுது நெளிய ஆரம்பித்திருந்தது.


13 comments:

 1. cruelty story...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஆனா இப்பவும் இப்படி நடந்துட்டு தான் இருக்கு, என் காலேஜ்ல ஒருத்தங்களுக்கு நடந்தத கொஞ்சம் கற்பனைல எழுதினேன்

   Delete
 2. பிச்சு உதறிட்டீங்க காயு! நாகர்கோவில் வட்டார வழக்கு ...பல வருடங்கள் ஆகிவிட்டது எங்கள் இருவருக்குமே அந்த வட்டார வழக்கு காதில் விழுந்து...உங்களால் இன்று...

  நல்ல கதை காயு. இன்னுமா பொண்ணுங்க நிலைமை இப்படி இருக்கு ?

  ReplyDelete
  Replies
  1. ஊர் காட்டுக்குள்ள இன்னும் இப்படி இருக்கத் தான் செய்றாங்க. அப்புறம் கதை எல்லாம் எழுதி எனக்கு பழக்கம் இல்ல. முதல் தடவையா நாகர்கோவில் வட்டார வழக்கு ட்ரை பண்ணியிருக்கேன். எந்த அளவு சரின்னு தெரியல. இப்ப இதே கதைய வேற மாதிரி முழுக்க முழுக்க வட்டார மொழில மாத்தவும் செய்துட்டேன்.

   Delete
 3. உங்க பதிவில் மூர்த்தி கதை மட்டும் படிச்ச ஞாபகம் அக்கா.
  அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும்
  வித்யாசம் பலது இருக்கு.
  கீதா மெம்
  சொல்லியதுப்போல
  நாகர்கோவில் வட்டார வழக்கு ரசித்தேன்.
  கதையும் நல்லா வந்திருக்கு.


  ராக்காயி பொல மணிதர்கள்
  இன்னும் எங்காவது இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் மா, இன்னும் இருக்காங்க

   Delete
 4. பதற வைக்கும் பதிவு. இன்னும் பல இடங்களில் இக்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வட இந்தியாவின் சில ஊர்களிலும் இதே பிரச்சனை தான்.... துணியைப் பயன்படுத்தி அவஸ்தை படுகிறார்கள் பாவம்.

  ReplyDelete
  Replies
  1. துணி பயன்படுத்துறது சவுகர்யமா இருந்தா பயன்படுத்தலாம் தான்... ஆனா அதுக்காக ஒதுக்கி வைக்குறது தான் தாங்க முடியாதது

   Delete
 5. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete